Eedilla Istangal – 22

தேவா அப்படிக் கேட்டதும், தாரா மௌனமாக நின்றாள்.

“சொல்லு தாரா, ஏன் முன்னாடியே சொல்லலை?” என்றான் குரலில் குற்றம் சாட்டும் தொனியில். 

“எத்தனை தடவை பேச வந்தேன்??! எங்க என்னைப் பேச விட்டீங்க?” என்றாள், அவனைக் குற்றம் சாட்டி! 

இக்கணம், அவனால் வாக்கியங்கள் அமைக்க இயலவில்லை. 

“ஒருநாள் காலைல பேச வந்தேன். நாட் இன் குட் மூட்-னு சொல்லி பேச விடலை… 

கேம்ப் அன்னைக்கு… டயர்டா இருக்க, ஸோ பேச வேண்டாம்னு சொல்லியாச்சு… 

சரின்னு ஆபிஸுக்கு வந்தா, அங்க ரெண்டு பேர்… “

“என்னைப் பத்தி மட்டும் பேசு. வேற யார் பத்தியும் பேசாத!!” என்றான் கடுமையாக! 

அவன் கடுமையைச் சமாளிக்க, மௌனமாக நின்றாள். 

“ஆக்சுவலா அன்னைக்குப் பேசச் சொன்னேன். பட், நீதான் பேசாம போன. எனக்கு நியாபகம் இருக்கு”

“அது… அன்னைக்கு…” என்றவளுக்கு, அதற்கு மேல் பேச முடியவில்லை! 

‘ஏன், பேசவில்லை?’ என்றதற்கான காரணம் நினைவிற்கு வந்தது. அந்தப் பேருந்து பயணம்! அவனிடம் பயணச்சீட்டு யாசித்தது!! 

பயணச்சீட்டு என்றதும், அப்பாவின் நியாபகம் வந்துவிட்டது. 

அப்பாவின் நியாபக அலைகள் அடித்ததால், அவளின் வார்த்தைகள் அடக்கிங்ப் போயின! 

“இதே மாதிரிதான், அன்னைக்கும் இருந்த” என்றான், அவளின் முகத்தைக் காட்டி! 

ஒரு நிமிடத்திற்கு அமைதி நிலவியது. 

“ஃபர்ஸ்ட் நான் சொல்ல நினைச்சதை சொல்லிடுறேன்” என்றவள், தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

கீதா – ராஜசேகர் திருமணம்…

சரத் ஜெகன் பற்றி…

தன் பெயர் மாற்றம்…

தந்தையின் மரணம்…

அதன்பின், தேவாவைத் தேடிக் கண்டுபிடித்தது…

_என்று, எல்லாம் சொல்லி முடித்தாள்.

“அப்பா, உங்களைப் பத்தி நிறைய சொல்வாங்க. ஸோ அப்போயிருந்தே உங்க மேல…ஒரு… ” என்று நிறுத்தினாள். 

“ம்ம்ம் புரியுது” 

“லைஃப்ல ஒரு நல்ல பொஸிசனுக்கு வந்தப்புறம், உங்களை வந்து பார்க்கனும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்” 

“ம்ம்ம்” 

“ப்ரோபோசல் டே அன்னைக்கு கூட… இதைத்தான் சொல்ல வந்தேன்” என்று அதுவரை அமைதியாகச் சொன்னவள், “நீங்க சொல்ல விடலை!!” என்றாள் அழுத்தமாக! 

ஒருகணம், தனக்காக காத்திருந்தவள் என்ற காதலுடன் தேவா தாராவைப் பார்த்தான். 

“இப்ப வந்து ஏன் சொல்லலை? ஏன் சொல்லலை?- ன்னா! ஏற்கனவே கஷ்டமா இருக்கு. இதுல நீங்க வேற?” என்றாள் பட்டென்று! 

” ‘நான்தான் அமுதா’-ன்னு ஏன் சொல்லலை தாரா? இதைத்தான் நான் கேட்கிறேன்” என்றான் பதமாக! 

“தேவா, ப்ளீஸ்! எனக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்றேன்…” என்று சங்கடப்பட்டாள். 

“ஓகே, ஐ கேன் அன்டர்ஸ்டான்ட்! பட், நீ சொல்லியிருந்தா ரெண்டு பேருக்கும் இவ்ளோ கஷ்டம் வந்திருக்காது”

ஒரு நிமிடம் ‘சொல்லியிருக்கலாமோ’ என யோசித்தவள், “உங்களுக்கு என்ன கஷ்டம்?” என்றாள். 

“என்னோட லவ் பெயிலியர்… “

“புரியலை”

“நான் லவ் பண்ண பொண்ணு யாருன்னு தெரியுமா?!”

“இப்போ அது தேவையா?” என்றாள் எரிச்சலுடன்! 

“தேவைதான்!”

அவன் முதல் காதல் பற்றிப் பேசப் பிடிக்காத அமைதியில் தாரா! 

“நான் லவ் பண்ணது அமுதாவை. அதிபன் ஐயா பொண்ணு அமுதா” என்று சொல்லிவிட்டான்

அதிர்ச்சியா? ஆனந்தமா? – என்று பாகுபடுத்திப் பார்க்க முடியாத தோற்றத்தில் தாரா நின்றாள்! 

“நீதான் தாரா” என்றான் சிலை போல் நின்றவளைப் பார்த்து! 

