emv20b

emv20b

எனை மீட்க வருவாயா! – 20B

 

ஒவ்வொன்றிலும் காளியின் தலையீடு இருந்தது.  திவ்யா மிகவும் பொறுமையாக அவளது வேலைகளை கவனித்துவிட்டு, கல்லூரிக்கு கிளம்பிச் சென்றிருந்தாள்.

கல்லூரிக்குச் சென்றபின், “அவ என்னை ஒரு வாயி சாப்பிடுங்கனு சொல்லாம கிளம்பிப் போறா.  நீயும் எதுவும் சொல்லாம அவளுக்குப் போயி டாட்டா சொல்லிட்டு, பல்லைக் காட்டிட்டு வர.  என்னடா, நீயெல்லாம் ஒரு மனுசனா?” என மகனிடம் துவங்க

“ம்மா உனக்கு விளக்கம் சொல்ல எனக்கு நேரமில்லை.  வேலை கிடக்கு. என்னோட சாப்பிடுன்னு கூப்டேன்.  இன்னும் நேரமாகட்டும்னு நீதான் சொல்லிட்டே.  அதுக்குமேல என்னை என்ன செய்யச் சொல்லுற, எதுனாலும் சாயந்திரம் வந்து பேசிக்கலாம்.” என்றவன் அடுக்களையில் மனைவி சமைத்து வைத்துவிட்டுச் சென்றதை எடுத்துப்போட்டு உண்டவன், வேலைக்கு கிளம்பிச் சென்றிருந்தான்.

மாலையில் வந்தவளிடம், “காலையில எனக்கு சாப்பாடுகூட போட்டுக் குடுக்காம, வீட்டை போட்டது போட்டபடி போட்டுட்டு கிளம்பிப் போனா என்னடீ அர்த்தம்?” என மாமியார் தோரணையோடு கேள்வி எழுப்ப

அறைக்குள் சென்று, உடை மாற்றி வந்தவள், “சாப்பாடு எல்லாத்தையும் டைனிங்ல எடுத்து வச்சிட்டு, கிளம்பும்போது சொல்லிட்டுதான போனேன், அப்பத்தா”

“வர வர உனக்கு ரொம்பத்தான் ஏத்தமாப் போச்சு”

“…”

பதிலேதும் பேசாமல், மாலையில் தேநீரைத் தயாரித்து கொண்டு போய் கையில் குடுக்க, வாங்கி அருந்தியவரின் வாய், சலசலத்துக் கொண்டேயிருந்தது.

அதற்குமேல் அங்கு இருக்காமல், இருந்த வேலைகளைக் கவனித்தவள், அதன்பின் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

திவ்யா வந்த பின்பு முன்னிரவு நேரத்தில்தான் ஜெகன் வீட்டிற்கு வருவான்.

ஜெகன் வந்தபின்பு அவனோடு நேரம் செலவளிக்கவே முடியவில்லை.

அவன் அறைக்குள் நுழைந்தாலும், ‘அது எதற்கு? இது ஏன்?’ என எதையேனும் கேட்டு நச்சரித்த பொழுதுகளில், “போங்க உங்கம்மாகிட்டயே போயி உக்காந்துக்கங்க.  என்னை ஆளை விடுங்க சாமி” என பெரிய கும்பிடு ஒன்றுடன் கணவனை அறையிலிருந்து விரட்டிவிட்டாள் திவ்யா.

பகல் முழுவதும் தொலைக்காட்சி, தூக்கம் என இருக்கும் காளி, இரவு பதினோரு மணிவரை, தம்பதியரை உறங்கவிடாமல் தொணதொணத்தார்.

“ஏங்க.. எனக்கு நாளைக்கு காலேஜ் இருக்கு.  லேட்டா தூங்கினா என்னால எழுந்துக்க முடியாது.  சோ உங்கம்மாகூட  நீங்க பேசிட்டுருங்க. நான் போயி படுக்கறேன்” என கூறிவிட்டு, அறைக்குள் சென்று உறங்கிவிட்டாள்.

இதேநிலை அடுத்தநாளும் தொடர, ஜெகனுக்கு இருதலைக் கொள்ளி போன்ற நிலை.

