Dhuruvam 3

Dhuruvam 3

அத்தியாயம் – 3

                      மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், காவ்யஹரிணியின் குடும்ப உறுப்பினர்கள் குழுமி இருந்தனர். வரும் வாரத்தில், எல்லோரும் அவளை அழைத்துக் கொண்டு, துபாய் செல்ல இருக்கின்றனர்.

                  ஒரு வாரம் அவளோடு அங்கே ஊர் சுற்றிய பின் தான், இங்கே திரும்ப இருக்கின்றனர். பதினைந்து நாட்களில், அவள் அங்கே வேலையில் சேர வேண்டும்.

             அதற்கு முன், அங்கே அவளோடு அங்கே ஊரை சுற்றி பார்த்துவிட்டு, அவள் தங்கும் இடத்தில் பாதுகாப்பு வசதியை பார்த்துவிட்டு வர வேண்டும் என்று விரும்பினார் கோதண்ட ராமன், அவளின் தாத்தா.

                தரிசனத்திற்கு வரிசையில் நின்று இருந்தவர்கள், இவர்களின் முறை வரவும், எல்லோரின் பேருக்கும் அர்ச்சனை செய்ய கூறி ஐயரிடம் கூறினார் கோதண்ட ராமன். எல்லோரும், சாமி தரிசனம் செய்ய, காவ்யஹரிணியோ அவளின் தோழியும், கடவுளுமான மீனாட்சியுடன் அரட்டையில் ஈடுபட தொடங்கினாள்.       

             “மீனு மா, தேங்க்சு ஒரு வழியா தாத்தாவை ஒத்துக்க வச்சிடீங்க. அங்க துபாயில், நான் நினைச்ச மாதிரி எல்லாம் நல்லபடியா நடக்கணும். உங்களுக்கே தெரியும் நான் வேலைக்காக மட்டும் போகல, வேறு ஒரு விஷயத்துக்காகவும் போறேன்னு”.

               “சோ போற காரியம் நல்ல படியா முடியனும், அப்படியே எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் மீனு மா. இன்னும் ஒரு மூணு வருஷம் போகட்டும், இப்போ தான் இருபத்தி ஐஞ்சு நடக்குது”.

             “இன்னும் நான் ஒண்ணுமே சாதிக்கல, இப்போ தான் வேலைக்கு சரின்னு சொல்லி இருக்காங்க. வேலைல நல்ல பெயர் எடுக்கணும், அப்புறம் ஒரு வருஷத்துல வேலை முடிச்சிட்டு வந்திட்டு, இங்க எல்லோரையும் நல்லா வம்பு வளர்க்கணும்”.

             “மதுரை நல்லா மீசையை முறுக்கிட்டு திரிற ஒரு வீரனை, நான் தேடி பிடிச்சு லவ் பண்ணனும். அப்புறம் நீங்க தாத்தா கிட்ட பேசி சம்மதம் வாங்கிக் கொடுக்கணும்”.

              “நல்லா ரெண்டு பிள்ளையை பெத்து, சந்தோஷமா இருக்கணும். எல்லாம் நல்லபடியா நடத்திக் கொடுக்க வேண்டியது, உன்னுடைய பொறுப்பு மீனாட்சி மாஎன்று அவருடன் பலத்த discussion நடத்தி முடித்தாள்.

           அன்னை மீனாட்சியோ புன்னகை புரிந்தார், தோழியின் வேண்டுதலை பார்த்து. தோழிக்கு துபாயில் தான், அவளின் வாழ்க்கையே காத்து கொண்டு இருக்கின்றது என்பதை அவர் சொல்லவில்லை அவளிடம்.

             சற்று அவளிடம் விளையாடி பார்க்க ஆசை கொண்டார், அவ்வளவே. அவளோ, அவரின் புன்னகையில் மனம் தெளிந்து மிகவும் மகிழ்ந்து கொண்டு இருந்தாள்.

                   சாமி தரிசனம் முடித்துக் கொண்டு வெளியே வந்தவர்கள், அங்கே பிரசாதமாக புளியோதரையும், சுண்டலும் கொடுப்பதை பார்த்து, காவ்யஹரிணியும், அவளின் தம்பி மனோகரும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்க சென்றனர்.     

