emv16b

emv16b

எனை மீட்க வருவாயா! – 16B

 

ஜெகனை மட்டும் யோசித்தவள், காளியம்மாளைப் பற்றி யோசியாது சட்டென, “உங்க மயந்தான் அப்பத்தா” என ஜெகனை நோக்கிக் கை காட்ட, தன்னைக்காட்டி திவ்யா கூறுவதைக் கவனத்தில் கொள்ளாமல், கையிலிருந்த மொய் நோட்டைப் பற்றிய விளக்கத்தை தந்தை வீரத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தான்.

திவ்யா கூறுவது கேட்டாலும் அதைக் கேட்டதுபோலக் காட்டாமல் இருந்தான்.

மருமகளின் பதிலில் காளியம்மாள் தனது மனதைத் திறந்திருந்தார்.

“இந்த அநியாயத்தை கேக்க, இங்க யாருமில்லையா?” தாடையில் கையை வைத்து ஆச்சர்யமாய் என்பதைவிட, ஆங்காரமாய் கேள்வி கேட்டார்.

“…”

“…தாலி கட்டி ஒரு நாளைக்குள்ள சேலை (நுனி)முந்தியில எப்டி முடிஞ்சிக்கறதுங்கற வித்தையோட, உன்னை என் வீட்டுக்கு அனுப்பி வச்சாளாக்கும் உன் ஆத்தா!” என திவ்யாவிடம் கேட்க

“…” அமைதியாகக் கேட்டிருந்தவள், கணவன் எதாவது தனக்காக பேசுவான் என அவனை நோக்கி எதிர்பார்த்து நிற்க, அவனோ அவள் புறமே திரும்பவில்லை.

“என்ன! அவனைப் பாத்தா…! நீ பண்ணது இல்லைனு ஆயிருமா? ஆளுதான் சின்னப்புள்ளை.. ஆசையெல்லாம் அளவுக்கு மிஞ்சில்ல இருக்கு!  இது தெரியாமல்ல.. வந்து உங்க வீட்ல சம்பந்தம் பண்ணிபுட்டேன்.  எம்புள்ளைக்கு சூதுவாது ஒன்னுமே தெரியாதே..! ஒத்த நாளுலயே இந்தளவுக்கு மாத்திப்புட்டேன்னா, இனி எம்மயன் எனக்கில்லையா..! பாசக்கார மயன்.. எதுனாலும் இந்த ஆத்தாவுக்கு அப்புறந்தான்னு வாழ்ந்தவனை, ஒரே நாளுல ராவோட, ராவா இப்டி மாத்திப்புட்டாளே!” கொலைக் குற்றம் செய்தாற்போல திவ்யாவைப் பேச

“உங்க மகன் போட்டதுக்கு, அவங்ககிட்ட எதுவும் கேக்காம, எங்க அம்மாவையும், என்னையும் எதுக்கு அப்பத்தா இப்ப இழுக்கறீங்க?” வயதின் துணிவு.  இளரத்தம் என்பதை உணர்த்தும் வேகத்தில் பேச்சைத் துவங்கினாலும், பணிவோடு கேட்க

“எதுத்தாடீ பேசற…! அம்புட்டுக்கு வந்துருச்சா உனக்குத் தெகிரியம்(தைரியம்).  எல்லாம் அவன் குடுக்கற எடம்(இடம்)!”

“ஏம்மா இப்ப என்ன நடந்திருச்சுனு ஓவரா ஒப்பாரி வைக்கிற.  அவன் பொண்டாட்டிக்கு அவன் போடாம, வேற யாரு போடுவா! இதுவரை அவஞ் சம்பாத்தியம் பண்ணது, விவசாயத்துல வந்தது எல்லாம் நகையாக்கி, நீதான கழுத்துல போட்ருக்க.  இன்னும் உனக்கு அது பத்தலையாக்கும்.  வேணுனா, கழுத்துல இருக்கற செயினை வளையலா மாத்திப் போட்டுக்க.  அதைவிட்டுட்டு இப்ப எதுக்கு தேவையில்லாம அந்தப் புள்ளைகிட்ட போயி பேசிட்டுருக்க” அருண் இடையிட்டுக் கேட்க

