ENE== EPI 23

ENE== EPI 23

அத்தியாயம் 23

என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய்
மிதக்கிறேன் காற்றாக
உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று
இசைக்கிறேன் பாட்டாக
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா

“வா டேனி. உன்னைத் தான் எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கேன். என்ன சொன்ன? உன் தான்யாவா? குட் ஜோக்.” என்றபடியே டேனி விசிறி அடித்த பைலை திறந்தான். அதில் இருந்ததை வெளியில் எடுத்தவன், அதிர்ச்சியாக டேனியை நிமிர்ந்து பார்த்தான்.

“உன்னை விரட்ட சொன்ன டான்யா திரும்பவும் எதுக்கு ப்ரண்டா ஏத்துக்கிட்டான்னு எனக்கு ஏற்கனவே ஒரு குழப்பம்தான். அது நடந்த கையோட காரை யாரோ சபோதாஜ் பண்ணப்பவே எனக்கு உன் மேல லேசா டவுட் வந்துருச்சு. நீ அவள பார்க்கிற பார்வையிலும் உரிமை உணர்வு தெரிஞ்சது. இருந்தும் காரணம் இல்லாம யாரையும் சந்தேக படக்கூடாதுன்னு எங்கப்பாவுக்கு வேலை செய்யுற டிடேக்டிவ் ஏஜென்சி கிட்ட உன்னைப் பற்றி டீடேய்ல்ஸ் கலெக்ட் பண்ண சொன்னேன். நேத்தே உன்னை பற்றி ப்புல் ரிப்போர்ட் கிடைச்சிருச்சு”

“ஓ!! அதுக்குத்தான் நேற்று தானுவை தொட்டு தொட்டு பேசி என்னை வெறுப்பேத்துனியா? உன்னை சின்ன பையன்னு நினைச்சேன். பெரிய வேலை தான் பார்த்துருக்க. வெல் டன் டேனி” என்றவாறே பைலில் இருந்த படங்களை மேசையில் அடுக்கினான் விபா. அவனது கடந்த காலம் அவன் முன்னே கடைப்பரப்பபட்டிருந்தது. டைப் செய்யப்பட்ட ரிப்போர்ட்டை படித்தவன்,

“என் ப்புல் டீடேய்ல்ஸ் இருக்குது, வயசுல இருந்து சைஸ் வரைக்கும். குட் ஜோப்” என சிரித்தான்.

“இத்தனை பொண்ணுங்க கூட பழகி இருக்கேன்னு இந்த படங்களை பார்க்கும் போது தான் எனக்கே தெரியுது. இது என்னோட கடந்த காலம் டேனி. தானு என் வாழ்க்கையில வந்த பின்பு எந்த பெண்ணையும் தப்பான எண்ணத்தோட நான் பார்த்தது இல்லை.ஐ லவ் ஹேர் சோ மச்”

“நிறுத்து வேணு. இப்படி எல்லாம் கெட்டழிஞ்சுட்டு, டான்யாவை லவ் பண்ணுறேன்னு சொல்ல உனக்கு வெட்கமா இல்லை? அவ ஒரு தேவதை. உன்னை மாதிரி சாத்தானுங்க அவள நினைக்கக் கூட கூடாது. லிவ் ஹேர் அலோன்” என கத்தினான் டேனி.

ஒரே எட்டில் டேனியை நெருங்கிய விபா, அவனது கழுத்தை பிடித்து நெருக்கினான்.

“என்னடா சொன்ன. நான் சாத்தானா? தானுவை விட சொல்ல நீ யாருடா? அவ தேவதை தான். என்னோட தேவதை. அவளோட ப்ரண்ட்டுங்கறதனால மட்டும் தான் நீ இவ்வளவு துள்ளியும் உன்னை சும்மா விட்டு வச்சிருக்கேன். இல்லைன்னா யாரு எங்க நடுவுல வந்தாலும் நாசமாக்கிருப்பேன்.“ என ஆவேசம் வந்தவன் போல் கத்தினான்.

விபா கழுத்தைப் பிடித்தும், அசராமல் அவன் கண்களையே பார்த்தவாரு நின்றான் டேனி. சத்தம் கேட்டு ஓடி வந்த பிரபு தான் விபாவை டேனியிடம் இருந்து பிரித்து எடுத்தான்.

