ENE– EPI 26

ENE– EPI 26

எட்டி நில்லு எச்சரிக்கிறேன்

அத்தியாயம் 26

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

பத்து நிமிடங்களில் தானு ஓடி வருவது தெரிந்தது. கண்கள் கலங்க வந்தவள் கற்பகத்தை கட்டி அணைத்துகொண்டு கதறி விட்டாள்.

“தானும்மா, என்னடா ஆச்சு. அம்மாவ பாரு.” என்றவர் அவளது முகத்தினை நிமிர்த்தி கண்களை துடைத்து விட்டார்.

அதற்குள் விபா பதறிவிட்டான். பிரபுவை ஒரு இடி இடித்தவன் என்ன என்று கேட்க சொல்லி கண்களால் ஜாடை செய்தான்.

“என்ன தானு? ஊத்திக்கிச்சா? எனக்கு அப்பவே தெரியும். சரி விடு. இதுக்கு மேல என்ன? எங்க கடையில கேஷியர் வேலை காலியா தான் இருக்கு. ஹ்ம்னு சொல்லு இப்பவே சேர்த்துக்கிறேன்” என அவளை நோர்மலாக்குவதற்காக கிண்டலடித்தான்.

அவனை முறைத்தவள் ரிசால்டை கற்பகத்திடம் கொடுத்து விட்டு, அவரது காலை தொட்டு வணங்கினாள். கற்பகம் சந்தோஷத்தோடு மகளை உச்சி முகர்ந்து வாரி அணைத்துக் கொண்டார். இருவரின் உணர்ச்சி போராட்டத்தையும் பார்த்த விபா, மெல்ல கற்பகத்தின் கையிலிருந்து பேப்பரை வாங்கினான்.

எல்லா பாடங்களிலும் ஏ எடுத்திருந்தாள் தானு. அவனுக்கும் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. எஸ்.டி.பி.எம் தேர்வு என்பது இங்கே உள்ளவர்களுக்கு மிகவும் சிரமமான தேர்வு. பல மாணவர்கள் அதை தவிர்த்து விட்டு நேரடியாக டிப்ளோமா செய்துவிடுவார்கள். உண்மையிலே தில் உள்ளவர்கள் தான் இரண்டு வருடம் படித்து இந்த பரீட்சைக்கு அமர்வார்கள்.

‘என் செல்லம் மூளைக்காரி. எனக்கு இருக்கிற சந்தோஷத்துக்கு அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றிருவேன். இப்படி வெறும் புன்சிரிப்பை குடுக்க வேண்டியதா போச்சே’ என நொந்து கொண்டான்.

“காங்ரட்ஸ் பாப்பா. சாதிச்சிட்டியே. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அப்படியே என்னை மாதிரிவே கற்பூர புத்தி” என புகழ்ந்தான் பிரபு.

அதை கேட்டு கற்பகமும் தானுவும் கலகலவென்று சிரித்துவிட்டார்கள். லெட்சுமி சொல்ல சொல்ல கேட்காது அந்த பரீட்சைக்கு உட்கார்ந்து ஒரு பாடத்தில் மட்டும் டீயும், மத்ததில் எல்லாம் பெயிலும் ஆகி இருந்தான் பிரபு. அவன் அப்பா தான் காசை கொட்டி காலேஜில் சேர்த்து ஒரு டிகிரி வாங்க வைத்தார்.

“சரி, சரி. புரியுது. என் மானத்த கப்பலேத்தாம அப்படியே மெயின்டேன் பண்ணுங்க பிளீஸ்”

“அந்த பயம் இருக்கட்டும்.” ஒருவாறாக நார்மலாகி இருந்தாள் தானு.

“உங்க பாட்டி இருந்திருந்தா அவ்வளவு சந்தோஷ பட்டிருப்பாங்க. அவங்க கனவெல்லாம் நீ நல்லா படிச்சு டாக்டராகி உன் சொந்த காலிலே நிக்கனுங்கிறதுதான். எங்களை மாதிரி யாரையும் நீ சார்ந்து இருக்க கூடாதுன்னு அடிக்கடி சொல்லுவாங்க. இரும்மா, உங்க அண்ணனுக்கு  ஒரு கோல் பண்ணி விஷயத்தை சொல்லிருறேன். காத்துக்கிட்டு இருப்பான்”

அவர் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்த கேப்பில், விபா தானுவின் கைகளை பற்றி குலுக்கினான்.

“எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்குடா தானு. இப்ப நீ எது கேட்டாலும் கிடைக்கும். சொல்லு என்ன வேணும்?”

“இந்த மாதிரி சந்தோஷமா இருக்கும் போது யாருக்கும் ப்ராமீஸ் பண்ண கூடாதுங்கறது உனக்கு தெரியுமா வேணு? அதனால பல விளைவுகளை சந்திக்க நேரிடும்”

“நீ கேட்டு என் கிட்ட இல்லாததுன்னு ஒன்னும் இல்ல தானும்மா. கேளு”

“சரி கேட்குறேன். நீ நிறைவேத்தி குடுப்பங்கிற நம்பிக்கையில கேட்குறேன். “

எதிர்பார்ப்புடன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் விபா. அவனது முகத்தை பார்த்து சொல்ல முடியாமல் தலை குனிந்த தானு,

“சீக்கிரமா நீ இந்தியாவுக்கு திரும்பி போயிரணும். என்னை பார்க்கறதுக்குன்னு திரும்பி இங்க வர கூடாது. செய்வியா வேணு?” என கேட்டாள்.

விபாவின் முகத்திலிருந்த சந்தோஷம் எல்லாம் துணி கொண்டு துடைத்ததை போல் மறைந்தது.

“என் கண்களை பார்த்து சொல்லு தானு. “

மெல்ல நிமிர்ந்தவளின் கண்கள் கலங்கி இருந்தது. தொண்டையை செருமி கொண்டு,

“போய்டு வேணு “ என அவனது கண்களைப் பார்த்து சொன்னாள். அவன் கண்களில் தெரிந்த வலி அவளது நெஞ்சை உருக்கியது. திரும்பி அவளது அம்மாவை பார்ப்பது போல் நின்று கொண்டாள்.

“சரி தானும்மா” என்றவன் நடந்து சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான்.

இவர்கள் இருவரின் வார்த்தைப் பரிமாற்றத்தை பிரபு கவனித்து கொண்டு தான் இருந்தான்.

‘ஹ்ம்ம். இது எங்க போய் முடிய போகுதோ.’ என வருத்தத்துடன் நினைத்து கொண்டான்.

“என்ன தானு இன்னுமா அழற? இந்தா அண்ணன் பேசனும்னு சொன்னான். பேசு” என போனை அவள் கையில் திணித்தார்.

அவர்கள் கிளம்பும் வேளையில் தான் மிஸ்டர் ஓங் அங்கு வந்தார். அவரை பார்த்தவுடன் தாயும் மகளும் அங்கேயே நின்றார்கள். அவர்களை நோக்கி வந்தவர்,

“இங்க குடும்மா ரிசால்டை” என வாங்கி பார்த்தவர் தானுவை இறுக கட்டி கொண்டார்.

“ரொம்ப சந்தோஷம் டான்யா. ரியல்லி ப்ரவுட் ஆப் யூ. “ என்றவர் தனது பர்ஸிலிருந்து இருநூறு வெள்ளியை அவள் கையில் வைத்தார்.

“வேணாம்னு சொல்ல கூடாது. இது என்னோட ப்ளெசிங். நீ எப்பவும் ஆரோக்கியமாகவும் , சந்தோஷமாகவும் இருக்கணும். உனக்கு எந்த ஹேல்ப் வேணும்னாலும் தயங்காம என் கிட்ட கேட்கணும்”

அவள் சரி என தலை ஆட்டியவுடன் தான் அவளை விட்டார்.

“கொஞ்சம் வேய்ட் பண்ணுங்க. இவனோடத போய் எடுத்துட்டு வரேன். ஆண்டவன் விட்ட வழி” என சிரித்துக் கொண்டே சென்றார்.

அவர் திரும்பி வந்தவுடன் ஆவலாக ரிசால்டை வாங்கி பார்த்தாள் தான்யா. ஏ, பீ,சீ என கலவையாக மார்க் வாங்கி இருந்தான். எந்த பாடத்திலும் பெயில் ஆகவில்லை. அதுவே மிஸ்டர் ஓங்கிற்கு போதுமானதாக இருந்தது.