“அது எப்டி?” என காளி அதை மறுத்து பேச வர

“என்ன… சபையில வச்சிப் போட்ருக்கணும்.  உம்மயனுக்கு உங்கிட்ட என்ன பயமோ!  அதான் யாருக்கும் தெரியாம அவம் பொண்டாட்டிக்கு ராவோட ராவா போட்டுருக்கான்.  அவங்கிட்ட கேக்கறதை விட்டுட்டு அந்தப் புள்ளைகிட்ட போயி என்ன பேசிட்டு இருக்க”, என்றவன்

“உனக்கு அப்பாதான செய்யணும்.  அவருகிட்ட வேணுங்கறதைக் கேளு. இப்ப அப்பத்தா வந்து, உங்கிட்ட நீ இப்பக் கேக்குற மாதிரிக் கேட்டா, அதைக் கேட்டுட்டு சும்மா இருப்பியாக்கும்.  ஆஞ்சிரமாட்ட ஆஞ்சு” அருண் இடையுற

“அதுக்காக வந்தவுடனே இப்டிக் கையில போட்டுக்குவான்னா நான் நினைச்சேன்” தலையில் அடித்துக் கொண்டு காளி பேச

“நீ அப்பாவக் கைக்குள்ள போட்டுட்டு மூனே மாசத்துல தனிக்குடித்தனம் வந்ததுலாம் நினைப்பிருக்கா… இல்லையா” என அந்நேரத்தில் அருண் எடுத்துக் கூறிட

“இவன் யாருடா.  நேரங்காலந் தெரியாம எதையாது வந்து சொல்லிக்கிட்டு” என அங்கிருந்து அகன்றவர், புலம்பலோடு கையில் தேநீரோடு வீட்டிற்குள் நுழைந்தார்.

தனது ரகசியங்களை மகன் கூறினால், வந்த மருமகள் மூத்த மகனை தன்னிடம் இருந்து விரைவில் பிரித்துவிடுவாளோ என்கிற எண்ணத்தில், அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி அகன்றிருந்தார் காளி.

இதைப்பற்றி அறியாதவளோ, காளியம்மாளின் பின்னோடு சென்றாள். டம்ளருக்காக அவரை நோக்கிச் செல்ல, “குடிச்சிட்டா டம்ளர் தாங்க அப்பத்தா” என்றவாறு வந்தவளிடம்

“லோட்டா வேணுனா, திண்டுல காய வச்சிருக்கேன். போய் எடுத்துக்கோ” என்ற காளியின் வார்த்தையில் வந்த லோட்டாவிற்கான அர்த்தம் புரியாமல் விழிக்க

ஜெகன் எதுவும் கவனிக்கவில்லை.  தாயின் செயல்களைப் பார்த்தவாறே தேநீர் அருந்திக் கொண்டிருந்த அருணே முன்வந்து, “லோட்டான்னா டம்ளர்தான் திவ்யா. அங்க திண்டுல வச்சிருக்காம் அம்மா.  போயிப் பாரு” என்ற பின்பே அவளுக்கு அதற்கான அர்த்தம் புரிந்து அங்கிருந்து நகர்ந்தாள்.

இரவில் தனியறையில் கணவனோடு இருக்கும்போது, “நீங்கதான இந்த வளையலைப் போட்டு விட்டீங்க.  அப்பத்தா கேக்கும்போது, இது நாந்தான் போட்டுவிட்டேன்னு சொல்லியிருக்கலாம்ல” என மனத்தாங்கலோடு வினவ

“அதுக்கு எல்லாந் தெரிஞ்சுதான் கேட்டுச்சு.  அப்டிக் கேக்குதுண்ணா, ஏதோ பிரச்சனையை உண்டு பண்ற ஐடியால இருக்குன்னு அர்த்தம்.  அதான் நான் வாயத் திறக்கலை”

“உங்க ரெண்டு பேருக்கிடையிலே மாட்டிக்கிட்டா, நான் அதோகதிதான்போல” சிரித்தாள்.

“அப்டி எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற?”

“நேத்தே நான் சொல்லத்தான் செஞ்சேன்.  வேணானு.  இந்த விசயம் எங்கம்மாக்குத் தெரிஞ்சா, என்னைய இன்னும் திட்டும்”

“அதையெதுக்கு அங்க சொல்ற?”

