En Jeevan 14

14
தேவகி வந்ததிலிருந்து சரஸ்வதியிடம்கூட மனம்விட்டு பேச முடியவில்லை சுபத்ராவால். அர்ஜுன் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் அவனைவிட்டு இம்மிகூட நகர முடியாதபடிக்கு அவளை விரட்டிக் கொண்டிருந்தார் தேவகி. அர்ஜுன் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்க முடியாமல் தவித்தபடி இருப்பவளுக்கு இது பெரும் சோதனையாக இருந்தது.

தன்னைப்போல மனம் அவனையும் அவனது செயல்களையும் ரசிக்க, அவனை நோக்கி ஓடும் மனதை அதட்டி உருட்டி கட்டி வைப்பதே அவளது வேலையாய் போயிற்று.

என்ன இருந்தாலும் அவளும் வயதுப் பெண்தானே… அர்ஜூனை உரிமையோடு கணவனாக நினைத்து மனதுக்குள் பூஜித்தாலும், எதையுமே வெளிப்படுத்திக் கொள்வதில்லை அவள். தன்னால் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்று தனக்குள் எவ்வளவு ஒடுங்க முடியுமோ அவ்வளவு ஒடுங்கிதான் இருந்தாள்.

ஆனால் எங்கே…? தேவகிப் பாட்டி விட்டால்தானே. அர்ஜுனை தினமும் பூ வாங்கி வந்து சுபத்ராவிடம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவன் சிறிது நேரம் முன்னதாக வந்துவிட்டால் கோவிலுக்காவது இருவரும் சேர்ந்து போய்வாருங்கள் என்று கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்.

சுபத்ராவின் நிலைதான் இருதலைக்கொள்ளி எறும்பாயிற்று.
அர்ஜுனுக்கும், மாடியில் ரூமுக்குச் சென்றால் ஒன்று மாடித்தோட்டத்துக்குள்,

இல்லையென்றால் பக்கத்து ரூமுக்குள் சென்று அடைந்து கொள்ளும் சுபத்ராவைவிட, கீழே இருக்கும்போது தேவகிக்கு பயந்து தன்னைவிட்டு அகலாமல் இருக்கும் சுபத்ராவின் அருகாமை பிடித்திருந்தது. அவளோடு வெளியே சென்றுவர பிடித்திருந்தது.

இயல்பான மெல்லிய தீண்டல்களின் மூலம் அர்ஜூன் தன்னை அவளுக்கு உணர்த்திக்கொண்டுதான் இருந்தான். அவளை நெருங்க மெல்ல மெல்ல முயன்றுகொண்டுதான் இருந்தான்.

தன் முகமாறுதல்களைக்கூட வெளியே காட்டாத சுபத்ரா அவனுக்கு சவாலாய்தான் இருந்தாள்.

திருமணம் முடிந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது, ஒரு ரிசப்ஷன் வைத்து உறவினர்களுக்கும் மற்றவர்களுக்கும் முறையாக அறிவித்து விடலாமே என்ற தேவகியின் யோசனைக்கு, கண்டிப்பாக செய்கிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தான்.

ஸ்வேதாவுக்கு அண்ணாநகரில் பார்த்து வைத்திருந்த கடை பிடித்திருந்ததால் அதை அவள் பேருக்கு வாங்கித் தந்திருந்தான்.

பொட்டீக் வைப்பதற்குத் தேவையான ஆயத்தங்களை செய்வதற்காக ஸ்வேதாவும் மணிவாசகமும் மும்பை சென்று பத்து நாட்கள் ஆகியிருந்தது.

காலையில் வழக்கம் போல கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவனுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள் சுபத்ரா. லாவண்டர் வண்ண சுடிதாரில் நீண்ட பின்னல் அசைந்தாட, நெற்றியில் வைத்த ஒற்றைப் பொட்டைத் தவிர வேறு ஒப்பனைகள் இல்லாமல் எளிமையான அழகோடு மிளிர்ந்த மனைவியை ரசித்தபடி கிளம்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

எதிர்பாராமல்தான் என்றாலும் அன்று தன் அணைப்பில் அடங்கி தன்னுள் புதைந்திருந்தவளின் ஸ்பரிசம் மீண்டும் வேண்டும் போல உணர்வுகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது அர்ஜுனுக்குள்.

