TholilSaayaVaa13

 

13

 

மேற்கு தொடர்ச்சி மலையில், முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகிலிருக்கும் சுற்றுலா தளத்திற்கு பைரவ் காரில் அனைவரும் வெள்ளிக்கிழமை காலையே புறப்பட்டு, மாலையில் ரிஸார்ட்டை அடைந்தனர்.

 

மாதவன் இணையவழியே ஒரு நாள் ரிசார்ட்டிலும், இரண்டு நாட்கள் மரத்தின் மேல் அமைந்திருந்த ட்ரீ ஹவுசிலும் தங்க புக்கிங் செய்து வைத்திருந்தான். 

 

முதல் நாள் பயண களைப்பில் பெரியர்வர்கள் உறங்க சென்றுவிட, இளையவர்கள் மூவரும், கேம்ப் ஃபயர் (நெருப்பு) எதிரே குளிர் காய்ந்தபடி அமர்ந்திருந்தனர்.

 

பைரவும் மாதவனும் பேசிக்கொண்டிருக்க, மாயா தங்களை சுற்றி இருப்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அவர்களிடமிருந்து சற்று தள்ளி, ஒரு இளைஞர்கள் குழு இருந்தனர். ஒருவன் மட்டும் மரத்தில் சாய்ந்தபடி வயலினை வாசித்துக்கொண்டிருக்க, மற்றவர்கள் அவனை சுற்றி அமர்ந்து தாளம் தட்டிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தனர். 

 

மாயாவின் பார்வை அந்த இளைஞனை விட்டு அகலவேயில்லை.

 

சாய்ந்திருந்த அந்த இளைஞனின் வசீகர தோற்றம் மாயாவின் விழிகளை சிறைபிடித்திருந்தது.

 

மாதவனின் தோளை பற்றியவள் “டேய் டேய் அங்க ஒருத்தன் இருக்கான்… செமயா இருக்கான். உடனே பாக்காத மெதுவா பாருங்க” மாயா, ஆண்கள் இருவரிடத்திலும் ரகசியமாய் சொல்ல.

 

சடாரென்று திரும்பிய பைரவ்,

“யாரு?” கோவமாக கேட்க,

 

மாதவனோ, “என்ன இப்ப?” விட்டேத்தியாக கேட்டான்.

 

“போடாங்க! என்னமா இருக்கான் ஐயோ செம்மயா இருக்கானே” 

 

“யாருன்னு கேட்கறேன்ல?” எரிந்து விழுந்தான் பைரவ்.

 

“எங்க பாக்கற? அங்க மரத்துல சாஞ்சுகிட்டு… கைல வயிலினோட…” அவனுக்கு அவ்வாலிபனை காட்டியவள்,

 

“என்னமா இருக்கான்! அளவான உயரம், ரெண்டு மூணு நாள் ஆகிறுக்குமா ஷேவ் பண்ணி, ஐயோ அவன் மீசையை பாரேன் என்ன டார்க்கா இருக்கு!

 

அவன் டார்க் ஸ்கின்க்கு அந்த வெள்ளை சட்டையும் அதையும் முழங்கைவரை மடிச்சுவிட்டிருக்கிற ‌ஸ்டைலும், ஆலிவ் ஷார்ட்ஸ்! ஐயோ கொல்றானே” அந்த இளைஞயனின் எதிரே இருந்த நெருப்பின் ஒளியில் அவன் உடல் நிறம்  வைரம்போல் மின்னிக்கொண்டிருந்தது. 

 

மாதவன், சிரித்தபடி “அடிப்பாவி ஒரு பையனை இப்படியா சைட் அடிப்பே. பாவம் யார் பெத்த புள்ளயோ உன் கண்ணு பட்டிருக்கும்” கிண்டல் செய்ய, 

 

“செல்லா குட்டி என்னமா வாசிக்கிறான்” அவள் தன்னை மறந்து அவனையே ரசித்திருந்தாள்.   

 

பெரிதாக எடுத்துக்கொள்ளாத மாதவன், அவர்களுக்கு தேநீர் வாங்கிக்கொண்டு வர எழுந்து சென்றான்.