“எப்படி?” என்றாள் சிறு குரலில். 

“அதிபன் ஐயா டெத் பெட்ல இருக்கிறப்ப, நான்தான் கூட இருந்தேன்”

சட்டென, மற்றதெல்லாம் மறந்து விட்டது. அப்பாவின் கடைசி நொடிகள் இவனுக்குத் தெரியுமா? என்பதே நினைவில் நின்றது. 

“உன்கிட்ட அத்தனை தடவை சொன்னவரு, என்கிட்டே ஒரே ஒரு தடவை சொன்னாரு”

தன்னைப் பற்றிப் பேசியிருக்கிறார். பார்க்க ஆசைப்பட்டிருப்பாரோ? என்ற எண்ணம் வந்து, ஏக்கம் தந்தது. 

“தாரா, கேட்கிறீயா?” என்றான், அவள் நிற்கும் நிலை கண்டு! 

“ம்ம்ம் சொல்லுங்க” என்றாள் தந்தையைப் பற்றிக் கேட்கும் ஆர்வத்தில்! 

“வளர வளர அமுதா எனக்குச் சப்போர்ட் பண்ணுவாங்கிற ஒரு தாட், அவளை லவ் பண்ண வச்சது” என்றான், தன் ஆசை பற்றி! 

தாராவிடம் அமைதி. 

“அதுனாலதான் சொன்னேன், ‘அமுதா’ அப்படின்னு சொல்லியிருக்கலாமே” என்றான் மீண்டும் குறை கூறும் குரலில்! 

“நானும் சொல்றேன்… என்னைப் பேச விட்டிருந்தா, இந்தக் கஷ்டம் ரெண்டு பேருக்கும் வந்திருக்காதுல”

“நீ எந்த இன்டென்ஷனோட பேச வர்றேன்னு தெரிஞ்சது. மனசுல ஒரு பொண்ணு இருக்கிறப்போ, நான் எப்படி அதை அலோவ் பண்ணுவேன் தாரா?”

“ஓகே ஐ அக்சப்ட். நான்தான் கேட்கிறேன்ல… ‘நீங்க லவ் பண்ற பொண்ணு யாருன்னு?’! சொல்ல வேண்டியதுதானே! ‘பியான்ட் யூவர் லிமிட்ன்னு’ ஏன் சொன்னீங்க?”

“நான் அமுதாவைப் பார்த்தது, பேசினது கிடையாது! அவ எந்த மாதிரி சிச்சுவேஷன்ல இருக்கான்னு தெரியாது? அப்படி இருக்கிறப்போ, நான் எப்படி அவ பேரை வெளியில சொல்ல முடியும்”

ஒரே பதிலில்,’ ஏன் சொல்லவில்லை?’ என்று நியாயப் படுத்திவிட்டது போல் தாரா உணர்ந்தாள். 

“உனக்கு மட்டுமில்ல, யார்கிட்டயும் சொல்லலை” என்றான். 

“அதிபனோட பொண்ணு வார்த்தை மாற மாட்டா தேவா” என்றாள், அவளுள் இருந்த அமுதாவிற்காக! 

“அதை நானே சொல்லிருக்கேன். ஸோ ஒத்துக்கிறேன்”

இரண்டொரு நிமிடங்கள் அமைதியில் கழிந்தன. 

“ஆனா, அதுக்கடுத்து ஏன் சொல்லலை தாரா??” என்று மீண்டும் ஆரம்பித்தான். 

அவள் கேள்வியாய், அவனைப் பார்த்தாள். 

“அதுக்கப்புறம் எவ்வளவு பேசி இருக்கோம்! அப்போ சொல்லியிருக்கலாமே?!”

“தேவையில்லைன்னு தோணிச்சு!”

“ஏன்? எத்தனை தடவை சொல்லுன்னு கேட்டேன். ஏன் சொல்லலை?”

“அது பரிதாபப்பட்டுக் கேட்டீங்க! அதான் சொல்லலை. போதுமா?”

அமைதியாக இருந்தான் தேவா. அவனுக்கு விளக்கம் தர வேண்டும் என்று தாராவிற்குத் தோன்றியது. 

எனவே பேசினாள்… 

“அன்னைக்கு நீங்க லவ் பண்றீங்கன்னு சொன்னதும், ரொம்ப கஷ்டமா இருந்தது தேவா”

சட்டென்று, அவளின் நனைந்த இமைகள் நியாபகத்திற்கு வந்தன, தேவாவிற்கு! 

“அப்புறம் உங்க லவ் பெயிலியர், தெரிஞ்சது. அன்ட் உங்களுக்கு என்மேல ஸாஃப்ட் ஹார்னர் இருக்குன்னு தோணுச்சு. ஸோ நீங்க ப்ரொபோஸ் பண்ணாதான் சரியா இருக்கும்னு நினைச்சேன். அதான் சொல்லலை”

ஆலமரத்தடியில் அழுத்தமான மறுப்பு இதற்காகத்தானா? எனத் தேவாவிற்குப் புரிந்தது. 

“எனக்காக என்னைய பிடிக்கணும்னு ஒரு… ஒரு ஆசை. அவ்வளவுதான்”

கடைசியில், அவள் ஆசைப்பட்டது நடந்திருக்கிறது என்ற திருப்தி தேவா முகத்தில் தெரிந்தது. 

