emv20a

emv20a

எனை மீட்க வருவாயா! – 20A

 

களைத்து விலகி உறங்கியிருந்தாலும், விடியலில் வழமைபோல விழிப்பு வந்து எழுந்திருந்தான் ஜெகன்.  அயர்ந்து உறங்குபவளை ஆசையோடு இதழொற்றி விலகினான்.

முக்கனியின் சுவையோ, தேனின் தீஞ்சுவையோ, அமிர்தமோ ஆனால் அத்தனை தித்திப்பு அதில்.

அது அவனது ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஊடுருவிப் பரவிட, உலகத்தின் ஒப்பற்ற இனிமையாய் உணர்ந்தான்.

உறக்கம் கலைந்ததில், “ப்ச்சு…” என்றவாறு அவனுக்கு முதுகுகாட்டி அவனவள் திரும்பிப் படுக்க

பின்னோடு அவளுடன் அட்டையாய் ஒட்டி, அன்பாய் அணைத்துக் கொண்டான்.

“ம்ஹ்…ம்ஹ் ஹூம்… ம்…” எனும் அவள் எழுப்பிய சத்தம், அவனுக்கு கீதமாய் இசைத்தது.

அதுவரை இருந்த உணர்வு மாறி, அதிகாலையில் காமனின் கண்ணசைவில்பட்டவனுக்கோ, முந்தைய நாளின் கூடலின் சுவை நினைவில் வந்து, மீண்டும் அதை அடையும் ஆசை எழுந்திட, இன்னும் தன்னவளை இறுக அணைத்தபடியே கழுத்தின் வழியே தூது அனுப்பலாமா? வேண்டாமா? அதனால் தன்னவள் உறக்கம் கெடுமோ எனத் தயங்க

எத்தனை முறை அடைந்தாலும் சலித்திடாத உணர்வு, அவனை உந்தித் தள்ளிட, அவனது தயக்கத்தை அது தடை செய்திருந்தது.

உணர்வுக் கொந்தளிப்பில், அவன் கூறாமலேயே, அவனது உடல்மொழியின் வழி அனுப்பிய தூதின் துணை கொண்டே, கணவனின் எண்ணத்தை அரைகுறை உறக்கத்திலேயே கண்டு கொண்டவள், அவளை அணைத்திருந்த அவனின் கைவிரலை சட்டென எடுத்து வாயில் வைத்துப் பொய்க்கடி கடித்தாள்.

அவளின் செய்கையில் உண்டான வலியில் “ஆவ்…” என கையை அவசரமாய் இழுத்துக் கொண்டவன், “என்னடீ? அதுக்குள்ள முழிச்சிட்டியா?”

“எங்க தூங்க விட்டீங்க?” அவனுக்கு போதை ஹாஸ்யம் தரும் குரலில் வினவினாள்.

“ஹி..ஹி” சத்தமில்லாமல் அந்நேரத்திலும் ஜொல்லியவனின், மார்போடு மயக்கமாய் ஒட்டிக்கொள்ள, காதோரம் முற்றுகையிட்ட இதழ் மூலம் காமனுக்கு தூது அனுப்பினான்.

நெகிழ்ந்து இளகி தன்னிடம் குழையக் காத்திருக்கும் தன்னவளை, ஆசையோடு அடுத்த ஆனந்தத்திற்கு தயாராக்க முனைய, அதேநேரம் வாயிற்கதவு தட்டும் சத்தம் கேட்டது.

‘காலிங் பெல் இருக்கும்போது எதுக்கு கதவை இந்தத் தட்டு தட்டுராங்க. அதுவும் காலையிலேயே’ என இருவரது எண்ணமும் ஒரு சேர இருக்க, சட்டென வடிந்த உணர்வில், காமன் விடைபெற்றிருக்க, இருவரும் உணர்ச்சிகளைத் துடைத்துக் கொண்டு, சட்டென இயல்பிற்குத் திரும்பி, உறவிருந்தும், உணர்வு அறுபட்டுப் போனதால் விரக்தியோடு விலக, வாயிற்கதவு தட்டும் ஓசை முன்னிலும் அதிகமாகக் கேட்டது.

