Magizhampoo-Manam16

மகிழம்பூ மனம்

மனம்-16 (ஈற்றயல் பதிவு)

 

சம்யுக்தாவிற்கோ, யாழினியின் வீட்டிற்கு செல்லுமுன் இருந்த மனநிலை, தேவாவையும், அவனது குடும்பத்தையும் அங்கு ஒட்டுமொத்தமாகச் சந்தித்ததில் சற்றே தெளிந்த நீரில் விட்டெறிந்த கல்லின் வருகைக்குப் பிறகான நீரில் உண்டாகும் அலைபோல மாறியிருந்தது.

தேவாவை, தனக்கு முன்பே தெரியும் என்பதாகவே பெண் அங்கு காட்டிக் கொள்ளவில்லை.

***

தேவாவும் அங்கு சம்முவை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவனது பளீச் மற்றும் அதைக் காட்டாமல் இருக்க தன்னை மறைக்கும் முயற்சியில் உண்டான இயல்புக்கு மாறான நடவடிக்கைகளே காட்டித்தந்தது. சம்முவிடம் பேசத் துணியும் துணிச்சல் உள்ளவனுக்கோ, குடும்பத்தினரின் முன்னே பேச இல்லாமல் போயிருந்தது.

கண்டும் காணாமல், கண்களுக்குள் சம்முவை நிரப்பியிருந்தான்.

உடன் வந்திருந்த குழந்தையைப் பற்றிய சிந்தனை மட்டும் இருந்தது.  தன்னிடம் குழந்தையைப் பற்றிக் கூறுமளவிற்கு தான் அவளுக்கு நெருக்கம் இல்லை என்கிற விடயமே நெருஞ்சி முள்ளாய்த் தைத்தது.

***

இருவரையும் கவனித்த யாழினி மற்றும் அம்பிகா இருவரும் உண்மையில் ஆச்சரியத்தில் இருந்தனர்.

யுகேந்திரனுக்கோ, ‘இந்த முட்டாப்பய தேவா கல்யாணத்துக்கு முன்னாடியே காதலிக்கிற விசயத்தைச் சொல்லியிருந்தா, சம்யுக்தாவை அவனுக்கும், யாழினிய எனக்கும் அப்பவே கல்யாணம் பண்ணி, இந்தக் கஷ்டம் எதுவுமில்லாமல், சந்தோசமா வாழ்ந்திருக்கலாம்’ என தனக்குள் எண்ணியிருந்தான்.

முருகானந்தமோ, எல்லாம் அவன் செயல் என எதைப் பற்றியும் எண்ணப் பிரியமில்லாமல், அமைதியாக நடப்பதைப் பார்த்திருந்தார்.

அம்பிகாவிற்கு, தனித்து வராமல் குழந்தையுடன் வந்திருந்த சம்முவைக் கண்டு, அருகில் இருக்கும் வீட்டிலுள்ளவர்களது குழந்தையாக இருக்கும் என முதலில் மனதைத் தேற்றியிருந்தார்.

குழந்தைகள் அதன் உலகில் சஞ்சரித்து மகிழ்ந்திருந்தனர்.  அபி மற்றும் தியா இருவருக்கும் இடைப்பட்ட வயதில் இருந்த யுஹ்தேவ் இருவரிடமும் மிகுந்த பிரியமாகவே நடந்து கொண்டான்.

யுஹ்தேவ்விற்கு இருவரையும் பிடித்துவிடவே, தன் தாயிடம், ‘இனி எப்பமா இங்க கூட்டிட்டு வரூவிங்க?’, என்ற கேள்வியோடே மகன் கிளம்பியிருந்தான்.

‘வீக்கெண்ட்ல வந்து பாக்கலாம் தேவ்’, என அங்கிருந்து மகனை அழைத்துக் கொண்டு தனது டூவிலரில் கிளம்பியிருந்தாள் சம்மு.

////////////////

இரவு உணவை அங்கே முடித்துவிட்டு, வீடு திரும்பிய சம்மு, மகனை உறங்கச் செய்தாள். படுக்கைக்கு வந்தவளுக்கு உறக்கம் உடன் வர மறுத்தது.

யாழினியை, அவள் தன்னிடம் வந்து பேசியதை எல்லாம் நிதானமாக அமர்ந்து யோசித்தபோது, ஏனோ தற்செயலாக தன்னோடு பழகியதாக எண்ணத் தோன்றவில்லை. 

திட்டமிட்டே, வாய்ப்புகளை ஏற்படுத்தி தன்னோடு பழகியதாக முடிவுக்கு வந்திருந்தாள் சம்யுக்தா.