                   “இன்னும் சின்ன பாப்பான்னு நினைப்பு, உங்க பிள்ளைங்களுக்கு, எப்படி ஓடுதுங்க ரெண்டும் பிரசாதம் வாங்கஎன்று மஹா, அவர் கணவரிடம் சலித்துக் கொண்டார்.

                     “என்ன பண்ணுறது? ரெண்டும் அவங்க அம்மா மாதிரியே, இன்னும் சின்ன பிள்ளைதனமா இருக்காங்க. இதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது, அது ஜீன் சம்மந்தப்பட்டதுஎன்று பதிலுக்கு கூறிவிட்டு முன்னால் சென்றார்.

                       “என்னது!” என்று அலறிவிட்டு பல்லைக் கடித்துக் கொண்டு, அவரை தேடி சென்றார் மஹா. அவரோ, இவரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, தந்தையுடன் பேசிக் கொண்டே முன்னே நடந்தார்.

                  “வீட்டுக்கு தான வரணும், அப்போ கவனிச்சிக்கிறேன்என்று எண்ணிவிட்டு, அவரின் அக்கா கிருஷ்ணவேணியுடன் பேசிக் கொண்டே நடந்தார்.

             காவ்யஹரிணியும், மனோகரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு குடும்பத்தினரை தேடினர். அவர்கள் அங்கே தெப்பகுளத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்து, அங்கே சென்று எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்துவிட்டு, இவர்களும் அமர்ந்து சாப்பிட தொடங்கினர்.

             அண்ணிகள் இருவரும், ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து, காவ்யஹரிணி தம்பியின் காதில் ரகசியம் ஓதினாள். அதைக் கேட்டு, அவனுக்கு குதுகுலமாக இருந்தது.

                அதை செயல்படுத்த, இருவரும் தாத்தாவிடம் வந்து நின்றனர். அவர் கண்களுக்கு, இருவரின் குறும்புத்தனம் அப்பட்டமாக தெரிந்தது. மெதுவாக பேத்தியிடம், என்ன விஷயம் என்று கேட்டார்.

                  அவளும் விஷயத்தை கூறிவிட்டு, அவரின் அனுமதிக்காக காத்துக் கொண்டு இருந்தாள். அவரோ சிறிது யோசித்துவிட்டு, சரி என்றார். தாத்தாவின் அனுமதி கிடைத்த பிறகு, இருவருக்கும் கொண்டாட்டமாக இருந்தது.

                  பவ்யமாக, காவ்யஹரிணி தன் இரு அண்ணிகள் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு சென்றாள். அவர்கள் இருவரும், அக்காவும், தம்பியும் சேர்ந்து வந்து இருப்பதை பர்ர்த்து சற்று உஷார் அடைந்தனர். இருவரின் மனதிலும், என்ன வில்லங்கம் பண்ண போகுதுங்களோ தெரியலையே என்பது தான்.

                “அண்ணி! உங்க ரெண்டு பேரையும் தாத்தா கூப்பிடுறாங்க, அப்படியே ஒரு சின்ன ஹெல்ப். தாத்தா கிட்ட ஷாப்பிங் போக, பெர்மிஷன் கேளுங்களேன். நாம எல்லாம், இந்த கடை வீதியில் சுத்தியே ரொம்ப நாள் ஆகிடுச்சேஎன்று முகத்தை பாவம் போல் வைத்து இருக்கும் அவளை பார்த்து, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

                     அதற்குள், தாத்தா இவர்களை அழைக்கவும் இரு அண்ணிகளும் வேகமாக எழுந்து சென்றதை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டனர் அக்காவும், தம்பியும்.

              “இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் தான், ஜவுளி கடையில் இருக்க போறீங்க. உங்க புருஷங்களுக்கு வேற வேலை வச்சு இருக்கேன், அதனால கோவில் இருந்து நேரா ரெண்டு பேரும் கடைக்கு போங்கஎன்று கூறியவரை பார்த்து அதிர்ந்தனர்.

                 “என்ன ஷர்மி இது? நாம கடைக்கு போகனுமா இன்னைக்கு!” என்று அலறினாள் கங்காவதி, காவ்யஹரிணியின் முதல் அண்ணி.

