emv22b

emv22b

எனை மீட்க வருவாயா! – 22B

 

“அதுவா..!”  எனத் துவங்கியவன், தான் தாயிடம் கூறிய நிலம் சம்பந்தப்பட் அனைத்தும் பொய் என்பதைக் கூறியவன், “அதுக்கிட்ட என்ன சொன்னா இடத்தைக் காலி பண்ணும்னு யோசிச்சு இப்டிச் சொன்னேன்.  ஒடனே கிளம்பியிருச்சா!” என சிரித்தவனிடம்

“டேய்… அது வயசானது.  இப்டி எதையாவது சொல்லி அதுக்கு உடம்புக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா என்னடா செஞ்சிருப்ப!” என கண்டிக்கும் விதமாய் கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாதுண்ணே, அம்மானாலும் எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு.  நீ இப்டியே அது போக்குக்கு விட்டேன்னா, உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணாங்கிற நிலைமைக்கு வந்திருவ.  இனியாது புத்திசாலித்தனமா நடந்துக்கோண்ணே. உனக்காகத்தான் ஐயா சின்னதா ஒரு ஐடியா பண்ணி எடுத்து விட்டேன்.  இனி அந்த வீட்டை விட்டுட்டு வரும்னு நினைக்கிறே!” தமையனிடம் தனது செயலைப் பூரிப்பாய் பகிர்ந்து கொண்டான் அருண்.

“டேய்… இது ரொம்ப ஓவர்டா.. இப்டியெல்லாம் பண்ணா அந்த டென்சன்ல அதுக்கு எதாவது ஆகியிருந்தா!” பதறிக் கேட்டான்.

“அது பண்ற டென்சன்ல நமக்குத்தான் எதாவது ஆகும்.  அதுக்கு ஒன்னுமே செய்யாது.  அதனால… நல்லா சந்தோசமா இருங்க..!”

“அதுக்காக இப்டியெல்லாம் பொய் சொல்லுவாங்களாடா?”

“சொல்லலாம் ஒன்னும் தப்பில்ல!  ஒழுங்கா சந்தோசமா இருக்கற வழியப் பாருப்பா!  அதவிட்டுட்டு நியாயம், நேர்மைனு எதாவது வந்து சொல்லாம!”

“ரொம்பப் பேசுறடா!”

“….அப்புறம் இன்னொரு விசயம்.  அம்மா எனக்கு ஜாதகம் பாக்கணும்னு சொல்லுச்சு.  நீ அதுக்கிட்ட… எனக்கு நானே பொண்ணு பாத்துக்குவேன்னு மட்டும் சொல்லிரு!” என வைத்துவிட்டான்.

“டேய்… டேய்..” என தம்பியை ஜெகன் அழைக்க, அதை சட்டை செய்யாமல் வைத்துவிட்டான்.

பத்து நாளாகியும் காளியம்மாள் இந்தப் பக்கமே வரவில்லை.  ஜெகன் அவ்வப்போது தந்தைக்கு அழைத்து பேசுவதோடு, ஒன்றிரண்டு வார்த்தைகள் தாயைப்பற்றி விசாரிப்பான்.

“அவளுக்கென்ன கள்ளுக்குண்டு கணக்கா, வீட்டைக் காவக் காத்துட்டு, பொங்கவும், திங்கவுமாத் திரியறா!” என வைத்திருந்தார்.

இடையே காளி காரைக்குடிக்கு வந்தாலும், பகல் பொழுதில் புலம்பியபடி சற்று நேரம் இருந்துவிட்டு, அன்று மாலையிலேயே ஊருக்கு கிளம்புவதை வாடிக்கையாக்கியிருந்தார்.

“இருந்துட்டுப் போம்மா” என ஜெகன் கூறினாலும்

“வீட்டைப் போட்டுட்டு எங்கேயும் என்னால நிம்மதியா இருக்க முடியாது செகனு” என கிளம்புவதிலேயே கூறியாய் இருந்தார் காளி.

