MM2

மயங்காதே மனமே 2

விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் பார்க்கைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தார்கள் அபிமன்யுவும், ஈஷ்வரனும். வேக ஓட்டம் முடித்து இப்போது மிதமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.

என்ன அபி? நேத்து நைட் செம பாட்டோ?” கேலியாகக் கேட்டார் ஈஷ்வரன். குரலில் சிரிப்பு வழிந்தது.

ஐயோ! அதை ஏன் கேக்குறீங்க ஈஷ்வர், காதுல ரத்தம் வராத குறைதான். கடைசியா உங்க பேரைச் சொல்லித்தான் தப்பிச்சேன்.”

அது புரிஞ்சுது. ரூமுக்குள்ள வந்ததும் வராததுமா,கூப்பிட்டீங்களான்னு கேட்ட உடனேயே புரிஞ்சுது. மச்சான் நம்ம பேரை யூஸ் பண்ணி இருக்காருன்னு. அநியாயத்துக்கு அந்நேரம்தண்ணி வேணும் ரஞ்சின்னு கேட்டு வாங்கிக் குடிச்சேன்.” ஓட்டத்தை நிறுத்தி விட்டு சிரித்தார் ஈஷ்வரன்.

பின்ன என்ன ஈஷ்வர், எவ்வளவு நேரம் தான் என் அன்புத் தங்கை திட்டுறதைக் கேக்குறது? இவ அவசரத்துக்கெல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா சொல்லுங்க?” சிரிப்போடு கேட்ட அபிமன்யுவின் தோளில் கை போட்டுக் கொண்ட ஈஷ்வர்,

அபி, ரஞ்சி சொல்லுறதையும் கொஞ்சம் யோசனை பண்ணலாமே. வயசும் போகுதில்லையா?” என்றார், கொஞ்சம் சீரியஸான குரலில்.

நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன். என் கண்ணுக்கு யாரும் சிக்கல்லையே ஈஷ்வர்.”

பொண்ணு பாக்கலாமே அபி?”

ம்ஹூம்எனக்கு அதுல நம்பிக்கை இல்லை ஈஷ்வர். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம, பழகாமஎப்பிடி? எதை நம்பி நம்ம வாழ்க்கையை…” தடுமாறினான் அபிமன்யு.

ஏன் அபி? எங்க கல்யாணம் எல்லாம் அப்பிடித்தானே நடந்துது? நாங்க நல்லாத்தானே இருக்கோம்?”

புரியுது ஈஷ்வர். ஆனா, எனக்குன்னு வரும்போது மனசு ஏத்துக்க மாட்டேங்குது.” சொல்லிவிட்டுப் புன்னகைத்த அபியை தட்டிக் கொடுத்தார் ஈஷ்வரன்.

எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை அபி. ஆனா ஒன்னு மட்டும் உறுதியா நான் சொல்லுவேன். அலுத்துக் களைச்சு வீட்டுக்கு வரும்போது, நம்ம வருகையை எதிர்பாத்துக்கிட்டு காத்திருக்கிற முகங்களைப் பாக்குறது ஒரு தனி சுகம்.” அனுபவித்துச் சொன்னார் ஈஷ்வரன். அவரின் குரலில் இருந்த ரசனை அபியை ஈர்த்தது.

வாசலையே பாத்துக்கிட்டு இருக்கிற பொண்டாட்டி, ‘அப்பான்னு ஓடி வந்து தாவிக்கிற மகன், இதையெல்லாம் அனுபவிச்சாத்தான் புரியும். காலத்தை ரொம்பவே வேஸ்ட் பண்ணாதீங்க அபி.” பேசியபடியே வீடு வந்து சேர்ந்திருந்தார்கள். அப்பாவைக் கண்ட மாத்திரத்தில் ஓடி வந்து ஏறிக்கொண்டான் தருண். அபியை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்தார் ஈஷ்வரன். அபியும் புன்னகைத்துக் கொண்டான்.

குட் மார்னிங் தருண்.”

குட் மார்னிங் பா.” ஜாகிங் போகும் போது தூக்கத்தில் இருந்த மகன் இப்போது கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

மாமாக்கு குட் மார்னிங் சொல்லலையே?”

