ENE– EPI 24

ENE– EPI 24

அத்தியாயம் 24

நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது

ஏனேன்று அது புரியவில்லை

நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது

ஏனென்று அது தெரியவில்லை

 

ஒரு மணிக்கெல்லாம் வருவதாக தானு மெசேஜ் அனுப்பி இருந்தாள். அவளுக்கு காத்திருந்தபடி அந்த இந்திய உணவகத்தில் அமர்ந்திருந்தான் விபா.

பிண்ணனியில் மெல்லிய கஜல் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. மிதமான வெளிச்சத்தில் அந்த உயர்தர உணவகம் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. அவர்கள் சாப்பிடுவதற்கு தனி அறை புக் செய்திருந்தான் விபா. நால்வர் அமரக்கூடிய அளவில் மேசையும் நாற்காலிகளும் இருந்தது. மேசையின் நடுவில் மெழுகுவர்த்தி கொழுத்தப்பட்டு, ரோஜா பூக்கள் குவளையில் அடுக்கக்பட்டிருந்தன. முதல் முதலாக இருவரும் சேர்ந்து உணவருந்த போகிறார்கள். தானுவை எப்படியாவது இம்ப்ரேஸ் செய்து விட வேண்டும் என முயற்சித்து இருந்தான் விபா.

சரியாக ஒரு மணிக்கு அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் தானு. விபாவின் எதிரே அமர்ந்தவள் மெல்ல அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“என்ன ஆச்சு தானும்மா?” என பதறி போய் கேட்டான் விபா. முகம் வீங்கி, மூக்கு நுனி சிவந்து, கண்களில் கண்ணீர் இப்ப வரவா என மிரட்டும் அளவுக்கு களையின்றி இருந்தாள் தானு.

“ஒன்னும் இல்ல வேணு. முதல்ல சாப்பிடலாம். நேற்று சாப்பிட்ட லஞ்ச் தான். அதுக்கு அப்புறம் ஒன்னும் சாப்பிடல.” குரலும் கமறலாக வெளி வந்தது.

“சரி முதல்ல சாப்பிடலாம்” என்றவன் அவள் மெனுவையே தொட்டு பார்க்காததால் அவளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான். முதலில் சுக்கு காப்பி வந்தது. அவளிடம் நகர்த்தியவன்,

“குடி தானு. தொண்டைக்கு இதமா இருக்கும்”

அவனது கரிசனத்தில் இரண்டு சொட்டு கண்ணீர் கண்களில் இருந்து இறங்கியது.

“தானு !!” என எழுந்தான் விபா.

சட்டென எழுந்தவள்,

“உட்காரு வேணு. நான் ரெஸ்ட்ரூம் போய்ட்டு வரேன்” என வேகமாக வெளியேறினாள்.

அவளது அழுகையும் அதை மறைக்க அவள் போராடுவதையும் பார்க்க பார்க்க விபாவுக்கு மனம் வலித்தது. எதற்காக அழுகிறாள் என ஓரளவு அவனால் யூகிக்க முடிந்தது. முடி வளர வேண்டும் என்றால் நுனியை வெட்டி விட தானே வேண்டும். பிள்ளைக் கனி கிடைக்க வேண்டும் என்றால் பெரும் வலியை தாங்கி தானே ஆக வேண்டும். பிற்பாடு வரும் சந்தோஷத்துக்குக்காக இந்த கஸ்டத்தை அவள் தாங்கி தான் ஆக வேண்டும் என எண்ணி கொண்டான்.

தானு திரும்பி வந்த போது முகம் ஓரளவு தெளிவாக இருந்தது. முகம் கழுவி இருப்பாள் போல. பொட்டு கூட இல்லாமல் முகம் துலக்கி வைத்த குத்து விளக்கு போல் மிளிர்ந்தது. அதற்குள் உணவும் வந்திருந்தது.

எதிரில் அமர்ந்திருந்த விபா எழுந்து வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

“சாப்பிடு தானு. நேற்றிலிருந்து சாப்பிடலைன்னு சொன்ன” என்றவறே அவளது தட்டில் தேவையானதை எடுத்து வைத்தவன், தனக்கும் எடுத்து கொண்டான். அவள் ஒரு வாய் சாப்பிடுவதும் பின்பு உணவை அளைவதுமாக இருக்கவும்,

“சாப்பிடும் போது எதையும் நினைக்க வேண்டாம் தானு. நீ சரியா சாப்பிடாம நான் மட்டும் எப்படி சாப்பிடறது சொல்லு? இங்க வரும் போதே எனக்கு செம்ம பசி” என அவளது கவனத்தை திசை திருப்பினான். அந்த டெக்னிக் கொஞ்சம் வேலை செய்தது. அவள் சாப்பிட சாப்பிட உணவை அவளது தட்டில் நிரப்பியபடியே இருந்தான் விபா.