“விபா கால்ம் டவுன். என்ன நடக்குது இங்க? டேனி உனக்கு ஒன்னும் இல்லையே?” என பதறினான் பிரபு.

விபா ஒரு கையால் தலையை கோதியவாறே இடுப்பில் மற்றொரு கையை வைத்தபடி குறுக்கும் நெடுக்கும் நடந்து தன்னை சமன் படுத்த முயன்றான்.

“அவனை உட்கார சொல்லு பிரபு” என்றான் விபா.

“உட்காரு டேனி. ஏதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். விபா உனக்கும் தான் சொல்லுறேன் இப்படி அவசரப்பட்டு தீர்த்துட்டு பேசக்கூடாது” என்றவன் இருவருக்கும் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.

“நீ வெளிய போ பிரபு. நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா பேசணும்”

“ஏன்டா. திரும்பவும் அவன் கழுத்தைப் பிடிச்சு நெறிக்கவா?”

“இனிமே அப்படி நடக்காது. நீ போ”

பிரபு வெளியேறியவுடன்,

“சொல்லு டேனி. இப்ப என்ன செய்ய போறதா உத்தேசம்?” என கேட்டான் விபா.

“நீ என் இடத்துல இருந்தா என்ன செய்வ வேணு? அதை தான் நான் செய்ய போறேன்.”

“அதாவது, இந்த பைலை அப்படியே தானு கிட்ட குடுக்க போற?”

“யெஸ். அவளுக்கும் உன் வண்டவாளம் தெரியட்டும். அப்புறம் உன் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டா”

மெல்லிய புன்னகை தவழ்ந்தது விபாவின் உதட்டில்.

“தானுவுக்கு ஓரளவு இதைப் பற்றி தெரியும் டேனி. அவ என்னை முதன் முதலா பார்த்ததே ஒரு பெண்ணோட தான்.”

இந்த விஷயம் டேனிக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. இருந்தாலும் முகத்தில் அதை காட்டாது,

“ஒரு பொண்ணை பார்த்துருப்பா. இப்படி ஒன்பது பொண்ணுங்கள பார்த்துருக்க மாட்டா. இந்த கலர்புல் போட்டோசை காட்டுனா சந்தோஷப்படுவான்னா நினைக்கிற? என்ன சொல்லு, உன் டேஸ்டே தனிதான் வேணு. ஒவ்வொருத்தியும் லட்டு மாதிரி இருக்காளுங்க. மச்சக்காரன் நீ ” என விபாவை எள்ளினான் டேனி.

தனது கடந்த காலம் தன் எதிர்காலத்தை இப்படி வந்து குடையும் என நினைத்திருக்கவில்லை விபா. எந்த பெண்ணையும் மறைத்து மறைமுகமாக பழகி இருக்கவில்லை அவன். இந்தியாவில் பல பத்திரிக்கைகளில் வெளிவந்த படங்கள் தான் இவையாவும். பணம் படைத்தவன் எது செய்தாலும் தான் ஹாட் நியூஸ் ஆகிவிடுகிறதே. இதுவரை இதைபற்றி எல்லாம் அவன் கவலைப்பட்டது கிடையாது. என் வாழ்க்கை நான் எப்படி வேணும்னாலும் வாழுவேன் என நெஞ்சை நிமிர்த்தி திரிந்தவன் தான். ஆனால் இப்பொழுது தானு இதையெல்லாம் பார்த்தால் எப்படி ரியாக்ட் செய்வாளோ என பயந்தான்.

“வேண்டாம் டேனி. உன்னைக் கெஞ்சி கேட்டுகிறேன். இந்த விஷயமெல்லாம் தானுக்கு தெரிய வேண்டாம். ப்ளீஸ்” என கிட்டதட்ட மன்றாடினான் விபாகர்.

“நோ வேய். என் ப்ரண்ட கண்டிப்பா உன் கிட்ட இருந்து காப்பாத்துவேன். பாய்” என வெளியேற முற்பட்டான் டேனி.

