En Jeevan 10

10
காலம் அதன் கடமையை அதன் போக்கில் செய்ய, நாட்கள் நகர்ந்தது. அலர்மேல்மங்கை இறந்து பத்து நாட்கள் கழிந்து விட்டன. மூன்றாம் நாள் காரியம் முடியவுமே உறவினர்கள் அனைவரும் சென்று விட, அர்ஜுனிடம் பேச வந்திருந்தார் மணிவாசகம்.

“மாப்ள… என்னப்பா முடிவு பண்ணியிருக்க? வக்கீல்கிட்ட பேசிப் பார்த்தேன். முறையா விவாகரத்து பதிவு பண்ணி கோர்ட்ல ஆர்டர் வாங்கனுமாம். அப்பதான் உனக்கும் ஸ்வேதாவுக்கும் கல்யாணம் பண்ணிவைக்க முடியுமாம்.”

“…”

“அதுக்கு எப்படியும் ஒரு வருஷமாவது ஆகும். அதுவரை அந்தப் பொண்ணை எங்க தங்க வைக்கிறது?”

“…”

“என்னப்பா ஒன்னுமே பேசாம இருந்தா என்ன செய்யறது? என்ன செய்யலாம்னு சொல்லுப்பா?”

“என்னை என்ன மாமா சொல்லச் சொல்றீங்க. இது எல்லாமே உங்க ஐடியாதான. இப்ப வந்து என்கிட்ட கேட்கறீங்க. என்ன பண்ணனும் நீங்களே யோசிச்சு சொல்லுங்க.”
இடையில் குறுக்கிட்ட ஸ்வேதா,

“இதுல யோசிக்க என்ன இருக்கு? அந்த பொண்ணை வீட்டைவிட்டு உடனே வெளிய போகச் சொல்லுங்க. அவளாலதான் எல்லாப் பிரச்சனையும்.” வெறுப்போடு வெளி வந்தன அவளது வார்த்தைகள்.

கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவன்,“ஷட்டப் ஸ்வேதா. அந்தப் பொண்ணால என்ன பிரச்சனை? எல்லா பிரச்சனையும் இழுத்து விட்டது நீங்க… நீ… இப்ப அந்தப் பொண்ணை வெளிய அனுப்புன்னா எப்படி அனுப்ப முடியும்?

அந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுக்காம இந்த வீட்டை விட்டு அனுப்ப முடியாது. அதுக்கு முதல்ல விவாகரத்து வாங்கனும். ஒரு வருஷம் அந்தப் பொண்ணு இங்கதான் இருந்தாகனும் புரியுதா.”

“…”

“அந்தப் பொண்ணுக்கு அது ஆசைப் படற மாதிரி ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கனும் இல்லைன்னா பாட்டியோட ஆத்மாகூட என்னை மன்னிக்காது.
தேவையில்லாம என் சுயநலத்துக்காக அந்த பொண்ணோட சம்மதம் கூட கேட்காம கல்யாணத்துக்கு கட்டாயப் படுத்திட்டேனோன்னு, நான் ஏற்கனவே குற்றவுணர்ச்சியில தவிச்சிகிட்டு இருக்கேன்.

அவளோட வாழ்க்கையை நல்லபடியா மாத்தறது என்னோட பொறுப்பு. இதுல எந்த காம்பரமைசும் நான் பண்ணிக்க மாட்டேன்.

அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையறவரை அவ இந்த வீட்லதான் இருப்பா.”

“…”

“இந்தப் பிரச்சனையை இவ்வளவு சிக்கலா மாத்துனது நீங்க. அதனால இதுக்கு ஒரு நல்ல தீர்வு வர்ற வரை காத்திருக்கறத தவிர்த்து உங்களுக்கு வேற வழியே இல்லை.”
திட்டவட்டமாக அர்ஜுன் கூறியதை அடுத்து சுபத்ராவிடம் போய் எகிறியிருந்தாள் ஸ்வேதா.

“நீ இந்த வீட்டுக்கு வந்ததாலதான் இவ்வளவு பிரச்சனையும். நீ விவாகரத்துப் பத்திரத்துல கையெழுத்து போட்டுக் குடுத்துட்டு. வீட்டைவிட்டு வெளியே போ” என்று ஏகத்துக்கும் எகிற… அவளை வெகுவாக அடக்கியிருந்தார் சரஸ்வதி.

