Ragasiyam 8

ரௌத்திரமாய் ரகசியமாய்-8

ஒட்டுமொத்த பதற்றமே உருவாக குறுக்கும்‌ நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் சிந்து. பலத்த யோசனையில் இருக்கிறாள்‌ போலும். சோஃபாவில் அமர்ந்து கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த சிந்துவையே பாரத்துக் கொண்டிருந்தாள் அவள். அவளது கண்கள் வெகுவாக கலங்கியிருந்தன.

“சிந்து..” என மெல்லிய குரலில் அவளை அழைத்தாள்‌ தாமிரா.

“என்னடீ?” எரிச்சலடைந்தாள் சிந்து.

“ஏன் சிந்து கத்துற? எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” அவள் குரலில் நடுக்கம் தெரிந்தது.

“இப்போ என்ன பயம்? அந்த பயம் இந்த ஆளை வீட்டுக்கு தூக்கிட்டு வர முன்னாடி இருந்து இருக்கனும். யாரு என்னனு? இவனை பத்தி எதுவுமே தெரியலை அன்ட் உன் அப்பாவுக்கு தெரிஞ்சா எனனாகும்னு யோசிச்சு பார்த்தியா?. ” எரிந்து விழுந்தவள், தாமிராவின் கலங்கிய‌ விழிகளை கண்டதும் சற்று அமைதியடைந்து அவளருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“ச்சு.. லீவ் இட். இப்போ அடுத்து என்ன பண்ணாலாம்னு யோசிக்கலாம்.. ஓகே” ஆறுதலாக அவளை அணைத்தாள் சிந்து.

அன்றிரவு நடந்த திடீர் தாக்குதலின்போது குண்டடிப்பட்டு வீழ்ந்த ருத்ரனை அவளால் அப்படியே விட்டு வர மனம் கேட்கவில்லை. ஹாஸ்பிடல் அருகில் தான் என்றாலும் இந்நிலையில் அங்கு அழைத்துச் சென்றால் தேவையற்ற கேள்விகள், பிரச்சினைகளை சந்திக்க நேரிடக்கூடும் என வேறு வழியின்றி சிந்துவின் உதவியுடன் அவள்‌ இருப்பிடத்திற்கே அழைத்துச் சென்றாள்.

பாதுகாப்பான இடத்தில் தான் குண்டடிப்பட்டிருந்தது கூட அவர்கள் இருவருக்கும் சற்று நிம்மதியை கொடுத்தது என்றாலும் அந்த இக்கட்டான சூழ்நிலையில் அதற்கு மேல் என்ன செய்வதென்று புரியவில்லை. யாருக்கும் தெரியாமல் அவர்களால் முடிந்தளவு அவனது மருத்துவ தேவைகளை கவனித்துக் கொண்டனர்.

கடந்த இருபத்தி நான்கு மணி நேரமாக ருத்ரன் முழுதாக சுய நினைவு வராமல் அரை மயக்க நிலையிலேயே இருக்கிறான். அவன் யார்? அவன் வீடு எங்கே? அவனை பற்றி எந்த விபரமும் தெரியாத நிலையில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தனர். தாமிரா தான் பயந்து போயிருந்தாள்.

இப்படியே இருவரும் குழம்பியிருக்க, ஒரு புதிய எண்ணிலிருந்து தாமிராவுக்கு அழைப்பு வர, யாராக இருக்கும்? என யோசித்தபடியே அழைப்பை ஏற்றாள்.

“நாளை இரவு ருத்ரனை கூட்டிட்டு போயிடுவோம்.” மறுமுனையில் ஓர் குரல். அவ்வளவு தான் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் குழப்பமடைந்தாள் தாமிரா. யார்? என்ன? என விசாரிக்கும் முன்னரே ஒரே வார்த்தையோடு அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது‌.

அதுவும் அவளது செல்ஃபோனுக்கு வந்த அழைப்பு. அவளது செல் இலக்கம் எப்படி தெரிந்திருக்கும்? அழைத்தது யார்? இவன் பெயர் தான் ருத்ரனா? யார் இவன்? அப்படியாயின் அவன் இங்கே இருப்பது எப்படி தெரியும்? . பல விடை தெரியாத கேள்விகள் அவளை குடைந்தன.

