RR17

ரௌத்திரமாய் ரகசியமாய்-17

 

தாமிராவின் மூளைக்குள் ஒரு அதகள பிரளயமே நடந்து கொண்டிருந்தது. நடந்த சம்பவங்களை தாங்க முடியாமல் அவளது இதயம் அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்து போயிருந்தது.

 

முன்தின இரவிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை. அந்த பசிக்கு வராத மயக்கம், தலைச்சுற்றல் எல்லாம் தந்தை வீசிவிட்டுச் சென்ற வார்த்தைகளின் போது அவளுக்கு வந்து சேர்ந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலிருக்க, தலையை இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

 

அந்த அறைக்கதவு திறக்கும்‌ அரவம் கேட்டாலும் அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அழுதழுது சிவந்து வீங்கிப் போன கண்களுடன் தரையிலேயே படுத்திருந்தாள்.

 

ருத்ரன் உள்ளே நுழைந்தான். அவனுக்குப் பின்னால் வந்த பணிப்பெண் உணவுகள் அடங்கிய தட்டை அங்கிருந்த டீப்பாயின் மேல் வைத்து விட்டு நகர்ந்தாள்.

 

களைத்து சோர்ந்து போன தோற்றத்துடன் தரையில் வீழ்ந்து கிடந்தவளை சிறிது நேரம் வெறித்தான்.

 

“எழுந்து சாப்பிடு” என்றான்.

 

‘வேண்டாம்’ என்று கத்த வேண்டும் போல தோன்றினாலும், உடலும் உள்ளமும் சோர்ந்து போய் அதற்கு நா ஒத்துழைக்கவில்லை.

 

மறுக்காமல் எழுந்து குளியலறைக்குள் செல்ல முயன்றாள். நடக்க முடியாமல் தலை சுற்றியது. நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள் சமநிலைபடுத்திக் கொண்டு நடக்க, தடுமாறி விழப் போனவளை சட்டென தாங்கிக் கொண்டான் அவன்.

 

இவ்வளவு நேரம் உடல் சோர்ந்து இருந்தவள், அவன் கை தொட்டதுமே அவளது சோர்வையும் மீறி கோபம் துளிர்க்க அவன் கைகளை தட்டி விட்டாள்.

 

கத்துவான்: காயப்படுத்துவான் என அஞ்சி மிரட்சியுடன் அவனை பார்க்க, அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவளும் அப்படியே குளியலறை பக்கம் திரும்ப, அவனது செல் கிணுகிணுத்தது. அதற்குள் அவளுக்குத் தேவையான ஓர் உடையை அவளது கைகளில் திணித்து விட்டு, அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

“ஊஃப்ஸ்”

 

குளியலை முடித்துக்கொண்டு இரவு உடைக்கு மாறியிருந்தாள். வெளியே வந்தவளுக்கு பசி வயிற்றைக் கிள்ள சாப்பிட்டு முடித்தாள். 

 

அந்த உணவு அவள் பசியை ஆற்றினாலும் அவள் மனமோ இன்னும் ஆறவில்லை.

 

இது தெரிந்தால் சிந்துவும் ரகுவும் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்கள் எனது நண்பர்கள் என் நிலை அவர்களுக்கு புரியும்.

 

ஆனால் அவளது குடும்பத்தினர்?

அப்பாவே தன்னை நம்பவில்லை. அம்மா, தருண், அக்ஷரா? அவளது மூளை ஓயாமல் தன் குடும்பத்தை பற்றியே யோசித்து யோசித்து அவளை வதைத்து எடுத்தது.

 

எப்படி தன்னால் இப்படி ஒரு மிருகத்துடன் வாழ முடியும்? இதற்கு என்ன தான் முடிவு? அயர்ந்து போனாள் அவள். உள்ளம் குமுற அழுதாள்.

 

திருமணம் வேறு முடிந்து விட்டது. அவன் உள்ளே வந்தால் என்ன செய்வது? எப்படி அவனை எதிர்கொள்ளப் போகிறோம்? 