“யாரது?” சத்தமாகக் கேட்டான் ஜெகன்.  அதில் தெரித்த கொலைவெறியைக் கண்டு, படுக்கையில் இருந்தவாறு தன்னைப் பார்த்து மோகனமாய் சிரித்த தனது மோகினியை, முறைத்தபடியே “சிரிக்கிறியாடீ.. மோகினிப் பிசாசே. வந்து உன்னை அப்புறமா கவனிச்சிக்கிறேன்” என அதுவரை மேலாடையின்றி இருந்தவன், தசைகள் இறுகி திண்மையாய் இருந்தவனது மேனியில், துண்டை எடுத்து சால்வை அணிவிப்பதுபோலப் போட்டபடி அறையில் இருந்து கிளம்ப, “லட்டு இன்னிக்கு மோகினிப் பிசாசாயிருச்சா” சிரித்தபடியே கணவனைச் சீண்ட

“ஆமாடீ பிசாசே… வந்து வச்சிக்கிறேன் உன்னை” சென்று கதவைத் திறந்தான்.

வாயிலில் நின்ற தாயைக் கண்டவனுக்கு, உணர்வு முற்றிலும் வற்றியது.

“என்னம்மா ஏன் இந்நேரத்தில இங்க கிளம்பி வந்திருக்க? அப்பா எங்க?” என பதற்றமாய் வினவ

“ஏண்டா, வந்தவுகளை வாங்கன்னு கேட்டுத்தான் பாத்திருக்கோம்.  இது என்னடா.. முகத்துல அடிச்ச மாதிரி எதுக்கு வந்தீகன்னு கேக்கற.  அவருக்கென்ன குறை.  ராசா கணக்கா இருக்காரு” என வாயிலை அடைத்தபடி நின்ற மகனைத் தள்ளியபடியே உள்ளே நுழைந்தார் காளியம்மாள்.

தாயின் பின்னோடே யோசனையோடு வந்தான். அதேநேரம் மாமியாரின் குரல் கேட்டதுமே, படுக்கையில் இருந்து சட்டென வாரிச்சுருட்டி எழுந்தவள், அறையோடு இருந்த குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.

“என்னடா… இன்னுமா அவ முழிக்கலை?”

“இன்னிக்கு ஞாயித்துக் கிழமைதான.  நீ இப்டி ஒக்காரு.  உனக்கு நான் டீ போட்டு எடுத்தாரேன்” என அடுக்களையை நோக்கி மகன் நகர

அதேநேரம் “ஏன் மகாராணி இன்னும் முழிக்கலையா? வாசலைக் கூட்டிப் பெருக்கி கோலம் போடாம, மைசூரு மகராணி இன்னும் தூங்குறாளாக்கும்.  எல்லாத்துக்கும் இந்தக் காலத்துச் சிறுக்கிகளுக்கு வலி.  அதான் தனிக் குடித்தனம் போறேன்னு பயலைத் தனியா கூட்டிட்டு வந்து, இப்ப உன்னைய டீ போட விட்டுட்டாளா? இப்டியெல்லாம் நடக்கும்னுதான் அங்கேயே தனிக் குடித்தனம் வைக்கலாம்னு தலையால அடிச்சிட்டேன்” என்றபடியே அவர்களின் படுக்கை அறைக்குள் காளி நுழைந்திருந்தார்.

கட்டில் கிடந்த கோலமே முந்தைய தினத்தின் கூடலை கூறாமல் கூச்சமின்றிப் பறைசாற்ற, “ச்சைய்… இதுல முழிச்சா, இன்னைக்கு விளங்குமா?” என்றபடியே அறையை நோட்டம் விட்டார். 

அதில் அனைத்தும் சீராய் எடுத்து உரிய இடத்தில் வைத்து விட்டிருந்த காரணத்தால், தூய்மையோடும், நேர்த்தியோடும் அறையிருக்க, “இப்டித்தான் ஒரு வீடு கட்டச் சொன்னேன்” என பெருமூச்செரியச் சொன்னார் காளி.