வந்த அழைப்பை பற்றி சிந்துவிடம் கூற அவளும் இவளை போல முதலில் குழம்பினாள்.

“உன் ஃபோனுக்கு வருதுன்னா? நிச்சயம் அவன் இங்கே இருக்குறது அவனை தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.”

“அது எப்படி சிந்து? இவன் யாருனே நமக்கு தெரியாது. இவன் இங்கே இருக்கான்னு அவங்களுக்கு எப்படி தெரியும்?” குழப்பத்துடன் தோழியை பார்த்தாள் தாமிரா.

அவளுக்குமே இதற்கான பதில் தெரியவில்லை. ஆனால் தாங்கள் கண்கானிக்கப்படுகிறோம் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. இதை தாமிராவிடம் கூறினால் அவள்‌ மேலும் பயந்து விடுவாள் என அவளுக்கு தைரியமூட்டினாள்.

எது எப்படியோ? நாளை முதல் இந்த தொல்லை தீர்ந்தது என்றே இருவருக்கும் தோன்றியது. தாமிரா வீட்டிலிருக்க சிந்து மாத்திரம் மருத்துவமனைக்கு கிளம்பினாள்.

அப்போது தான் குளித்து விட்டு வந்தவளை அழைத்தது அவள் செல்ஃபோன். மீண்டும் அதே தெரியாத எண்ணாக இருக்குமோ? என்ற சிந்தனையுடன் சென்றவள் செல்ஃபோன் திரையை பார்த்தாள். அது அவள் தங்கை அக்ஷரா.

இங்கே நடந்த கலவரங்கள் எதையுமே வீட்டினரிடம் காட்டிக் கொள்ளவில்லை. தன் தந்தையிடம் கூட தெரிவிக்காதது அவள் மனதை உறுத்தியது. வேறு வழியில்லை. தங்கையிடம் பேசிக் கொண்டிருந்த வேளை திடீரென இருமும் சத்தம். அது அவள் அறையிலிருந்து தான்.

சட்டென அவள் அறை பக்கம் திரும்பினாள். மீண்டும் இருமும் சத்தம். எங்கு தங்கைக்கு கேட்டு விடுமோ என்ற பயத்தில் அழைப்பே துண்டித்து விட்டு அறையை நோக்கி ஓடினாள்.

அவன் தான். கையில் ஸ்ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டிருக்க, கட்டிடப்பட்டிருந்த தன் தோள் பட்டையை அழுத்தி பிடித்தவாறு எழுந்து அமர முயற்சிக்க அவனால் முடியவில்லை. வலியை உணர்ந்தான். அவனுக்கு உதவிடும் எண்ணத்தில் உள்ளே நுழைந்தாள்.

“ஹேய் பார்த்து.. பார்த்து..” அவளை தாங்கி பிடித்து அமர வைத்தாள். முழுமையாக சுயநினைவு வந்துவிட்டது போலும். மெல்ல எழுந்து எழுந்து அமர்ந்தவன் அவளையும் அவளது அறையும் மாறி மாறி பார்க்க, அவளுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. அவளையறியாமலே அவனை வாங்கியிருந்த அவள் கைகளை இழுத்துக் கொண்டாள்‌.

அறை முழுவதுமாக அவன் பார்வை சுழல

“வேர் இஸ் மை கன்?” அவளை பார்த்து அவன் கேட்ட கேள்வி.

‘அடப்பாவி, கண் முழிச்சதும் தான் முழிச்சான் எனக்கு என்னாச்சு? நான் எங்கே இருக்கேன்னு? கேட்பான்னு பார்த்தா பாவி பையன் இப்படி துப்பாக்கியை கேட்குறானே. குண்டடிப்பட்டு கூட திருந்த மாட்டேங்குறானே இந்த மான்ஸ்டர்.’ அவள் மனதாலேயே அவனை திட்டினாள்.

“உன்னை தான் கேட்டேன். என் கன் எங்கே?” அவன் குரலில் அழுத்தம் கூடியது.