 

அவ்விளைஞனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்த மாயா, தன் அருகில், கண்கள் சிவந்து, தாடை இறுகி, பற்களை கடித்துக்கொண்டு அந்த இளைஞனை கொலைவெறியோடு பார்த்துக்கொண்டிருந்த பைரவை பார்க்க தவறிவிட்டாள்.

 

“பேசாம போய் அவன் கிட்ட ஆட்டோ க்ராஃப் வாங்கி, உன் ரூம்ல பிரேம் போட்டுவை” கடுகடுத்தபடி எழுந்து நடந்த பைரவ் கவனிக்கவில்லை, அந்த இளைஞயனை நோக்கி எழுது சென்ற மாயாவை. 

 

“அது எங்க பா?” கையில் தேநீருடன் வந்த மாதவன் கேட்க, திரும்பிய பைரவ் அதிர்ச்சியில் கண்கள் விரித்தான்.

 

அந்த இளைஞர் குழுவுடன் பேச துவங்கியிருந்தாள் மாயா. 

 

“அடிப்பாவி, எப்போவும் போல சும்மா சைட் அடிக்கிறானு பாத்தேன். பேசவே போயிடுச்சா” மாதவன் தேநீரை பைரவ் கையில் தர,

 

வாசிப்பதை நிறுத்தியிருந்த இளைஞனின் கையை குலுக்கி சிரித்து பேச துவங்கியிருந்தாள் மாயா. அதை கண்ட பைரவ் ஆத்திரத்தில், கையிலிருந்த சூடான காகித தேநீர் கோப்பையை நசுக்க,.

 

கொதிக்க கொதிக்க அவன் கையில் கொட்டிய தேநீரில், “ஸ்ஸ்” என்று ஒரு நொடி கையை உதறியவன் வேகமாக மாயாவை நோக்கி செல்ல,

 

“பைரவ் வெயிட்” மாதவன் பின்னாலே சென்றான்.

 

“நிஜமாவா?” மாயா சொல்லிக்கொண்டிருக்க,

 

“ப்ராமிஸ்” தன் கழுத்தில் விரல் வைத்து சொல்லி சிரித்து கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

 

“மாயா!” பைரவின் குரலில் அவன் அதிர்ந்து திரும்ப, மாயாவோ அலட்டிக்கொள்ளாமல்,

 

“வா வா இது பைரவ், என் பெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டீ” கண்களை மூடி அழுத்தமாய் சொல்லி அவனுக்கு அறிமுகம் செய்தவள். பைரவின் பின்னாலே வந்த மாதவனை காட்டி “அது என் அண்ணா, மாதவன்.”

 

“ஹாய் நான் முகிலன்” புன்னகையுடன் ஆண்கள் இருவரிடமும் தன்னை அறிமுகம் செய்துகொண்டான் அவன். 

 

“முகில், சென்னைல பெரிய கராத்தே அகெடெமி வச்சுருக்கார். கராத்தே மாஸ்டர்! சொந்த ஊர் கோவைதானாம்” மாயா ஆர்வமாக சொல்ல, 

 

“ரொம்பலாம் இல்லைங்க, இவங்க பெரிசா சொல்றாங்க. சின்னதா ஒரு கராத்தே ஸ்கூல் நடத்துறோம் நானும், என் பிரென்ட் ரொனால்டும், அதோ அங்க இருக்கானே…” 

 

முகலனின் எளிமையும் தன்னடக்கமும் மாயாவை இன்னும் ஆர்வமாக்கியது.

 

மாதவனும் முகிலனும் பேசிக்கொண்டிருக்க, மாயா, முகிலனை கண் இமைக்காமல் பார்த்து  கொண்டிருப்பதை கவனித்த பைரவிற்கு எனோ சொல்லத்தெரியாத கோவம், வெறுப்பு, ‘என்னை பாறேண்டி!’ என்று மனம் அலறிக்கொண்டிருக்க, வெளியில் அமைதியாக மாயாவை வெறித்திருந்தான்.

 

“மாயா போலாமா?” பைரவ் கேட்க,

 

“நீ போ நான் முகில் கூட பேசிட்டு வரேன்” 

 

“நாளைக்கு சீக்கிரமா போனா அருவிகிட்ட சீனரி நல்லா இருக்கும், தூங்கபோலாம் வா” பைரவ் விடுவதாய் இல்லை.

