ENE–EPI 25
ENE–EPI 25
அத்தியாயம் 25
நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
செவ்விழி கலந்தது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் நாளை வெளி வருவதாக செய்திகளில் அறிவித்திருந்தார்கள். ஏற்கனவே பேசி வைத்தது போல் ஒன்றாக பள்ளிக்கு சென்று முடிவுகளை பெற்று கொள்ளலாம் என தெரிவிப்பதற்காக டேனிக்கு கோல் செய்தாள் தான்யா. போன் சுவிட்ச் ஆப் என வந்தது. மனதை தேற்றி கொண்டு அங்கிள் ஓங்கிற்கு அழைத்தாள்.
“ஹாய் டான்யா. எப்படிடா இருக்க? பேசி ரொம்ப நாள் ஆச்சு.”
“நான் நல்லா இருக்கேன் அங்கிள். நீங்களும் ஆன்ட்டியும் நல்ல இருக்கீங்களா?”
“வீ ஆர் பைன் டியர். சொல்லுடா என்ன விஷயம்? டேனிக்கு அடிக்காம எனக்கு அடிச்சிருக்க?”
“நாளைக்கு ரிசால்ட் வருதுல, ஒன்னா போகலாமான்னு கேட்க தான் போன் பண்ணேன். ஆனா சுவிட்ச் ஆப்னு வருது.”
“அவனோட போனை எங்கேயே தொலைச்சிட்டான் டான்யா. புதுசா வேற போன்னும், நம்பரும் வாங்கிட்டானே. உனக்கு குடுக்கலையா?”
“ஓ, ஆமா சொன்னான் அங்கிள். ரிசால்ட் டென்சனிலே மறந்துட்டேன்.”
“போமா. அவன் டென்ஷன் ஆகுறான்னா நம்பலாம். நீ நல்லா படிக்கிற பொண்ணு. உனக்கு எதுக்கு டென்ஷன்?”
“கண்டிப்பா எல்லா சப்ஜெக்டிலயும் ஏ எடுத்துருவேன் அங்கிள். டேனிக்கு என்ன கிடைக்குமோன்னு தான் கொஞ்சம் டென்ஷன்.”
அந்த பக்கம் வாய்விட்டு சிரித்த ஓங்,
“அவனுக்கு என்ன ரிலால்ட் கிடைச்சா என்னம்மா, அதான் இன்னும் நாலு நாள்ல படிக்க ஆஸ்திரேலியா போறானே. நீ அவனுக்காக கவலை படாதே. என் கவலை எல்லாம் உன்னைப் பற்றி தான். உன்னையும் அவன் கூட அனுப்பலாம்ன்னு உங்க அண்ணன் கிட்ட கேட்டேன். நானே ஸ்பான்சர் பண்ணுறனும் சொன்னேன். தகுதிக்கு மீறி அங்க எல்லாம் அனுப்ப முடியாதுன்னு நாசுக்கா சொல்லிட்டான். ஹ்ம்ம்”
‘இது எப்ப நடந்தது? அண்ணா ஒன்னும் சொல்லலியே.’
“அண்ணா சொன்ன கரேக்டா தான் அங்கிள் இருக்கும். அங்க எல்லாம் படிக்கனும்னா ரொம்ப செலவாகும். அதோட உங்க கிட்ட பண உதவி வாங்கிக்கிறது எனக்கும் சரியா படல. உங்களோட ப்ளேசிங் மட்டும் போதும் அங்கிள்”
“அப்படியே உங்க பாட்டி மாதிரியே பேசுற. உன்னை நினச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு டான்யா”
“போங்க அங்கிள், ரொம்ப புகழாதீங்க. டேனியோட புது நம்பர் இப்ப எனக்கு குடுக்குறீங்களா? என் போன்ல காண்டேக்ட் எல்லாம் அழிஞ்சு போச்சு அங்கிள்.”
“இப்ப சென்ட் பண்ணுறேன்டா”
“தேங்க்ஸ் அங்கிள், பாய்”
“பாய்டா குட்டி.”
