En Jeevan niyadi 2
En Jeevan niyadi 2
என ஜீவன் நீயடி… 2
அலர்மேல்மங்கை சுந்தரம் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். ஆண் ஒன்று பெண் ஒன்று. மூத்தவள் பத்மா.
இளையவன் மணிவாசகம். ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சுந்தரத்தின் மரணம் புரட்டிப் போட்டது.
முப்பது வயதே ஆன மங்கை தனது கணவர் விட்டுச் சென்ற பலசரக்கு கடையை எடுத்து நடத்தியதோடு மட்டுமில்லாமல், தன்னைத் தவறான நோக்கத்தோடு நெருங்கிய அனைவருக்கும் தகுந்த பாடம் புகட்டும் அளவுக்கு தைரியத்தோடும் இருந்தார்.
இரண்டு பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்த்தவர், மூத்த பெண் பத்மாவை, ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்து விளங்கிய சேதுபதிக்கு சீரும் சிறப்புமாக திருமணம் முடித்து வைத்தார்.
அதுவரையில் தனது நண்பன் மாதவனுடன் சேர்ந்து சாதாரண பருப்பு மொத்த வியாபாரம் செய்துகொண்டிருந்த சேதுபதி திருமணத்திற்குப்பின் மளமளவென்று தொழிலில் வளர்ச்சியடைய, அதற்கு பத்மாவின் ராசியே காரணம் என்று அவளைத் தலையில் வைத்துக் கொண்டாடினார்.
மேலும் அவர்களது தவப்புதல்வனாக அர்ஜூன் பிறந்ததும் லட்சாதிபதியாக இருந்தவர் கோடீஸ்வரராக உயரத் தொடங்கினார். பருப்பு மொத்தமாகக் கொள்முதல் செய்து பட்டை தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்.
பெரிய பெரிய பிஸ்கட் சாக்லேட் கம்பெனிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு முந்திரி பாதாம் வேர்கடலை பருப்புகளை வறுத்தும் அரைத்தும் கொடுக்கும் யூனிட் ஒன்றையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தினார்.
மேலும் அந்தப் பருப்புகளில் இருந்து பட்டர் ஜாம் ஆகியவை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யத் தொடங்கினார். அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. சேதுபதியின் நண்பனும் தக்கத் துணையாக இருக்க அவர் கால் பதித்த இடமெல்லாம் செழிக்கத் துவங்கியது.
சேதுபதியின் நண்பன் மாதவனுக்கு தொழில் சூட்சுமங்கள் எதுவும் தெரியாது. வெள்ளந்தியான கிராமத்து மனிதர் அவர்.
சேதுபதியின் தொழில் திறமையை கண்டு கொண்டு தொழில் செய்வதற்கான பெருமளவு பணத்தை சேதுபதியிடம் கொடுத்து தொழிலை ஆரம்பிக்கச் சொன்னவர், சேதுபதி சொல்படி கேட்டு நடந்து கொள்வார்.
சேதுபதியும் வெகு நாணயமான மனிதர். தொழில் திறமை முழுவதும் அவருடையதாக இருந்தாலும், தொழில் முதலீட்டுத் தொகை நான்கில் மூன்று பகுதி மாதவனுடையது என்பதை மறக்காமல் லாபத்திலும் சரிபாதியை பங்கிட்டு கொடுத்து விடுவார்.
தான் லாபத்தை சரியாக பங்கிட்டு கொடுக்காமல் ஏமாற்றினாலும் மாதவனுக்கு கண்டுபிடிக்கத் தெரியாது என்பது சேதுபதிக்கு நன்கு தெரியும். தன் நண்பனுக்கு பாழும் உலகின் பாதகங்களை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும்,
“என்னையும் என் குடும்பத்தையும் நீ நல்லா பார்த்துக்குவங்கற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு சேது. இந்த சூட்சுமமெல்லாம் எனக்கெதுக்கு? உன்னை நம்பாம யாரைடா நான் நம்பப் போறேன்?” என்று கூறுபவரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் போகும் சேதுபதிக்கு.
