பல வருடங்களுக்கு முன்…
அரசம்பாளையம்
அரசம்பாளையம், இந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கீழ் வரும். இந்த ஊரிலுள்ள அரசு பள்ளியில், ஆசிரியர் வேலை பார்த்து வந்தவர் அதிபன்.
அதிபனைப் பற்றி…
நல்லாசிரியர் என பள்ளியிலும், மாணவர்களிடமும்… நல்ல மனிதர் என்று அந்த ஊர் மக்களிடம் பெயர் எடுத்தவர்.
தன் வருமானத்தின் பெரும் பகுதியைப் பள்ளியின் சீரமைப்பிற்குச் செலவிடுவார். பள்ளிக்கு, அது தேவையானதாக இருந்தது.
வசதி குறைந்த… இல்லை, அப்படிச் சொல்லவே கூடாது! கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டக் குழந்தைகளுக்கு, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்.
இது இவரது பொது வாழ்க்கை!
இனி சொந்த வாழ்க்கை…
அதிபனுக்குத் தந்தை கிடையாது. தாய் மட்டும்தான்.
இவருக்குத் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்திருந்தது.
இவர் மனைவி ஆசிரியர் படிப்பு படித்து, வேலைக் கிடைக்கக் காத்துக் கொண்டிருந்தார்.
இவரது மனைவி, பக்கத்து ஊரான கிணத்துக்கடவைச் சேர்ந்தவர்.
இவர்களது திருமணம், இரு வீட்டின் பெரியவர்களால் நடத்தி வைக்கப்பட்டத் திருமணம்.
இவரது மனைவியின் பெயர் கீதா.
ஆம்! தற்போதய கீதா ராஜசேகர்தான்.
இதுதான் அதிபன்!
கீதா பற்றி…
கீதாவின் தந்தையும் உயிரோடு இல்லை. தாயார் மட்டுமே!
அவரது தாய் வயல் வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் வருமானத்தில்… குடும்பத் தேவைகளைப் பார்த்து, கீதாவையும் படிக்க வைத்திருந்தார்.
அவர்களது வாழ்வு… தாய், மகள் என்று இருவர் மட்டுமென வாழ்ந்த வாழ்வு.
அதிபனைப் போன்ற ஒருவருக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்ததில், கீதாவின் தாயாருக்குப் பெரு மகிழ்ச்சியே!
தன் கணவர், அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை பார்ப்பவர் என்ற சந்தோஷம் கீதாவிற்கும் இருந்தது.
தனக்கும் வேலை கிடைத்தால், வாழ்வின் நிலை உயரும் என்று எண்ணினார்.
சொந்தமாக ஓர் வீடு, நிறைவான சம்பளத்துடன் உத்தியோகம், கொஞ்சம் சேமிப்பு என வாழலாம் என்று நினைத்திருந்தார்.
ஏதோ வாழ்கை மட்டுமல்ல, வானமே வசப்பட்டது போல் ஆனந்தம், கீதாவிற்கு!
இதுவும் கீதாதான்!
நாட்காட்டியின் நாட்கள், ஆசிரியர் வேலை, பொதுச் சேவை, கீதாவுடன் குடும்ப வாழ்க்கை என்று பாதையில் அதிபனுக்குப் பறந்தன.
வாழத் தொடங்கிய சில நாட்களிலே, கீதாவிற்கு அதிபனின் கொள்கைகள் புரிந்து போயிற்று. அவரின் உதவி செய்யும் மனப்பான்மையும் தெரிந்து கொண்டார்.
ஆனால், அவருக்கு இது போன்ற விடயங்களில் பிடித்தம் இல்லை. சிறிது நாட்கள் பொறுத்துப் பார்த்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இல்லாமல் போனதால், இதுபற்றி அதிபனிடம் நேரடியாகவே கேட்டார்.
அதிபனிடம் இப்படிக் கேள்வி கேட்க நினைக்கும் போது, கீதா கருத்தரித்திருந்தார்.
“நீங்க பண்றதெல்லாம் சரியா?? சம்பாதிக்கிறதை மத்தவங்களுக்காக செலவழிச்சா… நாளைக்கு நமக்குன்னு பிள்ளை வந்தா, அதுக்கு என்ன சேர்த்து வச்சிருக்கீங்க?” என்று சண்டை போடும் தொனியில் கேட்டார்.
