dhuruvam-10
dhuruvam-10
துருவம் 10
மாலை வேளை, ஹோட்டலில் தாத்தாவின் அறையில் எல்லோரும் கூடி இருந்தனர். அவளின் அண்ணிகள், எல்லோரிடமும் faiq அவளை தூக்கிக் கொண்டு சென்ற போட்டோவை காட்டி, அவர்களிடம் இருவரும் விரும்புகின்றனர் என்பது போல் கூறி பிரச்சனை உண்டாக்கினர்.
“என்ன டி இது எல்லாம்? சொல்லு காவ்யா உண்மையா இது?” என்று அவளின் அன்னை ஸ்ரீமஹா அவளிடம் கேட்டார்.
அவளோ, அன்னையை முறைத்துவிட்டு பாட்டியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். அவளின் அச்செயலில், அவளின் அன்னைக்கு விஷயம் புரிந்தது.
அவளிடம், ஒரு மன்னிப்பு வேண்டும் பார்வை பார்த்தார். அவளோ, அது எப்படி நீ என்னை நம்பாமல் இருக்கலாம், என்று பதில் பார்வை பார்த்து மௌனம் சாதித்தாள்.
அவளை பொறுத்தவரை, அவள் மனதில் அவன் இருக்கிறான். ஆனால் அவன் மனதில் என்ன இருக்கின்றது, என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.
குளிரில் நடுங்கிக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னை பார்த்ததும் அவன் பதற்றம் அடைந்தாலும், உடனே முதழுதவியாக முத்தம் கொடுத்தானே தவிர, ஆசையாக இல்லை என்பதை அவள் அறிவாள்.
அப்பொழுது, உடனே அந்த இடத்தில் இருந்து என்னை நகற்ற வேண்டும் என்று எண்ணி, உடனே செயல்படுத்த தான் அவன் தன்னை தூக்கியதும்.
இதை பார்த்தும், இவர்கள் தங்கள் பின் வரவில்லை. அவர்களின் பிள்ளைகள் விளையாடி முடித்ததும், அதன் பின் தம்பிக்கு விஷயம் தெரியவும், அவன் தான் முதலில் ஓடி வந்தான்.
இந்த இரு அண்ணிகளும், என்ன மாதிரி மனிதர்கள் என்று அவளுக்கு புரியவில்லை. தன் மேல் ஏன், அவர்களுக்கு இவ்வளவு துவேஷம் என்று சிறிது வருத்தமாக கூட இருந்தது அவளுக்கு.
“என்னங்கடி இது? அவ மேல அப்படி என்ன வெறுப்பு உங்களுக்கு, என்ன தான் டி உங்க பிரச்சனை?” என்றும் இல்லாமல், இன்று முதல் முறையாக அவர்களின் மாமியார் கேள்வி எழுப்பினார்.
“அதானே! இங்க தப்பு செய்தது அவ, அவளை கேட்காம எங்களை பெருசா கேட்க வந்துடீங்க. இதான், இதான் ஆரம்பத்தில் இருந்து நடக்குது, இந்த வீட்டில்” என்று கங்கா போட்டு உடைத்தாள்.
எத்தனை நாள் தான் அவளும் மனத்திற்குள்ளே வைத்து, போராடுவாள். இன்று, சாதுவாக தங்களிடம் நடக்கும் மாமியார், தங்களிடம் பொங்கவும் துணிந்து மனதில் இருந்ததை போட்டு உடைத்தாள்.
அவ்வளவு நேரம் அமைதியாக, இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த பாட்டி, கங்காவை நெருங்கி அவளின் கன்னத்தில் மாறி மாறி அடித்து ஓய்ந்தார்.
“என் பேரங்க ரெண்டு பேரும், உங்களை தான் கல்யாணம் பண்ணிப்போம்னு வந்து நின்னானுங்க. நாங்க காதல் கல்யாணம் தான பண்ணிக்கிட்டோம், இவனுங்க அப்பா, சித்தப்பா, அத்தை எல்லாம் எங்க கிட்ட பொறுப்பை கொடுத்துட்டு, ஹாயா இருந்துட்டாங்க”.