“அவளால என்ன பிரச்சனை? அர்ஜுனுக்கு சமமா இந்த சொத்துக்களுக்கு உரிமைப்பட்டவ அவ. நியாயமா அவளுக்குச் சேர வேண்டிய சொத்தைப் பிரிச்சுக் கொடுக்காம இருக்க நீங்க எல்லாரும் சேர்ந்து போட்ட நாடகம்தான இது.

தப்பெல்லாம் உங்க பேர்ல வச்சிகிட்டு இந்தப் பொண்ணை குத்தம் சொல்லுவியா நீ. அர்ஜுன் சொன்னதை கேட்டல்ல. சுபத்ராவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்காம இந்த வீட்ட விட்டு அனுப்ப முடியாது.”

அரண் போல சுபத்ராவை சரஸ்வதி காத்து இருந்ததால், எதுவுமே பதில் கூற முடியாமல் ஏகத்துக்கும் அவளை முறைத்து விட்டு சென்றிருந்தாள் ஸ்வேதா.

ஸ்வேதாவுக்காக அர்ஜுனுடன் பேச வந்திருந்த சுபத்ராவையும் சமாதானப்படுத்தியிருந்தான் அர்ஜுன்.

“என்னால எந்த பிரச்சினையும் வராது. நீங்க எங்க கையெழுத்துப் போடச் சொல்றீங்களோ அங்க கையெழுத்துப் போடறேன். எனக்கு ஏதாவது ஒரு வேலை மட்டும் வாங்கிக் குடுத்து எதாவது ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்க.
என்னைப் பத்தி எதுவுமே யோசிக்காதீங்க. ஸ்வேதா பாவம் அவங்களை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்ற சுபத்ராவை ஆழ்ந்து பார்த்தவன்,

“எனக்கு கல்யாணம் ஆனது இப்ப சொந்தத்துல தொழில் வட்டாரத்துல ஓரளவுக்கு எல்லாருக்குமே தெரியும். நான் இப்போதைக்கு அடுத்த கல்யாணம் பண்ணா என்னைத் தூக்கி உள்ள வச்சிடுவாங்க புரியுதா.
அதனால அதைப் பத்தி இனிமே பேசாத. ஒரு வருஷம் போகட்டும். உனக்கு எதாவது நல்லது நடந்தப்புறம்தான் நான் என்னைப் பத்தி யோசிப்பேன்.”

“…”

“இனி இந்த வீட்டை விட்டு போறதைப் பத்தியும் என்கிட்ட பேசாத. எங்க அப்பாவும் அம்மாவும் இருந்தா உன்னை விட்டுடுவாங்களா. தெரிஞ்சோ தெரியாமலோ பாட்டி முன்னாடி ஒரு சத்தியம் செய்திருக்கேன். அதை முழுசா காப்பாத்த முடியலைன்னாலும், அவங்க மனம் குளிர்ற மாதிரியாவது அதுக்கு பிராயசித்தம் செய்யனும்.”
இடையில் பேச வந்தவளை கையமர்த்தியவன்,

“நான் சொல்ற வரை இந்த வீட்டை விட்டு போகனும்னு உனக்கு நினைப்பு வரவேக்கூடாது. இப்ப உன்னோட வேலை இந்த ஒரு வருஷத்துல நீ என்ன படிக்க விரும்புறியோ அதை யோசிச்சு சொல்லு. நான் அந்த கோர்ஸ்ல உன்னை ஜாயின் பண்ணி விடறேன்.”

திட்டவட்டமாகப் பேசியவனை எதிர்த்து ஒன்றுமே பேச முடியாமல் திரும்பி வந்துவிட்டாள்.

பார்க்கும் போதெல்லாம் தேளாய் கொட்டும் ஸ்வேதாவிடம் இருந்து தப்பிக்க, தேவையில்லாமல் ஹாலுக்கு செல்வதைக்கூட தவிர்த்து அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள்.

காலையில் வழக்கம் போல மில்லுக்குச் செல்ல ரெடியாகி உணவு மேசைக்கு வந்தவன், சரஸ்வதியிடம் சுபத்ராவை அழைக்கச் சொன்னான்.

