CN3.1

நிலவு – 3(1)

மாற்றங்கள் என்ற ஒன்று

இருக்கும் வரை மனிதர்கள்

அனைவருமே சந்தர்ப்ப

சூழ்நிலைகளால் இங்கு நிறம்

மாறும் பச்சோந்திகள்…!

மனம் மாறும் தந்திரர்கள்…!

 

தனது தாய் பேசிய பேச்சில், கொதிநிலை அடைந்த மிதுனா, நொடிநேரகோபத்தில் இமயமலையின் உச்சிக்கே சென்று, மீண்டு வந்தாள். தன் அன்னையை, தானே கடிந்து கொள்ளப் போகும் தனது நிலையை நினைத்து, அத்தனை சங்கடம் ஏற்பட்டது அவளுக்கு.

ஆனாலும் இந்த நேரத்தில் எதிர் பேச்சு பேசாமல் விட்டு விட்டால், தன்னிடம் பேசிய பேச்சினை வெளியாட்களிடமும் தொடர்ந்து விடும் வாய்ப்புகள் அதிகம் என்பதை அறிந்தவள், தன் அதட்டலை கையில் எடுத்துக் கொண்டாள்.

“அவர் வேலை, அவர் இஷ்டம்! நானே இத பத்தி, அவர்கிட்ட கேக்குறதில்ல… உனக்கேன்ம்மா இந்த வீண்பேச்சு. நீ இந்த மாதிரி பேசுறது, இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். இனி இப்டி பேசணும்னு நீ மனசுல நெனைச்சாலும் உன் பொண்ண, நீ மறந்திட வேண்டியதுதான், சொல்லிட்டேன்” என்று வார்த்தைகளை கடித்துத் துப்ப, மஞ்சுளா திருதிருவென்று முழித்தார்.

தான் பேசியதை மறுமுறை மனதில் ஓட்டிப் பார்த்தவருக்கும், தன்பேச்சு கொஞ்சம் அதிகப்படியோ என்று தோன்றி விட, மகளின் கண்டனப் பேச்சிற்கு மறுவார்த்தை சொல்லாது,

“சரி விடுடி, இனிமே இப்படி பேசல” என்ற ஒற்றை வாக்கியத்தில் அமைதியாகி விட்டார்.

ஆனால் அவர் மனதிற்குள் மூண்ட நெருப்பு, தனது புகையினை கக்கத் தயாராய் இருந்தது. தாயின் மனவோட்டத்தை கவனத்தில் கொள்ளாமல், தன் பேச்சிலேயே குறியாக நின்ற மிதுனா,

“பாஸ்கர் வரலைன்னா, வண்டிச் சாவிய குடுக்கச் சொல்லு, டிரைவர் போட்டுட்டு எனக்கு போகத் தெரியும்” கண்டிப்புடன் பேசும் நேரத்தில் பாஸ்கர் அங்கே வந்து விட்டான்.

அரைகுறை தூக்கத்தில் எழுந்தவனின் கண்களில் உறக்கத்தின் மிச்சம் மீதி தெரிய, அவனது தலையை கூட வாரிக் கொள்ளாமல், தமக்கையின் அதட்டலில் பதறியடித்துக் கொண்டு வந்திருந்தான்.

“இப்போ எதுக்குக்கா வண்டிச் சாவி கேக்குற? வான்னு சொன்னா வந்துட்டு போறேன்” வேகவேகமாய் பேசி சமாதானப் படுத்தினான்.

மிதுனாவின் கைக்கு வண்டிச்சாவி போய் விட்டால், திருப்பி வாங்குவது மிகமிகக் கடினம் என்பது அவன் தெளிவாய் கற்றுக் கொண்ட பாடம். ஒருமுறை, மிதுனா அழைத்து, இவன் மறுத்துவிட, வாகனத்தை அவள் வசத்தில் வைத்துக் கொண்டாள்.

