RR14

ரௌத்திரமாய் ரகசியமாய்-14

 

அதிகாலை. இதமான குளிருக்கு கதகதப்பாய் இழுத்து மூட போர்வை தேடும் அதிகாலை. இமைகள் பிரிக்க, மிகவும் இன்னல் பட வேண்டிய அதிகாலை. 

 

காலைத்தென்றலுடன் கலந்து வந்த பறவைகளின் ஒலி‌ அவள் காதுகளை வருட கண்ணிமைகள் மெல்ல அசைவுற்றன. அதிகாலை தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைய ஆரம்பிக்க விழிகளை மெதுவாக திறந்து பார்த்தாள் தாமிரா. 

 

கண்களை கசக்கிக்கொண்டே எழுந்து ஹாலிற்கு வர, டீவியில் ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

 

முழுவதும் கறுப்பு உடை அணிந்து, கையில் துப்பாக்கியுடன் ஒருவனை துரத்திக்கொண்டு ஓடுகிறான் ஆறடியில் நெடு‌ நெடுவென்று வளர்ந்திருந்த அந்த ஹாலிவுட் ஹீரோ.

 

அந்தக் காட்சியை திரையில் கண்டதுமே திடீரென்று அவளது மனத்திரையில்  அவன் முகமே ஓடியது.  

 

அவளது பயிற்சி காலம் நிறைவடைந்து ஊர் திரும்பி ஆறேழு மாதங்களுக்கு மேலாகி விட்டது. 

 

அங்கு காட்டில் நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு  ஒரு நாள் கூட அவனை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று வரை காணவில்லை.

 

இப்போது இந்தக் காட்சியில் அவன் நினைவு வந்தது போல் அவ்வப்போது அவன் நினைவு வரத்தான் செய்தது. 

 

அவளாக காஃபி தயாரிக்கும் நேரங்களில் எல்லாம் அவளை அறியாமலே அவன் சொன்னது ஞாபகத்தில் வரும். அப்போதெல்லாம் சிரித்துக் கொள்வாள் அவ்வளவே. 

 

அவனது நினைவுகளை தூரப் போட்டவளாய் மருத்துவமனை செல்ல ஆயத்தமானவள், தன் கையிலிருந்த வாட்சில் நேரத்தை பார்த்தபடி தந்தைக்காக காத்திருந்தாள்.

 

அவளது பாட்டிக்கு உடல் நிலை சரியாக இல்லை என்ற காரணத்தினால் சுமித்ராவும் அக்ஷராவும் ஊருக்குச் சென்றிருந்தனர். வீட்டில் தாமிராவும் அவளது தந்தையும் மாத்திரமே.

 

அந்நேரம் வாயில் பக்கம் நிழலாடுவதை உணர்ந்தவள், சட்டென திரும்பிப் பார்க்க, அங்கு ரகு நின்றிருந்தான். அவனைக் கண்டதும் அவளது முகம் சுருங்கியது.

 

அவன் மேல் இருக்கும் கோபம் இதுவரை தீரவில்லை என்பது தெரிகிறது. முன்பெல்லாம் அவனை கண்டாலே ஆசையுடன் ஓடி வந்து கலகலப்பாக பேசுவாள். 

 

என்று‌ அவன் மனதில் இருப்பதை போட்டு உடைத்தானோ அன்றிலிருந்து அவர்களது நட்பும் உடைந்து போனது. ரகு தான் அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவன். 

 

தாமிராவுக்கும் கவலை இல்லாமலில்லை ஆனால் அதை விட பன்மடங்கு அதிகமாக ரகு மீது கோபம் இருந்தது.  அவள் இவனை கண்டு கொள்ளாவிட்டாலும் அவன் அப்படியிருப்பதில்லை.

 

தினமும் தவறாமல் மன்னிப்பு வேண்டி குறுந்தகவல் அனுப்பி விடுவான். பதில் வராது என்று அறிந்தும் கூட மெசேஜ் அனுப்புவதை விடவில்லை. 

 

சிந்து கூட பல வழிகளில் முயற்சித்து விட்டாள். தாமிரா பிடி கொடுத்தால் தானே. அவளது முடிவில் அவள் பிடிவாதமாக இருந்து விட, அவர்களது நட்பில் அன்று தொடங்கிய விரிசல் இன்று வரை தொடர் கதையாய்.

 

அவன் மீது இப்போதும் அவளுக்கு கோபம் தான் ஆனாலும் பல நாட்கள் கழித்து இன்று அவள் வீடு தேடி வந்திருக்கும் ரகுவை கேள்வியாக ஏறிட்டாள்.

