ENE–EPI 36

ENE–EPI 36

அத்தியாயம் 36

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

ஓ வெண்ணிலா இரு வானிலா நீ!!!!

டியர் டேனி,

எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை. ஆனா முதன் முதலா உன் கிட்ட தான் இதை பகிர்ந்துக்கனும்னு தோணுது. சம்பந்தப்பட்ட ஆளுகிட்ட கூட நான் இதையெல்லாம் இன்னும் சொல்லலை.

எங்கிருந்து ஆரம்பிக்கட்டும்?

ஐம் இன் லவ். யெஸ்! காதல் என்னை பாடா படுத்துது. இன்னேரம் நீ கெஸ் பண்ணிருப்ப யாருன்னு. ஆமா, அவனே தான், நம்ம வேணு. நான் அவனை லவ் பண்ணுறேன். சாதாரண லவ் இல்லை. மரண மாஸ் லவ். சொல்லுறப்பவே எனக்கு சிரிப்பு வருது.

என்னை மன்னிச்சிரு டேனி. நம்ப நட்புல ஒளிவு மறைவு இல்லைன்னு நீ நினைக்கலாம். ஆனா காதல் வந்தவுடனே என் மனசுல கள்ளமும் வந்துருச்சு. சில விஷயங்களை உன்கிட்ட இருந்து மறைச்சிட்டேன். மறைச்சிட்டு நான் பட்ட பாடு, என்னால முடியலைடா. மூச்சு முட்டுது.  அதான் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

எப்ப எனக்குள்ள லவ் ஸ்டார்ட் ஆச்சுன்னு எனக்கு சரியா சொல்ல தெரியலைடா. முதன் முதலா மேக்டோனல்ட்ல அவனை பார்த்தப்பவா? இருக்கலாம். அப்ப அவன் பேசுன பேச்சு எனக்கு கடுப்பை கிளப்பினாலும், அவன் அந்த குட்டிய பார்த்துகிட்ட அழகுல நான் மயங்கினது உண்மை. அவனை பார்ர்கிறப்பவே தெரிஞ்சது செம்ம பிளேபாய்ன்னு. அப்படி இருந்தும் எப்படி எனக்குள்ள இந்த சலனம்? உனக்கு தான் என்னைப் பத்தி நல்லா தெரியுமே. நீ சொல்லு பார்க்கலாம். முடியலையா? எனக்கே புரியாதப்ப உனக்கு எப்படி தெரியும். மேபி இதை படிச்சு முடிக்கிறப்ப உனக்கு புரிஞ்சாலும் புரியலாம்.

எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க அப்பா தான் ஹீரோன்னு சொல்லுவாங்க. எனக்கும் அப்படிதான் இருந்தது அவரு என்னை தூக்கி வீசிட்டு போகிற வரைக்கும். ஆனா வேணுவ பார்க்கிறப்ப, அவனுக்குள்ள என் அப்பாவ பார்க்கிற மாதிரியே ஒரு பீல். என்ன இது அபத்தம்னு கேக்கிறியா? முக்கால் வாசி பொண்ணுங்க அவங்க புருஷன் கிட்ட தன் அப்பாவோட சாயல் இருக்கான்னு தேடுவாங்க. எதனால? தன் அப்பா மாதிரியே புருஷனும் நம்மள தாங்கோ தாங்குன்னு தாங்குவான் என்கிற நப்பாசைதான். அப்படி கிடைக்க பெற்றவங்க தான் இந்த பூமியிலே அதிர்ஷ்டசாலின்னு நான் சொல்லுவேன். என் முதல் ஐந்து வயசு வரைக்கும் என்னை கண்ணின் மணியா பார்த்த என் அப்பாவை அவனுகுள்ள மறுபடியும் பார்த்தேன்.

என் அப்பா என் கிட்ட இருந்து பறிச்சுட்டு போன பாசத்தையும், பரிவையையும் வேணு எனக்கு திரும்ப குடுக்கிற மாதிரி எனக்குள்ள ஒரு பீல். அவன் என்னை பார்க்கிற பார்வையிலே, பேசுற பேச்சுல எல்லாத்திலயும் யூ ஆர் மைன்கிற உரிமை அப்பட்டமா இருக்கு. சொல்லவே கூச்சமா இருக்கு. ஆனா அவன் உரிமை உணர்வுக்கு நான் அடிமையாகிட்டேன்.

