emv15b

எனை மீட்க வருவாயா! – 15B

 

முதலிரவுக்கான ஏற்பாடுகள் துவங்கி, அறைக்குள் அனுப்பி வைத்தனர் திவ்யாவை.

அத்தையிடம் மறுத்து அழ, “சாஸ்திரப்படி அனுப்ப வேண்டியது எங்க கடமை.  அந்தப் பையங்கிட்ட உங்கம்மா ஏற்கனவே பேசிருச்சாம்.  ஒழுங்கா சத்தமில்லாம, கண்ணைக் கசக்காம உள்ளே போற வழியப் பாரு” என அதட்டினார்.

“போத்தை.. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு” என கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி கூற, அதைத் தூரத்தில் இருந்து கண்ணுற்ற, காளி தவறாய் புரிந்து கொண்டு அருகே வந்திருந்தார்.

இடையே வந்த காளி, “என்னாச்சு திவ்விய்யா, ஏன் இந்த நேரத்தில அழுகுற மாதிரி நிக்கிற.  இன்னும் நீ என்ன பச்சப் புள்ளையா.  உன் வயசில எனக்கு இவைங்க ரெண்டு பேரும் பொறந்துட்டானுங்க”

“இல்லை.. கண்ணுல தூசி விழுந்துருச்சு. அதுதான்.  வேற ஒன்னுமில்லை”, என திவ்யாவின் அத்தை சமாளித்திருந்தார்.

மிகவும் சிறு சிறு அறைகள்.  திவ்யாவின் பீரோவை ஹாலில் வைத்திருந்தனர்.  மற்ற பொருள்கள் பெரும்பாலும் வெளியில்தான் இன்னும் வைக்கப்பட்டிருந்தது.

ஜெகனது அறைக்குள் பாயை விரித்து வைத்திருந்தனர்.

திவ்யாவிற்கு எங்காவது ஓடிவிடலாமா என்கிற அளவில் மனம் போனாலும், உடல் ஒத்துழைக்கவில்லை.

அறைக்குள் வந்தவளுக்காக அதுவரைக் காத்திருந்தவன், பெண் உள்ளே நுழைந்ததும், அறைக் கதவை வேகமாகச் சென்று தாழிட, திவ்யா மேலும் படபடப்பாக உணர்ந்தாள்.

‘இந்த ஆளு இப்ப என்ன செய்யப் போகுது’ என பயத்தோடு ஜெகனைப் பார்த்திருந்தாள்.

ஆறுக்கு இரண்டு அளவில் உள்ள ஒரு பாய் விரிக்கப்பட்டிருக்க, அதில் அமர யோசித்தபடியே, சுற்றிலும் பார்வையை விட்டபடி, கண்களில் ‘அடுத்து என்ன ஆகுமோ’ எனும் ரீதியில் பயத்தோடு நின்றிருந்தாள் திவ்யா.

கதவைத் தாழிட்டவன், அவன் வெளிநாட்டில் இருந்து வந்தபோது எடுத்து வந்த டிராவல் சூட்கேசினைத் திறந்து, ஏதோ எடுத்தான்.

திரும்பியவன், நின்றிருந்தவளின் வலக்கையை மெதுவாகத் தாங்கிப் பிடித்தபடியே, தானும் பாயில் அமர்ந்து அவளையும் தனதருகே அமர வைத்தான். கையில் எடுத்ததையும் அருகே வைத்தான்.

“எம்மேல ரொம்பக் கோபமா திவ்யா?” மெலிதாய் மனைவியை நோக்கிக் கேட்டான்.

“…” குனிந்த தலை நிமிராமல் எதுவும் பேசாமல், பாயினை விரலால் நிமிண்டியபடி அமைதியாக இருந்தாள்.

“அப்ப கோபந்தான் இல்லையா”

“…”

தன்னைக் காணாமல், கீழே குனிந்திருந்தவளின் நாடி தொட்டு நிமிர்த்தியவன், “காதல்… கூடாமப் போன வருத்தமா? இல்லை அதை நான் கெடுத்துட்டேனு எம்மேல கோபமா?”

“இரண்டுந்தான்” சின்னக் குரலில் மெதுவாய் கூறினாள்.

