12
வாணி, மாதவன் இன்னும் வீடு திரும்பவில்ல. “அம்மா இன்னும் வரலை, மாதவன் எப்போ வருவான்?” ஷூவை கிழற்றிய படி பைரவ் கேட்க,
“ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு டைம். முக்கால்வாசி ஒன்பதுக்குள்ள”
“சரி ஓடு பிரெஷ் ஆகு, நானும் மாத்திட்டு வரேன்” துணி பையை அவளிடம் நீட்டி சொல்ல,
“ம்ம் ஓகே” அவள் படியேறினாள்.
“மாயா!”
நின்றவள் திரும்பி, ‘என்ன?’ என்று புருவங்களை உயர்த்தி பார்வையால் கேட்க,
“ஒரு லைட் பிங்க், டிரஸ் இருக்கும் அதை போட்டுக்கோ, மாதவனுக்கு வாங்கினதை அவன் ரூம்ல வச்சுடு”
“ஓகே”
உடைமாற்றி, சமயலறையில் சமைத்துக்கொண்டிருந்தான் பைரவ்.
“ஹோய்! எப்படி இருக்கு?” மாயா குரல் கேட்க , திரும்பியவன் முகம் மலர்ந்தது.
“வாவ்! சூப்பர் நல்லா இருக்கு” புன்னகைத்தவன், “உனக்கு கம்ஃபார்டபிளா இருக்கா?”
“ம்ம் ரொம்ப! ஆனா…”
“ஆனா?”
“உன் ஷர்ட் போட்டுக்க பிடிச்சுது…” சொன்னவள் டைனிங் டேபிளில் இருந்த சாக்லேட்டை எடுத்து இரண்டாக உடைத்து, ஒரு பாதியை அவனிடம் கொடுத்தாள்.
“அப்போ இந்த பேண்டுக்கு மேல அந்த ஷர்ட் போட்டுக்கோ”
“நிஜமா?”
“ம்ம்”
“ஹை!” என்றவள் அறைக்கு ஓடிவிட்டாள்.
இரவு உணவிற்கு சப்பாத்தி செய்ய மாவை பிசைய துவங்கினான்
“டோடொய்ங்” அவன் சட்டைக்கு மாறியிருந்தவள் முகத்தில் ஏனோ அவ்வளவு மகிழ்ச்சி.
“லூசு!” அவன் சிரித்துக்கொள்ள,
“என்ன நக்கலா?” முறைத்தவள், வெறும் சப்பாத்தி மாவை தின்றபடி மேடையில் அமர்ந்தாள்.
“வயத்தை வலிக்க போகுது, கொஞ்சம் இரு சமையல் ஆகிடும்” வேலையைத் தொடர்ந்தான்.
இரவு உடை ( பேண்ட், டிஷர்ட்) மேலே ஏப்ரான், அணிந்துகொண்டு அவன் சமையல் செய்யும் அழகு அவள் மனதில் பதிய,
“பைரவ்…”
“என்னமா?”
“அழகாத்தான் இருக்கே”
ஒருநொடி அவளை பார்த்தவன், “எதுக்கு ஐஸ்?” ஒற்றை புருவம் உயர்த்த,
“ஐஸ் இல்ல, அழகா தான் இருக்க…”
“என்ன இழுக்கறே?” சப்பாத்தி தேய்க்க கட்டையை எடுத்தான்.
“நான் இட்டு தரேன் நீ போட்டெடு” அவனிடமிருந்து வாங்கிகொண்டவள், சப்பாத்தி இடத்துவங்கினாள்.
“ஹே என்ன சொல்லவந்த சொல்லு” அவன் விடுவதாக இல்லை.
“விடேன்”
“பரவால்ல சொல்லு”
“என்னடா நீ ? பெருசா ஒன்னும் இல்ல, நீ சொன்ன ஏதாவது உன்மேல வருதான்னு பாத்தேன்” யதார்த்தமாய் சொல்லிக்கொண்டே வேலையில் ஈடுபட்டவள், அவன் முகம் கடுமையாகி தாடை இருகியதை கவனிக்கவில்லை.
“மாயா…” சற்று கடுமையாக மாறி இருந்தது அவன் குரல்.
“சொல்லு பாஸ்” குரலையே அவன் முக மாறுதலயோ அவள் உணரவில்லை.
“என்ன பேச்சு இது?” முறைத்தான்.