“முடிஞ்ச அளவு உதவி பண்றேன் கீதா. நாளைக்கு உனக்கு வேலை கிடைச்சி… உன்னோட சம்பளம் வந்தா… அதைப் பிள்ளைக்காக சேர்த்து வச்சிக்கோ” என்று சாதாரணமாகச் சொல்லிவிடுவார்.
ஆனால், இந்தப் பதிலில் கீதாவால் சமாதானம் அடைய முடியவில்லை.
வீட்டுப் பெரியவர்களிடம், அதிபன் பற்றிக் குறையாகச் சொன்ன போது, அவர்களும், ‘பிள்ளை வந்தால், சரியாகிடும்’ என்று சொல்லி கீதாவிற்கு நம்பிக்கையைக் கொடுத்தனர்.
ஒரு பிள்ளை வந்தபின், அதிபன் இப்படி இருக்க மாட்டார் என்று கீதாவும் நம்பினார்.
நாட்காட்டியின் நாட்கள், கீதாவின் கேள்விகளுக்கு – அதிபனின் பதில்கள் என்ற ரீதியில் உதிர்ந்தன.
ஆரம்பத்தில் மாணவர்களின் படிப்பிற்கு மட்டும் உதவி செய்தவர், பின்னர் பிறந்த ஊர் மக்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் எழுப்ப ஆரம்பித்தார்.
ஊரின் தேவைகள் என்னென்ன என்று பார்த்து, அதை நிறைவேற்றி வைப்பதற்காக…
மக்களைச் சேர்த்துப் போராட்டம் நடத்துவார்!
சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் நேரடியாகப் பேசுவார்!!
அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டார்!!!
உள்ளூர் கட்சி ஆட்கள் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டால், ‘இப்படிச் செய்யாதே’ என்று எதிர்த்து நிற்பார்.
மொத்தத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களின் மெத்தனத்தைத் தட்டிக் கேட்டார்.
அவராகத் தேடிச் சென்று உதவியது போய், மக்கள் அவரைத் தேடி வந்து உதவி கேட்டனர்.
ஆகையால் அந்த ஊரின் மக்களுக்கு, அதிபன் என்பவர் ‘அதிபன் ஐயா’ என்று ஆனார்.
இதனால் இரண்டு நடந்தது…
ஒன்று,
அந்தப் பகுதி அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் விரோதத்தைச் சம்பாதித்தார்.
மற்றொன்று,
கீதா எதிர்பார்த்து வந்த அன்பான, அமைதியான குடும்ப வாழ்க்கை கிடைக்கவில்லை. அதிபனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது. அது போன்ற வாழ்வுடன் கீதாவால் ஒத்துப் போக இயலவில்லை.
ஆரம்பித்திலிருந்தே அதிபனின் சமூக சேவைகள் மீது கீதாவிற்கு நாட்டமில்லை.
இருந்தாலும், மாறி விடுவார்… மாற்றி விடலாம் என நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.
பிறருக்காக நல்லது செய்வது ஒரு போதை… அதிலிருந்து மீள்வது அத்தனை சுலபமல்ல!
அதிபன் அதற்கு விலக்கல்ல!!
நாட்காட்டியின் நாட்கள், ஊருக்காக அதிபன் உழைப்பது… கீதா அதை உதாசீனப்படுத்துவது என்ற ரீதியில் உருண்டன!
இந்தச் சூழலில்,
கீதா, அதிபன் தம்பதியினருக்கு மகள் பிறந்தாள். இரு வீட்டின் பெரியவர்களுக்கும், அத்தனை சந்தோஷம்!
ஆசை ஆசையாக தன் மகளுக்கு ‘அமுதா’ என்று பெயர் வைத்தார்.
ஏனோ, கீதாவிற்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லை. ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.
மேலும், கீதாவிற்கும் அதிபனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாயின. இரு வேறு துருவங்கள் போன்று இருவரும் இருந்தனர்.
அமுதா??
அப்பாவின் செல்ல மகள்!
போராட்டம் நிறைந்த வாழ்வில் – அவரின்
தித்திப்பு ஆர்ப்பாட்டம் அவள்!
முத்துக்களில்லா சிப்பி திறப்பது போன்று – அவளது
பொக்கை வாய் சிரிப்பு!