எல்லாம் சரியாகிவிட்டது எனும் சந்தோசத்தோடு வாழ்வைத் துவங்கியிருந்த இருவருக்கும் இடையே நந்தியாய் வந்திருந்த காளியம்மாளை அனுசரித்தே தம்பதியினர் அமைதி காத்தனர்.

திவ்யாவுமே காளியம்மாளிடம் தேவைக்கு மட்டுமே பேசினாள்.

இரண்டு நாள்கள் கழித்து கிராமத்திற்குச் சென்ற காளியம்மாள், அடுத்த இரண்டு நாள்கள் கிராமத்தில் இருந்துவிட்டு மீண்டும் காரைக்குடிக்கு வந்துவிட்டார் காளி.

அந்த இரு நாள்களிலும், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் வேலையைச் செய்து, ஒருவரை மற்றவர் குளிக்க வைத்து, சாப்பிட வைத்து, கிளம்பி, கல்லூரியில் மனைவியை விட்டுவிட்டு, வேலைக்குச் சென்றான் ஜெகன்.

அத்தனை இனிமை இருவருக்குள்ளும்.

ரசனையாய் பொழுதுகள் சென்றது.

திவ்யாவின் கல்லூரித் தோழிகள், மாலையில் மனைவியை அழைத்துச் செல்ல வந்து காத்து நின்றவனிடம், “மாமு..” என ஒரு கூட்டம் அவனோடு புடைசூழ்ந்து பேசத் துவங்க

ஜெகனுக்கு அப்படிப் பழக்கம் இல்லாதபோதும், சமாளித்தான்.

“எப்ப வந்தீங்க மாமா.  இவ எங்ககிட்ட சொல்லவே இல்லை”

நான் எங்க போனேன்.  இப்ப வர என மனதில் ஓடினாலும், சிரிப்பை மட்டுமே பதிலாக்கினான்.

திவ்யாவின் தோழிகளிடம் விடைபெற்று கிளம்ப, “இனி நீங்க என்னை காலேஜ்கு கொண்டு வந்து விடவும் வேணாம்.  கூட்டிட்டுப் போகவும் வேணாம்” சிடுசிடுப்பாய் வந்தது.

“ஏண்டி லட்டு”

“சொன்னா சரினு கேட்டுக்கங்க.  பதிலெல்லாம் சொல்ல முடியாது சித்தப்ஸ்”

மனைவியின் சித்தப்ஸ்ஸில் அதற்குமேல் வாயைத் திறக்கவே இல்லை ஜெகன்.

திவ்யாவிற்கு அவனை ஆலிங்கனத்திற்கும், அமைதியாய் இருக்கவும், அணைக்கும் இருவழியும் தெரிந்து வைத்திருந்தாள்.

வீட்டிற்கு வந்தவன், உம்மென முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சுற்ற, “அய்யா மயனே, எம்மேல ரொம்பக் கோவமோ?”

“…” திரும்பிப் பார்த்தவன், பேசாமல் நகர

அருகே சென்றவள், “ரொம்பக் கோவமா கருவாயா?” காதில் கிசுகிசுக்க

“கருவாயன்னா சொல்ற? சொன்ன வாய இப்ப என்ன செய்யறேன்னு பாரு” என திவ்யா எதிர்பாரா தருணத்தில் இழுத்தணைத்து, இதழ் பதித்து இனிய தண்டனை தர

“செம்ம… இப்டி ஒரு பணிஷ்மெண்ட்டா” என குங்குமமாய் சிவந்தவள், “…எப்டிங்க… இப்டியெல்லாம் பணிஷ் பண்ண எங்க கத்துட்டீங்க,  உண்மையிலேயே கோவமில்லையா எம்மேல உங்களுக்கு”