அறையை விட்டு வந்து என்னவென்று கேட்டவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“ஏன் ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடக்குற வெளியே வந்து சகஜமா எல்லாரோடையும் பேசிப் பழகி இருக்கலாம் இல்ல. சரி எந்த கோர்ஸ் சேரப் போறதா முடிவு பண்ணியிருக்க?
எம் காம் பண்றியா? இல்லன்னை டிப்ளமோ கோர்ஸ் மாதிரி எதாவது பண்றியா?”

“இ… இல்ல நான் படிக்கலாம் போகல. எனக்கு எதாவது வேலை வாங்கிக் குடுங்க. நான் சும்மா வீட்ல இருக்கறதுக்கு வேலைக்காவது போவேன்.”

“உனக்கு இது படிக்கிற வயசுதான சுபத்ரா. இப்ப படிச்சு உன் தகுதியை வளர்த்துக்கோ. அப்புறமா உனக்கு நல்ல வேலையா நான் வாங்கித்தரேன்.”

“இல்ல எனக்கு படிக்கல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல. வேலையே வாங்கிக் குடுங்க.”
பிடிவாதம் பிடிக்கவும் சற்று நேரம் யோசித்தவன், “சரி… நம்ம மில்லுக்கு வந்து கணக்குலாம் பாரு. எனக்கும் நம்பிக்கையான ஆள் தேவைப்படுது.

தினம் மில்லுலயும் குடோன்லயும் கணக்கு பார்க்கனும். உனக்கு ரொம்ப கஷ்டமா எல்லாம் இருக்காது. நாளையில இருந்து மில்லுக்கு வா.

ஆனாஅதை முடிச்சிட்டு சாயந்திரம் கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்த்து விடுவேன். அதையும் கத்துக்கனும் நீ.”

அப்பொழுது சரஸ்வதி, “கண்ணா இன்னைக்கு நாள் நல்லாயிருக்குப்பா. இன்னைக்கே கூட்டிட்டுப்போ.” என்க,

“சரி பெரியம்மா…” என்றவன் உணவை முடித்துவிட்டு அவளையும் தயாராகச் சொன்னான். கிளம்பி இருவரும் வெளியேறப் போகும் நேரம் சரியாக ஸ்வேதா தூங்கி எழுந்து வந்தாள்.
இருவரையும் பார்த்தவள் சற்று முறைப்புடனே, “எங்கப் போறீங்க? இரண்டு பேரும்.”

“முதல் நாள் மில்லுக்கு வர்றா. அபசகுனமா எங்க போறீங்கன்னு கேட்கற. போ… போய் ஃபிரெஷ் பண்ணிட்டு சாப்பிடு. சாயந்திரம் வந்துடுவோம்.”
அவன் பதிலில் கடுப்பானவள் குறுக்கே வந்து நின்று, “மாமா… ஒழுங்கா சொல்லிட்டுப் போங்க. மில்லுக்கு எதுக்கு இவ? நீங்க மட்டும்தான வழக்கமா போவீங்க.”

“டைம் ஆகிடுச்சி ஸ்வேதா. நந்தி மாதிரி குறுக்க நிக்காத. அவ மில்லுலயும் குடோன்லயும் அக்கவுண்ட்ஸ் பார்க்க வர்றா. வழியை விடு.”

“இருங்க மாமா. என்ன திடீர்னு இவளைக் கூட்டிட்டு போறீங்க? இவ்ளோ நாள் யார் பார்த்தா?”

“செல்வம்னு ஒருத்தர்தான் பார்த்துகிட்டு இருக்காரு. இன்னும் மூனு மாசத்துல ரிட்டையர்ட் ஆகப்போறாரு. அதான் இவளைக் கூட்டிட்டு போய் அவர்கிட்ட விட்டா ஒரு மாசத்துலயே எல்லா ட்ரெயினிங்கும் தந்துடுவாரு. எனக்கும் நம்பிக்கையான ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும். புதுசா வர்றவங்களை எந்த அளவு நம்ப முடியும்?”

“…”

“நாங்க போயிட்டு சாயந்திரம் வந்துடுவோம். வா சுபத்ரா…” என்றபடி நகர்ந்தவனை மீண்டும் வழியை மறித்தவள்,

“மாமா… நானும் வரேன் உங்க மில்லுக்கு. எனக்கும் எதாவது வேலை போட்டுக் குடுங்க.”

