அத்தியாயம் 11

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

வாசலில் மோட்டார் வாகனத்தின் ஹாரன் சத்தம் விடாமல் அடித்தது. மடித்து கொண்டிருந்த துணியை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து கேட்டை திறந்தார் கற்பகம். வாகனத்தை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு காலணிகளை கழட்டி மூலைக்கு ஒன்றாய் வீசி விட்டு உள்ளே நுழைந்தார் சுந்தரம். அவர் வீசி எறிந்த காலணிகளை எடுத்து அடுக்கி வைத்து விட்டு டீ போட உள்ளே நுழைந்தார் கற்பகம்.

‘இன்றைக்கு ரொம்ப கோபமா இருக்காரு. என்னன்னு தெரியலையே. வேலை இடத்துல பிரச்சனையோ. என்னம்மோ நாம கேட்டா மட்டும் சொல்லிரவா போறாரு’ என நினைத்து கொண்டே டீயை கணவரிடம் நீட்டினார்.

“இன்னிக்கு ராத்திரி என்ன சமையல்?”

“உங்களுக்கு பிடிச்ச கோழி குழம்பும், இட்லியும் செஞ்சிருக்கேன் அத்தான்.”

“எனக்கு பிடிக்கும்னு யாரு சொன்னது? உங்க அத்தையா? எனக்கு உண்மையா என்ன பிடிக்கும்னு அவங்களுக்கு தெரியுமா? பிடிச்ச சாப்பாட்ட குடுத்துட்டா மட்டும் மனுஷன் சந்தோஷமா இருந்துருனாவா?” என நக்கலாக கேட்டார் சுந்தரம்.

அமைதியாகவே நின்றிருந்தார் கற்பகம். இங்கு வந்த இந்த மூன்று மாதங்களில் இப்படிப்பட்ட குத்தல், எகத்தாளம் நிறைந்த பேச்சுக்களுக்கு பழகிவிட்டிருந்தார். முதலில் கண்ணீர் வரத்தான் செய்தது. அதற்கும் ஏச்சு விழவும் உள்ளுக்குள்ளேயே அழ கற்றுகொண்டார்.

அவர் நினைவு ‘சுபாங்’ ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய நாளை நினைத்துக் கொண்டது. புது இடம், பல இன மக்கள் திரள், ஆங்கில , மலாய் பேச்சுக்கள் என ஏதோ ஒரு மாய உலகத்துக்கு வந்துவிட்ட மாதிரி இருந்தது கற்பகத்துக்கு. பயத்தில் சுந்தரத்தின் கையை இருக பிடித்துக் கொண்டார். சட்டென கையை உதறிய சுந்தரம், அம்மாவுக்கு கேட்காத சின்ன குரலில்,

“மத்தவங்க முன்னுக்கு கை எல்லாம் பிடிக்காத. எட்டியே நடந்து வா. தெரிஞ்சவங்க யாரவது உன் கூட என்னைப் பார்த்தா என் மானமே போயிரும். உன் நடையும் உடையும், பார்த்தாலே எனக்கு கடுப்பா இருக்கு” என எரிந்து விழுந்தார்.

அந்த ஒரு இடியே, கற்பகம் கட்டி வைத்திருந்த அழகிய திருமண கோட்டையை தகர்த்தெரிந்தது. மனதை தேற்றி கொண்டவர், வள்ளியை நெருங்கியே நடந்தார். கீழே இறங்க எஸ்கலேட்டரை நெருங்கிய போது கற்பகத்துக்கு உடம்பெல்லாம் நடுங்க தொடங்கியது. எப்படி அதில் இறங்குவது என்று அவருக்குத் தெரியவில்லை. பயந்து கொண்டு அப்படியே நின்றார். சுந்தரம் முகத்தை சுளித்தவாறு, அவரின் அம்மாவை ஒரு பார்வை பார்த்தார்.’ பாருங்க நீங்க பார்த்த பொண்ணோட லட்சணத்தை’ என்பது போல் இருந்தது அந்தப் பார்வை.