“பிடிச்சதுக்குப் அப்புறமா, ஐ மென்ட் லவ் பண்றேன்னு சொன்னதுக்கு அப்புறம்… ஏன் சொல்லலை?”

“அதான் கேஃபேல சொன்னேனே! மேரேஜ் முடிஞ்சதும் ஒரு விஷயம் சொல்லனும்னு”

“அதை அங்கேயே சொல்லிருக்கலாமே”

“சொல்லத் தோணலை” என்றாள். 

இருவரிடமும் மௌனம்! 

அவள் சொல்லாததற்கு வேறேதோ காரணம் இருப்பது போல் தேவா உணர்ந்தான். 

அதை, அவள் மறைப்பது போல தெரிந்தது. 

“நீங்க அமுதாவைத் தேடலையா?” என்று மௌனம் கலைத்தாள். 

“தேடுனேன். கோயம்புத்தூர்ல…. சென்னையில தேடுனேன். பட், கண்டுபிடிக்க முடியலை”

“ஸோ… தேடறதை விட்டாச்சு! அப்படித்தான??” என்றாள் நக்கலாக! 

“விட்டாச்சா??” என்று கோபப்பட்டான். 

பின் சிறிய இடைவெளி விட்டு, “தேடுனாலும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியாம, முட்டாள்தனமா தேடியிருக்கேன்” என்று கடுங் கோபம் கொண்டான். 

அவள் புரியாமல் விழித்தாள். 

“அதான், அமுதாவோட ஐடென்டியை மாத்தி வச்சிருக்கீங்களே? அப்புறம் எப்படி என்னால கண்டுபிடிக்க முடியும்??” என்று கோபத்தின் காரணம் சொன்னான்.

“அதைத் தவிர வேற வழியே இல்லையா?”

“இருந்தது. உங்க அம்மா! அவங்களை நான் அரசம்பாளையத்தில பார்த்திருக்கேன்”

‘அம்மா’ என்று உதடு மட்டும் அசைத்தாள், தாரா. 

“அவங்களை, இங்க சென்னையில பார்த்தேன். அப்போ அமுதாவைப் பத்திக் கேட்டேன்”

“அம்மாகூட பேசியிருக்கீங்களா?” என்றாள் ஆச்சரியமாக! 

“ம்ம்ம், பேசியிருக்கேன்” என்றவன், கீதாவுடனான அவனது அலைபேசி உரையாடல்களைச் சொன்னான். 

அம்மா இப்படிப் பேசினார்களா? என்று நினைக்கையில், அவன் முன் நிற்க அசவுகரியமாக உணர்ந்தாள். 

“அம்மாவைக் கன்வீன்ஸ் பண்ண முடியலையா??”

“ம்ம்ம், அவங்க பயந்தாங்க! அமுதாவும் பயப்பிடறான்னு சொன்னாங்க”

“ஓ!”

“எனக்கு இருக்கிற போலீஸ், லாயர் சப்போர்ட் பத்திச் சொன்னேன். பட், அதைக் கேட்கிற நிலையில அவங்க இல்லை!”

மீண்டுமொரு அமைதி நிலவியது. 

“அம்மா சொன்ன வார்த்தையை வச்சி அமுதாவைத் தேடலை. கரெக்டா??”

“… “

“அமுதாகிட்ட கேட்கணும்னு தோணலை. ரைட்??”

“திரும்பத் திரும்ப… ” என்று சொல்லி எரிச்சலடைந்தான். 

“… “

“இங்க பாரு தாரா… மத்தவங்களுக்கு உதவி பண்றதை விட்டுட்டு வருவியான்னு, உங்க அம்மா கேட்டாங்க. முடியவே முடியாதுனு சொல்லிட்டேன்.

ஐயாவோட கனவா? என்னோட லைஃப்பா?-ன்னு வர்றப்போ… நான் என்னைப் பத்தி யோசிக்க மாட்டேன். போதுமா??” என்று, அமுதாவைத் தன் வாழ்விலிருந்து விலக்கிய காரணத்தைச் சொன்னான். 

தாரா, தேவாவைப் பார்த்தபடியே நின்றாள். 

“இதுக்கு மேல என்கிட்ட சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை” என்று வேறு புறம் திரும்பி நின்றான். 

நீளமான அமைதி இருவருக்குமிடையில்! 

அமுதா மீதான காதல், தோல்வியில் முடியக் காரணம் சொல்லியாயிற்று. ஆனால், அமுதாவும் தாராவும் ஒன்றுதானே! 

தாரா, இதை எப்படி எடுத்துக் கொள்வாள்?? என்று எண்ண ஆரம்பித்தான். 

விரும்புகிறவளை விட்டுக் கொடுப்பது போல் பேசியதை நினைத்து, மனம் விம்மினான். 

தாரா வருத்தம் கொள்வாளோ என நினைத்து, திரும்பிப் பார்த்தான். 

அவள், அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

மேலும் ஏதோ பேச வந்தாள்.

“வேண்டாம். இப்போ பேச வேண்டாம். நான் உன்னை கஷ்டப்படுத்திறேன். ஸோ, கிவ் மீ சம் டைம்” 

“தேவா”

‘வேண்டாம்’ என்பது போல் தலையசைத்து மறுத்தான்.

“வேற ஒன்னு கேட்கணும் தேவா” என்றவள் கண்கள் குழமாயின. 

