LogicIllaMagic23

மேஜிக் 23

 

நந்தனா தன்னை ஏற்க மறுத்துவிடுவாளோ என்ற அச்சம் முதல் முறை நிரஞ்சனை தொற்றிக்கொள்ள, தன் காதலை அவளிடம் பகிரங்கமாகச் சொல்லிவிட முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கினான்.

திருமணத்தேதி நெருங்க நெருங்க மனயிருக்கம் அதிகமாவதை உணர்ந்தவள், பொய்யாக மட்டும் நிரஞ்சனை திருமணம் செய்துவிடக் கூடாதென்பதில் மிகவும் உறுதியாக இருந்தாள்.

கல்லூரியின் இறுதி தேர்வு நடந்து கொண்டிருந்ததால் எதில் கவனம் செலுத்துவதென்று அவளால் முடிவெடுக்க முடியவில்லை. இடையில் அவள் ஒப்புக்கொண்டதைப் போல ஆஸ்திரேலிய பல்கலைக்கழக நேர்முகத் தேர்வையும் காணொளிமூலம் முடித்திருந்தாள்.

அவள் எதிர்பார்த்தபடி பல்கலைக்கழகத்திலிருந்து அவளைச் சேர்த்துக்கொள்ள ஒப்புதல் அழைப்பும் வந்தது.

***

நிரஞ்சன், நந்தனாவை காண அவள் வீட்டிற்குச் சென்றிருந்தான்,

“என்ன பாஸ் இன்னும் ரெண்டேநாள் தானே? அப்புறம் பக்கத்துலயே வச்சு பார்த்துகிட்டு இருக்க வேண்டியதுதானே” ஸ்ரீராம் அவனைக் கிண்டல் செய்ய

“என்ன பண்றதுபா உன் தங்கை எப்போ மறுபடி கல்யாணம் வேண்டாம்னு குண்டைத் தூக்கிப் போடுவாளோ? அதான் சீட்டுல துண்டைப் போட்டு வைக்கிறேன்.” சிரித்தவன் “சரி நந்து எங்க?”

“அவ ரூம்ல, மாடியில் ரைட் சைட் ரூம்” ஸ்ரீராம் சொன்னதுதான் தாமதம், வேகமாகப் படிகளைத் தாண்டித் தாண்டி ஏறியவன், தயக்கத்துடன் நந்தனாவின் அறைக் கதவைத் தட்ட

“வாடா சும்மா நல்லவனாட்டும் கதவை கட்டிகிட்டு” உள்ளிருந்து குரல்வர, குழப்பமாய் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் நிரஞ்சன்.

திரும்பிக்கூடப் பார்க்காத நந்தனா மேஜை இழுப்பறையில் எதையோ தேடிக்கொண்டே, “அடேய் வந்ததுதான் வந்தே, பரண் மேல இருக்க சூட்கேஸை எடுத்துக் கிழ வைடா.அப்படியே மேல் ஷெல்ப்ல ஒரு கவர் இருக்கு அதையும் எடுத்துடு. நீ உயரமா வளத்து எனக்குத்தான் யூஸ் ஆகுது. நல்லவேளை ரஞ்சனும் உன்னைமாதிரி இருக்கான். அவன்தானே எனக்கு இனிமே ஏணி வேலை பாக்கணும்”

அவள் சொன்னதில் சத்தம் வராமல் சிரித்தவன், அவள் சொன்னதைச் செய்துவிட்டு “அடுத்து என்ன செய்யணும் பேபி?” பணிவுடன் கேட்க

அதிர்ந்து திரும்பியவள் “சாரி அண்ணான்னு நெனச்சு…”

“பரவால்ல மா, கல்யாணத்துக்கு அப்புறம் நீ செய்யப்போறதை இப்போவே ஸ்டார்ட் பண்ணிட்டே. அதான் நான் உனக்கு ஏணியாச்சே!” புன்னகைத்தபடி அவள் கட்டிலில் அமர்ந்துகொள்ள

“என்ன?” அவள் விழிக்க

“வாடாப் போடான்னு கூப்பிடறது, வேலை வாங்குறது எல்லாம் தான்”

அங்கங்கே துணிகள் இறைந்துகிடக்க, அணைத்து பொருட்களும் கண்டபடி சிதறிக் கிடக்க, “என்ன பேபி இது ரணகளமா இருக்கு?”