இருந்தாலும் தானாகவே எதையும் முடிவு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்திருந்தாள் பெண்.

இனி நடப்பதைக் கொண்டு தீர்மானிக்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள்.  எதையும் கண்டு ஓடவோ, பயப்படவோ செய்யும் நிலையைக் கடந்து வந்திருந்தவளுக்கு பக்குவம் துணை தந்தது.

யுஹ்தேவ்வைப் பற்றி, இதுவரை தேவாவிடம் வாய் திறந்திருக்கவில்லை சம்மு. அவனிடம் தேவ்வைப் பற்றிக் கூற அவளுக்கு ஏனோ விருப்பமில்லை என்பதைவிட கூறத் தோன்றவில்லை.

மேலும், தேவாவுடனான எதிர்காலத்தை அவள் இதுவரை எண்ணிப் பார்க்காததும், அதற்கு ஒரு காரணமாக இருந்தது.

இரயிலில் சக பயணியை எதிர்கொண்டதால் மறுக்க இயலாமல் பேசியது போலவே, பட்டும் படாமல் அவசியப் பேச்சுக்களை மட்டுமே தேவாவிடம் இதுவரைத் தொடர்ந்திருந்தாள் சம்மு.

யுஹ்தேவ்வை சஞ்சலப்படுத்தும் எந்தச் செயலையும் சம்மு செய்யத் தயாராக இல்லை.

தேவ் தன் வாழ்க்கையில் வரக் காரணமாக இருந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தபடியே படுத்திருந்தாள் பெண்.

///////////

தேவாவின் பங்களூர் வருகையில், தன்னைச் சந்தித்து கிளம்பிய பிறகு, வறண்டு இலக்கில்லாமல் கடலில் தத்தளித்த ஓடம் போல இருந்த தனது வாழ்க்கையினை துடுப்பாக இருந்து மீட்டெடுத்து வந்தது, யுஹ்தேவ்வின் தாய், ஒனிடா.

ஒனிடா, சம்முவுடன் ஒரே ஹோமில் வளர்ந்தவள்.  இருவருமே தங்களது பணிக்குப் பிறகு, ஹோமிலிருந்து வெளிவந்திருந்தனர்.

வேறு வேறு பணிகளை ஏற்படுத்திக் கொண்ட தோழிகள் இருவரும், அவரவர் பாதைகள் நோக்கிய பயணத்தில் பயணிக்கத் துவங்கியிருந்தனர்.

மாதத்தில் ஒரு முறை என்றுகூட இல்லாமல், அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வர். 

விசேஷ தினங்கள், ஹோமில் உள்ள குழந்தைகளின் பிறந்த தினக் கொண்டாட்டங்கள் இந்த மாதிரி, இவர்களே எதாவது ஒரு காரணத்தைச் சாக்கிட்டு சந்தித்து மகிழ்வர்.

அப்படி பழைய தோழமைகளைச் சந்தித்து குதூகலிக்கும் முதல் வாய்ப்பினைத் தட்டிக் கழித்து, தனக்குள் சுருண்டவளை ஏதேனும் முக்கிய வேலை காரணமாக வரவில்லை என நினைத்து ஒதுக்கியிருந்தாள் தோழி.

இரண்டாவது சந்திப்பிற்குப் பிறகும் வராதவளை அத்துணை இலேசில் விட்டுவிடும் எண்ணம் இல்லாதவள், சம்முவைக் காண வேண்டி பிஜிக்கே நேரில் வந்திருந்தாள் ஒனிடா.

தேவாவின் திருமணத்திற்கு பிறகான வருகைக்குப்பின், விடயம் அறிந்து ஓய்ந்து போன சம்முவை, சரியான நேரத்தில் சந்தித்து, கணித்து, தேற்றிய பெருமை ஒனிடாவையே சாரும்.

சம்முவின் வாடிய, வழமைபோல இல்லாத தோற்றம், ஒனிடாவைத் துணுக்குறச் செய்தது. 

எப்போதும் மிகத் துணிச்சலாக, வாய் ஓயாமல் பேசியபடி, சுறுசுறுப்பாகச் செயல்படும் சம்முவின் தோற்றத்தை மட்டுமே இதுவரை கண்டிருந்தவளுக்கு, ஓய்ந்துபோன தற்போதைய சம்முவின் தோற்றம் கண்டு, தோழியைத் துருவினாள்.