நோ.” ஒற்றை வார்த்தையில் திடமாக வந்தது பதில்.

ஐயையோ! ஏன் அப்பிடி? மாமா பாவம் இல்லையா?” சமாதானக் கொடி பிடித்தார் ஈஷ்வரன்.

நோ.” அப்போதும் உறுதியாக மறுத்த மருமகனை வலுக்கட்டாயமாக ஈஷ்வரனிடமிருந்து பிரித்து எடுத்து, சோஃபாவில் போட்டு விளையாட்டுக் காட்டினான் அபிமன்யு.

பொடிப்பயலே, உங்களுக்கு இவ்வளவு கோபம் வருமா? மாமாக்கு ஒரு விஷ் கூட பண்ண மாட்டீங்களா?” சொல்லியபடி குழந்தையின் வயிற்றில் வாயை வைத்து ஊதி சத்தம் எழுப்பினான் அபி. கிளுக்கிச் சிரித்த தருணை கைகளில் அள்ளிக் கொண்டான்.

வாஸ் வெயிட்டிங் மாமா.” குறை பட்டுக் கொண்டாலும், அந்த மூன்று வயதுக் குழந்தைக்கு தன் மாமனிடம் சொல்ல ஆயிரம் கதைகள் இருந்தது.

சாரிடா செல்லம்.” அந்த இரண்டு வார்த்தைகளும் போதுமானதாக இருந்தது தருணுக்கு. மாமனிடம் சமாதானமாகிக் கொண்டான். அப்பா வாங்கிக் கொடுத்தபப்பியில் இருந்து, தன்னைஸ்வீட் போய்ன்னு சொல்லும் கீதா வரைக்கும் சொல்லி முடித்தான். இவர்கள் குதூகலத்தை குடும்பமே நின்று வேடிக்கை பார்த்தது.

அது யாரு கீதா? உங்க ஃப்ரெண்டா?”

ம்ஹூம், ப்ளே க்ரூப் .” தருண் சொல்ல, ரஞ்சனியைப் பார்த்தான் அபிமன்யு.

கீதாங்கிறது தருணோட மிஸ். அவங்க ப்ளே க்ரூப்ல எல்லாரையும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க.” ரஞ்சனியின் விளக்கத்தில் அதிசயப்பட்டார் அன்னலக்ஷ்மி.

நம்ம காலத்துல வாத்தியார் முன்னாடி நின்னு பேசவே பயப்பிடுவோம். இப்போ பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு வந்திடுச்சு.” பாட்டியின் ஆதங்கம் எல்லோர் முகத்திலும் சிரிப்பை வரவழைத்தது.

தருண், அடுத்த வாட்டி கீதா உங்களைஸ்வீட் போய்சொன்னா, கால் மீ ராஜான்னு சொல்லுங்க.” மருமகனுக்குக் கற்றுக் கொடுத்தான் அபிமன்யு.

வொய் மாமா?”

நீ ராஜாப் பயல்டா. எவடா அவ உன்னை ஸ்வீட்டுங்கிறது?” சொல்லியபடி தருணை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்தான் அபி.

அபி, கவனம்பா.” காஃபி ட்ரேயோடு வந்த சீமா, சொல்லியபடியே எல்லோருக்கும் காஃபியைக் கொடுத்தார். நேரம் காலை ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.

அம்மா, நர்ஸ் வந்துட்டாங்களா?”

இன்னும் இல்லைப்பா, வர்ற நேரந்தான். வந்திடுவாங்க.” நாராயணனின் ப்ரஷரை செக் பண்ண தனியாக ஒரு நர்ஸை அமர்த்தி இருந்தார்கள். அந்தப் பேச்சு போய்க்கொண்டு இருக்கும் போது தனது ரூமிலிருந்து கோபமாக வெளியே வந்தார் தாத்தா பாலகிருஷ்ணன். அவர் கையிலிருந்த நாளிதழ், அவர் விசிறியடித்த வேகத்திற்கு காஃபி டேபிளில் வந்து அலங்கோலமாக விழுந்தது. சட்டென்று அந்த இடமே அமைதியாகப் போக, எல்லோரும் அவரையே பார்த்தார்கள். அவர் கண்கள் அபியையே முறைத்துப் பார்க்க, விஷயம் அபி சம்பந்தப்பட்டது என்று சொல்லாமலேயே எல்லோருக்கும் புரிந்தது.

