emv15a

emv15a

எனை மீட்க வருவாயா! – 15A

 

கிருபா, தன் நண்பர்களிடம் திவ்யா தன்னை, தன் காதலை நிராகரித்துவிட்டு, வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவளின் பிரிவு தன்னை நிலைகுலையச் செய்துவிட்டதாகவும் கூறி, மற்றவர்களின் இரக்கத்தை சம்பாதித்து, அதில் தன்னை பரிதாபத்திற்குரியவனாய் நம்பச் செய்து கொண்டிருந்தான்.

நண்பர்களும் கிருபா கூறியதை உண்மையென நம்பினர்.  கயல், தனக்கு நெருங்கிய தோழிகளிடம் மட்டும், கிருபா திவ்யாவை மறுத்ததைக் கூறி, குற்றவாளிக் கூண்டில் அவனை நிறுத்தி, தோழி அடைந்த மனவேதனைகளையும், சங்கடங்களையும் பிறரிடம் கூறி, காதலெனும் பெயரில், நேரம் போக்கும் கழிசடைகள் திரிவதாய் பிரகணப்படுத்தி இருந்தாள்.

இருவேறு பாலினமும், இரு வெவ்வேறான கருத்துக் கணிப்பில் இருந்தனர். அனைத்தும் அலைபேசி குறுஞ்செய்திகளாகப் பரவி, பேசப்பட்டு வந்தது.

திவ்யாவிற்கு தேர்வு நடந்த சமயத்தில், கல்லூரிக்கு தினசரி மகளை அழைத்து வந்து சென்ற ஈஸ்வரியிடம், திவ்யா நல்ல CGPA (மொத்த மதிப்பெண்களில் அதிகபட்ச சராசரியை) பெற்றிருப்பதால், அவளை மேற்படிப்பு படிக்க வைக்குமாறு ஆலோசனை கூறியிருந்தனர்.

ஈஸ்வரி, இனி எல்லாம் ஜெகன் பொறுப்பு என அதைப்பற்றி கண்டுகொள்ளவும் இல்லை, யாருடனும் விவாதிக்கவும் இல்லை.

திவ்யாவிற்கு அறிந்தவர்கள் பட்டியலில் விக்னேஷ் மட்டுமே அவளது திருமணத்தில் கலந்து கொண்டிருந்தான். ஈஸ்வரிக்கு பயம்.  ஆகையால் மணப்பெண்ணின் தோழிகளை திருமணத்திற்கு அழைக்க வேண்டாம் என்றிருந்தார்.

பேச்சு ஆர்வத்தில், திவ்யாவின் தோழிகள் தங்களுக்குள் எதையாவது உளறிட, சுற்றிலும் உள்ளவர்களுக்கு விசயம் போனால், மகளது எதிர்காலம் பாழாகிட வாய்ப்பு இருப்பதாக எண்ணி அழைப்பு விடுக்க மறுத்துவிட்டார்.

அதைக்காட்டிலும், மகளின் தோழியரைக் கொண்டு, தன்னை ஏமாற்றி வெளியே செல்லும் முயற்சியில் மகள் இறங்க வாய்ப்பு இருப்பதாகக் கணித்து, தவிர்த்திருந்தார்.

…………………………………………………

திவ்யாவிற்கு, கிருபா தன்னை யாரென்றே தெரியாது என்று தனது தமையனிடம் கூறியதைக் கேட்டது முதலே, இதயத்தை அறுத்தார்போல ரணமாய் உணர்ந்தாள்.

கிருபாவின் மீது கோபம் எழவில்லை.  மாறாய், தான் இவ்வளவு தூரம் அவனிடம் உண்மையாய் என்பதைவிட ஏமாளியாய் இருக்க, அவன் உண்மையாய் இல்லையே என்கிற வருத்தம் மட்டுமே எஞ்சி இருந்தது. தனக்கு உண்மையாய் இல்லாதவனைக் கண்டுகொள்ள வாய்த்த சந்தர்ப்பமாய் அந்த நிகழ்வை எண்ணி, கடந்த காலத்திலிருந்து மீள, மனதைத் தேற்றும் முயற்சியில் இருந்தாள்.  முயன்றாள், ஆனாலும் மிகவும் தொய்வாகவே முன்னேற்றமிருந்தது.