“அது…வேண்டியதை எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னாங்க அம்மா அதான்…”

“ம்ம் எது முக்கியமோ அதை மட்டுமே எடுத்துக்கோ மீதியெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வந்து பொறுமையா எடுத்துக்கோ”

“ஹலோ என்ன நக்கலா? நானும் பாக்கறேன் எவ்ளோனாள் நடிக்க பிளான் பண்றீங்க? இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. கொஞ்சமும் அச்சமே இல்லையா?”

“நடிக்கிறேனா? நான் நிஜமா நம்ம கல்யாணத்துக்கு மனசை தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன் நீ என்னடான்னா…”

“காமெடி பண்றதா நெனப்பா? நான் சீரியஸா கேட்கறேன். ஒப்புக்கு கல்யாணம் செஞ்சுக்க முடியாது. இன்னியோட நம்ம நடிப்பை நிறுத்திடுவோம்”

“சரி நடிக்க வேண்டாம். உண்மையா கல்யாணம் செஞ்சுக்கலாம்”

“இப்போ கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க கனவு பாழாகாதோ ?” அவனை ஏளனமாகப் பார்த்துக் கேட்க

பொறுமையாகப் பதில் தந்தான் “கொஞ்ச வாரம் முன்னாடி வரை எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்னு தான் நான் நெனச்சேன்…இப்போ எனக்கு அந்த எண்ணமே இல்ல. இது எனக்கு ஈஸியான விஷயம் இல்லை தான்.

ஆனா நான் இப்போ என்னைத் தயார்படுத்திக்கிட்டேன் மா. எனக்கு உங்க யாரையும் இழக்க மனசுவரல”

“நீங்க கல்யாணம் செஞ்சுக்க ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனா நான் வேண்டாம்னு சொல்ல ஒரே காரணம்தான்.

பொய்யிலே உருவான நம்ம உறவு பொய்யிலேயே கல்யாணமா மாறி, பொய்யான வாழ்க்கையை உங்ககூட வாழ என்னால முடியாது. என்னை மன்னிச்சுடுங்க”

கண்கள் கலங்கிடச் சொன்னவள் அவன் பதிலுக்காகக் காத்திராமல் கீழ்த்தளத்திற்குச் சென்றுவிட்டாள்.

அவள் பேசிச்சென்ற வார்த்தைகள் அவன் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது.

‘அப்போ என் மேல உனக்கு காதலே இல்லையா…’ முதல் முறை அவன் கண்கள் கலங்கி ஓரிரு நீர்த் துளிகள் வெளியேற, விறுவிறுவெனக் கீழே சென்றவன். யார் முகத்தையும் பார்க்காமல், தரையைப் பார்த்தபடியே வேலை இருப்பதால் கிளம்புவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்.

இரவெல்லாம் நடந்ததை எண்ணித் தூக்கத்தைத் தொலைத்தாள் நந்தனா, ‘ஆயிரம் காரணம் சொல்ற நீ என்னை காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் இப்போவே உன்கூட வந்திருப்பேனே.’

நிரஞ்சனோ வீட்டிற்குச் செல்லாமல் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டான், இரவு முழுதும் தன் மனவருத்தத்தை மறக்க ஏதாவது ஒரு பணியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.

***

திருமணத்திற்கு முந்தைய நாள் மண்டபத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்காகத் தயாராகாமல் அமர்ந்திருந்த நந்தனா,

“இப்போவும் ஒன்னும் ஆகல ப்ளீஸ் மா…” சரஸ்வதியிடம் எதோ கெஞ்சிக் கொண்டிருக்க

“பசங்க வந்தாச்சு வா சரஸ்” கண்ணன் அவசரமாக மனைவியைக் கீழே அழைத்துச் சென்றார்.