“போதும் வேணு. வயிறு டொம்முன்னு இருக்கு. நீ சாப்பிடு. “

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியே அங்கு ஆட்சி செய்தது.

“ஐஸ்க்ரிம் சாப்பிடலாமா தானு? இங்கே பாதாம் குல்பி கிடைக்குமாம். ட்ரை பண்ணுறியா?”

“வேணாம் வேணு. இனிப்பா எதுவும் சாப்பிடவே மூட் இல்லை” சொல்லும் போதே குரல் கமறியது.

“சரி பில் கட்டிட்டு வரேன். எங்கேயாவது போகலாம்” என எழுந்தான் விபா. இதே பழைய தானுவாக இருந்தால், இந்தா பிடி என்னோட பங்கு என பணத்தைக் கொடுத்திருப்பாள். இன்றைய தானுவோ அமைதியாக அவனை பின் தொடர்ந்தாள். பணம் கட்டிய விபா அவளது தோளில் கை போட்டு கூட்டி சென்று அவனது காரில் அமர வைத்த போது கூட சாவி கொடுத்த பொம்மை போல் உடன்பட்டாள். அவளது இந்த மாற்றம் விபாவுக்கு கொஞ்சம் பயத்தை கொடுத்தது.

‘என் பழைய தானுவை காணோமே. இவள எப்படி இதிலிருந்து வெளிய கொண்டு வர போறேன்? ஷீ இஸ் மைன். என்னால அவள பழைய மாதிரி கொண்டு வர முடியும்’ என வைராக்கியத்துடன் எண்ணி கொண்டான்.

அவர்கள் இரு முறை சந்தித்த அந்த லேக் கார்டனுக்கு சென்று காரை பார்க் செய்தான் விபா.

“தானு, இறங்கு வெளிய உட்கார்ந்து பேசலாம்”

அப்பொழுதுதான் கார் நின்றுவிட்டதை கவனித்த தானு,

“வேணு, நாம கார் உள்ளேயே இருக்கலாமா? எனக்கு வெளிய போக பிடிக்கல” சொல்லும் போதே உதடு நடுங்கியது. அவள் அழுகையைக் கட்டுப்படுத்துவது புரிந்தது விபாவுக்கு. டேஸ்போர்ட்டிலிருந்து பேப்பர் நாப்கினை எடுத்து கொடுத்த விபா,

“அழுதிடு தானு. யூ வில் ப்பீல் பெட்டர்” என்றான்.

“கண்டிப்பா பெட்டரா ஆகுமா வேணு?” என தன் பெரிய கண்களில் கண்ணீர் நிறைய கேட்டாள் தானு.

சட்டென அவளை இழுத்து அணைத்து கொண்டான் விபா. அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் பெருக தேம்பி தேம்பி அழுதாள். அவள் அழுவதை விபாவால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

‘கொஞ்ச நாள் தான்டா, கொஞ்ச நாள் தான். அப்புறம் அவனை மறந்துருவ. நான் மறக்க வச்சிருவேன்’ என திரும்ப திரும்ப மனதிற்குள் சொல்லி கொண்டான். அவள் தலையை தடவி கொடுத்தான், முதுகை நீவி விட்டான். அப்பொழுதும் அவள் கண்ணீர் நிற்கவில்லை. மேலும் மேலும் அதிகரித்தது. அவளது முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்து விட்டான். முகமெல்லாம் சிவந்து போய் உதடு துடிக்க இன்னும் அழுதாள்.

‘அரை மணி நேரமா அழறா. பார்க்கவே பாவமா இருக்கு. வேற வழி இல்ல’ என நினைத்தவன் சட்டென குனிந்து, வழிந்த கண்ணீர் துளியை தன் உதட்டால் துடைத்தான். அதிர்ச்சியில் கண்ணீர் பட்டென நின்றது தானுவுக்கு. கண்கள் விரிய அவனை நோக்கியவள்,

“என்ன பண்ணுற வேணு?” என கத்தினாள்.

அவளது அதிச்சியைப் பார்த்து சிரிப்பாக இருந்தாலும்,

“சோரி தானு. ரொம்ப அழுதியா, பார்க்கவே பாவமா இருந்தது. மூச்சு விட வேற கஷ்டபட்டியா, அதான் இப்படி செஞ்சேன். பாரு அழுகை நின்னுருச்சி” என்றான்.