ஆனாலும், கிருபா அவ்வாறு கூறியதை தாங்கிக் கொள்ள இயலாமல் அவ்வப்போது துவண்டாள். மீண்டாள்.

இனி வரப்போகும் வாழ்வை ஏற்றுக்கொள்ள தன்னை தயார்செய்து கொள்ள வேண்டும் என அறிவு அவளை நிர்பந்தித்தாலும், மனம் ஊமையாய் அவளின் காவு போன காதலுக்காய் அழுதது.

ஜெகனின் மீதான கோபம், வன்மம் இலேசாகக் குறையத் துவங்கியிருந்தது.

ஆனாலும், காளியம்மாளுக்கு விசயம் தெரிந்தால் என எண்ணும்போது, ஜாக்கிரதை உணர்வும் அவளுக்கு மேலோங்கியது.

‘இவங்க(ஜெகன்) இப்ப கல்யாணம் பண்ணிக்க முன்வரலைன்னா, இன்னும் ரெண்டு வருசம் கழிச்சு, கிருபா என்னை ஏமாத்திட்டுப் போயிருந்தான்னா.. அப்ப நான் என்ன செய்திருக்க முடியும்.  அப்ப இன்னும் ரொம்ப டீப்பா அவனோட நெருங்கியிருப்பேன்.  அது இன்னும் எனக்கு கஷ்டத்தைக் குடுத்திருக்குங்கறதைவிட, இந்த ஈஸ்வரிய அப்போ சமாளிக்கறதுக்குள்ள இன்னும் நான் டேமாஜாகி ரொம்பப் பிரச்சனையாகியிருக்கும்’ என்பதாக இருந்தது திவ்யாவின் எண்ணம்.

அத்தோடு அவனை நம்பி தனது உடை, ஆபரணங்கள், சான்றிதழோடு சென்ற தனது மடத்தனத்தை எண்ணி, அவளையே வெறுத்தாள்.

‘எல்லாத்தையும் எடுத்துட்டு வான்னு ஏமாத்திட்டுப் போயிருந்தா, என்னாத்துக்கு ஆயிருக்கும் என்னோட நிலைமை’ என நினைத்து வருந்தினாள்.

திருமண நாளில் இருந்த நெருக்கடியில், வேறு எதையும் யோசிக்க இயலாதபடி, முறைகள், சடங்குகள் என அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்திருந்தாள்.

…………………………….

ஜெகனைப் பொருத்தவரை, இதுவரை சென்றது எதுவாக இருந்தாலும் சரி.  இனி திவ்யா தனது மனைவி.  அவளுக்கு ஒரு நல்ல கணவனாக தனது கடமையை எந்தக் குறையும் இன்றிச் செய்ய வேண்டும் என்கிற ரீதியில் இருந்தான்.

அடுத்து இனி வெளிநாடு செல்லும் எண்ணம் அனைத்தையும் மனதிலிருந்து அழித்திருந்தான்.

‘இங்கேயே எதாவது வேலை பாத்துட்டு, இருக்கறதை வச்சிட்டு நல்லா வாழ்ந்துட்டுப் போவோம்’ என தீர்மானித்திருந்தான்.

திருமணத்திற்கு முந்தைய தினம்வரை, அவ்வப்போது ராகேஷிற்கு அழைத்துப் பேசிக்கொண்டே இருந்தான்.

“மாப்பிள்ளை.. உங்க வீட்ல இருக்கறவரை திவ்யாவைப் பத்திரமாப் பாத்துக்கோங்க.  எங்க வீட்டுக்கு வந்தப்புறம் நான் பாத்துக்கறேன்” என எத்தனை முறை அவனிடம் கூறினான் என எண்ண முடியாத அளவிற்கு கூறியிருந்தான்.