“அது இந்த வயசில எல்லாருக்கும் வரத்தான் செய்யும்.  வாழ்க்கைக்கு அது ஒத்து வந்தா ஏத்துக்க வேண்டியது. வரலைனா, அதை விட்டுவிலகி, கிடச்சதை ஏத்துக்கறதுதான திவ்யா நல்லது”

“நான் சொன்னதைக் கேட்டு, நீங்க விலகியிருந்தா, ஒரு வேளை அது கிடச்சிருக்கலாம்ல” குற்றம் சுமத்தும் குரல். உண்மையில், கிருபா தன்னை யாரென்று தெரியாது என மறுத்ததாக இருந்தாலும், ஜெகன் இடையில் வந்ததால் ஒருவேளை அவன் என்னை மறுத்திருப்பானோ என சற்று முன் மனதில் தோன்றியதை திவ்யா கேட்டாள்.

“இன்னும் அப்டி ஒரு நினைப்பு இருக்கா?”

“எப்பவுமே இருக்கத்தான செய்யும்”

திவ்யாவின் பதிலில் மனவருத்தம் உண்டானபோதும் அதைக் காட்டாது, “ராகேஷ்கிட்ட பேசி, நாந்தான் அந்தப் பையங்கிட்ட உனக்காக பேசச் சொன்னேன்.  அவன் மாட்டேன்னு சொன்னபின்னதான உங்களுத்துல, நான் தாலி கட்டினேன்” இது புதிய செய்தி திவ்யாவிற்கு.

ராகேஷ் தனக்காக யோசித்திருக்கிறான் என்று இதுவரை அவள் நினைத்திருக்க, அது அவனாகச் செய்யவில்லையா?

“உங்கண்ணங்கிட்ட இப்ப பேசுறியா?” என தனது பேசியைத் தேடி எடுத்தான்.

“இல்ல வேணாம்” அவசரமாய் மறுத்தாள்.

“எதாவது எங்கூட பேசு திவ்யா”

“என்ன பேசறதுன்னு தெரியலை” பட்டும் படாமல் பதில் கூறினாள்.

“அப்ப நான் ஒரு விசயம் சொல்றேன். கேக்குறியா?”

என்னவோ, ஏதோ என அதிர்ந்து நிமிர்ந்தவளை, “பயப்படற அளவுக்கு ஒன்னுமில்லை” எனத் தேற்றினான்.

“ம்ஹ்ம்”

“நான் ஐடிஐ முடிச்ச சமயம் அது.  டெய்லி, ஆர்எஸ் மங்கலம் பஸ் ஸ்டாப்புல ஒரு பொண்ணைப் பாப்பேன்.  அதுவும் பாக்கும். சிரிக்கும். நானும் சிரிப்பேன். ரெண்டு வருசம் பாத்து, பாத்துட்டே இருந்தோம்.  ஆனா பேசினதில்லை.  அப்புறம் நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.  அப்போவும் பாப்பேன்.  ரெண்டு பேருக்கும் நாங்க யாரு, என்ன படிச்சோம், எங்க குடும்ப விவரம் எல்லாமே தெரியும்.  ஆனா நாங்க பேசிக்கிட்டதே இல்லை.”

“…” ஆச்சர்யமாய் ஏறிட்டுப் பார்த்தாள்.  இப்டி நடக்குமா என்பதுபோல இருந்தது திவ்யாவின் பார்வை.

“…ஆனா திடுதிப்புனு ஒருநாள் காலையில, ஏழெட்டுப்பேரு ஜெகன் வீடு இதுவா, இதுவான்னு விசாரிச்சு, இங்க வர வந்துட்டாங்க.  அப்போ நான் திண்ணையிலதான் படுத்திருந்தேன்.”

“…” ஜெகனது கதையைக் கேட்கத் துவங்கியவள், மிகுந்த ஆவலோடு கேட்டபடி இருந்தாள்.

“வந்தவங்க, எங்கம்மாகிட்ட இந்த மாதிரி உங்க பையனும், அந்தப் பொண்ணும் இன்னைக்கு ஊரவிட்டு ஓடிப்போகப் போறாங்க.  இது உங்களுக்கு தெரியுமானு கேக்க”

“…” திவ்யா சிரித்தே விட்டாள்.