மத்தவங்க கிட்ட காட்டாத என்னோட ஒரு பக்கத்தை நான் என்னை அறியாமலே அவன் கிட்ட காட்ட ஆரம்பிச்சுட்டேன் டேனி. அடம் பிடிக்கிறது, தொட்டு பேசறது, செல்லம் கொஞ்சுறது, அடிச்சு புடிச்சு விளையாடுறது, பேசி பேசி கொல்லுறது, தூங்கிறவன எழுப்பி போன்ல கிஸ் பண்ணிட்டு சுவிட்ச் ஆப் பண்ணுறது, திட்டறது, கோபப்படறதுன்னு சொல்லிகிட்டே போகலாம். எனக்குள்ள இப்படி ஒரு பக்கம் இருக்குன்னு எனக்கே தெரியாது டேனி. அவன பார்க்கிறப்போ நான் நானா இல்லை. நான் எவ்வளவோ முயற்சி பண்ணுறேன், என்னோட உணர்வுகளை அவன் கிட்ட மறைக்க. சில சமயம் ஜெயிச்சுட்டாலும், பல சமயம் பாவமா தோத்து போயிருறேன்.

இவ்வளவு பாசம் வைக்கிறோமே, மறுபடியும் ஹிஸ்டரி ரிப்பிட் ஆனா என்ன செய்யுறதுன்னு ரொம்ப பயந்தேன். அவனை எட்டி நிக்க சொன்னதே அதனால தான். அவன் முடியாதுன்னு சொன்னப்ப தான் உன்னை கூட்டிட்டு போய் மிரட்டுனேன். எதுக்கும் அவன் அசைஞ்சு குடுக்கலியே.

இன்னொரு ஏமாற்றத்தை என்னால தாங்க முடியுமா டேனி? கண்டிப்பா முடியாது. அதனால தான் நேசத்தை மறைச்சு அவனை ஒதுக்கி ஒதுக்கி வச்சேன். நான் போட்ட வேலியை எல்லாம் கொஞ்ச கொஞ்சமா உடைச்சுகிட்டு என் மனசுக்குள்ள வர ஆரம்பிச்சுட்டான்.

பினாங்குல தான் என்னோட முதல் வேலி தகர்ந்தது. என்னோட பேர்த்டேக்கு அவன் குடுத்த சர்ப்ரைஸ் என்னை வானத்துலயே பறக்க வச்சது. ஆரம்பத்துல அவன் செஞ்சது தான் இந்த ஏற்பாடுன்னு தெரியாம, ரொம்ப ஜாலியா அந்த நிமிடங்களை அனுபவிச்சேன். எது தெரியுதோ இல்லையோ, வேணுவுக்கு ஒரு பொண்ணை எப்படி மடக்குறதுன்னு நல்லா தெரியுது. ஹாஹாஹா. கேக் வந்தப்போ உங்ககிட்ட எல்லாம் நான் கோவிச்சுக்கிடேனே, அதை ஏற்பாடு செஞ்சதே அவன் தான் டேனி. எனக்கு ஒரு ஆபத்துன்னு தெரிஞ்ச உடனே அதிரடியா ஆக்சன்ல இறங்கி என்னை காப்பாத்தி இருக்கான். அவன் மட்டும் அங்க இல்லைன்னா, என் நிலமை?

எனக்கு அங்க என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியலை. நான் எவ்வளவு கெஞ்சியும் அந்த விஷயத்தை அவன் வாயில இருந்து வாங்க முடியலை. கஸ்டபட்டு தான் வாய திறக்க வச்சேன்.

அதை சொன்னப்போ அவன் கண்ணுல தெரிஞ்ச வலி, குரல்ல இருந்த நடுக்கம் எதுவும் பொய் இல்லைடா. நான் மயக்கத்துல இருக்கறப்போ அவன் பாடின அந்த பாட்டு, அதுல இருந்த குழைவு, சோகம், காதல் என்னை தாக்கினுச்சுன்னு சொன்னா நம்புவியா? நம்பு டேனி. இது சத்தியமான உண்மை.

என்ன புதுசா ஒரு கதை சொல்லுறான்னு நினைக்கறீயா? உன் கிட்ட மறைச்ச விஷயங்களில இந்த பினாங்கு டிரிப்ல நடந்ததும் ஒன்னு. இதுல எழிதினேன்னா, 50 பக்கம் வேணும். கோல் பண்ணுறப்ப விளக்கமா சொல்லுறேன் டேனி.

இப்படி பிளேபாயா சுத்திகிட்டு இருந்தவன் என் கிட்ட என்னத்தை கண்டான்னு எனக்கு தெரியலை. என் கிட்ட என்ன எதிர்பார்க்கிற? உன் கூட சுத்துற அந்த பொண்ணுங்க மாதிரி நினைக்கிறீயான்னு கூட கேட்டேன். அப்ப அவன் முகத்த நீ பார்த்திருக்கனும். அப்படியே ஜிவு ஜிவுன்னு சிவந்து போய், ரௌத்திரமா நின்னான். நானே பயந்துட்டேன், அடிச்சுருவானோன்னு. ஆனா அவன் கூட பழகன இத்தனை நாளுல, என் மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் ஒரு விரல கூட தூக்க மாட்டான், என்னை காயப்படுத்தன்னு நல்லா புரிஞ்சுகிட்டேன். அவன் எனக்கு அடிமை. மை ஓவ்ன் அடிமை. ஹிஹிஹி. காமெடியா இல்லை. அதுல எனக்கு ஒரு பெருமையும் கூட.