“இவனுங்க, உங்களை கை காட்டும் பொழுது, உங்க அப்பா, அம்மா எல்லாம் ரொம்ப பண்பாடு தெரிஞ்சவங்க, நல்ல குடும்பம் அப்படினு தான் முடிவு பண்ணோம்”.
“ஆனா, நிச்சயம் முன்னாடி எங்க குடும்ப நண்பர் ஒருத்தர் என்ன சொன்னார் தெரியுமா? பொண்ணுங்க ரெண்டும் அவங்க வீட்டில இருக்கிறவங்க மாதிரி இல்லை, யோசிச்சு செய்ங்க சொன்னார்”.
“அப்போ, நான், என் வீட்டுக்காரர், இதோ காவ்யா நாங்க மட்டும் தான் இருந்தோம் அந்த இடத்தில். நாங்க விசாரிக்க நினைக்க, இந்தா எங்க பேத்தி காவ்யா தான், வேண்டாம் சொன்னா”.
“அண்ணங்க அவ்வளவு ஆசையா இருக்கிற மாதிரி, அங்கே அண்ணிகளும் இந்த கல்யாணம் குறித்து நிறைய கனவு வச்சு இருப்பாங்க. இங்க வந்தா, அவங்களை நம்ம அண்ணன்கள் பார்த்துப்பங்க சொன்னா”.
“அவனுங்க, ரொம்ப நல்லா பார்த்தானுங்க. தங்கச்சிக்கு மறைமுக சப்போர்ட் தான், பாவம் அவர்களால் கொடுக்க முடிஞ்சது. அப்படி பட்ட பொண்ணுக்கு, நீங்க இப்படி அசிங்கப்படுத்தி பேசுறது தப்பா தெரியல” என்று பொறுத்தது போதும் என்று எண்ணி, அங்கே இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்றை போட்டு உடைத்தார்.
இந்த செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ந்தாலும், அதிகமாக அதிர்ந்தது அவளின் அண்ணிகள் இருவரும் தான். எத்தனையோ முறை, அவளை மட்டம் தட்டி இருந்தாலும், அதை எல்லாம் தூசி போல் அவள் அதை தட்டி செல்லும் பொழுது, தாத்தாவின் சப்போர்ட் இருக்கும் திமிரு என்று தான் எண்ணி இருந்தனர்.
ஆனால், அப்படி இல்லை என்று பாட்டி அடுத்து அடுத்து கூறிய விஷயங்களில் அது அவளின் இயல்பு என்று புரிந்து கொண்டனர். இதனால் தான், வீட்டில் எல்லோரும் அவளை தூக்கி வைத்து இருக்கின்றனர் என்பதை இப்பொழுது இருவரும் உணர்ந்தனர்.
“சாரி காவ்யா! எங்களால் உனக்கு கொடுக்குற importance பார்த்து தாங்க முடியல. இது எங்க வீடு அப்படினு சொல்ல நினைச்சா, இது காவ்யா வீடு அப்படி தான் சொல்லிடுவாங்க”.
“நீயோ வேற வீட்டுக்கு போற பொண்ணு, ஆனா எங்களுக்கு இங்க தான் இனி எங்க வாழ்க்கை. ஆனா இதை எங்க வீடுன்னு உரிமையா சொல்ல முடியாமல், சில இடத்தில் இருந்து இருக்கு”.
“அதனால தான், எப்போ பார்த்தாலும் உன்னை மாட்டிவிட நாங்க வாய்ப்பு தேடிக்கிட்டே இருப்போம். ஆனா, இப்போ உன்னை பத்தி பாட்டி சொன்னதுக்கு பிறகு, நாங்க எவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருகோம்ன்னு புரியுது. தப்பு மொத்தமும், எங்க பெயரில் தான் இருக்கு, எங்களை மன்னிச்சிடு காவ்யஹரிணி” என்று முழு மனதுடன் அவர்கள், அவளிடம் மன்னிப்பு கேட்கவும் அவளும் அவர்களின் தவறை மன்னித்தாள்.