ஜெகனும் சிரித்தபடியே, “அதுக்கு எங்கம்மா, யாரு செகனா.. அவனுக்கு இன்னும் அவங் **சப் புடிச்சே, ஒழுங்கா ஒன்னுக்குப் போகத் தெரியாது.  அவம்போயி அந்தப் புள்ளையோட ஊரவிட்டு ஓடி, என்ன செய்யப் போறானு கிண்டலா கேட்டு, அவங்கட்ட சமரசம் பேசி, இங்கேயிருந்து அனுப்பி வெச்சிருச்சு”

“…” திவ்யாவிற்கு ஜெகனது பேச்சில் பொங்கி வந்தது சிரிப்பு.  அத்தோடு காளியம்மாளை நினைத்து ஆச்சர்யம் வேறு.

“நானும் போர்வைக்குள்ள இதையெல்லாம் கேட்டுக்கிட்டே அசையாமப் படுத்திருந்தேன்.  அவனுக போயி பத்து நிமிசத்துல, மாட்டை விரட்டற சாட்டையாலயே நாலு போடு போட்டுச்சு பாரு.”

“அப்பத்தா உங்களை அடிச்சாங்களா?”

“வேற என்னத்தை இப்ப சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்றவன், “நானும் வலியில கத்திட்டே எந்திருச்சி, எதுக்கும்மா இப்டிப் போட்டு மாட்டை அடிக்கற மாதிரி அடிக்கிறேன்னு வலியோட கேட்டேன்.  அதுக்கு எங்கம்மா சொல்லுச்சு.. பன்னிக் குட்டியும் பருவத்துல அழகாத்தான் இருக்கும்.  அதுக்காக நீ திங்க, போட்டுக்கவே இன்னும் எங்களை நம்பிட்டு இருக்கும்போது, அந்தப் புள்ளைக்கிட்ட போயி எதுக்கு ஆசை வளத்தேனு கேட்டு, அடிஅடினு அடிச்சுத் துவைச்சிருச்சு”

“…” சிரிப்பு மறைந்து கண்களில் அதிர்ச்சியோடு பார்த்திருந்தாள்.

“அது ஒன்னும் தப்பாக் கேக்கலைல.  அத்தோட இனிமே ஒழுங்கா இருப்பேன்னு எங்கம்மாகிட்ட சொல்லிட்டேன்.  ஆனா அதுக்கப்புறம் பத்து நாளு சாப்பாட்டையே எங்கண்ணுல காட்டலை.  முதல மூனு நாளு வீராப்பா தெரிஞ்சேன்.  அடுத்து ஏழு நாள்ல சாப்பாட்டைத் தவிர வேற எதுவுமே யோசிக்கவே முடியலை.  வேலைக்குப் போன இடத்துலயும் எங்க ஓனர்கிட்ட வந்து, நான் வேலை பாக்கற காசை, அதுக்கிட்டதான் குடுக்கணும்னு சொன்னதும் அவரும் பணத்தை எங்கிட்டத்  தர மாட்டேனுட்டார்.  பத்து நாளைக்கப்புறந்தான் இந்தக் காளி, கஞ்சியவே கண்ணுல காட்டுச்சுனா பாரேன்”

“…” ‘என்னோட விசயம் தெரிஞ்சா அப்போ என்ன செய்யும் இந்த அப்பத்தா’ என அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. பதறியது மனம்.

“எதுக்கு இதைச் சொல்றேன்னா, அதது அந்தந்த வயசில யாரையும் கேக்காம, அதுபாட்டுக்கு வந்தாலும், நாம அதுக்கு ஏத்த நிலையில இருக்கோமா, நம்மால இதை சக்சஸ் பண்ண முடியுமா, இல்லையானு யோசிக்க தெரியாத வயசு”

“…” தனது செயல் தவறானது என்பதைச் சுட்டிக் காட்டவே, தற்போது இந்தக் கதை தனக்கு கூறப்படுகிறது என்பது புரியாத அளவிற்கு மக்கல்லவே அவள்.