“ஆ.. அது வந்து..” அவன் குரல் கேட்டாளே நாட்டியமாடும் அவள் நா இன்றும் ஆட்டம் போட்டது.

“நீ அப்புறம் வந்து போ. பர்ஸ்ட் என் கன் எங்கேனு கேட்டேன். ஸ்ஸ் ஆ..” அவனது தோள்பட்டை வலித்தது.

“அது அந்த டிராயார்ல இருக்கு.”

படுக்கையோடு இருந்த ட்ராயரை திறந்து தன் துப்பாக்கியை எடுத்து ஆராயத் துவங்கினான். அவ்வளவு தான் அதன் பின்பு அவள் பக்கம் திரும்பவே இல்லை. சிறிது நேரம் அங்கே நின்று பார்த்து விட்டு திரும்பி ஹாலை நோக்கி நடக்க அவளை அழைத்தான்.

“என்னோட மொபைல் எங்கே?”

“இ..இல்லை உங்க மொபைல் இருக்கலை.”

ஒரு நிமிடம் நெற்றியை நீவி யோசித்தவன் “ஓ.. ஓகே. உன் ஃபோனை கொடு.” என்றான்.

“ஆ.. என்ன?” புரியாமல் விழித்தாள்.

“உன் செல்ஃபோனை கேட்டேன்.” அமைதியான குரல் தான் ஆனால் அதிலும் ஓர் அழுத்தம் இருந்தது.

ஏன்? எதற்கு? என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. அவளும் கொடுத்தாள்.

“ஓகே. நீ போ.” அவ்வளவு தான். அங்கிருந்து வேகமாக வெளியேறி ஹால் சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

இப்போது தான் அவளுக்கு மூச்சு விட முடிந்தது.

‘என் இடத்தில வந்து என்னையே அதிகாரம் பண்றானே. என்ன தைரியம் அவனுக்கு? அவனை காப்பாத்தினதுக்கு ஒரு தேங்க்ஸ். அது கூட வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு சின்ன ஸ்மைல். என் செல்லை கூட வாங்கி வச்சிக்கிட்டான். பர்ஸ்ட் இவனை இந்த இடத்தை விட்டு காலி பண்ண வைக்கனும். இல்லைனா நாம மூச்சு முட்டியே செத்துப் போக வேண்டியது தான். ‘ வாய் விட்டே புலம்பிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்

***

அது ஒரு ஸ்டார் ஹோட்டலின் பார் பகுதி. அவன்‌ முகம்‌ கடுமையை காட்டியது. மதுக் கோப்பையுடன் அமர்ந்திருந்தான் பரத். அருகே லாலும் அமர்ந்திருக்க, அவர்களின் பேச்சு வார்த்தை என்பதை விட வாக்கு வாதத்தை மிகக் கவனமா கேட்டபடி திலீப்பும் நின்று கொண்டிருந்தான்.

“இந்த விஷயத்தில் தலையிடுவதை இத்தோடு நிறுத்திக்கோங்க. ”

“உன்னை விட எனக்கு இதில் அனுபவம் அதிகம் பரத்.” அவரும் கடுமையை காட்டினார்.

“நான் ஒன்னும் குழந்தை இல்லை. எப்பவும் நீங்க சொல்றதை மட்டுமே செய்வேன்னு எதிர்ப்பார்க்காதீங்க.” பதிலுக்கு அவனும்
எகிறினான்.

“உன்னை வளர்த்தது நான் தான் மறந்துட்டீயா?” அவனை தீர்க்கமாக பார்த்தார்.

அவர் வார்த்தை இன்னும் அவனை ஆத்திரப்படுத்தியது‌. இன்னொரு கோப்பை மதுவை மடமடவென்று உள்ளே இறக்கினான்.

‘என்ன இந்த ஆள் எப்போ பார்த்தாலும் நான் உன்னை தான் வளர்த்து விட்டேன்னு விடாம அதே புராணத்தை படிச்சிட்டு இருக்கான். நம்ம பாஸை டென்ஷனாக்குறதே இந்த கரடிக்கு வேலையா போச்சு’ மனதால் லாலை திட்டியவன், மீண்டும் அவர்களது பேச்சில் தன் காதுகளை கூர்மையாக்கி தான்.