ஏகத்திற்கும் கெஞ்சிக் கூத்தாட வைத்தே, வண்டிச் சாவியை திருப்பித் தந்ததை, அவன் எந்த நிலையிலும் மறக்க முடியாத அளவிற்கு, தம்பியை சோதித்து இருந்தாள் மிதுனா.

ஹீரோ ஸ்‌ப்ளண்டர் பிளஸ், முழுக்க முழுக்க மிதுனாவின் முயற்சியில் மாதத் தவணையில் வாங்கிய இருசக்கர வாகனம். நாள் முழுவதும் வேலைக்கு செல்லும் தனக்கென்று வாங்கினால், வீட்டினரின் அவசரத்திற்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தால், தன்தம்பி கையாளும் வகையில்,வண்டியை எடுத்திருந்தாள்.

எந்த நேரமும் ஊர் சுற்றவும், பதவிசாய் நண்பர்கள் முன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளவும் பாஸ்கர், அந்த வண்டியில் சுற்றிக் கொண்டிருக்க, இப்பொழுது தன் அன்னையின் பேச்சில், வண்டி தன்கையை விட்டுப்  போய்விடுமோ என்றெண்ணி, அவசரகதியில் தமக்கையை அமைதிப்படுத்தினான்.

அந்த வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதில் இருந்து, பஞ்சர் ஒட்டி சர்வீஸ் பார்க்கும் செலவு வரை, அக்காவிடம் கூச்சமில்லாம் கணக்கு காட்டி பணம் வாங்கிக் கொள்பவன்.

கணினி பொறியியல் படிப்பை தட்டுத் தடுமாறி முடித்தவனுக்கு, வேலை அத்தனை எளிதில் கிடைக்கவில்லை. இவன் படிக்கும் அழகிற்கு அரியர் வைத்ததை முடிக்கவே, நாலு வருடம் தவிர்த்து, மேலும்  ஒன்றரை வருடத்தை கடத்தி இருந்தான்.

வேலைக்கு சென்றால் கவனத்தை சிதற விட்டு, படிப்பை முடிக்க மாட்டான் என்றே, மஞ்சுளாவும் மகனை வேலைக்கு அனுப்பவில்லை. குடும்பத்தை நடத்திச் செல்ல, பெண்ணின் சம்பாத்தியம் இருக்கும் போது, இவனையும் எதற்காக கழுத்திக் கத்தி வைத்தது போல் வேலைக்கு செல் என அவசரப்படுத்துவானேன் என்று மகனை அவன் போக்கில் விட்டு விட்டார். அதுவே பல இன்னல்களுக்கு வழி வகுத்து விட்டது.

பல கம்பெனிகளில் வேலைக்கென படி ஏறுபவன், தனது மந்த புத்தியில் இரண்டாம் கட்டத் தேர்வில் வெளியேறி விடுவான். இப்பொழுதும் ஏதோ ஒரு சாதாரண கம்பெனியில் ஆட்கள் வராத நாட்களிலோ, வேலை அதிகமுள்ள நாட்களிலோ மட்டும், அதுவும் பகுதி நேர வேலையாக மட்டுமே, மிக சொற்ப ஊதியத்தில் சென்று வருகிறான். சூதானமில்லாத சோம்பேறித் தனத்தை மலையளவு தன்னிடம் வைத்துக் கொண்டு, வாய்பேச்சில் மட்டும் வீரனாய் வலம் வருபவன்.

அவனது வீரத்திற்கு சான்று இருபது வயது அப்பாவி கிராமத்துப் பெண், சிந்துவை பேசி மயக்கி, தன் ஆசைக்கு இணங்க வைத்து காரியத்தை சாதித்துக் கொண்டது.