“காமெடி பண்ணாத ஸ்வேதா. ஃபாஷன் டிசைனிங் படிச்ச உனக்கு பருப்பு மில்லுல என்ன வேலை தரச் சொல்ற…? பருப்பு மூட்டைக்கு ட்ரெஸ் தைக்கப் போறீயா?”

“என்னவோ பண்றேன்… உங்களுக்கென்ன. நானும் வருவேன். என்னையும் கூட்டிட்டு போங்க.”
அடம்பிடித்தவளை சமாளிக்க முடியாமல் இவர்களது சம்பாஷணையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சுபத்ராவைத் திரும்பி பார்த்தவன், ஸ்வேதாவை நகர்த்திக் கொண்டு சற்று ஓரமாக வந்திருந்தான்.

“ஸ்வேதா அடம் பிடிக்காத. உனக்குப் பிடிச்ச கோர்ஸ் எடுத்துப் படிச்சிட்டு அதுக்கு சம்பந்தமே இல்லாத வேலையை எதுக்குடா செய்யனும் நீ. உனக்குப் பிடிச்ச மாதிரி பொட்டீக் வைக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு.

மாமா அதுக்கு வேண்டிய ஹெல்ப் பண்றேன். அதுவுமில்லாம யார்கிட்டயும் கைகட்டி வேலைக்குப் போற அவசியம் உனக்கு வர மாமா விடமாட்டேன் புரியுதா.”
மெல்லிய குரலில் சமாதானப் படுத்தியவனின் வார்த்தைகளில் சமாதானமானவள் அரை மனத்தோடு அவர்கள் இருவரும் மில்லுக்கு செல்ல அனுமதித்தாள்.

இருந்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் இனம் புரியாத பயம் வந்து அமர்வதையும் தடுக்க முடியவில்லை அவளால்.

‘ம்ஹீம்… அவளெல்லாம் ஒரு ஆளுன்னு அவளுக்குப் போய் நான் பயப்படறதா. அவ ஆளும் அவ ட்ரெஸ் பண்ற ஸ்டைலும்… என் மாமாவ அசைக்க அவளால முடியாது. அதான் அவர் வாயாலே சொல்லிட்டாரு இல்ல. நான் முதலாளி ஆகப்போறவ கைகட்டி வேலை பார்க்க வேணாம்னு’ அர்ஜுன் வார்த்தைகளை திடமாக நம்பியவள் வேறு வேலையில் ஆழ்ந்தாள்.

மில்லுக்கு அழைத்து வந்தவன், அங்கு அவள் செய்ய வேண்டிய வேலைகளை அவளுக்கு விளக்கிக் கூறினான். மேலும் அவளது சந்தேகங்களை செல்வத்திடம் கேட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு மற்ற யூனிட்களைப் பார்வையிடக் கிளம்பினான்.

சிறிய ஊரில் சாதாரண கம்பெனியில் வேலை பார்த்தவளுக்கு ஆரம்பத்தில் அவளுக்குச் சொல்லப்பட்ட வேலைகள் அனைத்தையும் பார்த்து மிரண்டாலும், கனிவோடு அனைத்தையும் உடனிருந்து கற்றுக் கொடுத்த செல்வத்திடம் விரைவாக கற்றுக் கொண்டாள்.

மதியத்துக்கு மேல் மில்லுக்கு வந்திருந்த ஸ்ரீராமும் சுபத்ராவைப் பார்த்து ஆச்சர்யப் பட்டான்.

“அட… நீ எப்பம்மா மில்லுக்கு வந்த. அர்ஜுன் எதுவுமே என்கிட்ட சொல்லவே இல்லை.”

“இன்னைக்குதான் ண்ணா வந்தேன். சும்மா வீட்ல போரடிக்குது. அதான் மில்லுல அக்கவுண்ட்ஸ் பார்க்க கூட்டிட்டு வந்தாங்க.”

“ஃபிரியா வேலையைப் பாரும்மா. செல்வம் எல்லா ஹெல்ப்பும் பண்ணுவாரு. வேற எந்த டவுட் வந்தாலும் குறிச்சு வை வரும்போது க்ளியர் பண்றேன். நான் தினமும் வருவேன். ஓகே வா. பயமில்லாம இரு.”

அவளிடம் விடைபெற்றவன் நேராக அர்ஜுனிடம் போய் நின்றான்.