கண்கள் கண்ணீரில் நிறைய… நட்பின் நம்பிக்கை தந்த பெருமிதத்தில் நெஞ்சம் நிறைய,
“ஒருவேளை நான் உன்னை ஏமாத்திட்டா என்ன செய்வ மாதவா?”
வெள்ளந்திச் சிரிப்போடு, “நீ என்னைய என்னைக்கும் ஏமாத்த மாட்டேன்னு எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு சேது. அப்படியே நீ என்னை ஏமாத்திட்டாலும், என் நண்பன் நீ நல்லா இருந்தாலே போதும்டா.” என்ற நண்பனின் நம்பிக்கையை மட்டும் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொள்வார் சேதுபதி.
மாதவனுக்கும் கோமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க, நகரின் மையத்தில் ஒரே மாதிரியான இரண்டு வீடுகளைக் கட்டி அதில் நண்பர்கள் இருவரும் குடியேறினர்.
மகளது வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருப்பதைப் பார்த்து வெகுவாக ஆனந்தப்பட்ட அலர்மேல்மங்கை, அடுத்த சில வருடங்களில் தனது மகன் மணிவாசகத்திற்கும் லோகேஸ்வரி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்து, அவர் நிர்வகித்த தொழிலை மகன் வசம் ஒப்படைத்தார்.
பத்மாவுக்கு அர்ஜுன் பிறந்த பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவில் உடல் மிகவும் சோர்வுற்று இருக்க, அலர்மேல்மங்கை உதவிக்காக மகளுடன் சென்று சில மாதங்கள் தங்கியிருந்தார். பத்மாவைக் கவனித்துக் கொண்டு தனது பேரன் அர்ஜுனுடன் பொழுதை இனிமையாகக் கழித்து வந்த அலர்மேல்மங்கைக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஊதாரியான மகனும் பெரும் செலவாளியான மருமகளும் சேர்ந்து அவர் கணவர் ஆரம்பித்த பலசரக்குக் கடையை சில மாதங்களிலேயே நிர்மூலமாக்கியிருந்தனர்.
உடல்நலம் தேறி வந்த பத்மா வசம் பேரனை ஒப்படைத்துவிட்டு தனது ஊருக்குத் திரும்பிய அலர்மேல்மங்கை என்ன செய்தும் தொழிலை மீட்க முடியவில்லை.
குடியிருந்த வீட்டை விற்று அனைத்துக் கடன்களையும் அடைப்பதைத் தவிர வேறு வழியும் இருக்கவில்லை அவருக்கு.
செய்தியறிந்த சேதுபதி தனது தொழில்களில் உதவி செய்துகொண்டு எங்களுடனே இருங்கள் என்று கூறி அவர்களை அழைத்து வந்து, அவர்கள் அனைவரையும் தங்கள் வீட்டிலேயே தங்க வைத்தார்.
மணிவாசகத்திற்கு கம்பெனியில் முக்கிய பொறுப்பு ஒன்றையும் கொடுத்தார். ஆனால் சில மாதங்களிலேயே மணிவாசகத்தின் தில்லுமுல்லுகளை அறிந்து கொண்ட சேதுபதி, தனது மனைவியின் முகத்துக்காகவும் அலர்மேல்மங்கையின் முகத்துக்காகவும், எச்சரிக்கை மட்டும் விடுத்து கம்பெனி பொறுப்புகளில் இருந்து வெளியேற்றினார்.
ஆனால் மணிவாசகத்தை வீட்டு நிர்வாகத்தை தன் மனைவியுடன் சேர்ந்து பார்த்துக் கொள்ளும்படி கூறி, மனைவியிடமும் லேசாக எச்சரித்து வைத்தார். நாட்கள் இப்படியே நகர மணிவாசகத்திற்கும் பெண் குழந்தை ஒன்றும் பிறக்க…
வேறு பெரிய பிரச்சனைகள் இன்றி அனைவரும் ஒரே குடும்பமாக வசிக்கத் துவங்கினர்.