தேவாவின் காதல், கல்யாணம், அதன்பிறகான விடயங்களை மறக்க முடியாமல் தவித்தவளை, அவள் வாயிலாகவே நடந்ததை மறைக்காமல் கூறும்படி செய்திருந்தாள் ஒனிடா.

விடயத்தை பொறுமையாகக் கேட்டவளோ, ‘விழிப்போடு இருந்தவளையே விதி ஏமாற்றிய சதி இது’, என எடுத்துக் கொண்டாள்.

தேவாவின் தாமதமான முடிவால் உண்டான தனது தோழியின் இழப்பைக் கண்டு, அவன்மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தபோதும், அதை தோழி விரும்பாததால் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டாள்.

தோழி தனிமையில் இராதவாறு உடனிருந்து தோழியைத் தேற்றத் துவங்கினாள். பெரும்பாலும் தனது நேரத்தை சம்முவிற்காக ஒதுக்கி, ஆதரவாக இருந்தாள்.

சம்மு அப்போது முதலே தான் பணிபுரிந்து கொண்டிருக்கும் கம்பெனியிலிருந்து, வேறு கம்பெனிக்கு மாற வேண்டி முயற்சித்துக் கொண்டிருந்ததையும் அறிந்து கொண்டாள் ஒனிடா.

வருடங்களும் போயிருக்கவே சம்மு வேறு கம்பெனியில் தான் எதிர்பார்த்திருந்த பணி கிடைத்து செல்லத் துவங்கியிருந்தாள்.

அதேநேரம் ஒனிடாவின் வாழ்விலும் வசந்தம் வந்து வாசலை அடைந்ததாக, வான்முட்டும் அளவு சந்தோசத்தில் இருந்தாள். 

புதிய மேலாளராக பொறுப்பேற்றிருந்தவன், ஒனிடாவிற்காக உயிரைக்கூட தரத் தயாராக இருந்தான். 

தாங்கினான்.  அவளை எண்ணி ஏங்கினான்.  அவளே எல்லாம் என பேசினான்.  அவளில்லை எனில் தானில்லை என வார்த்தைகளை அள்ளி வீசினான்.

இளமையின் எதிரி இனிப்பாக பேசுவான் எனத் தெரியவில்லை பெண்ணுக்கு.

கொண்டாடலுக்கு தன்னையே கொடுக்கும் பெண் என்பதை சரியாகக் கணித்து காய் நகர்த்தினான்.

அடுத்தவருக்கு நேர்ந்தது போல தனக்கு எந்தத் தடையோ, தவறுகளோ, ஏமாற்றமோ நேராது என ஒதுக்கி, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அழகான அன்பின் தவறு காதல்.

காதல் வலையில் விழுந்து தத்தளித்தவளை கண்டு கொள்ளும் நிதானம் சம்முவிற்கு இல்லை.  ஒனிடாவும் அதைப் பற்றிப் பகிர்ந்திருக்காமல் பருவத்தின் விதி வசத்தால் காதல் வசப்பட்டிருந்தாள்.

தோழியைத் தேற்ற தன்னாலான உதவிகளைச் செய்தவள், தனது வாழ்க்கையில் வந்திருந்த கருப்பு ஆட்டை கண்டு கொள்ளத் தவறியிருந்தாள்.

ஆம், ஒனிடாவின் நிலை அதற்கும் மேல் மோசமாகியிருந்தது. 

பணிபுரியும் அலுவலக மேலாளரின் காதல் வார்த்தைகளை நம்பி வளைய வந்திருந்தவள், அவனின் ஆசை வார்த்தைகளை நம்பி மோசம் போயிருந்தாள் பெண்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற நிலையில் ‘கற்பு கண்றாவி என எதற்கு பத்தாம் பசலித்தனமாக நடந்து கொள்கிறாய்’ என்கிற காதலனின் கேள்விக்கு, தன்னையே பணயமாக்கியிருந்தது பெண்.

காதல் காதலிக்கும்!

காதல் கற்பிக்கும்!

காதல் எல்லைகளைத் தாண்டச் செய்யும்!

காதல் வந்தவழியை மறக்கச் செய்யும்!

காதல் விபரீதங்களை அறியாதது!

காதல் கண்ணியமாகவும் நடந்து கொள்ளும்!

காதல் களவை கண்டிக்கும்!

காதல் சில வேளைகளில் கற்பைக் களவாடும்!

காதல், காதல் செய்யும் உள்ளங்களைப் பொறுத்து மாறும்!

காதல் கண்மூடித்தனமாக சிந்திக்கச் செய்யும்!

காதல் விழிப்புநிலையை விரட்டிவிடும்!

