Eedilla Istangal – 25.1

தாரா வீடு 

தாரா – தேவா, இருவரும் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

அதே day bed couch-ல் அமர்ந்து, சற்று நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான். 

மேலும் சற்று நேரத்திற்குப் பிறகு, மஞ்சத்தில் கணவன்… அவன் நெஞ்சத்தில் மனைவி… என்ற நிலையில் இருந்தனர். 

“இப்படியே தூங்கவா தேவா?” என்று இமை மூடும் நிலை குறித்துக் கேள்வி கேட்டாள். 

“தூங்கிடாத தாரா” என்று இரவின் நிலை பற்றிப் பதில் சொன்னான். 

“ரிவார்டா??” என்றாள் சுருக்கமாக! 

“ய்யா ய்யா” என்றான் விருப்பமாக! 

தாரா, காதலின் மூன்று வார்த்தைகள்… எட்டு எழுத்துகள்… சொன்னதற்கான வெகுமதியை, தேவா தந்தான். 

முன்னிரவுகளில் அவன் தந்த வெகுமதியில், பின்னிரவுகளில் அவனின் முழுமையான திருமதியானாள்! 

நாட்காட்டியின் அடுத்தடுத்து வந்த மாதங்களில்…

ஹேமா…

ஹேமாவிற்கு குழந்தை பிறந்திருந்தது. பெண் குழந்தை! சுகப் பிரசவத்திற்கு முயற்சித்தார்கள். ஆனால், முடியாமல் போனதால் அறுவைசிகிச்சை செய்து, தாய்-சேய் இருவரையும் காப்பாற்றினாள், தாரா.

குழந்தை பிறப்புக்குப் பின்னர்…

தன்னருகே குழந்தையைப் படுக்கப் போட்டுக் கொண்டு… தம்பியிடமும், பாபியிடமும் பேசிக் கொண்டிருந்தாள். 

“கடைசில ஒரு ஃபிலைட் டிக்கெட்லயே ரெண்டு கல்யாணம், ஒரு டெலிவரி-ன்னு முடிச்சுட்டே” என்றான் பாபி! 

“என்னாலதான் உனக்கு கல்யாணமே நடந்திருக்கு. அதை மறந்திடாத” 

இப்படியே பாபியும் ஹேமாவும் பேசிக் கொண்டிருக்க… 

தேவா, தன் அக்கா பிள்ளையின் பிஞ்சுக் கைகளைத் தொட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தான்! 

எதேச்சையாக, அதைக் கண்ட ஹேமா கண்களில் ஓர் நிம்மதி! ஓர் திருப்தி!! 

பாபி-சாரு வீடு

ஏறுவெயில் நேரம்… 

அவசர அவசரமாக நீதிமன்றம் கிளம்பிக் கொண்டிருந்தான், பாபி. 

வாக்கரில் மாலியை உட்கார வைத்து, அவளுடன் பேசிய படியே கோப்புகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். 

அந்த அறைக்குள், அவன் போகும் இடமெல்லாம்… வாக்கரின் உதவியுடன், அவன் பின்னேயே மாலி போய்க் கொண்டிருந்தாள். 

அக்கணம், பாபியின் அலைபேசி அடித்தது.

சாருதான்!

“என்ன?” என்றான் அழைப்பை ஏற்று!

“அது பாபி…” என்று தயங்கினாள். 

“சொல்லு, எந்த ஏரியா ட்ராபிக் போலீஸ்?” என்றான் நக்கலாக! 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை” என்றாள் நறுக்கென்று! 

“அப்புறமென்ன?”

“கார் டயர் பங்ச்சர் ஆயிடுச்சு! ஸோ, நீ வந்து கூட்டிட்டுப் போறியா?” என்றாள், சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு! 

“இதுக்கு பேரு ஸெல்ப் டிரைவிங்கா சாரு? எப்ப பாரு…” என்று அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்பே, 

“போதும் நிறுத்து. உன்னால வர முடியுமா? முடியாதா?” என்றாள். வருவான் என்று தெரிந்தும், வாய்ப்பு தந்து பார்த்தாள். 