 

“நீ போ மா” 

 

“அவர் சொல்றது சரி மாயா… விடியற்காலை அந்த அருவி பார்க்க அத்தனை ரொமேன்டிக்கா இருக்கும். மிஸ்  பண்ணவே கூடாது. நாங்களும் காலை அங்கதான் போக பிளான் போட்டிருக்கோம்” முகிலன் மாயாவை பார்த்து துவங்கி, பைரவை பார்த்து புன்னகைத்து, மாதவன் முகத்தை பார்த்தபடி சொல்லி முடித்தான்.

 

அரை மனத்துடன் அங்கிருந்து கிளம்பிய மாயா, பைரவிடம்

“என்ன பாஸ் நீ, இருந்து இருந்து ஒருத்தனை பிடிச்சு பேச போனேன், வா வான்னு உயிரெடுக்கறே” அலுத்தபடி நடந்தாள்.

 

மாதவனோ, “அங்க சொல்லவேண்டாம்னு இருந்தேன், இப்படி முன்ன பின்ன தெரியாத இடத்துல, அதுவும் ஒரு கும்பல்ல இருக்க ஆம்பளைகிட்ட போயி பேசுறது நல்லா இல்லை டா. என்ன நினைப்பாங்க பாக்குறவங்க? அவன் நல்லவனா கெட்டவனா எதுவும் தெரியாது.” 

 

பைரவ் கோவமாக, “அதை சொல்லு இந்த மெண்டல் கிட்ட, பைத்தியம்! சைட் அடிச்சா அத்தோட நிறுத்தணும். நேர போயி பேசுவியா? கேவலமா நினைப்பான் அவனே!” முறைத்தபடி நடந்தான்.

 

அவனை முந்திக்கொண்டு நடந்த மாயா, “நீங்க ரெண்டு பேரும்தான் கேவலமா பண்றீங்க. முகில் சோ ஸ்வீட்!” நாக்கை துருத்தி சொல்ல,

 

“முகில் இல்ல முகிலன்!” முறைத்தான் பைரவ்.

 

“முகில் அதான் எனக்கு பிடிச்சுருக்கு” அவனை முறைத்தவள், “மாயா முகில்” சொல்லி “ஹை! செம்மயா இருக்கே” தனக்குத்தானே பூரித்தவள்,

 

“குட் நைட் பாஸ்! குட் நைட் டா” ஆண்கள் இருவருக்கும் சொல்லிவிட்டு, வாணியின் அறைக்கு சென்றுவிட்டாள். 

 

வாணி, மாயா ஒரு அறை, கீதா, கிருஷ்ணன் ஒரு அறை மற்றும் பைரவ், மாதவன் ஒரு அறை என்று முதல்நாள் புக் செய்திருந்தனர்.

 

தங்கள் அறைக்கு வந்த பைரவ், மாதவனிடம், “நீ அவளை கண்டிக்கணும். யாரோ எவனோ, இந்த லூசுக்கு அறிவே இல்ல, உடனே குடுகுடுன்னு ஓடணுமா?” பொரிந்து கொண்டிருந்தான்.

 

“உனக்கு இதெல்லாம் புதுசுன்னு நெனைக்கிறேன், எனக்கு இவ கூட ஸ்கூல்லிருந்தே இது பழகிபோச்சு. ஆம்பளை பொம்பளை வித்தியாமெல்லாம் அதுக்கு புரியாது, புடிச்சுப்போச்சுன்னா பிரென்ட் ஆகிடுவா.

 

போதாத குறைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து எங்க எல்லாரையும் பேசவச்சா தான் அதுக்கு  தூக்கம் வரும். நீ எதுக்கு உணர்ச்சிவச படுறே?” பைரவிற்கு புரியவைக்க முயற்சித்தான்.