அதைக் கண்டவன், “லைஃப் ஸ்டார்டிங் டே. இந்த ஆர்க்யூமென்ட்டே பிடிக்கலை. இதுல டியர்ஸ் வேற. வேண்டாம் தாரா” என்றான். 

“நான்… “

“ப்ளீஸ், எதுனாலும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பேசலாம்” என்று கெஞ்சிக் கேட்டுவிட்டு, சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான். 

சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், அதற்கு மேல் ‘என்ன செய்ய? முடியுமென்று ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்துவிட்டாள்.

அதிக நிமிடங்கள் அமைதியாகச் சென்றன. 

தேவா யோசித்தான்…

தாரா சொன்னதையும், தன் ஐயா சொன்னதையும் ஒன்றுபடுத்திப் பார்க்க ஆரம்பித்தான். 

கேஃபேயில்…

‘மேரேஜ் முடிஞ்சதும் ஒரு வீட்டுக்கு… வேற எதுவும் எஸ்பெக்ட் பண்ண மாட்டேன்’ – தாரா. 

‘அவ உன்கிட்ட எதையும் எதிர்பார்க்க மாட்டாளாம்’ – அதிபன். 

ஏழு நாள் கழித்து அழைக்கையில்…

‘சேஃப்தான’ – தாரா. 

‘உன்னை பார்த்துக்குவேன்னு சொன்னா’ – அதிபன். 

தன்னை அலுவலகத்தில் பார்க்க வந்த பொழுது…

‘நீங்க அங்க போகலைன்னா அதை விடக் கஷ்டப்படுவேன்’ – தாரா. 

‘உனக்கு சப்போர்ட்டா இருப்பாளாம்’ – அதிபன். 

அன்று அலைபேசியில்… 

‘ரொம்ப நாளா நல்லா தூங்கலை… இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன்’ என்று சொன்னது ஒரு வாரத்திற்கான வார்த்தை அல்ல! அது வருடக்கணக்கான காதல் கை கூடப்போகும் நிம்மதியில்.

தாராவாக இருந்தாலும்… அமுதவாக இருந்தாலும்… அவள் கொண்ட காதலில் மாற்றமில்லை. 

என்ன மாதிரியான காதல் இது? என்று மருகினான். 

தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போல் இருந்தது. எழுந்து, தண்ணீர் குடிக்க சாப்பாட்டு மேசையின் அருகில் சென்றான். 

தண்ணீர் குடிக்கையில், தற்செயலாக மேசை மீது பார்வையைப் படர விட்டான். 

ஒரு sugar sachet… இதய வடிவில் சட்டமிடப்பட்டு, வட்ட வடிவமான கண்ணாடி மேசையின் நடுவில் இருந்தது. 

அன்று கேஃபேயில் வைத்து, காதல் பரிசாகத் தந்தது. 

தனக்காக, தாரா விருப்பத்தின் மெனக்கெடல்கள் விஸ்வரூபமாகத் தெரிந்தன. 

திரும்பிப் பார்த்தான். 

வரவேற்பறையின் மூலையில்… புன்னகையுடன் இருந்த அவள் அப்பாவின் புகைப்படத்திற்கு கிழே அமர்ந்திருந்தாள். 

‘ஏதோ கேட்க வேண்டும்’ என்றாளே என்னவாக இருக்கும் என்று யோசித்தான். 

கடிகார முட்களைப் பார்த்தான். நாள், மாலை வேளையைத் தொட ஆரம்பித்திருந்தது. 

இருவரும் சாப்பிடவில்லை என்ற உணர்வு வந்தது. 

சாப்பிடுவதற்கு ஏதோ ஆர்டர் செய்துவிட்டு, தாராவின் அருகில் வந்து அமர்ந்தான். 

“தாரா” என்று அழைத்தான். 

கோபம் கொள்வாளோ? பேச மாட்டாளோ? சமாதானம் செய்ய வேண்டுமோ?_ என்ற தயக்கம் அந்த அழைப்பில் இருந்தது. 

‘ம்ன்’ என்று நிமிர்ந்து பார்த்தாள்.

“சாப்பிட ஆர்டர் பண்ணயிருக்கேன். ஸோ ரெஃபிரஷ் பண்ணிட்டு வா, சாப்பிடலாம்” என்றான்.

“ம்ம்ம்” என்று உடனே ஒத்துக் கொண்டாள். 

சட்டென ஒத்துக் கொண்ட விதத்தில், ‘என்ன மனநிலையில் இருக்கிறாள்?’ என்றே தேவாவிற்குப் புரியவில்லை. 

எழுந்து கொள்வதற்கு முன், கீழே பரப்பி வைத்திருந்த பேருந்து பயணச் சீட்டுகளை எடுத்து, ஒரு பெட்டிக்குள் போட ஆரம்பித்தாள். 

அது, அவள் அப்பாவுடனான நேரச் செலவிடல்களின் அடையாளம்!

“இது என்ன தாரா? டிக்கெட்ஸ்??” என்று கேட்டு, அவனும் எடுத்து வைக்க உதவினான். 

“அப்பாவும் நானும் கோவையிருந்து அரசம்பாளையம் போறப்போ எடுத்த டிக்கெட்ஸ்” என்றாள் முழுவதும் எடுத்து வைத்துவிட்டு, எழுந்து கொண்டே!

‘ஓ! இதற்காகத்தானா?? அன்று, தன்னிடம் யாசித்த பேருந்து பயணம்’ என்று தேவா புரிந்து கொண்டான். 