 

அவன் தயங்கி தயங்கி உள்ளே வர,

“வா ரகு வா… உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு முன்ன மாதிரி இந்தப் பக்கம் வர்றதே இல்லையே?” விஸ்வநாதனின் குரல் கேட்டது.

 

“வேலை தான் அங்கிள்” இலகுவாக சொல்லி விட்டு உள்ளே வந்தான்.

 

அவள் அவனை முறைத்துக் கொண்டிருக்க, அவனது இதயமோ எகிறி குதித்தது.

 

“நீ இப்போ வந்தது கூட நல்லது தான்பா. தாமிரா நான் கிளம்புறேன் மா. நீ ரகு கூட ஹாஸ்பிடல் போயிடு” என்று அவர் கிளம்ப‌ எத்தனிக்க,

 

“இல்லைப்பா நான் உங்க கூடவே வர்றேன்” என்றாள் அவசரமாக.

 

“இல்லைமா எனக்கு கொஞ்சம் வெளியில வேலையிருக்கு. ரகு உன்னை தானே பார்க்க வந்திருக்கான்.

ரகு அவளை ஹாஸ்பிடலில்ல ட்ராப் பண்ணிடுப்பா” அவனது பதிலையும் எதிர்பாராதவராய் அவர் கிளம்பி விட்டார்.

 

இப்போது ரகுவை தாராளமாக முறைத்து வைத்தாள். அவனுக்குத் தான் அது பெரும் கஷ்டமானது. 

 

முயன்று வரவழைத்த தைரியத்துடன்,

“தாமிரா… நா…” என்று ஆரம்பிக்க,

 

“ஒன்னும் பேசாத நான் ஆட்டோவுல போயிக்கிறேன்” என்று விறு விறு வென்று வெளியேற, இவன் பின்னாலேயே ஓடினான்.

 

“தாமிரா… ப்ளீஸ் நான் சொல்றதை கேளு” அதற்குள் அவள் கேட்டை திறந்து கொண்டு வெளியேறி விட, திரும்பி ஓடியவன் காரை ஸ்டார்ட் செய்து கொண்டு வந்தான்.

 

“தாமிரா… ப்ளீஸ் கார்ல ஏறு. உங்கிட்ட கொஞ்சம் பேசணும். ப்ளீஸ்…” அவன் கெஞ்சினான்.

 

“உங்கூட பேசறதுக்கு ஒன்னுமில்லை. அன்ட் உன் முகத்தை கூட பார்க்க பிடிக்கலை. தயவு செஞ்சு கிளம்பு.” 

 

“ப்ளீஸ் தாமிரா. ஐ ஆம் ரியலி சாரி.  நான் போகும் முன்னாடி கடைசியா ஒரு தடவை பேசனும்.”

 

‘கடைசியா ஒரு தடவையா? எங்கே போகப் போறான்? ஏன் இப்படி சொல்கிறான். இந்த வார்த்தைகள் அவள் மனதை அசைத்துப் பார்க்க, விடாமல் கெஞ்சிக் கொண்டிருப்பவனை வெறித்துப் பார்த்தவள், காரில் ஏறினாள்.

 

அவள் எதுவும் பேசவில்லை விறைப்பாக அமர்ந்திருந்தாள். வண்டியை ஓட்டிக் கொண்டே திரும்பி அமைதியாக பார்த்தான்.

 

“நான் இன்னைக்கு ஈவ்னிங் யு.எஸ் போறேன்.” 

 

“வாட்…. ” உண்மையாகவே அதிர்ந்தாள் தாமிரா.

 

அவளுக்கு ரகுவை எப்போதும் பிடிக்கும். அவன் மீது கோபமாக இருந்தாலும் கூட அவன்‌ தினமும் அனுப்பும் குறுந்தகவல்களை விடாமல் படித்து விடுவாள். வழக்கமான நேரத்தை விட சிறிது தாமதமானாலும் அவனை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பாள். இது தான் உண்மை.

 

இப்போது அவன் இந்த நாட்டை விட்டே செல்லப் போகிறான் என்ற செய்தி அவளுக்கு உட்சபட்ச அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அதிர்ச்சியில் அவளது கோபம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கேள்வியாக அவனை பார்த்தாள்.

