ENE–EPI 42

ENE–EPI 42

அத்தியாயம் 42

இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ
நெருப்பில் எரிவதை உணருது வயது
இது வரையில் எனக்கு இது போல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை
புதியதாய் இருக்குது எனக்கும்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே ..

“வில் யூ மேரி மீ வேணு?” என கேட்டாள்.

அவனிடம் சற்று நேரம் எந்த பதிலும் இல்லாததால், பயந்து போன தான்யா,

“வேணு, வேணு!” என உலுக்கினாள்.

“நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா, இல்லையா? முடியாதுனா சொல்லிரு. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள் தானு.

சத்தமாக சிரித்தவன்,

“ரெண்டும் ஒன்னுதானே தானு. ஆனா ஏன் இந்த அவசர முடிவு? நான் என் பக்க கதைய சொல்லுறதுக்குள்ள எப்படி என்னை நம்பி கல்யாணம் செஞ்சுக்கிறீயான்னு கேக்குற?” பிரமிப்புடன் பார்த்தான் விபா.

“அவசர முடிவு இல்ல வேணு. நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்தேன். நான் வேணும்னு இவ்வளவு செஞ்சிருக்கியே, கண்டிப்பா உன் காதல் தோற்கக்கூடாது வேணு. நீ காரணங்கள அடுக்கின பின்னே நான் யெஸ் சொன்னா, அது என்ன லவ் சொல்லு? உன் பக்கம் நியாயம் இருக்கும்னு என் மனசு அடிச்சு சொல்லுது. இவ்வளவு நடந்தும் எனக்கு உன் மேல வெறுப்பு வரல. கோபம் இருக்கு ஆனா, வெறுப்பு இல்ல. அது என்னால முடியவும் முடியாது வேணு. அதனால நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்.”

“நீ பெருந்தன்மையா இப்படி பேசலாம் தானு. ஆனா  உனக்கு நான் செஞ்சது எல்லாம் தெரியனும். அதுக்கு அப்புறம் நீ வேணான்னு சொன்னாலும் நான் உன்னை விடமாட்டேன் தானும்மா”

“சரி சொல்லு. அதுக்கு முன்னுக்கு ஒரு ப்ரேயர் சொல்லிக்கிறேன் வேணு. ஆண்டவா! வேணு சொல்லப்போற விஷயங்களை கேட்டு எனக்கு கோபம் வரலாம், ஆனா கொலைவெறி வர கூடாது. அவனை நீதான் எந்த ஆபத்தும் இல்லாம ரட்சிக்கனும். “ என வேண்டி கொண்டாள்.

“என்னடி மறைமுகமா மிரட்டுற? நான் சொல்லவா வேண்டாவா?”

“சேச்சே மறைமுக மிரட்டலெல்லாம் இல்லை. எதை செஞ்சாலும் இந்த தானு நேரடியா தான் செய்வா. உன்னை மாதிரி குறுக்கு வழி எல்லாம் போக மாட்டா” என பேன்ட் பாக்கேட்டிலிருந்து ஆயுதங்களை எடுத்து மேசை மேல் கடை பரப்பினாள்.

அவள் வைத்த பொருட்களைப் பார்த்து விபா எச்சிலை கூட்டி விழுங்கினான். லைட்டர், பேனா கத்தி, பெப்பர் ஸ்ப்ரே, ஃபிளாஷ் லைட் என அணிவகுத்து நின்றது.

ஃபிளாஷ் லைட்டை கையில் எடுத்தவன்,

“இது எதுக்கு?” என கேட்டான்.

அதை அவனிடம் இருந்து வாங்கி, ஆன் செய்து அவன் உள்ளங்கையில் வைத்து பட்டென எடுத்து விட்டாள். தூக்கி போட்டது விபாவுக்கு.

“ஆஆஆ!!! என்னடி ஷாக் அடிக்குது?”

“அதே அதே. இலெக்ட்ரிக் ஷாக் டிவைஸ் இது. உனக்காக ஸ்பெஷலா ஆன்லைன்ல வாங்குனேன்.”

“என்னை கொலை பண்ணுறதா முடிவே எடுத்துட்டியா?” என கேட்டவன் எல்லா பொருட்களையும் அள்ளி கொண்டு போய் குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்தான்.

“தானு! என்ன கோபம்னாலும் இதோ இந்த ரெண்டு கையால மொத்து, சத்தம் போடாமா வாங்கிக்கிறேன். ஆயுதமெல்லாம் ஹாஸ்பிட்டலோட நிறுத்திக்கம்மா. வீடு வரைக்கும் வேணாம். “ என அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“பார்க்கலாம். இப்ப வாக்குமூலத்தை ஸ்டார்ட் பண்ணு”

அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தான்.