அப்பொழுது அவனுக்கு தயானந்தனின் பராக்கிரமும் தெரியவில்லை, தனது தமக்கையின் நியாயக் கொள்கையும் அறியவில்லை. தூசி தட்டி விடுவதைப் போல், சின்னப் பெண்ணைத் தட்டிக் கழித்து விடலாம் என்கிற ரீதியில் பழகியிருக்க, தயானந்தன், அவனைக் கிடுக்கிப் பிடி போட்டு இறுக்கி விட்டான்.

அந்த வகையில் என்றும் தயானந்தனை விரோதியாகவே பார்த்து வருபவன். கணவனுக்கு தப்பாமல் மிதுனாவும் நியாய தர்மம் பேசிட, அன்றிலிருந்து அவளையும் எதிரியாக மனதில் பாவித்து வந்தாலும், வெளியே காட்டிக் கொள்ள மாட்டான்.

“துரை தூக்கத்தை தியாகம் பண்ணி, வேலைக்கு போறீங்களாமே? வண்டியில ஊர் சுத்த முடியாத அளவுக்கு பொறுப்புள்ளவரா மாறிட்டீங்க போல!” நக்கலாக தனது தம்பியைப் பார்த்து பேசிய மிதுனா,

“நம்ம குடும்பத்த பொறுப்பா தாங்கிக்க, தோள் குடுக்க சொன்னா… உனக்கான குடும்பம் உருவான பிறகுதான் பொறுப்பா நடந்துக்க ஆரம்பிச்சிருக்க… பரவாயில்ல இதுலயாவது கரெக்டா இருக்க பாரு” குத்தல் பேச்சில் முடிக்க, சிந்துவின் முகத்தை பார்த்துக் கொண்டே தலை குனிந்தவன்,

“இப்போ எதுக்குக்கா இந்த பேச்சு? எங்கே போகணும்னு சொல்லு, போயிட்டு வந்துரலாம்” இணக்கமாகவே பேசினான் பாஸ்கர்.

“என்கூட வர்றதால, உன்னோட மாப்பிள்ளை முறுக்கு குறைஞ்சு போயிடாதே, பாஸ்கி? நீ, என்னோட தம்பியா மட்டுமே இருடா… என்னால புது மரியாதை எல்லாம் குடுக்க முடியாது” என்று பொடி வைத்து பேசியவள், தான்வந்த காரணத்தை கூறி அவனை அழைக்க,

“அம்மாவோட பேச்சுக்கெல்லாம், என்னால பதில் சொல்ல முடியாதுக்கா. ஏதோ ஒரு ஆதங்கத்துல பேசியிருக்கலாம் விட்டுத் தள்ளுக்கா… ஒரு பத்து நிமிஷம் பொறு ரெடியாகிட்டு வந்துறேன்” பதமாகப் பேசி உள்ளே செல்ல, அவன் பின்னே சிந்துவும் சென்றாள்.

“உன் நொண்ணனுக்கு, என்னை பார்த்தா, உங்க வீட்டு வேலைக்காரன் மாதிரி தெரியுதாடி? அவன் இஷ்டத்துக்கு என்னை கோர்த்து விட்டுட்டு போயிருக்கான்” மனைவியிடம் கிசுகிசுத்த குரலில் கடுப்பை கொட்டினான் பாஸ்கர். தன் அக்காவிடம் காட்டிய அமைதிக்கு, மனைவியை கடிந்து கொண்டு பழி வாங்கினான்.

“எனக்கு ஒன்னும் தெரியாது மாமா… அண்ணி சொல்லிதான் இன்னைக்கு சீமந்தத்துக்கு நாள் குறிக்கப் போறாங்கன்னு தெரியும்” கணவனின் கோபத்தில் விதிர்த்துப் போனவாறே, இறங்கிய குரலில் சிந்து பேச,

“மாமான்னு கூப்பிட்டா, கொலையே பண்ணிடுவேன் பார்த்துக்கோ… நீ பிள்ளை பெத்துக்கப் போற லட்சணத்துக்கு, வளைகாப்பு ஒன்னுதான் கேடு” வார்த்தைகளை இவன் கடித்துத் துப்ப,