அவர்களை அப்படியே விட்டு விட்டு அவர் பாட்டுக்கு இறங்கி சென்று விட்டார். ஏற்கனவே பல தடவை வந்திருப்பதால் வள்ளி தான் மருமகள் கையை பிடித்து தைரியம் சொல்லி இறக்கி கூட்டி வந்தார்.

இந்த நிகழ்ச்சி வள்ளிக்கும், கற்பகத்துக்கும் இரு வகை செய்தியை உணர்த்தியது.

நான் தான் உன் கணவன், ஆனா நீ என் மனைவி இல்லைன்னு கற்பகத்துக்கும், கல்யாணம் வேணும்னா நீங்க பண்ணி வைக்கலாம், ஆனா என் இஷ்டபடிதான் இந்த வாழ்க்கைய வாழுவேன்னு வள்ளிக்கும் மறைமுகமாக உணர்த்தினார் சுந்தரம்.

“சொன்னது காதுல விழுந்ததா இல்லையா? அப்படியே ஒரு ரியாக்ஷனும் இல்லாம நிக்கற”

“என்ன சொன்னீங்க அத்தான்? ஏதோ நினைப்புல இருந்திட்டேன்”

“உன் மரமண்டைக்கு வேற என்ன நினைப்பு இருக்க போது? அடுத்த வேளை என்ன சமைச்சி கொட்டிக்கலாம் இல்ல உங்க ஆத்தா அப்பனுக்கு எப்போ போன் போட்டு பில்லை ஏத்தலாம்னுதான் இருக்கும்.”

‘என்ன  அபாண்டமா பேசுறாரு. ஊருல இருந்து பஸ்சு புடிச்சு டவுனுக்கு வந்து அவங்க தான் வாரா வாரம் பேசுறாங்க. என்னம்மோ நான் பில்லை ஏத்துறனாமே’

“இன்னிக்கு நான் ப்ரண்ட்ஸ்சோட வெளிய சாப்பிட போறேன். நீங்க ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு சொகுசா தூங்குங்க” என்றவாரே மாடி ஏறி சென்றார்.

கீழே உள்ள ரூமிலிருந்து இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த வள்ளிக்கு மனம் கணத்து போனது. மகன், மருமகளை நடத்தும் விதம் அவருக்கு வேதனையை அளித்தது. தன் மகன், தன்னை மீற மாட்டான் என்ற துணிச்சலில் கற்பகத்தின் வாழ்க்கையில் விளையாடி விட்டதை நினைத்து நினைத்து கவலையில் கரைந்தார். சுந்தரம் எப்படி ஏசினாலும், பேசினாலும் சிரித்த முகமாகவே வலம் வரும் மருமகளை பார்க்கும் போது வள்ளிக்கு குற்ற உணர்ச்சி தலைத் தூக்கும். சீ போ என்று விரட்டினாலும் காலை சுற்றி வரும் நாய்க்குட்டி போல் தங்களையே சுற்றி வரும் கற்பகத்தை நினைத்து மனதினில் தினம் தினம் ரத்தக் கண்ணீர் வடித்தார் வள்ளி.

“அத்தை வெளிய வாங்க. அந்த ரூமுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்கிறீங்க. வாங்க, வந்து சாப்பிடுங்க. உங்க மகன் வெளிய போயிருக்காரு.”

“கற்பு, நீ சாப்பிட்டயாமா?”

“இன்னும் இல்ல அத்தை. பக்கத்து வீட்டு லெட்சுமி அக்கா கோவிலுக்கு கூப்பிட்டாங்க. போய்ட்டு வரவா அத்தை?”

“போய்ட்டு வாம்மா. நீயும் இந்த நாலு சுவத்தையே தான் பார்த்துக்கிட்டு கிடக்குற”

“வந்து , அத்தை..” என தயங்கினார் கற்பகம்.

“தயங்காம சொல்லும்மா”

“பஸ்சு செலவுக்கும், அர்ச்சனை தட்டு வாங்கவும் காசு குடுக்குறீங்களா?”

சராசரி கணவனாக இருந்திருந்தால் மனைவி வீட்டில் இருந்தாலும் ஆபத்து அவசரத்துக்கு பணம் வேண்டுமே என குடுத்து வைத்திருப்பான். இல்லை மனைவியாவது உரிமையாக கேட்டு வாங்கி வைத்திருப்பாள். இங்கே மருமகள் யாசிப்பது போல் பணம் கேட்கவும் வள்ளி மருமகளை கட்டி கொண்டு அழுதுவிட்டார்.

