Eedilla Istangal – 8

Eedilla Istangal – 8

பேருந்திலிருந்து இறங்கியவள், கோபியை அலைபேசியில் அழைத்து, காரை எடுத்து வரும்படிச் சொன்னாள்.

காத்திருக்கும் வேளையில்,

தன்னை யாரென்றே தெரியாதவனிடம், இவ்வளவு எதிர் பார்த்திருக்க கூடாதோ?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாதுதானே தன் காதல். ஆனால் இன்று ஏன் அவனிடம் இத்தனை யாசிப்புகள்? என்ற கேள்வி எழுந்தது.

ஒரு காரணத்தின் பெயரில் விதைக்கப்பட்டக் காதல், இன்று அந்தக் காரணம் இல்லையென்றாலும், அவனை ஏற்கும் அளவிற்கு வளர்ந்திருப்பது தெரிந்தது.

கார் வந்தது.

மீண்டும் மருத்துவமனை சென்றாள்.

*****

தேவா, தன்னுடைய அலுவலக வேலையை முடித்துக் கொண்டு, மூன்று நாட்கள் கழித்துச் சென்னை வந்திருந்தான்.

ஒரு குழுவாகச் சென்று சேகரித்த விவரங்களை, தன் அலுவலகம் சென்று சமர்ப்பித்தான்.

அதன் பின், ஒரு பத்து நாட்கள் சென்றன.

*****
ராஜசேகர் வீடு

தாராவின் அறை…

இரவு நேரம்

தாராவின் சிந்திப்பு முழுதும், தேவாவுடனான சந்திப்பு தினங்களைச் சுற்றியே நின்றது.

அத்தகைய எண்ணம் வந்ததும், உடனே அவனைப் பார்க்க வேண்டும் என்று ஒரு அழுத்தமான ஆவல் வந்தது.

இப்படித் தோன்றும் போதெல்லாம், அவனது ட்விட்டர் பக்கத்திற்குச் சென்று, அவன் பங்கேற்ற நிகழ்ச்சிக் காணொளிகளைப் பார்ப்பாள்.

இன்றும் அதே!

குடும்பத் தலைவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் பங்கேற்ற நிகழ்ச்சி…

காணொளியில், தேவா பேசிய இடங்களை மட்டும் பார்த்தாள்.

4:05 நிமிடத்தில்…

“எங்களுக்குப் பிடிச்சவங்களுக்காக வாழறோம். இதுல என்ன தப்பு இருக்கு?” கேள்வி, ஒரு குடும்பத் தலைவி – – > வேலைக்குச் செல்லும் பெண்கள்.

“பிடிச்சவங்களுக்காக வாழறது தப்பே இல்லை. அப்படியே உங்களுக்குப் பிடிச்ச மாதிரியும் வாழ்ந்துக்கோங்க” என்று தேவா பதில் சொன்னான்.

அங்கிருந்து, 11:08 நிமிடத்திற்குத் தாவினாள்…

“நான் வொர்க்கிங் விமன். என் ஹஸ்பன்ட், வீட்டு வேலைல எனக்கு ஹெல்ப் பண்ணுவாரு” என்று ஒரு பெண்மணி பெருமையாகச் சொன்னார்.

சிரித்துக் கொண்டான் தேவா.

நெறியாளர் உட்பட, அங்கிருந்த பெண்மணிகள் புரியாமல் பார்த்தனர்.

“வீட்டு வேலை, ஆண்-பெண் ரெண்டு பேருக்கும் பொதுவானது. இங்க ஷேரிங்தான்… ஹெல்பிங் கிடையாது. இப்படிச் சொல்றீங்கனா… இன்டேரைக்டா இந்த வேலை உங்களோடதுன்னு ட்யூன் பண்ணியிருக்காங்க” என்று புரிய வைத்தான்.

பின், 20:48 நிமிடத்திற்கு…

“எங்க அப்பார்ட்மென்ட் பங்ஷன்ல, நான் சுப்ரீம் மாம் டைட்டில் வின்னர்…” என்று ஒரு வேலைக்குச் செல்லும் பெண்மணி ஆரம்பிக்கும்போதே….

“அம்மாக்கு எதுக்குங்க சூப்பர் மாம், சுப்ரீம் மாம்-ன்னு டைட்டில். அம்மா அம்மாதான்” என்று முடித்துவிட்டான்.

