en manathu thamarai poo 16
en manathu thamarai poo 16
16
குங்குமத் தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு
ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்
ரிங் டோனில் தலை திருப்பிய செந்தாமரை யார் என்று எண்ணைப் பார்த்தாள.; “கவின்’ என்று கடுப்பானாள். ‘அவனுக்கு எப்படி என் நம்பர் தெரியும்?’ என்று நெற்றியைத் தட்டினாள். அவன் ஆனந்தி ஸ்டோர்ஸ் ஓனர் என்பதால் அவன் எண்ணை தொழில் நிமித்தம் வைததிருந்தாள். ஆனால் பதிவு செய்து வைக்கவில்லை. அந்த எண்ணை மனதில் பதிவு செய்து கொண்டாள். அழிக்கிற வேலை மிச்சம் என்று புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்து மனதில் அவன் எண்ணையும் எண்ணங்களையும் பதிந்து கொண்டு இருந்தாள். அவள் அறியாமலே.
தற்போதுதான் தர்மயுத்தம் படம் பார்த்து இந்தப் பாடலில் ஈர்க்கப்ட்டு ரிங் டோனாக வைத்து இருந்தாள்.
ஃபோனை எடுத்து “ஹலோ நான் பேய் பேசறேன்” என்று நக்கலாக ஆரம்பிக்கவும் “அதுதான் தெரியுமே?” என்றான் அவன் அதை விட நாக்கலாக.
‘இவன் ஒருத்தன்’ என்று வெடுவெடுத்தவள் “ஸாரி ஸார். நீங்கன்னு நினைக்கலை. இதுவரை எனக்கு நீங்க இநத நம்பர்ல இருந்து ஃபோன பண்ணதில்ல. ஸோ யாரோ ராங் நம்பர்னு நினைச்சு பேசிட்டேன்” என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட அவனோ “ யாரா இருந்தாலும் தன்மையா எடுத்துப் பேசி அமைதியா பதில் சொல்லிப் பழகனும் செந்தாமரை. இல்லன்னா அட்மினிஸ்ட்ரேஷன் கஷ்டம்” எனவும் ‘இவனோட ஒரே குஷ்டமப்பா’ என்று சலித்துக் கொண்டு “ஓகே ஸார் இனி ஃபாலோ பண்ணிக்கிறேன்” என்றாள்
“யாரு என்னையா ஃபாலோ பண்ணப் போறே?”
“யெஸ் ஸார் நீங்க தானே என்னோட ஓனர்” என்று வெகுளியாக அவள் கூறவும் அந்தப் பக்கம் பக்கம் பக்கமாக மனதிற்குள் சிரித்துக் கொண்டான் கதிரவன்.
“பேச்செல்லாம் சிறப்பாத்தான் இருக்கு. செயல்லதான் ஒண்ணுத்தையும் காணோம்”
அதில் பதறிப் போன செந்தாமரை “ஸார் வேலைல எதும் தப்பு விட்டிருருந்தேனா ஸார்? ஸ்டடி ஹாலிடேஸ்னு ஊருக்கு வந்திருக்கேன். அப்பாவை அனுப்பி வைக்கிறதா ஸார்” என்று சொன்னாலும்
‘அப்படி பிரச்சனை என்றால் இவன் நேரடியாக அப்பாவிடம்தானே பேசி இருப்பான்? படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? என்று அப்பாவிடம் அடித்துக் கொள்பவன் ஆயிற்றே?’ என்றும் சிந்தித்தாள்
உண்மையில் இவள் படித்துக் கொண்டே அங்கே டிரெயினிங் எடுப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை. ’படிச்சு முடிச்சதும் நம்ம கடைக்கு வர சொல்லுங்க மாமா” என்ற திருமலையிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தான் . அவருக்கு மகள் இப்போதே வேலை பழகிவிட வேண்டும என்று ஒரே அவா. ஒரு டிகிரி முடித்ததும் அவளுக்கு திருமணத்தை முடிதது கோவையில் குடி வைத்து அப்படியே கடையிலும் வேலை பார்க்க வேண்டும் என்பது அவர் திட்டம்.