காதல் பலதரமானது. பல தாரங்களையும் தேடக்கூடியது!

காதல் பல மனங்களை வாழவைப்பதுபோல, பல உயிர்களைக் கொன்றது!

காதல் போதை!

காதல் சிலருக்கு பொழுதுபோக்கு!

காதலுக்கான உரிய வரையறை என்று சரியாக கூற யாராலும் இயலாது. 

என்னாளும் வரையறைக்குள் வராதது காதல்!. 

காதல் செய்பவரின் மனம், அறிவு, வளர்ப்பு, வசதி, ஒழுக்கம் சார்ந்த விடயமாகிப் போன ஒன்று அது!

காதல் பற்றிய கவிகள் நீளும்.  அக்கவிகள் பல உள்ளங்களை ஆளும்!

காதல் ஒரு மாயாவி.  மாயங்களை உள்ளடக்கியதோடு, பலரின் மனக் காயங்களை விதைத்த பருவத்தின் விதை!

காதல் செய்யும் மாயாஜாலம் மானிடனை பித்தாக்குகிறது!

காதலனை நம்பிப் பித்தானவள், பத்தினி தனது பத்தனுக்கு(பத்தினி ஆண்பால் பத்தன் இங்கு கணவன் என்ற அர்த்தம் கொள்ளவும்) கொடுக்க வேண்டிய கற்பை, காம பித்தனான தனது காதலனுக்கு, காமூகன் என அறியாமல் காணிக்கை கொடுத்து, பிரசாதம் வேண்டிக் காத்திருந்தது பெண்!

பிரசாதமாக குழந்தையே வயிற்றில் வளர்ந்ததை உணர்ந்தவளுக்கு, அடுத்த நிகழ்வாக திருமணத்தை எதிர்நோக்கிய பேச்சைக் காதலனிடம் துவங்கியிருந்தாள் ஒனிடா.

காதலை முழுமையாக நம்பியிருந்தாள்!

காதலனை, தன் காதலின் அளவை விட அதிகமாகவே நம்பியிருந்தாள்!

காதலன் வேசம் கலைத்த காமூகன், கள்ளனாகிப் போனதை அறிந்து கொண்டாள். 

நியாயம் பேசினாள்.  அநியாயம் செய்தான்.

காதலன் எனும் உறவில் இருந்தவன், அலுவலக மேலாளராக சட்டதிட்டம் பேசினான்.  மேலாளரின் தரக்குறைவான பேச்சுக்கள் அவனைத் தோலுறித்துக் காட்டியிருந்தது.

போராட்டம் நீடித்து பெண் ஒரு முடிவுக்கு வருமுன் காலம் கடந்திருந்தது. அதற்குமேல் அவனைக் கெஞ்ச மனம் இடங்கொடாததாலும், குடும்ப  சூழலில் இல்லாததாலும் தனக்கு தானே எல்லாம் என்கிற மமதையில், ‘கிட்டாதாயின் வெட்டென மற’, என உறவிற்கு உலைவைத்தவனின் உறவை வெட்டியிருந்தாள்.

உறவை வெறுத்து அறுத்தவளுக்கு, வயிற்றுக் குழந்தையை அழிக்கும் முடிவில் சறுக்கல் வந்திருந்தது.

வயிற்றில் வளர்ந்திருந்த குழந்தையை அழிக்கும் முயற்சியிலும் தோல்வியைத் தழுவினாள். உயிரை அழிக்க உயிர் கேட்டது வயிற்றில் வளரும் சிசு.

உயிரே போகட்டும் என நினைத்தவளை மருத்துவர்கள் மட்டி எனத் திட்டி அனுப்பியிருந்தனர்.

சிசுவை ஈனும் விருப்பம் இல்லாதபோதும், விதைத்த வினைக்கான பலனை அனுபவிக்கத் துவங்கினாள். உயிரோடு, உயிர் சுமக்கத் துவங்கினாள்.

தோழியின் நிலையை மிகவும் தாமதாகவே உணர்ந்த சம்மு, தன்னாலான யோசனைகளை தந்தும் பலனில்லாமல் போயிருக்க, தானே அனைத்துமாக இருந்து கவனிக்கத் துவங்கினாள்.

சம்முவை முதலில் தேற்றியவள், தற்போது சம்முவாள் தேற்றப்பட்டாள்.  உணவை வெறுத்தவளை வற்புறுத்தி உண்ணச் செய்து தாய்போல கவனித்துக் கொள்ளத் துவங்கினாள் சம்மு.