 

“உனக்கு தான் என்னை பிடிக்கலையே தாமிரா. ஒரே ஹாஸ்பிடல்ல வர்க் பண்றோம் ஆனா உனக்கு என் முகத்தை கூட பார்த்து பேச பிடிக்கிறதில்லை. என்னை கண்டாலே முகத்தை திருப்பிக்கிற.

 

இதுக்கு மேல உன்னை கஷ்டப்படுத்த விரும்பலை. நீ சந்தோஷமா இருக்கனும்” அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

 

இருந்தாலும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். தொடர்ந்து,

 

“நான் பண்ணது தப்பு தான் இல்லைனு சொல்லலை. அதுக்காக உங்கிட்ட கால்ல விழுந்து வேணும்னாலும் மன்னிப்பு கேட்க ரெடியா இருக்கேன்.

 

எனக்கு நீ என் ஃபிரண்டா லைஃப் லாங் இருந்தா போதும். வேற எந்த தப்பான எண்ணமும்  எதிர்ப்பார்ப்பும் சத்தியமா இல்லை. நீ இப்படி என்னை குற்றவாளி மாதிரி‌ பார்க்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால எடுத்த முடிவு தான் இது”  இதை சொல்லி முடிக்கும் போதே அவன் கண்களில் நீர் கசிந்தது.

 

இதை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. ரகு வருத்தப்படுவான் என்று தெரியும். ஆனால் அவளது கோபம் அவனை இந்தளவுக்கு காயப்படுத்தும் என்பதை அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவன் பேசப் பேச அவள் இதயம் இனம் புரியாத வேதனையில் தவித்தது.

 

அவளது மனக்கண்ணில் அவர்கள் ஒன்றாக இருந்த அழகிய நாட்கள் படமாக ஓட ஆரம்பித்தது. ஒன்றாக சிரித்தது; அழுதது; சேர்ந்து சுற்றியது: ஒன்றாக சாப்பிட்டது;  அவனது தலையில் நங்கென்று கொட்டியது. அவன் காதை திருகியது; அன்று அவனை பார்த்து வெறுப்பாக அமில வார்த்தையை துப்பியது வரை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக அவள் மனக்கண்ணில் ஓடியது.

 

“சாரி தாமிரா. நான் உன் மனசு நோகுற மாதிரி நடந்திருந்தா… நடந்திருந்தா என்ன அப்படி நான் நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு. இனி என் முகத்தை பார்க்குற அவஸ்தை கூட இருக்காது” அவன் குரல் வேதனையில் ஒலிக்க,  பட்டென தலையுயர்த்தி அவன் முகத்தை பார்த்தாள்.

 

“ஆனா ஒன்னு தாமிரா உனக்கு என் மேல் வெறுப்பு, கோவம் இருக்கலாம் ஆனா உனக்கு ஏதாவது கஷ்டம்னா உனக்காக எப்பவும் நான் இருப்பேன். அதை மட்டும் மறந்துடாத” உறுதியான குரலில் சொன்னான்.

 

அதற்குள் மருத்துவமனை பார்க்கிங் ஏரியாவில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. 

 

தாமிரா வாயை திறந்து ஏதாவது பேசுவாளா? என்னை மன்னித்து விட்டேன் என ஒரு வார்த்தை சொல்லமாட்டாளா?  இல்லை அது கூட தேவையில்லை  அவளது சிறு புன்னகை கூட  அவனுக்குப் போதுமானதாக இருந்தது. ஆவலுடன் ஏக்கமாக அவளையே பார்த்திருக்க, அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக காரை விட்டும் இறங்கினாள். அவள் மனமோ குழப்பக் கடலில் சிக்கித் தவிக்க, அவன் இதயம் சில்லு சில்லாக உடைந்தது.

 

***

காரை விட்டு இறங்கியவள் உள்ளே நுழைய வாயிலிலே சிந்து நின்றிருந்தாள். தாமிரா முன்னே வர, ரகுவும் பின்னால் நடந்து வந்தான்.

 

“என்னடி… வட கொரியாவும் தென் கொரியாவும் ஒன்னா வர்றீங்க?” என்ற சிந்துவின் நக்கலெல்லாம் அவள் காதில் விழவில்லை.

 

“ப்ச் அவன் யு.எஸ் போறானாமே?” சிந்துவிடம் கேட்டாள்.

 

“ஆமா போறான். இன்னைக்கு நைட் அதுக்கென்ன?” என்றாள் அசால்ட்டாக.

 

“உனக்கு தெரியுமா?” திகைப்புடன் வினவினாள்.