 

“அவன் யாரு என்ன தெரியாம போய் என்ன பேச்சு? அப்படியே பேசணும்னாலும் தள்ளி நின்னு பேசினா என்ன? முகிலாம் முகில்! முகிலன்னு சொல்றேன் இவ முகில்னு செல்ல பேர் வைக்கிறா. இதுல மாயா மு…” அதற்குமேல் சொல்ல முடியவில்லை, கோவமாக உடை மாற்றாமல் படுத்துக்கொண்டவன், வெகுநேரம் மாதவனிடம் புலம்பிவிட்டு தான் உறங்கினான். 

 

இதை எதையுமே அறியாத மாயா, கனவுலகில் இருந்தாள்.

 

காலை அனைவரும் சூரிய உதயத்தில், அருவியை காண சென்றனர்.

 

அனைவரின் கண்களும் வரப்போகும் சூரியனுக்காக காத்திருக்க, இரண்டு ஜோடி கண்கள் மட்டும் அலைந்து கொண்டிருந்தது முகிலனின் வரவுக்காக.

 

‘சீக்கிரம் வாடா’ மாயாவின் கண்ணில் ஏக்கம்.

 

‘சொன்ன மாதிரியே வந்து தொலைப்பானோ?’ பைரவின் கண்களில் கலவரம்.

 

“ஹாய் மாயா, ஹாய் ஹாய்” இவர்களை பார்த்து கை அசைத்தபடி வந்த முகிலன், வசீகராமாகத்தான் இருந்தான்.

 

காலை கதிரவனின் ஒளி அவன் மேலே படர, அவன் முகமே மிளிர்வதைப்போல் உணர்ந்தாள் மாயா.

 

பெரியவர்களுக்கு முகிலலை அறிமுகம் செய்துவைத்தவள், அவனுடன் பேச துவங்க,

 

‘இவன் கூட பேச நான் எதுக்கு?’ பைரவ் முகமோ சூரியனுக்கு போட்டியாக கோவத்தில் சிவந்திருந்தது.

 

மாயாவின் பெற்றோரிற்கும் முகிலை பிடித்திருந்தது.

 

“எனக்கு இந்த இடமெல்லாம் நல்லா தெரியும், நான் பிளான் போட்டு தரேன்” முகிலன் சொல்ல,

 

“வேண்டாம்” என்ற பைரவ், “ஐ மீன் நாங்க பிளான் போட்டுட்டோம்” கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்.

 

“ஓஹ் என்ன பிளான்?” கேட்டு தெரிந்து கொண்ட முகிலன் அதில் சில மாற்றங்களை சொல்லிவிட்டு,

“பக்கத்துலதான் முதுமலை, ஆர்வம் இருந்தா வாங்களேன்” என்று சொல்ல, பைரவை தவிர மற்றவர் மறுக்காததால், பைரவ் அமைதியாக இருக்க வேண்டி வந்தது. அவன் நிலையை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை, வாணியை தவிர!

 

காலை உணவை முடித்துக்கொண்டு முதுமலைக்கு புறப்பட்டனர், அவர்கள் கூடவே தனது குழுவுடன் முகிலனும்.

 

அங்கு சுற்றுலா பயணிகள் யானை மீது சவாரி செய்வதை பார்த்த மாயாவின் கண்களில் தெரிந்த ஆர்வத்தை கவனித்த முகிலன்.

 

“மாயா உனக்கு விருப்பம் இருந்தா, போலாம்” 

 

“எஸ் எஸ் போலாம்” குதித்த மாயா, கேள்வியாய், தன் தந்தை கிருஷ்ணனை பார்க்க,

“அதுனால என்ன போ…” கிருஷ்ணனின் சம்மதத்தை காற்றில் கரைத்தது, “வேண்டாம்” என்ற பைரவின் மறுப்பு! 

 

“எதுக்கு? வேண்டாம் ரிஸ்க், சும்மா வேடிக்கை பாரு” முறைத்தான்.

 

“அதெல்லாம் ரிஸ்க் இல்ல, ரொம்ப பழகின யானைகள் நானும் விசாரிச்சேன், போலாம் பைரவ்” மாதவனும் சொல்ல,

 

“நான் வரல, நீ வேணும்னா போ!” என்றவன் அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்துக் கொண்டான்.