“உனக்கு தான் மா டேங்க்ஸ் சொல்லனும். நீ மட்டும் கோச் பண்ணாட்டி எங்க பாஸ் செஞ்சிருக்க போறான்”

“எப்ப பாரு அவனை எதாவது குத்தம் சொல்லிகிட்டு. நல்ல ரிசால்ட் தான் எடுத்திருக்கான். பையனை ஒன்னும் சொல்லாதிங்க” என பரிந்து வந்தார் கற்பகம்.

“அப்படியே நான் ஏதாவது சொல்லிட்டாலும்! நீ வேறம்மா” என சிரித்தார் அவர்.

“சரிம்மா நான் கிளம்பறேன். நாளை மறுநாள் மறக்காம ஏர்போர்ட்டுக்கு வந்திருங்க நீங்க ரெண்டு பேரும்.” என்றவாறே கிளம்பினார்.

அதற்கு பிறகு கார் பயணம் அமைதியாகவே சென்றது.

“தம்பி, எங்களை முருகன் கோயில் அருகிலே இறக்கி விட்டுருப்பா. சாமி கும்பிட்டுட்டு நாங்க வீட்டுக்கு போயிருறோம். நீங்க கடைக்கு போங்க. ஏற்கனவே எங்களால மணி ஆயிருச்சு”

“சரிம்மா” என்றவன் அவர்களை சொன்ன இடத்தில் இறக்கி விட்டுவிட்டு கிளம்பி விட்டான்.

“விபா! என்னடா ஒரே யோசனையா வர? தானு பேசனத நானும் கேட்டேன். ஒகேவா இருக்கியா நீ?”

“எனக்கு என்ன மச்சான் இப்ப தான் நான் இன்னும் ஹேப்பியா இருக்கேன்”

“அப்ப கன்பார்ம்மா உனக்கு மறை கழண்டுருச்சு”

“ஹாஹாஹா! என்னடா சோக கீதம் வாசிக்காம சந்தோஷமா இருக்கானேன்னு நினைக்கறீயா? கொஞ்சம் உன் மண்டையில இருக்கிற கிட்னிய யூஸ் பண்ணினா உனக்கே விடை தெரிஞ்சிரும்”

“எங்க கிட்னி எல்லாம் லேட்டா தான் வேலை செய்யும். அதனால நீயே சொல்லிருப்பா”

“எங்கே டேனி இல்லாதப்ப நான் அவ பக்கத்துலயே இருந்தேன்னா, என் பக்கம் மனசு சாஞ்சிடுமோன்னு அவ மேலயே அவளுக்கு பயம்டா. அதான் என்னை துரத்தி விடுறா”

“அப்போ நீ நிஜமாவே கிளம்புறியா?”

“யெஸ். டேனி கிளம்பற அன்னிக்கே நானும் கிளம்புறேன். அவனை நினைச்சு அழறப்போ என்னையும் கண்டிப்பா நினைச்சு அழுவா. அதுவே எனக்கு ஒரு வெற்றிதான்.”

“கிட்ட இருந்தே ஒன்னும் கிழிக்க முடியலையாம். இவரு ஊருக்கு போய் லவ்வ டெவலப் பண்ண போறாராம். இதெல்லாம் எந்த காலத்து டெக்னிக்டா?”

“அந்த காலத்து ஜெமினி கணேசன்ல இருந்து இந்த காலத்து ஜெயம் ரவி வரைக்கும் இதை தான் சொல்றாங்க மச்சான். தற்காலிக பிரிவு தான் காதலை கப்புன்னு பத்திக்க வைக்குமாம். இந்த மேட்டர்ல நீ ஒன்னை கவனிக்கனும்”

“சொல்லு கேப்போம்”

“நான் சொன்னது தற்காலிக பிரிவு தான். ரொம்ப நாள் விட்டோம்னா, நம்மள மறக்கறதுக்கும் சான்ஸ் இருக்கு. அதனால தான் எப்படியும் அவளை என் கை எட்டுலயே நிறுத்தி வைக்க ஒரு பிளான் வச்சிருக்கேன்.”