“ஏனுங்க! உங்க அம்மா இதை முன்னாடி செய்து இருக்கலாம். என் பொண்ணுக்கு, இம்புட்டு கஷ்டம் வந்து இருக்காது” என்று புலம்பியவரை பார்த்து அவரின் கணவர் முறைத்தார்.
“ஹையோ அக்கா! Fb ல போட்டு இருந்தோம் இந்த போட்டோவை, முதலில் இதை டெலிட் செய்யணும்” என்று ஷர்மிளா பதறினாள்.
“ஆமா, முதல டெலிட் பண்ணிடு. யாரும் கேட்டா, fake நியூஸ் அப்படினு சொல்லிகிடலாம்” என்று கங்கா கூறவும், பாஸ்கரும், சேகரும் அதிர்ந்தனர்.
“என்னது! Fb ல போட்டு இருக்கீங்களா! போச்சு, எல்லோரும் மாட்டினோம். இங்க இருந்து, நாம போன மாதிரி தான்” என்று புலம்பிய இருவரையும் புரியாமல் பார்த்தனர் எல்லோரும்.
“நாம இப்போ இருக்கிறது துபாய், இங்க அவ்வளவு சாதாரணமா ஒரு பெண்ணை கையில் வச்சு தூக்கிட்டு போக மாட்டாங்க. இப்போ இந்த போட்டோ, எங்க எல்லாம் சுத்தி இருக்கோ?”.
“அந்த போட்டோவில் இருக்கிறவர், fb ல இருந்தா இந்த போட்டோ பார்த்து, எப்படியும் நம்மாதான் போட்டோம்னு தெரிஞ்சு, வந்து கத்த போறான்” என்று புலம்பவும், கங்கா முறைத்தாள்.
“லூசாங்க நீங்க! என் account ல யார் எல்லாம் என் பிரண்ட்ஸ் லிஸ்ட் ல இருக்காங்களோ அவங்க மட்டும் தான் இந்த போஸ்ட் பார்க்க முடியும்” என்று கூறியவளை பார்த்து, வெட்டவா, குத்தவா என்பது போல் இருந்தான்.
“இந்த போட்டோவை ஷார் பண்ண முடியாம, நீ செட்டிங்ஸ் வச்சு இருந்தாலும், இதோட ஐபி அட்ரஸ் வச்சு கண்டுபிடிச்சு வருவாங்க. காரணம், நீ இந்தியா ல இருந்து போடல, துபாய் ல இருந்து”.
“இங்க சோசியல் மீடியா எல்லாம், அரசாங்க கண்ட்ரோல் ல இருக்குது. வாட்ஸ் ஆப் ல கால் பண்ண முடியாது, மெசேஜ் மட்டும் பண்ண முடியும். Fb இங்க வந்தாச்சுனா, அவங்க கண்ட்ரோல் போயிடும்” என்று விளக்கம் கொடுத்தான்.
அடுத்து என்ன செய்வது என்று அவர்கள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது, யாரோ கதவை படபடவென்று தட்டினர். யாரு என்று போய் பார்த்த சேகர், அங்கு குழுமி இருந்தவர்களை பார்த்து அதிர்ந்தான்.
அங்கே குண்டாஸ் போல் அடியாட்களும், சில மேல் அதிகாரிகள் போல் இருப்பவர்களும் நின்று இருந்தனர். பயத்தில் அவனுக்கு பேச்சு எழவில்லை, அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான்.
கதவை திறந்தவன் இன்னும் வரவில்லை எனவும், காவ்யஹரிணியே சென்று யார் என்று பார்த்தாள். அவளுமே சற்று திடுகிட்டாலும், தயங்காமல் ஆங்கிலத்தில் அவர்களிடம் என்னவென்று விசாரித்தாள்.