நிமிர்ந்தவள் சிரிக்க, அவனோ கோவமாக, “விளையாடாதே!” மிரட்டினான்.
“என்ன?” பூரி கட்டையை உயர்த்தி மிரட்டியவள்,
“நீ சொன்ன எதுவுமே எனக்கு ஏன் உன் கிட்ட தோணலைன்னு யோசிச்சேன் சொன்னேன் என்னன்ற?” மேலும் மிரட்ட,
“நான் உன் பிரென்ட்!” நினைவூட்ட,
“இருந்துட்டுப்போ!” அவள் கண்டுகொள்ள வில்லை.
“மாயா!”
“ஏய் என்ன இப்ப? தோணிச்சு சொன்னேன். உன்ன காதலிக்கிறேன்னு சொன்னேனா இல்ல வேற ஆசை வருதுன்னு சொன்னேனா? என்ன மெரட்டரே? அதுல எது வந்தாலும் ஓப்பனா சொல்லிடுவேன், உன் கிட்ட எனக்கென்ன தயக்கம்.
எதோ எல்லாரும் உன்னை இப்படியே படுத்துறாங்களே அப்படி உன்கிட்ட என்னதான் இருக்குனு பார்த்தேன்” தோளை குலுக்கியவள்,
“எனக்கு ஒன்னுமே தோணலை. அழகா இருக்கே, கிரீக் காட் மாதிரி முகம், கொஞ்சம் ஃபிட் பாடி… நீ அழகுன்னு தோணுது, நல்லவன், புத்திசாலி… அவ்ளோதான். ஆனா வேற ஒன்னும் ஏன் தோணலை” தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள்,
“ஒரு வேளை நான் பொண்ணே இல்லையோ?” குழப்பமாக விழிக்க,
அவள் தலையில் கொட்டுவைத்தவன், “போடி லூசு! பயந்துட்டேன், கேணைத்தனமா ஏதாவது யோசிச்சு குழப்பிக்காத வேலைய பார்.”
நிஜமாகவே பயந்துதான் போயிருந்தான். எதற்காகவும் அவள் நட்பை அவன் இழக்க தயாராயில்லை.
“பாஸ் ! “
“இப்போ என்னடா ?” அலுத்துக்கொண்டான்.
“நான் எப்படி இருக்கேன் ?”
“என்ன?” சப்பாத்தியை தணலில் வாட்ட துவங்கினான்.
“நான் எப்படி இருக்கேன், ஒரு பையனா… மேனா சொல்லு” அவளை பார்த்தான் , அவளோ சப்பாத்தியில் உலக வரைபடத்தில் இல்லாத வடிவத்தையெல்லாம் வரவழைத்து கொண்டிருந்தாள்.
“எதுக்கு கேட்கறே?” சப்பாத்தியை எடுத்தவன் “என்னடா இது? வட்டமா இட வராதா?” அவளை கேட்க,
“பிச்சுதானே சாப்பிட போறோம், அப்புறம் என்ன?” முறைக்க,
சிரித்துக்கொண்டவன், மௌனமாக,
“பைரவ் சொல்லு”
“என்ன ?”
“நான் கேட்டது” அவள் விடுவதாய் இல்லை போலும்.
“நான் உன்னை எப்படி… எதுக்கு இப்போ?” முறைத்தான்.
“என்னை யாருமே ப்ரொபோஸ் பண்ணலை , நீ சொன்னமாதிரியும் யாரும் என்கிட்டே நடந்துக்கலை… ஒருவேளை நான் யார் கண்ணுக்கும் பொண்ணா தெரியலையோ?” முகத்தில் மாறுதல் இல்லை என்றாலும் அவள் குரலில் எதோ ஒரு ஏக்கம்.
உணர்ந்துகொண்டான், ஆனால் என்ன பதில் தர என்று புரியவில்லை.
“பாக்கறவங்களுக்கெல்லாம் நம்ம மேல காதலோ, ஈப்போ வந்தா நிம்மதிதான் கெடும்”
“நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு, என்னை பார்த்தா பொண்ணா தெரியுதா இல்லையா ”
தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு. அலுப்பாய் மூச்சைவிட்டவன், அவளை கண் இமைக்காது சிலநொடி பார்க்க, அவளும் அவனை பார்க்க,
“எதாவது தோணுதா?” ஆர்வமாக கேட்டாள் .
“…”
“என்ன?”
“ரெண்டுமே தோணலை” மனதில் பட்டத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டான்.
