நீயும் நானும் அன்பே…
அன்பு-14
ஒருவாராக தன்னை நிலைப்படுத்தி வெற்றி கூற ஆரம்பித்திருந்தார்.
“அந்தப் பையனைப் பத்தி உண்மையிலேயே எனக்கு ஒன்னும் தெரியாது. வரம்போது, போகும்போது பாக்கறேன். அதவச்சி எந்த முடிவுக்கு என்னால வரமுடியல. தங்கச்சி மகனா இருந்தாலும் எம்பொண்ணுனு வரும்போது பலதையும் யோசிச்சி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்”, என்று நிறுத்தியவர்,
மனைவியின் ஆவலான பார்வையைக் கண்டு, நிறுத்தியதைத் தொடர்ந்தார்.
“உங்க அண்ணன் எனக்கு காலேஜ்ல சீனியர் அப்டிங்கறதோட, உறவுக்காரவர் அப்டிங்கற அடிப்படையில, பாக்கும்போது நல்லா பேசிக்குவோம். எங்களுக்குள்ள நல்ல தோழமை இருந்தது அப்ப…”, என்று கூறியவர்
பழைய நாள்களை நினைவுபடுத்தியவாறே பேசினார்.
“அவரைப்பத்தி படிக்கிற எடத்தில ஆகட்டும், உறவுக்கார மக்களுக்கிடையே ஆகட்டும் யாரும் ஒரு குத்தமும் சொன்னதில்லை…! அப்பல்லாம் ஒத்தப் பனைக் கள்ளு ஒடம்புக்கு நல்லதுன்னு எங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் கூப்டு குடுத்தாக்கூட வேணானு சொல்ற அளவுக்கு நல்லவரு! பொண்ணுங்க விசயமாகட்டும், மற்ற பழக்கவழக்கத்தில எதிலயும் அவரை குறைனு ஒன்னு சொல்ல முடியாது.
அந்த நம்பிக்கையிலதான் என் சித்தி கேட்டவுடனே சசிய அவருக்கு குடுக்கலாம்னு சொன்னேன். என்ன நடந்துச்சுன்னு உனக்கும் தெரியுமில்ல…!”, என்று மனைவியிடமே நடந்ததை நினைவுகூறச் செய்திருந்தார்.
“அது…”, என்று தயங்கிய புஷ்பா, “எங்க அண்ணன் பண்ணதுக்கும், சங்கருக்கும் என்ன சம்பந்தம்?”, என்று புஷ்பாவிற்கு கணவர் கூற வருவது புரிந்தாலும், விளக்கம் கேட்க
“உங்க பெரியப்பா அப்டிதான் பதினாறு வருசம் உங்க பெரியம்மாவுக்கு துரோகம் பண்ணிட்டு மலேசியால போயி இருந்திருக்காரு…! உங்க நொண்ணனும் பதினேழு வருசத்தை அப்டித்தான் கடத்துனாரு…!”, என்று கடுகடுப்போடு வெற்றிவேல் நிறுத்த
“அதே மாதிரியே சங்கரும் செய்துரும்னு நினைக்கிறீங்களா?”, என்று தயங்கியவாறே புஷ்பா கேட்டார்.
“விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்? அப்டி ஒரு வீட்ல எம்பொண்ணை எந்த நம்பிக்கையில கட்டிக் கொடுக்கச் சொல்ற?”, என்று தன் மனதில் உள்ளதை மனைவியிடம் கொட்டியிருந்தார் வெற்றி.
கணவனின் பேச்சில் இருந்தது மனதை அசைத்திட, “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைங்க…! அவங்க ரெண்டுபேரும் அப்டி பண்ண மாதிரியே, இந்தப் பையனும் பண்ணும்னு எப்டி, எதை வச்சுச் சொல்றீங்க?”, என்று கணவனிடம் தனக்கு புரியாததை புரிந்து கொள்ள வேண்டிக் கேட்டிருந்தார் புஷ்பா.
“எல்லாம் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கதான…! அவங்க பண்ண மாதிரி இவன் பண்ணமாட்டான்னு என்ன நிச்சயம். எல்லாம் தெரிஞ்சிருந்தும்… கண்ணைத் திறந்திட்டே போயி பாழுங்கிணத்துல எம்பொண்ணைத் தள்ள எனக்கு விருப்பமில்லை!”, என்று பிடிவாதமாக தனது முடிவில் இருந்தவரை
அதற்குமேல் வற்புறுத்த மனதில்லாமல் சற்று நேரம் அமைதியாகி இருந்தார் புஷ்பா.
பிறகு, “என் மனசுல பட்டதைச் சொல்றேன்… அது சரியா? தப்பான்னு தெரியலை!”, என்று பீடிகையோடு ஆரம்பித்த மனைவியை புரியாமல் பார்த்திருந்தார் வெற்றி.