“நாங்கள் துபாய் அரசர் உத்தரவின் பெயரில் வந்து இருக்கோம், இந்த புகைப்படத்தில் இருப்பது நீங்கள் தானே” என்று கங்கா எடுத்த படத்தை எடுத்து காட்டினர்.
“ம்ம்.. நானே தான், எங்கள் குடும்பத்தில் உள்ளவங்க ஒரு சின்ன misunderstanding ல அதை போட்டுட்டாங்க, மன்னிச்சிடுங்க” என்று அவள் கூறவும், அவளின் நிமிர்விலும், உண்மையை ஒத்துக்கொண்டு சொன்ன விதமும், அந்த அதிகாரிகளை கவர்ந்தது.
“உண்மையை ஒத்துகிட்டதுக்கு நன்றி மிஸ், நாங்க துபாய் அரசர் சொல்லி வந்து இருக்கோம். உங்களை கையோடு கூட்டிட்டு வர சொன்னாங்க” என்று அவர்கள் கூறவும், அதை அவள் தாத்தாவிடம் தெரிவித்தாள்.
அவள் தாத்தா சற்று யோசித்துவிட்டு, அவர்களிடம் எல்லோரையும் அழைத்து செல்லலாமா என்று கேட்க சொன்னார். அதை அவள் அவர்களிடம் தெரிவிக்கவும், அவர்கள் அங்கு இருந்து அரசருக்கு விபரம் தெரிவித்து, என்ன செய்வது என்று கேட்டனர்.
அவரோ, எல்லோரையும் அழைத்து வரும்படி கட்டளையிட்டார். ஆகையால், மொத்த குடும்பமும் அவர்களோடு பயணம் செய்தனர்.
இந்த செய்தி எப்படியோ, faiq காதிற்கு செல்லவும், அவன் உடனே தன் நண்பன் ரசாகிடம் முழு விபரம் சொல்லிவிட்டு, தன் வண்டியை எடுத்துக் கொண்டு விரைந்தான் தர்பாருக்கு.
ஆம், தர்பாருக்கு தான் அவளின் குடும்பத்தினரை அழைத்து சென்று இருக்கின்றனர். அங்கு அரசு உறுப்பினர்கள் முன் தான், இந்த விசாரணை.
அரசர் இவனிடம் இதை பற்றி கூறவில்லை, அது ஏன் என்றும் அவனுக்கு புரியவில்லை. தவறு என்று தெரிந்தால், எப்பொழுதும் இரண்டு பக்கமும் தான் விசாரணை நடக்கும், அது யாராக இருப்பினும்.
ஆனால் இங்கே தன்னை கூப்பிடவில்லை எனவும், தந்தை தன்னை ஏன் கூப்பிடவில்லை என்ற பெரும் குழப்பத்தில் இருந்தான். எதுவாகினும், அதை பற்றிய விளக்கம் கொடுக்க வேண்டியது இவனது கடமையும் கூட, ஆகையால் அங்கே விரைந்து சென்றான்.
அங்கே தர்பார் நடக்கும் கட்டிடத்தை, நிமிர்ந்து பார்த்த அவளின் குடும்பத்தினர் அசந்து விட்டனர்.
“காவி! தர்பாரே ப்ரமண்டமா இருக்கு, அப்போ அவங்க வீடு எல்லாம் எப்படி இருக்கும்?” என்று காவ்யா காதில் ரகசியம் பேசும் மனோவை, பார்த்து முறைத்தார் அவர்களின் தாய்.
“உள்ளே என்ன கேள்வி கேட்பாங்க, நம்மள இங்க இருந்து முழுசா போக விடுவார்களா அப்படினு, நாம பயத்தில் இருக்கோம். இவனுக்கு, இது பெருசா, அது பெருசான்னு தெரியுறது ரொம்ப முக்கியம் பாருங்க” என்று கணவரிடம் கோபமாக முறையிட்டார்.