“ஓஹ்” எனோ வருத்தமாய் உணர்ந்தாள்.
“ஆனா சத்தியமா பொண்ணாத்தான் தெரியுறே” சிரித்துவிட்டவன், அவளை நெருங்கி, அவள் கன்னங்களை இருகையாலும் தாங்கி பிடித்து,
“நீ ரொம்ப இன்னசென்ட் (வெகுளி) களையா இருக்க, கியூட்டா இருக்க, உன் மனசு ரொம்ப அழகு, நீயும்…” நெற்றியை முட்டியவன்,
“இந்தமாதிரி சந்தேகம் எல்லாம் வேண்டாம் சரியா? ப்ரோபோசல் வர்றது ஒன்னும் ஸ்டேட்டஸ் சிம்பல் இல்லை, யாரும் உன்னை இதுவரை காதலிக்கலைனா, இல்லை அப்படி பார்க்கலைன்னா…
உனக்குன்னு வரப்போறவன் எல்லாத்தையும் சேர்த்துவச்சு திணற திணற உன்னை லவ் பண்ணபோறாணு அர்த்தம். சோ இனிமே இந்த மாதிரி காம்ப்ளெக்ஸ் உனக்குள்ள வர கூடாது” அவன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
“உனக்கு என் மேல லவ் வந்தா சொல்வியா பைரவ், எனக்கு உன்மேல வந்தா சொல்றேன்”
அவள் கேள்வியில் அவனுள்ளே அதிர்வலைகள், அவள் கண்ணிலோ எந்த மாறுதலும் இல்லை, வெறும் கேள்வி மட்டுமே.
சிரித்தவன், “வந்தா கண்டிப்பா சொல்றேன். இப்போ சப்பாத்தி வருமா?”
”சூப்பரா வரும் பாரு!” , உற்சாகமாக வேலையை தொடர்ந்தாள்.
அவள் கேட்டதில் உள்ளர்த்தம் இருக்க வாய்ப்பே இல்லை, உணர்ந்தவன்,
“மாயா பேசறதுக்கு முன்னாடி யோசிக்கவே மாட்டேங்குறே”
“எதுக்கு யோசிக்கணும்?”
“இப்படி பொசுக்குன்னு கேட்டே, நான் பரவால்லை எல்லாருக்கும் இது புரியாது”
“யோசிச்சு யோசிச்சு பேசினா எப்படி பிரெண்டா இருக்க முடியும்?”
“சரிதான் ஆனாலும் ஒரு விஷயத்தை யோசிச்சு…” அவன் உதட்டிற்கு நேரே பூரி கட்டையை நீட்டி, அமைதியாகும் படி செய்கை செய்தவள்,
“மனசுல வச்சுக்கிட்டு அப்புறமா ஆற அமரலாம் என்னால சொல்ல முடியாது. தோணிச்சு கேட்டுட்டேன்”
“ஏனாம்?”
“பிகாஸ் நாளைக்கு இது எனக்கு நியாபகம் இருக்காதுடா” அவள் விழிக்க,
“சந்தோஷம்!” அதன் பிறகு பேச்சை வளர்க்க அவன் விரும்பாமல் வேலையை தொடர அவளோ அதை பொருட்படுத்தாது,
“பாஸ்”
“எஸ்”
“ஒன்னு யோசிச்சியா? நாம தூங்கணும்னா , படுத்துகிட்டு தூங்கரமாதிரி நடிக்கணும்”
“இதுல யோசிக்க என்ன இருக்கு?”
“இல்லடா ஒருவேளை காதல் வரணும்னா, வந்துருச்சுனு நெனச்சு நடிச்சா வந்துருமோ?” பூரிக்கட்டையை கன்னத்தில் தட்டியபடி அவள் யோசிக்க,
“நீ சப்பாத்தியே இடவேண்டாம். போ போய் டிவி பாரு”
“ஏன்?”
“நீ குழம்பி என்னையும் குழப்பி எதுக்கு இப்போ? மொதல்ல இப்போ காதலிக்கனும்னு என்ன அவசரம்?”
“ஏண்டா புத்திசாலித்தனமா ஒரு கேள்வி கேட்டா இப்படி சொல்றே?”