ஒன்றிற்கு மூன்று மாப்பிள்ளைகளை இரு பெற்றோர்களும் சந்தனம் பூசி, மாலை அணிவித்து பன்னீர் தெளித்து, ஆரத்தியெடுத்து வரவேற்க,

அங்கிருந்த முதியவர் “என்னங்கடா ஒரே கோல்மாலா இருக்கு ? யார் பொண்ணு வீடு யார் பையன் வீடு? யாரை யார் வரவேர்க்குறீங்க? யார் இந்த மூணு பசங்க?” குழப்பத்துடன் வந்து நிற்க,

ஸ்ரீராம் “என்னப்பா மண்டபம் மாறி வந்துட்டோமா?” நிரஞ்சனையும் கிரிதரையும் கேட்க

கிரிதரோ “இருக்கலாம் எதுக்கும் வெளில போர்டை மறுபடி பார்ப்போமா?” என்று புன்னகைக்க

நிரஞ்சன் மட்டும் எதோ மௌனமாக இருக்க, அதைக் கவனித்த ஸ்ரீராம் அவனிடம் கேட்கும் முன்பே,

அவசரமாக அம்முதியவரை நெருங்கிய ஒரு உறவினர் “இவர் என் மாமனார். இவருக்கு மறதி. மூணு கல்யாணம்னு மறந்து எதோ குழப்பத்துல…” வழிந்தபடி சொல்லிவிட்டு, முதியவருக்கு எதோ சமாதானம் சொன்னபடி அழைத்துச் சென்றார்.

ஸ்ரீராமோ “நல்ல சகுனம்டா! கல்யாணத்துக்கு முதல் அடி எடுத்து வைக்கும் போதே குழப்பமா?”

கிரிதர், “இப்போதான் ரகளை ஸ்டார்ட் ஆகுது! இனி வர போற ஒவ்வொருத்தரும் எப்படிக் குழம்ப போறாங்களோ”.

மண்டபத்திற்குள்ளே சென்ற ஸ்ரீராம் கிரிதர் தயாராக வெளியே வந்த நிவேதா காஞ்சனாவிடம் அமர்ந்து பேசத்துவங்க, நந்தனா அறையை விட்டு வெளியே வராததால் மனம் வருந்திய நிரஞ்சன் மெல்ல எழுந்து மணமகன் அறைக்குச் சென்றுவிட்டான். அனைவரது வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாய் நந்தனாவும் தயாராகத் துவங்கினாள்.

சிலநிமிடங்கள் தனக்குள்ளே போராடிகொண்டிட்ருந்த நிரஞ்சன் குடும்பத்தினரை தன் அறைக்கு அவசரமாக அழைத்தான்.

***

நந்தனாவின் கைப்பேசி ஒலிக்க “சொல்லு ராம்”

“உடனே எங்க ரூம்க்கு வாடி” கோவமாகச் சொல்லிவிட்டு ஸ்ரீராம் அழைப்பைத் துண்டிக்க, என்னவோ எதோ என்று பதறியடித்து அவர்கள் அறைக்குச் சென்று உள்ளே சென்றவளின் பார்வை அனைவரையும் வேகமாகக் கடந்து நிரஞ்சனின் முகத்தின் மேல் நிலைகொண்டது.

‘அடேய் இப்போ என்ன பண்ணி தொலைச்சே? எதுக்கு எல்லாரும் இப்படி முறைக்குறாங்க? இவன் ஒரு நாள் என்னை நிம்மதியா விடமாட்டான்.’

தொண்டையை செறுமிய தந்தையை நடுக்கத்துடன் பார்த்தவள் “என்ன பா ?”என்று கேட்டதுதான் தாமதம்,

“நீ இப்படி செய்வேன்னு நான் நினைக்கவே இல்ல. என் பொண்ணு எங்ககிட்ட எப்போவும் உண்மையா இருப்பான்னு நெனச்சேன்” அவர் பார்வையில் கோவமும் வலியும் வெளிப்பட

“இப்போதுகூட மாப்பிள்ளை சொல்லாட்டி எங்களுக்குத் தெரிந்திருக்காது. ஏண்டி இப்படி பண்ணே ?” சரஸ்வதி கண்கலங்க