“கோர்ட்ல இம்பார்ட்டண்ட் கேஸ் இருக்கு சாரு” என்று வரமறுத்து, அவளை வெறுப்பேற்றப் பார்த்தான். 

“வாதாடவா போற, பாபி? வாய்தா வாங்கத்தான போற?” என்று, அவனை வம்பிக்கிழுத்தாள்! 

“அதான் உன்கிட்ட வாதாடுறேனே! போதாதா சாரு??”

“என்கிட்ட வாதடுறதுக்கா, நீ எம்.ஃபில் படிச்ச?” என்று ஏறுவெயிலில் நின்று கொண்டு, எடக்காகப் பேசினாள். 

“நீ எம்எஸ் படிச்சிட்டு, கோர்ட்ல வந்தா வேலை செய்யப் போற! இப்படிப் பேசற சாரு” என்று, அவளை மடக்கினான். 

“போதும் பாபி! இப்போ வருவியா? மாட்டியா?” என்றாள் மீண்டும்! 

“வர்றேன் சாரு! நீ, என் மொபைலுக்கு லோகேஷன் ஷேர் பண்ணு”

“ம்ம்ம் ஓகே” என்று அழைப்பைத் துண்டிக்கப் போனவளிடம்…

“சாரு” என்று அழைத்தான்.

“என்ன?”

“ஏசி போட்டுக் காருக்குள்ளே உட்கார்ந்திரு. வெயில் ஜாஸ்தியா இருக்கு” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான். 

அதுவரை சாருவுடன் பாபி பேசியது விளையாட்டு… கடைசியாக பேசினது, அவளுடன் அவன் வாழும் வாழ்க்கை! 

“அப்பா” என்றான் பாபி. 

பாபியின் அப்பா வந்து நின்றார். 

சாருவின் நிலை சொல்லி, தான் கிளம்புவதாகச் சொன்னான். 

சரியெனத் தலையசைத்தார். 

அமைதியைப் மட்டுமே புரிந்து கொண்டவருக்கு, கேள்விச்சாதனம் உதவியால் சிற்சில சத்தங்களும் பிடிக்கிறது. 

அதில் முக்கியமானது மாலியின் மழலை மொழி! 

பாபி சென்றதும், 

மாலியைத் தூக்கிக் கொண்டு, தோட்டத்திற்குச் சென்றார். இருவருக்கும் பிடித்தமான நேரமிது. 

இனி சாருவும்-பாபியும் வேலை முடித்து வரும்வரை… அவர் பொறுப்பில்தான் மாலி இருப்பாள்! துணைக்கு ஆட்களும் உண்டு!! 

ஆனாலும், அவர்தான் கவனித்துக் கொள்வார். 

தாத்தாவின் மொழி, பேத்திக்குப் புரியும். பேத்தியின் மொழி, தாத்தாவிற்குத் தெரியும். அப்படி ஒரு புரிதல், இருவருக்கும்! 

அது, அமைதியையும் புரிந்து கொள்ளும் அன்பு!! 

தாரா-தேவா வீடு…

அன்று விடுமுறை என்பதால், தாரா-தேவா இருவரும் வீட்டில் இருந்தனர். 

காலை வேளைக்கான சமையல் தாரா செய்திருந்ததால், மதிய வேளைக்கான சமையலில் தேவா ஈடுபட்டிருந்தான். 

அக்கணம் அழைப்பு மணி ஓசை!

கதவின் இந்தப் பக்கம்…

“தாரா, போய் யாருன்னு பாரு” என்று தேவா சொன்னதும், எழுந்து கதவின் அருகே வந்து… ‘யாராக இருக்கும்?’ என்று டோர் பெல் கேமராவில் பார்த்தாள். 

பார்த்தவுடனே, சமயலறைக்கு ஓடிச் சென்றாள். 

“தேவா தேவா” என்றழைத்து, அவன் தோளைப் பிடித்துத் திருப்பினாள்.