“தாஸண்ணன் பிறந்த கொஞ்ச காலத்துலயே, எங்க பெரியப்பா மலேசியா போயிட்டதா பெரியவங்க சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். அப்ப மலேசியால என்ன நடந்தது அப்டிங்கறதையெல்லாம் எங்க யாருக்கும் சொன்னதில்லை. இப்ப நீங்க சொல்றவரைகூட எனக்குத் தெரியாது”, என்று தனக்குத் தெரிந்ததை கணவரிடம் பகிர்ந்தவர்
“ஆனா, ரொம்ப வருசமா இந்தப் பக்கமே எங்க பெரியப்பா வரலைன்னோ, பெரியப்பாவுக்கு அங்க ஒரு குடும்பம் இருக்குங்கறதை நினைச்சோ, எங்க பெரியம்மாவும் வருத்துப்பட்டு உக்காந்தோ, இல்லை அழுதோ நாங்க யாரும் அப்ப பாத்ததில்லை.
அதனால, எங்க பெரியப்பா பண்ணதா… நீங்க சொல்ற துரோகம், எங்கண்ணனுக்கு தெரியாமயே வளந்திருக்கலாம்.
அந்த மாதிரியான செயலால ஒரு குடும்பத்துல இருக்கிற கஷ்டங்கள் எங்க அண்ணனுக்கு தெரியாமலேயே போயிருக்கலாம்.
குறிப்பா… தாயோட கஷ்டம் என்னனே தெரியாம வளந்திருக்கலாம். அதனால தாஸண்ணனும் பெரியப்பா பண்ண அதே தப்பை யோசிக்காம செய்திருக்கலாம்.
இவ்வளவு செய்திருந்தாலும், இன்னிக்கு வரை சசி அண்ணி, எங்கண்ணனைப் பத்தி எந்தக் குறையும் எங்கிட்ட சொன்னதில்லை.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில எங்கண்ணன் வாழ்க்கை திசை மாறிருச்சு.
சங்கர் எங்க தாஸ் அண்ணன் மாதிரியில்லை. அண்ணியோட ஒவ்வொரு கஷ்டத்தையும் பாத்து வளர்ந்த பக்குவமான பையன்.
தகப்பன் தன்னோட விபரம் தெரிஞ்ச வயசிலயும், வேற ஒரு பொண்ணோட வாழ்ந்ததை பார்த்தவன்.
எங்க பெரியப்பாவோட நிழல்ல வளர்ந்திருந்தாலும், அவங்கம்மாவோட கஷ்டத்தைப் பாத்து வளந்ததோட, அந்தப் பையனும் நிறைய சிரமப்பட்டு, அடிபட்டுத்தான் இன்னிக்கு இந்த நிலைக்கு வந்திருக்கு.
தகப்பன் தவறு செய்யும்போது, சொசைட்டில எந்த மாதிரியான சங்கடங்களை எங்க அண்ணி சந்திச்சாங்க, அந்தப் பையனுக்கு எவ்ளோ மனவருத்தங்கள் அதனால வந்திச்சுங்கறதை எல்லாம் உணர்ந்து வளந்திருக்கு.
அதனால அந்தப் பையனை எனக்கு சந்தேகப்படத் தோணலை!
இதை உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன். அதுக்குமேல உங்க விருப்பம்!
நமக்கு இருக்கிறது ஒரே பொம்பிளைப் புள்ள…! அது ஆசைப்பட்டா… அந்த வாழ்க்கைய அமைச்சுக் குடுக்கற கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கு. கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவெடுங்க…!
சங்கருக்கு வேணானு சொல்லிட்டு, ஒரே குடும்பத்துக்குள்ள வளர்ந்த சாந்தனுவுக்கு நவீனாவை கல்யாணம் பண்ணிக் குடுக்கறதும் எனக்கு அவ்வளவு சரின்னு படலை!
இதனால, எங்க அப்பா வீடுகளுக்குள்ள மனஸ்தாபம் வந்திரும். அப்டி நம்ம பொண்ணை டாக்டருக்குத்தான் கொடுக்கணும்னா, நீங்க வேற மாப்பிள்ளை வெளியில பாருங்க…!
சாந்தனுக்கு கொடுக்க வேணாம்!”, என்று தன் மனதில் உள்ளதை நீண்ட நெடிய உரையாக நிதானமாகவே கணவனிடம் கூறியிருந்தார் புஷ்பா.
மனைவி பேசியதை முழுவதும் கேட்டுவிட்டு, யோசனையோடே வெளியில் கிளம்பிச் சென்றவர், சாந்தனுவின் தந்தை பணிபுரியும் அலுவலகத்திற்குச் சென்று நேரடியாகப் பேசியிருந்தார்.
தாஸ் மற்றும் சசிகலா வந்ததைக் கூறாமல், இனிவரக்கூடிய நல்ல முகூர்த்தத்தில் சாந்தனு, நவீனா திருமணத்தை வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டுவிட்டு, தனது உடல்நிலையை அதற்குக் காரணமாகக் கூறியிருந்தார் வெற்றி.
