emv16a

எனை மீட்க வருவாயா! – 16A

 

மறுநாள், மறுவீடு அழைப்பிற்காக அழைப்பு விடுத்ததோடு, திவ்யாவின் அத்தை, மாமா கிளம்பிச் சென்றிருந்தனர்.

திவ்யாவின் அத்தை அவளை தனியே அழைத்து, “சமத்தா இருந்துக்கோடீ.  எதுனாலும் போன் போடு.  இந்தப் பட்டிக்காட்டுல டிவியை விட்டா வேற பொழுதுபோக்கு இருக்கற மாதிரி எனக்குத் தெரியலை.  அங்க ஆளு, பேருன்னு, பக்கத்துல சொந்தக்காரவங்களோட இருந்தவளுக்கு, இது எல்லாம் ஒத்து வருமானு தெரியல.  முடியுதா பாரு.  இல்லைனா மாப்பிள்ளைகிட்டச் சொல்லி, நம்ம ஊருப் பக்கமா வந்திரப்பாரு” என கமுக்கமாய் அறிவுரை கூறிவிட்டுச் சென்றிருந்தார்.

ஜெகனிடம் அவளின் மாமா, “திவ்யா, அங்க அட்டாச்டு டாய்லட், பாத்ரூம் இருக்கற மாதிரி இடத்துல வளந்திருச்சு.  இங்க ஒரு பாத்ரூம், டாய்லட் மட்டும் அரேன்ஞ் பண்ணிக் குடுத்துருங்க” என்றிட, அதற்கு ஜெகனும் மறுபேச்சுப் பேசாமல் ஆமோதித்திருந்தான்.

தனது தாய் வீட்டிலிருந்து முந்தைய தினம் கிளம்பும்போது தோன்றாத உணர்வு, தற்போது தன்னுடன் வந்தவர்கள், குறிப்பாய் தனது தாய்மாமனும், அத்தையும் கிளம்பியதும் தோன்றி, வெறுமையும், ஆதரவற்றாற் போன்ற நிலையுமாய் மனதை அரித்து, அலைக்கழித்தது திவ்யாவை. 

ஜெகன் உறவு வழியில் திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் கிளம்பிச் செல்ல வீடே வெறுச்சோடிய உணர்வு.

திவ்யா, அவளறியாமலேயே ஊமையாய் அழுதாள். அழுதவளைத் தேற்ற, ஜெகன் ஏதேதோ பேசினாலும், அவளால் இலகுவாய் மீள முடியவில்லை.

அவளின் வாடிய வதனத்தைக் கண்டு, மனம் பொறுக்காதவன், அறைக்குள் அழைத்துச் சென்று, “இப்ப உனக்கு உங்க வீட்டுக்குப் போகணும்னா சொல்லு.  நாமளும் அவங்ககூடயே கிளம்பிப் போயிட்டு வரலாம்” என சமாதானக் குரலில் கூறிட

“இல்லை. கொஞ்ச நேரம் கஷ்டமா இருக்கும்.  போகப்போக சரியாகிரும்.  மறுவீட்டழைப்பு அன்னைக்கே நாம போயிக்கலாம்” என்றிருந்தாள்.

ஜெகன் தன்னை இந்தளவு கவனித்து, தனக்கு ஆறுதலாய் பேசியதிலேயே, திவ்யாவிற்கு மனம் கனிந்தது.

தாய் கூறியதைப்போல ‘இவர் நல்லவர்தான்போல’ என திவ்யா நினைத்துக் கொண்டாள்.

மகனின், மனைவி மீதான கரிசனை, காளிக்கு எரிச்சலைக் கிளப்ப, அங்கு வந்த காளியோ, “இங்கிருந்து கிளம்புனா, ஒன்ரை மணி நேரத்தில, ஆத்தா வீட்டுக்குப் போயிரலாம்.  அதுக்கா இப்டி கண்ணுல இருந்து தாரை தாரையாய் கண்ணீரை வடிக்கற? இதுல இவன்வேற! உலகத்துக்கு இல்லாதவளைக் கட்டிட்டு வந்துட்டோம்னு, கண்ணீரை வீணாக்காம சொம்புல புடிச்சி, தீத்தங் கணக்கா தெளிச்சிக்குவான் போல! அவளைத் தாங்கிக்கிட்டே பின்னாடியே திரியறான்!” என்றதுமே அவசரமாய் தன்னைச் சரி செய்து கொண்டாள் திவ்யா.