‘யப்பாடா! நல்ல வேலை அவருக்கு சந்தேகம் வரல. கான்டெக்ட்ஸ் அழிஞ்சிருச்சினா எனக்கு மட்டும் எப்படி அடிச்சேன்னு கேட்டிருந்தாரு, பப்பரப்பான்னு முழிச்சிருப்பேன். கிரேட் எஸ்கேப்’
‘நம்பர மாத்திட்டு எனக்கு குடுக்கல இந்த படவா டேனி. செய்யறதேல்லாம் செஞ்சிட்டு என்னம்மோ நான் தப்பு பண்ண மாதிரி என் கிட்ட மூஞ்சியா தூக்கி வைச்சிருக்கான். நாளைக்கு நான் மொத்துற மொத்துல, வாய்ல இருந்து தக்காளி சட்னி வர போகுது’
தனது போனில் இருந்து செய்தால் கண்டிப்பாக எடுக்க மாட்டான் என்பதால் பிரபு வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தாள். அவர்கள் வீட்டுக்கு புதிதாக லேன்ட் லைன் கனெக்ஷன் கொடுத்திருந்தார்கள். கடிகாரத்தைப் பார்த்தாள், மணி இரவு எட்டை காட்டியது.
“அம்மா, நான் லெச்சும்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன்”
“சாப்பிட்டு போ தானு”
“வந்து சாப்பிடறேன் மா” என்றவாரே செருப்பை மாட்டினாள். பிரபு வீட்டில் விபாவின் கார் நின்றிருந்தது.
‘ஐயோ. வேணு வேற வீட்டுல இருக்கான் போல. ரெண்டு நாளா அவன் கோல் எதையும் எடுக்கல. மெசெஜையும் ரிப்ளை பண்ணல. கேட்டா என்ன சொல்லுறது? நான் சோகத்துல இருந்தேன் அதனால ரிப்ளை பண்ணலனா? அப்போ நான் உன் ப்ரண்ட் இல்லையான்னு போய்ன்ட்ட புடிச்சு கேப்பானே. கடவுளே அவன் ரூமுல இருக்கணும்பா. நான் பூனை மாதிரி போய்ட்டு பூனை மாதிரி சத்தமில்லாம வந்துருறேன்.’ என வேண்டியபடியே சென்றாள்.
மெதுவாக பிரபுவின் வீட்டு கிரீல் கதவை திறந்தாள் தானு. அன்ன நடையிட்டு நடந்தவளை பைரவா குரைத்து வரவேற்றது. உதட்டில் விரலை வைத்து சத்தம் போடாதே என சைகை செய்தாள். அதுவும் இரண்டு காலை தூக்கி வணக்கம் வைத்துவிட்டு அமைதியாகி விட்டது. அதற்கு பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பியவள் மெல்ல வீட்டினுள் நுழைந்தாள்.
மேலே தன் ரூமிலிருந்து இந்த கூத்தை சிரிப்புடன் பார்த்து கொண்டு தான் இருந்தான் விபா.
‘வாடி வா. ஒரு மனுஷன் ரெண்டு நாளா எப்படி இருக்கியோ, சாப்பிட்டியோ இல்லையோ, இன்னும் அழறியோன்னு அக்கறையில விடாம போன் பண்ணா ஒன்னும் கண்டுக்கல. எனக்கு தெரிய கூடாதுன்னு தானே இப்படி பதுங்கி பதுங்கி வர. இரு கீழ வரேன்.’
உள்ளே நுழைந்த தானு, விபா ஹாலில் இல்லாதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“வா தானு. சாப்பிடறியா?” என வரவேற்றார் லெட்சுமி.
“மெதுவா பேசுங்க லெச்சும்மா. நான் பக்கத்துல தானே இருக்கேன்”
‘என்னடா ஆச்சு இவளுக்கு. நான் எப்போதும் மாதிரி தானே பேசறேன்’ என அவளை ஒரு மார்க்கமாக பார்த்தார் அவர்.