“நான் வேணும்னா, எனக்கு வளைகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டு வந்திரவா மாமா?” கணவன் பேச்சிற்கு கோபம் கொள்ளாமல் அப்பாவியாக மனைவி கேட்க,

“எதுக்கு உன் நொண்ணென் வந்து, என்னை காயப் போட்டு தொங்க விடுறதுக்கா? பத்தாததுக்கு இந்த ராட்சஷியும் ரொம்ப நல்லவ மாதிரி பேசியே, குத்திக் காமிச்சு எல்லார் முன்னாடியும் தலகுனிய வப்பா… எல்லாம் என்னை சொல்லணும். உன்னை என்னைக்கு தொட்டேனோ, அன்னைக்கே என் நிம்மதி போச்சு” மூச்சு விடாமல் சடைத்துக் கொண்டு பேசினான்.

கணவனின் பேச்சில் முணுக்கென்று கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்திருக்க, அதற்கும் முறைத்தான் பாஸ்கர்.

“இப்பிடி டேம் ஓபன் பண்ணித்தாண்டி,உன் காரியத்த சாதிச்சிக்கிற” பேசியபடியே தயாராகி வெளியே வந்து, மிதுனாவுடன் கிளம்ப முற்பட, மஞ்சுளாவின் குரல் அவர்களை தடுத்து நிறுத்தியது.

“கல்யாணத்தைதான் அவசரகோலத்தில முடிச்சாச்சு. ஒத்த மருமகளோட சீமந்தம், நம்ம ஜனக்கட்டு எல்லாரையும் கூப்பிடணும். இருநூறு பேர்ல இருந்து, மூன்னூறு பேருக்கு பக்கத்தில வரலாம். உன் புருஷன் கிட்ட சொல்லி வை மிதுனா… எந்த குறையும் இல்லாம விசேஷத்த செய்யனும். அதேமாதிரி இங்கே வர்றவங்களுக்கு பூ, தாம்பூலம் குடுத்து கவனிக்கணும். அந்த செலவ எல்லாம் மாப்பிள்ளை வீட்டு சார்பா, நீதான் செய்யனும்” மஞ்சுளா பட்டியலிட்டுக் கொண்டே செல்ல,

“உன் ஆசைய,ரொம்ப கொஞ்சமா சொல்றியேம்மா! உன் புள்ள சம்பாத்தியம் என்ன ஆச்சு? இப்போதான் அவன் ரொம்ப பருப்பு, பொறுப்புன்னு எடைக்கல்லு வச்சு அளந்துட்டு இருந்த” நக்கலாக தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் மிதுனா.

“புள்ளதாச்சி பொண்ண கவனிக்க வேணாமா? நீ குடுக்குற காசு, மூணு வேல கஞ்சி குடிக்க மட்டுமே பத்துது. அதான் அவன் சம்பாத்தியத்துல பழம், சத்து மாவு எல்லாம் வாங்கி கொடுத்து, அவன் சம்பளத்தை காலி பண்ணிட்டான்” என்று விளக்கத்தை சொன்னவர்,

“நம்ம வீட்டுக்கு நீதானே செய்வே… இப்போ என்ன புதுசா அவன இழுக்குற?” கேள்வியுடன் மகளை நோக்கினார்.

மஞ்சுளா குத்தல் பேச்சுக்களை பேசினாலும், மருமகளை கவனித்துக் கொள்வதில் குறை வைப்பதில்லை. அதனாலேயே, மரகதமும் என்ன மாதிரியான பேச்சுக்கள் காதில் விழுந்தாலும், ‘சித்தம் போக்கு சிவன் போக்கு’ என்று அமைதியாக இருந்து விடுவார்.