“நம்மளோட ஆழ்மன ஆசையை, வெளியே மத்தவங்ககிட்ட சாதாரணமா சொல்ல முடியாததையெல்லாம் ஒருத்தருத்கொருத்தர் வெக்கம், மானம், ரோசம் பாக்காம பகிர்ந்துக்கவும், தீத்துக்கவுந்தான கட்டி வச்சிருக்காங்க.  இன்னொன்னு நாம தனியா இருக்கும்போதுதான அதையும் சொல்லி உன்னோட ஆசையத் தீத்துக்க நினைக்கிற. அதுக்கு நான் கோபப்பட்டா, உன்னோட ஆசைய, எதிர்பார்ப்ப வேற யாருகிட்டப் போயிக் காமிக்க முடியும் நீ?” என மனைவியிடமே கேள்வியை எழுப்ப

திவ்யா கணவனின் கேள்வியில் அவனது ஒரு பக்க தோளில் சென்று சாய்ந்து கொண்டு, அவனை அணைத்தபடியே கிறக்கமாய் அவன் பேசுவதைக் கவனித்தாள்.

“நம்ம நாட்டுலதான் இப்டி.. ஒரு வயசுக்கு மேல கொந்தளிச்சுத் திரியற உணர்வுகளைக் கட்டுப்படுத்தாம, முறையான உறவு ஒன்னை கல்யாணம் மூலமா ஏற்படுத்திக் குடுத்து, அதை முறையா தணிச்சிக்கற வழிமுறையை சொல்லி வச்சிருக்காங்க.  அப்டி ஒரு விசயம் எதுக்கு கொண்டு வந்தாங்கன்னு புரியாதவங்கதான் ஹஸ்பண்ட் அண்ட் வயிஃப்குள்ள நிறைய எதிர்பார்ப்புகள், டிஸ்டன்ஸ்ஸுன்னு லூசுத்தனமா எதாவது பண்ணி, நம்பி வந்த பொண்ணுங்க உணர்வைப் புரிஞ்சிக்காம, தப்பு பண்ண விட்றாங்க.”

கேள்வியாய் தன்னை நோக்கியவளை, “இப்ப ஒரு வயிஃப்கு வேணுங்கற எல்லாம் அவளோட ஹஸ்பெண்ட்தான் பண்ணிக் குடுக்கணும். அப்டி அவன் பண்ணிக் குடுக்காதப்போ, அவளுக்கு வேணுங்கறதை வேறு யார் மூலமாவும் நிறைவேத்திக்ககூடாதுங்கற வைராக்கியம் இருக்கற பொண்ணுங்க மட்டுமே தப்பு பண்ணாம தப்பிச்சுவாங்க.  ஆனா வைராக்கியக் குறைவானவங்க… படுகுழியில விழுந்திருவாங்க.  அப்ப அந்தப் பொண்ணைத் தப்பாப் பேசுவாங்க.”

“…”

“உண்மையிலயே அந்தப் பொண்ணுமேல தப்பு இல்ல.  ஆனா சமுதாயம் அவளைத்தான் அசிங்கமாச் சொல்லும்.  புத்திசாலிங்க யாரும் பொண்ணுங்களைத் தப்பு சொல்ல மாட்டாங்க.  தப்பு அவளைக் கட்டுனவன் மேலதான்னு அந்த விசயத்தைப் பெரிதுபடுத்தாம அமைதியாக் கடந்து போயிருவங்க”

“…”

“இது புரிஞ்சிக்கிட்டவன் வந்தவளைப் பொக்கிசமாப் பாத்துக்குவான்.  அன்பு, அரவணைப்பு, நேசம், தாம்பத்தியம், அதோட காலம் இதையும் வந்தவகிட்ட, அவன் அவளுக்கு வேணுங்கற அளவுக்கு குடுத்திட்டா, அவ கண்டிப்பா அதை ரெட்டிப்பாக்கி, அவனோட எதிர்காலத்தை வண்ணமயமாக்கி வளமான நல்ல குடும்பம், குழந்தைகள்னு அவனுக்குத் தந்திருவான்னு அப்பவே சொல்லி வச்சிருக்காங்க.  அது தெரியாதவன், புரியாதவன்தான், கையில கிடைச்சதை கண்டுக்காம கோட்டை விட்டுட்டு, இழந்தபின்ன பொலம்பிகிட்டு இருப்பானுங்க”

“…”

“எப்டிங்க…” என ஆச்சர்யமாய் தன்னிடம் கேட்டவளின், உச்சியில் முத்தமிட்டவன், அலேக்காய்த் தூக்கி தோளில் துண்டைப்போல மனைவியைப் போட்டுக் கொண்டு தங்களின் அறைக்குள் நுழைய

கணவனின் திடீர் செயலில் அலறியவளை, அரவணைத்தபடியே படுக்கையில் கிடத்தினான்.