“பிரபு எங்கம்மா?”
“குளிக்க போயிருக்கான். வேய்ட் பண்ணு அவன் வந்தவுடனே சாப்பிடலாம்” என கிசு கிசுப்பாக பேசினார் அவர்.
“நான் சாப்பிட வரல. ஒரு போன் பண்ணனும், லேன்ட் லைனுல. சீக்கிரமா பேசிட்டு ஓடி போயிருவேன்” என அவளும் கிசுகிசுப்பாக பேசினாள்.
பாதி படிகளில் நின்று கொண்டு இவர்கள் இருவரும் செய்யும் சேட்டையை ரசித்தபடி நின்றிருந்தான் விபா.
“உனக்கு புடிச்ச மட்டன் பிரியாணியும், கேரட் அல்வாவும் செஞ்சிருக்கேன். கண்டிப்பா சாப்பிடனும்” மீண்டும் அதே கிசுகிசுப்பு.
நாக்கினால் உதட்டை ஈரமாக்கியவள்,
“என்னோட வீக்னச புடிச்சுட்டீங்களே லெச்சும்மா. சீக்கிரமா ஓடி போய் டப்பால பேக் பண்ணுங்க. எங்க வீட்டுல போய் சாப்பிட்டுக்கிறேன்”
“தானு!! என்னாச்சும்மா? தொண்டை வலியா? இப்படி குசுகுசுன்னு பேசுறே?” என தலையை துவட்டியபடி வந்தான் பிரபு.
“அப்படித்தான் இருக்கும் பிரபு. தான்யா மேடம் பார்க்கவே ஒரு மாதிரியா தான் இருக்காங்க” என்றபடியே இறங்கி வந்தான் விபா.
அவனைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தாள் தானு.
“விபா, அவ சின்ன பொண்ணுதான்பா. மேடம் எல்லாம் வேணாமே. தானுனே கூப்பிடு” என்றார் லெட்சுமி.
“நீங்க சொல்லிட்டீங்கம்மா. அவங்க இதுக்கு ஒத்துக்குவாங்களா?”
“ஓ தாராளமா கூப்பிடுங்க சார். இதுல ஒன்னும் பிரச்சனை இல்லை”
“நீ என்னா தானுகுட்டி சாரு மோருன்னுகிட்டு. உனக்கு மச்சான் முறை வரும். அழகா மச்சான்னு கூப்பிடு. அப்படி கூப்புட பிடிக்கலைனா மாமான்னு கூப்பிடு” என எடுத்து கொடுத்தார் லெட்சுமி.
“நல்லா இருக்கீங்களா மச்சான்?” என கடுப்பில் கேட்டாள் தானு.
“ரெண்டு நாளா நல்லா இல்லை. இப்பத்தான் நல்லா இருக்கேன்.” என கண்களால் சிரித்தான் விபாகர்.
“என்னாப்பா ஆச்சு? உடம்பு முடியலையா? என் கிட்ட ஒன்னும் சொல்லலியே” என பதறினார் லெட்சுமி.
“அம்மா, இது ஒரு வகையான வைரஸ்சால வர சீக்கு. திடீர்ன்னு வரும், திடீர்ன்னு போகும். நீங்க போய் சாப்பாடு எடுத்து வைங்க. எல்லோரும் சாப்பிடலாம்” என அனுப்பி வைத்தான் பிரபு.
“நான் வீட்டுல போய் சாப்பிட்டுக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க. எனக்கு போன்ல ஒரு வேலை இருக்கு”
“அப்படின்னா எனக்கும் சாப்பாடு வேண்டாம் பிரபு.”
“வீட்டுக்கு வரும் போதே பசிக்குதுன்னு சொன்ன. இப்ப என்னடா ஆச்சு”
கைகளை கட்டிக் கொண்டு அமைதியாகவே தானுவை பார்த்த படி நின்றிருந்தான் விபா.
