Eedilla Istangal – 6

Eedilla Istangal – 6

விருட் விருட்டென வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. தன் காரை சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு, ட்ராபிக் போலீஸிடம் சாரு கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“சார் ப்ளீஸ்”

“இல்லம்மா. லைசென்ஸ் இல்லாம வண்டி ஓட்டிட்டு வந்திருக்கீங்க. அது தப்பு. பைன் கொடுத்திட்டுப் போங்க”

“சார், என்கிட்ட கேஷ் இல்லை. நீங்க ஒரு பைவ் மினிட்ஸ் அலோவ் பண்ணா, ஏடிஎம்-ல போய் எடுத்திட்டு வந்திடுவேன்”

“உங்களுக்கு அலோவ் பண்ணா, இங்க நின்னுக்கிட்டு இருக்கிற எல்லாருக்கும் விடனும். புரிஞ்சிக்கோங்க” என்றவர், வேலையில் கவனம் செலுத்தினார்.

அங்கேயே அவள் செய்வது அறியாமல் நிற்பதைக் கண்டவர்,

“இப்படியே நிக்காதீங்க. வீட்ல இருந்து யாரையாவது பணம் எடுத்திட்டு வரச் சொல்லுங்க” என்று யோசனையும் கொடுத்தார்.

‘வேறு வழியில்லை, மாமாவிற்கு போஃன் போடலாம்’ என்று முடிவெடுத்து தன் அலைபேசியை எடுத்தாள்.

அக்கணம், சாலையில் சென்று கொண்டிருந்த பாபி, சாரு நிற்பதைப் பார்த்தான்.

சாருவின் கார் அருகே பைக்கை நிறுத்திவிட்டு, அவள் எதிரே வந்து நின்றான்.

“என்ன சாருலதா? எதுக்கு இங்க நிக்கிற?”

யாரிது? என்று தலையை நிமிர்த்தினாள். பாபி என்று கண்கள் அடையாளம் கண்டவுடன், ‘அடுத்த தலைவலியா?’ என்று மனதுக்குள் கடுகடுத்தாள்.

“சொல்லு?”

அவனுக்குப் பதில் சொல்லாமல், தன் மாமாவிற்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

ஆனால் அந்தப்பக்கம் அழைப்பை ஏற்க, மாமனார் இல்லை போல.

“ச்சே” என்று எரிச்சல் அடைந்தாள்.

“என்னாச்சு சாருலதா??”

“லைசென்ஸ் எடுத்து வர மறந்துட்டேன். அதான் நிறுத்தி வச்சிருக்காங்க. போதுமா?”

அவன் சிரித்தான்.

“இதுல சிரிக்க என்ன இருக்கு?”

“நான் அதுக்காக சிரிக்கலை”

“தென்??”

“என்னைய போலீஸ்-ல புடிச்சுக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு… நீ போலீஸ்-ல மாட்டிக்கிட்டு நிக்கிற”

அடிக்கும் வெயிலைக் காட்டிலும் அனலை அவள் விழிகள் காட்டின.

“சரி சரி… பைன் பே பண்ணிட்டு போக வேண்டியதுதான??”

“அது… அது… பர்ஸில அவ்வளவு பணம் இல்லை. ஏடிஎம்-ல போய் எடுத்திட்டு வர விடமாட்டிக்காங்க”

“ஓ! ஹாஸ்பிட்டல் சட்டம் இங்க செல்லுபடியாகலை”

“ப்ச்”

“ஓகே… ஓகே… கார்டு ஸ்வைப் பண்ணலாமே?”

“மெஷின் வொர்க் ஆகலையாம்”

“ஸோ சேட்! சரி, நீ கார்ல உட்காந்திரு. இதோ வர்றேன்” என்று போகப் போனவனை…

“என்ன பண்ணப் போற?”

“நீ உள்ளே உட்காரு. ஒரு பைவ் மினிட்ஸ்” என்று சொல்லி, டிராபிக் போலீஸ் நோக்கிச் சென்றான்.