ராகேஷிற்குமே ஜெகனின் இந்தப் பரிவான செய்கையில், ‘சித்தப்பு, தங்கச்சிய நல்லாப் பாத்துப்பாரு’ எனும் எண்ணம் வலுத்திருந்தது.

மொதல்ல இந்த சித்தப்புங்கறதை விட்டு, வேற சரியான உறவுமுறை வார்த்தையை மாற்ற வேண்டி, திவ்யா, ராகேஷ், ஜெகன் மூவருமே சிந்தித்தபடி இருந்தனர்.  ஆனால் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமல், அவரவர் நிலையில் யோசித்தபடி இருந்தனர்.

…………………………………….

நேராக, ஜெகனது கிராமத்து எல்லையில் உள்ள கோவிலில் சென்று வண்டியை நிறுத்திவிட்டு, மணமக்களை ஆலயத்தில் வழிபடச் செய்தபின்பு, வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டி, நல்ல நேரத்திற்காகக் காத்திருந்தனர்.

வழிபாட்டிற்காக இறங்கியதுமே, திவ்யாவிற்கு இதுதான் ஊரா என்பதுபோல மனதில் கேள்வியெழ, தனது அருகாமையில் இருந்த அத்தையிடம், “இதுதான் ஊரா.  என்னத்தை! பாக்கவே ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு!” சற்றே பதற்றத்தோடு கழுத்தில் இருந்த மாலைகளை சரிசெய்தவாறே வினவினாள்.

“ஸ்.. மெதுவா. யாரு காதுலயும் விழுந்திரப்போகுது.  உங்கம்மாவுக்கு அறிவே இல்லாம இப்டி ஒரு பொட்டல் காட்டுல கொண்டு வந்து உன்னைக் கட்டிக் குடுத்திருக்கு” அவரது பங்கிற்கு பேச

“மொத்தமே பதினைஞ்சு, இருவது வீடுதான் கண்ணுக்குத் தெரியுது” ஆந்திப்(எட்டிப்) பார்த்து, வீடுகளை குத்துமதிப்பாய் எண்ணிக் கூறினாள் திவ்யா.

“மாப்பிள்ளை வீட்டை மொதல்ல பாக்கணும்.  இருக்கிற இருவது வீட்டிலயும் நிறந்து வைக்கற அளவுக்கு, உங்காத்தா சீர் வரிசையக் கட்டிக் குடுத்து விட்ருக்கோ” என நாத்தனாரை கேலி பேச

“அதுக்கிட்டேயே போயி கேட்டுட்டு, எனக்கும் போன் பண்ணிச் சொல்லுங்க”

“எனக்கெதுக்குடீ இந்த வம்பு”

“அப்ப எங்கிட்ட மட்டும் சொல்லலாமாக்கும்” அத்தையிடம் மட்டும் இலகுவாய் பேசியபடி வந்தாள் திவ்யா.

காளியம்மாள், மற்றவர்கள் சென்ற வாகனம், நேராய் அவர்களின் வீட்டை நோக்கி முன்னே சென்றிருக்க, மணமக்களோடு சிலர் மட்டும் கோவிலுக்கு வந்து, பிறகு வீட்டை நோக்கி மணமக்களோடு செல்லக் காத்திருந்தனர்.

புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவர்கள், அந்தக் கிராமத்தைக் கண்ணுற்று, திவ்யாவின் அருகே வந்தனர்.  அனைத்து ஏற்பாடுகளையும் ஈஸ்வரியே செய்திருந்தார்.  ஆகையினால் திவ்யாவிடம் வந்தவர்கள், “உண்மையிலயே அவங்க உங்கம்மாதானா” எனக் கேட்டனர்.

திவ்யாவின் வீட்டில் இருந்த வளமையையும், தற்போது திருமணம் செய்து வந்திருக்கும் வீட்டை என்பதைவிட, கிராமத்தைக் கண்ணுற்றே, சந்தேகமாய் கேட்டிருந்தனர்.