“நாளைக்கு இன்னும் பெருசா பிரச்சனை உங்கம்மா பண்ணா, நீங்களும் எனக்காக பேச மாட்றீங்க.  அப்ப எங்கம்மாவாவது வந்து பேசினாத்தானே எடுபடும்.  இல்லலைனா என் நிலைமை ரொம்ப மோசமாயிறாதா?”

“அந்தளவு எல்லாம் எங்கம்மா போகாது” என்றாலும், பின்னொரு நாள் அப்டியொரு நிலை வரும் என்பதை மகன் அறியாமல் கூறியிருந்தான்.

கழிப்பறை, குளியலறை கட்டுவதுபற்றி ஜெகன் தந்தையிடம் கேட்க, இடையிட்ட காளியம்மாள், “அதுதான் வீடு கட்டுவோம்ல. அப்போ அதையும் சேத்துப் பாத்துக்கலாம்” என்றிட அதற்குமேல் அதை அப்படியே விட்டிருந்தனர்.

ஜெகனிடம், அவனது தந்தை புதிய வீடு கட்டுவதைப் பற்றிப் பேச, “பாத்துக்குவோம்பா” என்றான்.

“என்னடா, போன தடவை கட்டலாம்னு சொன்ன.  இப்ப பாப்போங்கிற” என வீரம் யோசனையாய்க் கேட்க

“அப்பா, இன்னைக்கு காலத்துல படிப்போ, வேலைன்னா டவுனுக்குத்தான் போக வேண்டியிருக்கும்.  இந்த மாதிரி நேரத்தில இங்க வீடு கட்டுனாலும், எல்லாரும் இங்கேயே தங்க முடியாது.  அப்புறம் எதுக்கு அந்த வீடு.  வந்தா போனா தங்கற மாதிரி இந்த வீடு இருக்கும்போது பாத்துக்கலாம்” என்றிருந்தான்.

அதை மனைவியிடம் வீரம் பகிர்ந்திட, மறுநாளே விடியல் பயங்கரமாய் இருந்தது.

சாடையாய் பேசியபடியே அங்குமிங்குமாய் திரிந்தார் காளி.

“சரினு சொன்னவன் இப்ப மாட்டேங்குறான்னா, அப்ப இது யாரு சொல்லிக் குடுத்திருப்பா.  ம்ஹ்ம்… இந்தக் காலத்தில இவ்வளவு வெசச்(விஷம்) சிறுக்கிகளையா பெத்து, நமக்குன்னு அனுப்பி விட்ருக்காறே இந்த ஆண்டவன்!”

“நல்லவ கணக்கா பேசுனா, எல்லாரும் நம்புவாக.  அதுக்கு.. நானும் நம்பணும்னு நினைச்சா, எங்கிட்ட அவ நாடகமெல்லாம் எடுபடுமா?”

“பத்து பைசா பெறாத நிலைக்கு இப்பவே கொண்டு வந்து நிறுத்திட்டாய்ங்களே”

இப்படி காளியின் புலம்பலான சாடைப் பேச்சுகள் தொடர்ந்தது.

அனைத்து விசயங்களும், அவ்வப்போது ஈஸ்வரிக்கு அலைபேசி வழியே கடத்தப்பட்டது.

அதை அறிந்தாலும், காளி தனது நிலையை மாற்றிக் கொள்ளத் தயாராய் இல்லை.

ஒன்றிரண்டு முறை, மருமகளிடம் வந்தவர், “இப்ப இதையெல்லாம் எதுக்கு உங்காத்தாகிட்ட சொல்லிட்டு இருக்க.  போயி அடுப்பப் பாரு” என திவ்யாவை விரட்டியிருந்தார்.

…………………………..

காளியம்மாளின் எதிர்பாரா தாக்குதல்களை சமாளிக்கவே, திவ்யாவிற்கு நேரம் போதவில்லை.  இதில் தனது கடந்து போன கசப்பான காதலை நினைக்கவோ, தான் ஏமாளியாய் இருந்த தருணங்களை எண்ணி வருந்தவோ நேரமில்லாமல் போனது.

மறுவீட்டு விருந்திற்கு சென்றபோது, காளியம்மாள் ஈஸ்வரியிடமே நேரில் கேட்டிருந்தார்.