“சரி வந்து தொலைங்க ரெண்டு பேரும். சாப்பிடலாம்” என சாப்பாட்டு அறைக்கு நடந்தாள் தானு. வெற்றி புன்னகையுடன் அவளை பின் தொடர்ந்தான் விபா.
தானுவின் இடது இருக்கையில் விபாவும் வலது புறத்தில் பிரபுவும் அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு பறிமாறிவிட்டு பழம் வெட்டி எடுத்து வருவதற்காக கிச்சனுக்குள் சென்று விட்டார் லெட்சுமி.
“சோரி வேணு. கொஞ்சம் டிப்ரசா இருந்தேன். அதான் கோலையோ மேசெஜேயோ ரிப்ளை பண்ணல.”
“அதைப் பற்றி நான் ஒன்னும் கேக்கல. இப்ப சாப்பிடு”
அப்பொழுதும் அவள் சாப்பிடாமல் உணவை வெறித்தபடி இருக்கவும், மேசையின் கீழ் இருந்த அவளது கையைப் பற்றி தட்டி கொடுத்தான் விபா.
“சாப்பிடுடா”
மூவரும் சாப்பிட்டு முடித்தவுடன் ஹாலில் வந்து உட்கார்ந்தனர். அங்கே தான் போனும் இருந்தது.
“நான் போன் பேசனும். ரெண்டு பேரும் போய் உங்க வேலையைப் பார்க்கறீங்களா?” என விரட்டினாள் இருவரையும்.
“ஆமா. நீ பெரிய தங்க மலை ரகசியத்தை பற்றி பேச போற. நாங்க ஒட்டு கேட்டுருவோம். போவியா! ஓவரா பில்ட் அப் குடுத்துகிட்டு” என தானுவை வம்பிழுத்தான் பிரபு.
அவனை முறைத்து விட்டு, போனை கையிலெடுத்து டையல் செய்தாள்.
இரண்டு ரிங் போனதும் டேனி போனை எடுத்தான்.
“டேனி, நான் தான்யா பேசுறேன். போனை வைச்சே மவனே நீ குடுத்த சங்கிலியை டாய்லட்டுல போட்டு ப்ளஸ் பண்ணிருவேன்.”
‘ஓ இவனுக்கு பேச தான் இங்க வந்தாளா.’ காதை இன்னும் கூர்மையாக்கி அவள் பேசுவதை கவனித்தான் விபா.
“சொல்லு டான்யா”
“எப்படி இருக்க டேனி. நம்பரு மாத்துனத கூட எனக்கு சொல்லலை. நான் அவ்வளவு வேணாதவளா போயிட்டேனா?” கண்ணீர் வழிந்தது அவள் கண்களில்.
பார்த்து கொண்டிருந்த விபாவுக்கு ரத்த அழுத்தம் எகிறியது.
“திரும்பவும் இப்படி அழுதேனா நான் போனை வைச்சிருவேன் டான்யா”
“சரி சரி, அழ மாட்டேன்.” என்றவாறே கண்ணீரை துடைத்தாள் அவள்.
‘நாம படிச்சு படிச்சு சொன்னோம் அழாதேன்னு. சொல்லியும் பிழிய பிழிய அழுதா. இவன் சொன்னதும் உடனே கண்ணை துடைச்சிக்கிட்டாளே’ ஆத்திரத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிரபுவின் கைகளை பிடித்து நொருங்கி விடும் அளவுக்கு அழுத்தினான்.
“என்டே குருவாயுரப்பா!!” என கத்தியபடி எழுந்து நின்றான் பிரபு.
சத்தம் போட வேண்டாம் என அவர்களை பார்த்து சைகை செய்தாள் தானு.
“ஏன்டா, உங்க காதலுக்கு அடிச்சு விளையாட நான் தான் கிடச்சேனா? இனிமே உன் பக்கத்திலேயே உட்கார மாட்டேன்டா. இது என் குல தெய்வம் மாரியாத்தா மேல சத்தியம்” என சொல்லிவிட்டு அடுத்த இருக்கையில் அமர்ந்தான் பிரபு.