முகம் பார்க்கக்கூட மறுப்பவளை என்னதான் செய்வது.
‘அவளது விருப்பம் லேசாகத் தெரிந்தாலும் போதும், என்மனதை முழுவதும் அவளுக்கு உணர்த்திவிடுவேன். தன்னைமீறி எதையாவது செய்து அவளைக் காயப்படுத்தி விடுவேனோ என்றே தள்ளி நிற்கிறேன்’ மனதுக்குள் புலம்பிக் கொண்டவன், அலைபேசி ஒலிக்கவும் எடுத்துப் பார்த்தான்.

சரஸ்வதிதான் அழைத்திருந்தார். இருவரையும் கீழே வருமாறு அழைத்திருந்தார். இருவரும் ஜோடியாக கீழே இறங்கி வந்ததை எட்டையபுரத்திலிருந்து வந்திருந்த மருதமுத்துவும் மங்களமும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களது நெஞ்சம் ஆனந்தத்தில் நிறைந்திருந்தது.

மருதமுத்துவின் மகள்கள் இருவரும் உடன் வந்திருக்க, அவர்கள் அனைவரையும் கண்டதும் மகிழ்ச்சி பொங்க ஓடிவந்து அவர்களின் விரிந்த கரத்தில் அடங்கிக் கொண்டாள் சுபத்ரா. பாசத்தோடு பார்த்துக் கொண்டவர்கள் அல்லவா…

அவளுக்கும் அவர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று உள்ளூர ஆசையிருந்தது.

“இப்பதான் என் நியாபகம் வந்ததா பாட்டி” சலுகையோடு மங்களத்தின் தோள்களில் சாய்ந்து கொள்ள,

“நியாயமா நான்தான் உன்னைக் கடிஞ்சிக்கனும். உனக்குக் கல்யாணம் ஆனதை எங்ககிட்ட சொல்லத் தோனுச்சா உனக்கு?”
அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தவள்,

‘இதை எப்படி சொல்லமுடியும் பாட்டி? இது என்ன நிரந்தரமாக நான் வாழ்க்கை நடத்த நடந்த கல்யாணமா? நானே நடித்துக் கொண்டிருக்கிறேனே பாட்டி. இதை எப்படி உங்களிடம் சொல்ல முடியும்?’ மனதில் எண்ணியபடி விழிக்க…

“என்ன முழிக்கிற? நீ சொல்லலைன்னா என்ன? மாப்பிள்ளை ஆள் அனுப்பி உன்கிட்ட தப்பா நடந்துகிட்டானே அந்த ராஜேந்திரனைப் போட்டு புரட்டி எடுத்திட்டாரு. அவருதான் ஃபோன்ல உங்களுக்கு கல்யாணம் ஆனதைச் சொல்லி எங்களை இங்க வரச் சொல்லியிருந்தாரு.”
ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

‘எனக்காக அர்ஜுன் இதையெல்லாம் செய்தாரா? ஆனா… எதுக்கு…? இதனால இவருக்கு தேவையில்லாத பிரச்சனைகள் வருமே. நாங்க பிரியும்போது எல்லாரும் கேள்வியெழுப்புவாங்களே…’ புரியாமல் அவனைப் பார்க்க,

அவளைப் பார்த்து குறும்பாக கண்சிமிட்டிய அர்ஜுன் வெகுவாகக் கவர்ந்தான் அவளை.

“சரி…சரி… வந்தவங்களை அப்படியே உட்கார வச்சு பார்த்துகிட்டு இருப்பியா? போய் அவங்களை சாப்பிட வை. அர்ஜுனுக்கும் பரிமாறு.” தேவகி கட்டளைகளைப் பிறப்பிக்க, அனைவரையும் அழைத்துச் சென்று அமர வைத்து உணவு பரிமாறினாள்.

உணவு உண்டு முடித்ததும் மங்களத்தின் பெரிய மகள் அர்ஜுனிடம், “எல்லாருக்கும் ஊர்ல ரொம்ப சந்தோஷம், சுபத்ராவுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சதுல.

உங்க ரெண்டுபேர் ஃபோட்டோ தாங்களேன். எல்லாரும் பார்க்க அசைப்படுவாங்க.”

“ஆமா… ஆமா… அன்னைக்கு ரெண்டு பேர் வந்தீங்கல்ல. அதனால அதுல யாரு சுபத்ரா மாப்பிள்ளைன்னு எங்க ஊர்ல இருக்கற ரெண்டு கிழவிகளுக்குள்ள சண்டை வேற… உங்க அடையாளத்தை சொன்னோம் நம்ப மாட்டேங்குதுங்க…” என்று அவர்களின் சிறிய மகளும் கூறிச் சிரிக்க,

“கல்யாண ஃபோட்டோ எல்லாம் ஆல்பம் போட கொடுத்திருக்கேன். வந்ததும் உங்களுக்கு அனுப்புறேன். இப்ப உங்க ஃபோனைக் குடுங்க இங்கயே ஃபோட்டோ எடுத்துத் தரேன்” என்றவன் அவர்களது அலைபேசியை வாங்கி அவளது அருகே வந்து இடையோடு சேர்த்தணைத்துக் கொண்டு அவள் முகம் பார்க்க, அவளோ அவனின் அருகாமையில் மூச்சடைக்க அவனையே பார்த்திருந்தாள்.