தாயின் பேச்சை நியாயம் என்று மிதுனாவால் ஆதரிக்க முடியவில்லை. தனது புகுந்த வீட்டின் நிலைமை மிக நன்றாக அறிந்து வைத்திருப்பவர். வேண்டுமென்றே இந்தச் செலவை இழுத்து வைக்கிறார் என்றே அவளுக்கு தோன்றியது.

முடிந்த வரையில் எளிமையான முறையில் வளைகாப்பை நடத்தி முடிக்க வேண்டுமென்று, தயானந்தன் தன்னிடம் கூறியதை எடுத்துச் சொன்னால், தனது அன்னை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்றே, அந்த நேரத்தில் மனதோடு பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு மாதமும் எதிர்பாராத செலவினங்கள் மூலம் திக்கி முக்காடிப் போகும் தன்கணவன், இந்தப் பெரிய செலவை சமாளிக்க இன்னும் எதையெல்லாம் தியாகம் செய்யப் போகிறானோ என நினைத்தே, அவன் மீது காதல் கொண்ட மனது, தன் இதயத் துடிப்பை அதிகமாக்கிக் கொண்டது.

“புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும், ரெண்டு பக்கத்து சார்பா செலவு செய்யணும்னு சொல்ற… அப்படித்தானே? உன்னோட லிஸ்ட் இவ்வளவு தானா? இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?” அடக்கப்பட்ட கோபத்தில், கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக கேட்க,

“நியாயமா, பத்து பவுன் போடச் சொல்லனும், உங்க குடும்பம் ஓடுற ஓட்டம் எப்படினு எனக்கு நல்லாவே தெரியும். அதான் அஞ்சு பவுன்ல தங்க வளையல் செஞ்சா போதும், அதுதான் நம்ம ஜனத்து பக்கம் சொல்லிக்க, நமக்கு கௌரவமா இருக்கும். கல்யாணம் நடந்தப்போ, சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லன்னு, சீர் செய்யாம விட்டத போல, சீமந்ததுக்கு செய்யாம விட்டா, நான் ஒத்துக்க மாட்டேன்” மஞ்சுளா, மகனைப் பெற்றவரின் தோரணையோடு மிடுக்காக பேசினார்.

அவர்களது குடும்ப நிலவரத்தை எடுத்துக் காட்டி, சீர்வரிசை செய்வதை எக்காரணம் கொண்டும் தள்ளிப்போட, விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தவர், எதிர்பேச்சு வரும் முன்னே பதில்களை சொல்லி, மகளின் வாயை அடைத்து விட்டார்.

“நீயும் தானே, உன் பொண்ணுக்கு சீர் ஒன்னுமே செய்யல… அத எந்த கணக்குல சேர்க்கப் போற?” மிதுனா அசராமல்  கேள்வி கேட்க,

“உன்னோட நகையெல்லாம் அடமானத்தில இருக்கு, இந்த வீட்டுல சம்பாத்தியம் பண்றவ நீ ஒருத்தி மட்டுந்தான். அத நீதான் மீட்டு, திருப்பி எடுத்துக்கணும். என் கையில ஒன்னுமே இல்லை. நீ காசு குடுத்தா, சீர்வரிசை அடுக்கி வைக்க நான் ரெடியா இருக்கேன்.

இந்த வீட்டுக்கு வந்த மருமக எந்த விதத்துலயும் குறைஞ்சவளா, மத்தவங்க கண்ணுக்கு தெரியக்கூடாது. அதுதான் நான் எதிர்பாக்கிறது” நீளமாய் மஞ்சுளா பேசப்பேச, மிதுனா கண்கள் தெறித்து விடும் அளவிற்கு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

தன்னைப் பெற்றவளிடத்தில், மிதுனா இத்தனை சுயநலத்தை எதிர்பார்க்கவில்லை. பெற்ற பெண் என்ற பாசம் வைக்காமல், தன் சம்பாத்தியம் மட்டுமே முக்கியம் என்று கருதும், தன் பிறந்த வீட்டை முதன் முதலாக வெறுத்தாள். தன் தேவையை மட்டுமே முன்னிறுத்தி பேசும், அன்னையை ஏறிட்டுப் பார்க்கவும் விரும்பவில்லை மிதுனா.