                  “ஹையோ அக்கா! இன்னைக்கு செவ்வாய்கிழமை, வேலை செய்றவங்களுக்கு இன்னைக்கு விடுமுறை தினமாச்சே, அங்க போனா எல்லாமே நாம தான் பார்க்கணும், பேசாம காவ்யஹரிணி சொன்னா கேட்க சொல்லி, அதை கேட்டு பார்க்கலாம் தாத்தா கிட்டஎன்று இரண்டாவது அண்ணி ஷர்மிளா கூறியதை கேட்டு, மூத்த அண்ணி ஆமோதித்தார்.

               அதன்படி, தாத்தாவிடம் அவர்கள் அதற்கு அனுமதி கேட்க அவரும் சற்று யோசித்துவிட்டு சரி என்றார். அக்காவும், தம்பியும் தங்களுக்குள் கிசுகிசுத்து சிரித்துக் கொண்டனர்.

                 அதன்படி, இந்த நால்வரும் வீட்டினரிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கே இருந்த கடை வீதிக்குள் நுழைந்தனர். நுழைந்தது மட்டுமே தெரியும், அங்கே அக்காவும் தம்பியும் இவர்களை விட்டுவிட்டு, வேறு இடத்திற்கு சென்றனர்.

                 “ஆஹா! அக்கா பாருங்க இந்த ரெண்டையும் காணோம், தாத்தா படிச்சு, படிச்சு சொன்னார் அக்கா, அவங்களை கூடவே வச்சுக்கணும் அப்படின்னு. எங்க போய் தேடுறது இப்போ இவங்களை? என்ன அக்கா ஒன்னும் சொல்லாம சிரிக்குறீங்க?” என்று கேட்டாள் ஷர்மிளா.

              “அங்க பாரு ஷர்மி, ரெண்டும் பஞ்சுமிட்டாய் வாங்கி சாப்பிடுதுங்க. அப்படி எல்லாம் என் கண் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது, வா நாம நம்ம வேலையை பார்க்கலாம்என்று கூறிவிட்டு கங்கா முன்னே செல்ல, ஷர்மி அவள் பின்னே சென்றாள்.

                “அக்கா! நீ சொன்னது சரி தான் அக்கா, இந்த கங்கா அண்ணி செம ஷார்ப். நாம அவங்க கண்ணுல மண்ணை தூவ, சரியான நேரம் பார்க்கணும். எத்தனை தடவை நம்மள தாத்தா கிட்ட மாட்டி விட்டு இருப்பாங்க, இன்னைக்கு இவங்களை மாட்டி விடனும் அக்காஎன்று பொருமிக் கொண்டு இருந்தான், அவளின் தம்பி மனோகர்.

                   “டேய் மனோ! எப்போவும் காத்து அவங்க பக்கமே வீசாது, இக்கட சூடுஎன்று அவள் காட்டிய திசையை பார்த்து மகிழ்ந்தான்.

                      “கிரேட் அக்கா, அவங்க அசந்த நேரத்தில் இந்த தெரு வழியா எஸ்கேப் ஆகலாம். அப்புறம் நம்ம ரெண்டு பேரையும் தேடுற வேட்டையில், அவங்க ஷாப்பிங் பண்ண முடியாது அதானேஎனவும் அவள் ஆம் என்று சொல்லி சிரித்தாள்.

                   அங்கே கடையில் வளையல் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், காங்கவுக்கு ஒரு செட் வளையல் பிடிக்கவும் அதை தேர்வு செய்து அதற்க்கு ரூபாய் எடுக்க தன் கைப்பையினுள், பர்சை தேடினாள்.

                    அது அவளின் கைக்கு கிடைக்காமல் இருக்கவும், அதிர்ந்து போய் திரும்ப திரும்ப தேட தொடங்கினாள். அவளின் பதட்டத்தை பார்த்த ஷர்மி, என்னவென்று கேட்டாள். அவள் கூறியதை கேட்டு அதிர்ந்த ஷர்மி, தன் கைபையை துளாவினாள்.

                   அவளின் கையில் மணி பர்ஸ் இருந்தது, ஆனால் அது ஷாப்பிங் செய்ய போதுமானதாக இல்லை அவர்களுக்கு. ஆகையால் இப்பொழுது அக்காவையும், தம்பியையும் தேட தொடங்கினர். அவர்களின் நேரம், அவர்களை அங்கு காணவில்லை.