“ப்ச், யார் வந்திருக்கா?” என்றான், அடுப்பின் மேலிருந்த பாத்திரத்திலிருந்து கண்கள் எடுக்காமல்!

“இப்போ வர்றவங்ககிட்ட, இந்த டிஷ் நான்தான் பண்ணேன்னு சொல்லணும்” என்றாள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல்! 

“இப்போ உள்ளே வர்றவங்க, நான் செய்யறதைப் பார்க்க மாட்டாங்களா?”

“ஓ! அப்போ டேபிள்-ல செஞ்சி வச்சத சொல்லுங்க” என்று ஓர் கோரிக்கை வைத்தாள்! 

‘என்னவாயிற்று’ என்பது போல், அவளை வித்தியாசமாகப் பார்த்தான்.

“அப்புறம், தாரா ரொம்ப நல்ல பொண்ணு-ன்னு சொல்லணும்!” என்று ஓர் வேண்டுகோள் வைத்தாள்! 

‘எதுக்கு இதெல்லாம்?’ என்ற கேள்வியுடன், பாத்திரத்தில் இருப்பதைக் கிளறினான்! 

“தென், தாரா ரொம்ப கேரிங்-ன்னு சொல்லணும்” என்று ஓர் உத்தரவு பிறப்பித்தாள்! 

இதையெல்லாம் வேகமாகச் சொல்லி முடித்து, தாரா அங்கிருந்து சென்றாள். 

‘அப்படி யார் வந்திருப்பாங்க?’ எனக் கரண்டியைப் பிடித்தவாறே யோசித்தான். 

அக்கணம், போனவள் திரும்பி வந்து, “அப்புறம் இன்னொன்னு தேவா” என்று நின்றாள்.

“இப்போ என்ன?”

“நான் ஏதாவது சொல்லிட்டு, ‘இல்லையா தேவா?’-ன்னு கேட்பேன். நீங்க, ‘யெஸ், யூ ஆர் கரெக்ட்’-ன்னு சொல்லணும். ஓகேவா?” என்றாள் எதிர்பார்ப்புடன்! 

அவனுக்குப் புரிந்துவிட்டது, யார் வந்திருக்கிறார்கள் என்று! சிரித்துக் கொண்டான்.

“தேவா ப்ளீஸ்” என்று கெஞ்சினாள். 

“ஓகே, ஓகே! பட், நீ என்கிட்ட இவ்ளோ எக்ஸ்பெக்ட் பண்ற மாதிரி… நானும் உன்கிட்ட ஒன்னு எக்ஸ்பெக்ட் பண்றேன்” என்றான். 

அவனது எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும், என ஒரு நொடி யோசித்தாள். 

யோசிப்பின் முடிவில், தன் கணவன் கன்னங்களில் முத்தம் வைக்க ஆரம்பித்தாள். 

வேண்டுகோள் நிறைவேறிட… தூண்டுகோளாய் அமைந்திடும் படியான தரமான முத்தங்கள் அரங்கேறின, தாளிப்பு வாசனையின் ஊடே! 

இன்னும் இன்னும், 

காரிகையின் காதல் 

வெள்ளமாய்… வெல்லமாய்… 

காதலன் கன்னத்தில் 

பள்ளம் விழும் வண்ணமாய்… 

முத்தங்கள் படையெடுத்தன! 

கடைசியில், “நீங்க எக்ஸ்பெக்ட் பண்ணது கிடைச்சிருச்சா??” என்ற கேள்வி வேறு கேட்டு நின்றாள்! 

அவள் முத்தம் வைத்த இடத்தை மெத்தனமாகத் தேய்த்துக் கொடுத்து, “நாட் பேட்” என்றவன், “பட், இதான் எக்ஸ்பெக்ட் பண்ணேன்-னு எப்படிச் சொல்ற?” என்றான் குதர்க்கமாக! 

“அப்போ இது இல்லையா?” என்றாள் குழப்பத்துடன்! 