“மாயா…”
“எஸ் பாஸ்”
கிண்டல் புன்னகையுடன், “நான் மூணு எண்ணறதுக்குள்ள ஓடிடு இல்லை இந்த தோசை கல்லுமேல உட்கார வச்சுருவேன்” செல்லமாக மிரட்ட,
“கல்லு பத்தாது, அது குட்டி”
உரக்க சிரித்துவிட்டவன், “பைத்தியம்! போடா போய் டிவி பாரு, முடிச்சுட்டேன் வந்துருவேன்”
“நான் உன்னைவிட அறிவாளியா ஆகிடுவேன்னு உனக்கு பயம்” என்றவள் அவன் கையில் அகப்படாமல் ஓடிவிட, சிரித்தபடி வேலையை தொடர்ந்தான்.
வாணி, மாதவன் ஒருவர் பின் ஒருவர் வர, நால்வரும் சாப்பிட அமர்ந்தனர்.
“அப்பறம் இன்னிக்கி என்னாச்சு?” வாணி கேட்க, பைரவ் மேலோட்டமாக அன்றைய நிகழ்வுகளை பகிர,
மாயா உற்சாகமாய், “ஒரு விஷயத்தை விட்டுட்டே பைரவ்!” என்றாள்.
இன்றைய வதந்தியை தாயிடம் மாதவன் முன்னிலையில் சொல்ல தயங்கி மறைத்திருந்தான். மாயா உளறிவிடுவாளோ என்று அவளை கலவரத்துடன் பார்த்தான்.
அவளோ “எனக்கோ பைரவுக்கோ லவ் வந்தா சொல்லிப்போம்னு சொல்லிருக்கோம். உங்களுக்கும் சொல்லுவோம்” என்றவள் மாதவனிடம், “டேய் உனக்கும் டா”
அவள் சொல்ல, பைரவிற்கு புரைக்கேறியது.
வாணி அதிசயமாக மாயாவை பார்க்க, மாதவன் தங்கையை பார்த்த பாரவையில் இருந்தது என்ன? ஆதங்கமா, கோவமா? பைரவிற்கு விளங்கவில்லை.
“மாதவா..”பைரவ் துவங்க,
மாதவன், “அப்படி ஏதாவது நடந்தா இதுல பாவம் பைரவ்தான். அரை லூசுகிட்ட மாட்டிக்கிட்டு முழிப்பான்” சிரித்துவிட்டு சாப்பிட துவங்க,
வாணியோ, “ம்ம் தாராளமா சொல்லுடா கண்ணா” புன்னகைத்தார்.
பைரவிற்குத்தான் மாயாவை குழந்தை, குமாரி இரண்டில் எந்த வகையில் சேர்ப்பதென்று விளங்கவில்லை.
பைரவ் மாதவன் ஹாலில் அமர்ந்திருந்தனர். மாதவன் உணவிற்கு பின் எதுவும் பேசவில்லை என்பதே பைரவை வருத்த,
“மாதவா , அவ குழந்தை..” நடந்ததை மேலோட்டமாக சொல்ல,
“எனக்கு அவளை தெரியும், இப்போ உன்னையும் புரியுது பைரவ். ஒரு ஆம்பளையா என்னால உன் பார்வை எப்படி பட்டதுன்னு உணர முடியும். எனக்கு எதுவும் தப்பா தோணலை.
ஆனா அவளை பொத்தி பொத்தி வளர்த்து தப்பு செஞ்சுட்டோமோன்னு இருக்கு.
எங்க, யார்கிட்ட, என்ன பேசணும்னு அவளுக்கு புரிய மாட்டேங்குது, உங்க ரெண்டுபேரையும் குடும்பத்துல ஒருத்தரா பாக்குறா அதான் மனசுல பட்டத்தை சொல்லிட்டா. அவளை தப்பா நெனைச்சுடாதே ப்ளீஸ்” மாதவன் குரலில் வலி.
“ஹேய் நோ நோ! என் மாயாவை நான் தப்பா நெனைக்கமாட்டேன். ட்ரஸ்ட் மீ!” வாக்களித்தான்.
வாணியுடன் மர ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி செஸ் விளையாடி கொண்டிருந்த மாயாவை, வாணி வைத்த கண் வாங்காமல் பார்க்க,
“உங்க மூவ்” நிமிர்ந்தவள், “என்ன ஆன்ட்டி?”
“பைரவை உனக்கு எவ்ளோ பிடிக்கும்?”
“ரொம்ப” கைகளை முடிந்த அளவு விரித்து காண்பித்தாள்.
“அது இல்லமா… அவனை நீ லவ்..”
“ஒ அதுவா, இன்னிக்கி யோசிச்சேன், ரெண்டுமே தோணலை!”