             “என்ன அக்கா, அவங்களை காணோம், இப்போ என்ன செய்றது?” என்று பதறினாள் ஷர்மிளா.

               “பதறாத, அவளோட செல்லுக்கு ஒரு போனை போடு நான் பேசுறேன்எனவும், உடனே எடுத்து அவளின் செல்லிற்கு அடித்தாள்.

              அவளின் செல்லில் ரிங் போகாமல், நாட் ரீச்சபிள் என்று வரவும் திகில் அடைந்தாள் ஷர்மி. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, கிட்டத்தட்ட அழும் நிலைக்கு சென்றாள் அவள்.

            “சும்மா அழுகாத ஷர்மி, எனக்கு என்னமோ அவங்க நம்ம கிட்ட விளையாடுறாங்கன்னு தோணுது. வா தேடுவோம், எல்லா இடத்துலையும் எங்க இருக்காங்கன்னுஎன்று கூறி தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

                 கிட்டத்தட்ட ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், இருவரும் இவர்கள் பார்த்துக் கொண்டு இருந்த வளையல் கடைக்கு, அருகில் உள்ள பாணி பூரி கடையில் பேல் பூரி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

               கோபத்தில் இருந்த கங்கா, அங்கே சென்று  காவ்யஹரிணி முன் நின்று அவளை பார்த்து முறைத்தாள்.

              “ஏய்! என் கிட்ட அக்காவும், தம்பியும் சேர்ந்து விளையாடுறீங்களா?”  

                “என்ன அண்ணி சொல்லுறீங்க? எங்களுக்கு ஒன்னும் புரியல!” என்று இருவரும் கூறவும், பல்லை கடித்தாள் கங்கா.

              “சும்மா நடிக்காதீங்க ரெண்டு பேரும், எனக்கு நல்லா தெரியும், இது எல்லாம் உங்க வேலை தான்னு. ஒழுங்கா என் பர்ஸ் கொடுங்கஎன்று மிரட்டிக் கொண்டு இருந்தாள் கங்கா.

                “அண்ணி! உங்க பர்ஸ் எப்படி அண்ணி எங்க கிட்ட இருக்கும்? அதுவும் உங்களை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்ட பிறகு, உங்க கிட்ட நாங்க வம்பு பண்ணதே இல்லையே அண்ணிஎன்று கூறிய அவளை உற்று நோக்கினாள் கங்கா.

                “அக்கா! எதுக்கும் நாம அவ பையை செக் செய்வோம்என்று கூறி ஷர்மிளா கிட்டத்தட்ட அவளின் பையை பறித்து, அதில் இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.

                   அவளின் பையை மட்டும் செக் செய்யாமல், ஒரு மறைவிடத்திற்கு அழைத்து சென்று அவளையும் செக் செய்தார்கள்.

                “டேய் மனோ! நீயே இப்போ உன் கிட்ட இருக்கிற என் பர்ஸ் தரியா! இல்லை உன் அக்காவுக்கு செக் செய்த மாதிரி உனக்கும் செய்யணுமா?” என்று கேட்டாள் கங்கா.

                    அவனோ அங்கேயே தன்னிடம் இருக்கும், எல்லாவற்றையும் எடுத்து காட்டினான். அவர்களிடம் தன் பர்ஸ் இல்லை எனவும், அவள் துவண்டு போனாள்.

           “இவ்வளவு தூரம் நீங்க சீப்பா நடப்பீங்கன்னு, நாங்க நினைக்கல. வா டா! நாம வீட்டுக்கு போவோம்என்று அவர்களை முறைத்துவிட்டு இருவரும் சென்ற பாதையில், கிட்டத்தட்ட இருவரும் ஓடினர் அவர்கள் பின்.

           அவர்களோ, வேகமாக தங்கள் காரில் ஏறி சென்று விட்டு இருந்தனர் இவர்களை விட்டு. அவசரமாக, அங்கே ஆட்டோ ஒன்றை பிடித்து, அவர்கள் வீடு வந்து சேரும் பொழுது, அங்கே தாத்தா ருத்ரமூர்த்தியாக நின்று இருந்தார்.

           “என்ன அக்கா இது! இப்போ எப்படி சமாளிக்க போறோம்?” என்று பயத்துடன் கேட்டாள் ஷர்மிளா.

