Ithayam – 2

அத்தியாயம் – 2

மறுநாள் ஒரு திருமண வீட்டு விஷேசத்திற்கு சென்ற சிவரத்தினம் – காமாட்சி இருவரும் ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக உயிர் இழந்தது ரோஹித் குடும்பத்திற்கு பேரிடியாக அமைந்தது. அவளுக்குமே இது எதிர்ப்பாராத அதிர்ச்சி தான்.

அவர்களின் இறந்த விஷயமறிந்ததும் வேகமாக வந்து சேர்ந்த ரோஹித் தன் மகள் இருந்த நிலையைக் கண்டு பயந்து தான் போனான். வீடு நிறைய உறவுனர்களின் கூட்டம் குவிந்து இருக்க, “தாத்தா – பாட்டி எழுந்திருங்க” என்று கதறிய அபூர்வாவை தூக்கி தோளோடு சேர்த்து அணைத்து கொண்டாள் மதுமிதா.

“அம்மா தாத்தாவுக்கும் பாட்டிக்கும் என்மேல் என்னம்மா கோபம். நான் அவங்க சொன்ன மாதிரிதானே நடந்துகிட்டேன். அப்புறம் ஏன் என்னைவிட்டுட்டு போனாங்க” என்று கதறிய அபூர்வாவை சமாதானப்படுத்த முடியாமல் அங்கிருந்தவர்கள் திணறினார்.

அவளின் புலம்பலை கேட்டிருந்தால் அவளுக்குள் இருக்கும் வலி மற்றவருக்கு தெரிந்து இருக்கும். ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அங்கு யாருமில்லை.

அவளுடன் சேர்ந்து அழுத மதுவோ, “என் தங்கத்து மேல யாருக்காவது கோபம் வருமா? அவங்க காலம் முடிந்துவிட்டது அபூர்வா” என்று அவளை சாமதானம் செய்ய முயற்சித்து அதில் தோல்வியை தழுவினர்.

இறுதியாக அவர்களின் சடலத்தை எடுத்து செல்லவிடாமல் கதறியவளுக்கு மயக்க ஊசி போட்டு தூங்க வைத்துவிட்டு அவர்கள் மற்ற கடமைகளை முடித்தனர்.

அவர்களுக்கு அனைத்துவிதமான கடமைகளையும் முறையாக முன் நின்று முடித்த ரோஹித்திற்கு மனம் வலித்தது. எந்தவொரு பிரச்சனை வந்தாலும் தனக்கு பக்கபலமாக நிற்கும் அவர்கள் இருவரும் இன்று இறைவனடி சேர்ந்ததை எண்ணி அவன் சோகத்தில் அமர்ந்திருந்தான்.

இன்னொரு புறம் தன் வாழ்க்கையை தனக்கு மீட்டு கொடுத்தவர் இப்போது உயிரோடு இல்லையே என்று கண்கலங்கியது மதுமிதாவிற்கு!

அவர்கள் மட்டும் இன்று ரஞ்சித் – கீர்த்தி, ஜீவா – கயல்விழி எல்லோருக்குமே அவர்களின் இழப்பு பெரும் இடியாக இருந்தது. ஆனால் வாழ்க்கையில் சில இழப்புகளை தாங்கி நிற்கவும் பழக வேண்டும் என்ற நிதர்சனம் உணர்ந்து அவரவர் வேலையை கவனிக்க தொடங்கினர்.

கிட்டதட்ட பத்து நாட்களுக்கு மேலாக தூக்கம் இல்லாமல் தவித்த மகளைக் கண்டு அந்த குடும்பமே கண்ணீர் விட்டது. அவளை ஒருவாறு சாமளித்து மீண்டும் இயல்பு நிலைக்கு அழைத்து வருவதற்குள் ஒரு மாதம் சென்று மறைந்தது.