காளியும், சும்மா இருக்காமல் அந்த ஊர்த் தலைவரைச் சந்தித்துக் கேட்க, அவரோ, “ஆமா… உடைமைக்காரவங்க வந்து கேட்டா, குடுக்காம மாட்டேன்னா சொல்லுவீக.  போயி, உங்க பூர்வீக எடத்துல வீடு கட்டிகிட்டுப் போயிட்டா, யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லைல” என பொதுவாய் நியாயமான பதிலைக் கூற… அருண் கூறியது உண்மையென்றே, மனதில் பீதியோடு வலம் வந்தார் காளி.

திவ்யாவிற்கு அருண் கூறிய விசயம் தெரியவர, “நீங்க எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டீங்கன்னு, அவருக்குத் தெரிஞ்சிருக்கு.  அதான் உங்களுக்காக அப்பத்தாவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுத்துருக்காங்கபோல” என ஒரு மார்க்கமாய் சிரித்தபடியே விளம்பியவள், கணவனின் முறைப்பைக் கவனிக்காமல் அகன்றாள்.

மாதங்கள் கடக்கவே, “ஒரு புழு, பூச்சி உண்டாகாமா, பொஸ்தகமும் கையுமா இருந்தா ஆச்சா” என திவ்யாவிடம் தனது எதிர்பார்ப்பை காளி கேட்க

திவ்யாவோ, “பேரனோ, பேத்தியோ பிறந்தா, நீங்கதான் இப்ப ஃபுல்லா பாத்துக்கணும்.  நான் காலேஜ் போயிருவேன்.  அவரு வேலைக்குப் போயிருவாரு.  நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க அப்பத்தா, அடுத்த பத்தாவது மாசமே பேரனையோ, பேத்தியையோ பெத்து உங்க கையில தரேன்!” என்று கூற, பதிலே பேசாமல் வாயடைத்துப் போனார் காளி.

இதுபோன்ற விசயங்களில் தன்னை சிக்க வைத்துக் கொண்டு, சிக்கலோடு வாழ பிரியப்படாதவர் காளி.  ஆகையால், ‘ஆத்தாடி.. ஆத்தா நம்ம தலையில புள்ளையக் கட்டற மாதிரியில்ல இருந்திருக்கா.. நமக்கென்ன.. அவ எப்பப் பெக்கணுமோ பெத்துக்கட்டும்’ என அதன்பின் அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.

வேலை இல்லாத நாள்களில், வார இறுதி நாளில் ஜெகன் மட்டும் கிராமத்திற்கு சென்று வருவதை வாடிக்கையாக்கியிருந்தான்.

திவ்யாவும் அதைப்பற்றி எதுவும் கேட்டாளில்லை.

முன்பைவிட காளியின் வரவு. காரைக்குடியில் இவர்களின் வீட்டில் கணிசமான அளவில் குறைந்திருந்தது.

………………………………………………..

இறுதியாண்டு பயின்று கொண்டிருந்தாள் திவ்யா.

ஜெகன், திவ்யா இருவரது பொழுதுகள் மிகவும் திவ்வியமாய்ச் சென்றது.

சனிக்கிழமை மாலையிலிருந்தே அவர்களின் பொழுது இன்னும் களை கட்டத் துவங்கும்.

அன்று சனிக்கிழமை…

இரவு உணவிற்கான வேலைகளை அனைத்தையும் விரைவாக முடித்து வைத்தவள், மருதாணியை அரைத்து, இரண்டு கை விரல்கள் மற்றும் கால் விரல்களில் வைத்துக் கொண்டு, ஜெகனை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள்.

“ஏங்க இங்க மூக்குல முணுமுணுங்குது!”

“என்னங்க, தண்ணி தவிக்குது!”

“ஏங்க இங்க கொசு கடிக்குது!”