“என்ன ரெண்டும்?”
“லவ் , ஈர்ப்பு ரெண்டுமே இல்ல. அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும், எங்க அப்பா அம்மா மாதவன் எல்லாரையும் எவ்ளோ பிடிக்குமோ அவ்ளோ பிடிக்கும்” புன்னகைத்தவள் வாணியின் முகம் சோகமானதில்,
“என்னாச்சு ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?” பயம் வந்தது.
“அப்போ என்னை?” வாணி கேட்க,
“ரொம்ப பிடிக்கும்!” நொடியில் அவரை அணைத்தவள், அவர் கன்னத்தில் முத்தம் தர, அதிர்ந்தார் வாணி.
இதுவரை எவரையும் ஒரு எல்லைக்கோட்டை தாண்டி வர விட்டதில்லை அவர், விஸ்வநாத்திற்கு பின்பு மகனின் அன்பைத்தவிர வேறு எதிர்பார்ப்பே இல்லாமல் இருந்தவர்.
மாயா தன்னை குறிப்பிடாது போனது தன்னை வருத்தியது ஏன்? அவருக்கு விளங்கவில்லை.
அவன் அன்பாய் அணைத்து முத்தம் தந்தது மனதிற்கு இதமாய் இருந்தது ஏன்? புரியவில்லை.
‘இந்த பொண்ணுக்கிட்ட எதோ ஒரு பாசிட்டிவ் ஈர்ப்பு இருக்கு’ உணர்ந்தார்.
“இனிமே ஆன்ட்டி னு கூப்பிடாதே, வாணிமான்னு கூப்பிடு” என்றபடி, அவர் குதிரையை நகர்த்தி மாயாவின் கருப்பு யானையை வீழ்த்தினார்.
“ஆஹா என் யானை அவுட்டா!” கண்கள் விரிந்தவள், “வாணிமா இப்படி நீங்க காய் நகர்த்தினா நான் ஜெயிக்கறது கஷ்டம்” அலுத்துக்கொண்டாள்.
“அதையும் மீறி ஜெயிக்கிறது உன் திறமை” என்ற படி பைரவ், மாதவனுடன் வந்தான்.
தோட்டத்தில் இரவு நேர குளிரும், மெல்லிய நிலவொளியும், இதமாய் இருக்க, “மா பாடேன்” வாணியை கேட்டு கொண்டவன், “இரு இரு” உள்ளே விரைந்து கீபோர்டு மற்றும் கிடார் கருவிகளை எடுத்து வந்தான்.
வாணியின் கையில் கிடாரை கொடுத்தவன், கீபோர்டை வாசிக்க, வாணி கிடாரை இசைத்தபடி பழைய பாடல்களை பாடத்துவங்கினார்.
மாதவன் தோளில் சாய்ந்து கொண்டு மாயா இருவரையும் ஆசையாய் பார்த்திருந்தாள். மாதவன் மனமும் அமைதியாவதை உணர்ந்தான்.
தாயும் மகனும் உலகம் மறந்து மாறி மாறி பாட துவங்க, அவர்களுக்கிற்கிடையில் இருந்த அன்பும் தோழமையும் மாயாவின் மனதில் பதிந்துபோனது.
“சூப்பரா பாடறீங்க ஆன்ட்டி! கிடார் சான்சே இல்லை” மாதவன் புகழ,
“விஸ்வா தான் எனக்கு கிடார் சொல்லிக்கொடுத்தார், இங்கதான் உட்கார்ந்து பாடிகிட்டு இருப்போம்” ஊஞ்சல் கம்பியில் தலை சாய்த்தவர், புன்னகைக்க,
“உன் லவ் ஸ்டோரி சொல்லு, இவங்க கேட்கட்டும்” பைரவ் கேட்க,
“வாவ்! நீங்க அங்கிள் லவ்? சொல்லுங்க” மாயா ஆர்வமாக,
வாணி மூடிய விழிகளை திறக்காமல், “நான் அப்போ ஒரு செமினார் போயிருந்தேன். விஷ்வா கெஸ்ட் அங்க, பேச மேடை ஏறி வந்தார். என் மனசுக்குள்ளேயும்!” சில நொடி மௌனம்.
“அவர் பேசி முடிச்சதும், பின்னாடியே போனேன். என்னை பத்தி சொன்னேன். காதலயும் சொன்னேன்.”