இந்த காலகட்டத்தில் மாதவனுக்கும் கோமதிக்கும் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. நாட்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு நகர்ந்தன.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வில் யார் கண்பட்டதோ…
அர்ஜுனின் ஏழாவது பிறந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடிவிட்டு குடும்பத்தோடு திருப்பதிக்கு சுற்றுலா செல்லும் போது நடந்த விபத்தில் பத்மாவும், சேதுபதியும், சேதுபதியின் நண்பன் மாதவனும் காலமாகிவிட வெகுவாக இடிந்து போனார் அலர்மேல்மங்கை.
அன்றிலிருந்து இன்றுவரை அர்ஜுனுக்கு தாய் தந்தை அனைத்தும் அவரே. ஆனால் மகள் மற்றும் மருமகன் அவரது நண்பனின் மரணத்தில் சந்தேகம் கிளம்பியதை அடுத்து அவர் யாரையும் நம்பாமல் சேதுபதியின் அனைத்துச் சொத்துக்களையும் தொழிலையும் நிர்வகித்து அர்ஜுனின் இருபத்து நான்காவது வயதில் அவனிடம் ஒப்படைக்கும் வரை அயராது உழைத்தார்.
அதற்குப் பின்னும் சென்ற வாரம் வரை அவனுக்கு ஒரு கவசம் போல உடனிருந்து பாதுகாத்தவர் அவர். அதுமட்டுமில்லாமல் ஒரு சாணக்கியன் போல தொழிலின் அனைத்து சூட்சமங்களையும் புரிய வைத்தவர் அவரே. அப்பேர்ப்பட்ட பாட்டியின் இழப்பு கண்டிப்பாக தனக்கு பேரிழப்பாக இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும்.
இத்தனை வருடங்களில் அவன் கேட்டு எதையுமே மறுத்துப் பேசியிருக்காத அலர்மேல்மங்கை அவனுடைய திருமண விஷயத்தில் அவனது ஆசையை நிர்தாட்சண்யமாக மறுத்திருந்தார். பாட்டி காரணம் எதுவும் கூறாமல் மறுப்பை மட்டும் தந்தது அவனுக்கு சற்று வருத்தத்தைக் கொடுத்திருந்தது.
அவனும் அவர் அவனுக்காக பார்த்த மற்ற பெண்களை நிராகரித்து முப்பது வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான். ஸ்வேதாவை வேண்டாம் என்பதற்கு காரணமும் அவர் இதுவரை சொன்னதில்லை அவனுக்கு.
பாட்டியின் பல நடவடிக்கைகள் அவனுக்குப் புரியாத புதிர்தான். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் குணமுடைய அர்ஜுனுக்கு, தன் நிழலைக்கூட சந்தேகப் பார்வை பார்க்கும் பாட்டி ஒரு ஆச்சர்யமான புதிர்தான்.
ஆனால் எது எப்படியோ அவனுக்கு அள்ள அள்ளக் குறையாத பாசத்தை அள்ளி வழங்கிய பாட்டியின் மனதை வருத்தும் எந்தச் செயலையும் செய்ய இதுவரை அர்ஜுன் துணிந்ததில்லை. இனித் துணியவும் மாட்டான்.
வாழ்க்கை போகிற போக்கில் பல பாடங்களை நமக்கு சொல்லித் தந்துவிட்டு செல்கிறது. ஆனால் அவற்றிலிருந்து நாம் கற்றதும் பெற்றதும் நம்மை பாதிக்கும் போது தாங்க முடிவதில்லை.