“ம்கூம்” என்றவன், “அவங்களை ப்ராப்பரா வெல்கம் பண்ணு-ன்னு சொல்ல நினைச்சேன்” என்றான். 

“ஓ!” என்றாள் அசட்டுப் புன்னகையுடன்!

நய்யாண்டிச் சிரிப்பைக் கையாண்டன, அவனது இதழ்கள். 

அதைக் கண்டவள், “எக்ஸ்பெக்ட் தே அன்-எக்ஸ்பெக்ட்டடு மை மேன்” என்று வாக்கியத்தை இழுத்தாள்! 

“இது அன் எக்ஸ்பெக்ட்டடு இல்லை… அஸ்யூஸ்வல் மை லேடி” என்று, அவள் வழக்கத்தை வம்பிழுத்தான். 

முத்தம் வைத்தவள் முறைத்துக் கொண்டு நின்றாள். 

“சீக்கிரமா போய் டோர் ஓபன் பண்ணு! இல்லைன்னா… இதுக்கே ஆன்ட்டிகிட்ட, நீ நிறைய அட்வைஸ் கேட்க வேண்டி இருக்கும்” என்று தேவா சொன்னதும், 

“oh, my gosh!!” என்று சொல்லி, கதவைத் திறக்க ஓடினாள்! 

தேவாவை உரிமை கொண்டாடுவதில், பாஸ்கர் தம்பதியினருக்கும் தாராவிற்கும் ஒரு சின்ன போட்டி நிலவும்!

அலுவலகத்தில் அவர்களையும்… இல்லத்தில் இவளையும்… ஆதரித்து, இவர்களிடம் மட்டும் அரசியல் செய்து கொண்டிருக்கிறான்.

கதவின் அந்தப் பக்கம்…

“பாஸ்கர்” என்ற அழைப்பில் ‘என்ன?’ என்பது போல் பார்த்தார், மிஸ்டர் பாஸ்கர்.

“இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வைக்கிறா. இந்த தாராக்கு குட் மேனர்ஸ்ஸே கிடையாது. இல்லையா பாஸ்கர்?” – மிஸஸ் பாஸ்கர்.

“யெஸ். யூ ஆர் கரெக்ட்” என்றார் மிஸ்டர் பாஸ்கர், வழமை போல்! அதுதான் அவர் வாழ்க்கை போல்!!

சென்னை விமானநிலையம், விடியற்காலை நேரம்… 3:00 மணி

ஜெகன், மருத்துவத் துறையின் உயர்படிப்பிற்காக வெளிநாடு செல்கிறான். 

அவனை வாழ்த்தி வழியனுப்ப, குடும்ப சகிதமாக வந்திருந்தனர். 

பயணப்பொதிகளோடு ஜெகன் நிற்க, அவனின் எதிரில் தாரா – ராஜசேகர் – கீதா – சரத் நின்றிருந்தனர். 

ஜெகன், கண்கள் லேசாக கலங்க நின்று கொண்டிருந்தான். தாராவும் கண்கலங்கி நின்றாள். 

“அக்கா அக்கா” என்று அரற்றிக் கொண்டிருந்தான், ஜெகன். 

அவளுக்கு ஆறுதல் சொல்லியே வாழ்ந்தவன்… வளர்ந்தவன் அல்லவா! எத்தனை பேர் பார்த்துக் கொள்ள இருந்தாலும்… சட்டென்று மாறுவது, அவனுக்கு அத்தனை எளிதல்ல! 

“ஜெகன், உனக்கு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. அதை மிஸ் பண்ணக் கூடாதில்லையா?” என்று பொறுமையாக ஆரம்பித்து, அவனைத் தெம்பூட்டும் விதமாக நிறைய பேசினாள். 

ஜெகன் முகம் கொஞ்சம் தெளிவானது. 

“அக்கா டெய்லி உன்கிட்ட பேசுவேன். முடிஞ்சா, ஒரு தடவை நான் அங்கே வர்றேன். நீ, உன்னோட ஸ்டடிஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணு!” என்று அவன் பின்னந் தலைகோதிச் சொன்னாள்.