பிஜியில் அதுவரை இருந்தவள், தோழிக்காக தனியாக வீடு பார்த்து, ஒருவருக்கொருவர் துணையாக குடியேறியிருந்தனர்.

தோழிக்கு எல்லாமுமாக இருந்தாள் சம்மு.  ஆனால் ஒனிடா பிரசவம் நெருங்கும் வேளையில், “யுக்தா, எனக்கு வாழவே பிடிக்கலைடீ. நாந்தான் யாருமில்லாம தனியா அனாதையா வளந்தேன்.  இப்போ இந்தக் குழந்தையும் என்னைப் போலவேன்னு நினைக்கிறப்போ எனக்கே எம்மேல வெறுப்பா இருக்கு. சப்போஸ் டெலிவரில எனக்கு எதாவது ஆகிட்டா, நம்ம ஹோம் தவிர வேற எங்காவது குழந்தைய ஒப்படைச்சுடுடீ!”, என்கிற தோழியின் வார்த்தைகளைக் கேட்டு, அமைதி காத்தாள் சம்மு.

அமைதி காத்த தோழியைப் பார்த்தவள், “அவ வளந்த இடத்திலேயே விடக்கூடாதுன்னு ஏன் சொல்றான்னு யோசிக்கிறியா யுக்தா?”, ஒனிடா.

பதில் சொல்லாத சம்முவிடம், அவளாகவே பதில் கூறத் துவங்கினாள்.  “இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்தும் புத்தியில்லாம ஏமாந்த என்னை நினைச்சு அங்க ரொம்ப வருத்தப்படுவாங்க! ஹோம்ல இருக்கிறவங்களுக்கு என்னைப் பற்றித் தெரியாமலே இருக்கட்டும்னுதான் அப்டி சொன்னேன்”, என்று சிரித்தவளை

“அப்டியெல்லாம் உனக்கு ஒன்னுமாகாது.  உன்னை மாதிரியே குழந்தையும் ஏன் அப்டி வளரனும்.  நீயே உன் குழந்தைய நல்லா வளத்து ஆளாக்குவ பாரேன்”, என்கிற சம்முவின் நம்பிக்கை வார்த்தைகளை எந்தளவிற்கு ஒனிடா உள்வாங்கினாள் எனத் தெரியாமேலேயே நாட்கள் போயிருந்தது.

ஒனிடாவின் பற்றற்ற தன்மையினால், அவள் நினைத்தது போலவே மகனைப் பிரசவித்தவுடன் மரித்திருந்தாள் பெண்.

ஒனிடாவின் மரணத்தை எதிர்பாராதவள் பதறியிருந்தாள்.  பிறந்த குழந்தையைக் கவனிப்பதா? இல்லை இறந்தவளுக்கு இறுதி காரியத்தைக் கவனிப்பதா? என்று புரியாமல் நீச்சலுக்குப் பழகாதவன் ஆழ்கடலில் விழுந்து தத்தளித்ததுபோலத் தத்தளித்தவளை, மருத்துவமனை நிர்வாகம் உடனிருந்து கைகொடுத்திருந்தது.

பணம் அவளுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை.  ஓரளவு பணத்தை ஒனிடாவே அவளது பிரசவநேரத்திற்காக சம்முவின் கையில் ஒப்படைத்திருந்தாள்.  அதுபோக சம்முவிற்கும் வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லை என்கின்ற நிலை.

ஒனிடாவின் மரணம், கையில் பிஞ்சுக் குழந்தையுடன் தான் என எதையும் நம்ப முடியாமல் பரிதவித்த சம்மு, பச்சக் குழந்தையை எங்கும் யாரிடமும் நம்பிவிட பிரியமில்லாமல், ஆரம்பத்தில் தானே பார்த்துக் கொள்ளத் துவங்கினாள்.

இரக்கம் சில வேளைகளில் கூரையைத் தட்டும்போது, அந்த இரக்கம் இரங்கியவர்களையே உணவாக்கிக் கொள்வது இயல்பு.

குழந்தையை தூக்குவதற்குக் கூடத் தெரியாமல் தடுமாறியவளை, மருத்துவனை செவிலியர்கள் சொல்லித் தந்து உதவினர்.

முறையாக ஒனிடாவை வழியனுப்பியவள், அடுத்ததாக குழந்தையை எங்கு, என்னவென்று கொண்டுபோய் சேர்க்க என்று தயங்கினாள்.

பிஞ்சுக் குழந்தையின் முகம் பார்த்தவளுக்கு எங்கும் கொண்டு சேர்க்கும் மனமுமில்லை.