“பசிக்கற மாதிரி இருக்கே.  ஊட்டி விடுறீங்களா?”

மனைவி கேட்ட அனைத்தையும் அகமகிழ்வோடு ஏற்று, திவ்யாதாசனாய் சிறு குறையின்றி அவளின் ஒவ்வொரு வேண்டுதல்களையும் முகச் சுழிப்பின்றி நிறைவேற்றிக் கொண்டிருந்தான் ஜெகன்.

“எப்ப ரெண்டு மணி நேரம் ஆகும்!”

“ஏங்க, தலைமுடி பறந்து பறந்து வந்து முகத்துல விழுகுது” இப்படி மனைவி சிணுங்கலோடு கூறிய ஒவ்வொன்றையும், கீதமாய்க் கேட்டு, அவளுக்கு வேண்டியதைச் செய்து, அவள் மகிழ்வதை ரசித்திருந்தான்.

“ஏங்க, இந்த எடத்துல வச்ச மருதாணியை தெரியாம இழுவீட்டேனே” என சோகமாய் கையை நீட்டிக் கணவனிடம் சரி செய்திடக் கேட்டவளிடம்

“டிவியப் பாத்துட்டே கவனமில்லாம இழுவீட்டு, இப்ப என்னை என்ன செய்யச் சொல்ற?” எனக் கேட்டுச் சிரித்தான்.

“அதைச் சரிபண்ணி ஒதுக்கி விடுங்கங்க” என்றபோது, முகம் மாறாது அவள் கூறியதைச் செய்தான்.

“ஏங்க..!” என மெதுவாய் அழைத்தாள்.

“என்னங்க!” என அவன் கிண்டலாய் கேட்க

“நான் ஒன்னு கேக்கவா?”

“இப்டி, இன்னும் எத்தனை ஒன்னத்தான்டீ கேப்ப…!” சிரிப்போடு ஜெகன் கேட்க

முறைத்தவளிடம், “சரி.. சரி முறைக்காமக் கேளு!”

“நான் இப்டியெல்லாம் செய்யறதைப் பாத்து, உங்களுக்கு எம்மேல கோவம் வரலையாங்க!”

இல்லையெனத் தலையாட்டினான்.

“உண்மையாவா?”

ஆம் என தலையசைத்தவனிடம், “நீங்கதான் என்னை இப்டிக் கவனிச்சிக்குறீங்க.  நான் உங்களை கவனிக்கலைன்னு எதாவது வருத்தம் இருக்கா?”

“…” அவன் கேட்டும், கேளாததுபோல தொலைக்காட்சியில் பார்வையைப் பதிக்க

“உங்களைத்தாங்க” எனக் கத்தினாள்.

மனைவியின் கத்தலில் திரும்பியவன், “என்ன… என்னடீ கேட்ட!” என்றவனிடம் மீண்டும் தான் முன்பு கேட்டதைக் கூற

“கண்டிப்பாச் சொல்லணுமா?”

“ம்ஹ்ம்” தலையை அசைத்து ஆமோதித்தாள்.

“முன்ன இருந்தது.  இப்ப இல்ல!”

“எப்ப இருந்தது?” தெரிந்து கொள்ளும் ஆவலில், ஆசையோடு கேட்டாள்.

“…” எதையும் கூறாமல் மனைவியின் முகம் பார்த்து, ரம்மியமாய்ச் சிரித்தான்.

கணவனின் சிரிப்பில் தொலைந்தவள், விடாது “சொல்லுங்கங்க…” மோகனமாய் புன்னகைத்தபடியே கேட்டாள்.

மனைவியின் காதுபக்கம் ரகசியம் கூறுவதுபோல அவன் நெருங்கி வர, அவனது செயலில் அவளுக்கு உடலெங்கும் மயிர்க் கூச்செரிய, “புல்லரிக்குதுங்க!” என சிலிரித்தாள்.