“நான் என்ன…” கேள்வியாக நிரஞ்சனை பார்த்தவள்

“அடேய் பிராடு இப்போ என்னத்த டா சொல்லிவச்சுருக்கே? ஐயோ யாராவது எனக்காக இவனை நாலு மொத்து மொத்துங்களேன்! ” மனதில் நினைப்பதாக நினைத்து வாய்விட்டுச் சொல்லிவிட

“அடிச்சேன்னா தெரியும்!” கோவமாக நந்தனாவை கையை ஓங்கியபடி முன்னேறிய ஸ்ரீராமை கண்டு நந்தனா அதிர்ந்து சில அடிகள் பின்னே செல்ல, அனைவரும் ஒரு நொடி உறைந்திட, அவன் கையைப் புயலெனப் பற்றி நிறுத்திய நிரஞ்சன்.

“ராம் !” கர்ஜித்தவன் “என் கண்முன்னாடியே என்ன இது? இனி இவ என் வைஃப்! ” அனைவர்க்கும் நந்தனாவிற்கும் நடுவில் அரணாய் வந்து நின்றான்

“போதும் போதும்! எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ என்ன நடிப்பு! ” நந்தனா குற்றம்சாட்ட,

“பேபி ப்ளீஸ்! நான் சொல்றதை கேளு”

“போதும் நீங்க சொல்லி நான் கேட்டது.” முறைத்தவள், கூடி இருந்த அனைவரையும் நோக்கி,

“ஆமாம் நாங்க காதலிகர்த்தா பொய்தான் சொன்னோம்! அப்புறமும் உண்மைய சொல்ல வாய்ப்பே கிடைக்கல. எங்களால மத்தவங்க கல்யாணம் தடைபடக்கூடாதுனு, இப்போ கல்யாணம் செஞ்சுக்க இதோ இங்க வந்து நிக்குறோம்” கோவமாகக் கொட்டிவிட

“அடியே அறிவுகெட்ட முண்டம்! வாயை மூடுடி லூசு”

“ஆமாம் நான் லூசுதான்! முண்டம்தான்! என்ன இப்ப ? நீயா வந்து லவ்வ சொல்லுவேன்னு காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். உனக்கு தான் இந்த காதல் கன்றாவிலாம் வராதே.” அவள் முறைக்க

“ நானும் பாக்கறேன் சும்மா பேசிட்டே போற ? எனக்கு காதலே இல்லைனு உன்கிட்ட சொன்னேனா?” அவன் அவளை ஆவேசமாக நெருங்க

“இருக்குன்னு மட்டும் சொன்னியா?” அவளும் அவனை நோக்கி நடக்க,

“சொல்லு இப்போ என்ன தெரியணும்?”

“ஒரு மண்ணும் தெரிய வேண்டாம். இப்போகூட ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க” அவள் அவன் சட்டை பற்றிட

“நந்தனா!” என்று கண்ணன் ஸ்ரீராம் இருவரும் கத்த, ஜெகநாதனோ அவர்கள் இருவரையும் அடக்கி மௌனமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

எதையுமே காதில் போட்டுக்கொள்ளாத நிரஞ்சன், “ஆமா டி வந்தேன்! நீ தான் வேணும்னு வந்தேன்! இனி வாழ்க்கைல உன்னைவிட்டு பிரிஞ்சுருக்க முடியாதுன்னு வந்தேன்! உன்கூட வாழ்க்கையைத் தொடங்க வந்தேன்! ”

உலகமே சுற்றுவதைப் போலத் தோன்ற அவன் கையைப் பிடித்துக்கொண்டு தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் நந்தனா.