 

சும்மாவே மிருகத்தனமாக நடந்து கொள்பவன் இப்போது அத்துமீறி நடந்து விட்டால்? அதை எண்ணும் போதே உள்ளுக்குள் பயப்பந்துகள் உருள ஆரம்பித்தது.  

 

அவனும் உள்ளே வந்தான். இன்னும்  உறங்காமல் சோபாவில் அமர்ந்திருந்தவளை கண்டு புருவம் உயர்த்தினான். 

 

“தூங்கு” என்றான் கட்டளையாக.

 

“உங்களுக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்சினை?” அந்நேரத்தில் சம்மந்தமே இல்லாமல் அந்தக் கேள்வியை கேட்க, அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

 

“உன் அப்பா மட்டுமில்ல மொத்த போலீஸ் டிப்பார்ட்மென்ட்டே பிரச்சினை தான்.”  

 

“ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க? எதுக்கு இந்த கல்யாணம்?” ஆற்றாமையுடன் வினவ, எழுந்து அவள் அருகில் வந்தான்‌. 

 

பட்டென எழுந்து நிற்க அவளை மேலும் நெருங்கினான். அவனது சூடான மூச்சுக்காற்று அவள் முகத்தில் மோத,

இதயம் படபடக்க, பயத்துடன் பின்வாங்கினாள்.

 

அதற்குள் அவள் இடையோடு அழுத்திப் பிடித்து, அவனை நோக்கி இழுத்து அவள் கண்களை ஆழ்ந்து நோக்க, அவள் கண்கள் மிரண்டு விழித்தது.  

 

“இதுக்கு தான்” என்றான் ரசனையுடன்.

 

“அதுக்கு வேற ஆளை பாருங்க.” 

 

அவ்வளவுதான். அவளுக்கு வந்த கோபத்தில் அவனை தள்ளி விட்டாள். என்ன மனிதன் இவன்? அவள் கண்களில் கண்ணீர் பளபளத்தது. 

 

***

காலையில் கண்விழித்தவள் அதிர்ந்து தான் படுத்திருந்த இடத்தை விட்டுச் சட்டென எழுந்தாள். நேற்று இரவு நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தவள், தரையில் அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.

 

அப்படியிருக்க இப்போது இந்த படுக்கைக்கு எப்படி வந்தாள்? ஒருவேளை இரவு ஏதும் நடந்திருக்குமோ? இல்லையில்லை அப்படி எதுவும் இருக்காது?

 

ருத்ரன் இருக்கிறானா? என பார்வையால் அலசினாள். அவன் இல்லாதது அவளுக்கு பெருத்த நிம்மதியை கொடுத்தது.

 

குழப்பத்தை ஒதுக்கிவிட்டு குளியலறைச் சென்று காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தாள். அவன் அறையில் தான் இருந்தான். அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

 

அவனை கண்டதுமே உள்ளுக்குள் ஏதேதோ உணர்ச்சி பெருக்கெடுக்க, அவனை விட்டுப் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

“கீழே போகனும் வா” என்றான். 

 

ஏன்? எதற்கு? என்று அவள் கேட்கவில்லை. கேட்டால் மட்டும் சரியான பதில் கிடைத்து விடுமா என்ன? அவன் முன்னே நடக்க, இவளும் பின் தொடர்ந்தாள்.

 

ஒரே தடவையில் பன்னிரண்டு பேர் அமர்ந்து சாப்பிட முடியுமான பிரம்மாண்ட சாப்பாட்டு அறை அது.‌ அங்கே ஷோபாவும் ரோஷினியும் இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர்.

 

அவர்களின் முகத்தை ஏனோ பார்க்க பிடிக்காதவளாய் ருத்ரனின் பின்னால் நடந்து வர அவளை கண்டதும்,

“குட் மோர்னிங் தாமிரா” என புன்னகைத்தார்.

 

அவரது முகத்தை வெறித்தாள்.