புரிந்த பிறகு, தான் அவளிடம் நடந்து கொண்ட விதத்தை நினைத்து, பூகம்பத்தின் வலி இதயத்தில்! 

நிகழ்கணத்திற்கு வந்தான். 

இவள் ஏன் இப்படித் தன்னிடம் பற்றுதல் இல்லாமல் பேசுகிறாள். கோபப்பட்டாலும்… சமாதனப் படுத்தலாம்! இது என்ன உணர்வு? என்று குழம்பிக் கொண்டிருந்தான். 

சற்று நேரத்தில், தேவா ஆர்டர் செய்த உணவு வந்திருந்தது. தாரா முகம் கழுவி வந்திருந்தாள். 

இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். 

தானாக முன்வந்து தாரா பேசவில்லை. ஆனால், தேவா ஏதாவது பேசினால், முகம் திருப்பவும் இல்லை. 

“வேற ஏதாவது வேணுமா தாரா?”

“வேண்டாம் தேவா” என்று சொல்லிவிட்டு, எழுந்து கைகழுவச் சென்றாள். 

‘என்னாயிற்று இவளுக்கு?’ என்ற எண்ணத்தில், அவனும் கைகழுவச் சென்றான்.

அங்கே நின்று கொண்டிருந்தவளிடம், “என்னாச்சு தாரா?” என்றான் பரிவாக! 

“ஒரு டென் மினிட்ஸ் பேசணும். டூ யூ மைன்ட்??” என்றாள் பாராமுகமாக! 

“அன்னைக்கே சொன்னேன்ல தாரா, இப்படிக் கேட்கக் கூடாதுன்னு” 

“டூ யூ மைன்ட்?” என்றாள் மீண்டும். குரலில் ஏற்ற இறக்கம் ஏதுமில்லை! 

“என்கிட்ட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு தாரா”

“எப்போ பேச வந்தாலும் முடியாதுன்னு சொன்னா… இப்படித்தான் கேட்க முடியும்” என்றவள், “டூ யூ மைன்ட்?” என்றாள், அவனை எட்டி நிறுத்தி பார்க்கும் குரலில்!

“ப்ச், நெவெர் மைன்ட்” என்றான். 

“ஓகே.. ஃபர்ஸ்ட் ஒன் ரெக்வஸ்ட் தேவா”

“சொல்லு”

“இந்த விஷயம், இங்க யாருக்கும் தெரியாது. இங்க எல்லாரும், என்னை சரத்தோட தங்கச்சியா… ஜெகனோட அக்காவ பார்க்கிறாங்க. அது மாறக் கூடாது. அதானால நீங்க… “

“புரியுது” 

“தேவா… நீங்க… சரத் ஜெகன்கிட்ட… இதே மாதிரியே பேசுவீங்களா?… இல்லை… மாறிடுவீங்களா??” என்று மிக மிகத் தயக்கத்துடன் கேட்டாள். 

“நீ, என்னைப் புரிஞ்சிக்கலை தாரா! புரிஞ்சிக்கோ. அவ்வளவுதான் சொல்ல முடியும்” 

அவன் தந்த பதிலில், தாராவிடம் ஓர் நிம்மதி ! 

திருமணத்திற்கு முன்பே, அவளைப் பற்றி ‘ஏன் சொல்லவில்லை’ என்று ஓரளவு கணிக்கத் தொடங்கினான். 

“ஓகே தேவா! தென் ஒன் ஸாரி”

“ஸாரியா? எதுக்கு??”

“அம்மா உங்ககிட்ட பேசினது தப்புதான்! எனக்காகத்தான் பேசியிருப்பாங்கன்னு தெரியும். இருந்தாலும் அம்மாக்காக நான் ஸாரி கேட்டுக்கிறேன்”

மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறானா? இல்லையா? என்று தெரியாத ஒரு வகை அமைதி, தேவாவிடம்!

“தேவா… ” 

“வேற எதுவும் சொல்லனுமா?” 

அவளுக்குப் புரிந்தது. 

“தாரா… வேற??” என்றான். 

“ஓகே! அப்பாவோட கனவா?? நானா? அப்படின்னு கொஸ்டின் வந்தா, நீங்க அப்பாவோட கனவுதான் சூஸ் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியும். 

தெரிஞ்சிதான் லவ் பண்ணேன். ஸோ, அதை சொல்றப்போ கில்ட்டியா பீல் பண்ணாதீங்க. 

நீங்க, ஹெல்ப் பண்றதுல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணுங்க. மேரேஜ் லைஃப்… இந்த கமிட்மெண்ட்ஸ் இதெல்லாம் பத்தி வொரி பண்ணாதீங்க! 

என்னோட லவ் லைஃப்ங்கிறது, உங்களுக்கு சப்போர்ட் பண்றதுதான்! 

அதுக்காக எக்ஸ்பெக்டேஷன் எதுவும் இல்லைன்னு சொல்லலை. இருக்கும்!! சின்ன சின்னதா உங்ககிட்டருந்து எக்ஸ்பெக்ட் பண்ணுவேன்!! 

பட், உங்களால அதைப் பண்ண முடியலைன்னா… அதுக்காக என்னை மாத்திக்க மாட்டேன். ஏன்னா அதுதான்…” என்று அவ்வளவு நீளமான பேச்சின் பின், கேள்வியா நிறுத்தினாள். 