மிகுந்த சந்தோஷம் வரும் போது ஆர்பரிக்கும் மனம் துக்கத்தில் தொய்ந்து போவது இயல்புதானே. என்ன நடந்தாலும் எது வந்தாலும் சலனமில்லாமல் இருப்பதற்கு நாம் முற்றும் துறந்த முனிவர்கள் இல்லையே…
அர்ஜுன் மனமும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. பாட்டியுடன் வெகு நேரம் அமர்ந்து இருந்து அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், மருத்துவர் அழைப்பதாக வந்து சொல்லிய செவிலியின் பின் சென்றான்.
மருத்துவரின் அறையில் அரைமணி நேரமாக அவர் விளக்கிய செய்தியின் சாராம்சம் இதுதான்.
“அவங்க இனி பழையபடி திரும்பி வர்றது ரொம்ப கஷ்டம் மிஸ்டர் அர்ஜுன். அவங்களோட இரண்டு சிறுநீரகங்களும் கொஞ்ச கொஞ்சமா செயலிழந்துட்டு வருது. எந்த நேரமும் மாஸிவ் அட்டாக் வரலாம்.
எங்களால முடிஞ்ச அளவுக்கு ட்ரீட்மெண்ட் செய்துகிட்டுதான் இருக்கிறோம். ஆனா அதை அவங்க உடல்நிலை ஏத்துக்க மாட்டேங்குது. அதுக்கும் மேல கடவுள் விட்ட வழி.”
கண்களில் மெல்லிய நீர்படலம் இன்ஸ்டன்ட்டாக தோன்றி அவனது விழிகளை பளபளப்பாக்கியது.
கரகரத்த குரலை சரிசெய்து கொண்டு. “அவங்களோட இறுதி நேரங்கள் அமைதியா இருக்கனும் டாக்டர். அவங்களுக்கு வலி எதுவும் இல்லாமல் இருக்க என்ன செய்யனுமோ அதைச் செய்ங்க.”
மௌனமாக அவன் கூறியதை ஆமோதித்த மருத்துவர், “அவங்ககூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. அவங்களோட ஆசைகள் என்னென்னனு கேட்டு நிறைவேற்றுங்க. மனசை தைரியமா வச்சுக்கோங்க அர்ஜுன். பி ஸ்ட்ராங்.”
மருத்துவர் கூறியதைக் கேட்டுக் கொண்டு வந்து ஐசியூவின் வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் வெகுவாக தளர்ந்து போயிருந்தான்.
கடந்த மூன்று நாட்களாக பாட்டிக்கு உணவு செல்லவில்லை. சலைனும் மருந்தும் மட்டுமே குழாய் வழியாக சென்று கொண்டிருக்கிறது.
வயிற்றில் லேசாகப் பசியை உணர்ந்தாலும் உண்ணப் பிடிக்கவில்லை. தலையைக் கைகளில் தாங்கியபடி அமர்ந்திருந்தவனின் தோள்களில் மெல்லிய கரங்களின் ஸ்பரிசம் பட்டதும் மெல்ல நிமிர்ந்து பார்த்தான். சரஸ்வதிதான் நின்றிருந்தார்.
“கண்ணா… போய் சாப்பிட்டு வாப்பா… அதுவரை நான் இங்க இருக்கேன்.”
“ம்ப்ச்… பசியில்ல பெரியம்மா… பாட்டி நம்மகூட சில நாட்கள்தான் இருப்பாங்கன்னு டாக்டர் சொல்றார். மனசெல்லாம் பாரமா இருக்கு பெரியம்மா.” அவரது முகம் பார்த்து ஏக்கத்துடன் கூறியவன் இன்றும் சிறு பாலகனாகத்தான் தெரிந்தான் அவருக்கு.
சரஸ்வதி அர்ஜுனின் தந்தை சேதுபதியின் மாமன் மகள். ஒன்றாக ஒரே வீட்டில் வளர்ந்த, சம வயதினரான இருவருக்கும் இடையில் நல்ல நட்பும் சகோதர பாசமும் இருந்தது. திருமண வயது வந்ததும் சரஸ்வதிக்கு நல்ல முறையில் பத்மநாபன் என்பவரோடு திருமணம் முடித்து வைத்ததே சேதுபதிதான்.