நிதானமாக அந்தப் பேப்பரை எடுத்துப் பார்த்தான் அபி. முதற்ப் பக்கத்திலேயே வெடி காத்திருந்தது

இளம் தொழிலதிபரின் சல்லாபம்என்ற தலைப்பில், நேற்று இரவு பப்பில் மோதிய அந்தப் பெண்ணின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அபியை அவள் அணைத்திருந்த விதமும், அவள் கண்களில் இருந்த மயக்கமும் ஏதேதோ எண்ணங்களுக்கு வித்திட்டது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அபியின் நெற்றிப் பொட்டில் இருந்த ஒற்றை நரம்பு புடைத்தெழுந்தது. கண்கள் நிலைகுத்தி நிற்க, அந்த ஃபோட்டோவையே வெறித்துப் பார்த்திருந்தான்.

அபியின் முகத்தை வைத்தே நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்ட அனைவரும் பேப்பரை எட்டிப் பார்த்தார்கள். பேப்பரில் இருந்த செய்தி அத்தனை பேருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், யாரும் வாய்திறந்து எதுவும் பேசவில்லை. அபிமன்யு மேல் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அவர்களைப் பேச விடவில்லை. ஈஷ்வரன் மட்டும் அபியின் தோளில் லேசாகத் தட்டிக் கொடுத்தார். அந்தச் செய்கையில் தன்னிலைக்கு வந்தவன், அவரைப் பார்த்துப் புன்னகைக்க, அவரும் ஒரு புன்னகையையே பதிலாகத் தந்தார்.

மாமா…” சட்டென்று பறிபோன அந்தக் கலகலப்பில் பாதிக்கப்பட்ட தருண் அபியை அழைக்க,

ராஜாக் குட்டி, நீங்க விளையாடுங்க, மாமா ஒரு கால் பண்ணிட்டு வந்திடுறேன், கே?” சொல்லிவிட்டு தோட்டத்திற்குப் போனான் அபி. அவன் முகத்தில் அத்தனை ரௌத்திரம் இருந்தது.

ஒரு நம்பருக்கு அழைத்துவிட்டு அவன் காத்திருக்க, அழைப்பு ஏற்கப்படவில்லை. இரண்டு, மூன்றும்ஹூம். எத்தனை முறை அழைத்தும் எந்தப் பதிலும் இல்லை. சட்டென்று வெற்றியை அழைத்தவன்,

வெற்றி, இன்னைக்கு காலைல நீயூஸ் பாத்தியா?” என்றான்.

சார்அதுவந்து…”

பாத்தியா? இல்லையா?” கறாராக வந்தது அபியின் குரல்.

பாத்தேன் சார்.”

ம்நீ என்ன பண்ணுறே, நேரா மகேந்திரன் வீட்டுக்கு போறே. அங்க போய் உன் மொபைல்ல இருந்து எனக்கு கால் பண்ற, கே.” 

டென் மினிட்ஸ் டைம் குடுங்க சார்.” எள் என்னும் முன் எண்ணெய்யாக நின்றான் பையன். அந்தக் குறுகிய நேரத்திற்குள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் அபிமன்யு. அத்தனை பேரும் இவன் மேல் ஓர் கண்ணை வைத்தபடி அமைதியாக இருந்தார்கள். பத்து நிமிடத்திற்கு முன்னதாகவே வெற்றியிடமிருந்து கால் வந்தது.

சார், மிஸ்டர் மகேந்திரன் லைன்ல இருக்கார்.”

ம்சொல்லுங்க மகேந்திரன், என்ன? கால் பண்ணினா ஆன்ஸர் பண்ண மாட்டேங்கிறீங்க?” 

ஸாரி அபி, கொஞ்சம் பிஸியா இருந்ததால கவனிக்கலை.”

அதான் பக்காவா வேலையை முடிச்சுட்டீங்களே, இனியும் என்ன பிஸி மகேந்திரன்?”

