KarisalKaattuPenne1

KarisalKaattuPenne1

கரிசல் காட்டுப் பெண்ணே 1

 

நிலமகளின் தலை வகிடாய் நீண்டு கிடந்த தார்ச்சாலையில் அந்த மகிழுந்து மிதமான வேகத்தில் ஊர்ந்து சென்றது.

‘தென்னூர் அன்புடன் வரவேற்கிறது’ என்ற பெயர்ப் பலகையைக் கவனித்தவுடன் அவனுடல் சிலிர்க்கத் தான் செய்தது.

என்ன இருந்தாலும் அவன் பிறந்து வளர்ந்த ஊர் அல்லவா!

பெங்களூரின் ஆடம்பர வாழ்க்கை, படிப்பு, கல்லூரி, நண்பர்களென அவன் இந்த ஊரையே சுத்தமாக மறந்து கிடந்தான் தான்.

எப்போதாவது அம்மா, அப்பாவின் பேச்சில் ஊர்ப் பெயர் கேட்க, மனத்திரையில் இந்த ஊரின் காட்சி, பிம்பங்களாய் தோன்றி மறையும். அவ்வளவு தான். அதற்கு மேல் சொந்த ஊரின் மீது பெரிதாக ஈடுபாடு ஏற்பட்டதில்லை.

வருடம் ஒருமுறை என அப்பாவும் அம்மாவும் தான் இந்த ஊருக்கு விஜயம் செய்வார்கள். அப்போதெல்லாம் இவனையும் அண்ணனையும் உடன்வர அழைத்தால், இருவரும் ஏதேனும் சாக்கிட்டு மறுத்து விடுவார்கள். அண்ணன் கூட ஒன்றிரண்டு முறை வந்ததாய் ஞாபகம். ஆனால் இவன்?

பலவருடங்கள் கழித்து இப்போது தான் தன் சொந்த மண்ணில் கால் வைக்கிறான். பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, ஸ்ரீ ராமன் தன் தாய் மண்ணில் கால் வைத்தது போன்று!

என்ன? ஸ்ரீ ராமபிரானுக்கு இவன் ஈடானவனா என்ன?

இல்லை தான் என்றாலும் இவன் பெயரும் ஸ்ரீராம் தானே!

ஸ்ரீராம் காரை நிறுத்திவிட்டு இறங்கியதும் அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல, அவன் முகத்தில் மோதி வருடிச் சென்றது கிராமத்துச் சுகந்த காற்று. அவன் மென்மையாய் இதழ் மலர்ந்தான்.

அங்கிருந்த சாலையோர மரங்களெல்லாம் தன் இலைகளை அசைத்து ஆர்ப்பரித்தன. அவனை வரவேற்பவை போல!

ஏனோ அவைகள் எல்லாம் தன்னை அடையாளம் கண்டு கொண்டது போல ஒரு விசித்திர உணர்வு அவனுள் தோன்ற, சிரித்துக் கொண்டான்.

‘இது புது இடம் அல்ல, உனக்கு பழக்கமான, நீ ஓடி விளையாடிய அதே இடம் தான்’ என்று அவனின் சின்ன தயக்கத்தையும் போக்கின, அவன் பார்வைக்கு அமுது படைத்த கிராமத்து இயற்கைக் காட்சிகள். மனம் நிறைந்த புத்துணர்வோடு காரில் ஏறி ஊருக்குள் நுழைந்தான்.

இத்தனை வருடத்தில் அந்த கிராமத்தில் சொல்லும்படியாக எந்த பெரிய மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.

அதோ அந்த அரசமரத்தடி பிள்ளையாருக்கு மேற்கூரை வேயப்பட்டிருந்தது.

அங்கே, அவன் சிறுவயதில் விழுது பிடித்து ஊஞ்சலாடிய ஆலமரம் அதே கம்பீரத்துடன் அவனை இப்போதும் விளையாட அழைப்பதாய்.

கிராமத்து ஒதுக்குப்புறமாய் தனித்திருந்த குடிசை வீடு இப்போது பாழ்பட்டுப் போயிருந்தது. அதில் முறுக்கு சுட்டு விற்று வந்த மூதாட்டியின் சுருக்கம் விழுந்த முகம் அவன் மனத்திரையில் கேளாமல் வந்து போனது.