இடையில் விரல்களின் அழுத்தத்தைக் கூட்டியவன், கண்களாலேயே அலைபேசியை பார்க்கச் சொல்ல… இடையில் தவழ்ந்த அவனது விரல்களின் ஸ்பரிசத்திலும், அவனது பார்வை சொன்ன புரியாத பாஷையிலும் மொத்தமாகச் சிவந்தவள் பார்வையை அவனிடமிருந்து விலக்கி ஃபோனைப் பார்க்க, அந்த இனிய தருணம் புகைப்படங்களாக அலைபேசியில் பதிந்தது.

புகைப்படங்களை எடுத்து அலைபேசியை மங்களத்தின் மகளிடம் கொடுத்தவன்,

அணைப்பை விலக்காமல் தனது அலைபேசியை எடுத்து அதிலும் அவர்கள் இருவரையும் விதவிதமாக செல்ஃபி எடுத்து வைத்துக் கொண்டான்.

அந்தப் புகைப்படத்தை தனது அலைபேசியில் ஸ்க்ரீனில் பதித்தவன், மருதமுத்து மங்களம் அவர்களது மகள்களிடம் விடைபெற்று கம்பெனிக்குக் கிளம்ப எத்தனிக்க, அவனது அலைபேசி இசைத்தது. ஸ்ரீராம்தான் அழைத்திருந்தான்.

“சொல்லு ஸ்ரீ…”
“…”
“கிளம்பிட்டேன்.”

“..”

“கம்பெனிக்குதான். ஏன்? என்னாச்சு?”

“…”

“என்ன திடீர்னு?”

“…”

“ஓகே… சுபாவையும் கூட்டிகிட்டு நேரா மில்லுக்குப் போறேன்.”
அலைபேசியை அணைத்தவன், அவனது முகத்தையே பார்த்திருந்த சுபத்ராவிடம்,

“கிளம்பு சுபா… மில்லுக்குப் போகனும். உணவு பாதுகாப்பு துறையில இருந்து செக்கிங் வந்திருக்காங்களாம். நாம அங்க இருக்கனும்.”
எதுவும் பிரச்சனையா என்று பதறியவர்களிடம் ஒன்றுமில்லை என்று சமாதானப்படுத்தியவன் சுபத்ராவை அழைத்துக் கொண்டு மில்லுக்கு கிளம்பினான்.

காரில் ஏதோ யோசனையோடு இறுக்கமாக வந்தவனைப் பார்த்தவள், “என்ன ஆச்சு? ஏதும் பெரிய பிரச்சனையா?”
அவளது பதட்டமான முகத்தை நோக்கியவன், சிறு சிரிப்புடன்,

“சேச்சே… பிரச்சனையெல்லாம் எதுவுமே இல்லை சுபா. நாம பல வருஷமா இந்த தொழில் செய்யறவங்க. நமக்குன்னு ஒரு பேர் இருக்கு. இத்தனை வருஷத்துல இப்படி சோதனைக்குன்னுலாம் யாருமே வந்ததில்லை. ஏன்னா நம்ம தரம் அப்படி.

அப்பா தொழில் செய்தப்பவும் சரி, பாட்டி நம்ம கம்பெனி மில்லுலாம் பார்த்துக்கிட்டபோதும் சரி, தரத்துல மட்டும் எந்தக் குறையும் வரவிட்டதில்லை. நானும் அப்படிதான்.

ஆனா எதுக்காக திடீர்னு இப்படி ஒரு சோதனை. மில்லு, குடோன், ரோஸ்டிங் யூனிட், பட்டர் ஜாம் ஃபேக்டரி இப்படி எல்லா இடத்துலயும் ஒரே நேரத்துல சோதனை நடக்குதுன்னா யாரோ கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க. அதான் யாருன்னு யோசிக்கறேன்.”