உன்னை மாதிரியே பார்த்து பார்த்து எனக்கு எல்லாமே செய்வான் டேனி. எனக்கு உடம்பு முடியலைனா துடிச்சு போயிருவான். ஒரு தாயாய் என்னை தாங்குவான். பசின்னு சொன்னா பதறி போயிருவான். இப்படி ஒருத்தன் திகட்ட திகட்ட அன்பை எனக்கு குடுக்கணும்னு தான் கடவுள் சின்ன வயசுல என்னை சோதிச்சாறோ?

அவனைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சும் தெரியாத மாதிரி புரியாத மாதிரி நடந்துகிட்டேன். அவன் கிட்ட சாயற என் மனசை நானே எதிர்க்க ஆரம்பிச்சேன். சோலையூர்ல நடந்த இன்சிடென்கு அப்புறம், என்னோட பயம், கலக்கம், சந்தேகம் எல்லாத்தையும் தூக்கி கடாசிட்டு அவனை என் மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார வெச்சிட்டேன்.

தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, எனக்கு ஒன்னும் ஆக கூடாதுன்னு பதறி வந்தான் பாரு, அங்க நான் தோத்து போய்ட்டேன் டேனி. நான் தோத்து எங்க காதல ஜெயிக்க வச்சிட்டேன். என்னடா இவ இப்படி பினாத்திகிட்டு இருக்கான்னு நினைக்கறீயா? எல்லாம் காதல் படுத்தும் பாடு. ஒரு நாள் நீயும் காதல்ல விழுவ, அப்ப தெரியும் என் பீலீங்.

இன்னும் நான் அவன் கிட்ட வாய திறந்து ஐ லவ் யூன்னு சொல்லலை டேனி. பயமா இருக்கு. அதான் லவ்வ சொல்லிட்டாளே, இதுக்கு மேல என்ன இருக்குன்னு என்னை அலட்சிய படுத்திட்டான்னா, என்னால தாங்க முடியாது டேனி. ஒவ்வொரு தடவையும் என் முகத்தை எதிர்ப்பார்ப்போட அவன் பார்க்கும் போது, எனக்கு நெஞ்சில ரத்தமே வருது. ஆனா வாய் திறக்க முடியலைடா. ஐ லவ் யூ வேணுன்னு கத்தி சொல்லனும்னு என் ஒவ்வொரு செல்லும் துடிக்குது. ஆனா முடியலைடா.

எதுக்கு இவ்வளவு பெரிய ஈமெயில் உனக்கு அனுப்புறேனு நினைக்கிறியா? உன் கிட்ட என் சந்தோஷத்தை பகிர்ந்துக்கனும்னு தோணுச்சுடா. அதுக்குதான். நீ தானே என் நண்பன், என் ஆசான், என் நலம் விரும்பி, என்னோட முதுகெலும்பு எல்லாமே. எங்க இருந்தாலும், யார் கூட வாழ்ந்தாலும், எத்தனை பெத்துகிட்டாலும் நீதான் எனக்கு முதல்ல. அப்புறம்தான் மத்தவங்க எல்லாம். இதை நீ என்னிக்கும் மறக்க கூடாது டேனி. என் மேல உனக்கு என்ன கோபம்னு தெரியலை. என்னை விட்டு விலகி போயிட்ட. ஆனா என் ஆசி, என் பிரார்த்தனை என்னிக்குமே உனக்காகவே இருக்கும். டோன்ட் போர்கேட் தட். ஐ மிஸ் யூ சோ மச். நான் தெரியாம என்ன செஞ்சிருந்தாலும் என்னை மன்னிசுரு டேனி. என்னை ஒதுக்கிறாதே.

இப்போதைக்கு இந்த ரம்பம் போதும்னு நினைக்கிறேன். பாய்டா. உடம்பை பார்த்துக்க.

என்றும் அன்புடன்,

உன் டான்யா.

பிளேனில் அமர்ந்தபடி மீண்டும் அந்த ஈமேயிலை படித்தான் டேனி. இந்த ஓராண்டில் மனதின் வலி கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. தான்யா வேணுவை அடிமை என்று எழுதியதை நினைத்து சிரிக்கவும் முடிந்தது.