அவளும் காருக்குள் அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில், பைனைக் கட்டிவிட்டு ரசீதுடன் பாபி வந்தான்.

சன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தவளிடம்,
“இந்தா பைன் ரெசிப்ட்” என்று நீட்டினான்.

“நீ பே பண்ணியா?”

“ம்ம்ம்ம்”

“அக்கவுண்ட் நம்பர் சொல்லு, ஐ வில் ட்ரான்ஸ்பெர் தே அமௌன்ட்”

“அதெல்லாம் வேண்டாம்”

சட்டென தன் பர்சில் இருந்து கொஞ்ச பணத்தை எடுத்து நீட்டினாள்.

“என்ன?” என்றான்.

“என்கிட்ட டு தவுஸண்ட்தான் கேஷ் இருந்தது. அதையாவது… ”

“பரவால்ல வச்சிக்கோ. இன்னும் எத்தனை டிராபிக் போலீஸ் நிப்பாங்களோ!? தேவைப்படும்”

நொடியில் அவளது முகம் பதற்றம், எரிச்சல் இரண்டையும் காட்டியது.

“சாருலதா… நெக்ஸ்ட் ஏடிஎம் வர்ற வரைக்கும், நான் பைக்கில பாலோவ் பண்றேன். டென்ஷன் இல்லாம டிரைவ் பண்ணு” என்றான்.

இருவரும் தத்தம் வாகனத்தில் கிளம்பினர்.

சாருவின் வாகனம் செல்லும் வழிக்குப் பின்னால், பாபியின் வண்டியும், வாழ்க்கையும் பயணிக்கத் தொடங்கின.

பாதுகாப்பாக வருகின்றவனைக் கண்டு, சாருவின் மனதில் மெல்லிய பாதிப்பு வந்தது.

*****
மருத்துவமனை வளாகம்…

மதியம் 3:00 மணி, ராஜசேகர் அறை.

தாராவும், சரத்தும் ராஜசேகருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சுத் தொடர்கிறது…

“ஒரு சின்ன சஜ்ஷன் வேணும்? – ராஜசேகர்.

“எதைப் பத்தி-ப்பா?”

“ஆங்காலாஜிஸ்ட் டிபார்ட்மென்ட் கொண்டுவரலாம்னு நினைக்கிறேன். ஸோ அதைப் பத்தி”

“என்ன சஜ்ஷன் வேணும்?”

“சேம் பில்டிங்ல எக்ஸ்ட்ரா ஒரு ப்ளோர் எடுக்கவா? செப்பரேட் பில்டிங் கட்டவா? இல்லை, உங்ககிட்ட நியூ ஐடியா இருக்கா?”

“எக்ஸ்ட்ரா ப்ளோர் எடுக்கலாம். ஸோ பில்டிங் வில் கெட் நியூ லுக்” – சரத்.

“சரி சரத்” என்றவர், அதுவரை எதுவும் பேசாமல் இருந்த தாராவைப் பார்த்து, “நீ என்ன சொல்றம்மா?” என்று கேட்டார்.

“எமர்ஜென்சி பில்டிங்ல தேர்ட் ப்ளோர் யூசேஜ் இல்லாம இருக்கு. ஸோ அதை யூஸ் பண்ணிக்கலாம்”

“ஓகே. அடுத்த மீட்டிங்ல டிடெயில்லா டிஸ்கஸ் பண்ணலாம். வேற ஏதும் என்கிட்ட கேட்கணுமா?”

“ம்ம்ம், நான்” என்றாள் தாரா மெதுவான குரலில்.

“சொல்லும்மா”

“ஒரு கேம்ப் ஆர்கனைஸ் பண்ணப் போறேன்”

“த்ரீ மன்ந்த் முன்னாடிதான கன்டக்ட் பண்ண? இவ்வளவு பிரிக்கொயின்ட்டா…” என்று ஆரம்பித்தவனை…

“சரத், நீ சும்மா இருடா” என்று அதட்டிவிட்டு, “என்ன வேணும் தாரா?” என்றார்.