பணிக்குச் சென்று கொண்டு, குழந்தையைப் பார்ப்பது மிகவும் சங்கடமாக இருந்தபோதும், தனது பழைய கசப்புகளை மறக்கும் மருந்தாக குழந்தையை வளர்க்கத் துவங்கியிருந்தாள் சம்மு.

குழந்தைக்கு ‘யுஹ்தேவ்’ என பெயரிட்டு தானே வளர்க்கும் முயற்சியில் இறங்கியவள், இன்றுவரை ஒரு தாயாகவே மாறி, எந்தக் குறையுமின்றி குழந்தையை வளர்க்கிறாள்.

வாழ்வில் இழந்ததாக எண்ணிய அனைத்து சந்தோசங்களையும் யுஹ்தேவின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் கண்டு, வண்ணமயமான வாழ்வை வாழத் துவங்கியிருந்தாள்.

வருத்தமே வருத்தம் கொள்ளும் அளவிற்கு துன்பங்களை அனுபவித்தவளுக்கு, வசந்தமே வாழ்க்கையாக மாறியிருந்தது.

தனது தனிமையைப் போக்க வந்த ரட்சகனாக யுஹ்தேவ்வை எண்ணி வளர்க்கிறாள் பெண்.  அதனால், தேவா என்கிற மனிதனை மறந்தே போயிருந்தாள்.

நடப்பிற்கு வந்தவள், உறங்கும் மகனைக் கண்டவுடன் முகத்தில் இயல்பாகத் தவழும் புன்னகையோடு, மகனை உச்சி முகர்ந்தாள்.

இனி நடப்பதற்கு எதுவும் புதிதாக தனது வாழ்வில் இல்லை என்கின்ற தைரியத்தை தனக்குள் சொல்லிக் கொண்டவள், ஒரு வழியாக தெளிந்த மனதோடு உறக்கத்தைத் தழுவினாள்.

—————–

யாழினிக்கு, தான் நினைத்ததுபோல, சம்யுக்தா, தேவாவின் திருமணத்திற்கான வாய்ப்பு குறைவோ என நினைத்து உறக்கத்தைத் தொலைத்திருந்தாள்.

யுகேந்திரன் எதேச்சையாக படுக்கையில் திரும்பியபோது, மனைவி உறங்காமல் இருப்பதைப் பார்த்து, “யாயு!, இன்னும் தூங்காம என்ன பண்ற?”, என்ற கேள்வியோடு அவளைத் தன்னோடு இழுத்து அணைத்தான்.

“தூக்கம் வரல!”, என்றவளிடம் “தூங்கு! மனசுல எதையும் போட்டுக் குழப்பாத!  நடக்கிறது எல்லாம் நல்லதாகவே நடக்கும்!”, என்று ஆதரவான வார்த்தையோடு வாகாகத் தோளணைத்து மனைவியைத் தட்டிக் கொடுத்தான்.

கணவனின் அணைப்பில் வந்த இதத்தால், மனம் இலேசாக உணர்ந்தவள், உறங்கத் தன்னை தயார் செய்தாள்.

ஆனாலும் உறக்கம் வராமல் கணவனின் கைகளுக்குள் கைதி போல விழித்திருந்தாள் பெண்.

“யாயு…!”, உயிர்தொடும் அழைப்பில்

“ம்…”, என்க

“அடுத்தவங்களைப் பத்தியே யோசிக்கிறியே, நம்மை பத்தியும் கொஞ்சம் யோசியேன்!”, யாசகத்தை சூசகமாகக் கேட்டான்.

“யோசிக்கலையா?”, சந்தேகம் பெண்ணுக்கு வந்திருந்தது.

“எங்க யோசிக்கற!”, பழிபோட்டு பழி தீர்த்தான்.

“என்ன யோசிக்கலை?”, சட்டென விட பிரியமில்லாமல், தெரிந்து கொள்ள விழைந்தாள்.

மனைவியின் கழுத்தில் இருந்த மஞ்சள் சரட்டில் மஞ்சள் கிழங்கோடு முடிச்சிட்டு இருந்த, யாழினியே கட்டிக் கொண்ட தாலிச் சரடை, சரட்டென்று வெளியில் எடுத்தவன், மனைவியின் கண்முன் எடுத்துக் காட்டினான்.

அவசரமான கணவனின் செய்கையில் முதலில் புரியாமல் விழித்தவள், கண்ணுக்கு முன் தோன்றியதைக் கண்டு நிதானித்தாள்.