“குட் மோர்னிங்” முணுப்பாக கூறி விட்டு  அமர்ந்து கொண்டாள்.

 

அவள் இருந்த மனநிலையில் ரோஷினியை பற்றி எதுவும் கேட்கவில்லை. அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவளுக்கில்லை.

 

அவளது பார்வையோ அந்த வீட்டையே ஆராய்ந்து கொண்டிருந்தது. அவள் வந்த நேரத்திலிருந்து இதுவரை அனன்யாவை பார்க்கவே இல்லை.

 

அவனிடம் கேட்கலாமா? என ஒரு கணம் தோன்றினாலும், தலையை சிலுப்பிக் கொண்டு அமைதியாக ஏதோ பெயருக்கு கொறித்துக் கொண்டிருந்தாள்.

 

“அனு எங்க?” அவனுக்கு அவளது எண்ணவோட்டம் புரிந்ததுவோ என்னவோ?

 

“மாயா கூட கார்டன்ல இருக்கா” என்றாள்‌‌ ரோஷினி.

 

அதைக் கேட்டதும் அவளது பார்வை அங்கிருந்த ஜன்னல் வழியாக, தோட்டத்தை அலச, 

 

“இன்னும் கொஞ்ச‌ நேரத்துல அனுவே வந்துடுவா. பேசாம சாப்பிடு” என்றான் மெதுவாக.

 

‘என் மனசுல கூட எதையும் நெனக்க முடியலை. எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடறான். ச்சே’ மனதால் புலம்பினாள்.

 

“பப்பூ” என்ற அனன்யாவின் அழைப்பில் உணர்வு பெற திரும்பிப் பார்த்தாள்.

 

ஓடி வந்து ருத்ரனின் மடியில் அமர்ந்து கொண்டது. குழந்தையை கண்டதும் அவனது முகமே மாறி விட்டது.

 

அவன் உதடுகளில் அவ்வப்போது தோன்றும் புன்னகை கூட அவனுக்கு அழகு தான். 

 

தாமிராவின் முகம் தான் வாடி விட்டது. அவனது குழந்தையிடம் எவ்வளவு அன்பு அவனுக்கு. அவள் மனதில் ஏதோ ஒன்று நழுவுவதை போல் உணர்ந்தாள். 

 

“பப்பூ… யாரு இவங்க?” தாமிராவை காட்டிக் கேட்டது.

 

என்னை எப்படி அறிமுகப்படுத்துவானோ? அவன் முகத்தையே ஆவலாக பார்த்திருந்தால் அவள்.

 

குழந்தையின் கேள்விக்கு அவன் பதிலளிக்கு முன், ஷோபா,

“இவங்க உன் சித்தி‌‌ மா. ருத்ரன் பப்பா இவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க” என்றார்.

 

“ஹாய் சித்தி” என்று அழகாய் சிரிக்க அவளால் முகத்தை திருப்ப முடியவில்லை. பதிலுக்கு அவளும் சிறு புன்னகைத்தாள். 

 

“மம்மி பசிக்குது” என்று ரோஷினியை நோக்கி ஓட, தாமிரா அதிர்ச்சியானாள்.

 

‘அனன்யாவின் அம்மா ரோஷினியா? ருத்ரனின் மனைவி. அப்படியென்றால் நான் யார்? மனைவியை வீட்டில் வைத்துக் கொண்டே இன்னொரு திருமணமா? 

 

அவளது மனம் அடைந்த வேதனை எத்தகையதென அவளாலே கணிக்க முடியவில்லை.

 

அதற்கு மேலும் அங்கு இருப்பாளா 

அவள்? எழுந்து அறைக்கே ஓடி விட்டாள். ருத்ரனது பார்வையோ அவளையே பின் தொடர்ந்தது.

 

அறைக்குள் நுழைந்தவளால் அழாமல் இருக்க முடியவில்லை. தனக்கு ஏன் இப்படி நேர்ந்தது? அந்தக் கேள்வியே அவளை குடைந்து அவள் மனதையும் உடைத்தது.