“..அந்தப் புள்ளை எங்கிட்ட எதுவுமே கேக்காம, எங்க வீட்டுக்கு வந்து என்னையும் கூட்டிட்டு ஊரை விட்டு ஓடிப் போகப் போறேன்னு அது ஃபிரண்டுகிட்ட சொன்னது, எவ்வளவு பெரிய பிரச்சனையில கொண்டு வந்து விட்ருச்சுனு பாரு.  அதுல இருந்து எனக்கு யாரைப்  பாத்தாலும், வேற எதுவும் யோசிக்கவே தோணாது.  தோணுனாலும், அந்த இடத்திலேயே நினைப்பை அழிச்சிட்டுப் போயிருவேன்”

“…”

“அப்புறம் வெளிநாடு போயிட்டு வந்ததும், எனக்கு கல்யாணம்னு சொல்லிருந்துச்சு எங்கம்மா.  நானும் போனதடவை கல்யாணம் பண்ற மாதிரிதான் வந்திருந்தேன்.  வந்தா பொண்ணு அமையலைனு, திரும்ப ஒரு தடவை வெளிநாடு போயிட்டு வரச் சொல்லுச்சு. அதுக்குள்ள பொண்ணு பாத்திருவேன்னு.  அதாவது எங்கம்மாவுக்கு புடிச்ச மாதிரி கிடைக்கலைன்னு வச்சிக்கோ.  அப்புறந்தான் உன்னை கேட்டது.  எனக்கும் உன்னைப் புடிச்சிருந்துச்சு. நானும் ஒத்துக்கிட்டேன்”

“…”

“..நீ வந்து எங்கிட்ட சொல்லும்போது அந்தப் பையனோட நிலைமையும், என்னோட அப்போதைய நிலைமை மாதிரிதான்.  அதுதான் உன்னை நாங்கல்யாணம் பண்ணிக்கறதா அத்தாச்சிகிட்ட துணிஞ்சு சொன்னேன்.  அப்புறமும் ஒரு மனசு, ஒரு வேளை அந்தப் பையன் வீட்ல உங்களை சேத்து வைக்கிற மாதிரி இருந்து, அதை நான் தடுத்திருந்தானு.  அப்பதான் ராகேஷ்கிட்ட பேசி, அவங்கிட்ட ஒரு வார்த்தை கேக்கச் சொன்னேன்”

“…”

சற்றுநேரம் தனது கதையைக் கூறி, மனைவியை சிரிக்க, சிந்திக்கச் செய்தவன், அவளது கைவிரல்களை தனது கைகளுக்குள் வைத்தபடியே சுடக்கு எடுத்தான்.

சத்தம் எழவே, திவ்யாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.  சற்று நேரத்தில் தனக்கே முரண்பாடு எதுவும் தோன்றாமல், தன்னிடம் அடுத்தடுத்த நிலைக்கு, மனம் முரண்டாது முன்னேறுபவனை எண்ணி.

‘சரியான கேடியாத்தான் இருந்திருக்கு’ என்பதாய் எண்ணமிருந்தாலும், எதுவும் தெரியாதவள்போல முகத்தை வைத்துக்கொண்டாள்.

அடுத்து ஜெகன் சொன்ன சேதியில், திவ்யாவிற்கு தன்னை புரியாத நிலை.

“இப்டியே ரொம்ப நாளைக்கு பாத்திட்டே என்னால இருக்க முடியாது திவ்யா.  சீக்கிரமா மனசை மாத்திக்க ட்ரை பண்ணு.  இனி இதுதான் நம்ம வாழ்க்கை.  நாளைக் கடத்தினா, அப்புறம் நானும் என்னதான் செய்வேன்..” எனக்கேட்டவனின் குரலில் திவ்யா உருகிக் கொண்டிருந்தாள்.

“…” சட்டென தன்னை நிகழ்விற்கு மீட்டெடுத்தவள், ‘சூன்யம் எதுவும் இவருக்கு வைக்கத் தெரியுமோ… இப்டி என்னை மண்டைய ஆட்டற மாதிரி எப்டி பேசுறாங்க’ என்பதாய் மனம் சலித்தது.

“…  கண்ணு பாக்கற தூரத்தில, ஊறுகாய வச்சிட்டு, நாக்குல எச்சில் ஊறக்கூடாதுன்னு சொன்னா அது முடியுமா?  என்னால முடியாது திவ்யா.  அப்டித்தான் எங்கைக்கு எட்டற தூரத்தில, எம்பொண்டாட்டினு உரிமையோட நீ இருக்க.  என்னை ரொம்ப நாள் சோதிக்காம, எனக்காக சீக்கிரம் மாறப் பாரு”, என்றவன்

அருகே வைத்திருந்ததை எடுத்து, அதிலிருந்த மோதிரத்தை எடுத்து, அவளது விரலில் போட்டு விட்டான்.

“இதை ஏன் இப்பப் போடுறீங்க” பதறிக் கேட்டாள்.