அவனை முறைத்தவள்,

“இன்னொரு தடவை இப்படி பண்ண, சாப்பிடறதுக்கு வாய் இருக்காது” என மிரட்டினாள்.

‘வந்துட்டாடா, வந்துட்டா! என் பழைய தானு வந்துட்டா’

“என் மேல சத்தியமா இனிமே இப்படி செய்ய மாட்டேன் தானு. இது ஒரு வகையான மருத்துவ முத்தம் தான். நீ நம்பனும்” என சீரியசாக சொன்னான்.

அவளது உதட்டில் லேசாக புன்னகை எட்டி பார்த்தது. அவனுக்கு காட்டாமல் இருக்க வெளியே பார்ப்பது போல் அந்த பக்கம் திரும்பி கொண்டாள்.

அவர்களின் மூச்சு சத்தத்தை தவிர சற்று நேரம் அமைதியாகவே சென்றது. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு தானுவின் குரல் மெல்ல வெளிவந்தது.

“நேற்று டேனி வீட்டுக்கு வந்திருந்தான். அவன் முகம் ஒரு மாதிரியா இருந்தது. மூட் சரி இல்லை போலன்னு நான் ஒன்னும் கேட்கல.”

“சரி, அப்புறம்?”

“நாங்க ரெண்டு பேரும் ஒன்னாதான் சாப்பிட உட்கார்ந்தோம். அம்மா சாப்பாடை போட்டு வச்சிட்டு துணி மடிக்க போய்ட்டாங்க. இன்னிக்கு நான் உனக்கு ஊட்டி விடவா டான்யான்னு கேட்டான். நானும் சரின்னு சொன்னேன். என் முகத்தை பார்த்துகிட்டே ஊட்டி விட்டான். நான் கூட ஏன்டா இப்படி பாக்குற, நான் எங்கேயோ ஓடி போக போற மாதிரின்னு கிண்டல் பண்ணேன். லேசா சிரிச்சான்.” நாப்கின்னை எடுத்து மூக்கை சிந்தினாள் தானு.

“ஹ்ம்ம் மேல சொல்லு”

“நான் பேச பேச அமைதியாகவே இருந்தான். எனக்கு ஒன்னும் சரியா படலை. என்னாச்சு டேனின்னு கேட்டேன். முதல்ல சாப்பிடு, அப்புறம் பேசலாம்ன்னு சொன்னான். சாப்பிட்டு முடிச்ச உடனே மேசையை சுத்தம் செய்ய ஹெல்ப் பண்ணான். நான் ப்ளேட்டை கழுவி குடுக்க துடைச்சி அடுக்கி வச்சான். அப்புறம் ஹோலுக்கு வா, நான் கொஞ்சம் பேசனும்ன்னு சொன்னான்” மீண்டும் அவளுக்கு உதடு நடுங்கி கண்ணீர் வர பார்த்தது.

“இன்னொரு மருத்துவ முத்தம் வேணுமா தானு?”

“பிச்சி புடுவேன் வேணு”

“அப்ப சரி, கண்டினியூ பண்ணு”

“அப்பத்தான் சொல்றான் அவன் மேற்படிப்புக்கு ஆஸ்திரேலியா போறான்னாம். இன்னும் ரெண்டு வாரத்துல சேரணுமாம். இது வரைக்கும் எனக்கு மறைச்சு அவன் எதுவுமே செஞ்சது இல்ல வேணு. அந்த காலேஜிக்கு அப்ளிகேஷன் போட்டதை கூட என் கிட்ட சொல்லல. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா. இதோ இங்க “ தனது இதயத்தை சுட்டி காட்டி

“கத்தியை வச்சு சொருகின மாதிரி இருந்தது.” தேம்பி கொண்டே,

“அவன் எப்படி அப்படி செய்யலாம் வேணு? நான் என்ன செத்தா போயிட்டேன் ? என் கிட்ட ஒரு வார்த்தைக் கேட்கல. முடிவு எடுத்துட்டு செய்தியா மட்டும்தான் சொல்லுறான். அவன் முன்னுக்கே அழுதிட்டேன். என்னை கட்டி புடிச்சுகிட்டான். ரெண்டு பேரும் மாற்றி மாற்றி கொஞ்சம் நேரம் அழுதோம். எங்கம்மா வந்து என்னன்னு கேக்கவும் தான் ரெண்டு பேரும் அழுகைய நிறுத்துனோம். அவங்க தான் என்னை ஏசுனாங்க, அவன் படிக்க போறது நல்ல விஷயம் தானே, எதுக்கு நீ அழுது அவனையும் அழ வைக்கிறேன்னு”

‘யப்பா. எங்க மாமியாராச்சும் நல்ல படியா சிந்திக்கிறாங்களே’ என சந்தோஷபட்டான் விபா.