 

அப்போது உள்ளே வந்ததான் ருத்ரன்.  அவன் வந்ததும் சட்டென அவள் கண்களை துடைத்துக் கொண்டு சாதாரணமாக இருந்தாள்.

 

சிவந்திருந்த கண்களையே சிறிது நேரம் பார்த்தான். அவனது கழுகுக் கண்களுக்கு தெரியாதா என்ன? 

 

“ஏன் சாப்பிடாம பாதியிலே எழுந்து வந்த? 

 

“போதும்”

 

“போதுமா இல்லை பிடிக்கலையா?”

 

“ரெண்டும் தான்”

 

“ஆல்ரைட்… உனக்கு உன் அப்பா கூட பேசனுமா?” சட்டென அவளது முகம்

பிரகாசமானது.

 

ஆனால் அவர் தான் பேச மாட்டாரே. தந்தையின்‌ கோபம் அவள் அறிந்தது தான்.‌ ஒரு போதும் அவர் அவளை மன்னிக்கப் போவதில்லை.

 

செய்வதையெல்லாம் செய்து விட்டு கேட்கும் கேள்வியை பார்?

 

“வேண்டாம்” என்ற ஒற்றை வார்த்தையோடு அமைதியானாள். அவளது முகம் வேதனையை காட்டியது.

 

“ம்ம்… ஓகே. அனு என் ப்ரதரோட பொண்ணு. ரோஷினி அவனோட‌ வைஃப்” அவள் கேட்காத கேள்விக்கும் பதிலளித்துச் சென்று விட்டான்.

 

அதைக் கேட்டதுமே தனது தந்தையை பற்றிய நினைவெல்லாம் எங்கோ போனது.  அவளது மனம் அடைந்த நிம்மதி எதனால் என்று அவளுக்கே புரியவில்லை. 

 

***

 

இந்த இரு வாரம் பிடிப்பே இல்லாமல் வேகமாக உருண்டோடியது. ஏன் இந்த திருமணம்? எதற்கு இப்படியொரு வாழ்க்கை? எதனால் நேர்ந்தது?

யோசித்து யோசித்து

அவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்.

 

அவனாக அவளை நெருங்குவதும் இல்லை. இவளும் அவனை கண்டு கொள்வதில்லை. இவளது சோகத்திலேயே முழு நேரமும் மூழ்கி விடுவாள். அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பாள். அவ்வப்போது அனன்யாவின் பேச்சு அவளுக்கு சிறிது நிம்மதியை தரும்.

 

யாரும் அவளை வந்து பார்ப்பதுமில்லை. வீட்டினரை அவள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. அவளுக்கு அவர்கள் மீதெல்லாம் கடுங்கோபம் இருந்தது‌. அதனால் அவர்களை‌ தவிர்த்து விடுவாள்.

 

வழக்கம்போல காலையில் எழுந்து குளித்து உடை மாற்றி விட்டு வர, அறையில் இருந்தபடி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான்.

 

படபடக்கும் இதயத்துடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் தாமிரா. வியப்புடன் புருவம் உயர்ததியவன் அவளது தடுமாற்றத்தை விசித்திரமாக பார்த்தவனது பார்வை அவளை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தது‌.

 

அழைப்பை துண்டித்தவன், அலை பேசியில் பார்வையை பதித்த வண்ணம் எழுந்து அவளை நெருங்கினான். 

 

மிட் லென்த் ஸ்கர்ட்டும் அதற்கு பொருத்தமான வெள்ளை நிற வீ நெக் டாப் ஒன்றையும் அணிந்திருந்தாள். அது அவளது கழுத்துக்கு கீழுள்ள பகுதியை சற்று எடுத்துக் காட்டியது. 

 

“மை வொய்ஃப் கேன் நாட் பீ ட்ரெஸ்ட் திஸ் வே.” 