            “பேசாம இரு, அவளை மாட்டி விடணும் பார்க்கிறேன். அவ என்ன சொல்லி இருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டு, அதை வச்சு தான் அவளை மாட்டி விடணும்என்று அவளிடம் கூறி கொண்டே ஹாலிற்குள் நுழைந்தனர்.

               அவர்கள் நுழையும் முன்பே, நில்லுங்க என்று அவர்களை உள்ளே வர விடாமல் தடுத்து நிறுத்தினார் தாத்தா.

            “பாஸ்கர், சேகர் உங்க பொண்டாட்டிக்கு வெளி இடத்தில் எப்படி நடந்துக்கணும் அப்படினு சொல்லிக் கொடுங்க. இனி, நீங்க வெளியே அந்த அவுட் ஹௌஸ் தான் இருக்க போறீங்க என்று கூறிய தாத்தாவை அதிர்ந்து பார்த்தனர் இருவரும்.

            “என்ன நடந்துச்சுன்னு, தெரியாம பேசாதீங்க தாத்தாஎன்று கூற வந்த கங்காவை பார்த்து கை காட்டி நிறுத்தினார்.

              “மனோ என் கிட்ட எல்லாம் சொல்லிட்டான், இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச கூடாது. நான் சொல்லுற வரைக்கும், இந்த வீட்டுக்கு நீங்க வர கூடாது”.

                 “பாஸ்கர், சேகர் உங்க மாமியார் ரெண்டு பேர் கிட்டயும் விஷயம் சொல்லிட்டேன். இனி எப்போ உங்க பொண்டாட்டி ரெண்டு பேர் மேலயும் எனக்கு நம்பிக்கை வருதோ, அப்போ தான் இந்த வீட்டுக்குள் இடம் இனிஎன்று கூறிவிட்டு சென்றார்.

              இவர்கள் அவுட் ஹௌஸ் செல்ல, அங்கே காவ்யஹரிணி அழுது ஓய்ந்து போய் இருந்தாள். அண்ணி, இரண்டு பேரும் இவ்வளவு கீழ் இறங்குவார்கள் என்று அவள் நினைக்கவில்லை.

                       அதுவும் திருடி இருப்பேன் என்று, தன்னை தொட கூடாத இடத்தில் எல்லாம் தொட்டு, அந்த இடத்திலே மாண்டு விட மாட்டோமா என்று இருந்தது. இருந்தாலும், இவர்கள் முன் அழ கூடாது என்று வைராக்கியத்துடன் இருந்தவள், வீட்டில் பாட்டியை பார்க்கவும் அங்கேயே அவர் மடியில் படுத்து அழுது தீர்த்து விட்டாள்.

                   மனோவுக்கு, அக்காவின் வேதனை புரிந்தது. உடனே அப்பொழுது அங்கே வந்த தாத்தாவிடம், ஒன்று விடாமல் எல்லாவற்றையும் கூறி விட்டான்.

             பாட்டி, இவளை தன் மகள் சரண்யாவிடம் ஒப்படைத்துவிட்டு, பேரன் மனைவிகளை பிடிப்பிடிக்க சென்றார். ஆனால், அதற்குள் தன் கணவரே, அந்த வேலையை செய்யவும் நிம்மதி அடைந்தார்.

             இருந்தாலும், மனம் பொறுக்காமல் இருவரின் பெற்றோருக்கும் அழைத்து விஷயத்தை கூறி அவர்களை ஒரு பிடிப்பிடித்தார்.

             அறையில் அழுது வீங்கிய விழிகளோடு இருந்த பேத்தியை பார்த்து, மனம் வருந்தினார் தாத்தா. மெல்ல அவர் பேத்தியின் அருகில் சென்று, அவர் தலையை கோதி விட்டார்.

            அதில் நிமிர்ந்தவள், அவரை பார்த்து கண் கலங்கினாள்.

             “சும்மா கலாட்டா பண்ணலாம்ன்னு திகான் கூட்டிட்டு போனேன் தாத்தா, இப்படின்னு நினைக்கல நான்என்று அழுதவளை தேற்ற பெரும்பாடு பட்டார்.

             அதற்குள் அங்கே வந்த அவரின் மனைவி, அவரை பார்த்து தான் பார்த்துக் கொள்ளுவதாக கூறினார்.