சங்கர், நவீனா பற்றி அறியாத சாந்தனுவின் தந்தை, வீட்டில் கலந்து கொண்டு விடயத்தைப் பகிர்வதாகக் கூறியிருந்தார்.
////
வீட்டைப் பார்த்துவிட்டுச் சென்றவள், அன்று இரவு சங்கருடன் பேசும்போது, “அந்த வீட்டையே பார்த்து அட்வான்ஸ் குடுத்துருங்க”, என்றிருந்தாள் நவீனா.
சரி என்றவன், “அம்மாகிட்ட இன்னும் பேசலை… அப்பாதான் போனை எடுத்தாரு… உங்கம்மாவுக்கு தலைவலின்னு படுத்திருக்கா… நாளைக்குப் பேசுன்னு”, வச்சிட்டாரு என்று பெண் கேட்காமலேயே பதில் கூறியிருந்தான் சங்கர்.
பெண்ணும் சிறிதுநேரம் சங்கரோடு பேசிவிட்டு, வீட்டிற்குப் பேசினாள்.
தாய் மற்றும் தந்தையின் பேச்சில் எந்த வித்தியாசத்தையும் உணர முடியாதவளாய், உண்மையில் இன்று சசி அத்தையும், தாஸ் மாமாவும் தனது பெற்றோரை சந்தித்துப் பேசினார்களா? என்ற சந்தேகத்தோடே அன்று படுக்கைக்குச் சென்றிருந்தாள்.
///////////////
விடியல் வரை விழித்தே இருந்தவர் நடந்தை எண்ணிக் குமுறியிருந்தாலும், இறுதியாக அன்னம்மாள் சொன்ன வார்த்தைகளில் உயிர்தெழுந்திருந்தார் சசிகலா.
மாலைக் கருக்கலுக்குப் பின்வந்த வேளையில், தாஸை தங்கவேலு மற்றும் ராஜவேலு இருவரும் அழைப்பதாகக் கூற, அங்கு சென்றுவிட்டு வந்தவர், முன்னிலும் தளர்ந்த நடையோடு தங்களது பகுதிக்கு வந்ததைக் கண்ட அன்னம்மாள்,
“ஏம்மா சசி… காரைக்குடிக்கு போயிட்டு வந்ததுல இருந்து ஏன் இப்டி முடங்கிக் கிடக்கிற?
இங்க வா… உம்புருசனக் கூப்பிட்டு பெரியவுக ஏதோ பேசனும்னு வரச் சொன்னாகன்னு போனான். போயிட்டு வந்தவன் நாலு நாளு பட்டினியாக் கிடந்தவன் கணக்கா, சோந்து போயி அறைக்குள்ள போயி படுத்துட்டான். போயி என்னானு கேளு”, என்று மருமகளை எழுப்பி விரட்டியிருந்தார் அன்னம்மாள்.
மாமியாரின் பேச்சைக் கேட்டு எழுந்து முகம் கழுவி வந்தவளுக்கு, இளஞ்சூடான பாலைக் கையில் குடுத்து, “மொதல்ல இதக் குடி… அப்புறம் பேசலாம்”, என்ற மருமகளின் கையில் பாலைத் திணித்திருந்தார் அன்னம்மாள்.
வாங்கிக் குடிக்கத் துவங்கியவர், குடித்து முடித்தவுடன் மாமியார் கேட்கப் போகும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல என்று தயங்கியவாறே மெதுவாகக் குடிக்க
“போன இடத்தில என்னாச்சு… போயிட்டு வந்ததுல இருந்து உங்க ரெண்டுபேரும் மொகமும் சரியில்லையே”, என்று பேச்சைத் துவங்கியிருந்தார் அன்னம்மாள்.
“டாக்டருக்கு படிச்ச பையனுக்குத்தான் எம்பொண்ணைக் குடுக்கப் போறேன்னு சொல்லிருச்சு அண்ணே”, என்றவருக்கு அவரையும் மீறி கண்களில் நீர் வழிந்திருந்தது.
“இதுக்கு ஏன் அழுகுற… கண்ணைத் தொடை முதல்ல… கடலையே கண்ணுக்குள்ள வச்சிக்கிட்டு தெரியற”, என்று மருமகளின் கண்ணீரைக் கண்டு கடிந்தவர்
“எல்லாம் அவன் விருப்பப்படிதான் நடக்கும்”, என்று ஆறுதல் கூறினார்.