“…”
“அது என் பிரச்சனை. நான் பார்த்துக்கறேன். நீ டென்ஷன் ஆகாத. நம்மகிட்ட எல்லாமே பக்காவா ரூல்ஸ்படிதான் இருக்கு. அதனால எந்த பயமும் இல்லை.
என்ன… இன்னைக்கு ஒருநாள் உற்பத்தி வேலைகள் மில்லு வேலைகள் எல்லாம் பாதிக்கும் அதனால கொஞ்சம் நஷ்டமாகும்.

அவ்வளவுதான். சமாளிச்சிக்கலாம். நீ அங்க வந்து கணக்குகளை மட்டும் எடுத்து தெளிவா காட்டிடு.”
சரியென்று தலையசைத்தவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டான்.

அன்று நாள் முழுவதும் நிற்க நேரமில்லாமல் கழிந்தது அர்ஜுனுக்கும் ஸ்ரீராமுக்கும் சுபத்ராவுக்கும். வருமான வரித்துறை அதிகாரிகளும் வந்துவிட,

அவர்களுக்கு அனைத்துக் கணக்குகளையும் காட்டிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

ஆடிட்டரையும் உடன் வைத்துக்கொண்டு அவன் அதைப் பார்த்துக் கொள்ள,

அர்ஜுனோ மில்லில் ஃபேக்டரியில் நடந்த சோதனைகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்து, அவர்கள் அனைவரும் ஒன்றுமில்லை எல்லாம் சுத்தமாகத்தான் செய்யப்படுகிறது என்று சான்றிதழ் கொடுக்கும் வரை அவர்களோடு அலைந்து கொண்டிருந்தான்.

சுபத்ராவும் அனைத்து கணக்குகளையும் முறையாக பராமரித்திருந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடிந்தது அந்த நாள்.

 

ஒருவழியாக அனைத்தையும் முடித்து சுபத்ராவையும் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு சற்று ரிலாக்ஸாக ஹோட்டல் ஒன்றுக்கு வந்தனர் அர்ஜுனும் ஸ்ரீராமும்.

“இத்தனை வருஷத்துல இந்த மாதிரி நடந்ததே இல்லை ஸ்ரீ. கண்டிப்பா யாரோ தேவையில்லாத புகார் கொடுத்திருக்கனும். இல்லைன்னா இப்படி ஒரே நேரத்துல வரமாட்டாங்க. யாரு செஞ்சிருப்பான்னு ஒன்னும் புரியலை.”

“வெயிட் பண்ணு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும். விசாரிக்கச் சொல்லியிருக்கேன்.”

“நம்ம போட்டி கம்பெனி கூட ஆரோக்கியமான போட்டிதான் நிலவுது. அப்பா காலத்துல இருந்து அவங்களும் தொழில் பண்றவங்க. அதனால இப்படியெல்லாம் நடந்துக்க மாட்டாங்க.”

“டென்ஷனாகாம இரு அர்ஜுன். எனக்கு ஒரு டவுட் இருக்கு. அதை கன்ஃபார்ம் பண்ணிக்கதான் எங்க அப்பாவோட ஃபிரெண்டு பையன் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சில வொர்க் பண்றான், அவனை அனுப்பியிருக்கேன்.”

“…”
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.”

இவர்கள் காத்திருக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் இளைஞன் ஒருவன் வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்த ஸ்ரீராம் அவனை அர்ஜுனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“அர்ஜுன் இவன் பிரகாஷ். பிரகாஷ் இது என் ஃபிரெண்டு அர்ஜுன்.”
பரஸ்பரம் இருவரும் அறிமுகமானதும். தான் விசாரித்துத் தெரிந்து கொண்ட தகவல்களை பிரகாஷ் கொடுக்கவும் அர்ஜுன் சுத்தமாக அதிர்ந்து போனான். இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
மணிவாசகம்தான் அனைத்தையும் செய்திருந்தார். ஆதாரத்தோடு தகவல்கள் வந்து சேர்ந்திருக்க நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

“ஸ்ரீ… மாமாவாடா? அவர் எதுக்குடா இப்படியெல்லாம் செய்யனும்?”

“சிம்பிள்… அவர் பொண்ணை நீ வேணாம்னு சொல்லிட்ட. அதனால உனக்கு குடைச்சல் குடுக்க… அவர் இதோட நிறுத்துவார்னு எனக்குத் தோனலை. அவரை ஃபாலோ பண்ண மும்பைக்கும் ஆள் அனுப்பியிருக்கேன்.”

“உனக்கு எப்படிடா அவர்மேல சந்தேகம் வந்துச்சி? என்கிட்டகூட நீ சொல்லவேயில்லை.”