“எதுக்குடா சுபத்ராவ மில்லுல போய் வேலைக்குப் போட்டிருக்க. கம்பெனிக்கு வரச் சொல்லியிருக்கலாம்ல.”

“இல்ல… அவளுக்குப் பழக்கமான அக்கவுண்ட்ஸ் வேலையை முதல்ல செய்யட்டும். கம்ப்யூட்டர் கோர்ஸ் ஜாயின் பண்ணச் சொல்லியிருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு கம்பெனிக்கு வரச் சொல்லலாம்.

மில்லை முழுசா சுபத்ரா பொறுப்புல விடற ஐடியாவும் இருக்கு. அவளுக்கு நியாயமா செய்ய வேண்டியதை செய்யனும்னு முடிவு பண்ணியிருக்கேன் ஸ்ரீ.”

“…”

“மில்லைப் பார்த்துக்கறதும். குடோன் பார்த்துக்கறதும் அவளுக்கு கஷ்டமான வேலையா இருக்காது. அதுமட்டுமில்ல எல்லாத் தொழில்லயும் பங்குன்னு குடுக்க முடியாட்டாலும் அவளுக்கு வருமானம் வர்ற மாதிரியான சொத்துக்களை அவ பேர்ல எழுதனும்.

ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்றேன்டா. அவளைத் தேவையில்லாம இந்தப் பிரச்சனையில இழுத்து விட்டுட்டேனேன்னு.

அ… அவளுக்கு விருப்பமிருந்தா ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்கனும்.”

படபடவென பேசியவனை உற்று நோக்கி, “சரி… சுபத்ராவுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சி குடுத்திட்டு நீ ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்க போறீயா?”
சற்று நேரம் மௌனமாக இருந்தான் அர்ஜுன். விடாமல் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீராமைப் பார்த்து,

“எனக்கு வாழ்க்கையில ஒருமுறைதான் கல்யாணம். அது பாட்டி முன்னாடி நடந்துடுச்சி. அடுத்து வேற கல்யாணம்னுலாம் என்னால யோசிக்கவே முடியல.”

‘வாடா… வா… எங்களுக்குத் தெரியாதா அர்ஜுன் உன்னைப் பத்தி. அதனாலதான பாட்டி புத்திசாலித்தனமா உன்னை இந்த பந்தத்தில் இணைச்சதே’ உள்ளுக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டவன்,

“அதுக்கு நீ சுபத்ரா கூடவே நல்ல வாழ்க்கை வாழ முயற்சிக்கலாம் இல்லையா அர்ஜுன். பாட்டி முன்னாடி செய்த சத்தியம் ஏன் பொய்யா போகனும். அதை உண்மையாக்கலாமே. ஒருவேளை அந்தப் பொண்ணு உனக்குப் பொருத்தமில்லைன்னு நினைக்கிறியோ.”

“சேச்சே… தோற்றம் மட்டும் பொருத்தமா இருந்தா போதாது, குணங்களும் பொருத்தமா இருந்தாதான் மனசு ஒத்துப் போகும்ங்கறது லேட்டஸ்ட்டா நான் கத்துக்கிட்ட பாடம். தோற்றமெல்லாம் பிரசச்சனையே இல்லைடா.”

“அப்புறம் என்ன அர்ஜுன்…” மேலும் ஏதோ சொல்ல வந்தவனைக் கையமர்த்தி,

“ஏற்கனவே அந்தப் பொண்ணுகிட்ட ஒரு வார்த்தைகூட சம்மதம் கேட்காம தாலி கட்டியிருக்கேன் ஸ்ரீ. அதுவே என்னை உறுத்திகிட்டு இருக்கு. அந்தப் பொண்ணோட விருப்பம்தான் முக்கியம். அவளை இனி எதுக்குமே வற்புறுத்தக் கூடாது. ஒருவேளை அவளுக்கா என்னைப் பிடிச்சா பார்க்கலாம்.”

“டேய்… உன்னை யாருக்காவது பிடிக்காமப் போகுமாடா. கண்டிப்பா சுபத்ராவுக்கு உன்னைப் பிடிக்கும்.”