“ஏன்டா மச்சான், கஷ்டத்துல தாய் மொழிதான் வாய்ல வரும்ன்னு சொல்லுவாங்க. உனக்கு மலையாளம் வருது” என அவனை கிண்டலடித்தான் விபா.
“நம்ம கடையில வேலைக்கு வந்திருக்கே பானுஜா, அவ கூட பழக ஆரம்பிச்சதிலிருந்து மலையாளம் என் தாய் மொழியா மாறிருச்சு”
“நல்லா வருவடா” என்றவன் மீண்டும் தானுவை கவனிக்க ஆரம்பித்தான்.
“நாளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம் ரிசால்ட் எடுக்க.”
“இல்லை டான்யா. நான் வரல. எனக்காக அப்பாவை வந்து எடுக்க சொல்ல போறேன். எனக்கு பேக்கிங் வேலை நிறைய இருக்கு.”
“ஓ! அப்படியா. சரி விடு. ரிசால்ட் எடுத்துட்டு உங்க வீட்டுக்கு வரவா ஹெல்ப் பண்ண?”
“அதுக்கெல்லாம் ஹெல்பர் இருக்காங்க. நீ வர வேணாம். அப்புறம் இங்க வந்து அழுது என் மூட்டை ஸ்பொயில் பண்ணுவ”
தானு உதட்டைக் கடித்து அழுகையை கட்டு படுத்துவதை பார்த்து கொண்டு தான் இருந்தான் விபா. கைகள் பரபரத்தன அவளை அணைத்து ஆறுதல் படுத்த. கட்டுப்படுத்தி கொண்டு அமர்ந்திருந்தான்.
“சரி வச்சிருறேன் டேனி. யூ டேக் கேர்”
“யூ டூ டான்யா. டேக் கேர் “ கரகரப்பான குரலுடன் போனை கட் செய்தான் டேனி.
போனை அதன் தாங்கியில் வைத்தவள் யாரிடமும் பேசாமல் வெளியேற போனாள்.
விபா, பிரபுவிடம் ஜாடை காட்டி பேசும்படி சொன்னான்.
“தானு, நாளைக்கு ரிசால்ட் வருதா?”
“ஹ்ம்ம்”
“தனியாவா போற?”
“அம்மாவும் வரதா சொல்லி இருக்காங்க. அண்ணா திரும்பவும் தாய்லண்ட் போய்ட்டாங்க. நாங்க காலையிலே டேக்சி பிடிச்சு போயிருவோம்.”
“சரி காலைல கிளம்பி நில்லுங்க. நான் கூட்டிட்டு போறேன்” என்றான் பிரபு.
“அதெல்லாம் வேணா பிரபு”
அப்பொழுது அங்கு வந்த லெட்சுமி,
“அதான் கூட்டிட்டு போறேன்னு சொல்லுறான்ல. அப்புறம் என்ன பிடிவாதம்?”
“சரி லெச்சும்மா.” என்றவள் அமைதியாக வெளியேறினாள். பைரவா ஓடி வந்து அவள் காலை கட்டி கொண்டது. கீழே அமர்ந்தவள், அதை கட்டிப் பிடித்து கொண்டாள். விபா கதவு அருகே நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தான். நிலவொளியில் அவள் கன்னங்கள் கண்ணீரால் பளபளத்தது .பைரவா அவளை சமாதான படுத்துவதுபோல் அவள் முகத்தை நக்கிவிட்டு மடியில் படுத்து கொண்டது. அதை அப்படியே தடவி கொடுத்தபடியே அமர்ந்திருந்தாள் தானு, கற்பகம் வந்து அழைக்கும் வரை.
மறுநாள் காலையில் விபாவும் பிரபுவும் சேர்ந்தே கிளம்பி நின்றார்கள். கற்பகம் ஏறுவதற்காக கார் கதவை திறந்து விட்டான் விபா. தானு இருந்த பக்கமே திரும்பவில்லை.