‘சேச்சே இவனாவது…லவ் டைலாக் பேசர்த்தாவது. இது கண்டிப்பா கனவுதான்’ விழித்துக்கொள்ள தன் கன்னத்தைத் தானே அடித்துக்கொண்டாள், பதறிய நிரஞ்சனோ,

“பேபி அடிக்கணும்னா என்னை அடி, உன்னை காயப்படுதிக்காதே என்னால தாங்க முடியாதுமா” அவள் கையைப் படித்தபடி உருக

‘மறுபடி டைலாக் விட்றான்! அப்போ சாத்தியமா கனவுதான். ஐயோ தெளிய மாட்டேங்குதே! எந்திரிடி நந்து…’ மிரண்டவள் அவனிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டு அருகிலிருந்த பீரோவில் முட்டிக்கொள்ளப் போக

நிரஞ்சன் “நந்தனா!” அலறியபடி அவளை இழுத்து தன் மார்போடு சேர்த்துக்கொள்ள, அனைவரும் பதறி அவளை நெருங்க, அதற்குள் அவளோ,

‘ஐயோ கனவே கலயமாட்டேங்குதே. ஆண்டவா நான் கோமாக்கு போயிட்டேனோ? என்ன பண்ணுவேன்!’ இருதயம் பலமடங்கு வேகமெடுக்க

அவள் உச்சியில் முத்தமிட்டவனோ “ஐ லவ் யு பேபி. என்னை நம்புடா” வலியுடன் சொன்னவன் அவளை இன்னும் தன் மார்புக்குள்ளே புதைத்துவிடுவதைப் போல இறுக்கிக்கொள்ள.

அவனை பலம்கொண்ட மட்டும் தள்ளிச் சற்று விலகியவள் “நீ என்னடா கனவுல வந்துதான் காதலிப்பியா? டேய் போடா இம்சிக்காதே”

அதுவரை பதற்றத்துடன் இருந்த அனைவரும் சற்று தெளிய

“ஏய் அரைலூசு என்னடி உளர்றே?” ஸ்ரீராம் கேட்க, தலையைப் பிடித்துக்கொண்டவள் சிலநொடிகள் சித்தப்ரம்மை பிடித்ததைப் போல நிரஞ்சனை கண்கொட்டாது பார்க்க.

“பேபி! எனக்கு பயமா இருக்கு! என்னம்மா ஆச்சு உனக்கு?”

அவனை மெல்ல நெருங்கியவள், அவன் கன்னத்தை ஒற்றை விரலால் தொட்டு, “நீ நிஜமா? கனவா?” புருவத்தைச் சுருக்க

அவனோ அதிரடியாய் அவள் கன்னத்தில் மாறிமாறி முத்தமிட, திகைத்தவள் கண்கள் கலங்கச் சிலையாகிவிட,

“சத்தியமா நான் உன்னை லவ் பண்றேன் பேபி. ப்ளீஸ் என்னை பயமுடுத்ததே. ஐ லவ் யு! லவ் யு! லவ் யு!” அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.

அவன் தாக்குதலில் நடப்பவை உண்மை என்று உணர்ந்தவள் அவனை அணைத்துக்கொள்ள, குடும்பத்தினரோ ஒருவரை ஒருவர் குழப்பமாகப் பார்த்திருக்க. மெல்ல அவர்களை நெருங்கிய நிவேதா,

“டேய் அண்ணா!”

“ம்ம்”

“டேய்!”

“என்னடி?” கண்களை மூடியபடி இருந்தவன் கண்களைத் திறந்து நிவேதாவை முறைக்க

“பப்லிக் டா பப்லிக்” அழுத்தமாய் எச்சரிக்க, இருவரும் ஷாக் அடித்ததைப் போல் விலகி நின்றனர்.

“நீங்க சேர்ந்தது சந்தோஷம்! இப்போ பஞ்சாயத்தைப் பார்ப்போமா?” கண்ணன் முறைக்க

இப்பொழுதும் மௌனமாக இருந்த நந்தனா கேள்வியாய் நிரஞ்சனை பார்க்க,

அவனோ வலியைச் சுமந்த குரலில்

“அவசர பட்டுட்டியே பேபி. இத்தனை நாள் நான் சொன்ன பொய் எல்லாத்தையும் பொறுமையா, புரிஞ்சு நடந்துக்கிட்ட நீ… இப்போ நான் என்ன சொல்ல வந்தேன்னு கேட்காம உன் வாயாலேயே எல்லாத்தையும் உளறிட்டியே!”