உணர்வுகள் ஒன்றானால் தானே, உறவுகளிடமும் புரிதல் ஏற்படுவதற்கு… இங்கே, அந்த பாச உணர்வே, நூல் அறுந்த பட்டமாக கீழே விழுந்தே விட்டது. தன் அன்னையை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கும் தன்தம்பி, அவனையே கதி என்று நினைக்கும் அவன் மனைவி… இவர்களையெல்லாம், தன்உறவேன்று எண்ணி இத்தனை நாள் பாசத்துடன் தன்கடமையை செய்ததை நினைத்தே வெறுத்துக் கொண்டாள்.

“சிந்து நெலையில நான் இருந்து, என் மாமியார் இப்டி பேசியிருந்தா என்ன பண்ணியிருப்ப?” ஆழ்ந்த குரலில் மகள் கேள்வி கேட்க,

“வேலைவெட்டிக்கு போகாதவன், அன்னாடம் காய்ச்சி எல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டா, நெலம இப்பிடிதான் இருக்கும். இந்த அக்கப்போரு வேணாம்னுதான், நான் அன்னைக்கே இந்த கழுதைய தட்டிக் கழிக்க, உன்ன முன்னே நிறுத்தி,கல்யாணத்த தடுக்க நெனைச்சேன்.

நீதான் பெரிய நியாயஸ்தி மாதிரி, முந்திரிக் கொட்டையாட்டம் தத்துவம் பேசி, அந்த குடும்பத்துல போயி விழுந்த… நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும் போது ஒரு வார்த்தை என்னை கேட்டியாடி..! வேலைக்கு போயிட்டு வர்றவளுக்கு, அத்தனை வாழ்க்கை அனுபவம் வந்திருச்சா?” பேச்சில் தணலை கொட்டிக் கொண்டிருந்தார் மஞ்சுளா.

“பெத்த பொண்ணுகிட்ட பேசுற நினப்பு கொஞ்சமாவது இருக்கட்டும். என்னைப் பழி வாங்குற அளவுக்கு நீ பேசினா, பதிலுக்கு நானும் பேச வேண்டி வரும். நீ தாங்க மாட்ட” மிதமிஞ்சிய பொறுமையுடன், பல்லை கடித்துக் கொண்டு மிதுனா பேச,

“எனக்கு இருக்குறது ஒரே பையன், அவனுக்கு எல்லா நல்லதும் நடக்கணும்னு நான் ஆசைப்படுறது தப்பா? என் பொண்ண அந்த வீட்டுல குடுத்திட்டேன்னு, என் மகன நான் விட்டுக் குடுக்க முடியுமா? உன் இடத்துல யார் இருந்திருந்தாலும் என்னோட பேச்சு இப்படிதான்.” ஆணித்தரமாக தன் முடிவை மஞ்சுளா பேசிவிட, மிதுனா மட்டுமல்லாது, பாஸ்கரும் சிந்துவுமே வாயடைத்து நின்றனர்.

திருமண விஷயத்தில், தன்னை கலந்து கொள்ளாமல் மகள் எடுத்த முடிவில் மிகுந்த கோபம் அடைந்திருந்த மஞ்சுளா, சமயம் பார்த்து சொல்லிக் காண்பித்து விட்டார்.

அதே போல மருமகள் கொண்டு வரும் சீர்வரிசையை, தன் சுற்றத்தார்களுக்கு காட்டி, தனது கௌரவத்தை உயர்த்திக் கொள்ளும், சராசரி வர்க்கத்தை சேர்ந்தவர்தான், நான் என்பதை மகனின் மேல் உள்ள அக்கறையான பேச்சில் வெளிப்படுத்தி விட்டார்.