அடுத்து சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, “அப்டி நடக்கலைன்னாலும் அதுக்கு வருத்தப்படக்கூடாது சசி. எல்லாத்தையும் ஏத்துக்க பழகிக்கணும்”, என்று மாமியாராக மருமகளிடம் நடைமுறையைச் சொன்னவர்
“அவன் கேட்டா நான் என்னனு சொல்லுவேன் அத்தை”, என்று அழத் துவங்க
“எல்லாத்தையும் எம்பேரன் பாத்துக்குவான்…! எம்பேரனையும் சேத்து எம்பேத்தி மகராசியா இங்க வந்து நல்லா பாத்துக்குவா…!”, என்று வாக்குபோல கூறியவர்
“சித்திராங்கி அவ…! எதையும் புடிச்சுப் போச்சுன்னா… யாருக்கும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டா…! ராங்கி மாதிரி பாக்கும்போது பார்வைக்குத் தெரிஞ்சாலும் பாசக்காரி! நம்ம வீட்டுக்கு அவதான் நமக்குப் பின்ன எல்லாத்தையும் ஆள வருவா…! நீயே இப்டி அழுதா… சின்னஞ்சிறுசுக… பயந்து போயிருங்க!”, என்று கண்டிப்போடு கூறினார்
“அவங்கிட்ட அங்க என்ன நடந்துதுன்னு போயிக் கேளு”, என்று மருமகளை தாஸின் அறைக்கு அனுப்பி வைத்திருந்தார்.
—
வெற்றி வந்து கூறிச் சென்றதை, சாந்தனுவின் தகப்பனார் ராஜவேலுவிடம் கூற, பெரியவர்கள் ஒன்று கூடி பேசியிருந்தனர்.
தங்கவேலுவிற்கு சந்தோசமே. ஆனால் தாஸிற்கு தனது மகனுக்கு நவீனாவைக் கேட்ட விடயத்தைப் பொதுவில், விடயம் இத்தனை தூரம் வந்தபிறகு பகிர மனம் தடுத்ததால், அவர்களின் பேச்சை மட்டும் கேட்டவர், பதில் எதுவும் பேசாமல் எழுந்து வந்ததையும் அறிந்து கொண்டார், சசி.
தலைக்கு மேல் போனவிடயத்தில் தான் எதுவும் செய்ய இயலாத சூழல்.
சாந்தனுவிற்கு திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதால், அதற்குமுன் சங்கருக்கு முடிக்க பெண்ணைத் தேடி முடிவு செய்யுமாறு தாஸிடம் கூறி அனுப்பியிருந்தார்கள்.
சசிகலாவிற்கு மனமே ஆறவில்லை. சங்கரைவிட சாந்தனு மருத்துவன் என்பதைத் தவிர எந்த விதத்தில் நவீனாவிற்கு ஏற்ற மாப்பிள்ளை என்று கணவனிடம் கேட்க,
“விடு சசி… வெற்றி வேற ஏதோ மனசுல வச்சுப் பேசுற மாதிரியிருக்கு. நவீனாவுக்கு சங்கரைப் புடிச்சிருந்தா… கண்டிப்பா நம்ம வீட்டுக்கு அந்தப் புள்ளயே மருமகளா வரும்… அதுல எந்த மாற்றமும் இல்லை”, என்று கூறியிருந்தார் தாஸ்.
இருவரும் தங்களது மனக் குமுறல்களைப் பேசி முடிவுக்கு வந்ததோடு, அன்னம்மாளிடமும் விடயத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
“சங்கரூதான் இப்ப இந்த வீட்ல மூத்தவன். அவன் கல்யாணத்துக்கு இருக்கும்போது எப்டி சாந்தனுவுக்கு கல்யாணம் பண்ண முடியும்னு, நவீனாவை பொண்ணு கேட்ட விசயத்தை கூப்பிட்டு சொல்றாங்க… இல்லைனா இந்த விசயம் நமக்குத் தெரிஞ்சிருக்காது!”, என்றவர்
“வர வர மக்களோட மனசையே புரிஞ்சுக்க முடியலை…! இன்னிக்கு கூப்டு சொல்றவங்க… போயி கேக்கப் போறதுக்கு முன்னே ஒரு வார்த்தை நம்மகிட்ட சொல்லியிருக்கலாம்!”, என்று தனக்குள் பேசியவர்
“ராஜு தம்பிட்டயும், தங்கம் தம்பிட்டயும் நானே விசயத்தை சொல்லி கேக்கறேன்”, என்று கூறியவர்
“அவங்க ஒத்து வந்தா… நவீனாவை சங்கருக்கு பிரச்சனையில்லாம கல்யாணம் பண்ணிவைக்கலாம். இல்லைனா பொண்ணோட விருப்பத்தைக் கேட்டுகிட்டு, யாருகிட்டயும் சொல்லாம கொள்ளாம கோவில்ல வச்சு தாலியக் கட்டி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திர வேண்டியதுதான்”, என்று முடித்திருந்தார் அன்னம்மாள்.
இலகுவாகப் பேசிய அன்னம்மாளைக் கண்டு, சசி வியந்து பார்த்தபடியே, “அது… அவ்ளோ நல்லாயிருக்காதுல்ல அத்தை…! அண்ணன் விருப்பத்தோட கல்யாணம் பண்ணாதான் நம்ம சங்கருக்கு பண்ணலாம். இல்லைனா…!”, என்று இழுக்க
“அடி கூறுகெட்டவளே…! எப்ப வந்து பாசப்பயிரு வளக்கிற….! இதுவா பாசம் வளக்கிற நேரம்…! புள்ளையா, அண்ணனானு முதல்ல முடிவு பண்ணு…! அப்புறம் யோசி!”, என்று வெடுக்கென்று மருமகளைப் பேசியவர்
“எல்லாத்துக்கும், எல்லாரும், எல்லா நேரத்திலயும் நல்லவுகளா நடந்துக்க முடியாது சசி…! அதனால மகனுக்கு நல்லதுன்னு ஒன்னு நடக்கனும்னா… உங்க அண்ணனுக்கு நீ நல்ல தங்கச்சியா இருக்க முடியாது!