தன் தோழி இப்படி ஒருவனை உருகி உருகி காதலிப்பாள் என்பதை அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. மனதில் வலி இருந்தாலும், அவள் சந்தோஷமே தன் சந்தோஷம் என வாழ்ந்தவனால் அவளை வெறுக்கவோ ஒதுக்கவோ முடியவில்லை. என்ன ஆனாலும் பரவாயில்லை என தனது பயத்தை, தயக்கத்தை எல்லாம் மூட்டை கட்டு தூக்கி போட்டு விட்டு மீண்டும் பழைய டேனியாக அவளிடம் பழக ஆரம்பித்திருந்தான்.

ஒவ்வொரு தடவை கோல் பண்ணி பேசும் போதும், அவளது பேச்சுக்கள் விபாவை சுற்றியே இருக்கும். அவள் உளறியதில், அவர்கள் இருவருக்கும் இருக்கும் அந்நியோன்னியத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் நேரில் கண்டு விபாவை எடை போடவே கிளம்பி வந்திருந்தான். இப்பொழுதான் அவனுக்கும் தானுவுக்கும் சேர்ந்து சேமெஸ்டர் பிரேக் அமைந்திருந்தது.

ஒரு வாரத்துக்கு முன் அவன் சென்னை வருவதை அறிந்து போன் செய்து பேசிய விபாவை எப்படி கலங்கடித்தான் என்பதை நினைத்து புன் சிரிப்பு உதிர்ந்தது டேனிக்கு.

“டேய் டேனி? உன்ன இங்க யாருடா பாக்கு வெத்தலை வச்சு அழைச்சாங்க?”

“வணக்கம் வேணு. போன் அடிச்சா முதல்ல ஹேலோ சொல்லனும்னு டான்யா சொல்லி குடுக்கலையா? சென்னைய என்ன நீ குத்தகைக்கு எடுத்துருக்கியா? நாங்க வந்தா உங்க ஊரு தாங்காதா?”

“வைட்டு! இந்த நக்கல் , விக்கல் எல்லாம் என் கிட்ட வச்சிக்காதே. உன் குடுமி இன்னும் என் கையில தான்றத மறந்துட்டு துள்ளுற. ஜாக்கிரதை”

“குடுமில்லாம் நான் வச்சிகிட்டது இல்லை வேணு. எப்பவுமே ஷோர்ட் ஹேர் தான்”

“என் மண்டைக்கு ஏத்தாதடா! நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியல?”

“ஏன் புரியல? நல்லாவே புரியுது வேணு கண்ணா. என்னா இனிமே உன் பாச்சா என் கிட்ட பலிக்காது. உன் பேச்ச கேட்கலைனா என்ன செய்வ? பிஸ்னச கவுப்ப. கேரி ஓன். எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. என்னடா இப்படி பேசிறான்னு நினைக்கறீயா? வெளி உலகம் கத்து குடுத்த பாடம் தான், வேற என்ன. நான் இன்னும் ஒன்னும் தெரியாத பழைய டேனி இல்ல நீ மிரட்டி பார்க்கிறதுக்கு. மைண்ட் இட்”

“ஓ! ஐயா பெரிய மனுசனா ஆகிட்டீங்களா? ஆப்பை எடுத்து சொருகினேன், காணாம போயிருவ”

“சொருகிதான் பாரேன். சும்மா பூச்சாண்டி காட்டுறத விட்டுட்டு வேற வேலைய பாரு வேணு. சரி நான் தெரியாம தான் கேக்குறேன், நான் வரதுல உனக்கு என்ன பிரச்சனை? உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? டான்யா உன்னை விட்டுட்டு என் பின்னால வந்துருவான்னு பயப்படுறீயா? என்ன சொல்லு என் அழகுக்கும் அறிவுக்கும் முன்ன, நீ கொஞ்சம் சுமாரா தான் தெரிவ. அது கடவுளா எனக்கு குடுத்த வரம். வயிறு எரிய கூடாது”

“டேய்!!”

“கத்தாதே வேணு, காதுல கொய்யுன்னு சத்தம் கேட்குது. எதுக்கு இந்த கோபம் உனக்கு? டான்யா தான் வா வான்னு கூப்பிட்டுகிட்டே இருக்கா, ரெண்டு பேருக்கும் சேர்த்து செமெஸ்டர் பிரேக் வருதுன்னு. வேணுக்கு பிடிக்கல அதனால வரலன்னு சொல்லட்டா? எப்படி வசதி?”

“வந்து தொலை. என் முன்னுக்கு அவ கூட சீன போட்ட, அப்புறம் நடக்குற விபரீதத்துக்கு நான் பொறுப்பு இல்லை” என பட்டேன போனை வைத்திருந்தான் விபா.

இன்னும் ஐ லவ் யூ சொல்லாமல் விபாவை அலைய விட்டுக் கொண்டிருக்கும் தன் தோழியை நினைக்கும் போது அவனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது.