இருளின் மினிட்டாம் பூச்சி
போன்று – அவளது
ஒளிரும் இரு விழிகள்!
தகதிமிதா என்ற தாளங்கள்
உணர்த்தும் – அவளது
தத்தக்கா பித்தக்கா நடை!
கோடிக் களிப்பில் திளைப்பார் அவளது
ஆடிக் களைத்த துயில்
காண்கையில்!
சுருக்கமாக,
அவளின் மழலை மொழி கேட்காத அதிபனின் நாட்கள், பாரதி எழுத்தில்லா தமிழைப் போல… தத்தளித்து வெறுமை காணும்.
நாட்காட்டியின் நாட்கள், வாழ்வில் நிறைய மாற்றங்கள் என்ற வழியில் நடந்தன.
அந்த மாற்றங்கள்…
அதிபனின் தாயார் மரணம் நிகழ்ந்திருந்தது. வீட்டில் பெரியவர் ஒருவர் இல்லை என்ற நிலை ஆனது.
கீதா தாயாரிடம்,
‘ஒரு பிள்ளை வந்த பின்னும் ஏன் இப்படி இருக்கிறார்?’ என அதிபனின் சேவைகளில், கீதாவின் தாயாருக்கு
உடன்பாடு குறைந்தது.
ஆனால், அவரின் மேலிருந்த மதிப்பும் மரியாதையும் குறையவில்லை. மேலும் தன் பெண், இதையெல்லாம் சமாளித்து விடுவாள் என்று நம்பினார்.
அதிபனிடம்,
அதிபன், தனி மனிதராகச் செய்த நற்செயல்களுக்குத் துணையாக நிற்க, அந்தப் பகுதியின் இளைஞர் கூட்டம் உருவாகியிருந்தது.
அது அவருக்கென்று, அவரின் மேல் அன்பு கொண்டு, அவரைத் தலைமையாக நினைத்துச் சேர்ந்த கூட்டம்.
அந்த ஊரின் பிரச்சனைகள், தேவைகள் என்ற நிலை மாறி, அருகிலுள்ள கிராமங்களின் பிரச்சனைகள் பற்றியும் பேசினார்.
பேசியதோடு நின்று விடாமல், அதைத் தீர்த்தும் வைத்தார்.
இதைப் பற்றியெல்லாம் பேச, அவரது வீட்டின் முற்றத்தில் கூட்டம் போடும் வழக்கம் உண்டு.
கீதாவிடம்,
அதிபன், கீதா இடையே இருந்த கருத்து வேறுபாடு, கருத்து மோதலாக மாறியது.
அதிபனின் மீது நிறைய குறைகளை அடுக்கினார்.
அதில் முக்கியமானது,
பிள்ளையின் எதிர்காலத்திற்கு என்று எதுவும் சேர்த்து வைக்காதது…
மற்றும் அதிபன் வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைந்து போயிற்று…
என்பதாகும்!
அமுதா??
இது மாற்றமில்லை! மனம்!! அழகான மனம்!!!
இது! அதிபனுக்கும் அவர் மகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பு. கீதாவிற்கு நேரெதிர் ரகத்தில் அமுதா இருந்தாள்.
ஒன்று அப்பாவைக் காலையில் எழும் போது பார்க்க வேண்டும், இல்லை… இரவு உறங்கச் செல்லும் முன் பார்க்க வேண்டும்.
அப்பொழுதான், அந்த நாள் வாழ்ந்த நாளின் கணக்கில் வரும் என்பது போல!
அடிக்கடி, அம்மா அப்பாவிடம் சண்டையிடுவதைப் பார்த்தே வளர்ந்தவள்.
அதிபன் வீட்டிற்குள் நுழையும் போதே, கீதா ஆரம்பித்து விடுவார்.
‘இவ்வளவு லேட்டாவா வருவாங்க’ என்று பேச்சை ஆரம்பிப்பார்.
‘நீங்க இந்த மாதிரி பண்றது பிடிக்கலை’ என்று பிரச்சனை செய்வார்.
‘மத்தவங்களுக்காகச் செய்றதை நிப்பாட்டுங்க’ என்று பிடிவாதம் பிடிப்பார்.
கடைசியில், ‘இது நான் நினைச்ச வாழ்க்கை இல்லை’ என அழுவார்.