“என்னமோ போடா. இந்த கன்றாவிக்கு தான் நான் சைட்டடிக்கிறதோட நிறுத்திக்கிறது. அதுக்கும் மேல போகறதில்லை”

“நீ போகறதில்லையா? இல்லை எவளும் போக விடறதில்லையா?” என கரேக்டாக பாயிண்டை பிடித்தான் விபா.

“ஹிஹிஹி. விடு மச்சான். இதெல்லாத்தையுமா வெளிய சொல்லுவாங்க. என் இமேஜையே டேமேஜ் பன்ணிருவ போல. ரொம்ப கலாய்ச்சின்னா என் அனுமான் வேலையிலிருந்து ரிசைன் பண்ணிருவேன், பார்த்துக்கோ”

“அப்படி ஏதும் செஞ்சிறாதே மச்சி. உன்னை நம்பிதான் நான் தைரியமா ஊருக்கு போறேன். ஏன்டா பிரபு, ரிசால்ட் வந்துருச்சி, இன்னும் எவ்வளவு நாள் ஆகும் யுனிவேர்சிட்டி சீட் கிடைக்குதா இல்லையான்னு தெரிய?”

“இனிமே தான் அப்ளை பண்ணுவாங்க. அது எப்படியும் இன்னும் மூனு மாசம் எடுக்கும். இவ வச்சிருக்குற ரிசால்டுக்கு கண்டிப்பா இடம் கிடைக்கும்ன்னு நினைக்கிறேன். அப்புறம் எப்படிடா அங்க வர வைப்ப?”

“மெடிக்கல் சீட் கன்பார்ம் பண்ணி வைச்சிருக்கேன்டா பிரபு. அவங்க வீட்டுல மூனு பேருமே, ஓசின்னா வாய பிளக்கறவங்க இல்லை. இங்க யுனிவெர்சிட்டில அவளை ரிஜெக்ட் பண்ணா தவிர நான் அடுத்த ஸ்டேப் எடுக்க முடியாது. தானுவ அங்க வர வைக்கிற விஷயத்துல மட்டும் நான் அந்த கடவுளை தான் நம்பி இருக்கேன்..”

‘அதுக்கும் உள்ளுக்கு ஆள் வச்சிருக்கேன்டா. முதல்ல அப்ளை பண்ணட்டும். நாசுக்கா வேலையை முடிச்சிருவாங்க. இதை உன் கிட்ட சொல்லி நீ உளறிட கூடாதுல. அதான் சொல்லல மச்சான்’

“சரி என்னமோ அவள கை எட்டுல வைக்க பிளான் வச்சிருக்கன்னு சொன்ன? என்னடா அது?”

“இந்த மூனு மாசம் சும்மா தானே இருப்பா. நீ என்ன பண்ணுற அவளையும் அவங்க அண்ணனையும் கன்வீன்ஸ் செஞ்சு நம்ம கடையில புல் டைம் வேலைக்கு சேர வைக்கிற. நீயே கூட்டிட்டு போய்ட்டு நீயே கூட்டிட்டு வந்துரு. சோ தனியா நைட்ல வேலைக்கு போய்ட்டு எப்படி வராளோன்னு நான் அங்க பக்கு பக்குன்னு பயந்துகிட்டு இருக்க தேவையில்ல பாரு. “

“செம்ம பிளான்டா மச்சி. அவ பாதுகாப்புக்காக நான் இதுக்கு ஒத்துக்குறேன்”

“நானும் அந்த டேனியும் கிளம்புன கையோட நீ இதை செய்யனும். அப்படியே விட்டோம்னா ரொம்ப சோகமா ஆகிருவா. வெளிய வந்து நாலு பேர பார்த்தானா, கொஞ்சம் மைண்ட் டைவேர்ட் ஆகும்”

“கரேக்டா சொன்ன மச்சி. எனக்கு கூட இது தோணல பார்த்தியா. ஒண்ணா மண்ணா பழகிட்டு எப்படி இந்த டேனி பய விட்டுட்டு போறான்னு எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு. இதுல எங்கம்மா வேற மூணு நாளா கண்ணை கசக்கிகிட்டு இருக்காங்க. நான் ஹாஸ்டல்ல தங்கி படிக்க போனப்போ, சிரிச்சிகிட்டே எனக்கு சமையல் வேலை மிச்சம்னு சொன்னவங்கடா அவங்க. இவன் போறான்னு இப்படி சீனை போடுறாங்க”

“அது, எனக்கு எப்படி மச்சான் தெரியும். இப்பத்தான் நல்லா படிக்கணும்னு புத்தி வந்துருக்கும். அவன் பேச்சை விடு. நீ உள்ள போ நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்” என டேனியின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் விபா.