“லவ்” என்று பதில் சொன்னான். 

மறுப்பாய் தலை அசைத்துவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்து, “தாரா” என்றாள்.

எதிர்பார்ப்பு இல்லாத நேசமென்பது இங்கில்லை. 

ஆனால், எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத பொழுதும், நேசம் நிலைக்குமானால்… அதற்கு ஈடு இணை ஏதுமில்லை! 

அத்தகைய நேசத்தை, 

தாரா உணர்த்தினாள்!

தேவா உணர்ந்தான்! 

உணர்ச்சி வசப்பட்டான்!! 

அதிலிருந்து தன்னை உருவிக் கொள்ள இயலாது, உறைந்து நின்றான்!!!

“தேவா” என்று தாரா அழைக்கும் வரை! 

“இதான் பேசணும்னு நினைச்சியா?” என்றான், அவள் அழைப்பினால் தன்னை மீட்டெடுத்து! 

‘இல்லை’ என தலையசைத்தாள். 

“வேற என்ன??”

அதுவரை தன்னிடமிருந்த உறுதி, உதிர்வது போல் உணர்ந்தாள், தாரா! 

“எதுனாலும் சொல்லு தாரா?” 

“டெத் பெட்ல அப்பாகூட இருந்தீங்கள. கண்டிப்பா என்னைப் பத்தி அப்பா சொல்லிருப்பாங்க. என்னன்னு… 

அந்த டைம்ல அப்பாகூட இருக்க முடியலை தேவா. அட்லீஸ்ட்…. 

எனக்கு… 

ப்ளீஸ் தேவா… ” – இதில் எதையும் அவளால் முழுதாகச் சொல்ல முடியவில்லை. 

அவன் ‘என்ன கேட்கிறாள்?’ என்று புரிந்தது. அவள் அப்பாவுடனான, கடைசி நிமிடப் பேச்சை சொன்னான்.

என்ன நடந்தது என்று தெரியும்! ஆனால், இன்றுதான் என்ன நினைத்தார் என்று தெரிந்தது, தாராவிற்கு! 

கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள். 

பரிதவிக்கும் மனதை பக்குவத்துடன் கையாள நினைத்தாள். 

“தாரா”

“என்ன தேவா??” என்றாள் இயல்பாக இருப்பது போல்! 

“ஹக் பண்ணிக்கிறீயா??”

இக்கணம் இயல்பாக இருக்க இயலவில்லை! 

“தாரா ஹக் பண்ணிக்கிறீயா?” என்று மீண்டும் கேட்டான். 

“எனக்கும் தோணுது தேவா. பட், நான் அழுவேனே! லைஃப் ஸ்டார்டிங் டே… இந்த டியர்ஸ்… உங்களுக்கு ஓக்கே கிடையாதே. விடுங்க… நான் இப்படியே… ஐ கேன்…” 

“போதும் நீ பேசினது” என்றவன், அவள் இடக்கரம் பிடித்திழுத்து, தன் இதயத்தின் அருகே நிறுத்திக் கொண்டான்.

அப்பாவின் கடைசி நிமிடங்களை நினைத்து நினைத்து… கண்ணீரில் கரைந்தாள். 

“அழாத தாரா?” என்று ஒரு முறை மட்டும் சொன்னான். 

அதற்கு மேல் அவன் எதுவுமே சொல்லவில்லை. 

ஏனென்றால்? அதிபனின் கடைசி நிமிடங்கள், என்றுமே அவனுக்கு ஆறாத ரணம்தானே! 

அவளது அழுகுரல் கேட்கக் கேட்க, அவன் அணைப்பை அதிகப்படுத்திப் பார்த்தான்! 

அவன் சட்டை உணர்த்தியது, அவளின் விழிவெள்ளத்தை! எனினும் சமாதானம் செய்ய மொழி வரட்சி ஏற்பட்டிருந்தது, அவனிடம்! 

தேம்பித் தேம்பி அழுகின்றவளைத் தேற்றும் மொழியின்றி, திண்டாடிக் கொண்டிருந்தான்! 

இதுதான் இருவரின் நிலை! 

சற்று நேரத்தில் அவளின் கண்ணீர் மட்டுப்பட்டது. 

“தாரா” என்றான். 

“ம்ன்” என்று மட்டும் சொன்னாள். 

“தாரா” என்று அழுத்தி அழைத்ததும், அன்னாந்து அவன் விழி பார்த்தாள்.

மீண்டும் நனைந்த இமைகள். அது என்றுமே அவனை நச்சரிக்கும் இன்னல்! 

எனவே, “ஃபேஸ் வாஷ் பண்ணிக்கோ” என்றான். 

அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள். 

நல்லியைத் திறந்து விட்டான். 

அவள் முகத்தில் நீரை வாரி வாரி அடித்துக் கொண்டே இருந்தாள். 

“போதும் தாரா” என்று தண்ணீரை நிறுத்தினான். 

அருகிலிருந்த துண்டில் முகத்தை நன்றாகத் துடைத்துக் கொண்டு, மீண்டும் அவனைப் பார்த்தாள். 

சற்று நேரம், சாதாரணமாகப் பேசினான். பின்னர் அவளைச் சமாதானப்படுத்திச் சரி செய்தான். 

கடைசியில், “ஆர் யூ ஆல்ரைட் தாரா?” என்று கேட்டான். 