ஜெகன் தாயின் வார்த்தைக்கு எதுவுமே பதில் பேசவில்லை.

………………………………..

ஜெகனின் வீடு வழமை நிலைக்குத் திரும்பினாலும், திவ்யா கொண்டு வந்திருந்த பொருள்கள் அனைத்தும் அங்காங்கே சிதறி இருந்ததே அன்றி, இன்னும் அவை ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்தது. அதற்கு ஏற்ற இடவசதியில்லாமல் அவ்வீடு இருந்தது என்பதே பொருத்தமாக இருக்கும்.

இயன்றவரையில், திவ்யாவே சில இடங்களை ஒதுக்கி, கொண்டு வந்திருந்ததை ஒழுங்குபடுத்த முனைந்தாள்.

திவ்யா எடுத்து வைத்தபின் அங்கு வந்த காளியம்மாள், “இப்ப இதை இங்க வச்சிட்டா, அந்த இடத்தில நான் (ஏற்கனவே)ஏக்கனவே வச்சிருந்ததை எல்லாம் எந்தலையிலயா தூக்கி வச்சிக்க முடியும்” எனக் கேட்க

காளியின் பேச்சில் பதறிப் போனவள் “வேற எங்க வைக்கணு சொல்லுங்க அப்பத்தா.  எடுத்து அங்க வச்சிறேன்” என மருமகள் பணிவாய் கேட்டாள்.

“வச்சது வச்ச இடத்திலயே இருக்கட்டும்.  இனி அதை மாத்தி என்ன செய்ய? இனிமே வைக்கிறதை எங்கிட்டக் கேட்டுட்டு எடுத்து வையி” தனது ஆளுமையை, வந்தவளிடம் நிலைநாட்டும் முயற்சியில் இருந்தார் காளி.

“வைக்க இடமில்லைனு நீங்க முன்னாடியே சொல்லியிருந்தா, அம்மா கொஞ்சமா சீர் வாங்கியிருக்கும்ல அப்பத்தா” காளியிடம் பணிவோடு மெதுவாய் வினவ

“அது எப்டி!  குடுக்கறதைக் குடுத்து விட்டாத்தானே எல்லாத்துக்கும் மரியாதையா இருக்கும்!”

“அதுக்குத் தக்கன(அதற்கேற்றாற்போல) இங்கதான் இடமில்லையே அப்பத்தா!”

“அப்ப ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாத வீடுன்னு எங்களை சொல்ல வர்றீயா? ஏங்க இந்தப் புள்ளை என்ன சொல்லுதுன்னு கேளுங்கங்க…! டேய் உங்களையுந்தான்டா..! இதுக்குத்தான் வீட்ட மொதல்ல கட்டுங்கன்னு தலையால அடிச்சிக்கிட்டேன்” என அங்கு வேறு வேலையாய் இருந்த அனைவரது கவனத்தையும் ஈர்க்க முயன்றார் காளி.

அருண் மட்டும் அங்கிருந்து எழுந்து காளியின் அருகே வந்தமர்ந்தான்.

“அய்யய்யோ..! அப்டி சொல்லலை அப்பத்தா.  இன்னும் இந்த சாமானெல்லாம் எடுத்து வைக்க முடியாம இருக்கேன்னுதான் அப்டிக் கேட்டேன்.  நீங்க தப்பா அர்த்தம் எடுத்துக்காதீங்க!”

“என்னாது! உனக்கும்,  உங்க ஆத்தாளுக்கும், எல்லாம் சரியாத் தெரியும்.  பட்டிக்காட்டுல இருக்கற நாங்கல்லாம் தப்பா எடுத்துக்குறோங்கறீயா?”