“ஆமாண்ணே.  ஏன் அப்டிக் கேக்கறீங்க” திவ்யா

“இல்ல… இப்டி ஒரு மொரட்டுப் பட்டிக்காட்டுல உங்களை கட்டிக் குடுக்கறாங்களே… உண்மையிலேயே நீங்க அவங்க பொண்ணுதானான்னு ஒரு சின்ன சந்தேகம்” என

சிரித்தபடியே, எதுவும் பதில் கூறாமல் சமாளித்தாள் மணப்பெண்.

அருகே அனைத்தையும் கேட்டபடியே வந்தாலும், எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருந்த ஜெகனை எண்ணி இலேசாய் பயமும் திவ்யாவிற்குள் எழுந்தது.

ஜெகனுக்கோ, ‘நம்மகிட்ட மட்டுந்தான் பேச மாட்டிங்குது.  மத்த எல்லாருகிட்டயும் நல்லா சிரிச்சுப் பேசுது.  எம்மேல இன்னும் ரொம்பக் கோவமா இருக்குபோல’ என மனைவியைப் பற்றிய சிந்தனையில் இருந்தான்.

ஜெகனிடம், “ப்ரோ.. அங்க, உங்க வீட்ல ஆல்பம் போட்டோஸ் எடுக்கறதுக்கு கன்வீனியன்டா பிளேசஸ் இருக்குமா.  இல்லைனா, இங்கேயே எடுத்துறலாமா” எனக் கேட்க

“அங்க வீட்டைச் சுத்தி இடம் இருக்கும்.  ஆனா இந்த கோயிலைச் சுத்தி நிறைய மரஞ்செடினு இருக்கறதால, இங்கேயே எடுத்துருவோம்” தனது முடிவை ஜெகன் கூற, அவனது வார்த்தையைக் கேட்டதும், “இன்னும் இருவது நிமிசத்துல வீட்டுக்கு போயிரணும்.  அதுவரை எடுங்க” என உடன் வந்த ஜெகனது உறவில் ஒருவர் கூறினார்.

அனைவரும் சூழ வேடிக்கை பார்க்க, சிறு சோலைக்கு நடுவே, மணமக்களை நிறுத்தி, படமெடுக்கத் துவங்கியிருந்னர்.

திவ்யாவின் தோளைப் பிடித்து, ஜெகனது தோளில் திவ்யா சாய்ந்துகொண்டு, பெண்ணது நாடியை மணமகன் பிடித்தபடி, இருவரும் ஒருவருக்கொருவர் முதுகில் சாய்ந்தபடி, சில அமைப்புகள் காண்போரை மட்டுமல்லாது, காட்சியில் பங்கேற்பவர்களையும் நாணம் கொள்ளச் செய்யுமளவிற்கு நீண்டிருந்தது.

திவ்யாவிற்கு மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.  ஆனால் உடனிருந்த அவளின் அத்தை, “ச்சு இது எல்லாம் கொஞ்சந்தான்.  இதுக்கு ஓகேன்னு பேசாம இருந்தா, இதுக்கு மேல எதாவது செய்யச் சொன்னா, வேணானு சொல்லலாம்.  இப்பவே வேணானா, மத்தவங்களுக்கு எல்லாம் என்ன ஏதுன்னு சந்தேகமாக் கேப்பாங்க” மெல்லிய குரலில் வந்து மிரட்டினார்.

அதற்குமேல் மறுக்க இயலாமல், கருமமே என பொய்யா ஒட்டவைத்த இதழ் சிரிப்போடு ஒத்துழைத்தாள் திவ்யா.

இருபது நிமிடத்திற்குப்பின் வீட்டிற்கு வந்து பொதுவான படங்கள் என எடுத்து, மீண்டும் இன்னும் நெருங்கி சில அமைப்புகளில் அமர, இணைந்திருக்குமாறு கூற, சங்கடமாய் ஜெகனைப் பார்த்தாள்.

திவ்யாவின் முகத்தில் இருந்த சங்கடத்தைக் கண்டு கொண்டவன், “இது போதும்” என்க, அப்போதுதான் சற்றே நிம்மதியாக உணர்ந்தாள் திவ்யா.