“ஓவர் கான்ஃபிடன்ட் உடம்புக்கு ஆகாது மச்சி. என்கிட்ட ஸ்வேதாவோட முன்னாள் காதலன்ங்கற பெரிய மைனஸ் இருக்கு. எந்தப் பொண்ணுக்குமே அவங்களுக்கு வர்ற புருஷன் மனசுல தான்தான் முதல் காதலியா இருக்கனும்னு ஒரு எண்ணம் இருக்கும். அது தப்பில்லையே. சுபத்ராவுக்கும் கண்டிப்பா அந்த எண்ணம் இருக்கும். அதுலயே நான் ரிஜெக்ட் ஆகிடுவேன் ஸ்ரீ.”

“டேய்… உனக்கு பொண்ணுங்க சைக்காலஜி தெரியல. கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் நீ உண்மையா இருக்கியான்னுதான் பார்ப்பாங்க.
முதல்ல சுபத்ராதான் உன் மனைவிங்கறத உன் மனசுல பதிய வை. சுபத்ரா மனசுலயும் உன்னை பதிய வைக்க முயற்சி பண்ணு. எல்லாம் நல்லதாவே நடக்கும் அர்ஜுன்.”

“எங்க… என்கிட்ட சகஜமா பேசிகிட்டு இருந்தவ இப்ப பேசறதே இல்லை. முகத்தை நிமிர்ந்துகூட பார்க்கறதில்லை. அம்மணி எப்ப வீட்டை விட்டுப் போகலாங்கறதுலயும், விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போடறதுலயும்தான் குறியா இருக்காங்க. கஷ்டப்பட்டு ஒரு வருஷம் இங்கதான் இருக்கனும்னு சமாளிச்சு வச்சிருக்கேன்.

அதோட ஸ்வேதாவை சமாளிக்கறதும் பெரிய வேலையா இருக்கு. அவளோட லைஃபும் நல்லபடியா அமையனும். பார்க்கலாம் என்னதான் நடக்கும்னு.”

“அர்ஜுன். எல்லாருக்கும் எப்பவும் நல்லவங்களா யாராலேயும் இருக்க முடியாது. அது சாத்தியமே இல்லை. யாராவது ஒருத்தவங்க பார்வையில நாம தப்பானவங்களாதான் தெரிவோம். அதுக்கு ஒன்னுமே பண்ண முடியாது. நம்ம மனசுக்கு நியாமானதை நாம செய்ய வேண்டியதுதான்.

ஸ்வேதாவுக்கு என்ன செய்யனும்னு யோசிச்சியோ அதைச் செய். ஆனா அவளுக்கு இனியும் நம்பிக்கை தர்ற மாதிரி நடந்துக்காதே.”

“ம்ம்…. புரியுது ஸ்ரீ.”

“கொஞ்ச நாள் போகட்டும் எல்லாம் சரியாகும்.” மேலும் சற்று நேரம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அர்ஜுனிடம் விடைபெற்றுக் கொண்ட ஸ்ரீராம் மதிய உணவுக்காக வீட்டிற்கு கிளம்பினான்.

தன் இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு போக்குவரத்தில் கலந்தவனின் கண்கள் ஓரிடத்தில் குறும்புடன் நிலைத்தது. வண்டியை ஓரம்கட்டி நிறுத்தி இறங்கியவன்,

“ஹாய்… எப்படி இருக்கீங்க?”
அவனது குரல் திடீரென்று ஒலித்ததில் ஏணியின் மீது ஏறி நின்றிருந்தவள் சற்று தடுமாறிப் பின் சுதாரித்தாள். அவனைக் கண்டதும் ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன.

“நீ தரையில இருக்கவே மாட்டியா. எங்கையாவது அந்தரத்துல தொங்கிகிட்டுதான் இருப்பியா?”
அவனது கேள்வியில் புருவத்தைத் தூக்கி முறைத்தவள் சட்டென்று ஏணியிலிருந்து அவன் அருகில் குதித்தாள்.

அது ஒரு அரசுபள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவர். அதில் அழகழகான பூக்கள், கேலிச் சித்திர உருவங்கள், இடையிடையே நற்சிந்தனை வரிகளை அழகாக பெயிண்ட் செய்து கொண்டிருந்தனர்.

பிரபலமான சேவை நிறுவனத்தின் பேட்ஜ் அணிந்து ஆண்களும் பெண்களுமாக சிறு சிறு குழுவினராகப் பிரிந்து அந்த பெரிய சுற்று சுவர் முழுவதும் படம் வரைந்து கொண்டிருந்தனர்.