பத்து ஆண்டுகள் கணவரோடு இனிய இல்லறம் நடத்திய சரஸ்வதிக்கு குழந்தை இல்லை என்ற குறையைத் தவிர வேறு குறை இல்லை. மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கிய பத்மநாபன், தன் மனைவியை குழந்தை இல்லை என்ற குறையைச் குத்திக்காட்டி ஒரு வார்த்தைகூட பேசவிட்டதில்லை யாரையும்.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த அவர்களது வாழ்வில், ஒரு கறுப்பு தினத்தன்று பத்மநாபன் பணியிடத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் காலமானதும், ஒரே நாளில் யாருமற்ற அநாதையாகிப் போனார் சரஸ்வதி.
தன் கணவரின் குடும்பத்தினரே மோசமாகப் பழித்துத் தூற்றவும், அங்கிருக்க முடியாமல் சேதுபதியிடம் அடைக்கலமாக வந்தவரை அரவணைத்துக் கொண்டார் பத்மா. வாழ்க்கையையே வெறுத்து வெகுவாக ஒடுங்கிப் போய் இருந்தவரின் கையில் அர்ஜுனைக் கொடுத்து சரஸ்வதியை மீட்டுக் கொண்டு வந்ததும் பத்மாதான்.
குழந்தையின் முகம் பார்த்து தன்னைத் தேற்றிக் கொண்டவரை மீண்டும் நொறுக்கிப் போட்டது சேதுபதி பத்மாவின் இழப்பு… விபரம் அறியாத வயதில் தாய் தந்தையை இழந்து நின்ற அர்ஜுனைத் தனது பிள்ளையாகவே வரித்துக் கொண்டார் சரஸ்வதி.
அலர்மேல்மங்கை சேதுபதியின் தொழில் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ள, அர்ஜுனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் சரஸ்வதி. அலர்மேல்மங்கையும் சரஸ்வதியைத் தவிர ஒருவரையும் நம்பி தனது பேரனை விட மாட்டார்.
அந்த அளவுக்கு அவரது நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்தவர் சரஸ்வதி.
பெறாத மகனான அர்ஜுன் மீது உயிரையே வைத்திருந்த சரஸ்வதிக்கு என்றும் அவன் கண்ணா தான்…. அவருடைய கண்ணா என்கிற பிரத்யேக அழைப்பு அர்ஜுனுக்கு வெகு பிரியமானதும்கூட….
ஆறுதலாக அர்ஜுனின் தலையைக் கோதிவிட்டவர், “கண்ணா… இனி அவங்களுக்குத் தேவை மன அமைதிதான். அவங்க மனசு எந்த விதத்துலயும் சஞ்சலப்படாம அமைதியான முறையில அவங்களோட இறுதி நொடிகள் இருக்கனும். அதுக்கு என்ன செய்யனுமோ அதைச் செய்ப்பா.”
புரியாமல் குழப்பத்தோடு தனது பெரியம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன், “நான் என்ன செய்யனும் பெரியம்மா?”
‘காரண காரியம் இல்லாம இந்த உலகத்துல எதுவுமே நடக்கறது இல்ல… உங்க பாட்டி மனசுல தீராத பாரம் ஒன்னு இருக்கு. அது அவங்களே உனக்குச் சொல்லாதப்ப நான் எப்படி சொல்ல முடியும்? உனக்குத் தெரியனும்னு இருந்தா தன்னால தெரியவரும் கண்ணா…’ மனதுக்குள் எண்ணியவர்,
“ஒன்னுமில்லப்பா… பாட்டி என்ன ஆசைப்படறாங்களோ அதைச் செய்ப்பா… உன் கல்யாணத்தை தவிர இப்ப அவங்களுக்கு வேற என்ன ஆசையிருக்க முடியும்?”