காணொளியின் இறுதி நிமிடங்களில்…

“கடைசியா குடும்பத் தலைவிகளுக்கு என்ன சொல்றீங்க தேவா?” என்று நெறியாளர் கேட்க்கையில்…

“ஒரு பேமிலில, குடும்பத் தலைவிக்கு இருக்கிற கடமை முக்கியம்தான். அதுக்காக டோன்ட் பி டூ மச் டுயூட்டிஃபுல். உங்களுக்காகவும், நீங்க வாழனும்” என்று தன் கருத்தைச் சொன்னான்.

காணொளி முடிந்தது.

கருவிழி இரண்டிலும் காதலன் நிரம்பியிருந்தான். அந்த இருவிழியைத் தாண்டியும் காதல் வழிந்தது – தாராவிற்கு!

அதன் பின்னும் நிறைய நாட்கள் கடந்திருந்தன.

*****

தேவாவின் அண்ணன் வீடு

அன்று ஹேமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நாள்.

மாலையில் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று, தேவா ஹேமாவிடம் சொல்லியிருந்தான்.

மாலை வேளை…

மாலை என்பதால் பாபியும், தேவாவுடன் வந்திருந்தான். பாபியின் காரிலே அழைத்துச் செல்லலாம் என்றும் நினைத்திருந்தனர்.

ஹேமா, பாபி, தேவா மூன்று பேரும் பேசி முடித்ததும்,

“அக்கா கிளம்பலாமா?” என்று தேவா கேட்கும் போது…

“ஹேமா, இன்னைக்கு நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன். உங்க அண்ணன் சொல்லியிருக்காங்க” என்று தேவாவின் அண்ணி கிளம்பித் தயாராக வந்து நின்றார்.

‘என்ன செய்ய?’ என்று மூவரும் நினைக்கையில்…

“பரவால்ல அண்ணி. நான் கார் கொண்டு வந்திருக்கேன். அதுலே எல்லாரும் போயிடலாம்” என்று பாபி யோசனை சொன்னான்.

“இல்லை பாபி. அது சரிவராது…” என்று பொதுவாகச் சொன்னார்.

மூவருக்கும் புரிந்தது. தேவாவுடன் வருவதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று!

“பாபி, நீ கூட்டிட்டுப் போயிட்டு வா” என்று சொல்லி, தேவா வெளியே சென்று விட்டான்.

அதில், அவன் அண்ணிக்கு உடன்பாடு இருந்தது. அமைதியாக இருந்துவிட்டார்.

“ஏன் அண்ணி? அவன் நம்ம கூட வந்தா என்ன?” – ஹேமா.

“உனக்குத் தெரியாதா ஹேமா? நிறைய சண்டை போட்டாச்சு. இதுக்கு மேல சேர்த்து வைக்க டிரை பண்ணாத”

“அதுக்காக, எத்தனை நாள்தான் அவன் இப்படித் தனியா இருக்கிறது?”

“சம்பாதிக்கிற காசெல்லாம், இப்படி மத்தவங்களுக்காகச் செலவழிச்சா… எந்தப் பொண்ணும் கட்டிக்க மாட்டா. தனியாத்தான் இருக்கனும்” என்று முணுமுணுத்துக் கொண்டே, அவரது அறைக்குள் சென்று விட்டார்.

மேலும் பேசப் போன ஹேமாவை, பாபி தடுத்து விட்டான்.

இருவரும் வெளியே வந்தனர்.

வீட்டின் வெளியே…

தேவா, பாபியின் காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

அவனருகில் வந்து, “டேய்! ‘நான்தான் கூட்டிட்டுப் போவேன்னு’ சொல்ல வேண்டியதுதான??” என்று கோபமும் வருத்தமும் நிறைந்த குரலில் ஹேமா கேட்டாள்.

“எங்க ரெண்டு பேர்ல, யார் கூட்டிட்டுப் போனா என்ன? விடு-க்கா”

“அதில்லை தேவா… ” என்றவளிடம்,

“அதை விடு. பசங்க எங்கக்கா??” என்று கேட்டான்.

“அண்ணா வெளியே கூட்டிட்டுப் போயிருக்கான்”

“ஓ” என்று ஒற்றை வார்த்தையோடு விட்டுவிட்டான்.

ஒவ்வொரு முறை வரும் போதும், பசங்களைப் பார்க்க நினைக்கிறான் என்று ஹேமாவிற்குப் புரிந்தது.