“வாட்? உடனேவா?” மாயா கண்கள் விரிய,
“ம்ம், எனோ மனசுக்குள்ள வந்த காதலை உடனே சொல்ல ஆசை. விஷ்வாதான் பயந்துடார். என்ன சொல்றதுன்னு தெரியலைன்னார்.
டைம் எடுத்துக்கோங்க ஆனா ஓகே மட்டும் சொல்லுங்கன்னேன்.
வீட்டு ஃபோன் நம்பர், விலாசம் எல்லாம் கொடுத்தேன்.
ஒருவாரம் கால் வரல. மனசுல அவ்ளோ பயம்.
நேர்லயே வந்தார்! அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, அண்ணா, தம்பி, தங்கைகள் எல்லாரையும் கூட்டிகிட்டு பொண்ணு கேட்டு!”
“படை சூழன்னு சொல்லு ” பைரவ் சிரிக்க,
“ஆமா படையே தான். எங்க வீட்லயும் அவரை நிராகரிக்க ஒரு காரணமும் இல்லை. ரெண்டு மாசத்துல கல்யாணம்.
மூணு வருஷம் ஆச்சு, குழந்தை பிறக்கவே இல்லை. எல்லாரும் விஸ்வாவை ரெண்டாவது கல்யாணம் செஞ்சுக்க சொன்னாங்க…
அவர் ஒத்துகவே இல்லை. அவர் பாட்டி பைரவருக்கு வேண்டிக்கிட்டாங்க இவன் பொறந்தான்…”மகனை வருடினார்.
“அதான் அந்த பேரு வசீங்களா வாணிமா?” மாயா கேட்க, பைரவ், மாயா அவரை ‘வாணிமா’ என்று அழைப்பதை கேட்டு கண்கள் விரித்தனர்.
“ஆமா கண்ணா… இன்னொரு வேண்டுதல் இருக்கு. அவன் கல்யாணமே அங்கதான் செஞ்சுவைக்கிறதா.
எல்லாம் ஒழுங்கா இருந்திருந்தா… இந்நேரம்…”
வாணியின் பேச்சு போகும் திசை மாறியதை உணர்ந்தவன்,
“மா!”
“எஸ் சாரி. இவன் பொறந்த அப்புறமா எனக்காக விஷ்வா துவங்கியது தான் இந்த பிக்செல்ஸ் ஸ்டுடியோஸ்.
ரெண்டு பேரும் சேர்ந்து உழைசோம். கடன் வாங்கித்தான் துவங்கியிருந்தோம். நல்ல வரவேற்பிருந்தது.
சந்தோஷமா வாழ்த்தோம். ஒரு ஒரு நாளும் கனவு மாதிரி… தினமும் எனக்கு முன்னாடி எழுந்து காபி போட்டு என்னை எழுப்புவார்.
ஒருநாள் அவர் எழுந்துக்கவே இல்லை, தூக்கத்துலயே அட்டாக்” கண்களை மூடிக்கொண்டார்.
“மா!” அன்னையை அணைத்துக்கொண்டான் பைரவ்.
மாயா கண்கள் கலங்கியபடி மாதவன் கையை கட்டிக்கொள்ள, மாதவன் கண்களும் கலங்கித்தான் போயிருந்தது.
பைரவ், “லவ் ஸ்டோரி சொல்ல சொன்னா…”
“சாரி டா” வாணி எழுந்து சென்றுவிட,
அவரை தனியாக விடும் படி, அவரை பின்தொடர எழுந்த மாயாவை பைரவ் தடுத்தான்.
“ஆமா அங்கிளுக்கு நெறைய சொந்தர்காரங்க இருக்காங்களே, ஏன் நீங்க அவங்க கூட போய் இருக்கல?” மாயா கேட்க,
“அவங்க எல்லாரும் பவித்ராவும் ஒன்னு”
“புரியலை”
“காசுதான் அவங்களுக்கு வேணும், நாங்க இல்ல. அப்பா போனதுக்கு காரணமே எங்கம்மான்னு பழிபோட்டாங்க. கூட இருந்த கொஞ்ச நாள் எங்கம்மா அவங்க குத்தல் பேச்சு, வெறுப்புன்னு நரகத்துல இருந்தாங்க
ஒரு நாள் இதுக்குமேல தாங்காதுன்னு, நாங்க கிளம்பி மறுபடி சென்னை வந்துட்டோம். வேற யாருமே வேண்டாம் நாங்க ரெண்டு பேருமே போதும்னு. அதான் வேலையாட்கள் கூட வந்து போவாங்க தங்கவச்சுக்கல. சமையல் கூட நாங்கதான் எப்போவது சமையல்காரர்… எங்களுக்கு நாங்களே போதும்.” பைரவ் சொல்ல , மாதவன் அவன் கைகளை பற்றிக் கொண்டான்.