“என்னை ஏசிட்டு அவங்க கண்ணீர் விட ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் நாங்க ரெண்டு பேரும் தான் அவங்கள சமாதான படுத்த வேன்டியதா போச்சு”

‘விளங்கிரும்டா சாமி’

“டேனிக்கு ஒரே கோபம். புரிஞ்சுக்க டான்யா. நான் போய் தான் ஆகனும். எனக்காக ஒரு மாங்கா மடையன் ரொம்ப மெனக்கெட்டு செலவு பண்ணி இருக்கான்னு சொன்னான். அவங்க அங்கிள் ஆஸ்திரேலியால இருக்காறே அவரை தான் சொல்லுறான்.”

‘டேய் வைட் கொசு. இப்படி செக் வைச்சும் உனக்கு திமிரு அடங்கலடா. நான் மாங்கா மடையனா?’ என பல்லை கடித்தான் விபா.

“நான் சொன்னேன் இங்க இல்லாத காலேஜா? ஏன் என்னை விட்டு தூரமா போறேன்னு? அவனுக்கு சட்டுன்னு கோபம் வந்துருச்சி. ஏன் இங்கேயே உனக்கு போடி கார்ட் வேலை செஞ்சு கிட்டு இப்படியே இருக்கவான்னு கேட்டுட்டான். அவன் இது வரைக்கும் என்னை ஒரு வார்த்தை கூட கடிஞ்சு பேசனது இல்ல வேணு. திடீர்ன்னு இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டான். நான் அதிர்ச்சியிலே அப்படியே நின்னுட்டேன். பட்டுன்னு எலும்பெல்லாம் நொருங்குற மாதிரி கட்டி பிடிச்சு கிட்டான். பிடிச்ச வேகத்துல விட்டுட்டு மட மடன்னு வெளியேறி போயிட்டான். அவன் போனதுல இருந்து இப்ப வரைக்கும் அழுது கிட்டு தான் இருக்கேன். போனை அடைச்சு போட்டுட்டான். அத்தனை தடவை கோல் பண்ணேன், மெசேஜ் அனுப்பினேன், இமேயில் கூட போட்டேன். நத்திங். ஒன்னுலயும் ரிப்ளை வரல வேணு. என்னால தாங்கிக்கவே முடியல”

“தானு, அவன் பக்கமும் நியாயம் இருக்குடா. எத்தனை நாளைக்கு தான் இப்படி விளையாட்டு பிள்ளையா இருப்பான்? அவனும் படிச்சு முன்னேறரது இல்லையா? இங்கயே உன் பின்னடியும் அவங்க அப்பா பின்னாடியும் ஒளிஞ்சு கிட்டா எப்ப அவன் உலகத்தை எதிர் கொள்ளறது? சொல்லு பார்ப்போம்.”

“என் மர மண்டைக்கு புரியுது ஆனா மனசுக்கு புரிய மாட்டிக்குதே வேணு” கண்களை துடைத்துக் கொண்டே சொன்னாள்.

“ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல, பதினாறு வருஷ நட்பு வேணு. என்னோட வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் இருந்தான். சொன்னா உனக்கு புரியாது வேணு”

“சொல்லும்மா. புரிஞ்சுக்க ட்ரை பண்ணுறேன்.”

“ஒரு பெண்ணோட வாழ்க்கையின் முக்கிய கட்டம்ங்கிறது அவ வயசுக்கு வருவது தான். பள்ளியில ஏற்கனவே சொல்லி குடுத்துருக்காங்க அந்த விஷயத்தை எப்படி எதிர் கொள்ளறதுன்னு. என்னோட பதினான்கு வயசுல பள்ளியில தான் எனக்கு இது நடந்தது. டேனி க்ளாஸ்ல என் பக்கத்துல தான் உட்கார்ந்து இருப்பான். நான் ஒரு மாதிரி இருக்கறத பார்த்துட்டு என்னன்னு கேட்டான்”

“அப்புறம் என்ன நடந்தது தானு?”

“முதல்ல நான் சொல்ல தயங்கினேன். வயிற்று வலி ரொம்ப இருக்கவும் சொல்லிட்டேன். என் கையை புடிச்சு கிட்டவன், பயப்படாதே டான்யா. இது எல்லா பெண்களுக்கும் வரது தான்னு சொன்னவன், அவங்க அம்மா கிட்ட போன் செஞ்சு டிரைவரை அனுப்ப சொன்னான். அவங்க கிட்ட குசுகுசுன்னு என்னவோ பேசுனான். அப்புறம் டீச்சர் கிட்ட சொல்லிட்டு என்னை காருல ஏத்திகிட்டான். பாதி வழியில கடையில நின்னு ஒரு பேக்கேட் வாங்கி வந்து குடுத்தான். எனக்கு முதல் முதல்ல செனிட்டரி நாப்கின் வாங்கி குடுத்ததே அவன் தான் வேணு” கண்கள் மீண்டும் உடைப்பெடுத்தது அவளுக்கு. விபா மெல்ல அவள் கைகளை பற்றி தட்டி கொடுத்தான்.