மகள் குடும்பத்தைப் பிரிந்து அதிக காலம் இருந்;து விட்டாள். ஜாதகம் அது இது என்றாலும் அவரும் அதற்கு முக்கிய காரணம் ஆகி விட்டார்.
இனியாவது ஒரு நல்ல பையன் கையில் பிடித்துக் கொடுத்து அவள் ஒரு குடும்ப சூழ்நிலையில் வாழ வைக்க வேண்டும். அத்தோடு அவருக்குப் பிரியமான கதிரவனுக்கு தொழிலில் உதவ வேண்டும். அதற்கு அவள் படித்துக் கொண்டே பயிற்சி எடுத்தால் சீக்கிரம் அவரது வேலை முடியும். அவளும் விளையாட்டு போக்கில் அனைத்தையும் கற்று கொள்வாள் என்று நினைத்தார்.
அவர் நினைத்தது சரிதான். அவள் வந்தனாவுடன் வீடு எடுத்து தங்கிய காலங்களில் சுதந்திரமாகவும் பொறுப்பாகவும் நடந்து கொள்ளப் பழகி இருந்தாள்.
திருமலை கதிரவனுடன் அலையும் பாலுவைத் தான் செந்தாமரைக்கு பார்த்து வைத்து இருந்தார். பாலு என்கிற பாலசுப்பிரமணியத்தின் சொந்த ஊர் கோவை என்பதால் சண்முகம் சாமியிடமும் கதிரவனிடமும் பேசி பாலுவையும் ஆனந்தி ஸ்டோர்ஸ் வேலைகளில் இழுத்து விட்டு விடலாம். அல்லது அவனுக்கு கோவையில் எதாவது வேலை ஏற்பாடு செய்யலாம் என்று நினைத்து வைத்து இருந்தார்.
ஆனால் அதை விடப் பெரிய கதிரவனின் கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸை அவன் நடத்துவதற்கு உதவலாமே என்று யோசிககாமல் போய் விட்டார். கதிரவன் பொள்ளாச்சியிலேயே பிறந்து வளர்ந்தவன். எனவே பொள்ளாச்சியில் அவனது தொழில்கள் பற்றி அவருக்கு கவலை இல்லை. அவன் எப்படியும் சாதித்து விடுவான். பிற ஊர்களில் அவனுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாதது போலத் தோன்றவே மகளை அதற்கு தயார் செய்தார்.
அவர் சண்முகத்தின் இடத்தில் இருந்து கதிரவனது தொழில்கள் குறித்து யோசித்து செய்தது அது. அது அதிக பிரசங்கித்தனமாக அவருக்கும் சண்முகத்திற்கும் ஏன் யாருக்குமே தோன்றவில்லை. ஒரு விசயத்தைத் தவிர.
பேச்சு வாக்கில் சண்முகத்திடம் ‘பாலுவை செந்தாரைக்குப் பார்த்திருப்பதாகக்’ கூற அவர் “ஏன் நான் பார்;க்க மாட்டேனா? நான் என்ன செத்தா போயிட்டேன் ?” என்று சுள்ளென எரிந்து விழுந்து விட்டார்.
ஆனால் திருமலை அதன் பிறகு அவரிடம் தண்மையாகப் பேசி சம்மதமும் வாங்கி விட்டார். சண்முகம்தான் கதிரவனுக்கு யுவராணியை மணம் முடிக்கத் திட்டம் வைத்து இருந்தாரே? ஆனால் செந்தாமரையை அவர் கதிரவனுக்காக கேட்காத காரணம் ஆனந்திதான். ஆனந்தி தன் கடைசி காலத்தில் இறுதியாகக் கேட்ட செய்தி செந்தாமரை பிறந்ததைத்தான். அந்தக் குழந்தையை அவருக்குப் பிடிக்கும்.