குளியலறையில் தெரிந்த வெளிச்சத்தைக் கண்டு மருமகள் அங்குதானிருக்கிறாள் என அனுமானித்து, “ம்க்கும்…. இந்த கக்கூஸ் இல்லைனுதான நம்மளை கேவலப்படுத்தினா அவ ஆத்தா.  அதான் விடிஞ்சா, அடைஞ்சா அது முகத்துல முழிக்கிறாளாக்கும் மகக்காரி!” கிண்டல் தொனியில் பேசியபடியே, மகனிடம் சென்றார்.

தாயின் செயலில், பேச்சில் சங்கடமாய்ப் போனது ஜெகனுக்கு. பின்னோடு வந்தவன், “அவ எனக்கு முன்னாடியே எழுந்திருச்சு, குளிக்கப் போயிருப்பாம்மா” என சத்தமாய் மனைவிக்குக் கேட்க வேண்டுமே எனக் கூறினான்.

“நம்பற மாதிரி இல்லையே.  நா வந்து அரைமணி நேரமா காட்டுக்கத்தா  கத்தி, இப்பத்தான நீ வந்து கதவைத் துறந்த?”

“ஆமாம்மா.  அவ குளிச்சிட்டு இருந்திருப்பாளா இருக்கும்.  நான் அப்பத் தூங்கிட்டு இருந்தேன்.  அதான் எனக்கு நீ கூப்பிட்டதே கேக்கலை.  அவளாலயும் வந்து திறக்க முடியாதுல்ல” தர்க்க ரீதியாய் மனைவியின் செயலை சரியென தாயிடம் வாதாட முயன்றான்.

காளி அதையெல்லாம் கண்டுகொண்டாலும் காணாததுபோல, “என்னம்மோ போ… இந்நேரம் காடுகரைன்னு எழுந்திருச்சுப் போயி, வேலையெல்லாம் முடிச்சி, கொஞ்ச நேரத்தில திரும்பி வரவனை, இன்னும் தூங்க வைக்குற அளவுக்கு சொக்குப் பொடி போட்டிருக்கானு சொல்லு”

“ம்மா தேவையில்லாம எதாவது பேசாத”

“என்னத்தைடா இப்ப தேவையில்லாம பேசிட்டேன்.  உண்மையத்தானடா சொன்னேன். எல்லாம் சொக்குப்பொடி செய்யிற மாயம். வரவர நீயும் மாறிட்ட”

“சரி நீ வாம்மா” என அறைவாயிலில் நின்றபடி பேசுபவரை அழைத்தவன், “வந்து ஹாலுல செத்த(சிறிது) நேரம் உக்காரு”

காளியம்மாள் உட்கார வரவில்லை என்பது ஜெகனுக்கும் தெரியும்.  அடுத்தடுத்து ஒவ்வொரு இடமாகச் சென்று அவரின் ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர், “எல்லாத்தையும் அவளே பாத்தாளா?” என்றவர் மகன் பதில் கூறுமுன்பே, “கையி செத்த கழுதை.  அது எங்க செஞ்சிருக்கப் போவுது.  எல்லாம் இவந்தான் செஞ்சிருப்பான்.  கேட்டா அவதான்னு சத்தியமே பண்ணுவான்” என அவராகவே பேசிக் கொண்டு நகர்ந்தார்.

திவ்யாவோ வெளிவரும் எண்ணமில்லாமலேயே குளியலறைக்குள் இருந்தாள். தாயின் ஆராய்ச்சியினை கண்டு கொண்டவன், தெரியாமல் அறைக்குள் வந்து, “ஏய் அம்மா வந்திருக்கு திவ்யா.  நீ சீக்கிரமா வா” என மனைவியிடம் வாயிலில் நின்று கிசுகிசுப்பான குரலில் கூற

“மாத்துத் துணி எதுவும் இல்லாம வந்துட்டேங்க.  இப்ப எப்டி நான் வெளியில வருவேன்.  கதவை அடைச்சிட்டுப் போறீங்களா?” இல்லை எனக்கு ட்ரெஸ், டவல் எல்லாம் எடுத்துத் தறீங்களா?” அழுகுரலில் கேட்டாள்.

மீண்டும் இந்த அறைக்குள் தாய் நுழைய மாட்டார் என நிச்சயமில்லாத நிலையில், அவசர அவசரமாய் கையில் கிடைத்ததை எடுத்து, மனைவியின் கைகளில் தந்துவிட்டு, மீண்டும் பழையபடி வெளியில் வந்தான் ஜெகன்.