ஆனால், இவன் எண்ணத்தை குழந்தைகளிடம் விதைத்து விடுவான் என்று, அவர்கள் பயப்படுகிறார்கள்.

ஏற்கனவே அவனது சிந்தனைகளைப் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொண்டதிற்குப் பெரிய வாக்குவாதமும் வந்திருக்கிறது.

ஆதலால்தான், அவன் வரும் வேளைகளில் குழந்தைகளை எங்காவது அழைத்துச் சென்று விடுவது.

ஒருவித ஆற்றாமையில், “கல்யாணம் பண்ணிக்கவே மாட்டியா தேவா?” என்று ஹேமா கேட்டுவிட்டாள்.

“லேட்டாகுது. நீ கிளம்பு” என்றவன், பாபியைப் பார்த்து “பாபி கூட்டிட்டுப் போ” என்றான்.

“பாபி, நீ சொன்னா கேட்பான். நீ கொஞ்சம் சொல்லேன்” என்று ஹேமா கெஞ்சினாள்.

“அக்கா, பர்ஸ்ட் ஹாஸ்பிட்டல் கிளம்பு” என்று தேவா சொல்லும் போதே,

வீட்டைப் பூட்டி விட்டு, தேவா அண்ணி வந்திருந்தார். அதற்கு மேல் ஹேமா எதுவும் பேச முடியவில்லை.

இரு பெண்களும் காரில் ஏறிக் கொண்டனர்.

“நீ ஆபீஸ் போ. இவங்களை வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு, ஆபீஸ் வர்றேன்” என்று சொல்லி, பாபி கிளம்பினான்.

சற்று நேரம் கார் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றவன், பின் பேருந்தின் மூலம் அலுவலகம் வந்தடைந்தான்.

*****

இரவு நேர மருத்துவமனை வளாகம்

பெரிய நியான் எழுத்துகளில் மருத்துவமனையின் பெயர்…
கட்டிடத்தின் கண்ணாடி முழுவதும் இரவின் கருமையைப் பிரதிபலித்தது…
உள்ளே போடப்பட்டிருந்த சிறிய சாலைகளில் வைக்கப்பட்டிருந்த விளக்குகள்..
வீட்டிற்குச் செல்லும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்…

இது போன்ற ஒரு இரவின் முகத்துடன்தான் மருத்துவமனை இருந்தது!

சாருவின் பார்வை நேரம் முடிந்திருந்தது. எனவே தன் காரை எடுத்து வந்து, நடைபாதையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, தாரா வரவிற்காகக் காத்திருந்தாள்.

நேற்றும் தேவாவிடம் பேசவில்லை என்று, தாரா சொல்லியிருந்தாள்.

ஆதலால், இருவரும் சற்று நேரம் பேசிவிட்டு செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் பாபி வந்து நின்றான்.

ஹேமாவையும், அவளது அண்ணியையும் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு… சற்று நேரம் காலாற நடக்கலாம் என நினைத்தான். சாரு நிற்பதைக் கண்டு, அவள் முன் வந்து நின்றான்.

‘நீயா?’ என்று ஒரு நொடிப் பார்த்தாள்.

ஆனால் அடுத்த நொடியே, “உன்னைத்தான் தேடிகிட்டு இருந்தேன்” என்றாள்.

“ரியலி, என்ன ஒரு இம்ப்ரூவ்மென்ட் சாரு!??!” என்று சொல்லி ஆச்சிரியமானான்.

“ச்சே ச்சே… நான் ஒன்னும் உனக்காக உன்னைத் தேடலை. எனக்காகத் தேடுனேன்”

“இது இன்னும் நல்லா இருக்கு சாரு” என்று அழகானான்.

“பாபி ப்ளீஸ். நான் வேற ஒரு விஷயமா பேச நினைக்கிறேன்” என்று சற்று சங்கடத்துடன் சொன்னாள்.

“சரி சொல்லு”

“தேவாவைப் பத்தி”

“அவனைப் பத்தி என்ன?”

“தாரா, தேவாகிட்ட பேச ட்ரை பண்றா. பட் தேவா அவாய்ட் பண்ற மாதிரி இருக்கு”

“சரி, அதுக்கென்ன?”

“தாராக்காக… தேவாகிட்ட பேசிப் பார்க்க முடியுமா?”

“இதுல நான் எப்படிப் பேச முடியும்?” என்றவன் குரல் கொதிநிலைக்குச் சென்றது.