அதுவரை கீதாவைச் சமாதானம் செய்யும்படி அதிபன் பேசுவார். ஆனால் அழ ஆரம்பித்தால், அதிபன் அமைதியாகி விடுவார்.
அழுது அழுது, பின் அப்படியே கீதா உறங்கிப் போவார்.
அது போன்ற நேரங்களில், அமுதா அடைக்கலம் அடைந்து துயில் கொள்வது அப்பாவின் மார்பில்தான்.
பின்னர் அதுவே வழக்கம் ஆயிற்று!
சுருக்கமாக,
தாயின் மடியில் உறங்கியதை விட, தந்தை மார்பில் உறங்கியது அதிகம்!
நாட்காட்டியின் நாட்கள், வாழ்வின் மீது ஒரு வெறுப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் கீதாவிற்குப் பயணித்தன.
அதிபன் வீட்டில் இருக்கின்ற நேரங்களிலெல்லாம், கீதா அவரிடம் குறைகள் கண்டுபிடித்து வாக்குவாதம் செய்வார்.
கீதா, தன் குடும்பம், தன் குழந்தை, தன் கணவர் என்ற சராசரி வாழ்க்கை வாழ நினைத்தார்.
ஆனால் அந்தச் சராசரிக்குள் அதிபன் சரியாகப் பொருந்திப் போகவில்லை.
இந்தச் சூழலில்தான்…
கீதாவிற்கு, கோயம்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. கோவை சென்று வேலை செய்யப் போவதாகச் சொல்லி, அதிபனிடம் வந்து நின்றார்.
“நீ வேலை செய் கீதா. ஆனா கோயம்புத்தூர் எதுக்கு?? இங்கேயே வேலை செய்யலாமே”
“அங்க நிறைய சம்பளம் தருவாங்க. அமுதாவோட எதிர் காலத்துக்கு சேர்த்து வைக்க முடியும். இனியும் உங்ககிட்ட இதுக்காகச் சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியாது. நீங்க மாற மாட்டிங்கன்னு தெரிஞ்சிருச்சு. நான் மாறிக்கிறேன்”
“இல்லை கீதா…”
“ஊருக்குத்தான் உபதேசமா?? அத்தனை பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீங்க… பொண்ணுங்களுக்கு பிரச்சனைன்னா ஓடிப் பொய் உதவுறீங்க. ஆனா உங்க வீட்டுப் பொண்ணு… வேலைக்குப் போகக் கூடாது. வீட்டுக்குள்ளே இருக்கனும். அவளோட விருப்பப்படி வாழக் கூடாது. அப்படித்தானா??”
“நான் அப்படிச் சொல்லலை கீதா. இங்கிருந்து கோயம்பூதூர் போயிட்டு வர்றது கஷ்டமில்லையா?”
“நான் அங்கேயே வீடு எடுத்துத் தங்கப்போறேன்”
“அமுதா??” என்றார் ஒற்றை வார்த்தையாக! அது வார்த்தை மட்டுமல்ல அவரது வாழ்க்கை!!
“அமுதா எப்பவும் என்கூடதான் இருப்பா” என்று அழுத்தமாகச் சொன்னவர், “சனி, ஞாயிறு… இங்க கூட்டிட்டு வர்றேன்” என்று அசட்டையாகச் சொன்னார்.
“அவ, என்னைய விட்டு இருக்க மாட்டா. இது வேண்டாமே கீதா” என்று மகளுக்காக மன்றாட ஆரம்பித்தார்.
“முக்காவாசி நேரம் வீட்லயே இருந்ததில்லை. நீங்க இப்படிச் சொல்றீங்க” என்று சொல்லி, இளக்காரமாகச் சிரித்தார்.
“நீ எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு வந்து என்கிட்ட சொல்றியா?”
“ஆமா. அதுலென்ன தப்பு இருக்கு?? என் விருப்பப்படி வாழணும்னு நினைக்கிறன். இனிமேலாவது நான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கணும்”
“ஏன்?? இது வரைக்கும் அப்படியில்லையா?”
“இல்லை… சுத்தமா இல்லை”
“அப்படி என்ன உன் விருப்பப்படி நடக்கலை?”
“நிறைய! ஏன்?? அமுதாவுக்கு பேர் வைக்கிறதல கூட உங்க விருப்பம்தான??”