மகன் அவர்களின் படுக்கையறையில் இருந்து வேகமாய் வருவதைப் பார்த்த காளி, “உனக்கு அவ சோப்பு போடறான்னு நினைச்சிட்டுருந்தா, நீ போயி அவளுக்கு போட்டுட்டு வரபோல” என நக்கல் கலந்த சிரிப்போடு மகனிடம் கேட்க

தலையில் அடித்துக் கொள்ளலாம் போல தோன்றினாலும், பேச்சை வளர்க்காமல் அகன்றான் ஜெகன்.

குளித்துவிட்டு வந்த திவ்யா, “வாங்க அப்பத்தா” என்க

“வந்தவுகளை வாங்கன்னு கேக்க இம்புட்டு நேரமாத்தா?”

“…”

கண்டு கொள்ளாமல், அடுக்களைக்கு சென்றவள், அங்கு கணவன் போட்டு வைத்திருந்த தேநீரை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

“உம்பொண்டாட்டிக்கு முன்னைக் காட்டிலும் ஏத்தம் ரொம்பத்தான் கூடிப் போச்சுடா”

“ம்மா.. தேவையில்லாம எதுக்கு இப்ப… ஆரம்பிக்கற? என்ன வேலையா வந்த?”

“ஏஞ்சொல்ல மாட்ட.  எல்லாம் எங்க தலையெழுத்து. அருவுகமா ஒரு பொண்டாட்டியப் பாத்துட்டேன்னு நீ ஆடுற ஆட்டம் கொஞ்சமா, நஞ்சமா?”

“ம்மா… காலையில இதச் சொல்லத்தான் இங்க கிளம்பி வந்தியா?”

“உண்மையத்தான சொல்றேன்” என்றவர், “ஏன், நான் இங்க வரக் கூடாதாடா?”

“யாரு உன்னை வர வேணானு சொன்னா?  என்ன விசயமா வந்தேன்னு கேட்டா வாயவே திறக்காம, இங்க இருக்கறதை நோண்டுறதிலேயே குறியா இருக்கியே.  என்ன விசயம்?”

“நீதான் அங்க வரமாட்டிங்கற.  அதான் நாங் கிளம்பி வந்தேன்”

“நம்பற மாதிரிச் சொல்லும்மா.  நான், அவ போனதில இருந்து ஆர்.எஸ். மங்கலத்தில தனியாதான் இருந்தேன்.  எத்தனை தடவை அங்க என்னைப் பாக்க வந்த.  உன் பேத்தியப் பாக்க வந்தேன்னு, சேச்சே உன் மருமகளை நோட்டம்விட வந்தேன்னு சொல்லு”

“இல்லாதது எல்லாம் சொல்லாதடா.  பொல்லாப்பு வந்து சேரப்போகுது”

“சரி, அப்பாவை மட்டும் விட்டுட்டு வந்திருக்க.  அடுத்து என்ன செய்யறதா இருக்க?”

“ஏண்டா வந்தவுகளை ரெண்டு நாளு இருந்திட்டுப் போன்னு சொல்லாம, கிளப்புறதிலேயே இருக்கியே.  இதுக்குத்தான் உன்னைப் பெத்து வளத்தனா?”

“இப்டித்தான எங்கப்பாவைக் கூட்டிட்டு தனியா வந்த?  அப்ப எங்க அப்பத்தா உங்கிட்ட வந்து இப்டித்தான் கேட்டுச்சா?”

“அது கிடக்குது.  அந்தப் பொம்பளையப்பத்தி இப்ப எதுக்கு இந்த நேரத்தில பேசிக்கிட்டு?”

ஜெகனுக்கு அனைத்தும் புரிந்தது.  ஆனால் தாயை மற்றவரிடம் விட்டுக்கொடுக்க முடியாத தனது குணமே தன்னை இந்நிலைக்குத் தள்ளியது என்பதுமே நினைவில் வந்திட,

“உனக்கு இங்கல்லாம் சரிப்படாதும்மா.  நாங்க ரெண்டுபேரும் ஆளுக்கொரு திசையில கிளம்பிருவோம்.  அப்பாவும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவாரு.  மாடு, ஆடு, கோழி, வாத்து எல்லாத்தையும் ஒரே ஆளு எப்டிப் பாக்க முடியும்?”