மற்றவர்களைபோல அபூர்வாவினால் அவர்களின் இழைப்பை ஏற்றுகொள்ள முடியாமல் தடுமாறி போனாள் பதினேழு வயது பாவை. எப்போதும் அவர்களின் நினைவில் அறைக்குள் அடைந்து கிடக்கும் அவளை சமாளிக்க முடியாமல் தடுமாறியது அவளின் குடும்பம்.

“அபூர்வா போனவங்க திரும்ப வரப்போவது இல்லை. இனிமேல் பாட்டி – தாத்தாவின் நினைவுகளை மட்டும் மனதில் நிறுத்தி மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கு” என்றார் மதுமிதா.

அவள் மெளனமாக இருப்பதைக் கண்டு, “அபூர்வா” என்று ரோஹித் அழைக்க எழுந்து வந்து தந்தையின் மடியில் படுத்தாள். அவளின் கூந்தலை மெல்ல வருடிவிட்டார்.

“இனிமேல் இங்கே இருக்க முடியாதும்மா. நம்ம மதுரை போலாம். அங்கே உனக்கு பிடித்த படிப்பிற்கு சீட் எல்லாமே ரெடி பண்ணிட்டேன்” என்று அவர் பேச்சை திசை திருப்பினார்.
“ம்ம் சரிப்பா” என்றவள் அதன்பிறகு வேறு எதைபற்றியும் பேசவில்லை.

மற்றவர்கள் ஊருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க தன் அறைக்குள் நுழைந்தவள் தனக்கு வேண்டும் என்ற பொருட்களை எடுத்து வைக்கும்போது அவளின் அலமாரியில் இருந்த கிப்ட் அனைத்தையும் எடுத்து பார்த்தவள் அதை தன்னோடு எடுத்து செல்ல மனம் இல்லாமல் அங்கேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். மூன்று குடும்பமும் இரண்டு கார்களில் மதுரை நோக்கி பயணமாகினர்.

அபூர்வா மதுரை வந்து சேர்ந்து இன்றுடன் ஒரு மாதம் கடந்திருந்தது.

கிழக்கு வானம் செவ்வானமாக சிவக்க தொடங்கிய வேளையில் குயில் கூவென்று கூவி கதிரவனின் வரவேற்றது. மரங்களின் கூடுகளில் அடைந்து கிடந்த பறவைகள் அனைத்தும் சிறகு விரித்து வானில் பறந்தது. வெள்ளிநிற மேகங்கள் கூட்டம் கூட்டமாக எங்கோ சென்றது.

வானில் சூரிய வெளிச்சம் பரவுவதை கண்டு புன்னகை பூக்கும் தாமரை மலர்போல மலர்ந்தது அவளின் பளிங்கு முகம். அன்று அவளின் கல்லூரி முதல்நாள்!

லைட் புளூ கலர் சுடிதாரில் அளவான ஒப்பனையில் அழகாக இருந்த தன் முகத்தை கண்டு சில நிமிடம் அமைதியாக நின்ற அபூர்வாவின் முகத்தில் நிலையான புன்னகை படர்ந்திருந்தது.

“ம்ம் நான் கூட அழகாக இருக்கேனே” என்று தனக்குதானே புகழ்ந்தவள் தன் பேக்கை எடுத்துகொண்டு கீழே இறங்கிட எங்கிருந்தோ கேட்ட பாடலில் மனதைத் தொலைத்தவள் தானும் பாடலை முணுமுணுக்க தொடங்கினாள்.

“தாய்மடி தருகின்ற அரவணைப்பு உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு..

தேய்பிறை போல் வரும் நககணுக்கள் வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்..

செல்போன் சிணுங்கிட குவிக்கின்ற கவனம் அன்பே அன்பே நீதானே..

பிடித்ததும் தருகின்ற பரிசு பொருளும் அன்பே அன்பே நீதானே..
எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீதானே..” அவள் பாடியபடி இறங்கி வருவதைக் கண்ட ரோஹித்திற்கு மனம் நிறைந்தது.