அண்ணனுக்கு நல்ல தங்கச்சிய இருந்தா… மயனுக்கு அவன் நினைச்சதை செய்ய முடியாது!”, என்று நிதர்சனத்தை நெற்றிப் பொட்டில் அடித்தமாதிரி மருமகளிடம் பேசியிருந்தார் அன்னம்மாள்
“நடக்கிறது எல்லாம் நல்லா நடக்கும். இப்போ உன் மகனுக்கும், நவீனாவுக்கும் நல்லபடியா கல்யாணம் நடக்கனும்னு சாமிக்கு நினைச்சுகிட்டு போயி அஞ்சு ரூவாய எடுத்து தனியா மஞ்சத் துணியில முடிஞ்சு வையி!”, என்றுவிட்டு உறங்கச் சென்றுவிட்டார் அன்னம்மாள்.
மாமியார் சொன்னதைச் செய்துவிட்டு வந்தவருக்கு, காலையில் மகன் அழைத்துக் கேட்டால் என்ன பதில் சொல்லலாம் என்ற சிந்தனையோடு படுத்திருந்தார் சசிகலா.
///////
அதிகாலை ஐந்து மணிக்கு அழைப்பு வந்திருந்தது.
சசிகலாவிற்கு மகன் தான் அழைக்கிறான் என்று வந்து அழைப்பை எடுக்க, “அத்தை… நான் நவீனா…!”, என்று பேசியவளைக் கேட்டு
“என்னடாம்மா நல்லாயிருக்கியா? என்ன இவ்வளவு வெள்ளன போனு போட்டுருக்க!”, என்று பதறியிருந்தார் சசி.
“பயப்படற அளவு ஒன்னுமில்லத்தை…! நீங்க நேத்து எங்க வீட்டுக்குப் போறதா அவங்க சொன்னாங்க!”, என்று கூறியதுமே
சசிகலாவிற்கு புரிந்திருந்தது. பெண் அவளுக்கு வேண்டிய விடயத்தை அறிந்து கொள்ளவேண்டியே பேசியிருக்கிறாள் என்று.
“அது… அப்பா உங்கிட்ட என்னனு சொல்லுவாங்கடா…!”, என்று சசிகலா இழுக்க
“ஏந்தை…!. அதை நீங்க சொன்னா என்ன?”, என்ற விடாமல் கேட்க
“நான் சொல்றதைவிட அப்பா சொன்னாதாண்டா நல்லா இருக்கும்!”, என்றதுமே
பெண்ணுக்கு புரிந்திருந்தது. காரைக்குடியில் ஏதோ மனதிற்குப் பிடிக்காத வகையில் நடந்திருக்கிறது என்று….!
“சும்மா சொல்லுங்கத்தை…! நான் எதுவும் தெரிஞ்சமாதிரி காட்டிக்க மாட்டேன்…! அப்பா, அம்மாகிட்ட இதைப்பத்தி என்னால கேக்க முடியாது”, என்று கூறியிருந்தாள் பெண்.
ஜாடை மாடையாக பெண்ணிடம் கிண்டல், கேலி என்று சசிகலாவும், மோனிகாவும் பேசியிருந்த தைரியத்தில், நவீனா சசிகலாவிற்கு அழைத்ததோடு, துணிந்து தங்களது விடயம் பற்றிக் கேட்டிருந்தாள்.
ஆனால் வீட்டில் யாருக்கும் தெரியாத விடயத்தைப் பற்றி என்னவென்று, யாரிடம் சென்று கேட்பாள் என்பதும் சசிகலாவிற்குப் புரிய, “அப்பா… நீ டாக்டருக்கு படிக்கிறேங்கறதால… உனக்கு டாக்டர் மாப்பிள்ளை பாக்கறதா சொல்லிட்டாங்கடா…!”, என்று கூறி முடிக்க, எதிரில் சற்றுநேரம் தொலைபேசியை கையில் வைத்தபடியே நின்றவள்
“சரித்தை….! எனக்கு ஹாஸ்பிடல்கு நேரமாகிருச்சு…! நான் சாயந்திரம் கூப்பிடறேன்!”, என்று அவசரமாக வைத்திருந்தாள் பெண்.
“சரிம்மா, உடம்பைப் பாத்துக்கோ”, என்று சசிகலாவும் பெருமூச்சினை வெளிவிட்டவாறு தொலைபேசியை வைத்திருந்தார்.