அவள் கையில் இருந்த பிரெஷ்ஷையும், அவள் செய்து கொண்டிருந்த வேலையையும் பார்த்தவன்,

“என்ன சமூக சேவையா? அதையும் குரங்கு மாதிரி தாவிகிட்டுதான் செய்வியா?”

“இன்னும் நான் யாருன்னே தெரியலையா உங்களுக்கு.” ஒற்றை புருவத்தை உயர்த்தியவளை ரசித்தவன்,

“ஏன் தெரியாம? பேரு ஜானவி. அப்பா பேரு ராகவேந்திரன். அம்மா பேரு லஷ்மி. படிப்பு எம்பிஏ. வீட்டுக்கு ஒரே பொண்ணு. நட்சத்திரம் மகம். ராசி சிம்மம். போன் நம்பர் ********** போதுமா தகவல்கள்.”
அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்தவள், “மெயில் பார்த்துட்டீங்க போல.”

“ம்ம் இன்னைக்குக் காலையிலதான் பார்த்தேன். உன்கூட கொஞ்சம் பேசனுமே”

“பேசலாமே… எனக்குப் பசிக்குது. லஞ்ச் வாங்கித் தர்றீங்கன்னா வரேன்.”
அவளது பாவனையில் சிரித்தவன்,

“வாங்கித் தரேன் ஏறு” என்றபடி வண்டியைக் கிளப்பினான். அவன் பின்னே, உடனிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டுத் தொற்றிக் கொண்டாள்.

சற்று அமைதியான சூழலை உடைய ரூஃப் கார்டன். ரெஸ்ட்டாரன்டின் உள் சொற்பமான அளவிலே கூட்டமிருந்தது. நால்வர் அமரும் இருக்கையில் எதிரெதிரே அமர்ந்தவர்கள், பேரரிடம் தேவையானவற்றை ஆர்டர் செய்தனர்.

“ம்ம்… சொல்லு.”

“என்ன சொல்லனும்?”
லேசாக முறைத்தவன்,

“இன்னைக்குக் காலையிலதான் உன்னோட மெயில் பார்த்தேன். ஆனா உனக்கு எப்படி என்னை முன்னாடியே தெரியும்? என்னோட மெயில் ஐடி உனக்கு எப்படி கிடைச்சது.”

“அப்போ இன்னும் என்னை யாருன்னே தெரியாமதான் ரெஸ்டாரன்ட் வரை கூட்டிட்டு வந்தீங்களா? இதை எப்படி எடுத்துக்கறது நான்? எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி நீங்கன்னு எடுத்துக்கறதா? இல்ல நியாபகம் வச்சிக்கிற அளவுக்கான ஃபிகர் நான் இல்லைன்னு எடுத்துக்கறதா?” தாடையைத் தட்டி யோசித்தவள், லேசான முறைப்புடன்,

“நிஜமாவே என்னைத் தெரியலையா? நான் உங்க காலேஜ்தான். நீங்க எனக்கு சீனியர். நான் யூஜி முதல் வருஷம் சேர்ந்தப்ப நீங்க பிஜி ஃபைனல் இயர். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஸ்டேஜ் புரோகிராம்கூட செய்தோம்.”
லேசாக நினைவுக்கு வந்ததும் சிரித்தவன், “ம்ம் லேசா நியாபகம் இருக்கு. ஃபிரெஷ்ஷர்ஸ் பார்ட்டிலதான. ஆனா…” என்றபடி இழுத்தவன் ‘அப்ப பார்த்த என்னை இன்னுமா நியாபகம் வச்சிருக்க?’ என்றபடி அவளைப் பார்க்க…

“அதுக்கப்புறம் போன மாசம் எங்க க்ளப் ஏற்பாடு பண்ண இரத்ததான முகாம்க்கு நீங்களும் உங்க ஃபிரெண்டு அர்ஜுனும் வந்திருந்தீங்க”
உரக்கச் சிரித்தவன். “அங்க நீயும் இருந்தியா?” அவனது சிரிப்பு அவளுக்கும் தொற்றிக் கொள்ள,

“காலேஜ்க்கு அப்புறம் அங்கதான் பார்த்தேன். ஒரு சின்ன ஊசியை குத்திக்க எவ்வளவு அட்டகாசம்? உங்ககிட்ட இருந்து ப்ளட் கலெக்ட் பண்ணதே நான்தான்.”