‘உன் அதிரடிக்கு ஏத்த சரவேடிடா என் டான்யா. உன்னோட பருப்பு எல்லாம் அவ கிட்ட வேகாது.’

‘வரேண்டா வேணு. ஒரு வருஷமா எங்கள பிரிச்சு எப்படி மெண்டல் டார்ச்சர் குடுத்த. அதையேல்லாம் திருப்பி 2 வாரத்துல உனக்கு குடுக்கிறேன். வேய்ட் அண்ட் சீ’

ஏர்போட்டில் தான்யாவுடன் வேணுவும் காத்திருந்தான். டேனியை பார்த்தவுடனே, தாவி சென்று அவனை அணைத்துக் கொண்டாள் தான்யா. கொஞ்சம் நேரம் இருவரும் அணைத்தவாறே நின்றிருந்தனர். பக்கத்தில் விபா கணைக்கும் சத்தம் கேட்கவும் தான் விலகினாள் தான்யா. கண்கள் நீரில் நிறைந்திருக்க உதடு புன்னகையில் உறைந்திருக்க நின்றிருந்தவளை பார்க்க விபாவின் மனம் கலங்கியது.

“எவ்வளவு நாள் ஆச்சு உன்னை நேருல பார்த்து. ஆளே மாறிட்டடா. போயிஷ் லுக் போயி ஆம்பிளையா மாறிட்ட. ” என அவன் தாடையை பற்றி கொண்டு முகத்தை திருப்பி திருப்பி பார்த்தாள் தான்யா.

“நீ மட்டும் என்ன டான்யா. கொஞ்சம் சைஸ் போட்டு இப்பத்தான் பார்க்க ரொம்ப அழகா அம்சமா இருக்க” என அவளை சுற்றி சுற்றி பார்த்தான்.

” சென்னையை சுத்தி பார்க்க வந்தியா, தானுவ சுத்தி பார்க்க வந்தியா? நான் ஒருத்தன் நிக்கிறது உன் கண்ணுக்கு தெரியலை பார்த்தியா? சரி வா. லக்கேஜ் எடுத்தாச்சுனா, கிளம்பலாம்.” என குரல் கொடுத்தான் விபா.

அவனை முறைந்த தானு,

“வேணு! நான் வாங்கி வந்த பொக்கே எங்க? அதை அவன் கையில குடுத்து சிரிச்ச முகமா வெல்கம் டூ சென்னைன்னு சொல்லு. ”

‘உனக்கு பொக்கே ஒன்னு தாண்டா குறைச்சல்’ என நினைத்துக் கொண்டாலும் மறுக்காமல் அவள் சொன்னதை சிரித்த முகமாக செய்தான் விபா.

இந்த ஒரு வருட கேப்பே இல்லாத படி, இருவரும் சிரித்து பேசி கொண்டே வந்தனர். விபாதான் லக்கேஜை எடுத்து வரும்படி ஆனது.

‘மறுபடியும் முதல்ல இருந்தா? ‘ நொந்து கொண்டான் விபா.

விபா ட்ரைவர் சீட்டில் அமர்ந்ததும், டேனி முன்னே உட்காருவான் என்று தானு பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள். டேனியோ சுற்றி வந்து தானுவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

‘கடைசியிலே இதுங்க ரெண்டும் என்னை ட்ரைவர் ஆக்கிருச்சிங்களே’ கண்ணாடி வாயிலாக தானுவை முறைத்தான் விபா. கண்களை சிமிட்டியவள் கோவிச்சுக்காதே என உதட்டை அசைத்தாள். கடுப்பில் கார் சீறி பாய்ந்தது.

“நான் எங்க தங்க போறேன் டான்யா?”

‘மைசூர் பேலஸ நீ தங்குறதுக்காக லீஸ் எடுத்துருக்கோம். ஓகேவா?’ விபாவின் மைன்ட் வொய்ஸ் பேசியது.

“வேணு உனக்காக பைவ் ஸ்டார் ஹோட்டல் புக் பண்ணியிருக்கான் டேனி”

“வண்டிய திருப்ப சொல்லு, நான் திரும்பவும் கிளம்புறேன்”

‘தோ, இப்பவே திருப்புறேன்.’

“ஏன்டா? உனக்கு அங்க தங்க பிடிக்கலையா? “

“நான் இங்க வந்ததே உன் கூட டைம் ஸ்பேன்ட் பண்ண தான். நான் ஒரு மூலையிலும் நீ ஒரு மூலையிலும் இருந்தா எப்படி? எனக்கு இந்த அரேஞ்மேன்ட் பிடிக்கல”

“சரி, விடு. என் வீட்டுல வந்து தங்கிக்க. முதல்ல இருந்தே அதான் பிளான். வேணு தான் உனக்கு வசதி பத்தாது, ஹோட்டல் புக் பண்ணலாம்னு சொன்னான்.”