“உங்க எல்லையை தாண்டி போய்க்கிட்டு இருக்கீங்க. இதை நான் ஹேண்டில் பண்றேன். இத்தோடு இதுல தலையிட மாட்டீங்கனு நெனைக்கிறேன்.” ஏறக்குறைய கத்தினான். தீப்பிடித்தது போல் அவன் உள்ளம் எரிந்து கொண்டிருந்தது.

அவர் பதில் சொல்லாமல் அவன் முகத்தை வெறித்துப் பார்த்தார். இவன் தான் செய்து விட முடியும்? அவர் உதட்டில் ஓர் இகழ்ச்சி புன்னகை. பிறகு ஆமோதிப்பாக தலையை மேலும் கீழும் அசைத்தார்.

****

வெளியே நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. வாராண்டாவில் கிடந்த பிரம்பு நாற்காலியில் கண்ணத்தில் கை வைத்தபடி சோகமாக அமர்ந்திருந்தாள் தாமிரா.

அன்று முதல் இந்நொடி நடந்தவற்றை எண்ணி மனம் குழம்பிப் போயிருந்தாள். இதனால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடுமா? ஆரம்பத்திலேயே தன் தந்தையிடம் தெரிவித்திருக்க வேண்டுமோ? அவராக தெரிந்து கொண்டால் அவ்வளவு தான். இந்நிலையில் அவரிடம் கூறவும் பயமாக இருந்தது.

சிந்துவின் வருகைக்காக காத்திருந்தாள். இவன் வேறு அவள் இடத்திலேயே இருந்து கொண்டு அவளை அதிகாரம் செய்கிறான். நாளை‌ இரவோடு அவன் கிளம்பி விட்டால் தொல்லை தீர்ந்தது.

‘அவன் உயிரை காப்பாத்தினது மட்டுமில்லாம தங்கவும் இடம் கோடுத்து மூனு வேளை சாப்பாடும்‌ கொடுத்து என் வேலைக்கும் லீவ் போட்டு.. அப்பப்பா! இவ்ளோ உதவி பண்ணியிருக்கோமே ஒரு தேங்க்ஸ் இல்லை.

எப்போ பாரு முகத்தை உர்ருனு வைச்சிக்கிட்டு நமக்கே ஆர்டர் போட்டுட்டு இருக்கான். மான்ஸ்டர், மான்ஸ்டர்.’ அவனை வாய் விட்டே திட்டிக் கொண்டிருந்தாள்.

நல்ல மழை வேறு. அதில் இன்னும் குளிர் அதிகமாக கால்களை குறுக்கி அமர்ந்தவாறு காத்திருந்தாள் சிந்துவின் வருகைக்காக.

“எந்த கோட்டையை பிடிக்கணும்?” அந்த குரலில் தூக்கி வாரிப்போட திரும்பினாள். அங்கே கையில் காபி கப்புடன் நின்றிருந்தான் ருத்ரன்.

அவனை கண்டதுமே அவள் மூச்சு தடை பட்டது. அது வழமையான ஒன்று தான். அவள் மருண்ட பார்வையிலேயே அப்பட்டமாக தெரிந்தது. அவள் நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை

ஒரு காஃபி கப்பை அவள் புறம் நீட்ட, அவளது இதயத்தின் ‘லப்டப்’ ஓசை ஸ்டெதஸ்கோப் இல்லாமலே மிக துல்லியமாக கேட்பதாக உணர்ந்தாள்.

தான் கண் முன்னே காண்பது கனவா? நனவா? அந்தக் குளிரிலும் அவளுக்கு வியர்த்தது.
இவன் எப்போது சமையலறைக்குள் சென்றான்? அவள் அதை கவனிக்கவே இல்லையே. எப்போதும் போல அவன் அருகில் அவளுக்கு வார்த்தை வரவில்லை. காலை முதல் தேவைக்கு மட்டுமே அவளிடம் பேசினான். அவளுக்கு அதை குடிக்கவும் பயமாக இருந்தது‌.

காஃபியையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வேளை காஃபியில் மயக்க மருந்து எதுவும் கலந்திருப்பானோ?

“என்ன மயக்க மருந்து எதுவும் கலந்திருப்பேன்னு நெனச்சு குடிக்க பயப்படறீயா?”

தான் நினைத்ததை அப்படியே ஒப்பிக்கும் அவனை பார்த்ததும் இதயம் ஒரு முறை அதிர்ந்தது. அவன் அவளது ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிக்கிறான்.

“தேவையில்லாத பயம். குடி” என்றான்.

“அ.. அப்படி இல்லை. உங்களுக்கு தான் அடிபட்டிருக்கே கேட்டிருந்தா நானே செய்து கொடுத்திருப்பேனே. அதான்.” என்று வார்த்தைகளை கோர்த்து சமாளிக்க முயல,

“எது காலையில கொடுத்தியே அது காஃபியா? ஹாட் வாட்டர்னு நெனச்சேன். இதை குடி அதை விட இது எவ்ளோ பெட்டர்னு உனக்கே தெரியும்.” என்றான் கேலிக்குரலில்.

அவளது வேலையில் யாரும் குறை காண்பது அவளுக்கு பிடிக்காது. அவன் யார்? என்ன என்பதை அக்கணம் மறந்தவள் அவனை முறைத்தாள்.

“வாட்? என் காஃபி உங்களுக்கு ஹாட் வாட்டரா? எங்க அப்பா என் காஃபி தான் பெஸ்ட் காபினு சொல்லுவாரு. அவரே அப்படி சொல்லும் போது உங்களுக்கென்ன? ஹும்.. அப்போ காலையிலயும் நீங்களே காஃபி போட்டு குடிக்க வேண்டியது தானே?” என்று கூறி விட்டு சட்டென நாக்கை கடித்தாள்.

அப்போது தான் அவன் தன்னையே பார்த்தவாறு இருப்பதை உணர்ந்தாள். அவனை கோபப்படுத்தி விட்டோமோ? அவனது கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாதவளாய் தலை குனிந்தாள்.

“சாரி.. ஏதோ தெரியாம பேசிட்டேன்.”

“நல்லா தான் பேசுற. ” அவன் குரலில் கோபமில்லை.

அவள் தன்னை மறந்து யோசனையாக அவனை பார்த்தாள். அவனுக்கும் புரிந்ததோ என்னவோ?

“மீண்டும் எந்த கோட்டையை பிடிக்கணும்?” அவளுடைய மனநிலையை இயல்பாக்க முயன்றான். அவன் இயல்புக்கு மீறிய ஓர் மென்மை அவன் குரலில் தெரிந்தது.

அவனது குரல் அவளுக்கு ஏனோ நிம்மதியை தந்தது.

“சொன்னா மட்டும் அந்தக் கோட்டையை பிடிக்க ஹெல்ப் பண்ணவா போறீங்க?” .

அவன் தன் காஃபி கப்பை காட்டி “இந்த காஃபி மேல் சத்தியம் செய்யட்டுமா?” மென்புன்னகையுடன்.

‘அட சிரிக்கிறானே’ அவள் அதிசயமாய் அவனை பார்க்கிறாள்.அவன்‌ அவளை சுவாரஸ்யமாக பார்க்கிறான். அவனது பார்வையில் அவளுள் ஒரு வித வித்தியாசமான உணர்வை தோற்றுவிக்க, மருண்ட பார்வையை அவன் மீது செலுத்தினான். அவளது மருண்ட பார்வை அவனுள் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியது.

“அனிவேய்ஸ் தேங்க்ஸ்.” என்றான்.

“ஆங்.. எதுக்கு?” புரியாமல் கேட்டாள்.

“ஃபார் எவ்ரித்திங்” சின்ன சிரிப்பினூடே பதில் வந்தது.

இத்தனை நேரம் ஒரு நன்றி சொல்லவில்லை. ஒரு புன்னகையில்லை என அவனிடம் பல குறை கண்டவளுக்கு இப்போது அவன் நன்றி சொல்கிறான். ஆனால் எதற்கு என்று கேட்கிறாள்? அவளுக்கே அவள் மனநிலை என்னவென்று புரியவில்லை.