“ம்…”, என பெருமூச்சை வெளிவிட்டவள், “துரை… அது நீங்க எடுக்க வேண்டிய முடிவு!”, நீயே நியாயம் செய்ய வேண்டியவன் என்றிருந்தாள் பெண்.

“அப்ப அது உனக்கு தேவையில்லையா?”, வாத, விவாதங்களினால் பெண்ணை மடக்கி கோலோச்ச விழைந்தது புத்தி.

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறத் துவங்குவதை அறிந்தவள்,

“எப்பனாலும் நீங்க கட்டறதை ஏத்துக்க நான் தயாராதான் இருக்கேன்.  எனக்கு ஓகேதான்.  நீங்க ரெடினா சொல்லுங்க!”, என்றவளை

“அத நீ எங்கிட்ட கேக்க மாட்டியா?”, என கேட்கக் கூடாததை கேட்டிருந்தான்.

“கேட்டுத் தர விசயமில்லை அது.  நான் கேக்காமலே உங்க வயிஃப்கு நீங்க கொடுக்கிற இல்லை, கொடுக்க வேண்டிய, இன்னேரம் கொடுத்திருக்க வேண்டிய கடமை அது.  அதை நான் கேட்டா உங்களுக்குத்தான் அசிங்கம்!”, என பொட்டில் அறைந்தாற்போல கூறியவள், சட்டென கணவனின் அணைப்பிலிருந்து விலகியிருந்தாள்.

விலகலில் பெண்ணின் மனதைப் படித்தவன், தனது தவறை உணர்ந்தான்.

எத்தனை முறை சரியாகச் செய்ய எண்ணினாலும், சறுக்கி விழும் தனது நிலையை எண்ணி வருந்தினான் யுகேந்திரன்.

தன்னை எதிர்பார்த்திருந்தவளுக்கு தகுந்த நியாயம் செய்யாமல் போன தன் செயலை எண்ணி வெட்கினான். அவன் உறங்குமுன்னே யாழினி உறங்கியிருந்தாள்.

தன்னிடம் யாசகம் கேட்க தயங்குது பெண்மை என நினைத்திருந்தவனுக்கு, யாசகமல்ல அது, உன் கடமை என பொட்டில் அடித்தாற்போல புரியவைத்துப் புதிராக புன்னகை வாடாமல் உறங்குபவளை புரியாமலே பார்த்திருந்தான் யுகேந்திரன்.

யாழினியைப் புரிய இந்த ஜென்மம் தனக்கு போதுமா? என்ற எண்ணம் தோன்றினாலும், அதை ஒதுக்கியவன், இன்னும் வாழ காலங்கள் இருக்கின்றனவே என மனதால் மார்தட்டிக் கொண்டான்.

தாலி என்பது பெண் யாசகம் பெறும் விடயமல்லவே!

இன்னாரது மனைவி என்கிற உரிமையை அவன் முன்நின்று செய்து, அதனை நிலைநாட்டுவது அல்லவா அவனது முதற்கடமை.

கடமையை மறந்தவன் ஆன்மா உடலைப் பிரிந்தபின் இருக்கும் கட்டைக்கு அல்லவா சமம்.

அடுத்து வரும் நல்ல நாளில் தான் செய்ய வேண்டிய முதல்வேலை தனது தாரத்தின் கழுத்தில் சுயசம்பாத்தியத்தில்  வாங்கிய பொன்தாலியை அணிவிப்பது என்கிற எண்ணத்தோடு விடியலை எதிர்கொண்டான் யுகேந்திரன்.

தாலியைத் தாங்கும் மஞ்சள் சரடோ, அல்லது தங்கத்தினால் ஆனா பொன் சங்கிலியோடு பணமும், பரிசமாக மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணுக்கு வழங்குவது தமிழர் மரபு.

அதாவது, தங்கள் வீட்டிற்கு வாழ வரும் பெண்ணுக்கு, வாழ்க்கையில் உண்டாகும் ஏற்றத் தாழ்வுகளின்போது, வாழ்வை எதிர்கொள்ள இயலாமல் துன்பத்தில் உழன்றால், அவ்வேளைகளில் துன்புறாமல் குடும்பத்தைத் தூக்கிநிறுத்த உதவும் வகையில் பரிசப் பொருள் அமையுமாறு முன்காலத்தில் கொடுக்கப்பட்டது.

தற்போது தங்களது பகட்டைக் காண்பிக்கக் கொடுக்கும் விடயமே பரிசமாக மாறிப்போயிருக்கிறது.

யாருக்குப் புரிந்துவிட்டது, யுகேந்திரனுக்கு மட்டும் புரியவில்லை என புலம்புவதற்கு!