‘அதானே பார்த்தேன். சார் ஐடியாவா இது? இப்ப எப்படி கவுக்கறேன்னு பாரு.’ என யோசித்த டேனி,

“ஆஸ்திரேலியாவுல நான் தங்கி இருக்கற ரூமை நீ பார்க்கணும், அவ்வளவு கேவலமா இருக்கும். அதை விட உன் இடம் நல்லா தான் இருக்கும். சோ ஐ எம் குட். உன் கூடவே தங்கிக்கிறேன்.”

விபாவுக்கு காதில் புகை வராத குறைதான். இந்த நிலைமையை சமாளிக்க வேறு வழி இல்லாமல் தான் தன் திருவாயை திறந்தான்.

“எதுக்கு இந்த ஆர்குமேன்ட்ஸ்? டேனி என் கூட என் வீட்டுலயே தங்கிக்கட்டும்.”

“நெஜமாவா வேணு? ரொம்ப தேங்க்ஸ். இப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருக்கு. டேனி, வேணு வீடு உன் வீடு மாதிரியே நல்லா வசதியா இருக்கும். உனக்கு காம்பர்டபளா இருக்கும். நீ அங்கயே தங்கிக்க”

“அப்படினா நீயும் என் கூட அங்க தங்கனும், ஒகேவா?” என் கேட்டான் டேனி.

“கற்பு, வேணு வீட்டுல தனியா தங்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்களே. அப்புறம் எப்படி?”

‘ஆ ஊன்னா இதை சொல்ல வேண்டியது. என்னை பார்த்தா எப்படிடி இருக்கு? மேல பாஞ்சு பிராண்டுற கொரில்லா மாதிரியா? மேல பாயாட்டியும் சைக்கிள் கேப்புல கைய புடிக்கிறது, தோளை தொடுறது, கன்னத்தை தடவுறதுன்னு பண்ணுறேன் தான். அது கூட இல்லாட்டி எப்படி? இருந்தாலும் உங்கம்மா என்னை இப்படி கண்டு வச்சிருக்க கூடாதுடி.’ கடுப்பானான் விபா.

விபாவை பார்த்து நக்கலாக சிரித்தான் டேனி.

“போனை குடு. கற்பு சாயாங்கிட்ட நான் பேசுறேன். நீ இல்லாம எப்படி வேணு வீட்டுல நான் தனியா தங்குறது?”

‘ஏன்டா, உன்னை நான் என்ன கடிச்சா சாப்பிட்டுருவேன்? வைட்டு! ஓவரா ஆடுறடா’

அவர்கள் இருவரும் போன் செய்து கற்பகத்திடம் கெஞ்சி கூத்தாடுவதை ரியர்வியூ கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருந்தான் விபா. போனை வைக்கும் போது இருவர் முகத்திலும் சிரிப்பு. தங்களுக்குள் ஹைபை கொடுத்து கொண்டாடினார்கள் இருவரும்.

“வேணு! என் அபார்ட்மென்டுக்கு போ. எனக்கு வேண்டிய பொருளேல்லாம் எடுக்கணும்.”

விபாவுக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.

‘ரெண்டு வாரம் என் கூட ஒரே கூரையில இருக்க போறா. என்ன, இடைஞ்சலா இவனும் இருப்பான். இருந்துட்டு போகட்டும். இவன சமாளிக்கவா நமக்கு தெரியாது’ என குதூகல மனநிலையோடு காரை தானுவின் அபார்ட்மென்டுக்கு திருப்பினான்.

 

 

பத்துமலை திருத்தலம், மலேசியா

தருணும் கற்பகமும் முருகனை தரிசிப்பதற்காக காலையிலேயே பத்துமலைக்கு வந்திருந்தார்கள். அப்பொழுதுதான் தானு அம்மாவுக்கு போன் செய்து பேசினாள்.

“யாரும்மா போனுல? தானுவா?”

“ஆமாண்டா,  அவதான்.”

உலகிலே மிக உயரமான, தங்கமென மின்னிய முருகன் சிலைக்கு கீழே அமர்ந்தபடி புறாவுக்கு தீனி போட்டு கொண்டிருந்தார்கள் இருவரும்.

“என்னவாம்? டேனி, விபான்னு பேரு அடிப்பட்டது பேச்சுல.”

“லீவுக்கு டேனி வந்திருக்கானாம். அதான் டேனி கூட போய் விபா வீட்டுல தங்கவான்னு கேட்டா. நானும் சரின்னு சொன்னேன்”

“ஏன்மா சரின்னு சொன்னீங்க? ஒரு பொம்பளை பிள்ளைய தனியா எப்படி அங்க விட்டு வைக்கிறது?” என எகிறினான் தருண்.