அவள் “என்ன…” திக்கித் திணற

“நீ ஆஸ்திரேலியா போக திட்டம் போட்டதை ஸ்ரீராம் சொன்னான். நீ என்னை புரிஞ்சுக்க அந்த இடைவேளை உதவும்னு நெனைச்சு கடைசி ஆயுதமா உன் படிப்புக்காகக் கல்யாணத்தை ஒத்திவைக்க நெனச்சு எல்லாரையும் கூப்டா…” அவன் குரலில் ஏமாற்றம்

‘ஐயோ என் வாயாலேயே எல்லாத்தையும் சொதப்பிட்டேனா?’ அவன் மனம் அடித்துக்கொள்ள

“நான் வேணும்னே செய்யல பொய்யா வாழக்கையை ஆரம்பிக்க மனசாட்சி இடம் தரல…” கண்கள் கலங்கத் தலை கவிழ,

அவள் நாடி பிடித்து உயர்த்தியவன்,

“பொய் நிஜமாகனும் பேபி! நீ இல்லாம என்னால முடியாதுடா. வாழ்க்கைல சாதிக்க நினைச்சேன், கல்யாண பந்தத்துல வாழக்கையை பகிர்ந்துக்கிட்டா என் கனவு நிறைவேறாதுன்னு நினைச்சேன். ஆனா உன்கூட பகிர்ந்துகாட்டி எனக்கு வாழ்க்கையே இல்லைனு இப்போதான் பேபி புரிஞ்சுக்கிட்டேன்.”

“…” அவன் சொன்னவற்றை மூளை ஏற்றாலும், மனம் நம்ப மறுத்து மறியல் செய்ய அவனையே கண்கொட்டாது அதிர்ச்சியாய் பார்த்திருந்தாள்.

‘முதல் தரம் ஆப்ரேஷன் பண்ண கத்தியைப் பிடிச்சப்போ கூட ஸ்டெடியா இருதேன் ஒரு சின்னபொண்ணுக்கிட்ட காதலை சொல்லனும்னா கைகாலெல்லாம் இப்படி உதறுதே!’

பிரயத்தனப்பட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டவன், அவள் முன் மண்டியிட்டு, அவள் கண்ணோடு கண் பார்த்து மொத்த உணர்வையும் ஒன்றுதிரட்டி

“ஐ லவ் யு பேபி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்க, உறைந்தவள் நொடியும் தாமதிக்காமல்,

“எஸ்…எஸ்…எஸ்… நானும்…உங்களை லவ்… பண்றேன்” திக்கித்திணறிச் சொன்னவள் அவனை அணைத்துக்கொள்ள, அனைவரும் கைதட்டும் ஓசையில் இருவரும் சடாரென்று விலகிட.

ஸ்ரீராம் சிரித்தபடி “அட நல்லவங்களா! இவ்ளோனால் வண்டி வண்டியா புழுகிட்டு இப்போ என்னடா இப்படி மாறி மாறி உண்மையை அள்ளிக் கொட்டறீங்க?”

நிவேதா கிரிதர் இருவரும் சிரிக்க, காஞ்சனா, மற்றும் பெற்றோர்கள் முகமோ அதிர்ச்சியில் உறைந்திட, தாங்கள் சொன்ன பொய்யை எண்ணி நந்தனாவும் நிரஞ்சனும் தலைகுனிய

ஜெகந்நாதன் புருவம் முடிச்சிட “இது மட்டும்தானா இல்ல வேற ஏதாவது இருக்கா?”

கண்ணன் “அப்போ இவ்ளோனாள் நடிச்சுருக்கீங்க?”

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மைதிலி சரஸ்வதியோ “நான் சொன்னேன்ல பா இதுங்கள பாத்தா காதலிக்கிறமாதிரி தெரியலைன்னு!” சரஸ்வதி சொல்ல மைதிலியோ, “ஆமாம் பா நான் கூட என் புள்ளைக்கு சாமர்த்தியம் பத்தாதேன்னு சந்தேகப்பட்டேன்”

“ரெண்டும் சேர்ந்து எல்லாரையும் ஏச்சுக்கட்டிருக்கு பாரேன்!” சரஸ்வதி மேலும் சொல்ல,

“சரி தான் பா…நான் ஏதோ என் பையன் நல்லவன்னு நெனச்சுட்டேன்!” மைதிலி போலியாக நிராஜனைபார்த்து வருத்தப்பட