மேலும், “ஆல் தி பெஸ்ட்” என்று அவனை வாழ்த்தி, அன்புடன் ஆரத்தழுவிக் கொண்டாள்.

“அக்கா” என்று தழுதழுக்கும் குரலில் அழைத்து, அவனும் ஆரத்தழுவினான். 

“ஜெகன், டோன்ட் வொரி” என்று சொல்லி, அவன் முதுகில் தட்டிக் கொடுத்தாள். 

“அக்கா, நான்தான உன்னை நல்லா பார்த்துப்பேன். நான் இங்கே இல்லைன்னா, யார் உன்னை பார்த்துப்பா?”

“தேவா மட்டும் இதைக் கேட்கணும்!” என்றான், அதுவரை அமைதியாக நின்ற சரத்! 

“சரத், சும்மா இரு. அவனே பீல் பண்ணிட்டு இருக்கான்” என்றாள், தாரா. 

“ஓகே” என்றவன், தம்பி அருகில் வந்து நின்று, “ஜெகன்” என்று அழைத்தான். 

“அண்ணா” என்றான் ஜெகன், தாராவிடமிருந்து விலகி நின்று! 

“உன்னை நம்பி பெரிய பொறுப்பு அப்பா கொடுக்கப் போறாங்க. ஸோ, பி ரெஸ்பான்சிபில்” என்று ஆரம்பித்து, தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டான். 

கடைசியில், “சரி-ண்ணா” என்று ஜெகனை சொல்ல வைத்தான். 

அதன்பின், மூவரும் துறை சார்ந்த விடயங்கள் பேசிக் கொண்டார்கள். 

இதற்கிடையே, 

ஜெகன் வருந்துவதைக் கண்டு, “ராஜ், இது தேவையா?” என்று வருந்தும் குரலில், கீதா கேட்டார்! 

“ED-லயே எத்தனை நாள் இருப்பான், கீதா?? இதுவே லேட். நீ, அவன்கிட்ட சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லு” என்றார், ராஜசேகர். 

“சரி ராஜ்” என்றவர், அதன்பின் யாரையும் பேச விடவில்லை. 

சரியான நேரத்தில் உண்ண வேண்டும்… உறங்க வேண்டும்!! என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய வேண்டாம்? எவ்வாறு இருக்க வேண்டும்? என்று, கீதா தன் அக்கறையை… அறிவுரையை அடுக்கினார். 

மேலும், சற்று நேரம் ஐவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். 

பின், அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, “அக்கா தேவாகிட்ட சொல்லிடு” என்று சொல்லிவிட்டு, ஜெகன் கிளம்பினான். 

அவன் சென்றதும்,

நால்வரும் கிளம்பும் போது… 

“தாரா” என்று அழைத்தார் கீதா. 

“என்னம்மா??” என்றாள். 

“தேவா வரலையா?” 

“ஜாப் டூர் போயிருக்காங்க. வர்றதுக்கு, டு த்ரீ டேய்ஸ் ஆகும்-ம்மா” 

“ஓ!” என்றவர், “அப்போ வீட்டுக்கு வந்து ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு, ஹாஸ்பிட்டல் போகலாமே தாரா” என்று கேட்டார். 

“இல்லைம்மா. நானும் அப்பாவும் டேரைக்டா ஹாஸ்பிட்டல் போகப் போறோம்” என்று மறுத்துவிட்டாள்.

“ம்ம்ம், சரி” என்று கீதா சொன்னாலும், ‘வீட்டுக்கு வந்து சாப்பிடலாமே’ என்பது போல்தான் அவர் முகம் சொல்லியது. 

“ப்பா” என்றாள் தாரா. 

“என்னம்மா?” என்றார் ராஜசேகர். 

“என் கார்லயே நம்ம ரெண்டு பேரும் ஹாஸ்பிட்டல் போயிடலாம்-ப்பா” என்றாள் கனிவின் கட்டளையாக! 