“சும்மா இருந்தவனை ஏமாத்தி கூட்டிட்டு வந்துட்டான். எனக்கு ஊசி இரத்தம் எல்லாமே அலர்ஜி.”
நமுட்டுச் சிரிப்புடன், “ம்ம்… தெரிஞ்சது. ஒருவேளை உங்களுக்கு என்னை நியாபகம் இருக்குமோன்னு ஆர்வமா பார்த்தேன். ஆனா உங்களுக்கு என்னைத் தெரியவே இவ்லை.”

“…”

“அதுக்கப்புறம் உங்களைப் பத்தி தெரிஞ்சுக்க உங்களோட முகப்புத்தகம் டிவிட்டர் எல்லாம் ஃபாலோ பண்ணேன். அப்புறம் அன்னைக்கு நைட் சுவர் ஏறிக்குதிக்கும் போது அந்த இடத்துல உங்களை எதிர்பார்க்கவே இல்லை. செம ஷாக்கிங்தான்.

உங்க வண்டி மேல ஏறி நிக்கிறதுக்கு திட்டுவீங்களோன்னுதான் உங்களைக் கொஞ்சம் குழப்பி விட்டேன். இத்தனை முறை பார்த்தும் அடையாளம் தெரியலையேன்னு கொஞ்சம் கோபமும் இருந்தது அப்ப.”

“ஹேய்… நிஜமா அன்னைக்கு உன்னை எங்கயோ பார்த்த மாதிரி ஒரு ஃபீல் இருந்தது எனக்கு. நீ நல்லா பழகுன மாதிரி வேற பேசுனியா. என்கூட படிச்ச பொண்ணோன்னு ரொம்ப யோசிச்செல்லாம் பார்த்தேன்.

ஆடிட்டர் அங்கிள் வீட்டுக்குதான் அன்னைக்கு வந்திருந்தேன். அவர் வீட்டு மாடியில யார் இருக்காங்கன்னு லேசா விசாரிச்சுப் பார்த்தேன். அங்க குழந்தையில்லாத வயதான தம்பதி இருக்காங்கன்னு அவர் சொன்னார்.

அந்த தம்பதிகளுக்கு உன்னைத் தெரிஞ்சிருக்கும்னு அவங்ககிட்ட போய் விசாரிச்சேன். அவங்களுக்கும் உங்களை யாருன்னே தெரியலை. சர்ப்ரைஸ் கிஃப்ட்டா பர்த்டே பார்ட்டி கொண்டாடுனீங்கன்னு சொன்னாங்க.

அதுக்கப்புறம் எப்படி விசாரிக்கன்னு ஒன்னும் புரியல. அதுக்கு நடுவுல அர்ஜுன் கல்யாணம், அவங்க பாட்டி இறப்புன்னு என்னோட கவனமும் மாறிடுச்சி. இன்னைக்குக் காலையில உன் ஃபோட்டோவோட ஜாதகத்தைப் பார்த்ததும் உனக்கு ஃபோன் பண்ணி பேசனும்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள நேர்லயே பார்த்துட்டேன்.”

“எங்க க்ளப்ல மெம்பர்தான் அந்த தம்பதி. அவங்களுக்கு சர்ப்ரைஸ்ஸா பார்ட்டி அரேஞ்ச் பண்ணோம். இது வழக்கமா நாங்க செய்யறதுதான்.”

“என்னோட மெயில் ஐடி எப்படி கிடைச்சது உனக்கு?”

“அது… என்னோட கசின்க்கு அலையன்ஸ் பார்க்குறோம். அப்ப மேட்ரிமோனில பதிவு பண்ணும் போது அங்க உங்க டீட்டெயிலும் மெயில் ஐடியும் இருந்தது. நீங்களா என்னைக் கண்டுபிடிக்கற மாதிரி தெரியல. அதான் அங்க இருந்து உங்க மெயில் ஐடியை சுட்டு உங்களுக்கு என் டீட்டெயிலை அனுப்பினேன்.”

கண்சிமிட்டிச் சிரித்தவளை ஆழமாகப் பார்த்தவன், “அப்படி தீவிரமா எனக்கு உன்னை நியபகப்படுத்த என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா ஜானவி?”

தொடரும்…