ஆனால் ஆனந்தி யுவராணியை அல்லவா கதிரவனுக்காக துளசியிடம் கேட்டு இருந்தாள்? அவரால் செந்தாமரையை தன் மகளாகப் பார்க்க முடிந்ததே தவிர வேறு மாதிரி நினைக்கவே இல்லை. செந்தாமரை கதிரவனின் விளையாட்டுத் தோழி எனபதுடன் அவர் கணக்கு முடிந்தது. இனி அவருக்கு மடடுமல்ல திருமலை குடும்பத்தாருக்கும் வேப்பிலை அடிக்க வேண்டியது கதிரவனின் தலையாய கடமை.
அதை தள்ளிப் போட்டவன் முதலில ஒருவழியாக அவன் செங்குருவியிடம் ஆருடம் கேட்க முடிவு செய்தான். அந்தக் குருவி எப்படி தலையைத தலையை ஆட்டினாலும் சமாளித்து ஜோடியாகி விட வேண்டியதுதான் என்று சூளுரைத்தான். இவன் சூளுரைக்கும் போது பக்கத்தில் இருந்த மஞசக் காட்டு மைனா வேம்பு அத்தை கவனித்து விட்டு ஒன்றும் புரியாமல் இவனை ஏற இறங்க பார்த்து விட்டு பால் கறக்கப் போய் விட்டார்.
ஒரு வேளை கேட்டு இருக்குமோ? என்ற பயத்தில் பின்னாடியே போய் “அத்தை என்ன இந்தப் பக்கம்?” என்று ஆரம்பித்து பற்களைக் காட்டினான்.
“. பேசிக்கிட்டு இருந்தேன் தம்பி ;” என்று இவனை கலாய்த்து விட்டுப் போனார். ஆஹா! நல்ல வேளை நான பிழைத்துக் கொண்டேன் என்று இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு எம்.ஜி.ஆர் ஸ்டைலில் துள்ளிக் கொண்டு உள்ளே சென்றவனைப் பார்த்து வேம்பு குழம்பி விட்டார்.
‘ஓஹோ! யுவராணியைப் பொண்ணு பார்த்துட்டு வந்து தான் இந்தத் துள்ளல். சரி. சரி நல்லா இருக்கட்டும். ஆனந்தி அம்மா மனசுக்கு அவங்க வீட்ல விளககேத்ற பொண்ணு அமோகமா இருப்பா’ என்று மனதார வாழ்த்தினார்.
தேவையான வாழ்த்துதான்!
இபபோது ‘அப்பாவை கோவைக்கு அனுப்பவா?’ என்று கேட்ட செந்தாமரைக்கு என்ன பதில் சொல்ல? என்று கிஞ்சிற்றும் யோசிக்காமல் “ இப்போதைக்கு ஒருத்தரும் கோவைக்குப் போக வேண்டாம்” என்று அவன் முடிக்கும் முன் “ஏன்? ஏன்?” என்று பதறிவிட்டாள் செந்தாமரை.
“அதெல்லாம் உன் கிட்ட நேரில் சொல்றேன். நீ நாம சின்ன வயசில பிக்னிக் போவோமே? அந்த தென்னை மரத் தோப்புக்கு வா. ஒணணும் பிரச்சனை இல்ல. பயப்படாம வா. மறக்காம வேம்பு அத்தை கிட்ட சொல்லிட்டு வா” என்று போனை வைத்து விட்டான்.
என்னவோ? ஏதோ? எனறு குழம்பியவள் ஃபோன் ஒலி எழுப்பும் வரை ஆழந்து படித்துக் கொண்டு இருந்த பிஸினஸ் ஸ்டாடிஸ்டிக்ஸ் புததகத்தை மூடி வைத்தாள்.