“அதுவும் முக்கியம் தான மா, பையன் ஜி.கே வளர்த்துக்குறான்” என்று கூறிவிட்டு, நைசாக அவரிடம் இருந்து விலகிக் கொண்டார்.
“இந்த மனுஷர் கிட்ட போய் சொன்னேன் பாரு, அப்படியே இவரை மாதிரி தான இருப்பான் அவனும்” என்று சலித்துக் கொண்டார்.
உள்ளே ஒரு அறைக்கு இவர்களை அழைத்து சென்றனர், அது பார்க்க மிகப் பெரிய conference ஹால் போல் தோற்றம் அளித்தது. அங்கே இவர்கள் சிறிது நேரம் காத்து இருக்க, அரசர் தன் சகாக்களுடன் அங்கே வந்தார்.
இவர்கள் எல்லோரும் எழுந்து நின்று, அவரை பார்த்து வணக்கம் என்று கரம் குவிக்க, அவர்களின் அந்த செயல் கோபத்தில் இருந்தவரை சற்று மட்டுப்படுத்தியது.
அவர் விசாரணையை தொடங்க, காவ்யா அவளை காப்பாற்ற அவன் செய்த செயல் அது என்று கூறி, இங்கே அதை தப்பாக புரிந்து கொண்டு செய்த அண்ணிகளின் செயலையும் விளக்கினாள்.
அவளின் நேர்கொண்ட பார்வையும், அவளின் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையையும் விளக்கி, மன்னிப்பு கேட்ட விதம் அவருக்கு பிடித்து இருந்தது.
இதை அவர் அவ்வப்பொழுது, faiqயிடம் கண்டு இருக்கிறார். அவள் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில், அவருக்கு அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்றும் புரிந்தது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, அவளின் அண்ணிகளும் மனதார தங்கள் தவறை ஒத்துக் கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
அரசர், விசாரிக்க இங்கே இவர்களை அழைக்கும் பொழுதே, தமிழ் பேசும் நம்பிக்கையான ஒருவரை தன்னோடு அழைத்து வந்து இருந்தார்.
ஆகையால், இப்பொழுது குடும்பத்தின் மூத்த உறுப்பினராக அவளின் தாத்தா பேசவும், மொழி பெயர்த்துக் கொண்டே வந்தார் அரசரிடம், அந்த ஊழியர்.
“தப்பு எங்க மேல தான், மன்னிச்சிடுங்க இனி இது போல் நடக்காது” என்று தாத்தா பணிந்து கூறவும், அரசர் எழுந்து வந்து அவரை அணைத்துக் கொண்டார்.
தவறு குடும்பத்தில் உள்ளவர்கள் செய்து இருக்கிறார்கள், மன்னித்து விடுங்கள் என்று இதுவரை யாரும் இப்படி கேட்டதில்லை அவரிடம்.
அவ்வளவு ஏன், தன் குடும்பத்தில் கூட பிரச்சனை வந்த பொழுது, தான் மகனை அல்லவா கிட்டத்தட்ட வெட்டி விட்டோம் என்று எண்ணி வருந்தினார்.
இவர்களுக்குள் பிரச்சனை வந்தால், உடனே பேசி சரி செய்ய விளைந்ததோடு மட்டும் இல்லாமல், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய இந்த குடும்பத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவருக்கு.
“போதும் ஐயா! இனி இதை பத்தி பேச வேண்டாம். நீங்க எல்லோரும், எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க இப்போ, இதான் என்னோட அன்பு கட்டளை” என்று கூறிவிட்டு, அவர்கள் வேண்டாம் என்று மறுக்க, மறுக்க அவர்களை வீட்டிற்கு இல்லை மாளிகைக்கு அழைத்து சென்றார்.
இப்பொழுது, மஹா வாயை பிளந்து கொண்டு பார்த்தார். அவ்வளவு பிரமாண்டம் அந்த மாளிகை, இவர்கள் வீட்டு மாளிகை போல், இது இரண்டு மடங்கு பெரியது.