“நான் செஞ்சதெல்லாம் உன் மேல உள்ள காதலினால தான்னு மனசுல பதிய வைச்சுக்கிட்டு, அப்புறமா கேளு தானும்மா. உன்னை நோக்கி அடி எடுத்து வைக்க நான் செஞ்ச முதல் காரியம் டேனி அப்பாவோட கம்பேனி ஷேர்சை வாங்குனது தான்”

இது என்ன புது கதை என்பது போல் பார்த்தாள் தானு.

“நீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோசா இருந்தீங்க. அவன் உனக்கு போய் பிரண்டா இருக்குமோன்னு தான் முதல்ல நினைச்சேன். யாரா இருந்தாலும், நீ எனக்கு மட்டும் தான்னு முடிவு எடுத்தேன். அப்புறம் உன்னை தொடர்ந்ததுல வெறும் பிரண்டு தான்னு தெரிஞ்சுகிட்டேன். இருந்தாலும் அவன் பக்கத்துல இருக்கற வரைக்கும் நீ என் கிட்ட வரமாட்டேன்னு மனசு அடிச்சு சொன்னுச்சு. அதனால தான் சேர்சை வைச்சு அவனை மிரட்டி, ஆஸ்திரேலியா அனுப்பினேன். ஏற்கனவே அவங்க அப்பா அப்ளை பண்ணியிருந்தாரு தான். இன்னும் சீக்கிரமா அவன் போகனும்னு நான் தான் காலேஜ்ல பணம் குடுத்து கிளப்பிவிட்டேன்.”

கண் கலங்க சட்டேன எழுந்தவள், கைகளை கட்டிக் கொண்டு சற்று நேரம் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். டேனி தன்னிடம் காட்டிய பாராமுகம், திடீரென பிரிந்து சென்றது எல்லாம் மீண்டும் நினைவு வந்து கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்டியது. அமைதியாகவே அமர்ந்து அவளை பார்த்துக் கொன்டிருந்தான் விபா. சமாதானம் செய்ய மனம் விழைந்தாலும், ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.

“அப்புறம்?”

“எங்க போனாலும் உன்னை தொடர செக்குரிட்டி செர்விஸ் அரெஞ் பண்ணேன். என் தானு எப்பொழுதும் பாதுகாப்பா இருக்கனும்னு தான் செஞ்சேன். நான் பிஸ்னஸ் விஷயமா அங்க இங்க அலைஞ்சி கிட்டு இருக்கறப்போ, நீ பத்திரமா தான் இருக்கங்கிற உத்திரவாதம் எனக்கு தேவையா இருந்துச்சு. என்னால என் வேலைகளை கான்சன்ட்ரேட் பண்ணி செய்ய முடியலை. அதனால தான் இந்த ஏற்பாடு. உனக்கு இது பைத்தியக்காரத்தனமா படலாம். ஆனா நீ பாதுகாப்பா இருக்கன்றது எனக்கு எவ்வளவு மன நிம்மதி கொடுக்குது தெரியுமா தானு?”

எப்பொழுதும் தன்னை யாரோ கண்காணிப்பது போல் இருக்கும் உணர்வு பொய்யில்லை என புரிந்தது தானுவுக்கு. இங்கே வந்த பின்னும் அந்த பீலிங் இருப்பதால்,

“இன்னும் என் பின்னால ஆளு வச்சிருக்கியா?”

ஆமென தலையாட்டினான் விபா. பைத்தியமாடா நீ எனும் பார்வையுடன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள் தானு.

“அப்புறம் நான் எஸ்கேப் ஆனத எப்படி அவங்க மிஸ் பண்ணாங்க?”

“என் கூட தான் இருக்கியேன்னு, நான் தான் செக்குரிட்டிய போக சொன்னேன். நீ இப்படி செய்வேன்னு எனக்கு எப்படி தெரியும்”

“இனிமே என் பின்னால யாரும் வர கூடாது”

“அது மட்டும் முடியாது தானு. பிஸ்னஸ்ல எனக்கு நிறைய போட்டி இருக்கு. நிறைய எதிரிங்க இருக்காங்க. அவங்க யாராச்சும் உன்னை டார்கேட் பண்ணிட்டா? அதனால இதை மட்டும் என்னால விட்டுக் குடுக்க முடியாது” முடிவாக சொல்லிவிட்டான் விபா.

முகத்தை திருப்பிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் தானு. பின் மேலே பேசுமாறு சைகை காட்டினாள்.