“ஒரு 5 ஜெனரல் டாக்டர்ஸ்… லேப் டெக்னீசியன்ஸ்… காமென் ட்ரக்ஸ், சர்ஜரி சப்லைஸ்… ” என்று அடுக்கிக் கொண்டு போனவளைப் பார்த்துச் சிரித்தார்.

அவள் அடுக்குவதை நிறுத்திவிட்டாள். ஆனால் அளவாய் கூட சிரிக்கவில்லை.

“ஓகே. நீ ப்ராப்பர் மெயில் சென்ட் பண்ணு. ஐ வில் அக்நாலேட்ஜ் இட்”

“தேங்க்ஸ். நான் கிளம்புறேன்” என்று சொல்லி, வெளியே சென்றுவிட்டாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம், “சரத், நீ உன் வேலையைப் போய் பாரு” என்றார்.

“அதைத்தான் செய்யப் போறேன்” என்றவன், வெளியே வந்ததும்…

நடைகூடத்தில் சென்று கொண்டிருந்த தாராவை, அவளது எதிரில் வந்த செவிலியரிடம் சைகையால் சொல்லி நிற்கச் சொன்னான்.

“மேம், சரத் சார் கூப்பிடறாங்க” என்று செவிலியர் சொன்னதும், தாரா நின்றாள். சரத் அருகில் வந்தான்.

“என்ன? என்ன வேணும்?” – தாரா.

“கேம்ப் பத்திக் கேட்கணும்”

“அதான் உள்ளே வச்சி சொன்னேன்ல?”

“அப்பா நீ என்ன கேட்டாலும் ஓகே சொல்லுவாரு. பட் நான் அப்படியில்லை”

“உனக்கு இப்போ என்ன தெரியனும்?”

“கேம்ப் தனியா அரேன்ஜ் பண்றியா? இல்லை, ஏதாவது என்ஜிஓ ஆர் மெடிக்கல் டிரஸ்ட்?? யாரு ரெக்வஸ்ட் பண்ணாங்க?”

“அது… அது… ஒரு ஆக்டிவிஸ்ட்”

“யாரது? தெரிஞ்சவரா?”

“ம்ம்ம்”

“எப்படி?”

“அவங்க அக்கா என்னோட பேஷண்ட். ஸோ… ஸோ தெரியும்”

“செக்-அப் வர்றப்போ, இதெல்லாம் பேசுனீயா?”

“இல்லை சரத். நான் ஹாஸ்ப்பிட்டல் ஹவர்ஸ்ல பேசலை”

“அப்புறம்…”

“வெளியே மீட் பண்ணப்போ… கேட்டாங்க”

“பிளான்டு மீட்டிங்??”

“இல்லை. ஆக்சிடென்ட்டல் மீட்டிங்”

“சரி, அவர் பேரு என்ன?”

“அது எதுக்கு?”

“சும்மா சொல்லு”

“தேவா”

வேறெதுவும் கேட்கவில்லை “சரி போ” என்று விட்டுவிட்டான்.

அவளும் சென்று விட்டாள்.

சரத், தாரா சொன்ன பதில்களைத் திரும்பவும் சொல்லிப் பார்த்தான்.

அன்று விபத்தில் சிக்கிய ஒருவனை, அவசர சிகிச்சைப் பிரிவிற்குத் தூக்கி வந்தது ‘ஒரு ஆக்டிவிஸ்ட்’ என்று மருத்துவர்கள் சொன்னது நியாபகம் வந்தது.

அவனும்… இவனும் ஒன்றா?? என்று முடிச்சுப் போட்டுப் பார்க்க ஆரம்பித்தான்.

*****
அன்று ஞாயிறு காலை,

மருத்துவ முகாமிற்கு தேவையானதை தேவா ஏற்பாடு செய்திருந்தான்.

அதாவது, முகாம் நடத்தித் தருமாறு மருத்துவமனையிடம் அனுமதி கேட்பது… அந்த வார்டு கவுன்சிலர்களிடம் தெரிவிப்பது… கூடாரம் அமைப்பது… நாற்காலிகள் போடுவது…
இப்படி நிறைய!