“என்ன மஹா! அவனை சொல்லிட்டு, நீ இப்படி வாயை பிளக்குற?” என்று கேட்டார் அவரின் கணவர்.
“இல்லை, இப்படி கட்டி வச்சி என்ன செய்ய போறாங்கன்னு தான் யோசிக்குறேன்” என்று கூறியவறை பார்த்து தலையில் அடித்துக் கொண்டார்.
“நாம அங்க நம்ம வீட்டில் செய்ததை தான் இங்கேயும் செய்வாங்க, வாயை மூடிக்கிட்டு வா” என்று அவரிடம் சலித்துவிட்டு, முன்னே நடந்தார்.
“அதானே! என் வாயை அடைக்கலைனா இவருக்கு தூக்கம் வராதே” என்று சிலும்பிக் கொண்டே முன்னே நடந்தார்.
இங்கே faiq அவர்களை எல்லாம் தந்தை வீட்டிற்கு அழைத்து சென்று இருக்கிறார், என்று தெரியவும், அவனின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது.
உடனே அவனும், அங்கே விரைந்தான். மனதிற்குள் அப்பொழுது, அவனுக்கு நிறைய கேள்விகள் படை எடுக்க தொடங்கியது. அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு, வண்டியை வீட்டிற்கு செலுத்தினான்.
அரசர், எல்லோரையும் அழைத்து வந்தவர் அவர்களை ஹாலில் அமர வைத்தார். ஹாலை சுற்றி பார்த்த காவ்யஹரிணி, அங்கு மாட்டி இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து திகைத்தாள்.
“ஏய்! அங்க பாரேன் காவ்யா நாமளும், இதே மாதிரி ஒரு கோல்டன் கார்பெட்டை தான வாங்கினோம்” என்று அதை நினைவு கூர்ந்து, காவ்யாவிடம் ஆர்ப்பரித்தாள், ஷர்மிளா.
“நீங்க முதல இங்க இந்த போட்டோ பாருங்க அண்ணி, சுத்தம் நான் செத்தேன்” என்று அலறிய காவ்யாவை பார்த்துவிட்டு, அங்கே அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தவளும் அதிர்ந்தாள்.
அதற்குள், வீட்டுக்குள் சவாதீனமாக உள்ளே நுழைந்த faiqகை பார்த்து மற்றவர்கள், என்னவென்று புரியாமல் பார்க்க, அரசர் அவர்களிடம் தன் மூத்த மகன் என்று faiqகை அறிமுகப்படுத்தினார்.
எல்லோரும் அதை கேட்டு, சற்று அதிர்ந்தாலும் சிறிது வியப்பும் அடைந்தனர். தாத்தா அதை பற்றி வெளிப்படையாக, அதை அரசரிடம் தெரிவிக்கவும், அவர் சற்று தலை குனிந்தாலும், நிமிர்வாகவே இவர்களுக்குள் இருக்கும் மன்ஸ்தாபத்தை கூறினார்.
“மன்னிச்சிடுங்க! நீங்களும் உங்க ஊர் ல பெரும்புள்ளின்னு தெரிஞ்சிகிட்டேன். ஒரு உதவியை, நானும் கொஞ்சம் தப்பா நினைச்சிகிட்டேன்”.
“என் பையனுக்கு, அடுத்த வாரம் நிச்சயம் வச்சு இருக்கேன். இப்போ இப்படி படம் வரவும் தான், என்ன ஏதுன்னு யோசிக்காமல் கோபத்துல உங்களை கூட்டிகிட்டு வந்து, விசாரிக்க வேண்டியதாகிடுச்சு” என்று வருத்தம் தெரிவித்தவரை பார்த்து, இப்பொழுது அதிர்வது காவ்யாவும், faiqயும் தான்.
தனக்கு தெரியாமல், நிச்சய ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிமன்றனரா! என்று கோபத்தில் faiq இருக்க. காவ்யாவோ, இவனை நாம அப்போ மறந்திடனுமா! என்று வருத்தம் கொண்டாள்.
தொடரும்…