“நல்லா இருக்கீங்களா தம்பி?”
“நான் நல்லா இருக்கேன் மா. சோரி மா, வேலை பிசியில உங்கள வந்து பார்க்கல. அன்னிக்கு நீங்க செஞ்ச உதவிக்கு நன்றி கூட சரியா சொல்லலை”
“அதனால என்னப்பா. நானும் தான் பார்க்கிறேனே, காலையில போனா ராத்திரி தான் வரீங்க ரெண்டு பேரும். ஏன்பா உங்க வேலை டைம்ல எங்கள வேற கூட்டிகிட்டு போகனுமா?”
காரை செலுத்தி கொண்டே,
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா. போற வழிதானே. என்னடா பிரபு?”
“ஆமாம்மா. போற வழிதான்.”
“தம்பி ஊருல இருந்து வந்துருக்கீங்கன்னு தெரியும். ஊருல எங்கன்னு தெரியலையே?”
“சென்னை தான்மா நான் பிறந்த இடம். நீங்க சோலையூர்ன்னு லெச்சும்மா சொன்னாங்க. ஒரு தடவை பிஸ்னஸ் விஷயமா அங்க போயிருக்கேன். ரொம்ப அழகான ஊரு”
அம்மாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த தான்யா, அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டே வந்தாள்.
தன் ஊரை விபா புகழ்ந்ததும் ஆனந்தமடைந்து விட்டார் கற்பகம்.
“என்ன சொல்லுங்க தம்பி, சொந்த ஊரு சொந்த ஊருதான். எங்க போய் வாழ்ந்தாலும் உள்ளுக்குள்ள நம நமன்னு ஊரு நினைப்பு இருந்துகிட்டே தான் இருக்கும். “ அவர்கள் இருவரும் சோலையூரை பற்றி வாய் ஓயாமல் பேசி கொண்டே வந்தார்கள்.
“ஆமா தம்பி, அம்மா அப்பா எல்லாம் சென்னையில தான் இருக்காங்களா?”
சற்று நேரம் விபாவிடம் இருந்து பதில் வரவில்லை.
“நான் ஒரு அனாதை.அவங்க நான் சின்ன பிள்ளையா இருக்கறப்பவே இறந்துட்டாங்கம்மா.” குரல் கமறியது.
தானுவும் அதிர்ச்சியுடன் விபாவை பார்த்தாள். இது வரை விபா தனது குடும்பத்தைப் பற்றியோ பின்புலத்தை பற்றியோ தானுவிடம் சொன்னதில்லை. இவளும் எந்நேரமும் சண்டை போட்டாலே ஒழிய அவனை பற்றி எதையும் அறிந்து கொள்ள முயலவில்லை.
“அப்படியெல்லாம் சொல்லாதப்பா. நாங்க இருக்கறப்ப நீ எப்படி அனாதை ஆவ. இனிமே அந்த வார்த்தையே உன் வாயில இருந்து வர கூடாது” என முன்னால் சாய்ந்து அவன் தோளை தட்டி கொடுத்தார்.
“நீங்க அப்படி சொன்னது எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுங்களா?”
“இனிமே நீயும் எங்க வீட்டுல ஒருத்தன்பா”
“இப்ப நீங்க சொன்னதை எப்பயும் மறக்ககூடாதுமா”
“கண்டிப்பாப்பா”
‘ஒரு விக்கட் டவுன். இன்னும் இருக்கறது அவ அண்ணன் தான். கவுத்துருறேன்’
பிறகு பேசியபடியே பள்ளியை அடைந்தார்கள். தானு மட்டும் ஆபீஸ் அறைக்கு சென்று ரிசால்ட்டை எடுத்து வந்தாள். மற்ற மூவரும் கார் அருகினிலே காத்திருந்தனர்.
பத்து நிமிடங்களில் தானு ஓடி வருவது தெரிந்தது. கண்கள் கலங்க வந்தவள் கற்பகத்தை கட்டி அணைத்துகொண்டு கதறி விட்டாள்.