“ம்ம்ம்” 

“இனிமே அழாத. சரியா?” 

பதில் சொல்லவில்லை. ஆனால், மெல்லிய புன்னகை புரிந்தாள். 

“முன்னாடியே எல்லாம் சொல்லியிருந்தா, காலை-ல இருந்தே இப்படி இருந்திருக்கலாம்-ல” 

கொஞ்சம் புன்னகை விரிந்தது. 

அவனும் சிரித்துக் கொண்டான். 

“தேவா” 

“ம்ம்ம் சொல்லு” 

“ஐ வான்ட் டு ஹக் யூ அகைன். டு யூ மைன்ட்?”

‘எத்தனை தடவை சொன்னாலும், ஏன் இப்படி?’ என்று நினைத்தவன், “யெஸ், ஐ மைன்ட்” என்றான் கைகளைக் இதயத்தின் குறுக்கே கட்டிக் கொண்டு! 

மனதினுள் ரசித்தாள்… மௌனமாகச் சிரித்தாள்… அவனது இருகரம் விலக்கினால்… இறுக்க அணைத்துக் கொண்டாள்!

வெகு நேரமாகச் சேர்த்தெழுதிய நிலையிலிருந்த இருவரும், தங்களைப் பிரித்தெழுத நினைக்கவேயில்லை. 

மெதுவாகச் சுற்றிலும் பார்த்தாள். 

நேரம் இரவை நெருங்கி இருந்தது. 

வீடும் இருளில் மூழ்கி இருந்தது. 

அவர்கள் நின்ற இடத்தில் மேலிருந்து வரும் சிறு விளக்கொளி மட்டுமே, வீட்டின் இருளை விரட்ட! 

வெள்ளை நிற கைகழுவும் கோப்பை! 

சுற்றிலும், ஆலிவ் வர்ணமடித்த மேடை! 

சிறு சிறு வேலைப்பாடுகள் வேறு! 

சின்ன சின்ன பூச்சாடிகளும், நறுமணப் பொருட்கள், மேடை மேல்! 

மேலும், கைகழுவும் கோப்பை மேலே சதுரவடிவ பெரிய கண்ணாடி! 

இருவரும் நிற்கும் நிலையை, அந்தக் கண்ணாடி காட்டியது! 

தாரா கண்டாள். 

என்றுமே காட்சிப் பிழையாய் கண்ணாடியில் தெரிந்தவன், இன்று கட்டிக் கொண்டு நிற்பது தெரிந்தது. 

நிரம்ப வினாடிகள் தாண்டியதால், விலக விருப்பம் இல்லாமல், விலகினாள். 

“தேவா” என்று தயங்கியவள், “நான் அம்மா-க்கு ஒரு ஃபோன் மட்டும் பண்ணிக்கிறேன்” என்றாள். 

அவன் எதுவும் சொல்லவில்லை. 

“நீங்களும் யாருக்கும் ஃபோன் பண்ணனும்னா பண்ணிக்கோங்க” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள். 

அலைபேசியை எடுத்து அழைத்தாள். 

உடனே கீதா அழைப்பை ஏற்றார், அதுவரை அவள் அழைப்பிற்குக் காத்திருந்திருந்தது போல! 

பேசிக் கொண்டே, தாரா பால்கனிக்குச் சென்றுவிட்டாள். 

இங்கே தேவா, 

வரவேற்பறையில் வந்து அமர்ந்தவன், யாரை அழைத்துப் பேச என்று யோசிக்கும் போது ராஜசேகர் நினைவில் வந்தார். 

நொடியும் தாமதிக்காமல் அழைத்தான். 

அவரும் அவனது அழைப்பை எதிர்பார்த்திருந்தது போல், உடனே அழைப்பை ஏற்றார். ஏனெனில் கீதா அனைத்தும் சொல்லியிருந்தார். 

“மாப்பிள்ளை” என்றார் எடுத்தவுடன்! 

இக்கணம் இருவரும் உண்மைக்கு அந்தப் பக்கம் நிற்கிறார்கள். 

இருவருக்கும் அது தெரியும். அவர் அழைப்பில் மாற்றமில்லை. 

அவன்?? 

மறுமுனையில் ராஜசேகர் மனம் அடித்துக் கொண்டது! 

“மாமா” என்றான். 

“போதும் மாப்பிள்ளை. இது போதும். நான்… நான்….” என்றவருக்கு வார்த்தை வரவில்லை. 

“எதையும் யோசிக்காதீங்க மாமா. நிம்மதியா தூங்குங்க. அதுக்குத்தான் ஃபோன் பண்ணேன்” 

“சரி மாப்பிள்ளை” என்று மேலும் இரண்டொரு வாக்கியங்கள் பேசிவிட்டு, இருவரும் அழைப்பைத் துண்டித்தனர். 

பின், தன் அக்காவிடம் பேசினான். 

பால்கனியில் தாரா…

நலம் விசாரித்தாள். 

லேசாகச் சண்டையிட்டாள். 

கடைசியில், தான் செய்ததை நினைத்து வருந்தியவரை, சமாதான வார்த்தைகளால் வழிக்கு கொண்டு வந்தாள். 

அந்த நாளை நிறைவாக மாற்ற, நிறைய நேரம் அவர்கள் அனைவருடனும் பேசினாள். 

ஒரு அரைமணி நேரம் கழித்த பின்னரே, தாரா உள்ளே வந்தாள். 