காலையிலே ஆரம்பமானது.

அது சிறிய குப்பம்தான்…
சின்னச் சின்னக் குடிசைகள்…
குறுகலான தெருக்கள்…
அதன் நடுவே இருந்த ஒரு விளையாட்டு மைதானத்தில், ஐந்தாறு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அனல்காற்றும் வெயிலும் போட்டி போட்டுக் கொண்டு அடித்தன.

ஒருபக்கம் முன்பதிவுகள்…
மற்றொரு பக்கம் மருத்துவரைக் காண வரிசையில் நிற்கும் முன்பதிவு செய்த மக்கள்…

கண் பரிசோதனைகள்…
சாதாரண நோய்க்கான சிகிச்சைகள்…

இதுமட்டுமல்ல…
இரத்த தானமும் நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில், அதற்கென முறையான வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

தாராவிற்குத் துணையாக சாருவும் வந்திருந்தாள்.

பாபியும் தேவாவும் வந்திருந்தார்கள். இன்று இருவருக்கும் பெரிய வேலைகள் இல்லை.

இன்னும் இருவர் தேவாவுடன் வந்திருந்தனர். அவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர். தேவா அடிக்கடி சொல்லும் அங்கிள் & ஆண்ட்டி.

அவர்கள் பற்றி,

பணி ஓய்வு பெற்றவர்கள். தேவா செய்யும் நல்ல விடயங்களுக்காக, தங்களின் ஓய்வூதியத்தின் முக்கால்வாசி பங்கைத் தருபவர்கள்.

தேவாவை, அவர்கள் இருவருக்கும் நிரம்ப பிடிக்கும். அவன் மேல் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.

அவனின் கவனத்தைச் சிதறிச் செய்யும் எந்த ஒன்றும், அவர்களுக்குப் பிடிக்காது.

இதுவே மிஸ்டர் & மிஸஸ் பாஸ்கர்!

இனி முகாமில் நடப்பவைகள்…

தாராதான் ‘டோர்நாடோ’ காற்றைப் போல் சுற்றிக் கொண்டிருந்தாள்.
அனைவருக்கும் ‘இன்ஸ்டெரக்ஷன்’! அதுவும் இன்முகத்துடன்!!

அனல்காற்றைக் கூட பொருட்படுத்தாமல் ஒவ்வொரு கூடாரத்திற்கும் சென்று பார்வையிட்டாள்.

அப்படி, இரத்த தானம் நடத்தப்படும் கூடாரத்தில் நின்று கொண்டு,

“ஒவ்வொரு பேக்கையும் கரெக்டா லேபிள் பண்ணுங்க…”

“ப்ராப்பரா செக் பண்ணிட்டு, பிளட் கலெக்ட் பண்ணுங்க”

“சிஸ்டர்…” என்று சொல்லிக் கொண்டே வரும்போது… தேவா முன்னே வந்து நின்றான்.

இருவரிடத்தும் ஒரு புன்னகை!
தாராவிற்கு உள்ளத்திலிருந்து!!
தேவாவிற்கு உதட்டிலிருந்து!

“தேவா, நீங்களும் டொனேட் பண்றீங்களா?”

“ம்ம் ஓகே”

“சிஸ்டர் இவங்க நெக்ஸ்ட்” என்று சொல்லி, அவனைக் கடந்து சென்றவள், “தேவா” என்று அழைத்தாள்.

‘என்ன?’ என்பது போல் திரும்பிப் பார்த்தான்.

“இதுக்கு முன்னாடி எப்போ பிளட் டொனேட் பண்ணீங்க?”

“டோன்ட் வொரி. த்ரீ மன்ந்த் ஆயிடுச்சு” என்றான்.

மீண்டும் ஒரு புன்னகை சிந்தி விட்டுச் சென்றுவிட்டாள்.

இரத்தம் கொடுத்துவிட்டு, அந்த மைதானத்தில் ஓரத்தில் இருந்த ஒரு மரத்தடி நிழலுக்குத் தேவா வந்தான்.