“டேய் அடங்குடா. உன்னை விட உன் தங்கச்சியயும் எனக்கு தெரியும், அந்த பையனையும் எனக்கு தெரியும். அதோட நம்ப டேனி அங்க இருக்கறப்ப என்ன கவலை.”

“அம்மா, உங்க கிட்ட ஒரு விஷயத்தை ரொம்ப நாளா சொல்லாம மறைச்சிட்டேன்மா”

“என்னடா? யாரையாவது காதலிக்கிறீயா? சொல்லுடா. அதுக்கேல்லாம் நான் தடையா இருக்க மாட்டேன்டா”

“நீங்க வேறம்மா. அதெல்லாம் ஒன்னும் இல்ல”

“ஹ்ம்ம். அதானே பார்த்தேன். ஏன்டா, உன் வயசு பசங்க எல்லாம் பேஸ்புக்ல ஒரு லவ்வு, ட்வீட்டர்ல ஒரு லவ்வு, இன்ஸ்தாகிராமுல ஒரு லவ்வுன்னு பொழந்து கட்டுறானுங்க. நீ இப்படி சாமியாரா என் முந்தானைய புடிச்சுகிட்டு சுத்துறியேடா.” என சலித்துக் கொண்டார் கற்பகம்.

“அம்மா! முதல்ல நம்ப பாப்பா படிச்சு முடிக்கட்டும். அவ வாழ்க்கை செட்டலானா தான் என்னைப் பத்தியே யோசிப்பேன். அதுவும் இந்த காதல் எல்லாம் எனக்கு செட் ஆகாது. நீங்களே நல்ல பொண்ணா பாருங்க. கழுத்தை நீட்டிருறேன்”

அவன் சொன்ன விதத்தில் சிரித்த கற்பகம்,

“உன்னை மாதிரி ஒரு அண்ணன் கிடைக்க என் மக குடுத்து வச்சிருக்கணும் கண்ணா.” கண்கள் கலங்கி விட்டது கற்பகத்துக்கு.

அவரது கண்களை துடைத்துவிட்டவன்,

“நல்ல விஷயம் பேச போறப்ப கண்ணை கசக்கிகிட்டு. இங்கயே இருங்க, டீ வாங்கிட்டு வரேன். கொஞ்சம் குளிரா இருக்கு” என எழுந்து போனான்.

‘நான் கட்டிகிட்ட புருஷன் தான் சரியில்லை. ஆனா என் புள்ளைங்க ரெண்டும் வைரக்கட்டிங்க. பத்துமலை முருகா, என் புள்ளைங்கள கண் கலங்காம நீதான்பா நல்லா பாத்துக்கணும்’ என மனமுருகி வேண்டினார் அவர்.

“இந்தாங்கம்மா, குடிங்க. “ கப்பை நீட்டியவன் மீண்டும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான்.

“சொல்லுப்பா, என்ன விஷயம்?”

“ஒரு தடவை டேனியோட அப்பா எனக்கு கோல் பன்ணி இருந்தாருமா. அவர் என் கிட்ட ஒரு விஷயத்தை கேட்டாரு. நான் மெதுவா யோசிச்சி சொல்லுறேன்னு சொல்லிட்டேன்”

“ஓங் அப்படி என்னப்பா கேட்டாரு?”

“தானுவ டேனியோட ஒன்னா படிக்க அனுப்ப முடியுமான்னு கேட்டாரு. செலவு எல்லாத்தையும் அவரே பார்த்துக்கிறேன்னு வேற சொன்னாரு”

“நீ உடனே முடியாதுன்னு சொல்லி இருப்பியே”

“ஆமாம்மா. அப்படியே ரெண்டு பேரும் படிச்சு முடிச்சோன அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரலாமான்னு வேற கேட்டாருமா. அதுக்கு மட்டும் யோசிச்சு சொல்லுறேன்னு சொன்னேன் மா”

“ஹ்ம்ம், இது சரி வராது தருண். இந்த பேச்சை இதோட விட்டுரு”

“ஏன்மா சரி வராது? வேற இனம் வேற மதம்னு பாக்குறீங்களா?” அவன் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.

“அட போடா! வாழ போறது ஒரு வாழ்க்கை. அதுல என்னடா மதம் , இனம், ஜாதின்னு பாகுபாடு. நான் அந்த அளவுக்கு பிற்போக்குவாதி இல்லடா. எனக்கு என் பிள்ளைங்க சந்தோசம் தான் முக்கியம். ஜாதி பார்த்து, ஜாதகம் பார்த்து கட்டி வச்ச என் வாழ்க்கை என்ன சிரிப்பா சிரிக்குதுன்னு தெரியலை” என கசந்த முறுவல் ஒன்றை வெளியிட்டார் கற்பகம்.

“அப்புறம் ஏன்மா சரி வராதுன்னு சொல்லுறீங்க?”