“நீ எல்லாரையும் நம்புவ அர்ஜுன். நான் சொல்லியிருந்தாலும் உங்க மாமாவ நீ சந்தேகப்பட்டிருக்க மாட்ட. அவர் கிட்டதட்ட ஒரு லட்ச ரூபாய் சுபத்ராகிட்ட ஏமாத்தி மில்லு பணத்தை வாங்கிட்டு போயிருக்கார்.
அந்த விஷயத்தை உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு புரியாம என்கிட்ட சொல்லுச்சி சுபத்ரா. அப்பவே எனக்கு அவர்மேல டவுட் வந்துடுச்சி.”

“நானே அவருக்கு செலவுக்கு அவ்வளவு பணம் தரேனேடா. சுபத்ராகிட்ட வந்து ஏன் வாங்கனும்?”

“மில்லு குடோன் வருமானம் ஒரு மாசம்போல ஒரு மாசம் இருக்காது. கூடகுறைய இருக்கும். உனக்கு சந்தேகம் வரக்கூடாதுன்னு சுபத்ராகிட்ட சொல்லாதன்னு லேசா மிரட்டியிருக்காரு.”

“ஒரு மாசத்துல இவ்வளவு காசு எதுக்கு? அப்படியென்ன செலவுடா அவருக்கு?”

“இவ்வளவு நாள் எப்படியோ… இப்ப உன் மாமாவோட சேர்க்கை சரியில்லை. ரேஸ் குடின்னு சுத்தறார். பணம் செலவாகாதா இதுக்குலாம்.”
அர்ஜுனால் நம்பவே முடியவில்லை. சொல்வது ஸ்ரீராமாக இல்லையென்றால் நம்பியிருக்க மாட்டான். சிறுவயதில் இருந்து பொய்யாகவேனும் அவன் மீது பாசத்தைப் பொழிந்த மணிவாசகத்தை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

“என்ன பண்ணலாம்னு முடிவு எடுக்க வேண்டியது நீதான். ஆனா இனி அவர்மேல ஒரு கண் வச்சிக்கோ.”
வருத்தத்தோடு ஆமோதித்துக் கொண்டான் அர்ஜுன். மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், உணவை வரவழைத்து உண்டனர்.

“அர்ஜுன் நாளைக்கு சாயந்திரம் எனக்குப் பொண்ணு பார்க்கப் போறோம். கையோட நிச்சமும் பண்ணிடுவோம். அக்கா மும்பைல இருந்து வந்திருக்கா. நீயும் சுபத்ராவும் கண்டிப்பா வரனும்.”

“என்னடா திடீர்னு? எப்ப ஜாதகம்லாம் பார்த்தீங்க? முடிவு பண்றவரை என்கிட்ட சொல்லலை நீ.”

“பொண்ணு உனக்குத் தெரிந்த பொண்ணுதான்.”

“டேய்… ஜானவிதான?”
சிறு சிரிப்புடன் ஆமோதித்தவன்,

“அம்மா அப்பாவை கன்வின்ஸ் பண்ணி ஜாதகப்பொருத்தம் பார்த்து, ஒருவழியா ஓகே பண்ணியிருக்கேன். இன்னும் அவகிட்ட கூட சொல்லலை.”

“நான் அன்னைக்கே நினைச்சேன். உன் கண்ணுதான் காவியம் பாடுச்சே அந்தப் பொண்ணுகிட்ட. சூப்பர் செலக்ஷன் ஸ்ரீ. நானும் சுபாவும் கண்டிப்பா வந்துடுவோம்.”
மேலும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரும், பின்னர் விடைபெற்று அவரவர் வீட்டுக்குச் சென்றனர். மறுநாள் வழக்கம் போல விடிந்தது.

காலையில் வீட்டின் அறையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஸ்ரீராமின் அலைபேசி அதிர்ந்ததில் அழைத்தவர் யாரென்று பார்க்க ஜானவிதான் அழைத்துக் கொண்டிருந்தாள்.

அவனாக அழைத்துப் பேசுவானே தவிர அவள் அழைத்ததே இல்லை. இன்றுதான் அழைக்கிறாள். ஏற்று காதில் வைத்தவன், “ஹலோ… எப்படி இருக்கீங்க? மங்கி மேடம்.”

“நான் செம காண்டுல இருக்கேன். உங்க கேலிக்கெல்லாம் பதில் சொல்ற மூட்ல இல்லை.”

“நீ நல்ல மூட்ல இருந்தாலே நான் பாவம். காண்டுல வேற இருக்கியா…”

“ஸ்ரீராம் ப்ளீஸ்… நான் சீரியஸா பேசிகிட்டு இருக்கேன்.”