என்ன சொல்லுறீங்க அபி?”

பாத்தீங்களா, பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு இப்போ பாப்பா வேஷம் போடுறீங்களே.” 

அபி, நீங்க பேப்பர்ல வந்த நீயூஸைப் பத்திப் பேசுறீங்கன்னு நினைக்கிறேன். ஆக்சுவலி, நான் மார்னிங் ஃப்ளைட்ல தான் டெல்லியில இருந்து ரிடேர்ன் ஆனேன். இந்த விஷயம் என்னை மீறி நடந்திருக்கு.”

அப்பிடியா! உங்க பேப்பர், அதுவும் ஃப்ரொன்ட் பேஜ் நியூஸ்உங்களுக்குத் தெரியாமநம்பிட்டேன் மகேந்திரன்.” அபியின் குரலில் இருந்த எள்ளல் மகேந்திரனை வெறுப்பேற்றியது. இரண்டு சின்னப் பையன்கள் தன்னை வைத்து விளையாடுவது அவருக்கு அவமானமாக இருந்தது. இத்தனை வருட பத்திரிகை வாழ்க்கையில் இப்படி ஒரு தலைவலியை அவர் பார்த்ததில்லை. கோபம் தலைக்கேற வார்த்தைகளை சிதற விட்டார்.

என்னை என்ன பண்ணச் சொல்லுறீங்க அபி? போட்டா நீங்க பாயுறீங்க, போடலைன்னா மித்ரன் மிரட்டுறார். நான் யாரைப் பாக்குறது சொல்லுங்க?”

ம்குட். இது கேக்க நல்லா இருக்கு. அதை விட்டுட்டு எதுக்கு தேவையில்லாத பேச்சு. அந்த மித்ரனுக்கு ஒரு காலைப் போடுங்க மகேந்திரன். போட்டு, இப்பிடிப் பண்ணுறதால எல்லாம் அபியை ஒரு மண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிடுங்க. அதுக்கப்புறம், இனிமே இதுமாதிரி சில்லி வேலையெல்லாம் பண்ணாதீங்க மகேந்திரன். இத்தனை வருஷம் பாடுபட்டு நடத்துற பத்திரிகை ஆஃபீஸை இழுத்து மூடவேண்டி வரும்.” அபியின் குரலில் நிதானம் மீண்டிருந்தது.

என்ன அபி, மிரட்டுறீங்களா?”

கண்டிப்பா மகேந்திரன், இது என்னோட மிரட்டல், எச்சரிக்கை எப்பிடி வேணும்னாலும் நீங்க வெச்சுக்கலாம்.”

இருபத்தஞ்சு வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன் அபி. உங்க வயசு என் அனுபவம்.” மகேந்திரனும் இப்போது நிதானத்திற்கு வந்திருந்தார்.

அந்தத் தொழிலுக்கு நீங்க நியாயம் பண்ணல்லையே மகேந்திரன். ஒரு சின்னப் பயலோட மிரட்டலுக்குப் பயந்துட்டீங்களே.” அபியின் கேலியில், கண்களை அழுந்த மூடித் திறந்தார் மகேந்திரன்.

எந்த உண்மையைப் படம் புடிச்சு மக்களுக்குக் காட்டிட்டீங்க மகேந்திரன், அதுவும் ஃப்ரொன்ட் பேஜ்ல. இந்த ஃபோட்டோவைக் குடுத்தது உங்க ஃபோட்டோ கிராஃபரா?”

“……”

இல்லை, இந்த செய்தியைக் குடுத்தது உங்க ரிப்போர்ட்டரா? எந்த அடிப்படையில இப்பிடியொரு ஃபோட்டோ உங்க பேப்பர்ல வந்துது மகேந்திரன்? இதை நீரூபிக்க உங்ககிட்ட என்ன எவிடன்ஸ் இருக்கு? படத்துல எங்கூட இருக்கிற பொண்ணுகூட எப்போ, எங்க நான் சல்லாபம் பண்ணினதை நீங்க பாத்தீங்க?”

“…….”