“வேய்ட் அ மினிட் டேனி. உட்காரு. இன்னும் நாம பேசி முடிக்கல”

“இதுக்கு மேல உன் கூட பேச எனக்கு ஒன்னும் இல்லை வேணு”

“இனிமே தான் செல்லம் நமக்குள்ள பேச நிறைய இருக்கு.” என்றவன் வாய்விட்டு சிரித்தான்.

கதவருகே நின்றிருந்த டேனி, இவனுக்கு பைத்தியம் கிய்தியம் புடிச்சிருச்சா என ஒரு மாதிரியாக விபாவைப் பார்த்தான்.

டெனியின் முகத்தருகே ஒரு கடித உறை பறந்து வந்து விழுந்தது.

“எடுத்து பிரிச்சு பாரு டேனி”

மெல்ல குனிந்து அந்த உறையை எடுத்தான் டேனி. வெளியில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற காலேஜின் முத்திரை இருந்தது.

‘இது டேடி எனக்கு தேர்ந்தெடுத்த காலேஜ் ஆச்சே.’ என நினைத்துக் கொண்டே அவசரமாக உறையைப் பிரித்து உள்ளே இருந்த கடிதத்தை படித்தான் டேனி. அதில் அவனை அந்த காலேஜில் சேர்த்திருப்பதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் வந்து இணைய வேண்டும் எனவும் அறிவிக்கப் பட்டிருந்தது. யோசனையாக விபாவைப் பார்த்தவன் நடந்து சென்று மீண்டும் அவன் முன்னே அமர்ந்தான்.

“என்னடா உன்னோட அட்மிசன் லெட்டர் என் கிட்ட எப்படி வந்ததுன்னு அதிர்ச்சியா இருக்கா? ஹாஹாஹா. உங்க அப்பா அப்ளை தான் பண்ணாரு, நான் தான் காசை எடுத்து அடிச்சு உன்னை சீக்கிரமா சேர்த்துக்க வைச்சேன். அப்புறம் நீ வைச்சிருக்குற ட்ரையல் ரிசால்ட் லட்சணத்துக்கு இன்னும் ரெண்டு வருஷம் ஆனாலும் உனக்கு இடம் கிடைக்காது. ஏன்டா, தானு கூட தானே சேர்ந்து சுத்துற. கொஞ்சமாச்சும் அவளோட புத்திசாலித்தனம் உனக்கு இருக்கா? பாரு எனக்கு எவ்வளவு செலவு உன்னால”

“ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா உனக்கு. இவ்வளவு செலவு பண்ணியிருக்கியே, நான் போகலைன்னா என்ன செய்வ வேணு?” என நக்கலாக கேட்டான் டேனி.

“உன்னைய ஒன்னும் செய்ய மாட்டேன். உங்கப்பாவ நடு தெருவுல நிக்க வைப்பேன். எப்படி வசதி”

“என்னடா சொன்ன?” என ஆவேசமாக எழுந்தவன் விபாவை நாற்காலியில் இருந்து எழுப்பி அவன் சட்டையைப் பிடித்திருந்தான்.

உள்ளே பெட்டி கேஷ் எடுக்க வந்த பிரபு மீண்டும் இவர்கள் இருவர் இருக்கும் நிலையை பார்த்து மறுபடியும் பிரித்துவிட்டான்.

“என்னங்கடா நடக்குது இங்கே? ரெண்டு பேரும் புடிச்சு புடிச்சு விளையாடுறீங்க. சமாதானமா பேசி ஒரு முடிவு எடுங்கடா. இல்லைன்னா நான் தானுவ போன் பண்ணி வர சொல்லவா?” என மிரட்டினான்.

இருவரும் பிரபுவை முறைத்த முறைப்பில்,

“சரி சரி வெளிய போறேன். ஒழுங்கு மரியாதையா சண்டை போடாம, சமரசமா போங்க. ”

‘இவனுங்க ரெண்டு பேரும் நம்மள போலிஸ் ஸ்டேசன்ல ஒரு சாட்சியா நிக்க வைக்காம விடமாட்டானுங்க போல. ஆவதும் பெண்ணால அழிவதும் பெண்ணாலங்கிறது சரியா தான் போச்சு’ என முனகியவாறே வெளியேறினான் பிரபு.

“கூல் டவுன் டேனி. இதுவரைக்கும் உன் டைம். இனிமே என் டைம் ஆரம்பிச்சுருச்சி.”