“அப்புறம் பிரபு மூலமா ட்ரேக்கர் வைச்ச போனை உன் கிட்ட குடுத்தேன். உன்னை சந்திச்ச ஆரம்பத்துல செஞ்சது இது. அப்போ எனக்கு உன்னைப் பற்றி ஒன்னும் தெரியாது தானும்மா. நீ எப்படி, உன் நடவடிக்கைகள் எப்படின்னு கண்காணிக்க தான் இதை செஞ்சேன். எனக்கு தெரியாம உன் வாழ்க்கையில எதுவும் நடக்க கூடாதுன்னு நெனைச்சேன். நீ எப்படிப்பட்ட கேரக்டரா இருந்தாலும் நான் உன்னை விட்டுருக்க மாட்டேன் தானு. உன்னோட குறை நிறைகளோட அப்படியே ஏத்துகிட்டு இருந்துருப்பேன். உன் கூட பழகன கொஞ்ச நாளுல உன் நேர்மை, ஒழுக்கம், புத்திசாலித்தனம், பட்ஜேட் போடுற குணம் இதெல்லாம் பார்த்து ரொம்ப இம்ப்ரெஸ்ட் ஆயிட்டேன். அதுக்கு அப்புறம் நீ போன்ல செய்யுற அக்டிவிட்டீஸ் எதையும் நான் வேவு பார்க்கல தானு. இதை நீ நம்பனும். ஆனா ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கை தானா ட்ரெக்கர்க்கு போயிரும். நீ எங்க இருக்கன்னு செக் பண்ணிகிட்டு தான் இருப்பேன். அதான் பாதுகாப்புக்கு செக்குரிட்டி இருக்காங்களேன்னு நினைப்பேன். இருந்தாலும் என்னால முடியாது தானு. சைக்கோன்னு வேணும்னாலும் நினைச்சுக்க. ஆனா இந்த பழக்கத்த என்னால விட முடியுமான்னு தெரியலை. அப்படிதான் நீ எங்க போனாலும் உனக்கு முதல்ல நான் வந்து நின்னேன்”

“ஏன் வேணு? அப்படின்னா நீ என்னை நம்பலியா? நான் வேற யாரோடயாவது ஓடி போயிருவேன்னு நினைக்கறியா?” மனம் வலிக்க கேட்டாள் தானு.

நாற்காலியை அவள் அருகில் நகர்த்திப் போட்டுக் கொண்டவன், அவளது கைகளை இருக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

“தானும்மா, உன்னை நம்பலனா அது என்னையே நம்பலன்னு அர்த்தம். உனக்கு எப்படி புரிய வைப்பேன்?” கைகள் நடுங்கியது அவனுக்கு.

“என்னை பெத்தவங்க என் மனசுல விட்டு போன அழுத்தமான தடம்தான் இதுக்கெல்லாம் காரணம்.” கண்கள் கலங்கியது அவனுக்கு.

அவனைப் பார்க்கும் போது, பயத்தில் இருக்கும் சிறு குழந்தை போல தோன்றியது தானுவுக்கு. எழுந்து நின்று அவன் முகத்தை அப்படியே தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டாள். அவளது இடுப்பை கைகளால் வளைத்துக் கொண்டவன் மௌனமாக அழுதான். அவன் கண்ணீர் ஓயும் வரை தலையை தடவி கொடுத்தபடி அப்படியே நின்றாள் தானு. மனதில் அழுத்தி வைத்திருந்த சோகத்தை எல்லாம் அவள் அருகாமையில் கண்ணீரில் கரைத்தான் விபா. மெல்ல தன்னை மீட்டுக் கொண்டவன், நிமிர்ந்து தானுவைப் பார்த்தான். அவனது கண்களை துடைத்து விட்டவள்,

“நான் தான் கல்யாணத்துக்கு ரெடின்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் ஏன் பழசை எல்லாம் பேசி மனச கஸ்டப் படுத்திக்குற வேணு?”

தானுவை இழுத்து மீண்டும் மடியில் அமர வைத்துக் கொண்டான் விபா.

“பேசிரனும் தானு. திரும்பவும் எந்த பூதமும் வந்து நம்ம வாழ்க்கைய பயம் காட்டக் கூடாது.” என்றவன் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான்.