சரஸ்வதியின் வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுன் அமைதியாகிப் போனான். பாட்டிக்குதான் ஸ்வேதாவை தான் திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லையே… இதுவரையில் தனது திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் புரியாத பார்வை பார்த்து, மறுப்பைத் தெரிவித்த அலர்மேல்மங்கை நினைவுக்கு வந்தார்.
‘நான் ஸ்வேதாவைக் கல்யாணம் செய்யறது நிச்சயமா பாட்டிக்கு சந்தோஷத்தைத் தரப் போவதில்லை. ஸ்வேதாவைத் தவிர யாரையும் திருமணம் செய்யும் எண்ணமும் தனக்கு இல்லை. இந்தப் பேச்சை இப்போது எடுக்காமல் இருப்பதே நல்லது’ என்று எண்ணிக் கொண்டான்.
எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தவனைப் பேசிக் கரைத்து உணவு உண்ண அனுப்பிய சரஸ்வதிக்கு பழைய நினைவுகள் உள்ளுக்குள் அலைமோதின.
உடன் பிறந்த சகோதரி போல பாசம் காட்டிய பத்மாவும், பெற்ற மகளைப் போலவே பாசம் காட்டிய அலர்மேல்மங்கையும் தனக்கு உறவாகக் கிடைத்தது தான் செய்த புண்ணியமே என்று எண்ணிக் கொண்டார்.
கணவரை இழந்து அடைக்கலமாக வந்தவளை அரவணைத்துக் கொண்ட குடும்பத்துக்கு எந்தத் தீங்கும் வந்துவிடக்கூடாது என்று இறைவனை இறைஞ்சிக் கொண்டார்.
அலர்மேல்மங்கை திடமாக இருந்தவரை சரஸ்வதிக்கு பெரிதாக எந்த பயமும் இருந்ததில்லை. அவரது ஆளுமைக்கு முன் அனைவருமே பெட்டிப் பாம்பாக அடங்கி இருந்தனர். ஆனால் அவருக்குப் பின் அர்ஜுனை எந்த தீமையும் அண்டாமல் பாதுகாக்கும் பொறுப்பு தனக்கிருக்கிறது என்பதையும் எண்ணிக் கொண்டார்.
வியாபாரத்திலோ வேறு வெளியாட்களிடமோ அர்ஜுன் காட்டும் முகமே வேறு. திறமையோடு எந்தவிதமான சூழ்நிலையையும் கையாளும் திறன் பெற்றவன்.
ஆனால் குடும்பத்தில்…? நம்பக் கூடாதவர்களையும் நம்பிக் கொண்டு… பொருத்தமில்லாதவளை மனைவியாக்க நினைக்கிறானே… அதை நினைக்கையில் பெருமூச்சு ஒன்று தோன்றிற்று சரஸ்வதிக்கு.
ஆனால் அலர்மேல்மங்கை உயிருடன் இருக்கும்வரைதான் இந்தத் திருமணம் தடைபடும். அவருக்குப் பின் அவன் மனதுக்குள் நினைப்பதை நடத்திக் கொள்ளுவான். அதைத் தன்னால் கண்டிப்பாகத் தடுக்க முடியாது என்பதை நினைக்கையில் ஆயாசமாக இருந்தது அவருக்கு.
எது எப்படியோ அவனுடைய நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் எந்தப் பிரச்சினையும் வராமல் இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டார்.
எட்டையபுரம்…
வெகுசுமாரான அந்த ஓட்டு வீட்டின் முன் சிறிய அளவில் பந்தல் போடப்பட்டு, பச்சை ஓலை முடைந்து கொண்டிருந்தனர் இருவர். மெல்லிய சங்குச் சப்தம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.
கிராமம் ஆகையால் ஊரில் இருந்த வயதான பெண்கள் சிலர் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். சொற்பமான அளவிலே சிலர் வாசலில் அமர்ந்திருந்தனர்.