“அப்ப வேணாம் விடு!” என நகர

“இல்ல… கண்டிப்பா சொல்லணும்” என முகத்தைத் தூக்கி வைத்தவளின், தாடை பிடித்துச் செல்லங் கொஞ்சியவன், மீண்டும் காதருகே சென்று, “அது…!”

அதன்பின் எதுவும் கூறாமல் இருக்க, அவனது பக்கம் திரும்பி முகம் பார்த்தவள், “அது…!” என நீட்டி முழங்க

மீண்டும் காதருகே சென்றவன், “…நீ எங்கூட…!” என இழுக்க

“நான் ஒங்க கூட!” என்றவளிடம், எதுவும் கூறாமல் சற்று நேரம் தொலைக்காட்சியையே பார்த்திருந்தான்.

“சொல்லுங்கங்க!” என அவள் கெஞ்ச

அவனது மையல் சிரிப்பு தொடர்ந்தது. பார்வை தொலைக்காட்சியில் நிலைத்தது.

“ப்ளீஸ் கேப்பி!”

“நைட்டு சொல்றேன்டீ!”

“இல்ல.. இப்பவே சொல்லுங்க!” என அடமாய் அவள் நிலையில் இருக்க, அவளின் பொறுமையை அதற்குமேல் சோதித்தால் அவ்வளவுதான் என்பதை உணர்ந்தவன், அவளை நெருங்கி, முன்பைக் காட்டிலும் கிசுகிசுப்பான குரலில் “…அப்பா, அம்மா விளையாட்டு விளையாட ஆரம்பிக்கும் முன்னே இருந்தது!” என அவனது மனதைப் பட்டெனத் திறக்க, கணவனின் பதிலில் மருதாணி வைத்த இடத்தோடு, உடம்பு முழுவதும் சேர்ந்து சிவந்து போயிருந்தது. 

கணவனது பேச்சைக் கேட்டு, “ச்சீய்ப் போங்க…! அது விளையாட்டாக்கும் உங்களுக்கு!” என்றபடி நாணமேந்திய வதனத்தோடு கணவனைப் பார்க்க இயலாமல் பார்வையை வேறு திசையில் திருப்பி தன்னை ஆசுவாசப்படுத்த முனைந்தாள் திவ்யா.

சற்று நேரம் கழித்து, “நீங்க ரொம்ப மோசம்!” என அவள் துவங்க

“நான் இந்த விசயத்துல மோசமா இருந்தாதான், உனக்கு நல்லது!”

“அய்யே! ஏனாம்!!” என ஒழுங்கு காட்டியபடியே கேட்டாள்.

அவளின் காதிற்குள் அவன் கூற வந்ததைக் கூற, (நீங்களே அவன் என்ன கூறியிருப்பான் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்) காது மடல் எல்லாம் சிவந்துபோய் சிலிர்க்க, அந்த உணர்வினைத் தாங்க இயலாமல் தவித்தவள், “உங்களை…!” என பற்களைக் கடித்தபடியே கையில் மருதாணியோடு அவனை அடிக்க கையை ஓங்க, அவளிடமிருந்து விலகி எழுந்து அவன் ஓட, எழ முடியாமல் தன்னிடமிருந்து விலகிச் சென்றவனையே நாணத்தோடு இதழில் தோன்றிய புன்முறுவலோடு மோகமாய்ப் பார்த்திருந்தாள்.

திவ்யாவின் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம், அத்தோடு மனைவியின் நாணமும் சேர்ந்து அவனை அப்போதே பள்ளியறைக்குள் செல்ல உந்தியது.

மனைவியின் கையில் மருதாணி இன்னும் காயாமல் இருக்க, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளிடமிருந்து விலகிச் சென்று. வேறு வேலைகளில் கவனம் செலுத்தினான்.

இரண்டு மணி நேரம் கழித்து, கால், கைகளை அலம்பி வந்தவளுக்கு, தேங்காய் எண்ணைய்யை மருதாணி வைத்த இடத்தில் தேய்த்து விட்டான். 