“எங்க அப்பா, அம்மாகிட்ட நேர்மையா நடந்துக்கல. அவங்களுக்கு தெரியாதுன்னு பல பொண்ணுங்க பின்னால சுத்துனாரு. அந்த மயக்கத்துல இருந்தவரு எங்க அம்மா என்ன செய்யறாங்கன்னு கவனிக்க தவறிட்டாரு. இவரை பழி வாங்கன்னு எங்க அம்மாவும் கெட்டு சீரழிஞ்சாங்க. அது என் மனசுக்குள்ள ஒரு பெரிய வடுவையே ஏற்படுத்திருச்சு. நான் கல்யாணம் செஞ்சுகிட்டா என் மனைவிக்கு உண்மையா இருப்பேன். அதே மாதிரி அவளும் எனக்கு உண்மையா இருக்கனும். எனக்கு தெரியாம எதுவும் அவ வாழ்க்கையில நடக்க கூடாது. என் கை பிடியிலே அவள வச்சிருக்கனும். இப்படி இப்படி ஆயிரம் விஷயம் யோசிச்சு வச்சிருந்தேன். உன்னைப் பார்த்து பழகியவுடன், என் வாழ்க்கையே நீ தான்னு முடிவு எடுத்தேன். உன்னை முழுசா நம்பனும்னு தோணும், ஆனா இன்னொரு பக்கம் நீயும் என்னை விட்டு போயிருவியோன்னு பயமா இருக்கும். என் கிட்ட என்னாலயே போராட முடியல. கடவுளா பார்த்து எனக்கு அனுப்பிய ஏஞ்சல் நீ. உன் மேல நம்பிக்கை வைக்கணும்னு முடிவெடுத்த உடனே தான் எனக்கு போன நிம்மதி வந்துச்சு தானு.”

அவளை இருக்கி அணைத்துக் கொண்டான் விபா.

“அதனால தான் நீ சொந்தமா போன் மாத்துறன்னு சொன்னப்ப, நான் ஓகே சொன்னேன். இனிமே உன்னோட பெர்ஸனல் லைப்ல தலையிட கூடாதுன்னு ரொம்ப நாளைக்கு முன்னமே முடிவு பண்ணிட்டேன்டா. ஆனாலும் கண்டிப்பா ட்ரக்கிங் அப்ளிகேஷன் உன் போனுல போடுவேன். எப்பவும் நீ எங்க இருக்கன்னு வாட்ச் பண்ணிகிட்டே இருப்பேன். நான் பைத்தியம்னு நினைச்சு என்னை விட்டுட்டு போக மாட்டியே தானு? “ பாவமாக கேட்டான்.

“நீ தான் என் பெர்ஸனல் லைப் வேணு. தலையிட மாட்டேன் காலைவிட மாட்டேனு பேசாதே. பிச்சிருவேன். நீ பைத்தியமா மாறி காதல் பரத் மாதிரி சுத்துனாலும் உன்னை விட்டு போக மாட்டேன்”

மனம் விட்டு சிரித்தவன்,

“நீ அங்கயும், நான் இங்கயும் இருந்தது எனக்கு ரொம்ப கஸ்டமா இருந்தது தானு. உன்னை கடத்தி வந்தாவது என் கூடவே வச்சிக்கனும்னு ஒரு வெறியே வந்தது. பிரபு வாங்குன அடியெல்லாம் பார்த்து, கவனமா தான் மூவ் பண்ணனும்னு முடிவு பண்ணேன்”

டொக்கென்று தலையில் கொட்டினாள் தானு.

“தூக்கிருவியா என்னை? எங்க தூக்கு பார்ப்போம்”

“தூக்கி மடியில தானேம்மா உட்கார வச்சிருக்கேன். இன்னும் தூக்கு தூக்குன்னா எப்படி தூக்கறது?”

“எவ்வளவு குடுத்தாலும் நீ அடங்க மாட்டல்ல?” கன்னத்தைப் பிடித்து கடித்து வைத்தாள் தானு.

“இந்த கன்னம் மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு? இங்கயும் கடி ப்ளீஸ்” என கெஞ்ச ஆரம்பித்தான் விபா.

“முழுசா சொல்லி முடி. கடிக்கிறதா இல்லை அடிக்கிறதான்னு அப்புறமா டிசைட் பண்ணுறேன்.”