“என் ராஜாத்தி. ஊருல உங்கப்பன் எவ்வளவு பெரிய ஆளு. இங்க என் கிட்ட இப்படி பணம் கேக்குற அளவுக்கு உன்னை வச்சிட்டானே என் மவன். வரட்டும் இன்னிக்கு ரெண்டுல ஒன்னு பார்த்திருறேன்”

“அத்தை!! அப்படி எல்லாம் எதும் கேட்டுறாதிங்க. எனக்கு என்ன இங்க குறை. சாப்பாட்டுக்கு பஞ்சமா, கட்டிகிற துணியில பஞ்சமா? என் அன்பை புரிஞ்சுகிட்டு, இன்னும் கொஞ்ச நாளில அத்தான் சரியா ஆயிருவாரு. நீங்க அழுவாதிங்க” என கற்பகம்தான் அவரை தேற்றினார்.

பக்கத்து வீட்டு லெட்சுமி, கற்பகத்துக்கு உற்ற தோழியாக இருந்தார். இங்கே இருக்கும் பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் தான் கற்றுக்கொண்டார் கற்பகம். மாலை வேளைகளில், லெட்சுமியுன் பேசி பேசி மலாயும் ஓரளவு படித்துக் கொண்டார்.

பச்சை மண்ணாக இருந்த கற்பகத்தை, சுந்தரம் நினைத்திருந்தால் அழகிய சிற்பமாக மாற்றி இருக்கலாம். ஆனால் அவர் மட்டம் தட்ட மட்டுமே மனைவியிடம் வாய் திறந்து பேசினார்.

ஊரில் இருக்கும் போது ஓரளவு நன்றாக இருந்த சுந்தரம், இங்கே வந்தவுடன் ஆளே மாறி போனதுக்கும் காரணம் இருந்தது. அதுதான் மோனா.

சுந்தரத்துக்கு திருமணம் ஆனதை அறிந்த மோனா பேயாட்டம் ஆடிவிட்டார்.

“உங்களையே நம்பி இருந்த எனக்கு இப்படி துரோகம் செஞ்சிட்டீங்களே சுந்தரம். நான் உயிருக்கு உயிரா உங்கள நேசிச்சேனே. கடைசியில என் தலையிலே மண்ணை போட்டுட்டீங்க இல்ல”

“என்னை மன்னிச்சிரு மோனா. இது எனக்கே தெரியாம நடந்த கல்யாணம். எங்க அம்மாவ மீறி என்னால ஒன்னும் செய்ய முடியல”

“அம்மா! அம்மா!அம்மா!. எப்போதும் அவங்க பேச்சு தான். இப்படி அம்மா மகனாவே இருக்கனும்னா எதுக்கு என்னை காதலிச்சீங்க? சொல்லுங்க சுந்தரம் சொல்லுங்க”

“அய்யோ மோனா. நான் மட்டும் நீ இல்லாம சந்தோஷமா இருக்கேன்னு நினைக்கிறியா?”

“நீங்களும் சந்தோஷமா இல்ல, நானும் சந்தோஷமா இல்ல. அப்ப வந்திருங்க சுந்தரம், விட்டுட்டு வந்திருங்க”

“எப்படி மோனா நான் அவங்கள விட்டுட்டு வருவேன். பாடுபட்டு என்னை வளர்த்து, படிக்க வச்சவங்க அவங்க. அது மட்டும் என்னால முடியாது”

“அப்போ, அந்த பட்டிக்காடு கூட சேர்ந்து நீங்க நாசமா போங்க. நான் இந்த வேலைய விட்டு போறேன். நீங்க இல்லன்னு நான் இப்படியே இருந்துருவேன்னு நினைக்காதீங்க. எண்ணி ஒரே மாசத்துல இன்னொருத்தனை கட்டிகிட்டு நான் சந்தோஷமா இருப்பேன். நான் கிடைக்கலியேன்னு நீங்க தான் புழுங்கி புழுங்கி சாவீங்க” என சாபமிட்டு விட்டு போனாள் மோனா.