ஏற்கனவே அங்கே சாரு நின்றுகொண்டிருந்தாள்.

“ஹாய்” என்றான்.

“வாங்க… வாங்க…”

“உங்க ப்ரண்டுக்கு நீங்க எதுவும் ஹெல்ப் பண்ணலயா?”

“எனக்கு… ” என்று ஆரம்பித்து,
இருவரும் பத்து நிமிடங்களுக்கு மேல் பேச்சைத் தொடர்ந்தார்கள்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், பாபி வந்து இணைந்து கொண்டான். பின்னர் மூன்று பேரும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

யாரோ அழைக்கிறார்கள் எனச் சொல்லி தேவா சென்றுவிட்டான்.

நிழலில் நிகழ்கணத்தில் பாபியும் சாருவும்…

தேவா சென்ற அடுத்த வினாடியே, “நானும் கிளம்புறேன்” என்று சொல்லிச் செல்லப் போனவளை….

“ஒரு நிமிஷம்… ஒண்ணு கேட்கணும்” என்று நிறுத்தப் பார்த்தான்.

நிற்காமல் நடக்க ஆரம்பித்தாள்.

“உன்னைப் பத்தி இல்லை. உன் ப்ரண்ட் பத்தி… ” என்ற வாக்கியம் முடிந்தவுடன், சாரு மீண்டும் மரத்தடியில் நின்றாள்.

“தாராவ பத்தி என்ன?”

“உன் பிரண்டு தேவாவை லவ் பண்றாங்களா?”

“ஏன் அப்படிக் கேட்கிற?” என்று கேட்டு அதிர்ந்து நின்றாள்.

“ஒரு சின்ன கெஸ் இருந்தது. இப்போ நீ இப்படி நிக்கிறதைப் பார்த்துதான் கன்பாஃர்ம் பண்னேன்”

“ப்ச் போதும், எப்படித் தெரியும்னு சொல்லு?”

“பர்ஸ்ட் டே… என் முன்னாடி நின்னு, தேவாவையே பார்த்துக்கிட்டு இருந்தாங்க”

“….”

“நெக்ஸ்ட். நான் ஹாஸ்ப்பிட்டல் வந்தப்போ… ஹேமாவ தேவாவோட அக்கவான்னு நீ கேட்ட?”

“ஆமா. அதுல என்ன இருக்கு?”

“பேஷன்ட் பேர் தெரிஞ்சிருக்கிறது வேற. பட் அவங்க தம்பி பேர் யூஸ் பண்ணி பேசுறது வியர்டு. ஸோ தாராதான் உன்கிட்ட சொல்லியிருப்பாங்க. கரெக்டா?”

“ம்ம்ம்”

“இப்போ இந்த மெடிக்கல் கேம்ப்”

“இது இல்லை. தாரா நிறைய மெடிக்கல் கேம்ப் நடத்துவா”

“ஓ! ஓகே”

“பாபி… ப்ளீஸ் தேவாகிட்ட சொல்லாத”

“ச்சே. நான் சொல்ல மாட்டேன் சாரு. அவங்க எப்போ சொல்லணுமோ சொல்லட்டும்”

அவளை அறியாமல் பாபி என்று அழைத்தாள்!
அவன் அறிந்தே சாரு என்று அழைத்தான்.

பாபிக்கே தாராவைக் கணிக்க முடிகின்றதென்றால், தேவா கணித்திருக்க மாட்டானா? இல்லை, கணித்தும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றானா? என்ற கேள்வி சாருவிற்குள் வந்தது.

“நானும் ஒண்ணு கேட்கணும்?” – சாரு.

“கேளு”

“தேவாவிட நீ யெல்டரா?”

“யெஸ். இது உன்னோட கெஸ்ஸா?”

“ஆமா! அன்னைக்கு ஹேமாவ பேர் சொல்லிக் கூப்பிட்டேல. அதான்”

“செம்ம”

“அவங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சு. பட் நீ…” என்று பாதியில் விட்டாள்.

“ஏன் மேரேஜ் பண்ணிக்கலைன்னு கேட்கிற?” என்று முடித்தான்.