 

கே.எல்.ஐ.ஏ ஏர்போர்ட்

காலை எட்டு மணிக்கெல்லாம் தான்யா ஏர்போர்ட்டுக்கு வந்துவிட்டாள். கற்பகத்துக்கு காலையிலேயே பிரஷர் அதிகமாகி மயக்கமாக  இருந்ததால் வரவில்லை என சொல்லிவிட்டார். டேனிக்கு பிளைட் காலை பதினொரு மணிக்கு தான் என்றாலும் தன் மனதை ஒரு நிலை படுத்தி கொள்ள அவளுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

பிரபு மெசேஜ் செய்திருந்தான் அழைத்துபோவதாக. அவள் இருந்த மனநிலையில் யாருடனும் பேசும் மூட் இல்லாததால் பதில் அனுப்பாமல் கிளம்பி வந்துவிட்டாள். ஏர்போர்ட் உள்ளே இருந்த ஒரு கபேயில் காப்பியும் தோஸ்டும் வாங்கி கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள். மெதுவாக சாப்பிட்டு கொண்டே அவசரமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் மக்களை வேடிக்கை பார்த்தாள்.  மனதுக்கு கொஞ்சம் ரிலாக்சாக இருந்தது அவளுக்கு.

‘இன்னிக்கு டேனி கிளம்பும் போது சிரிச்ச முகமாகவே வழி அனுப்பி வைக்கனும். நான் அழுது அவனை சங்கட படுத்த கூடாது. அவன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு கால் எடுத்து வைக்கிறான். அதுக்கு நான் சந்தோஷ படனுமே தவிர இப்படி அழுது வழிய கூடாது. ஒரு நண்பனின் முன்னேற்றத்தில உருதுணையா இல்லாட்டியும், தடைக்கல்லா இருக்க கூடாது’ என மனதினிலே உருப்போட்டு கொண்டாள்.

விபாவின் ஞாபகமும் ஒரு பக்கம் வந்து அலைக்கழித்தது தானுவை.

‘வேணு, போன்னு சொன்னதும் என் கிட்ட கோவிச்சிகிட்டியா? கோபம் வரணும்னு தான் அப்படி சொன்னேன். ரொம்ப நல்லா யோசிச்சு பார்த்தேன். உள்ளுக்குள்ள உன் மேல காதலை வச்சிகிட்டு நட்புன்னு உன்னை ஏமாத்தறது எனக்கே சரியா படல. நட்பிலும் சரி காதலிலும் சரி சுயநலம் இருக்க கூடாது. நான் சுயநலவாதியா மாறிட்டனோன்னு நினைச்சி எனக்கே என் மேல வெறுப்பா இருக்கு. நீ என்னை பாதுகாப்பா பாத்துக்கிறதும், கை பிடிச்சு பேசுறதும், நான் பார்க்கலைன்னு நெனைச்சுகிட்டு உன் பார்வையாலே என்னை வருடறதும் எனக்கு தெரியாம இல்லை. தெரிஞ்சும் தெரியாத மாதிரி பாசாங்கு செய்யுறேன். இது சரியான்னு எனக்குள்ளே கொஞ்ச நாளா ஒரு சுய அலசல். எனக்கு தெரியலை வேணு, என்னால கல்யாணம் செஞ்சு ஒரு சந்தோஷமான மணவாழ்க்கை வாழ முடியுமான்னு. சின்ன வயசுல எங்க அம்மா அழறத பார்த்து பார்த்து வளர்ந்த எனக்கு உள்ளுக்குள்ள ஆண்கள் மேல  ஒரு பயம். எங்க நாம பாசத்தைக் காட்டினா அவங்க வேஷத்தை கலைச்சி சுய ரூபத்தை காட்டிருவாங்களோன்னு. நீ ஒரு அனாதைன்னு கேள்வி பட்ட உடனே தான் இந்த முடிவை எடுத்தேன். உனக்கு தேவை அன்பை பொழிஞ்சு உன்னை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துகிற ஒரு மனைவி. அது சத்தியமா நான் இல்லை வேணு. நான் உன்னை கல்யாணம் செஞ்சிகிட்டா எப்போதும் ஒரு சந்தேக கண்ணோட தான் பார்ப்பேன். எப்ப என்னை விட்டு போயிருவியோன்னு. அப்படி வாழுற வாழ்க்கையில என்ன சந்தோஷம் வந்துற போது சொல்லு. அதனால தான்  உனக்கு ஒரு போலி நம்பிக்கை கொடுத்து பக்கதுல வச்சிக்கிறது என் காதலுக்கு நான் செய்யுற துரோகமா நினைக்கிறேன். நீ எப்படியும் இன்னும் கொஞ்ச நாளுல இன்னொருத்திய பார்த்துட்டு என்னை மறந்துருவ. பார்த்தியா! பார்த்தியா? இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள உன்னை வேற ஒருத்திகூட நினைச்சி பார்க்கிறேன். இதுக்குதான் சொல்லுறேன், நான் உனக்கு வேணாம் வேணு. எனக்குன்னு லட்சியம், கனவெல்லாம் இருக்கு. அதன் வழியிலே என் வாழ்க்கையை செலுத்திக்குவேன். ஆனா இனிமே என் வாழ்க்கையிலே நோ காதல் நோ கல்யாணம்’ தன்னை மீறி வெளியேறிய கண்ணீர் துளிகளை சுண்டி எறிந்தவள் ஒரு திடத்தோடு எழுந்தாள்.