“சரிம்மா” என்றார், அவள் கனிவிற்குக் கட்டுப்பட்டு! 

“போற வழியில ஏதாவது ரெஸ்டாரன்ட்-ல சாப்பிட்டலாம்-ப்பா” என்றாள் அன்பின் ஆணையாக! 

“சரிம்மா” என்றார், அவள் அன்பிற்கு அடிபணிந்து! 

பின், தாராவின் காரை எடுத்து வரச் சென்றுவிட்டார்.

இனி, ‘தான் என்ன சொன்னாலும் அப்பாவும் மகளும் கேட்க மாட்டார்கள்’ என்ற இனிமையான இயலாமை தெரிந்தது கீதாவின் முகத்தில். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டே நின்றான், சரத். 

இனிமையாக இருந்தாலும், அது அம்மாவின் இயலாமை என்று மட்டுமே சரத் எடுத்துக் கொண்டான்!

ஏனெனில், அதுதான் சரத்! 

அவ்வாறு எடுத்துக் கொண்டவன், “ம்மா, நீங்க போய் கார்ல இருங்க” என்றான். 

“சரி-டா” என்று சொல்லி, சரத்தின் காரை நோக்கிச் சென்றார், கீதா. 

கீதா சென்றதும், 

“தாரா ஒரு நிமிஷம்” என்றான். 

“என்ன சரத்?” 

” ‘வீட்டுக்கு சாப்பிட வான்னு’ அம்மா சொல்றாங்கள, வர மாட்டியா?” என்றான் அண்ணனின் அதிகாரக் குரலில்! 

பதில் சொல்லாமல் நின்றாள். 

“ஆமா, இந்த நேரத்தில உனக்கு யார் ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி வச்சிருக்காங்க??” என்று தங்கையைத் தட்டிக் கேட்டான். 

மீண்டும் பதில் செல்லவில்லை. 

“ஒழுங்கா வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ” என்றான் உரிமையின் உத்தரவாக! 

இப்படிச் சொல்லிவிட்டு, சரத் சென்று விட்டான். 

இப்பொழுதெல்லாம், கீதாவிற்காக… தாராவிடம் சண்டையிடுவதும்… பின், தாராவைச் சமாதானப்படுத்த, மண்டையைப் பிய்த்துக் கொள்வதும்… சரத்திற்கு வாடிக்கையாயிற்று! 

அவன் சென்றதும், 

ராஜசேகர் ஓட்டி வந்த காரில், தாரா ஏறி அமர்ந்தாள். 

மேலும், முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள். 

அவள் முகத்தைப் பார்த்த ராஜசேகர், 

“என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டார். 

“திட்றான்” என்றாள் வெறுமென! 

“யாரும்மா?”

“ப்பா, சரத் திட்றான். தேவையில்லாம திட்டிட்டுப் போறான்” என்றாள் செல்லம் கொஞ்சும் குரலில்! 

“அவனுக்கு வேற வேலை இல்லை. விடும்மா” என்றார் சலிப்பாக! 

அவள் சமாதானமாகவில்லை என்பதை, அவளது முகமே சொன்னது. 

“ரொம்பத் திட்டிட்டானா??”

“ம்ம்ம்” என்று தலையாட்டினாள். 

“சரிம்மா, இப்போ என்ன செய்யணும், சொல்லு? “

“நேரா வீட்டுக்குப் போய்… அம்மா கையால சாப்பிட்டு… அப்படியே சரத்தை திட்டிட்டு… அப்புறமா ஹாஸ்பிட்டல் போகலாமா??” என்று தன் யோசனையைச் சொன்னாள். 

“அவ்ளோதான விடு! திட்டிடலாம்” என்று யோசிக்காமல் சொல்லி, வீட்டை நோக்கிச் காரைச் செலுத்தினார்.

அதிகப்படிதான்! அதிகப்படியேதான்!!

ஆனால், ராஜசேகரின் மகளதிகாரத்தில்… இது, அன்பின் பரிமாணங்கள்!

******