‘இது தேவையற்ற கேள்வியோ?’ என்று நினைக்கையில், பாபி பதில் சொல்ல தொடங்கினான்.

“அம்மா.. அப்பா….நான். இதான் எங்க வீடு. அம்மா வேலைக்கு போவாங்க. அப்பா வீட்டு வேலையெல்லாம் செய்வாரு. இதான்… ” – அவன் தொடரும் முன்,

“உங்க அப்பாக்கு வேலை இல்லையா?” என்று குறுக்கிட்டாள்.

“நீ வேற?! அப்பாக்கு கோயம்பேடுல நிறைய கடை இருக்கு. அதிலிருந்து வர்ற வாடகையே போதும். பிளஸ் அவர் ஊர்ல நிறைய சொத்தும் உண்டு”

“ஓ”

“ஆனா அவரால வாய் பேசமுடியாது… காதும் கேட்காது…”

விளையாட்டாகக் கேட்டுக் கொண்டிருந்தவளின் மனம், லேசான விருப்பத்துடன் கேட்கத் தொடங்கியது.

“எனக்கு இருபத்தேழு வயசு இருக்கிறப்போ அம்மா இறந்திட்டாங்க. ஸடன் டெத். அப்போ இருந்து வீட்ல நானும் அப்பாவும்தான்”

“ம்ம்ம்”

“அந்த வயசு வரைக்கும், வீட்ல என்னோட சின்னச் சின்னத் தேவையை அம்மாதான் செய்வாங்க”

“…. ”

“அம்மாவ ரொம்ப பிடிக்கும். பட் அப்பாவைப் பத்தி யோசிச்சதே இல்லை. சம் டைம்ஸ், அவரும் என்னைப் பத்தி யோசிக்க மாட்டாரோன்னு நினைச்சா… ஒரு… ஒரு… ஏக்கம்… கோபம்… கவலை வரும்”

அவன் குரல் தடுமாறுவதை உணர்ந்தாள்.

“வீட்ல நானும் அவரும் மட்டும் இருக்கிறப்ப, ரெண்டு பேருக்கும் இடையில ஒரு அமைதி இருக்கும். அது எனக்குப் பிடிக்காது”

அவன் தந்தையைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை சாரு புரிந்து கொண்டாள்.

“ஸடன்னா அம்மா போனதுக்கு அப்புறம், ‘இனி என்ன பண்ணப் போறேன்னு?’ நான் யோசிக்கிறப்போ… அந்தச் சின்னச் சின்னத் தேவையெல்லாம், நான் கேட்காமலே நடந்தது”

“…. ”

“நான் அம்மாவ டிபென்ட் பண்ணியிருக்கேன் நினைச்சேன். பட் அது அப்படி இல்லை. அம்மாவை முன்னிறுத்தி, அப்பாதான் எல்லாம் பண்ணியிருக்காங்க”

“…. ”

“இருபத்தியேழு வருஷமா இந்த மனுஷனை புரிஞ்சிக்கிலயேன்னு மனசு வலிச்சது”

பாபியின் கண்கள் இரண்டும் கலங்கியிருப்பதை, சாரு விரல்களால் சுட்டிக் காட்டினாள்.

“இப்பெல்லாம் அவரைப் பத்தி பேசினா… கொஞ்சம் எமோஷனலா… ” என்று சொல்லி கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டான்.

“இப்போ அப்பா??”

“ம்ம்ம், சமையல்… கிளினிங்… ஆர்ட் வொர்க்… கார்டெனிங்… அசத்துவார் மனுஷன். வெளியில அவ்வளவு பிஸினஸ் இருந்தும், அந்த வீட்டுக்குள்ள தனக்கான உலகத்தை உருவாக்கியிருக்காரு”

“குட்”

“இப்பவும் நான் வீட்ல இருக்கிறப்ப… அப்பாக்கும் எனக்கும் இடையில ஒரு அமைதி இருக்கும். ஆனா அது அன்பை புரிஞ்சிக்கிட்ட அமைதி”

தந்தையின் மௌன வார்த்தைகளுக்கு அர்த்தம் எழுதி வைத்திருக்கும் அகராதியாக பாபி தெரிந்தான், சாருவிற்கு!