“இது என்ன புதுசா சொல்ற?”
“எனக்கு, அவளுக்குத் ‘தாரா-ன்னு’ பேர் வைக்க ஆசை. ஆனா நீங்க அமுதான்னு வைச்சிட்டிங்க”
“நம்ம ரெண்டு பேரோட எழுத்தச் சேர்த்து, அவளுக்கு அமுதான்னு பேர் வச்சேன். பிடிக்கலைன்னா அன்னைக்கே சொல்யிருக்கலாமே கீதா… இப்ப வந்து சொல்ற?”
“இப்போ பிரச்சனை அது இல்லை.
நான் என் முடிவுல உறுதியா இருக்கேன். இனிமே இந்த மாதிரி சண்டை போட்டு வாழுற வாழ்க்கை…” என்று தொடங்கி, ஒரு மூச்சுக் கொட்டித் தீர்த்தார்.
கடைசியில், “சரி போ” என்று அதிபன் முடித்துவிட்டார்.
இல்லை, அதற்கு மேல் அவரைப் பிடித்து வைக்க முடியாமல், விட்டு விட்டார்.
கீதாவின் இந்த முடிவு, அவரின் தாயாருக்கும் பிடிக்கவில்லை.
அமுதா??
அப்பா இல்லாமல் எப்படித் தன் காலைப் பொழுதுகள் விடியும்? அப்பாவுடன் இல்லாத நாட்கள் எப்படி நாளின் கணக்கில் வரும்?
அப்பா இல்லாமல் இரவில் எப்படி உறங்க முடியும்?
இப்படித்தான் அந்தச் சிறு பிள்ளையின் மனம் துடித்தது.
நாட்காட்டியின் நாட்கள், அதிபன் அரசம்பாளையத்தில்… கீதா கோவையில்… என்று பிரிவின் பாதையில் ஓடின.
கீதா கோவை சென்றுவிட்டார். வாடைக்கு சிறு வீடு, போதுமான அளவு சம்பளத்தில் வேலை. மகளுக்கும் அதே பள்ளியில் படிப்பைத் தொடங்கினார். இருவரும் ஒன்றாகச் சென்று, ஒன்றாக வீடு வந்தனர்.
அதிபனுடன் சண்டை சச்சரவுக்கு தேவை இல்லாததால்… கீதா நிம்மதியாக உணர்ந்தார்.
அப்பாவைத் தினமும் சந்திக்க முடியாமல் போனதால்… அமுதா நிம்மதியின்று உழன்றாள்.
தனியாகவே இருப்பதால், அதிபனின் சேவைகள், அதற்காகச் செலவிடும் நேரங்கள் அதிகமாயின.
வீட்டில் அக்கறையாக கேள்வி கேட்க யாருமில்லை என்றதால், எந்தப் பயமுமின்றி சமுதாயத்தின் அநீதிகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
தான் சொன்னது போல், சனி ஞாயிறுகளில் அமுதாவை அழைத்துக் கொண்டு, கீதா அரசம்பாளையம் செல்லுவார்.
அந்த இரு நாட்களும், அதிபனுக்கும் அமுதாவுக்கும் வார இறுதி நாட்களல்ல! வாழ்வை இயக்கும் நாட்கள்!!
இருவரின் பாச உண்டியலில் சேர்த்து வைக்க வேண்டிய நேரச் செலவிடல்களாக, அவை இருக்கும்.
நாட்காட்டியின் நாட்கள், இந்த வாழ்க்கை அதிபனுக்கும் கீதாவிற்கும் பழகிப் போனது என்ற பொருளில் மடிந்தன.
ஆனால் அதற்கும் பிரச்சனை வந்தது.
காரணம் அதிபன்தான்!
அதிபன் இப்பொழுது சமூக ஆர்வலர் என்ற நிலைக்கு மாறியிருந்தார்.
சமூகத்தின் குரல் கொடுத்தவரை,
அதே சமூகத்தின் பிரச்சனைகளை, நிலையினை வைத்து அரசியல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த மனிதர்களின் வெறுப்பிற்கு ஆளானார்.
அந்தப் பகுதியில் இருந்த அரசியல்வாதிகளுக்கு, அதிபனின் இயல்புகள் இடைஞ்சல்களாக இருந்தது.