சொல்லியபடியே திருமண பத்திரிக்கையும் அனுப்பி வைத்தாள். காதல் கை கூடி இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்துருக்குமோ, ஆனால் கூடாமல் போனதால் சுந்தரம் அதையே நினைத்து ஏங்க ஆரம்பித்தார். கற்பகத்தையும் மோனாவையும் ஒப்பிட்டுப் பார்த்து மனம் வாடி கொண்டிருந்தார்.

கற்பகம் சேலையிலிருந்து சுடிதாருக்கு மாறியதோ, அக்கறை எடுத்து தன்னை அலங்கரித்து கொண்டதோ எதுவுமே அவர் கண்களுக்கு எட்டவில்லை.

புருஷன் பார்க்கத்தானே இந்த அழகு, அவரே கண்டு கொள்ளாத போது எதுக்கு நான் அலங்கரிச்சுக்கனும் என நினைக்காமல், தன் மன நிறைவுக்கும், தன்நம்பிக்கைக்கும் இந்த மாற்றங்களை செய்து கொண்டார் கற்பகம்.

வாழ்க்கை இப்படி சென்று கொண்டு இருக்கும்போது தான் கருவுற்றார் அவர். விஷயத்தைக் கேள்விபட்ட வள்ளிக்கு பேரானந்தம். மகனும் மருமகளும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள் என அகமகிழ்ந்தார். கற்பகத்தை கட்டி கொண்டு அழுதுவிட்டார். உடல்கள் உரசினாலும், உணர்வுகள் உரசவில்லை என்பது அந்த மூதாட்டிக்கு புரியவில்லை.

மகன் பேசுவது இல்லை என்றாலும், அவர் வருகைக்காக காத்திருந்தார் வள்ளி.

வீட்டிற்கு வந்த சுந்தரத்தை கட்டி பிடித்து உச்சி முகர்ந்தவர்,

“அப்பா சாமி, நம்ப குலம் தழைச்சிருச்சுய்யா. உன் சம்சாரம் முழுகாம இருக்கா. மூனு மாசம் ஆகுது” என விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.

சுந்தரத்துக்கு பெரிதாக சிரிப்பு மலர்ந்தது. எந்த ஆணுக்கு தான் தன் ஆண்மையை நிரூபிக்கும் இந்த விஷயம் பிடிக்காமல் போகும்.

தன் கணவர் ஆசையாக தன்னை பார்ப்பார் என்ற ஆவலில் ரூமின் கதவின் பின்னால் நின்று கொண்டு எட்டி எட்டி பார்த்தார் கற்பகம்.

“கற்பகம்” என சுந்தரம் அழைக்கவும், ஆவலாக அவர் முன்னே வந்து நின்றார் அவர்.

“இந்த விஷயத்தை உன் குடும்பத்துக்கு இப்ப சொல்ல வேணாம். அப்புறம் பிளேன் புடிச்சு வந்து என் கழுத்தை அறுப்பாங்க. புரியுதா” என சொன்னவர், ஆனந்தமாக விசில் அடித்து கொண்டு வெளியே கிளம்பி சென்று விட்டார்.

கற்பகத்தின் முகம் அப்படியே விழுந்துவிட்டது. மாடி ஏறி ரூமுக்கு சென்றவர், ஆற்றுவார் இன்றி அழுது தீர்த்தார்.

கர்ப்பகாலத்தில் ஒரு கணவனிடம் இருந்து கிடைக்கும் எந்த அணுசரனையான விஷயங்களும் கற்பகத்துக்கு கிடைக்கவில்லை. வாந்தி எடுத்த மனைவிக்கு வாய் கழுவி விடுவதோ, வீங்கிய காலை அமுக்கி விடுவதோ, வேர்த்து போய் இருக்கும் போது இதமாய் துடைத்து விட்டு காற்று வீசி விடுவதோ எதுவும் செய்யவில்லை சுந்தரம்.