 

“ம்ம்…”

 

“ஏன்டீ என்கிட்ட சொல்லலை?” அவள் குரலில் கவலை தெரிந்தது.

 

“ஏன் சொல்லனும்? உனக்கு தான் அவன் இங்க இருக்குறது பிடிக்கலை. அவன் முகத்தை பார்க்க கூட பிடிக்கலைனு சொன்ன. அவன்‌ எங்க போனா உனக்கென்ன?” அவளது வார்த்தையில் இப்போது தாமிராவின் உள்ளமும் காயம்பட்டது.

 

இன்று ரகு கிளம்பும் முன் அவனிடம் மன்னிப்புக் கேட்டு விட வேண்டும். அதுவும் சர்ப்ரைஸாக. இப்போது அவள் மனம் தெளிவானது.

 

***

மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. சிந்துவுக்கு அன்று உடல் நிலை சரியில்லை. தலை வலிப்பதாக கூறி மாத்திரையை விழுங்கிக் கொண்டாள். 

 

அப்போது தான் தாமிராவும் அவளது வேலைகளை முடித்துக் கொண்டு வர இருவரும் ரகுவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். சீஃப் டாக்டரிடமிருந்து சிந்துவுக்கு வந்த அழைப்பில் அவரை சந்திக்கச் சென்றாள்.

 

அவரை சந்தித்து விட்டு வந்த சிந்துவின் முகம் உர்ரென்று இருந்தது.

 

“ஏன்டி சீஃப் ஏதாவது திட்டினாரா?” 

 

“ம்ம் இல்லைடி. அந்த வழுக்கை மண்டைக்கு வேற வேலையே இல்லை. இப்போ போய் அவருக்கு ரொம்ப வேண்டப்பட்ட ஒருத்தருக்கு ரொம்ப முடியலையாம். அவங்க இடத்துக்கே போய் ட்ரீட்மென்ட் பார்த்துட்டு வர சொல்லுது” ஏற்கனவே தலை வலியில் இருந்தவளுக்கு தலை வலி அதிகமாக அப்படியே நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

 

“உனக்கு முடியலைனு வேற யாரையாவது அனுப்ப சொல்லு? இல்லைனா அவங்களை நேரா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண சொல்லு.”

 

“எல்லா வெங்காயத்தையும் நாங்களும் சொல்லிட்டோம். இவர் என் மாமாவா வேற போயிட்டாரு அதான் ஒன்னும் சொல்ல முடியலை” என்றாள் எரிச்சல் குரலில்.

 

“அன்அஃபீசியலா ட்ரீட்மென்ட் பார்க்கனும்னா அவரே போய் பார்த்துக்கட்டும். நீ முடியாதுன்னு சொல்லிட்டு கிளம்பு” தாமிரா சொல்லிக் கொண்டிருக்க, இடை புகுந்தவள்,

 

“ஏய் தாம்ஸ்… எனக்கு பதிலா நீ போயிட்டு வர்றியா? ப்ளீஸ்…” என்றாள்.

 

“நோ… நோ வே… ரகுவை சென்ட் ஆஃப் பண்ண போகனும்டி இப்போ டைம் இல்லை” உடனடியாக மறுத்தாள்.

 

“ப்ளீஸ்… ப்ளீஸ்… இங்க பக்கத்துல தான்டி. ஹாஸ்பிடல் வர முடியாத கேஸ்னா ஏதாவது வயசானவங்காளா தான் இருக்கும்.  அன்ட் நம்ம சீஃப் வேற அவருக்கு ரொம்ப வேண்டியவங்க உன்னை நம்பி இந்தப் பொறுப்பை கொடுத்திருக்கேன்னு டயலாக்லாம் விட்டாருடி. 

 

எனக்காக இந்த ஹெல்ப்பை மட்டும் பண்ணுமா. சீக்கிரமே வந்துடலாம். ப்ளீஸ்…” விடாமல் அவள் கையை பிடித்து கெஞ்ச,  இடையில் நான்கைந்து முறை தும்மல் வேறு வந்தது.

 

சிந்துவுக்கு நிஜமாகவே உடல் நிலை சரியில்லை. விடாமல் தும்மிக் கொண்டே கெஞ்சுபவளை பார்க்க, பாவமாக இருந்தது. முடிந்தவரை விரைவாக வேலையை முடித்துக்கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு, சம்மதமாக தலையாட்டினாள்.