“நல்லாச் செவந்திருக்கா” என ஐம்பது முறையேனும் கேட்டிருப்பாள்.

“இதுக்குமேல எப்டிடீ செவக்கும்!”

“அப்ப உங்களுக்கு எம்மேல இருக்கற ஆசை இவ்ளோதானா!” என பாவம்போலக் கேட்டவளிடம்

“அது சும்மாடீ!”

“இல்லை… எல்லாரும் இது உண்மைதான்னு சொன்னாங்க!”

“அது பித்தம் இருக்கறவங்களுக்கு, இப்ப நல்லா டார்க்கா சிவந்து, அப்புறம் கருப்பா போயிரும்.  உனக்கு பித்தம் இல்லாததால, இப்டி லைட்டா இருக்கு.  நாளைக்கு காலையில எழுந்து பாத்தா இன்னும் நல்லா சிவந்து தெரியும்.  வேணா நாளைக்கு காலையில எந்திரிச்சதும் பாரேன்!” என மனைவியைச் சமாதானம் செய்தான்.

ஹாலில் அமர்ந்திருந்தவளிடம், “நேரமாகுது திவ்யா.  போ… போயித் தூங்கு!”

“நீங்க என்ன பண்ணப் போறீங்க?”

“கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு வரேனே”

“அப்ப நானும் இங்கேயே அதுவரை தூங்கறேன்” என சோபாவிலேயே உறங்க எண்ணிப் படுத்தாள்.

தான் செல்லாமல், அவள் சென்று தூங்கமாட்டாள் என்றதும் தொலைக்காட்சியை எழுந்து அணைத்தவன், கதவு, சாளரங்களைச் சரிபார்க்க எண்ணி நடக்க, “என்னை உப்பு மூட்டைத் தூக்குங்க!” என சோபாவில் எழுந்து நின்றவளைக் கண்டவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“கதவெல்லாம் அடைச்சிட்டு வந்து தூக்கறேன்டீ!”

“இல்ல.. இப்பவே தூக்கிட்டுப் போங்க!”

‘சரியான இம்சைடீ’ மனதிற்குள் கூறிக் கொண்டவன், தன்னிடம் மட்டும் குழந்தையாகிப் போகும் மனைவியை, உப்பு மூட்டை தூக்கிக் கொண்டே, அனைத்து சாளரங்கள், கதவுகள் அடைக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு அவர்களின் அறைக்குள் மனைவியோடு நுழைந்தான்.

தன்னவளின் அருகாமை, பேச்சு, இதமான மல்லிகையின் மணம், அத்தோடு அவள் தன் முதுகில் ஒட்டி சவாரி செய்திட… அனைத்தும் சேர்ந்து அவனை ஒரு வழியாக்கியிருக்க, காமனிடமிருந்து மீளும் வழி அன்று தனக்கில்லை என்பதை உணர்ந்தவன், தாபத்தோடும், மோகத்தோடும் படுக்கையை நெருங்கினான்.

இந்திர சபையின் அழகிகள் அனைவரும் தோற்கும் வண்ணம் எழிலாய் காட்சியளித்தவளை, படுக்கையில் விட்டவன், தன் பைங்கிளியுடன் இணைந்து இரவைப் பகலாக்கினான்.

கூடலின் முறைகள் தம்பதியரிடையே கூடிப்போவதால், அவர்களின் குறைகள் ஒருவருக்கொருவர் பெரிதாய்த் தோன்றுவதில்லை. திருமண வாழ்வின் முதல் வெற்றி அங்கு துவங்குகிறது.

சறுக்கலே அவர்களுக்கிடையே வராமல் போகாது.  ஆனால் அதிலிருந்து தன்னைச் சமாளித்துக் கொள்ளும் வல்லமையை, இதன் காரணமாய் அவர்கள் இலகுவாய்ப் பெற்றிருப்பார்கள்.

……………………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!