“அப்படிலாம் இனி விட முடியாது, நாங்க இருக்கோம்” பரிவாக சொல்ல,
“ஆமா இனி தனியா உங்க ரெண்டு பேரையும் விடமாட்டோம்” மாயா சேர்ந்து கொண்டாள்.
மறுநாள் வார இறுதி என்பதால் நிதானமாக காலை உணவை உண்டு முடித்தவர்கள், மதிய உணவிற்காக வேலைகளை துவங்கினார் வாணி.
“வாணிமா நான் சமைக்கவா?” ஆசையாக மாயா கேட்க ,
“சமைக்க தெரியுமாடா?” அவர் அதிசயமாக பார்க்க,
“ம்ம் நீங்க போய் உட்காருங்க” அவரை வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்தாள்.
சரியென்று அலுவலக வேலையை பார்க்க வாணி அமர்ந்துவிட,
மாதவன், பைரவ் பேஸ்கெட்பால் விளையாடிவிட்டு களைப்பாக வந்து அமர்ந்தனர்.
“அம்மா சமையல் ரூம்ல பூனை போல, சத்தம் வருது” பைரவ் எழ,
“பூனைதான்! உன் ஃபிரெண்டு பூனை” சிரித்துக்கொண்டே வாணி வேலை செய்ய,
“மாயாவா?” -மாதவன்.
“ஆமா அவதான் சமைக்கிறா” அவர் சொன்னதுதான் தாமதம்.
“அய்யயோ” மாதவன் அலற,
“என்னப்பா”
“ஆன்ட்டி அதுக்கு சமைக்கவே தெரியாதே!” மாதவன் அதிர,
பைரவ் ,“சுத்தம்!”.
மூவரும் சமயலறைக்கு விரைந்தனர்
மாயா மும்முரமாக குக்கரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“நீ ஏன் இப்படி படுத்துறே? ஒழுங்கா சாதம் சமைக்க தெரியாதா? இப்படி குழைச்சு வச்சுருக்கே?”
சிரித்தபடி சென்ற வாணி, “என்னமா பண்றே?”
“பாருங்க வாணிமா இந்த குக்கர், புதினா சாதத்தை கொழ கொழன்னு பண்ணி வச்சுருக்கு” புகார் வாசித்தாள்.
அவள் காட்டியது பச்சை நிற சாதமா? களியா? கூழா? வாணி திணற,
“என்னடி இது? ஐய்யோ பாத்தாலே பசி போயிடும்” மாதவன் முகம் சுருக்க,
பைரவ் சிரித்தபடி, “குக்கர்ல மாஞ்சா செய்ய முடியும்னு இப்போதான் தெரியுது”
“என்ன நக்கலா?” முறைத்தாள்.
“நீ எப்படி பண்ணே?” பொறுமையாக கேட்டார் வாணி.
“ஒரு டம்பளர் சாதம் 2 கப் தண்ணி, புதினா மசாலா. யூடியூப் பார்த்துதான் பண்ணேன்” அவள் கண்கள் அழுதுவிடுவேன் என்று மிரட்ட,
“எத்தனை விசில் விட்ட?”
“4 இல்ல 6 ? இல்ல எதுக்கும் இருக்கட்டும்னு 9 விட்டேன்” அவள் விரலை காட்டி சொல்ல,
“நாசமா போச்சு” பைரவ் சிரிக்க,
“ஏன்?”
“இன்னும் கொஞ்சம் தண்ணிவிட்டு இன்னும் கொஞ்சம் விசில் விடு, வேணும்னா பக்கத்துல உட்கார்ந்த்து நீயும் விசிலடி. அப்டியே கரைச்சு குடிச்சுடலாம்” என்றவன் அவள் தலையில் செல்லமாக அடித்தான்.
“டேய் ஏண்டா?” அவனை கடிந்து கொண்ட, வாணி,
அவனோ, “ஆமா… அது என்ன?” தட்டில் கருப்பானா ஒன்றை காட்டி கேட்க,
“உருளை கிழங்கு ரோசஸ்ட்!” பெருமையாக அவள் சொல்ல,
“நான் ஜல்லி கொட்டிவச்சுருக்குன்னு நினைச்சேன்” பைரவ் சிரிக்க, மாதவனும் அவனும் ஹை-ஃபய் கொடுத்துக்கொண்டனர்.