 

***

மருத்துவமனையை விட்டு வெளியேறியேற, அவளுக்காக காத்திருந்தது ஒரு கேப். அதில் ஏறி அமர்ந்து, கார் செல்ல ஆரம்பித்ததும் வெளியே மழை பிடித்துக் கொண்டது.

 

சிறு தூறலாய் ஆரம்பித்த மேகம், சில வினாடிகளிலேயே சடசடவென நீரை வாரி, பூமி நோக்கி இறைக்க ஆரம்பித்தது. தாமிரா தனது தலையை கார்க் கண்ணாடியில் சாய்த்துக்கொண்டு, வெளியே வழிந்தோடும் நீரையே உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

காருக்கு முன்பிருந்த வைப்பர்கள் ‘தடக் தடக்’ என அடித்துக் கொண்டு, போகும் சாலையை தெளிவாக காட்ட முயற்சித்துக் கொண்டிருந்தன. தாமிராவின் மனமும் அவ்வாறே அடித்துக் கொண்டது. 

 

என்றைக்கும் இல்லாமல் இன்று ஏனோ இனம்புரியாத படபடப்பு. அந்தக் கொட்டும் மழையை பார்த்ததும் அவன் ஞாபகம்.

 

அன்று அடைமழையில், அவனது ஜாக்கெட் அவளை போர்த்தியிருக்க,  அவன் மார்பில் முகம் புதைத்த ஞாபகம்.  அவள் செவிகளில் விழுந்த அவனது தடதடக்கும் இதய ஓசை. இப்போது அவள் உடல் சிலிர்த்தது. 

 

‘ச்சே… என்ன இது?’ என அவளே அந்த நினைவுகளை புறந்தள்ளிட நினைத்தாலும், அவனோடு கைகோர்த்து அவன் கூடவே ஓடிய நாள் நினைவில் வருவதை அவளால் தடுக்க இயலவில்லை. 

 

அந்தக் காட்டில் நடந்த சம்பவத்தில், புத்தி பேதலித்தவள் போல் பயந்து நடுங்கினாள்; கத்தினாள்.

 

அவளை தன்னோடு அணைத்தான். ‘என்னை மீறி உனக்கு எதுவும் நடக்காது’ அவளை சமாதானம் செய்தான். 

 

அன்றிலிருந்து இன்றுவரை அதனால் எந்த பிரச்சனையும் வரவில்லை. மீண்டும் ஒருமுறை சந்தித்து விடும் ஆர்வம் முளைக்கும் போதெல்லாம், அந்தக் கொடிய அனுபவமும் அவள் முன் வந்து தாண்டவமாடும்.

 

அவனை போல உடையணிந்தவனை வெளியில் எங்காவது காண நேர்ந்தால், இது அவனோ? பின்னாலேயே ஓடிச்சென்று பார்த்திருக்கிறாள். 

 

அது அவன் இல்லை என்று தெரிந்த பிறகு, ஓர் ஏமாற்றம். ஆனால்  அவளது பைத்தியக்காரத்தனமான செயலை எண்ணி அவளே சிரித்துக் கொள்வாள்.

 

இன்று ஏனோ பரபரத்த அவளது மனம் அவளுக்கே புரியவில்லை. அவள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. இறங்கிக் கொண்டாள்.

 

அது நகருக்கு வெளியே சற்று தள்ளி ஒதுக்குப்புறமான இடம். ஆங்காங்கே தனித்தனியே சில வீடுகள் மற்றும் கட்டிடங்கள்.

 

அவள் இறங்கியதும் அந்த கேட் திறக்கப்பட, ஒருவன் அவள் முன் வந்தான்.

 

“நீங்க தான் டாக்டர் பரந்தாமன் அனுப்பி இருக்க டாக்டரா?” உணர்ச்சியற்ற குரல்.

 

அவன்‌ பார்ப்பதற்கு கருமையான நிறத்துடன் உயரமாகவும், இறுகிய முகமாகவும் இருந்தான். அவனது தோற்றம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.

 

அதை வெளிக்காட்டாமல் தலையசைக்க, அவளை அழைத்துச் சென்றான். 

 

அங்கு வீடு என்று தனியாக இருக்கவில்லை. இரண்டு மூன்று தனி அறைகளாகவே இருந்தது. அந்த இடமே அவளுக்கு வித்தியாசமாக தெரிந்தது.

 

அவன் காட்டிய அறையினுள் நுழைய, அங்கே படுக்கையில் ஒருவன் இருக்க, அவளது முகம் அதிர்ச்சியை காட்டியது. அந்த அறையே ஒரு மினி ஐ.சீ.யூ போல் காட்சியளித்தது. 