முக்கியமாக, மிக முக்கியமாக… அரசம்பாளையத்தில் ஒரு தனியார் பள்ளியைக் கொண்டு வருவதில், ஒரு எதிர்கட்சி உடன்பிறப்பிற்கும் அதிபனுக்கும் இடையே பெரிய மோதல் ஆரம்பமானது.
அதிபன் அங்கிருந்த அரசுப் பள்ளியைச் சீர் செய்தாலே போதும் என்று போராட்டம் செய்யத் தொடங்கினார்.
அரசுப் பள்ளியின் கட்டிடம் சரியில்லை, மாணாக்கர்கள் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை என்று காரணங்கள் கூறி, அதை மூடப் பார்த்தனர்.
அதிபனுக்கு ஆதரவாக, அவருடன் அந்தப் பகுதி இளைஞர்கள் இருந்தார்கள்.
முதலில் அந்தக் கட்சி உடன்பிறப்பு அதிபனிடம் சமரசமாகப் பேசிப் பார்க்க முயன்றது.
அது முடியாமல் போனதும், அவரை மிரட்டிப் பார்த்தது. அதற்கும் அவர் அஞ்சவில்லை என்று தெரிந்ததும், அவரது குடும்பத்தின் மீது பார்வை திரும்பியது.
ஆம்! கீதாவை மிரட்ட ஆரம்பித்தனர்.
‘ஓரளவிற்கு நிம்மதியாகச் சென்ற வாழ்வில் இது என்ன பிரச்சனை?’ என கீதாவின் மனம், அதிபன் மேல் மேலும் கோபம் கொண்டது.
கீதா அரசம்பாளையம் வரும் போது, எதிர்கட்சி உடன்பிறப்பின் ஆட்கள் அவரைச் சந்தித்து மிரட்டினார்கள்.
வேலை இல்லாமல் செய்து விடுவோம்!
வீடு இல்லாமல் செய்து விடுவோம்!
குழந்தையை ஏதாவது செய்து விடுவோம்!
இப்படி நிறைய!
கீதாவிற்கு, ஒவ்வொரு நாளும் பயம் சூழ்ந்ததாக இருந்தது. தன் மகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனப் பயந்தார்.
ஆதலால், மீண்டும் அதிபனிடம் ஒரு விண்ணப்பத்துடன் வந்து நின்றார்.
அது விவாகரத்து!
“இப்போ இதுக்கு என்ன அவசியம் கீதா?”
“என் பொண்ணுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு,”
“எதுவும் ஆகாது. நீ பயப்படாத”
“எப்படி உங்களால இப்படிச் சொல்ல முடியுது? எப்படி பயப்படாம இருக்க முடியும்?”
“கீதா… அவங்க மேல போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் கொடுக்கலாம்”
“அவங்க ஒன்னும் போலீஸூக்கு பயப்பிடற ஆளுங்க மாதிரி தெரியலையே”
“மிரட்டத்தான் செய்வாங்க. வேற ஒன்னும் செய்ய மாட்டாங்க”
“இந்தச் சமாதானம் வேண்டாம். ஒன்னு போராட்டம் பண்ணாதீங்க. இல்லை, விவாகரத்து கொடுங்க” என்று அதிபனின் வாழ்க்கைக்கு வாய்ப்புகள் கொடுத்தார்.
“விவாகரத்து கொடுத்தா மிரட்ட மாட்டாங்களா??”
“எங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கப் போய்தான, இந்த மாதிரி பிரச்சனை வருது. சம்பந்தமே இல்லைன்னா… நாங்க நிம்மதியா வாழ்வோம்ல…”
“இந்த விவாகரத்து வாங்கினா… எனக்கும், என் பொண்ணுக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஆகிடுமா??”
“சரி… இந்தப் பிரச்சனைக்காக கேட்கல. எனக்கு உங்ககூட வாழப் பிடிக்கலை. அப்போ கொடுப்பீங்களா??”
“இப்பவும் நாம ஒன்னும் பெருசா வாழ்க்கை வாழலையே…”
“அதேதான்! இப்படி நம்ம ரெண்டு பேரும் புரிஞ்சிக்காம ஒரு வாழ்க்கை வாழறதுக்கு, பிரிஞ்சிடலாமே?”