இன்னும் நான்கு நாட்களில் பரிட்சை ஆரம்பம் ஆகி விடும் . பரிட்சைக்கு முதல் நாள் மீண்டும் கோவையில் அவர்கள் தங்கி இருநத வீட்டிற்கு போய் விட்டு பரிட்சைகள் முடிந்ததும் கோவைக்கு முழுக்கு போட்டு விட்டு பொள்ளாச்சிக்கே வந்து விடுவது என்றும் திட்டம் வைத்து இருந்தாள்.
வந்தனாவின் அப்பா சுந்தரம் சில இடங்களில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறி இருந்தார். அவரைக் கேட்டு வேறு எங்காவது வேலைக்கு போவது அவளது சதித் திட்டம்.
பின்னே? இவள் அப்பா இவளை மதிக்காமல் இவள் வேலைக்காக ஒரு திட்டம் போட்டார். சரி. இருந்து விட்டு போகட்டும். கல்யாணம் எல்லாம் யார் முடிவு செய்யச் சொன்னது?
அது என்னவோ அவளுக்குப் பிடிக்கவில்லை. இங்கேயே இருந்தால் அந்த பாலுவிற்கு அவளை திருமணம் செய்வித்து விடுவார் என்று தோன்றியது. இவ்வளவு நாள் அதை அவள் பெரிதாக நினைக்கவில்லை. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு இருந்தாள். இப்போது புலி வருகிறது கதையாக வந்தே விட்டது. தப்பி ஓடி விட முடிவு செய்தாள். ஏன் என்பதை அவள் கூர்ந்து ஆராயவில்லை. அப்படி ஒரு தத்தி.
நைட்டியை மாற்றி மஞ்சளில் கருஞ்சிவப்பு நிற கொடிகளை படர விடடிருந்த அம்பர்லா டாப்சும் கரும் விசப்பு நிற லெக்கின்சும் அணிந்து அதே நிற துப்பட்டாவை கழுததை சுற்றிப் போட்டுக் கொண்டாள்.
அம்பர்லா கட்டிங் டாப்ஸ் முட்டி வரை அணிந்தால்தான் லெக்கின்ஸ் போடுவாள். சைடு கேப் இருந்தால் பட்டியாலாதான்.
முகம் கழுவி ஒரு சின்ன மெரூன் வண்ணப் பொட்டினை நெற்றியின் மையத்தில் ஒட்டி தலைமுடியை சீவி ஒரு கேட்ச் கிளிப் போட்டாள். வசதி கருதி முடியை நறுக்கி விட்டிருந்தாள். அது அவளது தோளைத் தாண்டி எட்டிப் பார்க்க முயன்று கொண்டு இருந்தது.
மறக்காமல் நெற்றியில் சந்தனம் வைத்துக் கொண்டாள். சந்தனம் மனதிற்கு அமைதியும் குளுமையும் தரும் என்று எங்கோ எப்போதோ படித்திருந்ததால் பல வருடங்களாக அதை பின்பற்றி வருகிறாள். பார்ப்பதற்கு நன்றாக இருப்பதால் பெற்றோரும் அதை தடுக்கவில்லை.
ஸ்கூட்டியை கோவையிலேயே போட்டு விட்டு வந்து விட்டாள். இவள் மட்டும் தான் ஸ்கூட்டி ஓட்டுவது. வந்தனா ஓட்ட மாட்டாள். எனவே ஸ்கூட்டியை வீட்டிறகுள் போட்டு பூட்டி வைத்து விட்டு இவர்கள் கிளமபி இருந்தனர்.
இப்போது தென்னைமரத் தோப்பிற்கு எப்படி செல்ல ? டின்று யோசித்தவாறே மறுபடியும ஃபோனை எடுத்தாள். அதற்குள் மீண்டும் ஃபோன் செய்த கதிரவன் அது “ஆகாய…” என்று ஆரம்பிக்கும் போதே இவள் ஆன் செய்ததால் “ உன் ஸ்கூட்டி கொண்டு வரலை போலிருக்கு?” எனவும்
சிம்பிளாக “ம்” என்றாள் .