 

பக்கத்தில் ஒருவன் நின்றிருந்தவன் அவளை கண்டதும் அருகில் வந்தான்.

 

“இவருக்கு தான் அடிபட்டிருக்கு டாக்டர்” என்றான்.

 

“ஓ… என்னாச்சு? எப்படி அடிபட்டது?” படுக்கையில் இருந்த அம்மனிதன் அருகே சென்று பரிசோதிக்க ஆரம்பித்தாள்.

 

அவனது கால் கூரான ஓர் ஆயுதத்தினால் குத்திக் கிழிக்கப்பட்டிருந்தது. இரத்தம் வெளியேறுவதை நிறுத்துவதற்காக, துணியால் கட்டப்பட்டிருந்தது.

 

அதே போல் அவனது கையும் அதே மாதிரி காயம்பட்டிருக்க,

 

“ஓ காட்… இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” கத்த ஆரம்பிக்க, அருகில் இருந்தவன் பதறினான்.

 

“ஏன் டாக்டர்? இவன் உயிருக்கு ஏதும் பிரச்சினையா?”

 

“அப்படி எதுவும் ஆகிடக்கூடாதுன்னு நெனச்சிருந்தா அடிபட்ட அப்பவே ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கனுமில்லையா? ஏன் கொண்டு போகலை?” அந்த சூழ்நிலை அவளுக்கு ஓர் சந்தேக உணர்வை கொடுத்தது.

 

“அ..அது வந்து…” இவன் தடுமாறிக் கொண்டிருக்க, வலியில் துடிக்கிறான் அந்த மனிதன்.

 

அப்போதைக்கா அவளது சந்தேகம் பின் தள்ளப்பட்டது. அம்மனிதனுக்கு தேவையான சிகிச்சையளித்தாள்.

 

“இவருக்கு ஹெவி ப்ளட் லாஸ்… உடனடியா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும்” மருத்துவராய் அவசரப்படுத்தினாள்.

 

“நோ நோ… டாக்டர்! என்ன ட்ரீட்மென்ட்னாலும் இங்கேயே பாருங்க. உங்களுக்கு தேவையானதை அரேஞ்ச பண்ணிக் கொடுக்குறோம்” என்றான் அவன்.

 

“என்ன மிஸ்டர்! அவர் நிலைமை புரியாம பேசாதீங்க. உடனடியா ப்ளட் கொடுக்கலைனா அவர் உயிருக்கே ஆபத்து” அவன் வாதாடுவது, எரிச்சலை கொடுத்த அதே சமயம், அவன் மீது சந்தேகமாகவே இருந்தது.

 

அவன் முடியாதென மறுத்துக் கொண்டே இருக்க, இவளும் விடுவதாக இல்லை. மருத்துவமனை கொண்டு சென்றால் மாத்திரமே மேலதிக சிகிச்சை வழங்க முடியும் என பதிலுக்கு அவளும் சத்தம் போட்டாள்.

 

“சீஃப் டாக்டர் உங்களுக்கு வேண்டப்பட்டவர்ன்ற காரணத்துக்காக தான் பொறுமையா இருக்கேன். இல்லைனா போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ண வேண்டியிருக்கும். இவரை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போக முடியுமா? முடியாதா?” அவளது கோபம் உச்சத்தை தொட்டது. அவளது அந்தப் பேச்சில் அவன் திகைத்தான்.

 

அதே நேரம்,

 

“முடியாதுன்னா…?  

 

அந்தக் குரலில் அவள் உள்ளம் துடித்து எழ, திரும்பினாள். அவன் தான் அங்கு நின்றிருந்தான். அதே அவனது கறுப்பு நிற உடை. அவனது ஒரு கை பேண்ட் பாக்கெட்டில் இருக்க, அவள்‌ முன் வந்து நின்றான்.

 

அவளது முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் அப்பட்டமாக தெரிந்தன. அவனை கண்டதும் உடலெல்லாம் உன்னதமான ஓர் சிலிர்ப்பு உடைப்பெடுத்து ஓட, பேச்சு வரவில்லை. அவனை கண்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது.

 

“நீங்க எங்க இங்க?” அவனிடம் கேட்டாள்.