 

“ஐ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட்”

 

“இந்த மாதிரி வெளியே தெரியும்படியா எந்த டிரஸ்சும் போடக் கூடாது” என்று அவளது கழுத்துக்கு கீழ் பகுதியை நோக்கி அவன் கைகள் நகர,

 

“டோன்ட் டச் மீ”  பட்டென தட்டி விட்டாள்.

 

“நான் எப்படி  டிரஸ் பண்ணணும்குறது என்னோட விருப்பம். நான் உங்க ஒப்பீனியன் கேட்டேனா?  இதெல்லாம் சொல்ல நீங்க யாரு?” சுருக்கென முளைத்த கோபத்தில் படபடத்தாள்.

 

“நான் உன் கணவன்” அழுத்தமான‌ பதிலில் அவளது வாயை அடைத்து விட்டான்.

 

‘இந்த டிரஸ்லாம் எடுத்துட்டு வந்தது இவன். இப்போ என்னை குறை சொல்லிட்டு இருக்கான்’ மனதுக்குள் அவனை திட்டினாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. முறைத்துக் கொண்டு நின்றாள்.

 

கையிலிருந்த செல்போனை ஆராய்ந்து கொண்டிருந்தவன்,

 

“அடேங்கப்பா! ரகு கிட்ட இருந்து ஏகப்பட்ட மெசேஜ்ஸ் அன்ட் கால்ஸ்…” அவன் திடீரென்று கூற, அப்போது தான் அவன் கையில் இருந்த தனது அலைபேசியைக் கவனித்தாள்.

 

“தாமிரா‌ எங்க இருக்க? ஏன் என் கால்ஸ் அட்டன்ட் பண்ண மாட்டேங்குற? உனக்கு என்னாச்சு? ஏதாவது ப்ராப்ளமா? இன்னும் என் கூட கோவமா இருக்கீயா? 

ப்ளீஸ் எங்கூட ஒரு தடவையாவது பேசு. ஐ மிஸ் யூ சோ மச் ஏஞ்சல். 

 

ப்பாஆ… உன் போனே அதிர்ற அளவுக்கு மெசேஜ்ஸ். அவனுக்கு உன் மேல ரொம்ப அக்கறை போல… ” அவளது இன்பாக்ஸிலிருந்த ரகுவின் குறுந்தகவல்கள் ஒவ்வொன்றையும் படித்துக் காட்டி  போலியாய் வியந்து கொண்டிருந்தான்.

 

அவளோ ஆர்வமாக அவன் முன் வந்து செல்போன் திரையை எட்டிப் பார்க்க முனைந்தாள். 

 

அவளது முகத்தில் தெரிந்த அதீத ஆர்வம் அவனுள்ளிருக்கும் அசுரனை தட்டியெழுப்ப, அந்த செல்போன் தரையில் பட்டு தெறித்து சிதறியது.

 

என்ன நடந்தது என்று புரியாமல் அவள் மிரண்டு விழித்துக் கொண்டிருந்தாள். அவனது கண்களில் தெரிந்த சீற்றத்தில் உள்ளுக்குள் உதறலெடுத்தது. 

 

அவள் எந்த தவறும் செய்யவில்லை. அப்படியிருந்தும் அவளுக்குள் ஊடுருவிய பயத்தை தவிர்க்க முடியவில்லை.

 

அவளது அஞ்சிய விழிகளை உற்றுப் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ நீண்ட பெரு மூச்சை இழுத்து விட்டான். அவனது கோபம் சிறிது மட்டுப்பட்டது.

 

அவனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து இன்னொரு செல்போனை எடுத்தான்.

 

“இந்த ஃபோன் உனக்கு தான். என் வெட்டிங் கிஃப்ட்” என்று நீட்டினான். 

 

அவனது குரலில் இப்போது கோபம் இல்லை. முகமும் சாதாரணமாக தான் இருந்தது.  

 

இதை வாங்குவதா? வேண்டாமா? அவளது அலைபேசியை உடைத்தான். இப்போது ஒரு புதிய அலைபேசியை பரிசளிக்கிறான். இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லையே?