“எம்பொண்டாட்டிக்கு எப்பத் தோணுதோ அப்பப் போடறேன்.  அதுக்கேன் இவ்ளோ பதறுற”

“யாராவது கேட்டா?”

“எம்புருசன் போட்டு விட்டாருன்னு சொல்லு” மிதர்ப்பாய் கூறினான்.

அடுத்து நான்கு தங்க வளையல்கள்,  கைக்கு இரண்டாக பூட்டினான்.

“இது எல்லாம் நான் என் பொண்டாட்டிக்காக, அதாவது, உனக்காகன்னு வாங்கினது”

“…” ஆவென ஆச்சர்யமாய் பார்த்தாள். அத்தோடு, “இது எல்லாம் சபையில போட்ருக்கலாம்ல” எனக்கேட்டவளிடம்

“அது எங்கம்மா போட விடாதுன்னு தெரியும்” என்றவாறு சிரித்தான்.

“ஏன்?”

“அதுக்கு இன்னும் நான் வளையல் செஞ்சு தரலைல.  அப்புறம் எப்டி உனக்கு போட விடும்”

“…” ‘அப்டி வேற இருக்கா’ என்பதுபோல கேட்டுக் கொண்டாள்.

“ஏன் எதுவுமே எங்கூட பேச மாட்டிங்கற?”

“…” மோதிரம், வளையல் என அடுத்தடுத்து போட்டதில், பெண்ணுக்கு மயக்கம் வரும்போல இருந்தது.  இதுதான் அன்பா, காதலா, இல்லை தனது மனைவி என்கிற உறவின் ஆதிக்க மனப்பான்மையா… புரியாமல் அமர்ந்திருந்தாள். இதில் என்ன பேச… ஒன்றும் புரியாத நிலை.

குழப்பக்காடு மண்டிக் கிடக்க, விழியில் எந்த உணர்வையும் காட்டாமல் நிமிர்ந்து பார்த்தாள்.

“இப்ப எம்மேல உள்ள கோபம் கொஞ்சமாவது குறைஞ்சிருக்கா?”

“அதுக்குத்தான் இதெல்லாம் போட்டீங்களா?”

“இல்லையே, இது உனக்குப் போடுறதுக்காக நான் நாலு மாசம் முன்னயே வாங்கிட்டேன்”

“அப்போ… அப்பவே நமக்கு கல்யாணம்னு பேசியாச்சா”

“ஆமா… அத்தாச்சி உங்கிட்டச் சொல்லவே இல்லையா?”

“..” இல்லை என தலையை அசைத்து மறுத்தவளிடம், “உங்கிட்ட சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சித்தான், நான் பேசும்போதெல்லாம், அத்தாச்சிகிட்ட போனை உங்கிட்ட குடுக்கச் சொல்வேன்”, என்றவன், நேரத்தைக் கண்ணுற்று, “தூக்கம் வருதுனா தூங்கு திவ்யா”

“வந்த தூக்கத்தை கதை சொல்லி விரட்டியாச்சி.  இனி எத்தனை மணிக்குத் தூக்கம் வரும்னு தெரியலையே சித்தப்பா”

“ம்… இதையும் சொல்லணும்னு நினைச்சேன். இனி அப்டி கூப்டாத” தர்மசங்கடமாய் வந்தது.

“அப்டிதான இதுவரை கூப்பிட்டேன்”

“அதுக்காக இனியும் அப்டிக் கூப்பிடக் கூடாதுல்ல”

“அப்ப, வேற எப்டிக் கூப்பிட?”

“ஏங்க, வாங்கனு கூப்பிடு,  இங்க கிராமத்துல அய்யா மயனேனு கூப்பிடுவாங்க.  உனக்கு அப்டிக் கூப்பிட முடியும்னா அப்டியே கூப்பிடு” என்றவன் “எனக்கு ரொம்ப அசதியா இருக்கு.  நான் படுக்கவா?”

“ம்ஹ்ம்” என மனைவி ஆமோதிக்க, மேல்சட்டையை கழட்டிவிட்டு, தனதருகே வந்து படுத்தவனைப் பார்க்க, சங்கடமாய் உணர்ந்து, நகர்ந்தாள் திவ்யா.

ஆனால் ஜெகனோ, மனம் முழுக்க நிறைவோடு உறங்கச் சென்றான்.

இருவரது மனமும் நிறைவாகும் நாளும் விரைவில் வருமோ?