கண்ணனை பார்த்த ஜெகந்நாதன், “எங்களை மன்னிச்சுடுங்க, எங்க வளர்ப்பு சரியில்லை போல அதான் எங்க பையன் இப்படி…” வருந்த

“எங்க வளர்ப்பு மட்டும் என்ன? அவளும் தானே!” கண்ணனும் வருந்தக்குற்றவுணர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிரஞ்சனும் நந்தனாவும் ஒன்று சேர்ந்தாற்போல்

“உங்க வளர்புரல ஒரு தப்பும் இல்லை நாங்கதான்…இல்ல நான்தான் எல்லாத்துக்கும் காரணம்!” ஒப்புக்கொண்டான் நிரஞ்சன்.

“இல்லை நான் தான் காரணம்! அவர் சொன்னாலும் மருத்துருக்கணும். என் மேல தான் தப்பு!”

“இல்லை பேபி உன் லவ்வர்னு மொதல்ல சொன்ன என் மேலதான் தப்பு!”

இடையில் புகுந்த காஞ்சனாவோ “இல்ல நீங்க சொன்ன பொய்ய நம்பி எங்கண்ணா கிட்ட சொன்ன என்மேலதான் தப்பு” வருந்த

“இல்ல காஞ்சுமா! என் தங்கை பத்தி தெரிஞ்சிருந்தும், நம்பின என் மேலதான் தப்பு! “ ஸ்ரீராம் தலைகுனிய

“இல்லடா என் பொண்ணு சொல்ற பொய்யை நம்பி அவர்கிட்ட அவளுக்காகப் பேசின என்மேல தான் தப்பு!” சரஸ்வதி, கண்ணனை பார்க்க

“இல்ல சரஸ், நான் இவங்க சொன்னதை நம்பி ஜெகந்நாதனுக்கு ஃபோன் பண்ணி சம்மதம் சொன்னதுதான் தப்பு!”

“ஐயோ இல்ல கண்ணன். என் புள்ளைக்கு பிடிக்காத கல்யாணத்தை ஏற்பாடு செஞ்ச என்னாலதான் எல்லாம்!”

“இல்லங்க என் புள்ளைமனசு தெரியாம நான் அவனை கல்யாணம் பண்ணிக்க வற்புறுத்தினதுதான் தப்பு!”

“ஐயோ!” நந்தனா கத்திவிட்டு

“போதும் எல்லாமே எங்க தப்பு! எதுக்கு இப்போ எல்லாரும் உங்கமேல பழியை போட்டுக்குறீங்க?” கோவமாகப் படபடக்க

“அதானே! மொதல்ல சொன்னது நான். என் பேபி எனக்காக ஒத்துழைச்சா! அவளோதான்! ”

“இல்லை அவருக்கு ஒன்னும் தெரியாது! என் சீனியர்கிட்டேந்து என்னை காப்பாத்த அவர் பொய்யச்சொன்னார்!” நந்தனா நிரஞ்சனின் கையைப் பற்றிக்கொள்ள

“அடேய்! எல்லார் தப்பும் தான் போதுமா? சும்மா நை நைன்னு!” கடுப்பான நிவேதா முறைக்க

“ஆமா டியர்! உங்கண்ணன் வெள்ள காக்கா பறக்குதுன்னு சொன்னா, என் மக்கு தங்கை ஆமா வெள்ள காக்கா தலைகீழா பறந்தது! நானும் பார்த்தேன்னு சொல்லுவா!” நந்தனாவை முறைக்க

“தப்பு செஞ்சங்களுக்குத் தண்டனை தராம என்ன பேச்சு வெட்டியா?” கஞ்சா முறைக்க

‘ஆஹா காஞ்சு! நீயுமா?’

நந்தனா பாவமாக அவளைப் பார்க்க

“ஆமா தண்டனை தந்தே ஆகணும்!” கண்ணனைப் பார்த்தார் ஜெகந்நாதன்.