 

குழப்பமாக அவனையே பார்த்த வண்ணம் இருக்க, அவனது கண்களில் இதை வாங்கிக் கொள் என்ற செய்தி தாங்கியிருந்தது. மறுக்கவில்லை. மறுத்தால் அவன் விடப் போவதுமில்லை. அதை வாங்கிக் கொண்டாள்.

 

“லுக் அட் மீ. அதுக்கு முன்னாடி சில கண்டிஷன்ஸ் இருக்கு.” 

 

‘அதானே பார்த்தேன்’ என்ன என்பது போல் எரிச்சலுடன் அவனை பார்த்தாள்.

 

“உங்க வீட்ல யாரு கூடேயும் நீ பேசக் கூடாது. அப்புறம் உன் ஃப்ரண்ட்ஸ்கு அப்பப்போ பேசலாம். பட் டோன்ட் மேக் இட் டூ லாங். அப்புறம்… ” என்றவன் அவளை பார்த்தான்.

 

“ரகு உன் ஃபிரெண்ட் தானே?”

 

“ம்ம்… “

 

“ரொம்ம்ம்ப… க்ளோஸ் ஃப்ரெண்ட் மாதிரி தெரியுதே?”  ஒரு மாதிரி அழுத்திக் கேட்ட விதத்தில், அவனை முறைத்தாள்.

 

“சோ‌ இனி அவன் கூட எந்த விதத்துலயும் பேச கூடாது. நோ கால்ஸ் நோ டெக்ஸ்ட்ஸ் அன்ட் நோ ஃபேஸ் டு ஃபேஸ் மீட்டிங்ஸ். டூ யூ அன்டர்ஸ்டேன்ட்?” 

 

“எனக்கு இப்படியொரு போன் தேவையே இல்லை” என்றாள் பட்டென்று.

 

“ஏன் ரகு கூட பேசாம இருக்க முடியலையா? அந்த அளவுக்கு அவன் மேல காதலா?” அவனது அந்தக் கீழ்த்தரமான பேச்சு அவள் இதயத்தில் அமிலத்தை ஊற்றியது.

 

“ச்சீ… ஹீ ஆஸ் மை ஃப்ரெண்ட். தேவையில்லாம கற்பனை பண்ணி எங்க ஃப்ரண்ஷிப்பை கொச்சைப்படுத்தாதீங்க. உங்களுக்கு என்ன உங்க ரூல்ஸை நான் ஃபாலோ பண்ணனும் அவ்ளோ தானே. ஓகே ஃபைன்” அந்த செல்போனை எடுத்துக் கொண்டாள்.

 

“டிரஸ்ஸை சேஞ்ச் பண்ணு” அறையை விட்டு வெளியேறினான்.

 

இவன் என்ன இத்தனை கட்டுப்பாடுகள் விதிப்பது? நண்பனை கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறானே? சைக்கோவா இவன்? இல்லை என்னையே சைக்கோவாக ஆக்கி விடுவானா?  இன்னும் எத்தனை நாள் இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியும்?

 

எதற்கு இப்படியொரு சிறை வாழ்க்கை? ஏன் இந்த தண்டனை? அவனுடனான இந்த வாழ்க்கை அவளை எங்கே கொண்டு நிறுத்தும்?  ஆயாசமாக உணர்ந்தாள் அவள். 

 

***

 

“ஹாஸ்பிடல் போகனும்” என்று அவன் முன் வந்து நின்றாள் தாமிரா.

 

“ஏன் உடம்புக்கு என்ன?”

 

“உடம்புக்கு ஒன்னுமில்லை. என் வேலை?” எதிர்ப்பார்ப்புடன் அவனை நோக்கினாள்.

 

“யூ டோண்ட் நீட் டு வொர்க். இந்த ருத்ரனோட வொய்ஃப் வேலைக்கு போகனும்னு அவசியமில்லை” என்று மறுத்து விட்டான்.