முன்பு சின்னதாய் இருந்த ஊர் எல்லையம்மன் கோயில் இப்போது பெரிதாகச் செப்பனிடப்பட்டிருந்தது. முன்பைவிட இப்போது ஆங்காங்கே கான்கிரீட் வீடுகள் அதிகமாய் தெரிந்தன. மண்சாலை சிமெண்ட் சாலையாகி இருந்தது. மற்றபடி எந்த பெரிய வித்தியாசமும் இன்றி அவன் ஊர் அப்படியே தான் இருக்கிறது.

அந்த கிராமத்தின் பாதைகள் ஓரளவு நினைவிருக்க, அதோடு அம்மா திரும்ப திரும்ப ஊரின் வழியைப் பற்றி சொல்லி இருக்க, சங்கரன் வீட்டை அடைவதில் அவனுக்குப் பெரிதாய் கஷ்டமேதும் இருக்கவில்லை. தன் காரை மரநிழலில் நிறுத்திவிட்டு அவர் வீட்டை நோக்கி நடந்தான்.

முன்பிருந்த சங்கரன் மாமாவின் ஓட்டுவீடு இப்போது மாடி வீடாகி இருந்தது.

கெட்டியான பச்சரிசி மாவு கரைசலில் குவித்த கையை நனைத்து தரையில் அச்சிட்டு வீட்டுக்குள் வரும் குழந்தை கண்ணனின் சின்ன சின்ன பாதங்களை தன் வீட்டு வாசலில் முனைப்புடன் வரைந்து கொண்டிருந்தவள், யாரோ எதிரே வந்து நிற்க நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் முகத் தோற்றத்தை இதற்கு முன் எங்கேயோ பார்த்த ஞாபகம் தோன்ற யோசனையுடன் எழுந்து நின்றாள்.

“சங்கரன் மாமா விடு?” அவன் கேள்வியாய் நிறுத்த,

“இதுதான், உள்ள வாங்க” என்று வரவேற்றவள், “அம்மா… அப்பாவ பாக்க யாரோ வந்திருக்காங்க” வீட்டுக்குள் குரல் கொடுத்துவிட்டு மீண்டும் சின்ன கண்ணனின் பாதங்களைப் பதிக்கத் தொடங்கினாள்.

ஸ்ரீராம் தன் காலணிகளை ஓரமாய் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வர, சமையற்கட்டிலிருந்து வெளிவந்த மரகதம் அவனை அடையாளம் தெரியாமல், “உக்காருங்க தம்பி, அவர் இதோ இப்ப வந்திடுவாரு” என்றார்.

அவன் முகம் இதமாய் மலர, “மரகத அத்த, நான் ஸ்ரீராம்” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள, அவரின் உள்ளமும் முகமும் ஒன்றாய் பூத்தது.

“நம்ம ஸ்ரீராமா! என்னமா வளர்ந்திட்ட டா, ஏன் நிக்கிற முதல்ல உக்காரு” அவனை அமர வைத்தவர், “வீட்ல அண்ணா, அண்ணி, பெரியவன் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று ஆவலாக விசாரித்தார்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க, நீங்க மாறவே இல்ல அத்த, அப்படியே இருக்கீங்க” அவன் சிலாகித்துச் சொல்ல, இவரிடம் வெட்க சிரிப்பு ஒட்டிக் கொண்டது.

“நீ ஊருக்கு வர போறதா அண்ணே நேத்து தான் போன்ல சொன்னாரு. அதுக்குள்ள திடுதிப்புனு வந்து நிக்கிற!” என்று சந்தோசிக்க, ஸ்ரீராம் மென்மையான புன்னகையைப் பதிலாகத் தந்தான்.

“இதோ உனக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாரேன்” என்று மரகதம் அடுப்படிக்குள் விரைய, ஸ்ரீராம் பார்வை ஒருமுறை அந்த வீட்டைச் சுற்ற, இந்த புது வீடும் பழமையின் மணம் மாறாமல் காட்சி தந்தது.

மரகதம் அவன் கையில் சுடசுட ஏலக்காய் மணத்துடன் தேநீர் டம்ளரைக் கொடுக்க, அதைப் பருகியவாறே, “அத்த, மாமா வர நேரமாகுமா?” என்று விசாரித்தான்.

“பக்கத்துல தான் தோட்டம் வரை போயிருக்காக, இதோ வந்துடுவாக, அதுவரைக்கும் நீ கொஞ்சம் ஓய்வெடுத்தக்க பா.”