“சீரியஸ்ஸாவா… எந்த ஹாஸ்பிடல் சொல்லவேயில்லை.”

“யோவ் என்ன கொழுப்பா? படு மொக்கையா காமெடி பண்ணிகிட்டு. நானே கடுப்புல இருக்கேன். நேர்ல வந்தேன்…”

“ஹா… ஹ…ஹா… என்னடி இப்படி மிரட்ற? என்ன ஆச்சு?”

“சிரிக்காதீங்க… நான் இப்ப என்ன பண்றதுன்னே தெரியாம குழப்பத்துல இருக்கேன்.”

“அப்படி என்ன குழப்பம்?”

“எவனோ ஒரு லூசுப்பய என்னைப் பொண்ணு பார்க்க வரானாம். இப்ப காலையில வந்து எங்கம்மா சொல்லிட்டு போறாங்க.”

“இது நல்ல விஷயம்தான. இதுக்கெதுக்கு இந்த குதி குதிக்கிற. மாப்பிள்ளைய போய் லூசுங்கற… எப்படி இருக்கான் மாப்பிள்ளை?”

“உன் மூஞ்சி… மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை… மண்ணாங்கட்டி மாப்பிள்ளை. இன்னைக்கு சாயந்திரம் வரானாம். மண்டைய சிதறு தேங்காய் மாதிரி உடைக்கிறேன்.”

“ஹேய் அப்படியெல்லாம் பண்ணிடாத. கொல கேசுல உள்ள போய்டுவ…”

“ஸ்ரீராம் ப்ளீஸ். வர்றவனை ஓட ஓட விரட்டனும் ஏதாவது ஐடியா குடுங்க”

“எதுக்கு விரட்டனும் பொண்ணு பார்க்கதான வர்றாங்க. மாப்பிள்ளைய பிடிச்சா ஓகே சொல்லு. பிடிக்கலைன்னா நோ சொல்லு.”

“அதெல்லாம் எனக்குப் பிடிக்கலை நோதான்.”

“இன்னும் பார்க்கவே வரலை அதுக்குள்ள எப்படி முடிவு பண்ணுவ? மாப்ள ஃபோட்டோ ஏதும் பார்த்தியா?”

“அம்மா கொண்டுவந்து அவன் ஃபோட்டோவ குடுத்திட்டுதான் போறாங்க. ஆனா நான் பார்க்கலை. பார்க்கவும் மாட்டேன். எனக்கு யாரையும் பிடிக்காது.”

“ஏன் யாரையும் பிடிக்காது? உன் மனசுக்குள்ள வேற யாரும் இருக்காங்களா ஜானவி?” குரல் லேசாக கரகரத்தது.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “ப்ளீஸ் ஸ்ரீராம். என்னை எதுவும் கேட்காதீங்க. இப்ப எனக்கு இந்த மாப்பிள்ளையை விரட்ட ஒரு ஐடியா மட்டும் குடுங்க.”

“திடீர்னு கேட்டா எப்படிம்மா? நான் யோசிக்க வேணாமா?”
“வேணும்னா காபில பாலிடாயில கலந்து குடுத்திடவா?”

‘நம்ம சோலிய முடிக்கறதுல இவ்வளவு ஆர்வமா இருக்காளே’ மனதுக்குள் நொந்து கொண்டவன்,

“போலீசு கேசுன்னு அலையனும் பரவாயில்லையா?”

“ஓ… அப்ப பேதி மருந்து கலந்துடவா?”

“பழைய ஐடியா… வயித்த நல்லா க்ளீன் பண்ணிட்டு திருப்பி வருவான்.”

“பேசாம நான் வீட்ட விட்டு எங்கயாவது ஓடிடவா? பொண்ணு இருந்தாதான பொண்ணு பார்ப்பாங்க?”

“நீ திரும்ப வர்ற வரை உட்கார்ந்து இருந்தா என்ன செய்வ… மௌனராகம் மோகன் மாதிரி?”

“ஐயோ கடவுளே… அப்ப நான் என்னதான் செய்யறது சொல்லுங்களேன்.”

“ம்ம்… எனக்கு டக்குன்னு ஐடியா தோன மாட்டேங்குது. நாளைக்கு சொல்லவா?”

“போய்யா டுபுக்கு… உன்கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு. அந்த மண்ணாங்கட்டி இன்னைக்கு சாயங்காலம் வர்றாங்கிறேன். நீ நாளைக்கு ஐடியா தர்றேங்குற…”

“ஏய் என்னடி சகட்டு மேனிக்கு திட்ற? இரு யோசிக்க வேணாமா… இங்க பாரு பொறுமையா இரு. நான் யோசிச்சு நல்ல ஐடியாவா சாயந்திரத்துக்குள்ள தர்றேன் ஓகேவா.”