அவளை இந்த மாதிரி புன்னகையுடன் பார்க்க மாட்டோமா? என்று ஏங்கியது அவர் மட்டும் அறிந்த உண்மை. அவளை குற்றாலத்தில் இருந்து அழைத்து வரும்போது இருந்த அபூர்வாவிற்கும் இப்போது இருப்பவளுக்கும் இடையே நிறைய மாற்றங்கள் வெளிப்படையாகவே தெரிந்தது.

அப்போது தான் ஜாக்கிங் முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த ரோஹித் மகளிடம் தெரிந்த மாற்றங்களை ரசித்தபடி சோபாவில் அமர்ந்து பேப்பர் படிக்க தொடங்கிவிடவே தன் தாயை தேடிச் சென்றான் சக்தி.

“அம்மா” என்ற அழைப்புடன் சமையலறைக்குள் நுழைந்தவனைக் கண்டு, “என்னடா விஷயம்” என்றார் மதுமிதா தன் வேலையை தொடர்ந்தபடி.

“எனக்கு ஒரு கப் டீ போட்டு கொடுங்க” என்றவன் சமையல் மேடையில் எறியமர, “நீ முதலில் போய் குளிச்சிட்டு ஸ்கூல் கிளம்பும் வழியைப் பாரு” என்று அவனை அங்கிருந்து அனுப்புவதில் குறியாக இருந்தார்.

“அதெல்லாம் முடியாது. எனக்கு இப்போ டீ வேண்டும்” என்று அடம்பிடித்தான் மகன்.
“முடியாது” என்று கண்டிப்புடன் கூறிய மது தன் வேலையில் கவனமாக இருக்க கண்டு, “எனக்கு இப்போ டீ போட்டு தர முடியுமா? முடியாதா? சக்தி தாயிடம் ஒரு கப் டீக்காக சண்டையிட்டு சத்தம் ஹால் வரை கேட்டது.

கல்லூரிக்கு தயாராகி கீழே வந்த அபூர்வாவின் காதுகளில் விழவே, “இவனோட தினமும் இதே வேலையாக போச்சு” என்றவள் சமையலறை நோக்கி சென்றாள்.

தமக்கை சமையலறைக்குள் நுழைவதைக் கண்டவுடன், “நீங்க ஒரு ஆளென்று உங்களிடம் கேட்டேன் பாருங்க என்னை சொல்லணும்” என்று சலித்துகொண்ட சக்தி, “அக்கா ஸ்டாராங்க ஒரு கப் டீ” என்றான்.
மதுமிதா மகள் வந்ததும் நிம்மதியடைந்தவராக, “இவனை என்னன்னு கேளு” என்றார்.

“அம்மா நான் அவனுக்கு டீ போட்டு தருகிறேன்” என்றவள் டீ போடவே, “என் அக்கான்னா அக்காதான்” அவளின் தாடையைப் பிடித்து செல்லம் கொஞ்சினான் சக்தி.

அவள் புன்னகையுடன் தலையசைத்தபடி, “அதெல்லாம் சரி. இந்த வருடம் பிளஸ் ஒன் ஞாபகம் இருக்கா சக்தி. நீ போய் குளிச்சிட்டு வா. நான் டீ போட்டு வைக்கிறேன்” என்றதும் மறுப்பு சொல்லாமல் எழுந்து சென்றவனைக் கண்ட மதுமிதா ஆவென்று வாயைப் பிளந்தார்.

தமக்கையின் பேச்சிற்கு மறுப்பு சொல்லாமல் எழுந்து சென்றது தன் மகனா என்ற சந்தேகம் கூட அவரின் மனதில் எழுந்தது.

தன்னருகே நின்ற மகளிடம், “என்ன அபூர்வா இது அதிசயமாக இருக்கு. நானும் இந்நேரம் அதையேதான் சொன்னேன் காதில் வாங்கினானா? இப்போ பாரு நீ சொன்னதும் அமைதியாக போகிறானே” ஆச்சரியத்துடன் விழி விரிய கேட்டார்.