“வெளியில இருந்து வர்ற பொண்ணு இந்த அமைதியைப் புரிஞ்சிக்கணும். அதுக்காக வெயிட்டிங்”

“ஓ, ஓகே”

“நீ புரிஞ்சிக்க முடியுமா??”

சாதாரண வார்த்தைகளில், ‘சகலமும் நீயாக வருவாயா?’ என்று கேட்டு நின்றான்.

எதிர்பாராத கேள்வியால், எதிர் காற்றில் ஆடும் கிளை போல மனம் ஆனது அவளுக்கு!

“ரொம்ப வெயில். ஸோ நான் கிளம்புறேன்” என்று, அவன் கண்கள் சந்திக்காமல் பதில் சொன்னாள்.

“ஸ்மார்ட் ஆன்ஸர். ஹேமாவோட நெக்ஸ்ட் செக்-அப்ல மீட் பண்றேன் ” என்று, அடுத்த சந்திப்பைப் பற்றிப் பேசினான்.

அடுத்த நொடி, அவள் அங்கே நிற்கவில்லை.

அவனிடம் மறுத்துவிட்டு வந்தேனா? இல்லை, மழுப்பிவிட்டு வந்தேனா? சாருவால் பிரித்தறிய இயலவில்லை.

ஆனால், நேரே தாராவிடம் வந்து நின்றாள். ஆரம்பத்திலிருந்து நடந்ததைக் கூறி, பாபியிடம் தன்னைப் பற்றிச் சொல்லச் சொன்னாள்.

மேலும், மனம் சரியில்லை வீட்டிற்குச் செல்கிறேன் எனச் சொல்லிக் கிளம்பிச் சென்றாள்.

எப்பொழுதும், எவரிடமும் ‘சாருலதா. சிங்கிள் பேரன்ட்’ என்று தன்னை அறிமுகப்படுத்துபவள், ஏன் பாபியிடம் மட்டும் சொல்லத் தயங்குகிறாள் எனத் தாரா யோசிக்க ஆரம்பித்தாள்.

*****

மாலை ஐந்து மணிக்கு மருத்துவ முகாம் முடிந்தது.

மேற்கட்ட சிகிச்சை தேவை படுபவர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவர்கள்… என ஒரு அட்டவணை செய்து கொண்டாள்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற உதவியாளர்கள் என அனைவரையும் தாரா அனுப்பி வைத்தாள்.

பின் அங்கே கூடியிருந்த மக்களிடம், ஆறு மாதம் கழித்து வேலைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டாள்.

பாபி ஏற்கனவே சென்றிருந்தான்.

மைதானத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த தேவாவை நோக்கி வந்தாள்.

அவள் அருகில் வந்ததும், “எல்லாம் முடிஞ்சதா??” என்று கேட்டான்.

“ம்ம்ம்”

“இவ்வளவு பண்ணுவீங்கன்னு நான் நினைக்கல”

“ஓ”

“என்ன ஒண்ணும் பேச மாட்டிக்கிறீங்க?”

“ஸீ” என்று தன் முகத்தைக் காட்டி, “ஹவ் மச் டயர்ட்நெஸ்?” என்று சிரித்தாள்.

அவனும் சிரித்துக் கொண்டே, “இப்படி பீல் பண்றவங்க, எதுக்காக இதெல்லாம் பண்ணறீங்க?” என்று கேட்டான்.

“உங்களுக்காக…” என்றாள்.

காதலிக்கும் அவள் விழிகள் கடுகளவும் அசையாமல் அவனைப் பார்த்தன.

அவனும் அசராமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டென ஒவ்வொரு புருவத்தையும் தனித்தனியே உயர்த்தி, “அப்படிச் சொன்னா நம்புவீங்களா?” என்று கேட்டாள்.

லேசாக சிரித்து, “உங்களை நம்பி எனக்கு என்னாகப் போகுது” என்றான்.