அவளும், அவனைப் பிரதிபலித்தாள்.

“சாரு, இங்க பாரு… எனக்காக யாராவது உன்கிட்ட வந்து பேசினா, நீ ஒத்துப்பியா??” என்றவன் குரல் உறைநிலைக்கு வந்தது.

‘ம்கூம்’ என்று தலையாட்டினாள்.

“எனக்காக நான் பேசினாதான… ஒத்துப்ப?” என்றவன் குரல் உருகியது.

‘ஆம்’ என்பது போல் தலையாட்டினாள்.

“ஒத்துக்கிறயா சாரு?” என்றான் குதூகலமாக!

“அய்யோ! அவங்க ரெண்டு பேர் பத்திதான் பேசுறோம். நம்மளைப் பத்திக் கிடையாது”

” ‘நம்ம’ … இப்படிச் சொல்ற அளவுக்கு வந்துட்ட. குட்”

“உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன் பாரு…” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

சரியாக அந்த நேரத்தில்… “பாபி” என்ற அழைப்பு, தாராவிடமிருந்து.

திரும்பிப் பார்த்தான்.

தாரா, “பாபி, ஒன் மினிட் வாங்களேன்” என்று கொஞ்சம் உரக்கச் சொல்லிக் கூப்பிட்டாள்.

“வெயிட் பண்ணு சாரு” என்று சொல்லிவிட்டு, அவளை விட்டு நகர்ந்தான்.

சாருவிற்குப் புரிந்தது. தன்னைப் பற்றிச் சொல்லத்தான், தாரா பாபியை கூப்பிட்டிருக்கிறாள் என்று!

தாராவும் பாபியும்…

தாரா முன்னே பாபி நின்றான்.

“ஹாய் தாரா. நீங்க இங்க இருக்கீங்க? அப்போ ஹேமா??”

“செக்-அப் ஓவர். பிளட் டெஸ்ட் எடுக்கப் போயிருப்பாங்க”

“ஓ! சரி சொல்லுங்க”

“உங்ககிட்ட, சாருவைப் பத்தி ஒரு விஷயம் சொல்லனும்” என்று நேரடியாக ஆரம்பித்தாள்.

“ம்ம்ம்”

“சாரு, என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா”

“எக்ஸ்பெக்ட் பண்ணதுதான். சொல்லுங்க”

“அவளுக்கு உங்க மேல…” என்று தயங்கினாள்.

“பிடிச்சிருக்குன்னு சொல்றேன். அவ வேண்டாம்னு சொல்றா. நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க”

“ஏன் வேண்டாம்னு சொல்றான்னு தெரியுமா?”

எதிர்வினை புரியாமல் நின்றான்.

“சாரு ஒரு சிங்கிள் பேரன்ட்”

“வாட்?” என்று கேட்டு, சாருவைத் திரும்பிப் பார்த்தான்.

சற்று தூரத்தில் நின்ற சாருவிற்குத் தெரிந்தது. தன்னைப் பற்றிச் சொல்லிவிட்டாள் என்று!

“அவ ஹஸ்பன்ட் இறந்துட்டாங்க. நவ், ஷீ இஸ் மதர் ஆஃப் எ சைல்ட். ஸோ ப்ளீஸ்… இனிமே இப்படி…” என்று பேச்சில் இடைவெளி விட்டாள்.

“புரியுதுங்க. இது எனக்குத் தெரியாது. அதான் இப்படியெல்லாம்”

“இப்போ புரிஞ்சிக்கோங்க”

“ஷூயர். நான் போய் ஸாரி கேட்டுட்டு வர்றேன்” என்று, பாபி சாருவை நோக்கி வந்தான்.

சாருவும் பாபியும்…

“சாருலதா”

அந்த அழைப்பையே அவஸ்தையாக உணர்ந்தாள்.

“ஏன் சொல்லலை? அன்னைக்கு என்னைப் பத்திச் சொன்னப்பவே சொல்லியிருக்கலாமே??”

அமைதியாக இருந்தாள்.

“நான் இந்த மாதிரி… யோசிக்கவே இல்லை”

யோசித்திருந்தால், இப்படி நேசித்துக் கொண்டு நின்றிருக்க மாட்டாயோ என அவள் மனம் கேட்டது.

“ஸாரி. ரியலி ஸாரி”

அவன் மனதைச் சொல்லும் போது இருந்த வெறுப்பை விட, மன்னிப்பு கேட்கும் போது இருக்கின்ற வெறுமையை உணர்ந்தாள்.