“கண்டிப்பா சொல்லுவீங்க இல்லை. எனக்கு பயமா வேற இருக்கு.”

“ஹேய் லூசு… நீ எதையும் யோசிக்காத… எதையும் சொதப்பி வைக்காத… நான் நல்ல ஐடியாவா தரேன் ஓகே.”

“ம்ம்…”

“நான் தர்ற ஐடியால மாப்பிள்ளை மயங்கிப் போயிடுவான். காலத்துக்கும் எழுந்திரிக்க மாட்டான். ஓகே வா…”

“ம்ம்… ஓகே… உங்க ஃபோனுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.
அலைபேசியை அணைத்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

ஜானவியின் மனம்தான் நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. தன் மனதுக்குள் இருப்பவன் ஸ்ரீராம் என்பதை உணர்ந்துள்ள போதும் அவனிடம் சொல்ல முடியவில்லை. அவன் தவறாக எதுவும் நினைத்துவிடுவானோ என்ற பயம் அலைக்கழித்தது.

அவனைத்தவிர வேறு யாரையும் கணவனாக நினைத்துப் பார்க்ககூட முடியவில்லை. இதில் மணப்பெண்ணாக வேறொருவன் முன்போய் எப்படி நிற்க.

இவள் பேசுவதை காதில்கூட வாங்கத் தயாராயில்லை பெற்றோர். நல்ல சம்பந்தம் பெரிய இடம் என்று பூரித்துப் போய் அலைகின்றனர். பயத்தோடு நிமிடங்களை நகர்த்த மாலையும் வந்து சேர்ந்தது.

இவளது பிடிவாதத்தையும் மீறி இவளுக்கு அழகாக புடவை கட்டி அலங்காரத்தை செய்து விட்டிருந்தார் அவளது அன்னை. ஸ்ரீராமிடம் இருந்து ஃபோன் வரும் என்று அலைபேசியை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டனர், கீழே வா” என்று அவளது அன்னை அழைக்க தன்னையறியாமல் தேகம் நடுங்கத் தொடங்கியது.

“அம்மா… ப்ளீஸ் நான் வரலைம்மா”

“என்ன ஜானு இப்ப போய் இப்படி சொல்ற? எங்களை அசிங்கப்படுத்தாத… சும்மா வந்து நில்லு. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் புரியுதா”
வேறு வழியின்றி தலையைக் குனிந்தபடி தன் அன்னையோடு சேர்ந்து நடந்து வந்தவள்,

சபையினரை கும்பிடு என்று சொல்லவும் கும்பிட்டாள். யாரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை அவள். முகமோ வெளுத்துப்போய் களையிழந்து கிடந்தது.
அவளை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்ட ஸ்ரீராமின் அக்காவும் அன்னையும் கேட்ட கேள்விகளுக்கு மெதுவாக பதில் கூறியபடி இருந்தவளை ரசித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

“டேய்… அந்தப் பொண்ணை இப்படி பப்ளிக்கா சைட் அடிச்சு ஜொள்ளுவிடதான் எங்களை இங்க கூட்டிட்டு வந்தியா?”

“இல்லையா பின்ன… இரண்டு வீட்டு பெரியவங்க சம்மதத்தோட, கேசரி பஜ்ஜி சூடான ஃபில்டர் காபி குடுத்து சைட்டடிக்க சொல்றது செமையா இருக்குல்ல.”

“இருக்கும்டா… இருக்கும்… அவ நிமிர்ந்து பார்க்கும்போது உனக்கிருக்கு.”
நண்பர்கள் குசுகுசுவென்று தங்களுக்குள் பேசிக் கொள்ள…

அவர்களை முறைத்த சுபத்ராவுக்கு ஜானவியின் வெளுத்த முகத்தையும், பயந்த தோற்றத்தையும் பார்த்து பாவமாக இருந்தது.

“மாப்பிள்ளைய நல்லா நிமிர்ந்து பார்த்துக்கோம்மா” என்றாள்…
சுபத்ராவின் குரலில் திடுக்கென்று நிமிர்ந்தவள் மாப்பிள்ளையாக குறும்புச் சிரிப்புடன் அமர்ந்திருந்த ஸ்ரீராமைப் பார்த்து கண்கள் கலங்க பேச்செழாமல் அமர்ந்திருந்தாள்.