உங்களுக்கும் இதே வயசுல ஒரு பொண்ணு இருக்கா. நாளைக்கு இதே மாதிரி உங்க பொண்ணோட ஒரு ஃபோட்டோ உங்க கைக்கு வந்தா அதையும் விசாரிக்காம இப்பிடித்தான் போடுவீங்களா?”

அபீ…!”

அட! உங்க பொண்ணுன்னு சொன்ன உடனே பதறுது? இதே மாதிரித்தானே எங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கும் பதறும்? இதுக்கு எதிரா நான் மான நஷ்ட வழக்கு போடட்டுமா? பாத்து, நிதானமா நடங்க மகேந்திரன். பேப்பர் உங்களது எங்கிறதுக்காக நீங்க என்ன வேணாப் பண்ணலாம்னு அர்த்தம் இல்லை. ஜாக்கிரதை.”

சொல்லிவிட்டு பட்டென்று அபி டிஸ்கனெக்ட் பண்ண, அவமானமாக உணர்ந்தார் மகேந்திரன். தான் பார்க்க வளர்ந்த பையன் தன்னை மிரட்டுவது மிகவும் கேவலமாக இருந்தது. அதுவும் தன் பெண்ணை, யாரோ பணத்துக்காகப் போகும் ஒரு பெண்ணோடு சரிசமமாக இணைத்துப் பேசியதை, ஒரு தகப்பனாக அவரால் தாங்க முடியவில்லை

இத்தனையும் அந்த மித்ரனால் வந்தது. எத்தனை சொல்லியும் கேட்காமல் தான் நினைத்ததை மிரட்டி சாதித்திருந்தான். மகேந்திரனுக்கும் வேறு வழி இருக்கவில்லை. மனதிற்குள் கறுவிக்கொண்டார். ஒரு பெரிய எதிரியை சம்பாதித்துக் கொண்டதை அபியும் உணரவில்லை, மித்ரனும் உணரவில்லை.

                                     —————————————————————–

சுப்ரபாதம் அழகாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த வீட்டில். காலை நேரப் பரபரப்பு லேசாக ஒட்டிக் கொண்டிருக்க, மஞ்சுளா சமையல் அறையில் நின்று கொண்டிருந்தார். அறிவழகன் பக்கத்தில் நின்றபடி, மனைவிக்கு மஷ்ரூம் கட் பண்ணிக் கொண்டிருந்தார்

மஞ்சு, இவ்வளவு போதுமா பாரு.” சொன்னவரைத் திரும்பிப் பார்த்த மஞ்சுளா,

ம்போதும்ங்க, நீங்க ரெடியாகுங்க. மிச்ச வேலையை நான் பாத்துக்கிறேன்.”

வேற ஏதாவது கட் பண்ணனும்னா சொல்லு மஞ்சு?”

எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணிச்சுதுன்னா, உங்க செல்ல மகனை கொஞ்சம் எழுப்பி விடுங்க ப்ளீஸ், என்னால இன்னொரு முறை மேலே ஏறிப் போக முடியாது.” சொன்ன மஞ்சுளாவைப் பார்த்துப் புன்னகைத்தார் அறிவழகன்.

அளவான, அழகான குடும்பம் அது. அறிவழகனும், மஞ்சுளாவும் தனியார் பாடசாலையின் ஆசிரியர்கள். இருவரது வருமானத்தையும் சேர்த்தால் ஆறிலக்கத்தில் தேறும். ஒரு பெண், ஒரு பையன். அதற்கு மேல் போக இருவருக்குமே தைரியம் இருக்கவில்லை. பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுள்ள பெற்றோர்.

மூத்தவள் கீதாஞ்சலி. பொறுப்பான பெண். அம்மா, அப்பாவின் ஆசிரியர் தொழிலில் ஆர்வம் அதிகம். ‘சைல்ட் கெயார்அவளுக்கு மிகவும் பிடித்தம் என்பதால், அதிலேயே டிகிரி முடித்துவிட்டு தற்போது புதிதாக முன்னேறிக் கொண்டிருக்கும்ஹனி பொட்நர்சரியின் ஆசிரியை

இளையவன் ஆதித்தன். செல்லப்பிள்ளை, இன்ஜினியரிங் ஃபைனல் இயர். அக்கா சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர், ஒவ்வொரு மாதமும் அவளது சம்பளத்தில் தனக்கென ஒரு தொகையைக் கறந்து கொள்ளும் அளவு கெட்டிக்காரத்தனம்.