“அத்தை மாமா கிட்ட சொல்லிட்டியா?”
“இல்ல”
“சொல்றதுக்கு என்ன? சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பி இரு. அஞ்சு நிமிஷத்துல வர்றேன்”
“அதுக்கு இங்கேயே பேசலாமே”
பெருமூச்சுடன் “சரி. எதுக்கும் குடுத்து வச்சிருக்கனும்” எனறு ஃபோனை கட் செய்தான். எதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே ஃபோனை மேஜையில் வைத்தவள்
‘அப்பாடா’ என்று இப்போது பெருமூச்சுடன் உட்கார்ந்தாள்
—————————— —————————— ——-
கள்ளிப் பட்டியில் யுவராணி மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருந்தாள். எங்கே போவது? என்ற கேள்விக்கு துளசி “ இதுல என்ன கேள்வி. வீடு அவர் பேர்ல இருக்கு. அவ மேஜர். அந்த வீட்ல யார் இருக்கனும்? இருக்கக் கூடாதுன்னு அவதான் சொல்லணும்” என்ற போது அவர் எதை மறைத்தார்?
ஆனால் அதைக் கண்டுவிட்ட யுவராணி “அம்மா அதுல இப்போதைக்கு அப்பாவே இருக்கட்டும். அது நம்ம தாத்தா பாட்டி சொத்து . அதை விட்டு அவரை வெளிய போக சொல்ற அளவு நான் கல்நெஞ்சக்காரி இல்லை. உங்க பேர்ல வந்தனா வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற வீட்ல நாம இருக்கலாம்னு நினைக்கிறேன். ஆனா அதை அவர் உரிமை கொண்டாடிகிட்டு வந்தார்னா அப்ப நான் சும்மா இருக்க மாட்டேன். புருஷனுக்கு ஆதரவா நீங்க சிங்கி அடிச்சாலும்தான்” என்றாள்.
“நான் ஏன் அந்தாளுக்கு சிங்கி அடிக்கப போறேன்?” என்று முணு முணுத்தாலும் இந்த முடிவைத்தான் அவர் எதிர்பார்த்தார்.
ஆத்தனாம் பெரிய வீட்டில் இனி மனைவி குழந்தைகள் இல்லாமல் தனியாக இருக்க விடுவதுதான் அவருகு;கு சிறந்த மருந்து என்று நினைத்தார். பார்க்கலாம் என்று நினைத்தவாறு மூட்டை முடிச்சுகளைக கட்டினார்.
“ராசுக்குட்டி.. ..”
“ம்மா”
“நீ போய் நம்ம சாமான் செட்டை எல்லாம் அந்தாளு இருக்கும் போது எடுத்துட்டு வந்திரு. அழுக்குத் துணியை செல்லாயி கிட்ட வெளுக்க சொல்லி எடுத்துப் பேபாட்டிரு. தேவை இல்லாம அவர்கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்காத.
தம்பி நீ அவன் கூடப் போ. பக்கத்து வீட்டு நர்ஸ் அம்மாவையும் ஒரு அத்தாட்சிக்கு வச்சிக்கோ. அப்புறம் அவரு யானையைக் காணோம். குதிரையைக் காணோம்னு ஆரம்பிச்சிறப் போறாரு” எனவும்,
“ஓ. அதை வேற சொல்லிடுவாரா? அதையும் பார்;கறேன்!” என்று சீறினான் தாமரை செல்வன்.”இவர் சொத்தும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் “ என்று அவன் மீண்டும் ஆரம்பிக்கவும்
துளசி தானே போய் எடுப்பதாகக் கூறவும்தான் ஒரு வழியாக வேறு வழி இல்லாமல் சமாதானம் ஆனார்கள் ஆண்கள் இருவரும.