“போங்கடா உங்களுக்கு கிடையாது, எல்லாம் வாணிமாக்கு மட்டும் தான்” என்றாளே பார்க்கலாம், வாணி கண்களை மூடி எச்சிலை விழுங்கினார்.
பைரவ் வயிறை பிடித்துக்கொண்டு சிரித்தபடி, “வாணிமா, இவ உன்னை ஒரே அடியா போட்டுத்தள்ள பிளான் பண்ணிட்டா. எஸ்கேப் ஆகிடு அவ்ளோதான் ”
அவனை அடிக்க போனவளை அடிக்க துரத்தினான் மாதவன்.
வாணி சிரித்துக்கொண்டு, முதலிருந்து சமைக்க துவங்கினார்.
மாலை மாதவன் நண்பனை பார்க்க சென்றுவிட, வாணி குட்டி தூக்கம் போட, பைரவ், புத்தகம் படித்தபடி ஊஞ்சலில் ஒருபக்கம் சாய்ந்திருக்க, மறுபக்கம் சாய்ந்திருந்த மாயா.
“பைரவ்”
“சொல்லுடா”
“ஆபீஸ்ல டீம் ட்ரிப் மெயில் வந்தது, பத்மா வரமுடியாதாம், வெங்கட் வர்றது டவுட்னு சொன்னான், ஊருக்கு போகணுமாம், அவங்க வராட்டி போர் அடிக்கும் நாம மட்டும் போகணுமான்னு விக்கி சொல்றான்… ஊருக்கு போறானாம்.
ஆசையா இருந்தேன், நான் ஜாயின் பண்ண அப்புறம் முதல் அவுட்டிங்” சோகமாக சொன்னவள், “அடுத்து மறுபடி எப்போ இந்த மாதிரி வரும்?”
“வருஷத்துல ஒன்னு ரெண்டு தரவை” பைரவ் புத்தகத்திருந்து கண் எடுக்காமல் சொன்னான்.
“அப்போ நான் போகமுடையாது” வருந்தியவள் , பைரவை பார்க்க, அவனோ படித்துக்கொண்டிருக்க , கோவமாக அவன் புத்தகத்தை பிடிகியவள்,
“நான் இங்க பொலம்பிகிட்டு கெடக்கேன்…” முறைத்தாள்.
“நான் என்னடா செய்ய முடியும்?”
“எனக்கும் டூர் போகணும்”
“போகலாம்”
“எப்படி?”
“பேசாம நீ, நான், வாணிமா, மாதவன், ஆன்ட்டி, அங்கிள் எல்லாருமா போகலாமா ?”
“ஹை ! நிஜமா?”
“ம்ம் எஸ்! “
“எங்க போலாம்? எப்போ போலாம்? எவ்ளோ நாள் டூர்?”
“ஹேய் வெயிட்! இதெல்லாம் நீயும் நானும் முடிவு செய்ய முடியாது. அவங்க எல்லார்கிட்டயும் கேட்கணும்”
“இப்போவே கேட்போம்”
“விளையாடாத மாயா, பொறுமையா பிளான் பண்லாம்”
எழுந்தவள், அவனையும் எழுப்பி, அவன் முதுகில் கைவைத்து வாணியின் அறைவரை விடாப்பிடியாக தள்ளிக்கொண்டே சென்றாள்.
“தூங்கறாங்க டா” அறைக்குள் எட்டிப்பார்த்தவன் சொல்ல,
“எழுப்பு”
“ஆழாக்கு படுத்தாத”
“என்ன பா? உள்ளவா!” வாணியின் குரல் கேட்க , மாயாவை முறைத்தவன், உள்ளே சென்றான்.
மாயாவோ தன் கைபேசியை எடுத்துக்கொண்டு மாதவன், கிருஷ்ணன் இருவருக்கும் காணபிரென்ஸ் கால் போட்டு பேச துவங்கினாள்.
“சில பல வேலை இருக்கு , இப்போ தேவையா?, நீங்க போங்க, அப்புறம் பாத்துக்கலாம்” என்றவைகளை தாண்டி, வரும் வார இறுதியில், மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு,
டூர் செல்ல ஒருவழியாக முடிவுசெய்தனர்.