 

அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில், அவன் இதழில் குறுநகை பூத்தது. அவளை ஆர்வமாக பார்த்தான். ஆனால் அவள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

 

“இந்த ஆளோட கண்டிஷன் எப்படி இருக்கு?” அந்த மனிதனை பற்றி கேட்டதும்,

 

“இவருக்கு அடிபட்டதுல ஹெவி ப்ளட் லாஸ். உடனடியாக ப்ளட் தேவைப்படுது. இல்லைனா இவர் உயிருக்கே ஆபத்து. அதை சொன்னா இவர் புரிஞ்சுக்க மாட்டேங்குறார். ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும்னு” என்றாள்.

 

மறு நொடி அவனை அறைந்திருந்தான். 

 

“உனக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாதா? அதான் சொல்லறாங்கல்ல. தேவையான ப்ளட் அரேஞ்ச் பண்ணு” பற்கள் நறநறுத்தன. அவன் முகம் பயங்கரமாக மாறியிருந்தது. 

 

அந்த முகத்தை கண்டதும் உள்ளுக்குள் உதறலெடுத்தது அவளுக்கு. எதற்கு இந்த கோபம்? அவளுக்குப் புரியவில்லை. அவனும் மருத்துவமனை செல்வதை பற்றி குறிப்பிடவில்லை. 

 

“ஆ.. ஆனா ஹாஸ்…” இவள் திணற,

 

“அதுக்கெல்லாம் இப்போ டைம் இல்லை. என்னென்ன தேவையோ அதெல்லாம் கிடைக்கும். ப்ளீஸ் எனக்காக…” அவன் குரலில் தெரிந்த மென்மையில் தடுமாறினாள் அவள்.

 

‘எனக்காக’ என்ற அவனது வார்த்தையில் அத்தனை நேரம் அவளுக்கிருந்த சந்தேகம், குழப்பம்  அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போனது. 

 

அடுத்த சில மணி நேரங்களில் அடிபட்டு கிடந்தவனது சிகிச்சைக்கு அனைத்தும் அங்கேயே வந்து சேர்ந்தது. அவனுக்கு தேவையான இரத்தம் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவளுக்கே ஆச்சரியம் தான். இருந்தாலும் அது எதையும் பொருட்படுத்தாது அவனுக்காக எல்லாமே செய்தாள். 

 

நேரம் கடந்து கொண்டே இருக்க, இருட்டத் துவங்கியது. இவனை கண்டதும் ரகுவையும் மறந்து போனாள். 

 

அவளது வேலையை முடித்துக் கொண்டவள், அந்த அறையை விட்டும் வெளியே வந்தவள் அவனிடம் விடைபெற்று கிளம்பலாம் என எண்ணிக்கொண்டிருக்க,

“சாப்பிட்டு போலாம்” என்று அவளை தடுத்தான். 

 

அவளால் மறுக்க முடியவில்லை. அவன் என்ன சொன்னாலும் அவளால் மறுக்க முடியவில்லையே? அவளுக்கே ஆச்சரியம் தான். 

 

உணவருந்தும் போது கூட, அவளோடு சாதாரணமாக ஆனால் அளவாக பேசினான். அவன் அதிகமாக பேசாத ரகம். அது அவளுக்குப் புரிந்தது.

 

ஆனால் இருவருமே அந்த பழைய சம்பவங்களை நினைவுபடுத்திக் கொள்ளவில்லை.‌ அந்தப் பேச்சை கவனமாக தவிர்த்து வந்தனர். அப்படியே உண்டு முடித்தார்கள்.

 

நேரம் எட்டு மணியை காட்டியது.  கடவுளே! அப்போது தான் அவளுக்கு ரகுவின் நினைவு வந்தது. ரகுவை எப்படி மறந்தேன்? 

 

இப்போதே கிளம்பி விட வேண்டும் என்ற நோக்கில், வாஷ் ரூமை விட்டு வெளியே வந்தாள். 

 

அந்த அறைக்கு வெளிப்புறத்திலேயே அந்த வாஷ் ரூம் அமைந்திருந்தது. அந்த வழியாக தான் முன்பகுதிக்கு வர வேண்டும். 

 

நேரத்தை பார்த்தவாறே அவசர அவசரமாக நடந்து வந்தவளது கால்கள், பிரேக் போட்டது அப்படியே நின்றது.

 

அந்த அறைக்குள் இருந்து தான் அந்தக் குரல்கள் அவள் காதுகளில் விழுந்தது. 

 

“அவனை கொன்னுடு” அந்த குரல் தான் அவளை தடுத்து நிறுத்தியது. 