“நானே சொன்னாலும் நம்ப வேண்டாம். இது, நான் எனக்காக பண்ணற விஷயம்”

“வாட்எவர்… தேங்க்ஸ் எ டன்”

“தேங்க்ஸ் வேண்டாம் தேவா”

“வேற என்ன வேணும்?”

“கொஞ்ச நேரம் பேசணும் தேவா??” என்று சொல்லும் போதே, “தேவா” என்று அழைத்துக் கொண்டே மிஸ்டர் & மிஸஸ் பாஸ்கர் வந்தனர்.

“ப்ச்” என சலிப்புடன் சொன்னாள். அதை தேவா கவனித்தான்.

“என்ன அங்கிள்?” என்றான்.

“இதோ நீ கேட்ட லிஸ்ட்” என்று அவனிடம் சில தாள்களைக் கொடுத்தார் மிஸஸ் பாஸ்கர்.

“ஓ! தேங்க்ஸ் ஆண்ட்டி”

“கேம்ப் முடிஞ்சும் ஏன் வெயிட் பண்ற? இதை நாங்களே ஆபிஸ்ல கொண்டு வந்து கொடுத்திருப்போமே?

“பரவால்ல அங்கிள்”

“ஓகே தேவா. வீ ஆர் லீவிங்” என்றவர், தாரா நிற்பதைக் கண்டு… “தேவா, இவங்கதான கேம்ப் ஆர்கனைஸரா?” என்று கேட்டார்.

“ஆமா அங்கிள்”

“குட் வொர்க். பட் டு… த்ரீ திங்க்ஸ் இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம். இல்லையா பாஸ்கர்??” – மிஸஸ் பாஸ்கர்.

“யெஸ், யூ ஆர் கரெக்ட்” என்று மிஸ்டர் பாஸ்கர் ஆமோதித்தார்.

“ஓகே அங்கிள் நீங்க கிளம்புங்க. நாளைக்குப் பார்க்கலாம்”

“நீயும் சீக்கிரமா கிளம்பு. பை” என்று சொல்லிக் கிளம்பி விட்டார்கள்.

அதுவரை தாரா அமைதியாக இருந்தாள்.

அவர்கள் சென்றதும்,

கிளம்பப் போனவனிடம், “தேவா பேசணும்னு சொன்னேன்ல” என்றாள்.

“ஓ! மறந்திட்டேன்”

“பேசட்டுமா?” என்று ஒப்புதல் கேட்டாள்.

ஒற்றை விரலால் அவள் முகத்தைச் சுட்டிக் காட்டி, “ஸீ, ஹவ் மச் டயர்டுநெஸ். பெட்டர் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க ” என்று ஒட்டாமல் நின்றான்.

“அப்போ நாளைக்கு ஓகேவா?” என்றாள் விடாமல்!

“உங்களுக்கு ஹாஸ்பிட்டல் இருக்கும்ல??”

“2:30 டு 5:30 ஐ அம் ப்ரீ”

“பட், என்னால வர முடியாதே” என்று மறுப்பைப் பதிவு செய்தான்.

“நானே உங்களைப் பார்க்க வர்றேன்” என்று தன் மனதைப் பதிலாகத் தந்தாள்.

“ம்ம்ம், ஓகே”

“அப்போ நாளைக்கு 2:30 க்கு மீட் பண்ணலாம்”

“ம்ம்ம் பை” என்று சொல்லி, பைக் நிறுத்தியிருக்கும் தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவன் சென்ற பின்,

கொஞ்சம் இருள் சூழ ஆரம்பித்தது. அருகிலுள்ள குடியிருப்புகளிலிருந்து வரும் சொற்ப ஒளி. மாலை நேர தொலைக்காட்சி தொடர்களின் வசனங்கள் சத்தம்.

சற்று நேரம் தாரா அப்படியே நின்றாள். பின் தன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவன் கால் தடம் பதித்துச் சென்ற தெருவின் வழியே, தன் காதல் தடம் பதித்தபடிச் சென்றாள்.

error: Content is protected !!