 

யார் சொன்னது இது அவளது வேலை என்று? டாக்டர் தொழில் அவளது கனவு. அவளது லட்சியம். இரவு பகல் பாராது கஷ்டப்பட்டு படித்து அவள் அடைந்த இந்த இடத்தை அவளால் விட்டுக் கொடுக்க முடியுமா என்ன? 

 

பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? அவள் ஆசைப்படி அவளது வாழ்வு தான் அமையவில்லை. இந்த ஒன்றும் இல்லையென்றால் அவளது முழு வாழ்வுமே சூனியமாகி விடும்.

 

“உங்க ரூல்ஸை எந்த விதத்திலயும் மீற மாட்டேன். இதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க ப்ளீஸ்…” வேறு வழியில்லை. அவன்‌ கையை பிடித்து கெஞ்சினாள்.‌ எப்படியாவது அவனிடம் சம்மதம் பெற வேண்டும் என்றே தோன்றியது.

 

“அப்படியா!” வியந்தபடி அவள் பற்றியிருந்த கையை பிடித்து அவளை தன் பக்கம் இழுக்க, எதிர்பாராத அவன் செயலில் அவனது மார்பில் மோதி நின்றாள்.

 

அவன் முகத்துக்கு மிக அருகில், அவன் பிடியில், இருவர்‌ பார்வையும் சந்தித்துக் கொண்டன. அவன் கண்கள் அவளை வெகு சுவாரஸ்யமாக பார்த்தது. அவனது நெருக்கத்தில் தடுமாறினாள் அவள்.

 

அவன் அவளை மேலும் நெருங்கினான். அவள் இதழ் நோக்கி குனிந்தான். அவளது இமைகள் படக் படக்கென்று அடித்துக்கொள்ள அவனது இந்த பார்வையில் அவள் இதயம் தாறுமாறாக துடித்தது. 

 

அவள் இதழை நெருங்க நூலிழை இடைவெளியில் சுய உணர்வு வரப் பெற்றவளாய், அவன் நெஞ்சில் கை வைத்து பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டாள்.

 

அவளது எதிர்பாராத இச்செயலில் மலை போன்ற அவனே நிலைதடுமாறி பின்நோக்கி விழ, சட்டென்று சுதாரித்தான். தலை கவிழ்ந்து நின்றவளை வெறித்து விட்டு, அறைக்கதவை படாரென்று அறைந்து சாந்தி விட்டு வெளியேறினான்.

 

***

 

ஒரு மாதத்திற்கு பிறகு… 

 

மருத்துவமனை வாயிலில் ருத்ரனது கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்க முற்பட்டவளின் கையை பிடித்து தடுத்தான்.

 

“என்னை ஏமாத்தனும்னு நெனச்சா அதோட விளைவுகளை சந்திக்க ரெடியா இரு” என்று எச்சரிக்கை செய்து விட்டுத் தான் சென்றான்.

 

ஒரு மாத கால இடைவெளிக்கு பின் இன்று தான் மருத்துவமனை வருகிறாள். அதுவும் அவனாகவே அள

 

மருத்துமனைக்குள் நுழைந்தவள் முதலில் தேடியது சிந்துவை தான். அவளிடமாவது தன் நிலையை கூறி ஆறுதல் பெற வேண்டியே தன் தோழியை தேடி விரைந்தாள்.

 

அவள் எப்போதும் இருக்கும் அறையில் வந்து தேட “எங்க வந்தீங்க மிஸஸ்.ருத்ரதேவ்?” அவள் பின்னால் கேட்ட சிந்துவின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள், சிந்துவை விசித்திரமாக பார்த்தாள்.

 

“பெரிய டான் மனைவி இப்போ இந்தப் பக்கமெல்லாம் வர மாட்டீங்கனு நெனச்சோம்.” 

 

“ஏய் சிந்து ஏன்டீ இப்படி பேசுற? என்னாச்சு?”

 

“நீங்க செஞ்ச காரியத்தை மறந்துட்டீங்களா? ஊமை ஊரை கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க” என்றாள் குத்தலாக.