விபாவை அடிக்கவா நொருக்கவா என்பதை போல பார்த்து கொண்டு நின்றிருந்தான் டேனி.

” இப்ப நான் சொல்ல போற விஷயத்துக்கு, நீ உட்கார்ந்தா பெட்டர். நான் சொல்லறத கேட்டு நீ மயக்கம் போட்டுட்டீனா நான் தான் உன்னை என்னமோ செஞ்சிட்டன்னு பிரபு எகிருவான். எதுக்கு வம்பு. சிட் டவுன்” என்றவன்  மேசை இழுப்பறையில் இருந்து கொத்தாக சில பேப்பர்களை எடுத்து டெனியிடம் நகர்த்தினான்.

“பைனான்சியல் ரிப்போர்ட்ஸ் அண்ட் சேர் மார்க்கேட் ரிப்போர்ட்ஸ். படிக்க தெரியுமா? முறைக்காதடா. காம்ப்ளிகேட்டட்டா இருக்கும். உனக்கு புரியுமா இல்லையான்னு தான் கேட்டேன்.”

பேப்பரை புரட்டி பார்த்த டேனி பேரதிர்ச்சி அடைந்தான். மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து மடக் மடக் என குடித்தவன்,

” எப்படி வேணு? எப்படி?”  என கிட்டதட்ட கத்தினான்.

” வெரி சிம்பிள் டேனி. உங்க கம்பனி ஷேர்சை ஆள் வைச்சு சந்தேகம் வராத மாதிரி கொஞ்சம் கொஞ்சமா வாங்கினேன். இப்போ என் கிட்ட 55 பெர்ஸண்ட் ஷேர் இருக்கு. உனக்கு புரியுதா? உங்கப்பாவோட ஷேர்சை விட இப்போ என் கிட்ட 5 பெர்ஷண்ட் கூட இருக்கு”

” எதுக்கு இந்த சூழ்ச்சி வேணு?”

” உன்னை முதன் முதலா தானு வீட்டுல பார்த்த உடனே முடிவு பண்ணிட்டேன் உன்னை அவ வாழ்க்கையில இருந்து அப்புறபடுத்தனும்னு. நீ எப்படியும் எனக்கும் தானுவுக்கும் நடுவுல வருவேன்னு என் உள் மனசு சொல்லிகிட்டே இருந்துச்சு. அப்பவே உன்னை சுத்தி வலை பின்ன ஆரம்பிச்சுட்டேன்”

“ஓ மை காட்!!”

” நீ தானுவ விட்டு பிரிஞ்சு ஆஸ்திரேலியாவுக்கு போகணும். அவளுக்கு சந்தேகம் வராம கொஞ்சம் கொஞ்சமா அவ வாழ்க்கையில இருந்து விலகிக்கணும். கண்ணுல பாராதது, கருத்துல நிக்காது. நீ விலக விலக அவ என் கிட்ட தான் வருவா. சோ தட்ஸ் த பிளான்”

” இதுக்கு ஒத்துக்காட்டி என்ன செய்வ?”

” முன்ன சொன்ன மாதிரி தான். என் கிட்ட உள்ள ஷேர்ச எல்லாம் அடிமட்ட விலைக்கு வித்து உங்கப்பா கம்பனிய படுக்க வச்சிருவேன். இந்த நஷ்டமெல்லாம் எனக்கு ஒன்னுமே இல்லை. ஆனா உன் டாடியாலே இந்த அடிய தாங்க முடியுமா? யோசிச்சு பாரு. ” என்றவன் இண்டர்கோமில் பணியாளரை அழைத்து,

“மாது, பேக் செக்சனிலிருந்து, நேத்து வந்ததே அந்த நீல கலர் லக்கேஜ் பேக் அதை எடுத்துட்டு வாங்க. நம்ப ப்ரண்ட் ஒருத்தர் வெளிநாட்டுக்கு போறாரு. அவருக்கு கிப்ட் பண்ணனும்” என்றான்.

“என்னை பிளான் பண்ணி கவுத்துட்டோம்கிற இருமாப்புல இருக்கியா? இதெல்லாம் டான்யாவுக்கு தெரிஞ்சா என்னா ஆகும்னு தெரியுமா?”