முற்றிலும் கருப்பு வண்ண டைல்ஸ் பாதிக்கப்பட்டிருந்த வீட்டின் வரவேற்பறை. 

இரவு விளக்கின் ஒளியில், அது பளபளத்தது. 

ஆலிவ் நிறத்தில் போடப்பட்டிருந்த day bed couch-ல் தன்னைச் சரித்திருந்தான்.

‘ஓ! தூங்கியாச்சா?’ என்று நினைத்தவள், சத்தமே இல்லாமல் வந்து, அவனருகில் சாய்ந்து கொண்டாள். 

சாவகாசமாக, சந்தோஷமாக… தன் சகியை, சரிபாதியை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு, “இப்படியே தூங்கு” என்றான். 

“நீங்க தூங்கலையா தேவா?” 

“உன்கிட்ட ஒன்னு சொல்லணும் தாரா” 

“என்ன?” 

“அமுதா…” என்று அவன் ஆரம்பிக்கும் போதே, 

“அகைன்…” என்றவளிடம்… 

“ப்ளீஸ் கேளு” என்று கெஞ்சினான். 

“சரி, சொல்லுங்க” 

“அமுதாவோட லவ்-வ நான் சரியா ஹேண்டில் பண்ணலைன்னு தெரியுது. பட், அமுதவா இன்ட்ரோ ஆகியிருந்தா கூட… உன்னை இவ்ளோ லவ் பண்ணியிருப்பேனானு தெரியலை. 

ஏன்னா, அந்த லவ்-க்கு ஒரு காரணம் இருந்தது. தாராவை லவ் பண்றதுக்கு எந்தக் காரணமும் தேவையில்லை! அவ்ளோ லவ் பண்றேன்” என்று வாய் வார்த்தையாகக் காதலைச் சொன்னான்.

தேவா காதலித்த இருவரும் ஒன்றுதான் என்பதால், அவனுக்குக் காதல் தோல்வி என்ற ஒன்று கிடையாது. 

ஆனாலும், அமுதாவின் மீதான காதலுக்கு… அவன் நியாயம் செய்யவில்லை. 

ஆனால், தாராவை அநியாயத்திற்கு காதலிக்கிறான்! 

“என்ன எதுவும் சொல்ல மாட்டிக்க?” என்று கேட்டான். 

“ஷார்ட்டா புரியற மாதிரி சொல்லுங்களேன்” 

“உன்னை மாதிரி லவ் பண்ண முடியாது, பட் உன்னைத்தான் லவ் பண்றேன்”

“இதுவும் புரியலை” 

“ஹே, உன்னை எனக்குப் பிடிக்கும்னு சொல்றேன்” 

“புரியலை தேவா” 

அவள், தன்னிடம் எதை எதிர் பார்க்கிறாள் என்று புரிந்தது.

“லவ் யூ தாரா” என்றான் ஆத்மார்த்தமாக! அழகாக! ஆனந்தமாக! அவள் காதலை ஆராதிக்கும் விதமாக! 

“நானும் உடனே சொல்லணுமா?” 

“உன் இஷ்டம்! பட், ஒர்த் டு வெயிட்”

“வெயிட் பண்ணக்கூடாது, ட்ரை பண்ணனும்”

“என்ன ட்ரை?”

“என்னை த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் சொல்ல வைக்க டிரை பண்ணனும்?”

“அதெல்லாம் முடியாது” என்றதும், அவனிடமிருந்து விலகிச் செல்லப் போனாள். 

“சரிம்மா ட்ரை பண்றேன்” என்று சொல்லி, மீண்டும் தன் இதயத்தின் அருகே… இரு கரங்களுக்குள் இருத்திக் கொண்டான்.

சற்று நேரத்தில்…

அவன் சுவாசக்காற்று சுற்றும் தூரம் தந்த சுகத்தில், உறங்கிவிட்டாள்.

முதல் நாள் சந்தித்ததிலிருந்து இன்று வரை, அவளுடனான நேரச் செலவிடல்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தான்.

தாரா பேச வந்த தருணங்களை எல்லாம் தட்டிக் கழித்ததை நினைத்தான்! 

அது கடந்து சென்ற காதலிக்கப் பட வேண்டிய நேரங்கள் அல்லவா! ஆதலால், கவல் கொண்டான்!!

தான் காதலிக்கின்ற பெண்ணிற்கு நியாயம் செய்வதாக நினைத்து, தன்னைக் காதலிப்பளைக் காயம் செய்ததை எண்ணி வருந்தினான். 

தன் நெஞ்சத்தில் நிம்மதியாக துயில் கொண்டிருப்பவளை நெக்குருகிப் பார்த்தான். 

என்ன தவம் செய்தேன், யான் இன்று இங்கிவளை வாழ்க்கைத் துணையாய் அடைய!_இதுதான் தேவாவின் உள்ளத்தின் நிலை!! 

அந்த உள்ளத்து நிலை தந்த உந்துதலில்… தன் நெஞ்சத்தில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருப்பவளின், உச்சி நெற்றியில் ஒரு முத்தமிட்டான்! 

ஊடலுக்குப் பின்னரான உரியவளின் உச்சி நெற்றி உதடு உரசல்! 

உரியவன் உள்ளத்தில் உன்மத்தம் உணர்த்தியது!

அந்த உன்மத்த உணர்வில், அவனும் உறங்கிப் போனான்!!