“அதுலாம் பாத்துக்குவாருடா”

பேச்சுகள் தொடர்ந்திட, திவ்யா சத்தமில்லாமல் இட்லி, சட்னி எல்லாம் செய்துவிட்டு, “அப்பத்தா இட்லி அவிச்சிருக்கேன்.  சாப்பிடுங்க வாங்க” என அழைக்க

“…” கண்டுகொள்ளாமல் மகனோடு பேசிக் கொண்டிருந்தார்.

அதற்குமேல் திவ்யாவும் அழைக்கவில்லை.

அன்று மாலை வரை இருந்தவரை, “ம்மா நாளையில இருந்து அதுக்கு காலேஜ், எனக்கும் வேலையிருக்கு.  நீ தனியா இருப்பனா இங்க இரு.  இல்லைனா இப்பவே என்னோட வண்டியில கொண்டு வந்து பஸ்ஸு ஏத்திவிடறேன்” என

“இல்ல நானே ரெண்டு நாளு கழிச்சி, பஸ்ஸுல போயிக்குவேன்” என சட்டமாய் தங்கிவிட்டார் காளி.

மாலைவரை பொறுமை காத்த இருவரும், அதற்குமேல் உண்மை நிலவரம் தெரிய வந்ததும், “அப்ப வீட்ல இரும்மா.  நானும் அவளும் வெளிய போயிட்டு வரோம்” என கிளம்ப

“என்னை மட்டும் தனியா விட்டுட்டு ரெண்டு பேரும் எங்க போறீங்க?”

“ம்மா… வண்டியில ரெண்டு பேருதான போகமுடியும்.  இது கிராமமில்லை.  டிராஃபிக்ல மாட்டுனா அவ்ளோதான்”

“அப்ப ஆட்டோவுல போயிட்டு வருவோம்” என காளியத்தா ஐடியா குடுக்க

“நீங்க உங்கம்மாவுக்கு துணைக்கு வீட்ல இருங்க. நான்போயி எனக்கு வேணுங்கறதை வாங்கிட்டு வரேன்” என கணவனையும் டீலில் விட்டுவிட்டு திவ்யா கிளம்ப, காளியம்மாளுக்குப் புகைந்தது.

அது எப்டி ஒருத்தி தனியாய் வெளியில் செல்லலாம் என.

அவளுக்கு தாய் வீட்டில் கொடுத்த ஸ்கூட்டி பெப்பை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள் திவ்யா.

திவ்யா செல்லும்வரை அமைதியாக இருந்தவன், அவள் சென்றதும், “ம்மா.. உனக்கு என்னதான் வேணும்?”

“நான் எதுவும் உங்கிட்ட கேக்கலையேடா?” அப்பாவிபோல சொன்ன தாயிடம்

“எதுவுமே தெரியாத மாதிரியே உன்னால மட்டுந்தான் பேச முடியும்னு நினைச்சியா”

மகனது பேச்சை சட்டை செய்யாதவர், “…ஏன் அவ என்னையும் கூடக் கூட்டிட்டு ஆட்டோவுல வரமாட்டாளாமா?” என மகனிடமே மருமகளைப்பற்றி துவேசமாய்த் துவங்க

‘இன்னொரு பஞ்சாயத்து வந்தா, திருப்பியும் என்னால அல்லாட முடியாதும்மா.  கையில காலுல விழுந்து லட்டை என்னோட தனியாக் கூட்டிட்டு வந்தா, இங்கேயும் வந்து சின்னஞ்சிறுசுக வெளியில போறேன்னு சொன்னா, புரிஞ்சுக்காம, இப்டிப் புழிஞ்செடுக்கிறியே ஆத்தா. சின்னஞ் சிறுசுக மட்டும் ஜாலியா போயிட்டு வரட்டும்னு உனக்கு அனுப்பத் தோணலைல.  என்ன அம்மா நீ’ எனும் பார்வையை தாயிடம் வீசிவிட்டு, நேரில் கேட்கும் துணிவின்றி அறைக்குள் சென்றுவிட்டான்.