வள்ளிதான் தாயாய் மாறி மருமகளை தாங்கினார். செக் ஆப் அழைத்து செல்வது முதல், பிரசவ காலத்துக்கு மருமகளுக்கும் குழந்தைக்கும் தேவை படும் பொருட்கள் வாங்குவது முதல் அனைத்தையும் செய்தார்.

ஒரு நள்ளிரவு நேரம், பனிக்குடம் உடைந்து பிரசவ வலி கண்டது கற்பகத்துக்கு. ஒரு டாக்சி அழைத்து மனைவியையும், அம்மாவையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டு வீடு திரும்பி விட்டார் சுந்தரம். கணவனின் கை அணைப்பு இல்லாமல், ஆறுதல் வார்த்தைகள் இல்லாமல் அத்தையின் துணையுடன் ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்தார் கற்பகம்.

மறுநாள் வந்து குழந்தையைப் பார்த்த சுந்தரம் சொன்ன வார்த்தை,

“அவங்க அப்பனாட்டமே பெத்துருக்கா பாரு பையனை. பிள்ளைய பெத்து குடுடின்னா ஒரு தொல்லைய பெத்து குடுத்துருக்கா” என்றார்.

அவர் சொன்ன வார்த்தையை கேட்டு பொங்கி பொங்கி அழுத கற்பகம் ஜன்னியை இழுத்துக் கொண்டார். வள்ளியும், லெட்சுமியும் தான் மாறி மாறி தாயுடுன் சேயையும் கவனித்து கொண்டனர்.

சுந்தரம் அதன் பிறகு மருத்துவமனைக்கு பெயர் வெட்டியவுடன் தான் வந்தார், அழைத்து போக. மகனுக்கு தருண்குமார் என்று பெயரிட்டு பாசத்தை எல்லாம் அவன் மீது கொட்டினார் கற்பகம். பிள்ளை பிறந்தவுடன் , ஊரிலிருந்து தெரிந்தவர்கள் மூலம் முத்துப்பாண்டி சீர் அள்ளி கொடுத்திருந்தார் பேரனுக்கு.

வாழ்க்கை ஒரு முன்னேற்றம் இல்லாமல் அப்படியே சென்றது. பாட்டியும், பேரனும் அன்பால் பிணைந்திருந்தார்கள். அந்த வீட்டில் சுந்தரம் ஒரு தனி தீவாகவே வாழ்ந்து வந்தார்.

தருணுக்கு ஒரு வயது நிறைவடையும் போது, லெட்சுமி பல வருடங்கள் கழித்து கருவுற்றார். வள்ளியும், கற்பகமும் தான் அவரை கவனித்து கொண்டனர். லெட்சுமியின் காதல் திருமணத்தை எதிர்த்த அவரின் பெற்றவர்கள் அவரை தள்ளி வைத்துவிட்டார்கள். மசக்கை காலத்தில் தாயாய் அவரை ஆதரித்தார் வள்ளி. மகனை பெற்ற லெட்சுமி, அவருக்கு பிடித்த நடிகர் பிரபுவின் பெயரை வைத்தார் பிள்ளைக்கு.

தருண் பிறந்து மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் கருவுற்றார் கற்பகம். சுந்தரத்தை எதிர்பார்க்காமல் எல்லா வேலைகளையும் தானாகவே செய்து கொண்டார் அவர். எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் ஏமாற்றம் இருக்காது அல்லவா.

மகள் பிறந்த போது சுந்தரம் பெரிய ஆர்ப்பாட்டமே செய்து விட்டார். மகள் அச்சு அசல் தன்னையே உரித்து கொண்டு பிறந்ததில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. மருத்துவமனையில் பார்ப்பவர்களுகெல்லாம் சாக்லேட் கொடுத்து அசத்தி விட்டார். மகனை தூக்கி கூட பார்த்திராதவர், மகளை கீழேயே இறக்கி விடவில்லை.

பேத்தி பிறந்த ராசியாவது வீட்டில் எல்லாம் நன்றாக ஆகிவிடும் என வள்ளி நம்பினார். ஆனால் சுந்தரத்தின் இந்த அளவுக்கு அதிகமான பாசத்தால் பேத்தி சந்திக்க போகும் துன்பத்தை அவர் அறியவில்லை.

 

எட்டி நில்லு…

error: Content is protected !!