“அய்யோ! அப்பத்தா… நான் எங்க அப்டிச் சொன்னேன்!”

“அம்மா, அது சின்னப் புள்ளை! அதுக்கிட்டப் போயி உன்னோட திறமையெல்லாம காட்டற நேரமில்லை இது!” என அருண் தாயைக் குறைகூற

“போடா…! போயி உன் வேலையப் பாரு!  அவளைச் சொன்னா, அவ புருசனே பேசாமத்தான் இருக்கான்.  நீ எதுக்கு அவளுக்கு வக்காலத்துக்கு வர்ற?”

“நீ பண்றது சரியில்லைம்மா..!” என எச்சரித்துவிட்டு, ஜெகனிடம் சென்று, அருகில் அமர்ந்து ஏதோ கூறினான்.  கேட்டுக் கொண்டவன் அதே இடத்தில் அமைதியாக இருந்தானே அன்றி, வேறு எதுவும் கண்டு கொண்டானில்லை.

அனைத்தையும் பார்த்தவருக்கு, ‘இந்த சின்னப் பைய எதாவது வந்து இடக்கு மடக்கு பண்ணிட்டே இருக்கறான்’ என நொந்து கொண்டு, “இதையெல்லாம் மெதுவா எடுத்து வைக்கலாம்.  மொதல்ல, நீ போயி உள்ள இருக்கறதை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு என்னைக் கூப்பிடு” என மருமகளிடம் வேலை ஏவிவிட்டு அகன்றார் காளி.

ஜெகன் முந்தைய இரவு தன்னிடம் பேசிய பேச்சிற்கும், தற்போது தாயின் பேச்சிற்கிடையே வராமல் ஒதுக்கமாய் இருப்பதையும் கண்டவளுக்கு, ‘அதுதான் இவரா.  ஒரு வேளை மல்டி பெர்சனாலிட்டியோ’ எனத் தோன்றியது திவ்யாவிற்கு.

வீரம் அழைத்து, ஜெகனுக்கு சிறு வேலை கூற, அவன் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ராஜசூரிய மங்கலம் வரை சென்றிருந்தான்.

இடையில் மணமக்களை காண வந்தவர்கள், ஜெகன் இல்லாமல் மணமகள் மட்டும் வீட்டிலிருப்பதைப் பார்த்துவிட்டு, “நேத்துதான கல்யாணம் ஆச்சு.  அதுக்குள்ள பொண்ணை விட்டுட்டு மாப்பிள்ளை எங்க போயிருக்கு?” என வினவ, அதன்பின்னே வந்தவனை வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு, அருணை வெளி வேலைகள் நிமித்தமாய் அனுப்பினர்.

திருமணத்திற்கு வர முடியாதவர்கள், வீட்டிற்கு வருவதும், மணமக்களைப் பார்த்து ஆசிர்வதித்து கிளம்புவதுமாய் இருந்தனர்.

வரும் மக்களின் எண்ணிக்கை நேரம் செல்லச் செல்ல குறையத் துவங்கியிருந்தது. ஜெகன், அதன்பின் திவ்யாவைவிட்டு வெளியில் எங்கும் செல்லவில்லை.

வருபவர்களைப்பற்றிய உறவுமுறைகளைப் பற்றி கூறுவதும், அவர்கள் சென்றபின் பொதுவான விசயங்கள் பற்றிப் பேசுவதுமாய் அன்றைய பொழுது சென்றிருந்தது.

இடையில் ஏதேனும் தேவைக்காக காளியம்மாளை நாடினாலும், அவரின் வெடுக் வெடுக் எனும் பதிலில் மனம் சற்றே அதிர்ந்து அவரை அணுகுவதைக் குறைத்துக் கொண்டிருந்தாள்.

‘இந்த அப்பத்தா ஏன் இப்டி வள்ளு, வள்ளுன்னு விழுகறாங்க.  அங்க வரும்போது எல்லாம், எங்கூட நல்லாத்தானே இதுநாள்வரை பேசுவாங்க’ என மனம் சிந்தனை வயப்பட்டு, அதற்கான பதில் தெரியாமல் இருந்தாள் திவ்யா.