ஆடம்பர வாழ்க்கை அவர்களுக்குப் பழக்கமில்லை, ஆனால் அத்தியாவசியங்களுக்கு எந்தக் குறையுமில்லாமல், பணத்தின் அருமையை புரியவைத்து, தங்கள் இரண்டு குழந்தைகளையும் வளர்த்திருந்தார்கள் அறிவழகன், மஞ்சுளா தம்பதியினர்.

எல்லா வசதிகளுடனும் கூடிய சொந்த வீடு. கீழேயிருந்த பெட்ரூமை அம்மாவும், அப்பாவும் உபயோகப்படுத்த, கீதாஞ்சலிக்கும், ஆதித்தனுக்கும் மாடியில் ஜாகை. அம்மா அடிக்கடி மாடியேறி வரமாட்டார் என்பது ஆதித்தனுக்கு மிகவும் வசதியாகிப் போனது

ஆதிஏழு மணியாச்சு, வேக் அப் மை சன்.” அறிவழகனின் குரலில் சோம்பல் முறித்தான் ஆதி. மஞ்சுளாவின் கண்டிப்பை ஈடு செய்யும் வகையில் தகைந்து போவார் அறிவழகன். அதனால் பிள்ளைகள் இரண்டு பேருக்கும்அப்பாஎன்றால் எப்போதும் ஒரு படி மேல்தான்.

ரூமின் கர்டனை இழுத்துவிட மெல்லிய சூரிய ஒளி இதமாக முகத்தைத் தழுவியது. பக்கத்து ரூமின் பால்கனியில் கீதாஞ்சலி தனது கூந்தலை காயவைத்தபடி இயற்கையை ரசித்திருப்பது, இங்கிருந்தே தெரிந்தது அறிவழகனுக்கு.

ஐந்தடி உயரம்தான். அதில் அவளுக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டு. இருந்தாலும் அதை ஈடு செய்துவிடும் அந்தக் கண்கள். இயற்கையாகவே சுருண்டிருந்த நீண்ட கேசமும், அழகான புருவங்களும், அந்தக் கண்களும் போதும், அவள் அழகியென்று சொல்ல.

பெருமை பொங்க மகளைப் பார்த்திருந்தார் அறிவழகன். இவளுக்கு ஏற்ற ஒருவனை தேடிப்பிடிக்க வேண்டுமே என்ற கவலை சமீப காலமாக அவரை வாட்டிக் கொண்டிருந்தது

என்னப்பா, அக்காவை ரசிச்சு முடிச்சாச்சா?” கேட்ட மகனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தார் அறிவழகன்

அக்காக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது ஆதி. இன்னும் காலம் கடத்தாம அவளுக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கனும் பா.”

அதுக்கு ஏம்பா கவலைப் படுறீங்க? இப்போதானே இருபத்தி மூணு வயசு.”

இல்லை ஆதி, இதுவே லேட்தான். இனி தீவிரமா அந்த விஷயத்துல இறங்கிட வேண்டியதுதான்.”

அதுக்கு ஏன்பா இவ்வளவு வொர்றி பண்ணுறீங்க? ஜமாய்ச்சுடலாம்.” இளமை வேகத்தில் சொன்ன மகனை கவலை தோய்ந்த முகத்தோடு பார்த்தார் அறிவழகன்.

தினமும் பேப்பர்ல வர்ற நியூஸையெல்லாம் படிக்கும் போது பயங்கரமா இருக்குப்பா. எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குன்னு நாம புகுந்தா பாக்க முடியும்?” அப்பாவின் கவலையில் இருந்த நியாயம் ஆதிக்கும் புரிந்தது

அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நீங்க எதுக்குப்பா வீணா மனசைப் போட்டு குழப்பிக்குறீங்க? பொண்ணைப் பத்தி மட்டும் நினைக்காமே, பையனைப் பத்தியும் கொஞ்சம் நினைங்கப்பா.” பேச்சின் திசையை மாற்றினான் ஆதி.