“உன் தங்கச்சி மனசு வேற இடத்துல லாக் ஆகி நிக்குதுடா தருண். என் கிட்ட அவ மறைச்சு வச்சாலும், தாய் அறியாத சூல் உண்டா சொல்லு”

“என்னம்மா சொல்லுறீங்க? நம்ப தானுவா?” அதிர்ச்சியில் வாயைப் பிளந்தான் தருண்.

மகனின் ரியாக்சனில் கற்பகத்துக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ஏன்டா? உன் தங்கச்சி பொம்பளை இல்லையா? அவளுக்கு காதல் கத்தரிக்காய்லாம் வராதா? வாயை கொஞ்சம் மூடு. புறா உள்ள போயிர போது” என மகனை கிண்டல் அடித்தார் கற்பகம்.

“சும்ம விளையாடாதீங்கம்மா. அவ காதலிக்கிறானு தெரிஞ்சவுடனே ஒரு அம்மாவா நீங்க என்ன செஞ்சிருக்கணும்?”

“என்ன செஞ்சிருக்கணும்? முடிய இழுத்துப் போட்டு அடிக்க சொல்லுறீயா? இந்த காலத்து யூத் மாதிரி பேசுடா. பழைய பஞ்சாங்கம்மா இருக்க. அவ காதலிச்சவன் சரி இல்லைன்னா நாம தலையிடலாம். அவன் தான் நம்ப தானுதான் உலகம்னு சுத்திகிட்டு இருக்கானே. அப்புறம் என்ன பண்ண சொல்லுற? நம்ப ரெண்டு பேர விட அவளை கண்ணுக்குள்ள வச்சு பாத்துகுவான்டா. ஒரு அம்மாக்கு என்ன வேணும் சொல்லு, கட்டுன இடத்துல தன் மக ராணி மாதிரி வாழாட்டியும் ஒரு வேலைக்காரி மாதிரி நடத்தபட கூடாதுங்கறதுதான். மாப்பிள்ளை தானுவ மகாராணி மாதிரி பார்த்துக்குவாருடா”

“மாப்பிள்ளைன்னே முடிவு பண்ணீட்டீங்களா? அப்புறம் ஒரு அண்ணன்னு நான் எதுக்கு இருக்கேன்”

“தருண் ! உன் கிட்ட ஒன்னே ஒன்னு கேக்குறேன். உன் தங்கச்சி சந்தோஷமா இருக்கனுமா இல்லையா?”

“இருக்கணும்மா”

“அப்ப உன் ஈகோவெல்லாம் தூக்கி போட்டுட்டு, அவளை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுடா. கல்யாணம் பண்ணி அவ ஒரு சொட்டு கண்ணீர் விட்டா உன்னாலயும் என்னாலயும் தாங்க முடியுமா சொல்லு?” கண் கலங்கினார் கற்பகம்.

“கண்டிப்பா முடியாதுமா. அவ தானே நம்ப உயிர் நாடி”

“அப்படின்னா, அவ விருப்பத்துக்கு மதிப்பு குடு. மேடம் இன்னும் நம்ப கிட்ட ஒன்னும் சொல்லல. அவளா சொல்லுற வரைக்கும் தெரிஞ்ச மாதிரி நாமளும் காட்டிக்க கூடாது. அவளுக்கே அவ்வளவு அதுப்பு இருந்த அவள பெத்த எனக்கு எவ்வளவு இருக்கும்.”

“அம்மா, அந்த அவரு உங்க மாப்பிள்ளை யாருன்னு கொஞ்சம் எனக்கும் சொல்லலாமில்ல?”

“உன் தங்கச்சிய எங்க கொத்திகிட்டு போயிருவான்னு முறைச்சு முறைச்சு பாப்பியே, அதே விபா தான்” சொல்லிவிட்டு சிரித்தார் கற்பகம்.

கூட சேர்ந்து கலகலவென சிரித்தான் தருண்.

அங்கே சென்னையில் விபாவின் வீடே ரணகளமாகி இருந்தது இந்த இருவரின் அட்டகாசத்தில்.

செக்கரட்டரிக்கு போன் செய்த விபா,

“ரெண்டு வாரத்துக்கு எனக்கு ஒரு பெரிய அசைன்ட்மென்ட் இருக்கு. எல்லா வேலையும் நீங்க டெலிகேட் பண்ணிருங்க. ரொம்ப முக்கியம்னா மட்டும் என்னை கான்டேக்ட் பண்ணுங்க” என்றவன் இன்னும் என்ன செய்ய வேண்டும் என கட்டளைகளை பிறப்பித்தான். போனை கட் செய்து விட்டு தலையைப் பிடித்து கொண்டு அமர்ந்தவன் மேல் பூவென வந்து விழுந்தாள் தானு.

 

error: Content is protected !!