பதற்றம், தனக்கு நெருங்கிய யாருமற்ற நிலை, புதிய சூழல் எல்லாம் சேர்ந்து தலைவலி வந்திருந்தது திவ்யாவிற்கு.

மதிய உணவைத் தவிர்த்தவளைக் கண்ட ஜெகனோ, “சாப்பிட வேற எதாவது வெளியே போயி வாங்கிட்டு வரவா?” என மெதுவாக வினவ

“இல்லை.  தலைவலின்னால சாப்பிடாம இருந்தா சரியாகிரும்”, என்றதுமே, தான் வாங்கி வந்திருந்த தலைவலித் தைல பாட்டில்களில் வகைவகையாய் எடுத்து வந்து, மனைவியின் கைகளில் திணித்தவன்,

“இதுல உனக்கு எது வேணுமோ யூஸ் பண்ணிக்கோ.  மத்ததையெல்லாம் என்னோட சூட்கேஸ்ல வச்சிரு” என சுட்டிக் காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

வெளியில் எந்த வேலை பார்த்தாலும், கவனம் முழுவதும் புது மருமகள் மற்றும் மகனிடமே காளியம்மாளுக்கு இருந்தது.

ஜெகன் சென்றதுமே அருகே வந்தவர், “என்ன கொண்டு வந்தான், எம்புட்டு கொண்டு வந்தான், எதுவும் எங்களுக்கு இதுவரைத் தெரியாது.  ஆனா, இப்ப என்னடான்னா, எல்லாத்தையும் பொண்டாட்டி கைல எடுத்துத் திணிக்கறான்.  இந்தப் பயலுக்கு புத்திகித்தி எதுவும் மாறிப் போயிருச்சோன்னு இருக்கு” என கூறியபடியே இல்லாத வேலையை பார்ப்பதாகப் பாவனை செய்தார்.

திவ்யாவிற்கு, எதனால் காளியம்மாள் அவ்வாறு கூறுகிறார் எனப் புரிந்தாலும் அமைதி காத்தாள்.

தலைவலி இன்னும் நிற்காமல் இருக்க, மாலை வேளையும் நெருங்கிட, தேநீரை மனம்நாட, இரண்டு முறை  அடுக்களைப் புறம் சென்று பார்த்து வந்தாள் திவ்யா.

“என்னடா உம்பொண்டாட்டி, வாசலுக்கும், அடுப்படிக்கும் குட்டிபோட்ட பூனையாட்டாம் நடையா நடக்குறா” என காளி ஜெகனிடம் கேலியாய் கேட்க

“தலைவலின்னு சொல்லிட்டுருந்தா” மெல்லிய குரலில் ஜெகன் கூற

அதேநேரம், “அது டவுனுல வளந்தது.  இன்னேரத்துக்கு டீ, காபி குடுச்சுப் பழக்கமா இருக்கும்.  அதான் போயிப் பாக்குது” என தனது யூகத்தில் அருண் பதில் கூற

“போட்டாத்தானே வரும்.  போயிப்போயி எட்டிப் பாத்தா, வெட்டிச் சிறுக்கிக்கு யாரும் வந்தா, டீயைக் கையில குடுப்பாக” என காளியம்மாள் பேச

“வாயக் குறை காளி.  அந்தப் புள்ளை காதுல விழுந்தா தப்பாப் போயிரும்” வீரம் மிரட்ட

“என்ன செஞ்சிருவா அந்த வெங்கம் பய மக என்னைய!”

“அது ஒன்னுஞ் செய்யாது.  அது போயி அவங்கம்மாகிட்டச் சொன்னாப் போதும்”

“அதுக்கெல்லாம் பயந்தவ இல்லை நானு” என்ற காளி, “ஏய் திவ்விய்யா…” நீட்டி முழங்கி மருமகளை அழைத்தார்.