வைத்த கையோடு, சங்கருக்கு அழைத்துப் பேசிய நவீனா, சசிகலா கூறியதை சங்கரிம் பேசிவிட்டு, “ரிலாக்ஸா யோசிங்க… ஃபார்மரூ…! ரெண்டு நாள் எனக்கு டைட் செட்யூல்….! நான் ரிலாக்ஸாகிட்டு கால் பண்றேன்…! பை”, என்று விட்டு வைத்திருந்தாள் நவீனா.
காலையில் தாயிக்கு அழைத்துக் கேட்க எண்ணியவன், விடியலில் எதற்கு தொந்திரவு செய்ய வேண்டும்… என்று நேரம் கழித்து அழைத்துப் பேச எண்ணியிருந்தான்.
பெண்ணோ எல்லாவற்றையும் கூறியவள், “யாரு அந்த டாக்டரூன்னு பாத்திருவோம்”, என்றுவிட்டு வைத்திருந்தாள்.
/////////////
மாலையில் தாயுடன் பேசிய சங்கர், சாந்தனுவிற்கு நவீனாவைத் தர ஒப்புக்கொண்டதையும் தாயின் வாயிலாக அறிந்து கொண்டிருந்தான்.
பெண் சற்று வேலைப்பளுவோடு இருப்பதால், அவள் அழைக்கும் வரை காத்திருக்க முடிவு செய்திருந்தான்.
என்ன காரணத்தினால் நவீனாவை தனக்குத் தர, வெற்றிவேல் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார் என்கிற யோசனையில் ஆழ்ந்திருந்தான் சங்கர்.
இரண்டு காரணிகளில் ஒன்று அவரே கூறியது. தான் மருத்துவன் அல்லன் என்பது.
மற்றொன்று, தான் ஒரு விவசாயி. வேளாண் சார்ந்த தொழில் செய்வதால் மனதில் ஏதோ நெருடல் காரணமாக தனது பெண்ணைக் கொடுக்க தயக்கம் இருக்கலாம்.
அரசாங்க உத்யோகமோ, வேறு எந்த மதிப்பான உத்தியோகத்தில் தான் இருந்திருந்தாலும், வெற்றி தன்னை மருமகனாக்கிக் கொள்ள இசைந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாமோ என்று ஒரு மனம் அவனைச் சாடியது.
இதுவரை, என்றும் தன்னிடம் முகம் சுழித்துப் பேசியவர் அல்ல. தானும் அவரிடம் முறையற்று நடந்து கொண்டதும் அல்ல என்கிற சீரிய நிலையில் யோசித்திருந்தான் சங்கர்.
தந்தையைக் கொண்டு தன்னை யோசிப்பார் என்று ஏனோ சங்கருக்குத் தோன்றவில்லை.
தந்தையின் முறையற்ற வாழ்வு முடிவுக்கு வந்து சில ஆண்டுகள் கடந்திருந்த நிலையில், அதைப்பற்றி சங்கர் யோசித்திருக்கவில்லை.
பெண் என்ன சொல்கிறாள் என்று கேட்போம் என்று காத்திருந்தான் சங்கர்.
பெண்ணும் இரண்டு நாட்கள் என்றவள், நான்கு நாட்களுக்குப்பின் அழைத்துப் பேசியிருந்தாள்.
“என்னை எங்கையாவது வெளிய கூட்டிட்டுப் போங்க”, என்று எடுத்தவுடன் பேசியவளை
“நீயே சொல்லு. எங்க போகலாம்”, என்று பெண்ணிடமே யோசனை கேட்டிருந்தான் சங்கர்.
“யோவ்… கேள்வி கேக்காம வந்து கூப்ட வாயா…”, என்று கத்திவிட்டு வைத்திருந்தாள் நவீனா.
அவ்வளவு எளிதில் மரியாதைக் குறைவாக தன்னைப் பேசமாட்டாள் என்பது சங்கருக்குத் திண்ணம். அப்டியிருக்க இன்று பெண் பேசியதைக் கொண்டே பெண்ணின் மனநிலையை உள்வாங்கியிருந்தான்.
பெண்ணை அழைத்துக் கொண்டு, அட்வான்ஸ் கொடுத்து சுத்தம் செய்து பால் காய்ச்ச ஏதுவாக வைத்திருந்த தங்களுக்காக பார்த்திருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான்.
அமைதியாக இருந்தவள், “இப்பதான் உருப்படியா ஒரு விசயம் பண்ணியிருக்கீங்க”, என்றவள்
“எப்ப பால் காய்ச்சலாம்?”, என்று கேட்டாள்.
“நல்ல நாள் பாக்கணுமில்ல?”, சந்தேகத்துடனேயே கேட்டான் சங்கர்.
“பாருங்க… இவ்ளோ பாத்தவங்க… அதையும் பாத்து பாலைக் காய்ச்சிருக்கலாம்ல”, என இலகுவாகக் கூறியிருந்தாள் நவீனா.
“நீ இல்லாமலா?”, இது பெண்ணின் பேச்சினால் வந்த வினா.