/////////////////

அம்பிகா, முருகானந்தம் இருவருமே, தியாவின் பிறந்த நாளுக்கு வந்திருந்து சிறப்பித்தவர்கள், அன்று யுகேந்திரனது வீட்டிலேயே தங்கியிருந்தனர்.

அம்பிகாவும், மகனை நினைத்து ஒரு முடிவுக்கு வரமுடியாத இன்றைய நிலையை எண்ணியபடியே படுத்திருந்தார்.

தேவாவின் பழைய தவறுக்கு, எங்குமே பெண் பார்த்து திருமணம் செய்ய முடியாது என்கிற உண்மை உரைத்து, செய்வதறியாமல் இருந்தவருக்கு, சம்முவைப் பற்றித் தெரிந்ததும் மகிழ்ந்திருந்தார்.

இன்னும் திருமணமாகாமல் தனித்துதான் அந்தப் பெண் இருக்கிறாளா? என யாழினியிடம் பலமுறை கேட்டு  உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்.

இனி மூத்த மகனுக்கு நல்லதொரு வாழ்க்கையை தங்களது காலத்திற்குள் ஏற்படுத்திக் கொடுத்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருந்தவருக்கு, குழந்தையோடு பிறந்தநாள் விழாவிற்கு வந்த சம்முவை முதலில் தப்பாக எண்ணவில்லை.

அருகில் வசிக்கும் நபர்களின் குழந்தையை பிறந்தநாள் விழா என்பதால் உடன் அழைத்து வந்திருக்கலாம் என மனதைத் தேற்றியிருந்தார்.

வந்த இடத்தில் தனது தேவைகளுக்காக,  ‘மம்மி’, என அழைத்து சம்முவிடம் போய் நின்றவனைக் கண்டு தனது ஒற்றை நம்பிக்கையும் பொய்த்துப் போனதை எண்ணி மனம் நொந்திருந்தார் அம்பிகா.

தான் போட்டு வைத்திருந்த திட்டமெல்லாம் தவிடு பொடியானதில் சற்றே மனம் தளர்ந்திருந்தார் அம்பிகா.

இருந்த ஒரு வழியும் அடைபட்டதாக எண்ணி மனம் அல்லாட இரவோடு உறங்காமல் தவித்தார்.

முருகானந்தம், மனைவியின் நிலையறிந்தாலும், அதைக் கேட்டு மேலும் துன்புறுத்த வேண்டாமென அமைதியாகவே படுத்திருந்தார்.

///////////

வழமைபோல கோவிலில் சந்தித்துப் பேசிய யாழினி, சம்மு இருவரும் வேறு எதைப் பற்றியும் பேச விளையவில்லை. 

காலை வேளை அலுவலகம் செல்ல வேண்டிய அவசரத்தில் சம்முவும், கல்லூரிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் யாழினியும் இன்முகமாகவே பேசி விடைபெற்றிருந்தனர்.

இருவருக்கும் கேட்க நிறைய விடயங்கள் இருந்தாலும், எங்கு ஆரம்பித்து என்ன பேசுவது எனக் குழப்பம் இருந்தது.

இதற்கிடையில் சம்முவின் பழைய விடயங்களைப் பற்றி டிடெக்டிவ் மூலம் அறிந்து கொண்டிருந்தாள் யாழினி.

யுஹ்தேவ்வைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொண்டவள், அம்பிகாவிடம் எதையும் மறைக்காமல் கூறியிருந்தாள்.

தனிமையைப் போக்க குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பவளை எண்ணி, ஒரு கனம் தயங்கியவர், கேட்டுப் பார்ப்போம்.  சம்மு ஒத்துக் கொண்டால் திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவோடு சந்திக்க நாள் பார்த்துக் காத்திருந்தார் அம்பிகா.

யாழினியும் சம்முவிடம் அம்பிகா சந்திக்க விரும்புவதைக் கூறி, சந்திக்க தகுந்த நாள் மற்றும் நேரத்தைக் கேட்டாள்.

சம்யுக்தாவும் இதை எதிர்பார்த்தே இருந்தாள்.  அதனால் அவளுக்கு யாழினியின் பேச்சி எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.

சம்யுக்தாவிடம் பேசுவதற்குமுன் தேவாவிடம் பேசி முடிவெடுக்க நினைத்தார் அம்பிகா.

///

தேவாவிடம் இதுபற்றி அம்பிகா என்ன பேசினார்?

தேவா தாயின் முடிவிற்கு ஒத்துக் கொண்டானா?

 

அடுத்த பதிவில்….