“அவனுக்கு தேவை ஒரு கப் டீ போட்டு தருகிறேன் இந்த வேலையை செய் என்றாலே அவன் மறுப்பு சொல்லாமல் செய்வான். அப்படிபட்டவனிடம் உங்களோட அதட்டல், உருட்டல் மிரட்டல் எல்லாம் வேலைக்கே ஆகாது அம்மா” என்றாள் மகள் சிரிப்புடன்.

தாத்தா பாட்டியின் இழப்பில் இருந்து மீள முடியாமல் தவித்தவளை ஏதேதோ பேசி இயல்பு நிலைக்கு திருப்பிய பெருமை சிறியவர்களையே சேரும்.
அபூர்வாவிற்கு இது கல்லூரியின் முதல் வருடம். பி. ஆர்ச் படிப்பை விரும்பி தேர்வு செய்தாள். இன்று கல்லூரியின் முதல் நாள். இவளுக்கு அடுத்து பிறந்தவன் சக்தி. இவளைவிட இரண்டு வருடம் சிறியவன். இந்த வருடம் பிளஸ் ஒன். கம்பியூட்டர் குரூப் எடுத்திருக்கிறான். அக்கா என்றாலே அவனுக்கு உயிர் அவளுக்காக அனைத்தையும் செய்வான்.

ரோஹித், அபூர்வா, சக்தி மூவரும் சாப்பிட அமர, “ஹாய் அக்கா நானும் சாப்பிட வரவா” என்ற கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தான் ராகவ். ஜீவா கயல்விழியின் மகன்.

“வாடா நல்லவனே” என்றழைத்த அபூர்வாவின் அருகே வந்த ராகவ் தன் கையில் இருந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டி அவளோ திகைப்புடன் அவனைப் பார்த்தபடி, “என்னடா பூங்கொத்து எல்லாம் கொண்டு வந்திருக்கிற என்ன விஷயம்” என்று புன்னகையுடன் விசாரித்தவள் அவனுக்கும் ஒரு தட்டை எடுத்து வைக்க மது அவனுக்கும் பரிமாறினாள்.

“நீங்க இன்னைக்கு முதல்நாள் காலேஜ் போறீங்க இல்ல அதன் விஷ் பண்ண வந்தேன்” என்றவனை நிமிர்ந்து பார்த்த சக்தி, ‘நிஜமாவா’ என்று கேட்க அவனும் மேலும் கீழும் தலையை ஆட்டினான்.

அவனை சக்தி அவ்வளவு சீக்கிரத்தில் நம்ப மாட்டான். ராகவ் என்றாலே அவன் முதலில் சொல்வது பொய் என்பது ஊர் அறிந்த விஷயம் என்பதால், “உன்னைப் பார்த்தா அப்படி தெரியலையே” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான் சக்தி.

தமையன் தன்னை கண்டுகொண்டான் என்று உணர்ந்த ராகவ், “அபூர்வா அக்கா எங்களை எல்லாம் விட்டுட்டு காலேஜ் போகிறோம் என்ற எண்ணத்தில் உங்க இஷ்டத்துக்கு சைட் எல்லாம் அடிச்சீங்க நான் மனுஷனாக இருக்க மாட்டேன்” என்று ஆதங்கத்துடன் பொங்கிய தம்பியின் தலையில் தட்டினாள் அபூர்வா.

ரோஹித் மதுமிதா சக்தி மூவரும் அவளை புரியாத பார்வை பார்த்து வைத்தனர். அவளுக்கு ஏன் அப்படியொரு கோபம் வந்ததென்று அவளுக்கு புரியவில்லை.

ஆனால் ஏனோ அவன் அப்படி சொன்னதும் தன்னை கட்டுபடுத்த முடியாமல் கோபத்தைக் காட்டிவிட்டாள். அவள் அதே சிந்தனையோடு சாப்பிடாமல் அமர்ந்திருக்க ராகவ் குரல் அவளை நடப்பிற்கு இழுத்து வந்தது.