அவளுக்குமே இந்த ருத்ரன் புதிது தான். நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை. அவனுக்கு இப்படி கூட பேச முடியுமா? அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சில நொடிக்கு முன் ‘மான்ஸ்டர், ரௌடி’ என்றெல்லாம் இவனை திட்டித் தீர்த்தவள் இப்போது அவனுடன் இலகுவாக பேசுகிறாள்.
அவனது இயல்பான பேச்சு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன் பின் அவனோடு சாதாரணமாக பேசுவது கஷ்டமாக தோன்றவில்லை. முன்பு போல் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவுமில்லை. அவளுக்கே ஆச்சரியம் தான். இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டனர். ஆனால் மறந்தும் அன்றைய சம்பவத்தை பற்றி எதுவும் பேசவில்லை.

இவளுக்குமே அந்த சம்பவமோ? அவன் யார்? என்ன ? அவனது பின்புலம் பற்றி எதுவும் கேட்கத் தோன்றவுமில்லை. அவனும் அவளை பற்றி எதுவும்‌ கூறவில்லை. பொதுவான விஷயங்களையே பரிமாறிக் கொண்டனர். ஒரு காஃபி கப்புடன் முந்தைய தயக்கம், பயம் நீங்கி ஓர்‌ புரிதல் துவங்கியது.

****

மறுநாள்.

முன்தின இரவு அவளுக்கும் ருத்ரனுக்குமான உரையாடலை பற்றி சிந்துவிடமும் கூற,

“என்ன? அந்த மொட்டை மான்ஸ்டர் உங்கிட்ட சிரிச்சு பேசினானா?” உண்மையிலேயே அதிர்ந்தாள் அவள்.

“ச்சேச்சே..அவர் மான்ஸ்டர் இல்லை.” என்றாள் மெல்லிய குரலில்.

“ஓகோ.. தாம்ஸ் மேடம் ஒரே நாளில் அந்தளவுக்கு போயிட்டீங்களா? இருந்தாலும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கனும் இதுல என்ன உள்குத்து இருக்கோ?” என்றாள் நக்கலாக.

“அப்படி எல்லாம் இருக்காது சிந்து. நாம உயிரைக் காப்பாத்தி இருக்கோம். அவரால் எந்த விதத்திலும் நமக்கு பிரச்சினை வராது.” தாமிராவின் உறுதியான பதிலில் அவளை சந்தேகமாக பார்த்து வைத்தாள் சிந்து‌.

“ஆனால் அவன் யார் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டாங்குறதும் உனக்கு தெரியும்‌.” சிந்துவின் கூற்றில் அவளிதயம் வலித்தது.

ஒரு டாக்டரா உன் கடமையை நீ செஞ்சுட்ட. எது எப்படியோ இன்னைக்கு நைட் இதுக்கு ஒரு முடிவு கிடைச்சிடும்னு நெனைக்கிறேன். என்று நீண்ட பெருமூச்சுடன் மருத்துவமனை கிளம்புவதற்காக வாசல்படிவரை வந்தவள், தாமிராவின் பக்கம் திரும்பினாள்.

“உன்‌ அப்பா யாருங்குறதை மறந்துடாதே.” அத்தோடு கிளம்பி விட்டாள்.

தாமிரா தான் பாவம் வெகுவாக குழம்பிப் போயிருந்தாள். ஆனாலும்‌ தன் மீது தவறில்லை. மருத்துவராக தன் கடமையை தான் செய்தோமென தனக்கு தானே ஒரு நியாயத்தை கற்பித்துக் கொண்டாள். அன்று ருத்ரனை மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் அவனுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும் என்ற பயத்தில் தான் வீட்டுக்கு அழைத்து வந்தாள். அது தவறு தானே? அப்போது அவள் அதைப்பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.

***
முன்தின பேச்சு வார்த்தைக்கு பின் தாமிராவுக்கும் ருத்ரனுக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. அன்றைய நாளும் அதே போலவே அமைந்தது. ஆனால் இன்றிரவோடு அவன் சென்று விடுவான்.