 

சிலநொடிகள் குழப்பத்துடன் நின்றிருந்த பெரியவர்களும், “நீங்க போயிட்டு வாங்க நான் இங்க காத்தாட இருக்கோம்” என்று பைரவின் அருகில் அமர, 

 

தன்னை விட்டுவிட்டு மாயா செல்லமாட்டாள் என்று நம்பியிருந்த பைரவ், அவள் “சரி ரெஸ்ட் எடுத்துக்கோ நாங்க போயிட்டு வரோம்” என்று மாதவன் மற்றும் முகிலனுடன் செல்வதை நம்பமுடியாமல் கோவமும் ஏமாற்றாட்டமும் முகத்தில் தெரியாதவண்ணம் இறுக்கமான முகத்துடன் பார்த்திருந்தான்.

 

***

 

மாதவனை அழைத்த ஒரு பாகன் அவனை, ஏற்கனவே சிலர் அமர்ந்திருந்த யானைக்கு மேல் அமர சொல்ல, அவனோ தங்கையை பார்க்க,

“நீங்க போங்க சார், நான் மாயாக்கூட துணைக்கு இருக்கேன்” முகிலன் சொல்ல, மாதவனும் ஒப்புக்கொண்டு யானைமீது ஏறி சென்றிட,

 

பெரியவர்களோடு அமர்ந்திருந்த பைரவை தாண்டி சென்ற யானையின் மீது மாதவன் வேறு சிலருடன் இருக்க, மாயாவை காணாது பதறினான்

 

“மாதவன் தனியா போறான்? அப்போ மாயா?” 

 

“ஏண்டா அலர்ற? கூடத்தான் முகிலன் போனானே” வாணி கடிந்து கொண்டார்.

 

“அதானே பா. முகிலன் கூடவே இருக்கேன்னு சொல்லி இருக்கான்” கிருஷ்ணன் சொல்ல, எனோ கோவமேறியது பைரவிற்கு.

 

“அதுக்கு? அவனை நமக்கு நேத்துதான் தெரியும்! மாயாவை அவனை நம்பிலாம் விட முடியாது” கடுகடுவென பொரிந்துகொண்டிருந்தவன், கவனிக்கவில்லை, 

அவர்களை கடந்து சென்ற யானையின் மீது, மாயா, முகிலன் மற்றும் அவன் நண்பர்களுடன் அமர்ந்திருந்ததை.

 

விரைந்து சென்று யானை மீது ஏறுமிடத்தை பார்த்தவன், உணர்ந்துகொண்டான். தன்னை நொந்துகொண்டான்.

 

கோவமாக கீழே இருந்த கல்லை எட்டி உதைத்தவன், ‘நான் போயிருக்கணும், பைத்தியம் அசலே அவனை அப்படி பாக்கறா, ஆ…’ மனதிற்குள்ளே அவன் அலறல் வெளியே கேட்கவில்லை.

 

கோவமாக திரும்பியவனை, கிருஷ்ணனோ, “விடு பா, வந்துருவாங்க” என்று சொல்ல, கீதாவோ கண்கள்மூடி மரத்தில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

 

திரும்பி வரும் ஒவ்வொரு யானையின் மேலேயும் மாயாவை தேடி அல்லாடிய மகனின் கண்களை , இறுகிய முகத்தை உள்வாங்கி கொண்டிருந்தது வாணியின் கண்கள்.

 

ஒருவழியாக மாதவன் முதலில் வர, “மாயா எங்க?” 

 

“பின்னால வருவா… வந்துட்டா பார்… நீ  மிஸ் பண்ணிட்டே” என்றபடி கடந்து சென்றான் மாதவன்.

 

பைரவின் காதிலோ எதுவும் விழுந்ததாய் தெரியவில்லை. அவன் கண்கள் மாயாவையும் முகிலனையும் முறைத்துக்கொண்டிருந்தது.

 

“பைரவ்! ஐயோ சூப்பர் தெரியுமா? யானை எவ்ளோ கியூட். எனக்கு பயமா இருந்தது. முகில் கையை கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்” என்றபடி வந்த மாயாவை தொடர்ந்து வந்த முகிலன்,

 

“ஆமா சரியான பயந்தாங்குலி! கையை இறுக்கி பிடிச்சு… டோர்னமெண்ட் போனா கூட கை இப்படி வலிக்காது” போலியாக அலுத்துக்கொண்டான்.