“என்னக்கா பேசிட்டே இருக்கும்போது கையெல்லாம் வைக்கிற. இதெல்லாம் நல்லது இல்ல” என்று வடிவேல் பாணியில் கூறியவனை கண்டு,

“உனக்கு ஏன்டா இப்படியெல்லாம் புத்தி போகுது.. நான் காலேஜ்க்கு படிக்கத்தான் போறேன். கண்டவனையும் சைட் அடிக்க போகல” என்று நொடியில் கோபத்துடன் கூறியவளை கண்ட ரோஹித்திற்கு மகளின் இந்த பேச்சு சந்தோஷத்தை கொடுத்தது.

“ஏன்டா லூசு நீ இங்கேயா இருக்கிற. இன்னைக்கு டென்த் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு பக்கி. இன்னும் கிளம்பாமல் இங்கே என்ன பண்ற” கோபத்துடன் கத்திக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த ரக்சிதாவைக் கண்ட ராகவ் பேயறைந்தவன் போல திருதிருவென்று விழித்தான்.

“அக்கா ரக்சிகிட்ட வசமாக மாட்டிகிட்டான்” என்று சிரித்த தம்பியை பார்வையால் அடக்கிய அபூர்வா அங்கே நடப்பதை சுவாரசிமாக வேடிக்கைப் பார்க்க தொடங்கினாள்.

“ஐயோ வந்துட்டா. இனிமேல் நான் சாப்பிட்ட மாதிரிதான்” என்று ரக்சிதாவைக் கண்டு பயத்துடன் கூறிய ராகவ் அவசர அவசரமாக மூன்று பூரியை உள்ளே தள்ளினான்.

அவன் வேகமாக சாப்பிடுவதைக் கண்ட ரோஹித், “மெதுவாக சாப்பிடு அவளை நான் வெயிட் பண்ண சொல்றேன்” என்றார் புன்னகையுடன்.

அதற்குள் வீட்டிற்குள் வந்த ரக்சிதா, “எங்க வீட்டில் கொட்டிகிட்டு வந்தது பத்தாமல் இங்கேயும் கொட்டிகிறான் பாரு” என்று கோபத்தில் பொரிந்த ரக்சிதா அவனை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா என்று அங்கும் இங்கும் தேடினாள்.

அப்போது அவளை கடந்து சென்ற மதுவின் கையில் இருந்த குழம்பு கரண்டியைப் பிடிக்கிகொண்டு ராகவை நோக்கி செல்ல, “அடியேய் கை கரண்டியை கொடு. எல்லோருக்கும் குழம்பு ஊத்தணும்”என்று அவளின் பின்னோடு வந்தார் மதுமிதா.

“இன்னும் கிளம்பாமல் இங்கே என்னடா பண்ற” என்று கோபத்தில் காளியாக அவதாரமெடுத்து நின்ற ரக்சிதா வெறும் யாரும் இல்லை. ரஞ்சித் – கீர்த்தியின் தவபுதல்வி.

“ரக்சிதா பிளீஸ் பசி உயிர் போகுதுடி” அவன் கெஞ்ச, “அதெல்லாம் இல்லடி. நீ அவனை நாலு போடு அப்போதான் சீக்கிரம் கிளம்புவான். இல்ல இந்த வருடம் முழுக்க நீதான் லேட்டாக கிளம்பணும் ஞாபகத்தில் வெச்சுக்கோ” என்று தம்பியை மாட்டிவிட்டு கைகழுவிகொண்டு எழுந்தான்.

தன்னை மாட்டிவிட்ட தமையனை முறைத்த ராகவ், ‘துரோகி என்னை மாட்டிவிட உனக்கு வேற ஆளே கிடைக்கலயா’ என்று மனதிற்குள் புலம்பிட, “இன்னும் இதே டைலாக்கை எத்தனை முறை சொல்வ” அவள் அவனை அடிக்க துரத்த தட்டை கையில் தூக்கிக்கொண்டு ஓடினான்.