ஈஸ்வரியும் விடவில்லை, “எம்மகளுக்கு வேணுங்கற நகை எல்லாம் எந்தக் குறையுமில்லாம போட்டுத்தான் உங்க வீட்டுக்கு அனுப்பினேன்.  ஆனா கொழுந்தனுக்கு அவரு பொண்டாட்டிக்கு செய்யணும்னுங்கற ஆசையில போட்டு விட்ருக்கார்.  அவரு சபையில போட்டுருந்திருக்கலாம்.  அதைவிட்டுட்டு உங்கட்ட கேக்காம பண்ணது அவரு தப்புதான்.  அதுக்கு நீங்க உங்க மயங்கிட்டத்தான அத்தை கேக்கணும்.  எம்மகக்கிட்ட கேட்டா என்னா அர்த்தம்” எனத் துவங்கிட

“அவன் போட்டுவிட்டா இந்தப் புள்ளை வேணானு சொல்லியிருக்கலாம்ல” என காளி வாதாட

“ஏன் வேணானு சொல்லணும்னு சொல்றீங்க.  அவ புருசன்தான போடறாரு” என ஈஸ்வரி விதண்டாவாதம் செய்ய

“இல்லம்மா… அவனுக்குத் தெரியாமப் பண்ணிப்புட்டான்னா, அப்ப இந்தப் புள்ளைதான சொல்லியிருக்கணும்” என மீண்டும் தனது வாதத்திலேயே காளி நிற்க

“உங்க மயனைவிட எம்புள்ள அஞ்சு வருசத்துக்கு சின்னப் புள்ளைதான.  வயசுல பெரியவறான உங்க மகனுக்கே ஒன்னும் தெரியலைனா, எம்புள்ளைக்கு மட்டும் எப்டித் தெரியும்” என காளியின் வாயை அடைத்திருந்தார் ஈஸ்வரி.

வந்த இடத்தில் எதற்கு மனஸ்தாபம் என அனைவரும் ஈஸ்வரியைப் பேசிட, ஒருவழியாய் அமைதியாகி இருந்தனர்.

தமையனிடம் பேசும்போது, கணவன் கூறியதைக் கேட்டு அது உண்மைதான் என்பதையும் அறிந்து கொண்டவளுக்கு, ஜெகன் மீதான மதிப்பு உயர்ந்தது.

அன்றைய விருந்திற்குப்பின் மணமக்கள் மீண்டும் கிராமத்து வீட்டிற்குத் திரும்பியிருந்தனர்.

ஜெகனுக்கும், மகளுக்கும் இன்னும் சரியாகவில்லை என்பதைப் புரிந்து கொண்ட ஈஸ்வரி மகளிடம் தனியே அழைத்துப் பேசியிருந்தார்.

“இங்க பாரு திவ்யா.  அவன் பொறுமையா இருக்காங்கறதுக்காக ரொம்ப சோதிக்க நினைக்காத.  உன்னோட நிலைமை எனக்குப் புரியுது.  ஆனா இனி இவந்தான் வாழ்க்கைனு ஆனபின்ன, இன்னும் பிடிவாதமா அவனைக் கிட்ட விடாம இருந்தா, அப்புறம் நீதான் கஷ்டப் படணும்.  பாத்து நடந்துக்கோ” என்றவர்

ஜெகனிடமும், “தம்பி உங்க பொறுமை வேற யாருக்கும் வராது.  அது பண்ண காரியத்துக்கு வேற ஒருத்தனா இருந்தா, இன்னேரம் இந்தக் கல்யாணமே நடந்திருக்காது.  அப்டி கல்யாணம் நடந்திருந்தாலும், என்னன்னவோ சொல்ல முடியாத கஷ்டமெல்லாம் வந்திருக்கும்.  ஆனா நீங்க புரிஞ்சுட்டு நடக்குறீங்க.  நானும் அவகிட்ட எடுத்துச் சொல்லிருக்கேன்.  இனி ஒழுங்கா நடந்துப்பா.  பாத்துக்கங்க” என அனுப்பி வைத்திருந்தார்.

தனது கணவனை, ஜெகனோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, ஜெகன் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தான்.

…………………………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!