            “அடியே! இன்னும் துணிமணி எல்லாம் எடுத்து வைக்கலையா? இந்த மஹா எங்க போனா? அடியே மஹா! உன் பிள்ளையை பாரு, இன்னும் ஒன்னும் எடுத்து வைக்காம, பேன்னு உட்கார்ந்து இருக்காஎன்று அவளின் அன்னையை அழைத்து சத்தம் போட்டார்.

            “மன்னிச்சிடுங்க அத்தை! இப்போ அவளோட சேர்த்து எல்லாம் எடுத்து வைக்கிறேன். வா, வந்து எடுத்து கொடு அம்மா பெட்டியில் அடுக்கிறேன்என்று அப்பொழுது வரை கனத்த மனதோடு இருந்தவர், தன் மாமியார் எதற்கு இவ்வாறு கூறுகிறார் என்று புரிந்து, அவளுடைய மனநிலையை மாற்ற உதவினார்.

            “உங்களுக்கு இங்க என்ன வேலை? போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்கஎன்று கணவரையும் விரட்டினார் பாட்டி.

              “எம்மாடி கிருஷ்ணவேணி! அந்த ஊற வைத்த மிளகாய் வத்தல் ரெடியா! அவளுக்கு அது ரொம்ப பிடிக்கும், ஒரு அரை கிலோவாவது கொடுத்து விடணும்என்று மூத்த மருமகளை நோக்கி சென்றார்.

            “அந்த பெரிய சூட்கேசை எடு பாப்பா, அதுலையே எல்லாம் எடுத்து வச்சிடலாம். அப்புறம் அந்த சின்ன பையில், உன் பாஸ்போர்ட் முக்கியமானது எல்லாம் எடுத்து வச்சுக்கோஎன்று அவளின் அன்னை, அடுத்து அடுத்து வேலை வாங்கி விட்டார்.

                 அடுத்த வாரம் போக போறோம், இப்போவே எடுத்து வைக்க சொல்லுறங்களே என்று சலித்துக் கொண்டாலும், அங்கு போக போறோம் என்ற குஷியில் பிடித்ததை எல்லாம் எடுத்து வைக்க தொடங்கினாள்.

            அதில், வழக்கம் போல் தாய்க்கும், மகளுக்கும் ஒரு யுத்தமே நடந்து முடிந்து இருந்தது.

               இந்த களேபரத்தில், இரு அண்ணிமார்களின் அம்மாவிடம் இருந்து அவர்களுக்கு பலத்த பூஜை நடந்து இருந்தது. இனி ஒழுங்காக இருப்போம், என்று அவர்கள் சத்தியம் செய்த பின்னரே அமைதி ஆனார்கள்.

                துபாய் கிளம்பும் முன் அவளின் அத்தை மகன் அனிருத் கிஷோரிடம் இருந்து, அவளுக்கு ஸ்கைப் கால் வந்தது.

        “ம்ம்.. வெரி குட் எல்லாம் பக்காவா ரெடி போல, போன்ற காரியம் வெற்றி அடையட்டும். அங்க ஏதும் உனக்கு பிரச்சனை அப்படினா, எனக்கு நீ கால் பண்ணு சரியாஎன்று அவளிடம் அத்தை மகனாக இல்லாமல், நண்பனாக அவளுக்கு அந்த நிமிடம் இதை கூறினான்.

           அதில் அவளுக்கு, யானை பலம் வந்தது போல் உணர்ந்தாள். துபாய் கிளம்பும் நாளில், அண்ணிகள் இருவரும் அமைதியாக இருந்ததை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

               மதுரையில் இருந்து துபாய் செல்லும் பிளேனில், எல்லோரும் ஏறி அமர்ந்தனர். தன் இஷ்ட தெய்வமும், தோழியுமான மீனாட்சியிடம் எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

                நான்கு மணி நேர பயணத்தில், துபாய் வந்து இறங்கினர். பெரிய ஏர்போர்ட், இறங்கிய இடத்தில் இருந்து மெட்ரோ ட்ரெயின் வழியாக தான், அவர்கள் immigration செல்ல வேண்டும்.

           துபாய் விலை உயர்ந்த நகரம் என்று, ஆங்காங்கு அவர்கள் அடுக்கிய பொருட்களின் விலை சொல்லியது. எல்லாவற்றையும், வியப்போடு பார்த்துக் கொண்டு வந்தனர் பெண்கள்.