வெளியில் சென்று அவளுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி வந்தவளிடம், ஒவ்வொன்றாக எடுத்து, “இது எதுக்கு?” அது என்ன செய்ய?” என கேட்க

முதலில் பொறுமையாகப் பதில் சொன்னவள், “ஏங்க, இங்க வாங்க” என்ற மனைவியின் குரலுக்கு ஓடி வராத குறையாய் வந்து தன்முன் நின்றவனிடம், “….இது எல்லாம் எதுக்குன்னு அப்பத்தாக்கு சொல்லுங்க” என்றவாறு இரவு சமையலை கவனிக்கச் சென்றுவிட்டாள்.

ஒத்தாசைக்கு என தன்னுடன் ஒட்டிக்கொண்டு வந்து அடுக்களைக்குள் நின்றான்.

ஹாலில் காளியின் முணுமுணுப்பு துவங்கியது.

“பொண்டாட்டியைத் தாங்குறான். அதுதான் ஆத்தாளும், மகளும் ஆடி வராளுக” என்ற பேச்சினைக் கேட்டதும், “நீங்க போங்க.  நான் பாத்துக்கறேன்” என ஜெகனை அங்கிருந்து விரட்டி அனுப்பினாள்.

இருவருக்கிடையே மாட்டிக் கொண்டவன் பாடுதான் திண்டாட்டமாய்ப் போனது.

சமைத்து முடித்து உண்ண அழைக்க, “இப்பவேவா.  இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும்” என்றிருந்தார் காளி.

தாய் மறுத்தபின், ஜெகன் மனைவியோடு சென்று உண்ண உள்ளம் உறுத்த, பசியிருந்தும் தாயிக்காக காத்திருந்தான்.

திவ்யா மட்டும் உண்டவள், மற்ற வேலைகளையும் விரைவாகவே முடித்துவிட்டு, மறுநாள் கல்லூரி இருப்பதால் விரைவில் உறங்கச் செல்வதாக கணவனிடம் மட்டும் கூறிவிட்டு, அறைக்குள் சென்றுவிட்டாள்.

“ரொம்பத்தான்டா அவளுக்கு நீ எடம் குடுக்கற.  இப்டியே விட்டா உனக்குத்தான் கஷ்டம்”

தாய் கூறியதைக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை ஜெகன்.

அதன்பின் தாயிக்கும், தனக்கும் உணவு எடுத்து வந்தவனைக் கண்ட காளி, “இப்டி பண்றதுக்கா அவளை உனக்குக் கட்டி வச்சேன்.  உனக்கு சாப்பாடுகூட போடலைன்னா அந்தச் சிறுக்கிக்கு இங்க என்னடா வேலை.  அவ ஆத்தா வீட்லயே விட்ருந்துருக்கணும்”

“ம்மா.. அவ சாப்பிடக் கூப்டும்போதே சாப்பிட்டிருந்தா அவளும் வேலையை முடிச்சிட்டுப் போயி படுத்திருப்பா.  நீதான வேணாம், அப்புறமா சாப்பிடுறேன்னு சொன்ன? உன்னால நானும் சாப்பிடாம உக்காந்திருக்கேன்”

“அவளுக்கு நல்லா கூசா தூக்கு.  அதுதான் உந்தலையில நல்லா மிளகா அரைக்கிறா”

“எப்டி… நீ அப்பாக்கு அரைச்ச மாதிரியா?” 

“உன்னோட நல்லதுக்குச் சொன்னா, பெத்தவளையே கொழுந்தியா மாதிரி கிண்டல் பண்ற”

“உன்னைக் கிண்டல் பண்ணிட்டாலும்.  போம்மா ஜோக் பண்ணாம”

அதற்குமேலும் திவ்யாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார் காளி.

எப்படியோ அவருடன் சாப்பிட்டு முடித்தான்.  ஆனால் காளி பேச்சை முடித்தபாடில்லை.

சற்றுநேரம் பொறுத்தவன், அதன்பின் அவனும் அறைக்குள் சென்று படுத்துவிட்டான்.

……………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!