 

“சிந்து நீ தப்பா புரிஞ்சிட்டு பேசற. என்ன நட…” அவள் தன்நிலை விளக்கம் கொடுக்கும் முன்னரே,

 

“ச்சே வாயை மூடுடி. உன்னை காணோம்னு நான், ரகு, உன் அப்பா மூனு பேரும் எவ்ளோ துடிச்சு போனோம் தெரியுமா? பதறி போய் தேடினோம். ரகு தெருத்தெருவா உன்னை தேடி அலைஞ்சான். அந்த தவிப்புக்கெல்லாம் நீ வச்சியேம்மா ஆப்பு சத்தியமா எதிர்ப்பார்க்கலை. 

 

உன் அப்பாவை பத்தி கொஞ்சம் கூட யோசிச்சு பார்க்க தோனலைல. அப்பவே உனக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது தெரியும். ஆனா உன் அப்பா மேல இருக்குற பாசம் அப்படியொரு தப்பை செய்ய வைக்காதுன்னு தப்பா நெனச்சிட்டேன்” சிந்துவின் தாறுமாறான வார்த்தைகள் அவள் இதயத்தை கிழிக்க, கண்களில் நீர் கோர்த்தது.

 

அவளது கண்ணீர் கூட சிந்துவை கடுப்பாக்க, “சும்மா அழுது சீன் கிரியேட் பண்ணாத. இப்படி தான் பாவமா மூஞ்ச வச்சிருந்தே எல்லாரையும் ஏமாத்திட்டல்ல? சும்மா சொல்லக்கூடாது தாமிரா உன் துணிச்சலை பாராட்டியே ஆகனும்.”

 

“சிந்து ப்ளீஸ் நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் பொறுமையா கேளு. நீங்க யாரும் நெனக்கிற மாதிரி…”

 

“நிறுத்து தாமிரா. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத. உன்னால இப்போ  அப்பா ஹாஸ்பிடல்ல படுத்து இருக்காரு.” 

 

என்ன? அவளது தந்தை மருத்துவமனையிலா? உள்ளம் படபடத்தது.

 

“அ… அப்பாக்கு எ… என்னாச்சு? எங்க இருக்காரு?” பதறினாள்.

 

“தயவு செஞ்சு அவரை பார்க்க ட்ரை பண்ணாத. இன்னொரு அட்டாக் தாங்குற சக்தி அவர் மனசுக்கு இல்ல. உயிரே போயிடும்” சீறினாள். அதற்கு மேல் அவளது பதிலை கூட எதிர்ப்பாராது கிளம்பி விட்டாள்.

 

துடித்துப் போனாள் தாமிரா. அவளால் தான் தன் தந்தைக்கு இப்படியொரு நிலமையா? அவள் இழைத்த தவறு தான் என்ன? அவர் உயிருக்காக தானே அவள் வாழ்வையே பறிகொடுத்து இந்த முடிவை எடுத்தாள்.

 

தந்தையை இப்போதே கண்டு விட துடித்தது அவள் மனம். அவளை தாக்கிய சிந்துவின் வார்த்தைகளால் தன் மனதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். 

 

சிந்து தன்னை புரிந்து கொள்வாள் என நிச்சயமாக நம்பினாளே. அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனதை எண்ணி,  தான் நின்றிருந்த இடத்தையும் மறந்து அழுதாள். சுற்றியிருப்போர் அவளை விசித்திரமாக பார்த்ததையும் கண்டு கொள்ளவில்லை. 

 

ஏனோ ரகுவின் ஆறுதலை தேடியது அவள் உள்மனம். அது ஏனென்று அவளுக்கே புரியவில்லை. அன்று ரகுவும் தேடி அலைந்தான் என்று சிந்து கூறினாளே. அப்படியாயின் ரகு அமெரிக்கா போகவில்லையா? 

 

அந்நொடி ருத்ரனின் கட்டளைகள் யாவும் மறந்து போனது. கணவனது கட்டளையையும் மீறி ரகுவின் இலக்கத்தை டயல் செய்தாள்.

###