“என்ன அப்பத்தா” என வந்தவளிடம், “டீ வேணுனா போட்டுக் குடி.  அப்டியே ஒரு வாயி எங்களுக்கும் போட்டு எடுத்தா” என்றிட

கங்குகளோடு இன்னும் அணையாமல் இருந்த அடுப்பை பற்ற வைக்கத் தெரியாமல், மன்றாடி, கணவனை அழைக்க வந்து, அவன் வேலையாய் இருப்பதைக் கண்டு தானே முயற்சி செய்திட முயன்றாள்.

பெற்றோருடன் அமர்ந்து, வந்த மொய் விவரங்களைப் பற்றிக் பேசிக் கொண்டிருந்தவனை தனித்து அழைக்க முடியாமல், திரும்பியவள், அங்கிருந்த காய்ந்த விறகுகளுடன் பனை ஓலைகளை வைத்து, ஊதுகுழல் கொண்டு ஊதினாள்.

ஊதுகுழல் கொண்டு ஊதும் முறை தெரியாமல், நாசி, வாய் வழியே புகை சென்று இறுமல் வேறு வந்தது.  கண்களில் நீர் நிரம்பி இருக்க, அதை ஒதுக்கி, இறுமியபடியே ஊதினாள்.

இரண்டு நாளில் அங்கு நடப்பதை, போகும்போது வரும்போது கவனித்ததைக் கொண்டு, யூகத்தில் ஏதோ முயன்றாள்.

நீண்ட நேர மன்றாடலுக்குப்பின் விறகுகள் எரியத் துவங்கியது. ஒரு வழியாய் கையைச் சுட்டு, அது எரிந்தாலும், தேநீர் குவளையுடன் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களிடம் வந்தாள்.

அங்கிருந்தவர்களுக்கு தேநீர் ஊற்றித் தந்தவள், காளிக்கு ஊற்றி நீட்ட, அதை வாங்கியவர் கண்களில் திவ்யாவின் கையில், ஏற்கனவே போட்டிருந்த கண்ணாடி மற்றும் தங்க வளையல்களுக்கு இடையில் இருந்த ஜெகன் முந்தைய இரவு போட்ட புதிய டிசைன் வளையல்கள் கண்ணில்பட்டிருந்தது.

தேநீரை இடது கையில் மாற்றிக் கொண்டு, வலக்கையால் திவ்யாவின் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தபடியே, “இது எப்ப, யாரு போட்டது” என்றபடியே கண்களைச் சுருக்கி பார்வையை கூர்மையாக்கி வளையல்களைப் பார்த்தவர், அடுத்த கையையும் எடுத்துப் பார்த்து, “நாலு வளையலு இருக்கு” திவ்யாவின் முகம் பார்த்து மீண்டும் வினவ

தயங்காமல் ஜெகனைப் பார்த்தபடியே “சித்தப்பாதான்” என்றிருந்தாள்.

“நேத்து இங்க கிளம்பி வரவரை உங்கைல இது இல்லையே.  எந்தச் சித்தப்பன் இங்க வந்து போட்டது” காளிக்கு தனது மகனை யோசிக்க முடியாமல், திவ்யாவின் தந்தை வழியில் யாரோ சித்தப்பா என நினைத்துக் கேட்டார்.

திவ்யாவின் தந்தை வழியில் நகைக்கடைகள் எல்லாம் இருக்க, அவ்வாறு நினைக்கும்படி ஆகியிருந்தது காளியம்மாளுக்கு.

தனக்குத் தெரியாமல், இங்கு யாரோ வந்து சென்றிருக்கிறார்கள் என்கிற எண்ணத்தில்தான் அவ்வாறு கேட்டிருந்தார்.

ஜெகனைச் சித்தப்பா என்றதுமே, அதுவரை அவனது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி சட்டெனத் துடைத்தாற்போலத் தோன்றியது திவ்யாவிற்கு.

சலனமின்றி மாறிப்போன தனது முகத்தை, மனைவிக்குக் காட்டப் பிரியமின்றி, தந்தையுடன் மொய் நோட்டில் கவனத்தைச் செலுத்த முயன்றவனைப் பார்த்தவளுக்கு, தனது தவறு உரைத்தது.

…………………………………………