 

“ஓவரா பண்ணாதீங்க” அவனை மாயா உரிமையாய் முறைக்க, ஒரு நொடிகூட தாங்க முடியவில்லை பைரவிற்கு, கோவத்தில் முகிலனை முறைத்தான்.

 

“சரி வா பசிக்குது சாப்பிட போகலாம்” பைரவ் கடுகடுக்க,

 

“வா போலாம் எனக்கும் பசி” என்ற மாயா, “முகில் நீங்களும் வாங்களேன்” அழைத்தாள்.

 

“சாரி மாயா, பிரெண்ட்ஸ் கூட போகாட்டி தப்பா எடுத்துப்பாங்க. நீங்க கிளம்புங்க, நான் ஈவினிங் மீட் பண்றேன்” விடைப் பெற்றான் முகிலன்.

 

அனைவரும் மதிய உணவிற்கு உணவகம் செல்ல, சாப்பிட அமரும் வரை பைரவின் கையில் இருந்த சிவப்பை கவனிக்கவில்லை மாயா.

 

“ஹே என்ன இது?” பதறியவள் அவன் கைகளை பார்த்து, “எப்படி ஆச்சு?” 

 

மாதவனோ, “நேத்து, டீ கொட்டிடுச்சு, என்ன இப்போதான் கவனிக்கிறீயா?”

 

வருத்தமானவள், “இல்ல…” அவள் கண்கள் அவன் சிவந்த உள்ளங்கையிலிருந்து விலகவில்லை.

 

உணவு வந்ததும், ஸ்பூனை எடுத்து சாப்பிட முயன்றவன், முகத்தில் மெல்லிய மாற்றத்தையும் உணர்ந்தவள், 

 

“வலிக்குதாமா, ஸ்பூனால சாப்படறே?” மாயா முகம் சுருங்க,

 

“கார்த்தாலே இட்லியை ஸ்பூனால தானே சாப்பிட்டான், காரும் நான் தானே ஓட்டினேன்? அப்போல்லாம் உனக்கு தெரியலையா?” கிருஷ்ணன் கேட்க,

 

“விடுங்க அங்கிள் அவளுக்கு புது பிரென்ட் கிடைச்சாச்சு. இனி நான் அவ கண்ணுக்கு தெரியமாட்டேன்” என்றவன், “ஸாரி, நான் ரூம்ல இருக்கேன்” யாருக்கு சொன்னானோ யாருக்கும் தெரியவில்லை, சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டான்.

 

“பைரவ் என்ன…” மாயா எழ,

 

“விடு மா நான் அவனுக்கு பேக் பண்ணிக்கிறேன், நீ சாப்பிடு” வாணி சொல்ல,

 

“இல்லை எங்க ரெண்டுபேருக்கும் கைல எடுத்துக்கறேன்” என்றவள் உணவு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு, பைரவ் அறைக்கு சென்றாள்.

 

பிள்ளையின் செயலில், சங்கடமாக உணர்ந்த வாணி, மாயாவின் பெற்றோரிடத்தில், “சாரி அவன் ஏன் இப்படி…” என்று துவங்க,

 

“விடுங்கப்பா, அவன் பிரெண்டை விட்டு கொடுக்க முடியலை போல, பசங்க இன்னும் வளரவே இல்லை” புன்னகைத்த கீதா, கிருஷ்ணனின் கையை வாணிக்கு தெரியாமல் இடித்தார்.

 

அவரோ, “ஆமா நீங்க இதுக்கெல்லாம் எதுக்கு ஃபீல் பண்றீங்க? பசங்க சமாதானம் ஆகிடுவாங்க” கிருஷ்னன் சொல்ல,

 

“ஆமா ஆன்ட்டி விடுங்க, சரி ஆகிடும். சாப்பிட்டு நீங்க மூணு பேரும் ரெஸ்ட் எடுங்க. நான் பாத்துக்கறேன்” மாதவனும் அவன் பங்கிற்கு சொல்ல, அப்போதைக்கு அமைதியானார் வாணி.