“ஏப்பா… எப்ப எடுக்கறது?”
“ஏறுபொழுது போகட்டும்… மூனு மணிக்கு மேல எடுத்துடலாம்.”
“சொந்தம் பந்தம் யாருமில்லாம ஒத்த பொம்பளப் பிள்ளைய கைல பிடிச்சிக்கிட்டு ஊருக்குள்ள வந்த பொண்ணு. படாத கஷ்டம் பட்டு புள்ளைய வளர்த்து அதுக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்க்கும் முன்ன விதி முந்திக்கிச்சே…”
வருத்தமாகப் பேசியவரின் பேச்சைக் கேட்டவாறு மௌனமாக அமர்ந்திருந்தார் மருதமுத்து.
உடலால் தளர்ந்துவயது கூடி முதிர்ந்து போயிருந்த அவரது மனமும் வெகுவாக இறுகிப் போய் இருந்தது.
சாகும் வயதா கோமதிக்கு? ஒற்றைப் பிள்ளையை யாருமற்ற அநாதையாக்கிவிட்டு காலன் அவளை இப்படிக் கொண்டு போனானே என்று உள்ளுக்குள் மருகிக் கொண்டார்.
சாகும் தருவாயில் கோமதி கூறிய விஷயங்கள் காதினுள் ஒலித்துக் கொண்டிருந்தது. எப்படி வாழ்ந்திருக்க வேண்டிய பெண்? இந்த கிராமத்தில் வந்து எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து, ஒற்றைப் பிள்ளையை சிரமப்பட்டு வளர்த்து…. ஆயாசப் பெருமூச்சு கிளம்பியது அவரிடத்தில்.
இரத்த சம்பந்தம் இல்லாவிட்டாலும், ஊருக்குள் அநாதரவாக வந்து தனக்குச் சொந்தமான வீட்டிற்கு வாடகைக்குக் குடிவந்த கோமதியை தனது மகளாகவே பார்த்து வந்தவர் மருதமுத்து.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை காட்டு வேலையோ, வயல் வேலையோ, பெரிய வீடுகளில் சமையல் வேலையோ ஏதோ ஒன்றை மாற்றி மாற்றி செய்து மகளை பூப்போல பொத்திப் பொத்தி வளர்த்தவர்தான் கோமதி.
பாழாய்ப் போன நுரையீரல் அழற்சி வந்து, அவரைக் குற்றுயிராக்கியது. ஒன்றரை வருடங்களாக நோயோடுப் போராடி இதோ இன்று விடுதலைப் பெற்றவளை வேதனையோடு திரும்பிப் பார்த்துக் கொண்டார்.
மருதமுத்துவும் பெரிதாக வசதியானவர் கிடையாது. அவரும் அவரது மனைவியும் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கும் நான்கு ஓட்டு வீடுகளை வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தில் ஜீவிதம் செய்கிறவர்களே.
ஒன்றரை வருடங்களாக கோமதியால் சரிவர வாடகை கொடுக்க முடியாத போதும், பழகிய பழக்கத்துக்காக அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கோமதிக்கும் அவரது மகள் சுபத்ராவுக்கும் பாதுகாப்பாக இருந்து வந்தனர்.
மெல்லத் தலையைத் திருப்பி வீட்டினுள் பார்த்தார். நடுக்கூடத்தில் கிடத்தப் பட்டிருந்த கோமதியின் தலைமாட்டில் நல்ல விளக்கு ஒன்று ஏற்றி வைக்கப் பட்டு ஆடாமல் அசையாமல் எரிந்து கொண்டிருந்தது. ஊதுபத்திகள் சிலவும் ஏற்றி வைக்கப் பட்டிருந்தன.
அவரது அருகே அவரது முகத்தைப் பார்த்தவாறு மரவட்டையாகச் சுருண்டு படுத்திருந்தாள் சுபத்ரா. அழுதழுது கண்ணீர் வற்றிப் போயிருந்தது. செக்கச்சிவந்து வீங்கிப் போன கண்கள் இமைக்காமல் தாயின் முகத்தை வெறித்தவாறு இருந்தன.