திருநெல்வேலியில் இருந்த தாமரை செல்வனின் சொத்துக்களை விற்று விட்டு அந்தத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்து இருந்தான். இதற்கான ஏற்பாடுகளை கதிரவன் பார்த்துக் கொண்டதால் இவன் போய் கையெழுத்துப் போட்டால் போதும் என்று சொல்லி இருந்தான். கொஞ்சம் மார்கெட் ரேட்டை விட அதிக விலைக்கே அவனது லைன் வீடுகளையும் சைக்கிள்கடையையும் விற்றுத் தந்து இருந்தான்.
அடுத்து கோவையில் அனது ஆனந்தி ஸ்டோர்ஸில் ஒர்க்கிங் பார்ட்னராக டீட் தயாரித்து கையெழுத்தும் ஆகி விட்டது. யுவராணி நினைத்தால் அங்கேயே தன் பிராக்டீஸை தொடரலாம். ஏற்கெனவே உள்ள ஆடிட்டரிடம் ஜாய்ன் செய்து கொள்ளலாம்.
தாமரை செல்வனுக்கு தனி கடை வைக்கும் எண்ணம் வந்தால் தாராளமாக அதற்கு உதவுதாக வாக்களித்து இருந்தான்.
கஜாவிற்கும் தங்கள் சொத்துக்களின் மீது அவருக்கு பாத்தியதை இல்லாததால் முப்பது தினங்களுக்குள் அவற்றை உரியவர்களிடம் ஒபபடைத்து விட்டு விலகுமாறு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியாயிற்று.
அவர்களின் வீடு மட்டும் எப்படியும் யுவராணிக்கு வரப் போகிறது. அதுவரை அவரை தனியே யோசிக்க விட வேண்டும் என்று நினைத்துதான் அங்கேயே அவர் இருக்க வேண்டும் என்று துளசி நினைத்தார். யோசிப்பாரா?
அப்படி அவர் விலகும் பட்சத்தில் எங்கே தங்குவார்?
இங்கே யுவராணியின் சொத்துக்களையும் ராஜ்கமலே பராமரித்து வரலாம் என்பது ஐடியா. அவனிடமும் சம்மதம் வாங்கியாகி விட்டாயிற்று. நிலங்களை வீடுகளை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விட்டு கவனித்து பணத்தை அனுப்பி வைப்பதாக சொல்லி விட்டான்.
தாமரை செல்வன் எவ்வளவோ மறுத்தும் “ சும்மா இருங்க மாமா. உஙகளோட போச்சா? நாளைக்கு உங்களுக்கு பிள்ளைங்க குட்டிங்கன்னு வரும் போது தேவை அதிகமாகும். நீங்க இதை யூஸ் பண்ண வேண்டாம். உங்க பிள்ளைங்களுக்கு இதை பயன்படுத்தற கடமை இருக்கு. அதுல தலையிடாதீங்க மாமா” எனவும் அர்த்தமில்லாமல் பல்லைக் காட்டினான்.
‘என்னவா இருக்கும்?” என்று நெற்றியைத் தட்டி தட்டி யோசித்த போதுதான யுவராணியும் முகம் சிவப்பதைக் கவனித்தவன் தான் ‘பிள்ளைங்க குட்டிங்க’ என்றது நினைவு வர ‘ரொம்ப முக்கியம். நான் என்ன பேசிட்டு இருக்கேன். இதுங்க என்ன பண்ணிகிட்டு இருக்குங்க?’ என்று வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொள்ள துளசி நமுட்டாக சிரித்தார்.
கஜா மருத்துவமனைக்கு வந்து இதுவரை மகளை; பார்;காததிலேயே அவரது செயல் உறுதி பட்டு இருந்;தது. அப்படி அவர் வந்திருந்தாலும் உயிரோடு திரும்பிப் போய் இருப்பாரா என்பது சநதேகம்தான்.