“பெரியம்மா இந்த குண்டம்மா என்னை இங்கே நிம்மதியாக சாப்பிட விடல. நான் வீட்டுக்கு போறேன் தட்டு அப்புறம் அம்மாவிடம் கொடுக்க சொல்றேன்” என்றவன் தட்டுடன் ஓடிவிட்டான்.

மூவரும் செய்த செட்டையில் “ஐயோ இவனுங்க வெச்சு மேய்க்கும் அந்த கிளாஸ் டீச்சர் ரொம்ப பாவம்” தன்னை மறந்து வாய்விட்டு சிரித்தாள் அபூர்வா.

“உன்னையே கட்டி மேச்சு தண்ணி காட்டி இருக்கிற ஸ்கூல் டீச்சர்ஸ் அவங்க மூவரையும் சமாளிக்க மாட்டாங்களா அபூர்வா” என்று மகளை கிண்டலடித்தாள் மதுமிதா.

“அப்பா பாருங்கப்பா அம்மா என்னை கிண்டல் பண்றாங்க” என்று தாயை தந்தையிடம் போட்டு கொடுக்க, “விடுடா உங்க அம்மா இன்னைக்கு தானே கிண்டல் பண்றா” என்று மனையாளுக்கு சப்போர்ட் போட்ட தந்தையை முறைத்தபடி எழுந்து சென்றாள் மகள்.

ராகவ் – ரக்சிதா இருவரும் ஒரே வயதுடையவர்கள். அது மட்டும் இல்லாமல் இருவரும் சின்ன வயதில் இருந்தே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ராகவிற்கு ஒன்று என்றாலே ரக்சிதா விட்டுகொடுத்துவிடுவாள். அவளுக்கு என்னவேண்டும் என்றாலும் ராகவ் ஓடி ஓடி செய்வான். இருவருக்கும் சண்டை வந்தால் கூட நம்ம தலையிடவே முடியாது.

அவங்களா சண்டை போட்டுட்டு மிஞ்சி மிஞ்சி போன அஞ்சு நிமிஷம் கோபத்துடன் இருப்பாங்க. அதன்பிறகு வழக்கம்போல சிரிச்சு பேசி கடந்து போயிருவாங்க. ரக்சிதா பற்றி முழுவதும் அறிந்து வைத்திருப்பது ராகவ் மட்டுமே என்று சொன்னால் அது மிகையில்லை.

ராகவ் – ரக்சிதா சென்ற சில நொடியில், “அபூர்வா அக்கா ரக்சிதாவை பார்த்தீங்களா? என்னோட டிப்பனை எங்கேயோ தூக்கி ஒழிச்சு வெச்சுட்டா”என்று புகார் பத்திரம் வாசித்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள் சஞ்சனா. ரஞ்சித் – கீர்த்தியின் இரண்டாவது மகள். ரக்சிதாவை விட ஒரு வருடம் சிறியவள்.

“இப்போதான் ரக்சிதாவை கயல் சித்தி வீட்டில் பார்த்தேன்” அபூர்வா வேண்டும் என்றே கூற, “அப்போ அது அக்கா வேலை இல்லையா? எல்லாம் அந்த பண்டாரம் ராகவின் வேலையா” என்றவள் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

‘இவங்க சண்டையை முடித்து இன்னைக்கு ஸ்கூல் போக மாட்டாங்க’ என்ற உண்மையை உணர்ந்த அபூர்வா சுதாரித்து கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.

ரோஹித் – மதுமிதா, ரஞ்சித் – கீர்த்தி மற்றும் ஜீவானந்தம் – கயல்விழி மூவரும் மதுரையில் ஒரே இடத்தில் வீட்டைக் கட்டிக்கொண்டு அங்கேயே தான் வசிக்கின்றனர். அவர்களை போலவே அவர்களின் பிள்ளைகளும் பாசமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றனர்

error: Content is protected !!