“எல்லாத்துக்கும் நானே வரணும்னு நினைச்சா உங்க பாடு கஷ்டந்தான்”, என்ற பெண்ணின் வார்த்தையைக் கேட்டவனுக்கு இலகுவான நேரமாக இருந்தால் பதில் பேசியிருப்பான். தற்போது ஏனோ மனதின் சுணக்கத்தினால் அமைதியாக இருந்தான்.
“அம்மாவை வரச் சொல்லவா?”, பெண் எடுத்துச் செய்யாவிட்டால், அடுத்து அம்மாவின் தயவு மட்டுமே என்பது ஆண்பிள்ளைகளுக்கு சாசுவதம்.
“சொல்லுங்க… நல்ல நாள் பாத்து வந்து, பாலைக் காய்ச்சிட்டுப் போகச் சொல்லுங்களேன்”, என்று நவீனா முடித்திருந்தாள்.
“அப்ப நீ வரமாட்டியா?”, பட்டும் படாமல் பேசியவளின் பேச்சைக் கேட்டு கேட்டிருந்தான்.
“வராம எங்க போகப் போறேன். கண்டிப்பா பால் குடிக்க வந்திருவேன்”, என்றவளை
“யாரோ மூனா மனுசி மாதிரி பேசிட்டு இருக்க… இந்த வீட்டுக்கு நீங்க தான டாக்டரே எல்லாமே…”, என்று நினைவுறுத்த
“எனக்கு எல்லாமே நீங்க தான… ஃபார்மரூ”, என்றவள்,
“அப்ப நீங்க தான எல்லாம் செய்யணும்”, என்று விட்டு கழுவி சுத்தமாக இருந்த அந்த வீட்டில் தரையில் அமர்ந்துவிட்டாள்.
“இப்ப யாரு உனக்கு சோறு போடப் போறானு… பந்தியில உக்கார மாதிரி வந்து உக்கார”, என்று கிண்டல் செய்ய
“வரும்போதே எதாவது சாப்பிட வாங்கிட்டு வந்திருக்கலாம்”, என்று பெண் சலித்துக் கொள்ள
“பசிச்சா வரும்போதே சொல்றதுக்கென்ன…”, என்றவன்,
“சரி கிளம்பு… போயி எங்காவது சாப்பிட்டு போலாம்”, என்று பெண்ணைக் கிளப்ப
“நாலு நாளைக்கு முன்ன சொன்ன விசயத்தை மறந்துட்டு ஹாயா திரியறீங்களே? உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?”, என்று இப்போது ஆரம்பிப்பான், அடுத்து ஆரம்பிப்பான் என்று காத்திருந்தவள் துவங்கியிருந்தாள்.
“விருந்துக்கா வந்திருக்கேன்…”, என்று கேட்டவள், “என்ன முடிவு பண்ணியிருக்கீங்க”, என்று சங்கரைக் கேட்டாள்.
“நீதான் அந்த டாக்டர் யாருனு பாப்போம்னு வச்சிட்ட”, என்று சங்கர் தனக்குத் தெரிந்ததை தெரியாதபோல கேட்டு இழுக்க…
“அந்த டாக்டரூ நம்ம சாந்தனுதான்…”, என்று எந்த சங்கடமும் இல்லாமல் சங்கரிடம் கூறியவள்
“அவங்கிட்டயும் பேசிட்டேன்…. அவன் கதைக்கு ஆகமாட்டான்போல… ரொம்ப பேசறான்… அதனால நீங்க என்ன பண்ணுறீங்க… அத்தை, மாமாவை இங்க வரச் சொல்லி அடுத்து என்ன செய்யலாம்னு கேளுங்க?”, என்று பெண் சங்கரை ஏவ
பெண்ணின் எதிரே வந்து அருகில் அமர்ந்தவன், “என்ன சொன்னான்?”, என்று தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்கிற வேகம் குரலில் ஒலிக்க கேட்டிருந்தான் சங்கர்.
“அன்னம்மா ஆச்சி பேசுனாங்களாம் தாத்தா ரெண்டு பேருட்டயும்… மாப்பிள்ளைக்கு இங்கதான சம்பந்தம் பண்ண பிரியப்படறாரு… அதனால… உங்களுக்கு வேற பொண்ணு பாருங்கனு ராஜு தாத்தா சொல்லிட்டாராம்”, என்று நிறுத்திய நவீனா
“அதனால… சாந்தனு பெரியவங்க பேச்சைத் தட்ட மாட்டானாம். வேணுனா நானே போயி எங்கப்பாகிட்ட… சாந்தனு வேணாம்னு சொல்லவாம்”, என்றவள்
“அவங்கிட்ட இனி பேச எதுவுமில்ல… அதனால அவனை விட்டுத் தள்ளுங்க… அத்தை, மாமாக்கிட்ட என்ன செய்யனு கேட்டிட்டு… அவங்க சொல்ற மாதிரி செய்வோம்”, என்று கூலாக பேசியிருந்தாள் பெண்.