           ஆண்கள், அவ்வப்பொழுது சில தொழில் விஷயமாக வந்து இருந்ததால் அவர்களுக்கு வியப்பளிக்கவில்லை. அங்கே immigration இடத்தில், அமர்ந்து இருந்த துபாய் ஷெய்க் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் அழகாக இருந்தனர்.

            அதை அக்காவும், தம்பியும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டே வந்தனர். இவர்கள் முறை வரவும், தாத்தா, பாட்டி ஒரு புறம் சென்றனர். பெரியப்பா குடும்பம் ஒரு பக்கம், அத்தை குடும்பம் ஒரு பக்கம் என்று சென்ற பின்னர், இவர்கள் ஒரு பக்கம் சென்று நின்று இருந்தனர் அங்கு செக் செய்யும் ஷெய்க்கின் முன்.

           இவர்களுக்கு பார்த்த ஷெய்க், சற்று முதியவர் என்பதால் இருவரும் சற்று அடக்கி வாசித்தனர். அங்கே அண்ணிமார்கள் இருவரும், அங்கே இருந்த இளம் ஷெய்க் முன் சற்று பந்தாவுடன் ஆங்கிலம் பேசியதை கேட்டு, இவர்கள் சிரித்தனர்.

                Immigration முடிந்து, எல்லோரும் வெளியே வந்த பின் தாத்தா பேரனை அழைத்தார்.

              “பாஸ்கர்! நீ அனிருத் புக் பண்ண ட்ராவல்காரங்க எங்க இருக்கங்கன்னு பார்த்துட்டு வா, நாங்க இங்க நம்ம பை எல்லாம் எடுத்துட்டு இருக்கோம். எல்லோரும் ஒண்ணா நில்லுங்க, அப்புறம் தொலைஞ்சு போனா தேட மாட்டோம்என்று சற்று மிரட்டலாக தாத்தா கூறியது யாருக்கு என்று நன்றாக புரிந்தது எல்லோருக்கும்.

            “ஆத்தி! அக்கா தாத்தா நம்மளை தான் சொல்லுறார் போல. எதுனாலும், நாம அட்டை மாதிரி இவங்களோடையே இருப்போம். இந்த ஊர் பாஷை வேற, ஒரு தினுசா இருக்குஎன்று ஷர்மிளா அலறுவது போல், கங்காவும் அலறினாள்.

          திரும்பவும், தாயிடம் யார் அடி வாங்குவது, அடித்த அடி ஒவ்வொன்றும் இடி போல் இறங்கியதே. ஆகையால், இருவரும் அடக்கி வாசித்தனர்.

             பாஸ்கர் அதற்குள், ட்ராவல் ஆட்களை பார்த்துவிட்டதாக கூறி அழைத்து சென்றான். தங்கள் பெட்டிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, எல்லோரும் வெளியே வரவும் அங்கே, கோதண்ட ராமன் பேமிலி வெல்கம் டூ துபாய் என்று போர்டு பிடித்துக் கொண்டு இருந்தான் faiq.

           அவனை பார்த்த காவ்யஹரிணி மனதில், ஏதோ இனம் புரியாத பரவசம் உண்டானது போல் இருந்தது. ஏனோ, அவளால் அவனிடம் இருந்து பார்வையை திருப்ப முடியவில்லை.

         அவனோ, அவளை கண்டுகொள்ளாமல் ரசாக் உடன் எல்லோரையும் அழைத்துக் கொண்டு அந்த பெரிய வேனில் ஏறி அமர்ந்தான்.

              இந்த ஒரு வாரமும், இவர்கள் தான் அவர்கள் குடும்பத்தினருக்கு டூரிஸ்ட் கைட். பின்னால் தம்பியோடு அமர்ந்து இருந்தவள், இவனை சைட் அடித்துக் கொண்டு இருந்தாள்.

          அவனுக்கோ, இவள் பத்தோடு பதினொன்று போல் தெரிந்தாள் அவனின் கண்களுக்கு. இனி துபாயில் நடக்கும் இவர்கள் போரை, யாராலும் தடுக்க முடியாது.

 

தொடரும்..

 

 

                 

      

error: Content is protected !!