“‘எப்படி தெரியும் டேனி. கண்டிப்பா நான் சொல்ல போறது இல்லை. நீயும் சொல்ல மாட்ட. சொன்னா தான் என்ன நடக்கும்னு உனக்கு தெரியுமே. இப்ப உன் குடுமி என் கையில. தானு என் கிட்ட பழகுற விதத்துல , ஏன் பார்க்கிற விதத்துல மாற்றம் ஏற்பட்டா கூட  என்னோட அதிரடிய நீ பார்க்க வேண்டி வரும். அப்புறம் நான் வார்ன் பண்ணலன்னு சொல்லாத செல்லம்”

இருக்கையிலிருந்து எழுந்த டேனி,

” உன்னோட குரூர புத்தியை நீ காட்டிட்ட. என்னால இப்ப ஒன்னும் செய்ய முடியலை. ஆனா காலம் இப்படியே போயிறாது மிஸ்டர் வேணு. ஒரு நாள் நீ என் காலுல விழுந்து கெஞ்ச தான் போற. அப்ப வைச்சுக்கிறண்டா உன்னை. கர்மா இஸ் அ பூமரேங். உன்னோட கவுண்ட்டவுன் ஸ்டார்ட் நவ்”

“இவரு கண்ணகியோட கசின் பிரதர். சாபம் குடுக்கிறாரு. போடா, போய் இனிமேலாவது ஒழுங்கா படி. ”

அதற்குள் அந்த பணியாளர் பேக்குடன் வந்திருந்தார்.

” எடுத்துக்கோ டேனி. உனக்கு புடிச்ச கலரு”

“கண்டிப்பா எடுத்துக்கிறேன். இதை பார்க்கிற போதெல்லாம் உன் ஞாபகம் வருமே. அதுக்காகவே எடுத்துகிறேன். வரட்டா?” என இரண்டு விரலை நெற்றியில் வைத்து சலூட் அடித்தவன் திரும்பி பாராமல் வெளியேறினான்.

திருப்தியாக சீட்டில் சாய்ந்து அமர்ந்தவன், கைத்தொலைபேசியை எடுத்தான். கோல் பட்டனை அழுத்தியவன், மறுமுனை எடுக்கும் வரை மேசையில் தாளமிட்டபடி காத்திருந்தான்.

“ஹாலோ வேணு. குட் மோர்னிங்.”

“ஹாய் தானு. என்ன மூச்சு வாங்குது? எழுந்திருச்சிட்டியா?”

“தலை காய வச்சிக்கிட்டு இருந்தேன் வேணு. போன் சத்தம் கேட்டதும் ஓடி வந்தேன். அதெல்லாம் எப்பவோ எழுந்துட்டேன். மணி பத்துக்கு மேல ஆகுதே. இதுக்கும் மேல தூங்குனா கற்பு தண்ணியை கொண்டு வந்து முகத்துல ஊத்திருவாங்க.”

“என் கூட இருந்தேன்னா எவ்வளவு நேரம் வேணுன்னாலும் தூங்கலாம் தானு. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.”

“என்ன வேணு, காலையிலே வம்பு பண்ணனும்னே போன் அடிச்சியா?”

“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அதுக்குள்ள உனக்கு எவ்வளவு கோபம் வருது. கோபத்தை குறைக்க ப்ரெக்பஸ்ட் போலாமா தானு?”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். ரொட்டி இருக்கு. கோப்பி கலக்கி குடிச்சுக்குவேன். அது போதும்”

“காலையில நல்ல ஹேல்த்தியா சாப்பிடனும் தானு. வெறும் ரொட்டி மட்டும் எப்படி போதும் சொல்லு. பிரபு கிட்ட ஏதாவது வாங்கி குடுத்து விடவா?”

“வேணு!!!! இத்தனை நாளா நான் இப்படிதான் சாப்பிடறேன். எனக்கு மண்டைக்கு ஏத்தாம போய் உன் வேலையை பாரு. நான் கீழ போய் அம்மாவுக்கு ஹேல்ப் பண்ணனும். டேனி லஞ்ச்சுக்கு வரேன்னு மெசெஜ் அனுப்பி இருக்கான்.”

“நானும் உன் ப்ரண்ட் தானே? என்னை லஞ்ச்சுக்கு கூப்பிட மாட்டியா தானு?”