“இது பிரியிற அளவுக்குப் பெரிய விஷயம் கிடையாது”
“இருக்கலாம்… ஆனா ஏதாவது என் பொண்ணுக்கு நடந்து… முன்னாடியே பிரிஞ்சிருக்கலாமேனு யோசிக்க கூடாது இல்லையா?? அதுக்காக கேட்கிறேன் விவாகரத்து கொடுங்க” என்று முடிவாய் சொல்லிவிட்டு, கோவை கிளம்பினார்.
அன்று அத்தோடு அந்த வாதம் முடிந்தது.
இது போன்ற ஒரு பிரச்சனை வரவில்லை என்றாலும், கீதா விவாகரத்து கேட்டிருப்பாரோ? என்று எண்ணம் அதிபனுக்கு வந்தது.
மேலும், சில நாட்களாக அவர்கள் இருவரது பேச்சிலும்… எந்த ஒட்டுதல், இல்லை என்பதையும் உணர்ந்தார்.
நாட்காட்டியின் நாட்கள், கீதா விவகாரத்து கேட்பது, அதிபன் அதை மறுப்பது என்ற வாக்குவாதத்தில் வீணடிக்கப்பட்டன.
அதன் பின்னர், ஒவ்வொரு முறை வரும்போதும், கீதா விவகாரத்துப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் அதிகமாயின.
அவர்களுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை என்று, அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது.
பல நேரங்களில், வீட்டிற்குள் நடக்கும் வாக்குவாதம், வெளியே கூட்டத்திற்காக வந்து நின்ற இளைஞர்கள் கேட்கும் வரைச் சென்றது.
சில நேரங்களில், அதிபன் மேலுள்ள கோபத்தில், கூட்டத்திற்காகக் கூடி நின்ற இளைஞர்களைப் பார்த்துக் கீதா கத்திவிட்டுச் செல்வார்.
யாரும் திருப்பி எதுவும் பேச மாட்டார்கள். கீதாவிற்காக அல்ல!
அதிபனின் மேல் வைத்திருந்த மரியாதைக்காக!!
ஆனால் கீதாவின் இத்தகைய செயல்கள் அதிபனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
ஒருநாள் வாக்குவாதத்தில்…
“ரொம்ப முற்போக்கானவர்ன்னு வெளியே சொல்லிக்கிறீங்க. ஆனா வீட்டுக்குள்ள… பிடிக்கலைன்னு சொல்ற பொண்ணோட வாழணும்னு நினைக்கிறீங்க” என்றார், கீதா!
அவ்வளவுதான்! அதிபன், அதற்கு மேல் கீதாவுடன் சண்டை போடவோ, சமாதானம் செய்யவோ முயலவில்லை.
விவகாரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தந்தார். போடுவதற்கு முன், அமுதா பற்றிய பேச்சு வந்தது.
“அமுதா” என்றார் ஒற்றை வார்த்தையாக. அது வார்த்தை மட்டுமல்ல அவரது வாழ்க்கை!
“அவளை உங்ககிட்ட விட்டுட்டு, என்னால நிம்மதியா இருக்க முடியாது. அதோட… அவளுக்காகத்தான இது!” என்று எல்லாருக்கும் சேர்த்து கீதாவே முடிவெடுத்தார்.
கீதாவின் முடிவை ஆட்சேபிக்கலாம். ஆனால், அமுதாவைப் பற்றி முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் அதிபன் இருந்தார்.
கீதாவின் இந்த முடிவால், அதிபனின் நலன் விரும்பிகளுக்கும், கீதாவின் தாயாருக்கும்… அவர் மேல் வெறுப்பு வந்தது.
கீதாவின் தாயாரும் எவ்வளவோ பேசிப் பார்த்தார். ஆனால், கீதாவை மாற்ற முடியவில்லை. அவர் மனம் மாறவில்லை.
கடைசியில், விவாகரத்திற்கு இருவரும் ஒருமனதாக விண்ணப்பம் செய்தனர்.
அமுதா?
எப்பவும் போல், அப்பாவை சனி ஞாயிறுகளில் பார்க்கின்றோம் என்ற அளவில் மட்டும் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.
அதைத் தவிர வேறு எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. யாரும் தெரியப் படுத்தவும் இல்லை.
இந்தச் சூழலில்தான்
ராஜசேகரும், தேவாவும் இவர்கள் மூவரது வாழ்க்கைக்குள் வந்தனர்.