“ஏதாவது பேசு?”

“அதான் ஸாரி சொல்லிட்டேல. அதோட நிறுத்திக்கோ. இனிமே இப்படி பேசிக்கிட்டு வந்து நிக்காத”

“ஏன்? எதுக்கு?”

“நீ கேட்ட விஷயம் தப்புன்னுதான ஸாரி சொன்ன??”

“ஹலோ! ஸாரி கேட்டது அப்ரோச் பண்ண விதத்துக்காக. அப்ரோச் பண்ண விஷயத்துக்குக்காக இல்லை” என்றான் தெள்ளத் தெளிவாக!

அவன் மனதின் தெளிவினால், அவள் மனம் விருப்பத்தின் விளிம்பில் ஏறி நின்றது.

“சிங்கிள் பேரன்ட்ன்னு தெரிஞ்சா, கொஞ்சம் மரியாதையா பேசியிருப்பேன். சரி விடு, இனிமே அப்படிப் பேசினா நல்லா இருக்காது” என்று மனதின் நெருக்கங்கள் காட்டிப் பேசினான்.

அந்த நெருக்கங்கள், அவள் மனதை விருப்பங்களின் மேல் நடக்கச் சொல்லியது.

“இப்ப சொல்றேன் கேட்டுக்கோ… நீ சரின்னு சொல்லு, உன் அத்தை மாமாகிட்ட வந்து பேசுறேன்”

சட்டென, ‘நல்ல உறவுகள் இருக்கும் போது, எதற்கு இந்த புதிய உறவு?’ என்ற புள்ளியில் நின்று கொண்டு, தன் உணர்வுகளைத் தள்ளி வைத்தாள்.

மேலும், “உன்னைத் திருத்தவே முடியாது” என்று கார் கதவைத் திறந்து, தன் பர்ஸை எடுத்தாள்.

அதிலிருந்து பணம் எடுத்து, அவன் முன்னே நீட்டினாள்.

“என்ன?”

“அன்னைக்கு  ஃபைன் பே பண்ணியே… அந்தக் கடன்”

“நானே கேட்கணும்னு நினைச்சேன். கடன் அன்பை முறிக்கும்னு சொல்லுவாங்க. கொடு” என்று வாங்கப் போனவனிடம்,

பணத்தை கொடுக்காமல், கையை பின்னோக்கி இழுத்துக்கொண்டாள்.

“சரி சரி… நமக்குள்ள எதுக்கு காசெல்லாம் பார்த்துக்கிட்டு” என்றான்.

தன்னை இக்கட்டில் நிறுத்தி, தன் இதயத்தை இம்சிப்பது போல் உணர்ந்தாள்.

“சாரு, இப்போ நீ பணத்தைக் கொடுப்பியா?? இல்லை, நீயே வச்சிக்குவியா??”

“இப்படியே பேசிக்கிட்டு இருந்த, போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்” என்று சொல்லி, காரினுள் ஏறினாள்.

காரின் சன்னல் முன்வந்து குனிந்து நின்று, “அன்னைக்கு இப்படித்தான் சொல்லிட்டுப் போய், டிராபிக் போலீஸ்கிட்ட மாட்டிகிட்டு நின்ன. இன்னைக்கு என்ன பிளான்?” என்றான், சிரித்துக் கொண்டே.

சைகையால் தாராவிடம் ‘போகிறேன்’ என்று சொல்லிவிட்டுக் காரைக் கிளம்பினாள்.

“எதுனாலம் ஃபோன் பண்ணு சாரு. நெக்ஸ்ட் மினிட் வந்து நிப்பேன்” என்றவனின் குரல், காற்றலையில் மிதந்து வந்து, அவள் காதிற்குள் தவழ்ந்து சென்றது.

அது, இம்சித்த அவள் இதயத்தை இசைக்க ஆரம்பித்தது. இதழ்களை விரியச் செய்தது.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தாரா, பாபியின் அருகில் வந்தாள்.

“என்ன சொன்னீங்க?” – தாரா.

“வீட்ல வந்து பேசுறேன்னு சொன்னேன்”

“ஓ, ஐ நோ! நீங்க இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவீங்கன்னு” என்று பாபியைக் கணித்தாள்.

“ரியலி?”