“நீ உங்க வீட்ல பேசினியா?”
“ம்… எங்க அம்மாவும், அப்பாவும் இங்க வந்தாங்க… எங்க அப்பா ஜாடை மாடையா பேசினாங்க… உனக்கு இன்னும் அந்தப் பக்குவம் வரல… இன்னும் நல்லது கெட்டது தெரியாத வயசிலதான் இருக்க… நீ டாக்டரூ… அதனால.. உனக்கு டாக்டர் பையனைப் பார்த்தா உன் கேரியர், உன் ஃபியூச்சர் நல்லா இருக்கும்னு நிறைய அட்வைஸ் பண்ணிட்டு போயிருக்காங்க”, என்று உண்மையை விளக்கியவள்
“எனக்கு நீங்கனு முடிவு செய்து பலகாலம் ஆயிருச்சு… அதனால இப்ப மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பார்ப்போம்”, என்று கூலாக கூறியவளைக் கண்டவன்
“பின்னாடி…. எங்க அம்மா அப்பா யாரும் கல்யாணத்துல வந்து கலந்துக்கலைன்னு நம்ம வாழ்நாள்ல என்னைக்குமே உனக்கு வருத்தம் வராதா?”, என்று சங்கர் கேட்க
“வருத்தம் எல்லாம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக… அவங்க வருத்தப்படக் கூடாதுன்னா… நான் வருத்தப்படற நிலைமைக்கு என்னைய தள்ளி விட்டுருவாங்களே…”, என்று தனது நிலையை யூகித்துக் கூறினாள்.
“நல்லா யோசிச்சுதான சொல்லுற நவீனா?”, என்ற பெண்ணிடம் கேட்க
“யோசிச்சதுலதான் மண்டை காஞ்சு வந்திருக்கேன்…”, என்றவள்,
“மனசெல்லாம் ஒரே பாரமா ஃபீல் ஆகுது…”, என்று தளுதளுத்த குரலில் கூறியவள்,
“சீக்கிரம் இந்த ஃபீல் மாறனும் எனக்கு… அதுக்கு மருந்து நீங்கதான்”, என்று வெட்கம் விட்டு சங்கரிடம் கூறியவள்
அதற்குமேல் சங்கரைப் பார்த்துப் பேச சங்கடம் உண்டானதால், அவனருகில் வந்து அமர்ந்து தோளில் சாய்ந்தவாறு பேசினாள்.
“ரொம்ப நாள் என்னால வயிட் பண்ண முடியாது… இந்த ஸ்ட்ரெஸ் என்னால தாங்க முடியல… எவ்வளவு வருசம்னாலும் உங்களுக்காக வயிட் பண்ண முடியும். ஆனா வேற யாரையும் என்னால என் லைஃப் பார்ட்னரா நினைச்சுப் பாக்க முடியல”, என்று கூறியவள்,
“இவங்க படற அவசரத்துல என்னை எங்காவது தள்ளிவிட்டா… என்னால எதுலயும் ஒட்ட முடியாது. அதை அப்பாவுக்கு என்னால புரிய வைக்க முடியல…”, என்று கரகரத்த குரலில் பேசினாள்.
“எவ்வளவு சீக்கிரமானாலும் நான் ரெடி… நீங்க ஏற்பாடு பண்ணிட்டு வான்னு சொல்றப்போ உங்களோட வந்திருவேன்”, என்றவள், சங்கர் எதிர்பார்க்கும்முன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழத் துவங்கியிருந்தாள்.
இத்தனை ஆண்டுகள் நவீனாவைப் பார்த்திருந்தவனுக்கு, பெண் தனக்காக அழுகிறாள் என்கிற எண்ணமே ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், மறுமனம் நவீனாவின் அழுகையைக் கண்டு வருத்தத்தையும் தத்தெடுத்திருந்தது.
பெண்ணின் முதுகைத் தட்டி ஆறுதல் கூறியவன், பெண் அழுது முடிக்கும்வரைக் காத்திருந்தான். பிறகு,
“அம்மாகிட்ட இன்னிக்கு பேசிறேன்… எதுக்கும் வருத்தப்படாத”, என்றவன்
“முகத்தை கழுவிட்டு ரெஃப்ரெஷ் பண்ணு… நான் இங்க எங்காவது பக்கத்துல போயி சாப்பாடு வாங்கிட்டு வரேன்”, என்று பெண்ணிடம் கூறிக்கொண்டு வெளியில் கிளம்பியிருந்தான்.
வாங்கி வந்திருந்த உணவை இருவரும் பேசாமல் அமைதியாக உண்டுவிட்டு, வீட்டில் சிறு, சிறு தேவைகள் மற்றும் மாற்றங்களை மட்டும் சங்கரிடம் கூறிவிட்டுக் கிளம்பியிருந்தாள் பெண்.
சிக்கலில்லாமல் நவீனா, சங்கரின் எண்ணங்கள் நிறைவேறுமா?
அடுத்த அத்தியாயத்தில்….