“வீட்டுல என்னை கொண்டு வந்து விட்டவன், அங்கேயே வேய்ட் பண்ணான். எங்க பாட்டி விஷயத்த கேள்வி பட்டு என்னை கட்டி புடிச்சுகிட்டாங்க. அவங்க பழைய பஞ்சாங்கம்கிறதால ஒரு வாரம் பள்ளிக்கு அனுப்பல. ரூமுலயே உக்கார வைச்சிட்டாங்க. தினமும் டேனி பள்ளி முடிஞ்சு நோட்ஸ் எல்லாம் எடுத்து கிட்டு வருவான். பாட்டி கிட்ட புக்ஸ்ச குடுத்துட்டு படிக்கிட்டயே நின்னு, டான்யா ஆர் யூ ஆல்ரைட்? இன்னும் வயிறு வலிக்குதான்னு கேப்பான். நான் இல்லைன்னு மேல இருந்து கத்துனா தான் போவான். எங்க பாட்டி தீட்டுடா, ஆம்பிளை பையன் இங்க வர கூடாதுன்னு சொன்னாலும் கேக்க மாட்டான்.”

விபா யோசனையாக அவளைப் பார்த்தான். அவனுள்ளே மெல்ல பயம் துளிர் விட ஆரம்பித்தது. ‘இவளுக்கு விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும்?’

“எங்க தாய் மாமா இந்தியால இருந்து சீர் எடுத்துட்டு வந்தாங்க. இவனும் லெச்சும்மாகிட்ட கேட்டு ஒரு தட்டு எடுத்துட்டு வந்தான் ஒரு அழகான சிகப்பு சேலையோட. அதை இன்னும் நான் பத்திரமா வச்சிருக்கேன். எனக்காக இவ்வளவும் செஞ்ச என் டேனி இப்படி என் கிட்ட சொல்லாம ஒரு முடிவு எடுத்தது தான் தாங்க முடியலை. அவன் முன்னேறினா எனக்கும் சந்தோஷம் தானே. அதை ஏன் அவன் புரிஞ்சுக்கல வேணு? ”

டேனியின் பால் இளக தொடங்கிய விபாவின் மனது, தானு என் டேனி எனவும் மீண்டும் இருகியது.

‘என் வாழ்க்கையிலே யாரா இருந்தாலும் உனக்கு அப்புறம்தான் தானும்மா. அவன உன் கிட்ட இருந்து பிரிச்சதுல கொஞ்சம் கில்டியா பீல் பண்ணேன். ஆனா இப்போ அது இல்ல. நீ எப்படி அவனை உன் டேனின்னு சொல்லலாம்? எப்பவுமே நான் மட்டும் தான் உன் விபா.’

ஒன்றும் பேசாமல் விபா அமைதியாகவே இருக்கவும், நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் தானு.

“சோரி வேணு. ரம்பத்தை போட்டு உன் டைமை வேஸ்ட் பன்ணிட்டனா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல தானு. கஷ்டத்தை மத்தவங்க கிட்ட பகிர்ந்துகிட்டா சுமை குறையும்ன்னு சொல்லுவாங்க. இப்ப எப்படி பீல் பண்ணுற?”

“இன்னும் சோகமா தான் இருக்கு. ஆனா கொஞ்சம் மூச்சு விடமுடியுது. முன்னே உலகமே இருண்ட மாதிரி இருந்தது. உன் கிட்ட சொன்ன பிறகு கொஞ்சூண்டு சூரிய வெளிச்சம் தெரியுது. தேங்கஸ் வேணு.”

“நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ் தானு? வாய்க்கு கை தேங்க்ஸ் சொல்லுதா?”

“ஐயோ, போதும் போதும் நிறுத்து. திரும்பவும் உன் மொக்கைய ஆரம்பிச்சிறாதே. நான் தாங்க மாட்டேன்.” என சிரித்தாள் தான்யா.

அவளது சிரித்த முகத்தை கண்டதும் விபாவுக்கும் சிரிப்பு வந்தது.

‘சரி ஆகிருவா. நான் ஆக்கிருவேன்’

error: Content is protected !!