 

பைரவ் அறையில் கோவமாக அமர்ந்திருக்க, உள்ளே வந்த மாயா, 

“என்னமா சாப்பிடாம வந்துட்டே?” கையிலிருந்த உணவு பொட்டலங்களை மேஜையில் வைக்க,

 

“போயிடு மாயா. லீவ் மீ அலோன்!” அவன் குரலில் வலி, கோவம்.

 

“எதுக்கு இந்த கோவம்? எதோ உன் சாப்பாட்டை  நான் பிடுங்கி தின்ன மாதிரி?” முறைத்தவள், உணவினை அங்கிருந்த தட்டில் பரிமாறினாள்.

 

“தனியா விடுன்னு சொல்றேன், எனக்கு பசிக்கல”

 

“பசின்னு சொன்ன?” அவனுக்கு பரிமாறிய உணவை எடுத்துக்கொண்டு அவன் அருகில் சென்றவள்,

“சாப்பிடு” அவனை வலுக்கட்டாயமாக அமர செய்தாள்.

 

“மாயா ப்ளீஸ்” என்றவனுக்கு கோவம் குறைந்தும் ஏதோ ஒரு சொல்லத்தெரியாத உணர்வு.

 

“நீ…” என்றவள், கைகளில் சாதத்தை எடுத்து, “பேசாம உட்கார்ந்து வாயை திறந்தா போதும்” அவனுக்கு ஊட்டிவிட எத்தனிக்க, அவள் கையை இடது கையால் தடுத்தவன், “வேண்டாம் நீ போ” முறைத்தான்.

 

“முடியாது! என்ன செய்வே?” வலுக்கட்டாயமாக அவனுக்கு ஊட்ட துவங்கினாள்.

 

“நீ பெரிய இவனா? சாப்பாட்ல கோவத்தை காட்டுற? மொதல்ல இதென்ன?” அவன் உள்ளங்கையை காட்டி கேட்டவள், “எதுக்கு டி கிளாஸை அமுக்கின?” 

 

“பொழுது போகல” எங்கோ வெறித்தான்.

 

“அதுக்கு?”

 

அவனோ மௌனமாகவே சாப்பிட்டான்.

 

“பைரவ் என்னாச்சு?” கையை கழுவிக் கொண்டு வந்தவள் கேட்க,

 

“போ மாயா அதான் சாப்பிட்டேன்ல” கடுகடுத்தான்.

 

“பைரவ் நிஜமா முகில்… கோவமா? இல்லை அங்க சும்மா சொன்னியா?”

 

“அவனை பத்தி எனக்கு பேசவேண்டாம்”

 

“அவன் உன்னை என்ன பண்ணான்?” முறைத்தாள்.

 

“ஒன்னும் பண்ணலை தாயே! நீ போ” விடாது சீறினான்.

 

“என்ன சும்மா போ போ? போறேன் போ!” கோவமாக கிளம்பிவிட்டாள்.

 

கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்துவிட்டான் பைரவ்.

 

எதிரே வந்த மாதவனை பார்த்து முறைத்துக்கொண்டு சென்றாள் மாயா.

 

“பைரவ் என்ன ஆச்சு? இது எதுக்கு என்னை முறைச்சிட்டு போகுது?” என்றபடி வந்த மாதவன், மேஜையில் மீதம் இருந்த உணவு பார்சலை பார்த்தான்.

 

“இன்னுமா சாப்பிடலை? நெனச்சேன் இவ நல்லா தின்னுட்டு கிளம்பிட்டாளா? இதுக்குதான் உன்கூட சாப்பிடறேன்னு அங்க சீன போட்டா?” என்றபடி அமர, 

 

“என்ன?” பைரவ், அதுவரை ஏதோ யோசனையாக இருந்திருந்தான். 

 

மீண்டும் தன் கேள்வியை கேட்ட மாதவன், பைரவை விசித்திரமாக பார்க்க, 

 

“அவ அங்க சாப்பிடலையா?” பைரவ் காதில் இப்பொழுதும் வேறேதுவும் விழவில்லை. 

 

“எங்க? மேடம் தான் உன் பின்னாடியே வந்துட்டாளே!” என்று சிரித்தவன், முகம் இறுகியது. “அப்போ மாயாதான் சாப்பிடலயா?” 

 

****