“ம்ம்ம், ஆக்சுவலா பர்ஸ்ட் சாருவோட இன்-லாஸ் ரீமேரேஜ் பண்ணி வைக்கணும்னு நினைச்சாங்க. பட் அப்போ ப்ரெக்னன்ட். ஸோ முடியலை. அதுக்கப்புறம் பேபி… அவளோட அம்மா டெத்… அப்படியே தள்ளிப் போயிடுச்சு”

“எதுனாலும் நான் பார்த்துக்கிறேன்”

“ஐ திங், சாருக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. லிட்டில் கெசிட்டேஷன். அவ்வளவுதான்” என்று சாருவையும் கணித்தாள்.

பாபி ஆச்சரியமாகப் பார்த்தான்.

“என்ன?” என்று கேட்டாள்.

“என்னைய, சாருவைப் புரிஞ்சிக்கிறீங்க. தேவாவைப் புரிஞ்சிக்க முடியலையா?”

“ஸாரி, ஐ டிட்டிண்ட் கேட்ச் இட்”

“இல்லை. தேவா, உங்களை அவாய்டு பண்ற மாதிரி தெரியலையா?”

“ம்ம்ம், தெரியுது”

“அப்புறம் ஏன்?”

“சாரு வேண்டாம்னு சொல்லியும், நீங்க ஏன் அவளை அப்படியே விட மாட்டிக்கீங்க?”

“இது ஒரு பீல். எப்படிச் சொல்ல? சாருவை நான்தான் நல்லா பார்த்துக்க முடியும்னு ஒரு பீல்”

“ஸேம் ஹியர். தேவாவை நான்தான் நல்லா பார்த்துக்க முடியும்னு ஒரு ஸ்டார்ங் பீல்”

“ஆனா, சாரு வேற… தேவா வேற”

“வேற வேறதான். லைக், பாபி வேற… தாரா வேற”

“மாற மாட்டிங்கள?”

‘மாட்டேன்’ என்று எளிதான ஒரு தலையசைப்பு, அதில் எஃகின் உறுதி இருந்தது.

“ஆனா, தேவாக்கு உங்களைப் பிடிக்குமான்னு தெரியலையே?”

“நான் பேசினா, கண்டிப்பா பிடிக்கும்”
என்று சொல்லும் போதே, கோபி காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

“ஓகே கெட்டிங் லேட். பை பாபி” என்று சொல்லிக் கிளம்பிச் சென்றாள்.

பின், ஹேமாவையும், தேவா அண்ணியையும்… பாபி வீட்டில் கொண்டு வந்து விட்டான்.

*****
தேவா அலுவலகம்

பாபி மாலை சொன்னது போல், தேவாவின் அலுவலகம் வந்தான்.

“ஹேமாவை வீட்ல கொண்டு போய் விட்டாச்சு தேவா” என்று சொல்லிக் கொண்டே, தேவாவின் எதிரே வந்து அமர்ந்தான்.

“இப்பதான் அக்கா ஃபோன் பண்ணா” என்றான், எதையோ கணினியில் தேடிக்கொண்டே…

தேவாவின் அண்ணி பேசியது…
ஹேமா கெஞ்சியது…
சாரு கேட்டுக் கொண்டது…
தாராவின் நம்பிக்கை…

இவையெல்லாம் பாபியின் எண்ணத்தில் வந்து போனது.

தாராவிற்கு, தேவாவைப் பற்றித் தெரிந்தும் பிடித்திருக்கிறது என்று பாபிக்குப் புரிந்தது.

ஆதலால், தேவாவிடம் பேசத் தொடங்கினான்…

“தேவா, உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்”

பாபியின் குரலில் இருந்த பேதத்தைக் கண்டான். சட்டென்று கணினியை விட்டுவிட்டு, ‘சொல்லு’ என்பது போல் பாபியைக் கூர்ந்து பார்த்தான்.

“தாரா வந்து பேசினா, கொஞ்சம் அவாய்ட் பண்ணாம… என்ன பேசறாங்கன்னு கேட்டுப் பாறேன்”

“ம்ம்ம் சரி, அடுத்து வந்து பேசனும்னு சொன்னா… கேட்கிறேன்” என்று மீண்டும் கணினிக்குள் புகுந்து கொண்டான்.

அவ்வளவுதான்! கண்டிப்பாகக் கேட்பான். மறுமுறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை!!

ஏனென்றால் அது அவர்களது நட்பின் ஆழம்!

error: Content is protected !!