“இல்ல அத்த, பெரிய வீட்டுச் சாவி கொடுத்தீங்கன்னா, நான் அங்க போய் பார்த்திட்டு வரேன்” என்று கேட்க, மரகதம் மறுப்பேதும் சொல்லாமல் உள்ளேயிருந்து சாவிக் கொத்தை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்.

“வந்தவுடனேயே வீட்டைப் பாக்க போகணுமா ஸ்ரீராமா?” மரகதம் வாஞ்சையுடன் வினவ,

“அது… ரொம்ப நாளைக்கு அப்புறம் ஊருக்கு வந்திருக்கேன். வீட்டை பார்க்கணும் போல இருக்கு அத்த” என்று அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தான்.

தன் கையிலிருந்த பெரிய வீட்டுச் சாவியை வாஞ்சையாய் பார்த்தபடி நடந்தவன், வாசலில் இருந்த வாளியில் கால் தடுக்கிட, வாளி கவிழ்ந்து அதிலிருந்த தண்ணீர் மொத்தமும் தரையில் கொட்டியது.

அவள் இவ்வளவு நேரமும் கஷ்டப்பட்டுப் பதித்த குழந்தை கண்ணனின் பாத சுவடுகள் எல்லாம் அழிந்து போக, கோபமாய் நிமிர்ந்தாள்.

“கொஞ்சம் பார்த்து வரக் கூடாதா?” என்று அவள் ஆதங்கமாகக் கேட்க, ஸ்ரீராம் சங்கடமாக நின்றான்.

“மறுபடியும் முதல்ல இருந்து எல்லாத்தையும் போடணும்” என்று முணுமுணுத்தவளாய் வாசலில் தேங்கி இருந்த தண்ணீரைத் தெந்துடைப்பம் (தென்னங்கீற்று துடைப்பம்) கொண்டு அகற்றலானாள்.

இங்கு வந்தவுடனேயே ஏற்பட்ட சங்கடம் அவனுக்கு என்னவோ போலிருந்தது. எதிர் வீட்டில் ஓர் அம்மா தன் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவு ஊட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தவன் ஏதோ யோசனை தோன்ற, அந்த அம்மாவிடம் சென்று இவளை கைக்காட்டி அந்த குழந்தையை வாங்கிக் கொண்டு வந்தான்.

அங்கிருந்த மாவு கரைசலில் குழந்தையின் பாதங்களை நனைத்து, அழிந்த இடத்தில் குழந்தையை மெதுவாக நடக்க வைத்தான். அங்கே, சின்ன கண்ணனின் பாத சுவடுகள் மீண்டும் வீட்டுக்குள் பிரவேசிக்க, அதைப் பார்த்து நின்றவளின் பார்வையில் மெச்சுதல் தெரிந்தது.

அந்த குழந்தையை அவள் கைகளில் திணித்தவன், “எல்லா கடினமான வேலைக்கும் ஒரு எளிமையான வழி இருக்கும்” என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

அவன் சொல்லிச் சென்றதை இவள் பெரிதாய் ஒன்றும் சிந்திக்கவில்லை. தன் கைகளிலிருந்த குழந்தையின் பாதங்களை மீண்டும் மாவு கரைசலில் நனைத்து நடக்க வைத்தபடி,

“அல்லி மலரடி எடுத்து வைத்து
சின்ன கண்ணா வா,
முல்லையிதழ் மலர புன்னகை சிந்திடும் செல்ல கண்ணா வா,
பாலும் வெண்ணெய்யும் எடுத்து வைத்தேன் சின்ன கண்ணா வா,
பருப்பும் பலகாரமும் சமைத்து வைத்தேன் செல்ல கண்ணா வா,
உன் வருகையால்,
என் ஜென்மமே,
ஈடேருமே,
கண்ணா… வா…!”

சிணுங்கிய குழந்தையை பாட்டு பாடி மகிழ்வித்து, குழந்தைக் கண்ணனின் பாத சுவடுகளைப் பூசை அறை வரை அழைத்து வந்து, தன் தூய்மையான அன்பினால் சிறை பிடித்துக் கொண்டாள்.

# # #

வருடங்கள் பல கடந்து, தன் எதிர்கால காரணம் பற்றி, சொந்த கிராமம் தேடி வந்த இந்த கலியுக ஸ்ரீராமனின் வாழ்வின் இனிமையான தருணத்தில் நாமும் உடன் சேர்ந்து பயணிக்கலாம் கிராமத்து மணத்தின் ரசனையோடு…

# # #

வருவாள்…

error: Content is protected !!