கூச்சமாய் இருந்தது திவ்யாவிற்கு.  குதூகலமாய் இருந்தது ஜெகனிற்கு.  மாறுபட்ட மனநிலைகளில், இரு மனங்கள், திருமணம் எனும் நிகழ்வால் இணைந்திருந்தது.

ஓட்டு வீட்டைச் சுற்றியிருந்த இடத்தில், மொத்த சமான்களையும் இறக்கி வைக்க இயலாத நிலை.  ஆகையால் பீரோ, பாத்திரங்கள், மெத்தை, தலையணை, பாய், மிக்ஸி, கிரைண்டர், ரெஃரிஜிரேட்டரை மட்டும் இறக்கியவர்கள், மீதமிருந்ததை திவ்யாவின் தாய் வீட்டிற்கே எடுத்துச் செல்லுமாறு திவ்யாவின் மாமா கூற, இடையில் வந்த காளியம்மாள்

“ஏன் திருப்பி எடுத்துட்டுப் போகச் சொல்றீங்க” என விரைந்து வந்து கேட்க

“வேற என்ன செய்யச் சொல்றீங்க.  இதை வைக்கவே இங்க எடம் இருக்கற மாதிரித் தெரியலை.  காசு போட்டு வாங்குன பொருளை, வெயில்லயும் மழையிலயும் போட்டு வச்சா என்னாத்துக்கு ஆகும்.  அதேன்… அக்கா வீட்டுலயே கொண்டு போயி வைக்கச் சொன்னேன் அத்தை”

“அப்டிச் சொல்றியாக்கும். தோ… இந்த இடத்தில போடக்கூடாதா” என அவர்களின் வீட்டுத் திண்ணையைக் காட்ட

“அத்தை.. இதுல வந்து பொண்ணு, மாப்பிள்ளை படுக்க முடியுமா?”

“ஏன் அவுகதான் அதுல படுக்கணும்னு என்ன சட்டமா?”

“நல்லாவுள்ள அத்தை, கேள்வி கேக்குறீக.  எங்கக்கா அது மகளும், மருமகனும் படுக்கணும்னுதானே இவ்வளவு பெரிய கட்டிலையே வாங்கிக் குடுத்துருக்கு.  இதுல நீங்க படுப்பீங்கன்னா நல்லாவா இருக்கு” திவ்யாவின் மாமன் எழுப்பிய கேள்வியில் மனம் சுருக்கெனத் தைக்க அப்படியே பேச்சை மாற்றினார் காளி.

“நான்னா… என்னையச் சொல்லலை.  அவரு.. அதான் செகனு அப்பாவச் சொன்னேன்” மழுப்பலாய்க் கூற

“நீங்கன்னா என்னா, அவங்கப்பான்னா என்னா.  உங்களுக்குன்னு எல்லாம் இது வாங்கலைத்தை. வேணுமின்னா உங்க மயங்ககிட்டச் சொல்லி, இதுபோல ஒன்னு வாங்கிப் போட்டுக்கங்க” என சற்றும் தயங்காது உரைத்திட

“…அதுக்குத்தான் இவங்க அப்பா முன்னயே பக்கத்தில புதுசா தார்சு வீடு கட்டச் சொன்னாரு.  எங்க கேக்குறாய்ங்க.  எல்லாம் வளந்து, அதுக இஷ்டத்துக்குத்தான் ஆடுதுக” புலம்பியபடி, எதுவும் செய்ய முடியாத இயலாமையில் எழுந்த பெருமூச்சோடு, வந்தவர்களை கவனிக்கச் சென்றார்.

இரவு உணவு, அவ்வூரில் உள்ள அனைவருக்கும் அவர்கள் வீட்டில்தான்.

வந்தவர்கள் அனைவரையும் கவனித்து, எல்லாரும் உண்டு, உறங்கச் செல்லும்போது மணி பதினொன்று ஆகியிருந்தது.

அலைச்சல், கடந்து போன நாள்களின் அசதி அனைத்தும் சேர்ந்து, திவ்யாவின் உடம்பு ஓய்வுக்காக ஏங்கியது.

…………………………………………

Leave a Reply

error: Content is protected !!