“கூப்பிடலாம்தான். ஆனா”

“என்ன ஆனா? உங்க அம்மவுக்கும் என்னை தெரியும் அண்ணனுக்கும் தெரியும். அப்புறம் என்ன ஆனா?”

“வந்து வேணு, தருண் உன் கிட்ட ரொம்ப வைச்சிக்க வேணாம்னு சொல்லி இருக்கான்.அதையும் மீறி தான் நான் உன் கூட ப்ரண்டா இருக்கேன். நீ வீட்டுக்கு வந்தா அப்புறம் எங்கண்ணன் கேட்குற கேள்வியை வேற நான் சமாளிக்கணும்”

“ஓ! ஏன் தானு? என்னைய பார்க்க பொருக்கி மாதிரியா இருக்கு? எதுக்க உங்கண்ணன் எட்டி நிக்க சொன்னான் ?அப்படின்னா இனிமே நாம பழக வேணாம். நம்ம நட்பை இதோட நிறுத்திக்குவோம்” என படபடத்தான் விபா.

‘எத்தனை பேரடா நான் சமாளிப்பேன். இப்ப தான் ஒருத்தனை சரி கட்டுனேன். அதுகுள்ள இன்னொருத்தனா?’ நொந்து போனான் விபா.

“கோவிச்சிக்காதே வேணு. அண்ணனுக்கு உன்னைப் பற்றி தெரியலை. நீ என்னை எப்படிபட்ட இக்கட்டுல இருந்து காப்பாற்றி இருக்கன்னு தெரிஞ்சா கண்டிப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங்க”

“வேணா தானு. இந்த விஷயம் யாருக்கும் தெரியறத நான் விரும்பல. தருண் பார்வையில நான் எப்படி வேணும்னாலும் இருந்துட்டு போறேன். நான் நல்லவன்னு நீ நம்புனா போதும்”

“சரி இமோஷனல் ஆகாதே வேணு. இப்ப என்ன லஞ்ச் தானே? இன்னிக்கு டேனி கூட சாப்பிடறதனால, நாளைக்கு உன் கூட சாப்பிடறேன். நாம ரெண்டு பேர் மட்டும். ஓகேவா?”

‘இதை, இதை, இதை தான் நான் எதிர்பாத்தேன்’ மனதில் பனி சாரல் வீசினாலும், வெளியே,

“பரவாயில்லை தானு. எனக்காக நீ ஒன்னும் கஷ்டபட்டு வர வேண்டாம்.அப்புறம் வந்துட்டு சீக்கிரம் போகனும், அம்மா வெய்ட் பண்ணுவாங்க, அண்ணன் திட்டுவாங்கன்னு பறப்ப.”

“அய்யோ வேணு,  உன்னோட பெரிய ரோதனையா போச்சு. கண்டிப்பா வரேன். வந்து ஆற அமர சாப்பிடறேன். ஓகேவா?”

“ஹ்ம்ம் சரி தானு. நாளைக்கு பார்ப்போம். பாய்”

“பாய் வேணு” போனை கட் செய்தவள் அப்படியே கட்டிலில் சரிந்தாள்.

சுழலில் சிக்கி கொண்ட மாதிரி ஒரு உணர்வு. ஆனால் இந்த உணர்வை சுகமா , சுமையா என வரையறுக்க முடியவில்லை அவளால்.

வேணுவின் மனதில் என்ன இருக்கிறது என அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. காதல் என வந்தவனை நட்புக்கரம் கொடுத்து அடக்கி இருந்தாள். எவ்வளவு நாள் இந்த சுனாமியை சுண்டு விரலில் அடக்க முடியும்? எப்பொழுது அது கரை புரண்டு தன்னை புரட்டி போடுமோ என்ற பயம் ஆக்ரமித்தது அவளை. எட்டி நில்லு என்றவள் மனதில் ஒட்டிக் கொண்டு நின்றுவிட்டான் அவன். இனி கண்ணாம்பூச்சி ஆட்டம்தான். கண்டிப்பாக தானே ஜெயிக்க வேண்டும் என தீர்மானம் எடுத்துக் கொண்டாள் தானு. விடுவானா அவன்?

error: Content is protected !!