 

அவளது இருதயம் படக் படக் என்று அடித்துக்கொள்ள, அந்த அறையின் ஜன்னலோடு ஒன்றிக் கொண்டாள். இப்போது அவர்கள் பேசுவது நன்றாக கேட்டது.

 

அந்த ஜன்னல் சற்று உயரமாக இருந்தது. உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றாள். எட்டிப் பார்த்தாள். முடியவில்லை. 

 

சுற்றும் முற்றும் தேடினாள். ஒரு இரும்பு வாளி கிடந்தது. அந்த வாளியை எடுத்து கவிழ்த்து வைத்து அதன் மீது ஏறினாள். இப்போது உள்ளே நடப்பதை தெளிவாக பார்க்க கூடியதாக இருந்தது. 

 

இருதயம் ‘திடுக் திடுக்’ என்று அடித்துக் கொண்டது. அவளது காதை கூர்மையாக்கினாள்.

 

“அவனை குத்தி கிழிச்சும் கூட வாயத் திறக்கலை. அவனுக்கு இது போதாது…” கடித்த பற்களுக்கிடையில் வெளிவந்தது ருத்ரன் குரல்.

 

“அவனை கொன்னுடு. உண்மைய சொன்னாலும்… சொல்லலைனாலும்… அதுவும் கொடூரமா…” திடமான குரலில் சொன்னான். இட்ட கட்டளையை அப்படியே நிறைவேற்று என்று சொல்லாமல் சொல்லும் குரல்.

 

அவள் இதயம் நின்று துடித்தது. அவளால் நம்ப முடியவில்லை. அவன் மீது வைத்திருந்த நம்பிக்கை கோட்டை சரிந்து விழத் துவங்கியது. அவன் இத்தனை கொடூரமானவனாக இருக்கக் கூடும் என்றும் நினைத்துப் பார்க்கவில்லை.

 

‘கடவுளே! என்ன‌ மனிதர்கள் இவர்கள்? இவர்களே தான் அந்த மனிதனை குத்தி காயப்படுத்தியதா? அவனை காப்பாற்றியதே கொல்வதற்கு தானா?’ பயத்தில் இதயம் எகிறி குதித்தது. 

 

அந்நொடி அவள் எதிர்பாராத ஒன்றும் நடந்தது. திடீரென்று வாளியின் மீது நின்றிருந்த அவளது கால் இடறி  விழ,  அந்த இரும்பு வாளி ‘டங்டங்…’ என்று ஒலியெழுப்பியது.

 

அவ்வளவுதான். ருத்ரன்‌ மற்றும் அவனோடு இருந்தவர்கள் பார்வை அந்த ஜன்னல் பக்கம் திரும்பியது. 

 

அவசரமாக எழுந்து நின்றாள்.உடல் வியர்வையில் குளித்து விட்டது. ஒரு நொடி கூட தாமதிக்காது இங்கிருந்து கிளம்பி விட வேண்டும். உடனடியாக இதை அவள் தந்தைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

 

அதற்குள் அவளது அலைபேசியை தேடி எடுத்தவள் தந்தையின் இலக்கத்தை அழுத்த, மறுகணம் அவளது அலைபேசி அவள் கையில் இல்லை.

 

தாமிரா மிரண்டு போனாள். பயத்தில் அவள் மூளை வேலை செய்யவில்லை. இதயம் தாறுமாறாக துடித்தது. 

 

அவன் தான் ருத்ரன் நின்றிருந்தான். அவனது கண்கள் சிவக்க, செல்போன் திரையை பார்த்தான். பிறகு அவளை பார்க்கிறான். அவ்வளவுதான்.

 

ஊடுருவும் அந்தப் பார்வை. அவன் உள்ளுக்குள் இருந்த அசுரன் ஆட்டம் கண்டது. அவனுடைய பார்வையை சந்திக்க முடியாமல் தடுமாறினாள்.

 

“சோ யூ ஆர் ஸ்பையிங் ஆன் மீ ரைட்?” 

 

அவனது புருவம் உயர்ந்தது. அவளை கூர்மையாக பார்த்தான். அவளை நெருங்கினான். அவன் முகம் படுபயங்கரமாக மாறியிருந்தது. அந்தப் பார்வையில் அவளது முதுகுத்தண்டு சில்லிட்டது. 

 

அவளது பயம் அதிகமானது. பதட்டம் அதிகமானது. அவனது துஷ்டப் பார்வை கண்டு பயந்தாள். அவளது கால்கள் அனிச்சை செயலாய் மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்ந்தன.

# # #