என் பையன் படிச்சி முடிச்சு, ஒழுங்கா ஒரு வேலையைத் தேடி, அவன் சம்பாத்தியத்துல ஒரு கார் வாங்கினதுக்கு அப்புறம் தான், எனக்கொரு மருமகள் இந்த வீட்டுக்கு வருவா.” குறும்பு கூத்தாடச் சொன்னார் அறிவழகன்.

அப்போ, உங்க பையன் காலம் முழுக்க கட்ட பிரம்மச்சாரிதான்.”

அது அவன் இஷ்டம்பா.”

ஏம்பா? உங்க மருமக உங்க கார்ல ஏறினா அந்தக் கார் ஓடாதோ?” சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் ஆதி.

சேச்சே, அதுக்கு சான்ஸே இல்லை. நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்கின கார்ப்பா. அதுல ப்ரையோரிட்டி என் பொண்டாட்டிக்குத்தான்.”

இந்தக் கொள்கையில எந்த மாற்றமும் வர சான்ஸ் இல்லையாப்பா?” 

உங்க அம்மா வர்ற மாதிரி இல்லை ஆதி?” கேட்ட மறுநொடி கட்டிலில் இருந்த ஆதி பாத்ரூமில் இருந்தான். வாய்விட்டுச் சிரித்தபடி ரூமிலிருந்து வெளியே வந்தார் அறிவழகன்.

என்னப்பா, சிரிப்பு பலமா இருக்கு?” கையில் ரிஸ்ட் வாட்சைக் கட்டியபடி வந்த கீதாஞ்சலி கேட்டாள்.

ஒன்னுமில்லைம்மா, ஆதியோட பேசிக்கிட்டு இருந்தேன்.” பேசிக்கொண்டே கீழே இறங்கி வந்தார்கள் அப்பாவும், மகளும். அன்றைய நாளிதள் டைனிங் டேபிளில் வஞ்சனை இல்லாமல் அபிமன்யுவை வெளிச்சம் போட்டுக் காட்டியது

பேப்பரை எடுத்துப் பார்த்த அறிவழகனின் முகம் வெறுப்பை உமிழ்ந்தது. புன்னகையோடு அப்பாவின் முகத்தைப் பார்த்த கீதாஞ்சலி,

இதெல்லாம் இப்போ ஃபாஷன்பா.” என்றாள்.

என்ன கருமமோ, இன்னும் இந்த உலகத்துல மழை பெய்யுதே, அது வரைக்கும் சந்தோஷம்.” என்றார் அறிவழகன். மாடியிலிருந்து இறங்கி வந்த ஆதி அப்பாவின் முகத்தைப் பார்த்து விட்டு, ‘என்ன?’ என்று கண்களாலேயே அக்காவிடம் கேட்டான். பேப்பரை கீதாஞ்சலி சுட்டிக் காட்டவும், அதை எடுத்துப் பார்த்தவன்,

சான்ஸ் இல்லைப்பா, ‘அபி கன்ஸ்ட்ரக்ஷ்ன்ஸ்ஓட பையன் இவரு. ஒரு ப்ரொஜெக்ட் நாங்க இவங்களோட பண்ணி இருக்கோம். பாத்தவரைக்கும் அவ்வளவு மோசமா தெரியலைப்பா.” தனக்குத் தெரிந்ததை சொல்லிக் கொண்டிருந்தான் ஆதி.

இட்லி, சாம்பாரை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்த மஞ்சுளா

இது இப்போ ரொம்ப முக்கியமா ஆதி? சீக்கிரமா சாப்பிட்டுட்டு கிளம்புற வழியைப் பாருங்க. யாரு எக்கேடு கெட்டா நமக்கென்ன? எனக்கு லேட்டாகுது.” சொல்லியபடி பரபரத்தார் மஞ்சுளா.

இன்றையப் பேச்சின் கதாநாயகன் தான், நாளை தங்கள் வீட்டு மருமகன் என்று அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. இதே போல ஒரு நாள் தங்கள் பெண்ணின் புகைப்படமும், இதே அபியுடன் பத்திரிகையில் வரும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவும் நியாயமில்லை.