வாழ்வின் ஒற்றை ஆதாரத்தையும் இழந்து, யாருமற்று இருக்கும் நிலையை எண்ணிக் கழிவிரக்கத்தில் கண்களின் ஓரம் கசிந்தது. உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவர்கூட அருகில் இல்லை.
மருதமுத்துவின் மனைவி மங்களம் மட்டும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அவளது தலையைத் தூக்கி மிகவும் கஷ்டப்பட்டு தண்ணீர் மட்டுமாவது அருந்தச் செய்து கொண்டிருந்தார். அவரது மனமும் மிகவும் பாரமாக இருந்தது.
கோமதியும் சரி சுபத்ராவும் சரி அதிர்ந்து கூடப் பேசாத இயல்புடையவர்கள். தனியே இருக்கும் தம்மை ஊரார் ஒரு வார்த்தை கூடத் தவறாகப் பேசிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருப்பார் கோமதி. மகளையும் அதுபோலவே ஒழுக்கத்தோடு வளர்த்திருப்பார்.
அவர் திடமாக இருந்தவரை வெளியுலக கஷ்டம் தெரியாமல் மகளை வளர்த்தவர், உடல்நலம் சரியில்லாமல் இருந்த இந்த ஒன்றரை வருடங்களாக மட்டுமே சுபத்ராவை அருகே இருந்த மிட்டாய் கம்பெனிக்கு கணக்கு எழுதும் வேலைக்கு அனுப்பினார்.
சுபத்ரா வணிகவியலில் இளநிலைப்பட்டம் மட்டுமே பெற்றிருந்தவள், தாயின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு வேலைக்குச் சென்று வந்தாள்.
தாயின் இறுதிகாலத்தில் அவரை எப்படியாவது காப்பாற்றி விடமாட்டோமா என்ற எண்ணத்தில், தான் வேலை செய்யும் கம்பெனியில் கடனை வாங்கி, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்தும் பெரிதாக பலனின்றிப் போனது.
இறுதி நிமிடங்களில் வெகுவாகச் சிரமப்பட்டு உயிரிழந்த தாய்க்கு, இது நோயிலிருந்து கிடைத்த விடுதலைதான் என்பது அறிவுக்குப் புரிந்தாலும், மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.
தன்னை தனியே விட்டுப் போனதில் தாயின் ஆத்மா சாந்தி அடையாமல் தன்னைச்சுற்றி அலைமோதிக் கொண்டுதான் இருக்கும் என்பதை நினைத்த மாத்திரத்தில் மீண்டும் அழுகை உடைப்பெடுத்தது.
சுபத்ராவின் அருகே வந்து அமர்ந்த மங்களம், “அழுகாதடா கண்ணு… மனசைத் தேத்துடா… போய் சேர்ந்த மகராசி பரிதவிச்சுப் போவா… நீ திடமா இருந்தாதான் அவளுக்கு அமைதி கிடைக்கும்.”
“பாட்டி…” மங்களத்தைக் கட்டிக் கொண்டு அழுத சுபத்ராவின் அழுகையை நிறுத்தியது ஒரு குரல்.
“எனக்குச் சேரவேண்டிய பணத்தை வட்டியோட எடுத்து வைக்காம பொணத்தைத் தூக்க விடமாட்டேன்.” கர்ஜனையோடு வந்த குரலுக்குரியவனை சிலர் பயத்தோடும் சிலர் அதீத வெறுப்போடும் பார்த்திருந்தனர்.
முரட்டுத்தனமான தோற்றத்தோடு கந்துவட்டிக்காரன் போல நின்றிருந்த ராஜேந்திரனைப் பார்த்த சுபத்ராவின் விழிகள் அச்சத்திலும் வெறுப்பிலும் விரிந்தது.