புருவத்தை உயர்த்தி கண்களைச் சிமிட்டியவனை பார்த்து மெலிதாக சிரித்தவள், மறு நொடியே முறைக்கத் தொடங்கினாள். அவளது மாறும் முகபாவங்களைப் பார்த்தபடி இருந்தவனுக்கு சிரிப்பு பொங்க…

“பொண்ணுகூட நான் கொஞ்சம் தனியா பேசனுமே” என்க, பெரியவர்களும் சம்மதித்ததால் தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அறைக்குள் நுழைந்ததும் அவனை முறைத்தவளைப் பார்த்து சிரித்தவன், “என்ன மேடம் இப்ப ஐடியா தரவா? மாப்பிள்ளைய விரட்ட…”

“யூ… சீட்டர்… ஏன் என்கிட்ட காலையிலயே சொல்லல… நீங்கதான் மாப்பிள்ளைன்னு. நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா?” என்றபடி அவனது நெஞ்சில் சில அடிகளைப் போட்டவளைத் தடுத்து அணைத்துக் கொண்டவன், “இந்த த்ரில்லுக்காகதான் சொல்லல. நீ மட்டும் என்மேல இருக்கற ஆசையை சொன்னியா?”

“உங்களுக்கு எப்படி தெரியும்?” விழிகளை விரிக்க…

“ஒரு அழகான பொண்ணு, வேணும்னே என்கிட்ட வம்பிழுத்து, மறந்து போனதெல்லாம் நியாபகப்படுத்தினா, ஏன்னு நான் யோசிக்க மாட்டேனா? அதுவும் சிம்பாலிக்கா ஜாதகமெல்லாம் அனுப்பினா… புரிஞ்சிக்க முடியாதவனா நான்?
என்ன… நீயே சொல்லுவன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். நீ சொல்ற மாதிரி தெரியல… அதான் நானே எங்கப்பா அம்மாவ கூட்டிகிட்டு பொண்ணு பார்க்க வந்துட்டேன்.

இப்ப கீழ போனதும் கேட்பாங்க… மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு சொல்லுவியா? பிடிக்கலைன்னு சொல்லுவியா?”

மூக்கால் அவளது மூக்கை உரசியபடி கேட்க… “இந்த மாப்பிள்ளையை தவிர வேற யாரையும் பிடிக்காதுன்னு சொல்லுவேன்.”

“காலையில ஏதோ ஐடியா கேட்டியே இப்ப தரவா?” அவனது பார்வையும் குரலும் வேறு கதை பேச… அவனது அணைப்பில் நெளிந்தபடி,

“என்ன ஐடியா…”

“ஒரே ஒரு முத்தம் கொடு… இந்த மாப்பிள்ளை காலமெல்லாம் மயங்கிக் கிடப்பான்.”

“அதெல்லாம் முடியாது… உங்க ஐடியாவே வேணாம் எனக்கு… என்னை விடுங்க.”
அணைப்பிலிருந்து விலகப் பார்த்தவளை மேலும் தன்னுள் இறுக்கியவன், “நீ குடுக்கலைன்னா போ… நானே எடுத்துக்கறேன். இன்னைக்கு மயங்கற முடிவோடதான் வந்திருக்கேன்.” என்றபடி அவளது இதழ்களை தன்வசப்படுத்த, முதலில் திமிறியவளோ பின்னர் அடங்கிப் போனாள்.

எவ்வளவு நேரமோ… தேனுண்ணும் வண்டாகக் கிறங்கிப் போயிருந்தவன், அவள் மூச்சுக்குத் தவிக்கவும் விலகினான். முகமும் இதழ்களும் சிவந்து பேரழகோடு மிளிர்ந்தவளின் நெற்றியில் இதழ் பதித்தவன், “கீழ போலாமா… நமக்காக எல்லாரும் வெயிட் பண்ணிகிட்டு இருப்பாங்க.”
மெல்லத் தலையசைத்தவளை அழைத்துக் கொண்டு கீழிறங்கி வந்தவன் இருவருக்கும் சம்மதம் என்று தெரிவிக்க, மகளது முகமலர்ச்சியில் அவளது சம்மதத்தைப் புரிந்து கொண்ட ஜானவியின் பெற்றோரும் மிகவும் மகிழ்ந்து போயினர்.

இரு வீட்டினரும் கலந்து பேசி அடுத்து வரும் முகூர்த்தத்தில் திருமணம் வைத்துக் கொள்ள முடிவு செய்து, நிச்சயத்தை அன்றே எளிமையாக செய்து முடித்தனர்.

தொடரும்…