கணவனின் செயலைக் கண்டு பதறியவள், “கருவாப்பையா.. இப்ப சாயந்திர நேரம்.  யாராவது திடீர்னு வந்துட்டா தப்பா போயிரும்.  சோ நைட்டு வரை பொறுமையா இருப்பீங்களாம்” என கட்டிலில் இருந்து துள்ளியெழுந்து ஓடியவளைத் துரத்திப் பிடித்தான்.

“எந்த நேரமும் அதே நினைப்பாவேவா இருப்பேன்னு நினைக்கிற.  இதெல்லாம் போகப்போக குறைஞ்சிரும்டீ. அதுக்காக உம்மேல ஆசையில்லைனு அர்த்தம் இல்லை.  அது ஒரு நிலையிலே நமக்குள்ள வரக்கூடிய பக்குவம். ஆனாலும் உன்னைத் தேடுவேன்.  எதுக்குன்னா… கொஞ்ச நேரம் உம்மடியில தலை வச்சிப் படுத்துக்க. ப்ளீஸ்டி” என்றவனின் ஆசைக்கு இணங்கியவள், சற்றுநேரம் தனது மடியை அவனது தலை தாங்கும் மெத்தையாக்கினாள்.

கணவனை ஆசையோடு அணைத்துக் கொண்டவளுக்கு, கணவனை எண்ணிப் பெருமிதம் எழ, இவனை தனக்கு கணவனாக்கித் தந்திட்ட தனது தாயிக்கு நன்றி சொல்லத் தோன்றியது.

இரவுகள் இனிமையாய், புதுபுது கற்பித்தலோடு சென்றது.

அடுத்த இரண்டாவது நாளே மீண்டும் அங்கு வந்திருந்தார் காளி.

காளி தம்பதியினரைக் கதறவிட எண்ணி வர, இருவரும் அவரவர் வேலை, கல்வி என கண்டு கொள்ளாதிருக்கவே, புலம்பித் தீர்த்தார்.  ஆனால் வருகை தொடர்ந்ததே அன்றி குறையவில்லை.

இப்படியே இருபது நாள்கள் கடந்தது.  காளி வந்து செல்வது ஈஸ்வரிக்கும் தெரிந்திட, “என்ன பெரிய மனுசி இது.  தனிக் குடித்தனம் வச்சும் நடுவீட்டுல வந்து சகடையா குத்த வச்சிட்டு” என அவர் பங்கிற்கு புலம்பத் தொடங்கியிருந்தார் மகளை எண்ணி.

இந்த முறை அதிக நாள்கள் வந்து தங்கியிருந்த காளி, கிளம்பும் உத்தேசமே இல்லாமல் இருக்க, அந்த வார இறுதிவரை அமைதியாக இருந்தவள், வெள்ளியன்று மாலை கல்லூரி விட்டதும் கணவனுக்கு அழைத்து, “எங்கம்மா வீட்டுக்கு ஈவினிங் போறேன்” என அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

அடுத்து ஜெகன் அழைக்க, அது பிஸியாகவே இருந்தது.

…………………….

மீண்டும் பழையபடி பெரியவர்களைக் கொண்டுப் பேச ஈஸ்வரி எண்ணியிருக்க, ஞாயிறு அன்று காலையில் வீட்டிற்கு வந்த ஜெகனிடம், “என்னப்பா உங்க அம்மா இப்டியே பண்ணா நல்லாவா இருக்கு.  அதனால திவ்யா இனி ஹாஸ்டல்லயே இருக்கட்டும்” என

“…” பதில் பேசாது திருதிருத்தான் ஜெகன்.

அதே நேரம் தாய் பேசியதை அறியாத திவ்யா, ஜெகனைக் கண்டதும் என்ன செய்தாள்….

 

அடுத்த அத்தியாயத்தில்………………..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!