துளசியும் ராஜ்கமலும் போய் அத்தியாவசிய பொருட்களையும் உடைகளையும் மட்டும் எடுத்து வந்து விட்டனர். அவற்றில் ராஜ்கமலின் உழைப்பில் வாங்கிய பொருட்களே அதிகம். ஒரு சில பாட்டி வீட்டு சீதனங்கள்.
இவற்றை எடுக்கும் போது கஜா எதுவுமே பேசவில்லை. ராஜ்கமல் வெளியே நின்று விட்டான்.
பணம் பெரும்பாலும் ராஜ்கமல் அக்கவுண்டிற்குதான் வரும். கஜாவிற்கு துளசி பெயரில் இருந்த வீட்டு வாடகை மட்டும் பத்தாயிரம் வரும். அதுபோக நில வாடகையாக எட்டாயிரம் வரும். இவர் இங்கே இருந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்வதால் அந்த வாடகை கட். அங்கே குடி இருந்தவர்களும் நல்ல வேளையாக ஒரு வாரம் முன்புதான் காலி செய்து இருந்தனர். வேறு ஆட்களை தேடிக் கொண்டு இருந்த போதுதான் இத்தனை கூத்தும.
இன்னும் இவற்றை எல்லாம் ஒழுங்கு படுத்த வேண்டி இருந்தது. அதை படிப்படியாக எப்படி செய்வது என்று திட்டமிட்டவாறே கிளம்பினான் ராஜ்கமல். அவன் வேறு புதிதாக டென்டர் எடுத்திருக்கிறான். அந்த வேலையும் கவனிக்க வேண்டும்.
எப்படியும் பெற்ற தகப்பனை அவர் எவவளவு பொல்லாதவராக இருந்தாலும் விட மாட்டான். ஆனால் முன்பு போல அட்ராசிட்டி செய்ய இடம் கொடுக்கவும் மாட்டான்.
போலீஸ் வக்கீல் முன்னிலையில் நகைகளை வெள்ளிப் பாத்திரங்களை எடுத்துக் கொள்வது நல்லது எனறு முடிவு செய்தார் துளசி.
“அது உங்களுக்கு சேர வேண்டிய சொத்து. சும்மா குதிக்காதீங்க. அதை நீங்க வேண்டாம்னு சொல்லக் கூடாது” என்று திருப்பித் திருப்பிச் சொல்லி ஆண்கள் இருவரின் அரை சம்மதத்தைப் பெற்று இருந்தார்.
“அப்படி வாங்கினா அதை உங்க கஸ்டடிலயே வச்சிககோங்க. அப்புறம் அதைப் பத்தி யோசிக்கலாம் ” என்று முடித்து விட்டான் ராஜ்கமல்
ஒரு வழியாக மூவரும் வந்தனா வீட்டிற்கு அருகில் இருந்த துளசி வீட்டிற்கு குடி போனார்கள்.
புதிதாக யாரோ குடி வருவதைப் பார்த்த வந்தனா மொட்டை மாடியில் இருந்து எட்டிப் பார்த்தாள்.
அன்று கோவிலுக்கு பாதி தூரம் செல்லும் போதே பிய்த்துக் கொண்டு ஒடிய யுவராணி வாடிய கொடியாக காரை விட்டு இறங்குவதைக் கண்டு அதிர்ந்தாள்.
பல முறை ஃபோன் செய்து பார்த்தாள். அவள் எடுக்காததால் இவளும் விட்டு விட்டாள். நாளைதான் நேரில் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்து வைத்து இருந்தாள். அவளைத் தொடர்ந்து இறங்கியவனை அவள் பார்த்ததில்லை.
துளசியைத் தெரியும். எனவே இங்கிருந்து “ஹாய்” என்று கை ஆட்டியவளுக்கு பின்னே தனது இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜ்கமல் பதில் “ஹாய்” சொல்லவும் அப்படியே ஷாக் ஆனாள்.
இந்த ரண களத்திலயும் இவனுக்கு ஒரு கிளுகிளுப்பு. ம்ஹ்ம் என்னத்தை சொல்ல !