இலக்கற்று நடந்தவள் ஒரு புத்தக கடைக்குள் நுழைந்தாள். பேஸ்ட் செல்லிங் புத்தக வரிசையில் இருந்த ‘லைப் விதவுட் லிமிட்ஸ்’ என்கிற பிரபல தன்முனைப்பு பேச்சாளர் நிக் வுஜிகிக் (கை கால் அற்றவர்) புத்தகத்தை கையில் எடுத்தாள். கொஞ்சம் படிக்கும் போதே உள்ளுக்குள் ஒரு நம்பிக்கை ஒளி விடுவதை கண்டவள் அந்த புத்தகத்தை வாங்கி கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். படிக்க படிக்க மனம் ஒரு நிலைபட்டது.

‘நான் சாதிக்க பிறந்தவள். காதல், நட்புன்னு என்னை ஒரு வட்டத்துகுள்ள குறுக்கிக்க கூடாது’ என தெளிவாக முடிவெடுத்தாள்.

டேனி போர்டிங் செய்யும் போது அவனை அணைத்து,

“சந்தோஷமா உன் கனவை நோக்கி போ. உன் கூட என்னிக்குமே நான் பக்கபலமா இருப்பேன். நேரம் கிடைக்கிறப்போ கீப் இன் டச்” என சொல்லி சிரித்த முகமாகவே அனுப்பி வைத்தாள். டேனி தான் கலக்கமான முகத்துடனே அவளுக்கு கை ஆட்டி விட்டு சென்றான்.

வெளியேற எத்தனிக்கும் போது முன்னே வந்து நின்ற விபாவை பார்த்து அதிர்ந்தாலும், அழகிய புன்னகை ஒன்றை உதடுகளில் ஒட்ட வைத்தாள்.

“இன்னிக்கு நீங்களும் கிளம்புறீங்களா” என பெட்டியுடன் நின்றிருந்தவனை கேட்டாள்.

அவள் பார்வையிலும் குரலிலும் தோன்றிய அன்னியதன்மையை விபா குறித்து கொண்டான்.

‘என்ன ஆச்சு இவளுக்கு. எப்போதும் என்னை பார்த்தா மலரும் முகமும், சிரிக்கும் கண்களும் எங்க போச்சு.’

“ஆமா தானு. பிரபு கார் பார்க் பண்ண போயிருக்கான். அவனோட வீட்டுக்கு போயிரு”

தலையை சரி என்று ஆட்டியவள், அவனை இறுக்கமாக ஒரு தரம் அணைத்து விலகினாள்.

“பாய் வேணு விபாகர்”

அவன் அதிர்ச்சியிலிருந்து விலகும் முன், விடு விடுவென அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

error: Content is protected !!