அவள் என்ன மாதிரி உணர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. அவனை துர்த்துவதிலேயே குறியாக இருந்தவளுக்கு தற்போதைய மனநிலை அதற்கு முற்றிலும் எதிர்மாறானது. இது மட்டும் சிந்துவுக்கு தெரிந்தது அவ்வளவு தான். அத்தோடு அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மழையின் காரணமாக தான் வர தாமதமாகும் என தாமிராவுக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் சிந்து. எனவே அவளும் ருந்ரனுமாக இரவுணவை முடித்துக் கொண்டனர். பின் அவனது கட்டை பிரித்து காயத்திற்கு மீண்டும் மருந்திட்டாள்.

அப்போது அந்த அறைச் சுவரில் மாட்டியிருந்த தாமிராவின் குடும்பப் படத்தை கண்டான்.

“அது தான் உன் ஃபேமிலியா?”

“ஆமா. இது என் அப்பா, அம்மா, இவன் என்னோட ட்வின் ப்ரதர் தருண் அப்புறம் என் தங்கை அக்ஷரா.” என்றாள் உற்சாகமாக. அவள் குடும்பத்தை பற்றி சொல்லும்போதே அவளை அறியாமலே அத்தனை சந்தோஷம்.

“ஓ..” என்றதுடன் பேச்சை நிறுத்தினான்.

அதையடுத்து அவன் குடும்பம் பற்றி அறியும் நோக்கில் அவனிடம் கேட்க, அவன் முகத்தில் கடுமை பரவியது.

“அது உனக்கு தேவையில்லாத விஷயம்.” அத்தோடு அறைக்குள் நுழைந்து விட்டான். அந்த குரலில் அந்நியத் தன்மை தெரிந்தது. இத்தனை நேரம் இருந்த இலகுத் தன்மை மறைய அவனது இந்தப் பேச்சில் அவள் முகம் விழுந்து விட்டது.

அங்கிருந்து அமைதியாக வெளியேறியவள் அதே பிரம்பு நாற்காலியில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.

‘நீ மான்ஸ்டரே தான்டா. உனக்காக சப்போர்ட் பண்ணேன் பாரு என்னைச் சொல்லனும். எந்த நேர்த்தில எப்படி மாறுவான்னே தெரியலையே’ அவனை மனதால் திட்டிக் கொண்டிருந்தாள்.

ஒரு வேளை அவனுக்கு யாருமில்லையோ? அதனால் தான் குடும்பத்தை பற்றி கேட்டதும் கோப்பட்டானோ? அப்போது தான் அவளுக்கு அந்தக் குழந்தை அனன்யாவின் ஞாபகம் வந்தது. அது அவனது குழந்தை தானே? அவள் முகம் மீண்டும் வாடிவிட்டது.

திடீரேன அறையை விட்டு வெளியே வந்தான் ருத்ரன். நேரே அவளிடம் வந்து,

“இங்கிருந்து நாம கிளம்பனும். ஹரி அப்.” என்றான்.

“என்ன? நாம கிளம்பனுமா? ஏன்? எங்கே?” கேள்விகளோடு புரியாமல் அவனை பார்த்தாள்.

அவளது கேள்வியை அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவனோ அவள் வீட்டின் கேட்டருகே சென்றான். மெதுவாக கேட்டை திறந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு திரும்பினான். அவன் கையில் ஓர் பை இருந்தது.

உள்ளே வந்தவன் அந்தப் பையை திறந்தான். அதில் இன்னொரு துப்பாக்கியும் செல்ஃபோன் ஒன்றும் அவனுக்கான ஓர் உடையும் இருந்தது. அவன் கைகளில் துப்பாக்கியை கண்டதும் அவள் அதிர்ந்தாள். அச்சத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் திரும்பினான். அவன் முகம் பயங்கரமாக மாறியிருந்தது.

“ஹரி அப்” என்றான் கட்டளையாக.

“எ..எங்கே.. எ..எதுக்கு?” திக்கித் திணறினாள்.

“சொன்தை செய்.” அது அவனே இல்லை. ஓர் ராட்சசன். ஓர் அரக்கன்.

அவள் உதடுகள் பயத்தில் நடுங்க, அவள் முகம் வியர்த்திருந்தது. அதை அவனும் கண்டான். அவளருகில் நெருங்க அவள் இதயம் வேகமாக துடித்தது.

அவள் கைகளை பிடித்து வெளியே இழுத்துச் சென்று அந்த வீட்டின் சுற்று மதில் அருகே போடப்பட்டிருந்த பெஞ்சின் மீது அவளை ஏறச்செய்து தானும் ஏறினான். தெருவின் இரு முனைகளையும் பார்க்குமாறு கட்டளையிட அப்போது தான் அதை கண்டாள்.

அந்த வீட்டை தள்ளி தெருவின் முனை இரண்டிலும் துப்பாக்கி முளைத்த கையோடு பலர் இருப்பதை கண்டாள். அவர்கள் ஒவ்வொரு வீடாக ஏறியிறங்குவதையும் பார்த்தாள். அவளுக்கு புரிந்து விட்டது. இவனை தேடி தான் வந்திருப்பார்கள் என்று. அவள் அவனை கேள்வியாக நோக்கினாள்.

“சீக்கிரம் வா.” என்றான் அவ்வளவு தான். அந்த வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தபடி நோட்டம் விட்டுக் கொண்டிருக்க அவள் கால்கள் தாமாக வீட்டுக்குள் ஓடியது. அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்க தோன்றவில்லை உள்ளே சென்றவள் அவள் அணிந்திருந்த ஆடைக்கு மேலே கிடைத்த ஸ்வெட்டரையும் போட்டுக் கொண்டாள்.

திடீரென உள்ளே நுழைந்தவன் வீட்டின் கதவு ஜன்னல்களை அடைத்தவன் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டான். இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என புரியாமல் பார்க்க, அடுத்த கணமே அவள் கைகளை அழுந்தப் பற்றியவன் மெதுவாக வீட்டின் புறத்துக்கு சென்றான்.

ஒரு துப்பாக்கியை கையில் எடுத்தான். அவளை விட்டு முன்னேறி வீட்டின் பின்புறமிருந்த கேட்டின் வழியே மெதுவாக வெளியேறி அங்கு யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டவன் அவளை வருமாறு சைகை செய்ய அவளும் வெளியேறினாள்.

அன்றைய சம்பவமே அவளுக்கு அதீத பயத்தை கொடுத்திருந்தது. மீண்டும் அது போன்றதொரு நிகழ்வா? அதை நினைக்கும் போதே அவளுக்கு இதயம்‌ தூக்கி‌வாரிப்‌ போட்டது.

அதற்கெல்லாம் அவன் இடம் கொடுக்கவில்லை. தாமிராவின் கைகளை பற்றியவன் வேகமாக ஓடினான். ஏன்? எங்கு? எதற்கு? அவளுக்கு எதுவும் தெரியவில்லை. அவளும் ஓடினாள்.

‘ஓ மை காட் சிந்து.’ அவளுக்கு அப்போது தான் சிந்துவின் ஞாபகம் வர, ‘

“சி.. சிந்து.. சிந்து.. அவ இப்போ வந்துருவாளே?” அவளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என‌ அஞ்சி பதறினாள். அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே ஓடுவதை நிறுத்தி விட்டு தன் கையை உருவ அவன் முறைத்தான்.

இம்முறை அந்த முறைப்புக்கெல்லாம் அவள் பயப்படவில்லை. அழுத்தமாக நின்றிருந்தாள்.

“அவளுக்கு எந்த பிரச்சனையும் வராது. ஓகே. இப்போ வா.” கடுப்புடன் கத்த, அதற்குள் அவர்கள் நின்றிருந்த பகுதியை நோக்கி மனிதர்களின் ‘தடதட’ காலடிச் சத்தம் கேட்டது.

அதற்கு மேல் அவளுடம் வாதாட விரும்பவில்லை. அவளை தரதரவென இழுத்துக் கொண்டு அந்த மலைக்காட்டுப் பாதையை நோக்கி ஓடினான்.