“அப்புறம் என்ன, பிரபுகிட்ட பேசி உன் ட்ரையல் ரிசால்ட் எடுத்து இங்க சீட் வாங்குனேன். உன் ரிசால்ட் நல்லா இல்லாட்டி கண்டிப்பா சீட் கிடைச்சிருக்காது தானு. அதனால வெறும் பணத்துனால தான் உனக்கு சீட் கிடைச்சதுன்னு கிறுக்குத்தனமா யோசிக்காத. ஹ்ம்ம். இப்ப சொல்லுறதே கேட்டு என்னை அடிக்க வர கூடாது. ப்ராமிஸ் பண்ணு”

“சரி, அடிக்கல. சொல்லு”

“அங்க உங்க ஊருல, சில பேரை பிடிச்சு உனக்கு மெடிக்கல் அட்மிஷன் கிடைக்காத மாதிரி நான் தான் செஞ்சேன். அறவே குடுக்காம இருக்க முடியாது, லாஸ்ட் ஒப்ஷன் வேணும்னா குடுக்குறோம்னு சொல்லி டென்டிஸ்ட்ரி குடுத்தாங்க. எனக்கு ஒரு பயம் தான் எங்க நீ அக்சேப்ட் பண்ணிக்குவியோன்னு. அதுக்கு தான் பிரபுக்கு மூனு நாளா டியுசன் எடுத்து உன் மனச எப்படி மாத்துறதுன்னு சொல்லி குடுத்தேன்”

கண்கள் சாசர் போல் விரிந்தது தானுவுக்கு.

“பணம் இருந்தா என்ன வேணும்னாலும் செய்வியாடா?” அடிக்க ஓங்கிய கையை இருக பிடித்துக் கொண்டான் விபா.

“பார்த்தியா, ப்ராமிஸ் பண்ணிட்டு அடிக்க வர.”

“சரி அடிக்கல. கைய விடு”

அவளை நம்பாமல் மேலும் கையை இருக பிடித்துக் கொண்டான்.

“இங்க வந்தாலும் நீ வசதியா இருக்கணும்னு தான் அபார்ட்மென்ட் வாங்குனேன். பிரபு கிட்ட கேட்டு கேட்டு உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி போட்டேன். அந்த ஊஞ்சல், பிள்ளையார் படம், உன் பேவரேட் கலர்ல வால் பேப்பர் எல்லாம் உன்னை மனசுல வச்சி செஞ்சதுதான்.”

“உன்னோட அபார்ட்மென்ட் பார்த்தப்பவே நான் மயங்கிட்டேன் வேணு. அங்க தான் தங்கனும்னு பட்டுன்னு முடிவெடுத்துட்டேன்.”

“அதென்ன உன் அபார்ட்மென்ட்? நம்மளோடதுன்னு சொல்லு.”

“நீ என் காதலனா இருக்கற வரைக்கும் அது உன் வீடு தான். என் புருஷனா ஆனாதான் நம்ம வீடுன்னு சொல்லுவேன்”

“சரி வா, இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்”

“பண்ணிக்கலாம். அதுக்குதானே கற்புக்கிட்ட சொல்லி பேர்த் சேர்ட்லாம் குடுத்து விட சொன்னேன்”

அவள் முன் யோசனையைக் கண்டு வாயைப் பிளந்தான் விபா. அவனது வாயை தன் விரல்களினால் மூடியவள்,

“வாக்குமூலம் முடிஞ்சிருச்சா? இல்ல இன்னும் மிச்சம் இருக்கா?”

அசட்டு சிரிப்பொன்றை வெளியிட்ட விபா,

“கடைசியா ஒன்னு இருக்கு. ஆனா இத நீ எப்படி எடுத்துக்குவன்னு தெரியலையே தானும்மா.”

“எல்லாத்தையும் தாங்கி கிட்டேன், இதையும் தாங்கிக்கிறேன். சொல்லு”

“வந்து, உங்க அப்பா” என நிறுத்தினான் விபா.

முகம் சட்டென மாற,

“அந்த ஆளுக்கு இப்ப என்னா?” என கேட்டவள் அவன் மடியிலிருந்து எழுந்து நின்றாள். அவன் தலை முடியைக் கொத்தாக பிடித்தவள்,

“அந்த ஆள வர வச்சது நீதானா? சொல்லு வேணு?” குரல் நடுங்கியது. அவள் முடியைப் பிடித்த வலியைத் தாங்கி கொண்டு ஆமென தலையை ஆட்டினான் விபா.

சட்டென விலகியவள், தரையில் அப்படியே மடங்கி அமர்ந்தாள். கண்களில் பொல பொலவென கண்ணீர் கொட்டியது.

“ஏன் வேணு? ஏன் இப்படி செஞ்ச? என் மனசோட ரணம் உனக்கு விளையாட்டா போயிருச்சா?” கதறினாள் தானு.

அவனும் மண்டியிட்டு அவள் அருகில் அமர்ந்தான். தடுக்க தடுக்க அவளை அணைத்துக் கொண்டவன், அவள் முகத்தை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். அவள் அழுது ஓயும் வரை அப்படியே இருந்தான் விபா. மெல்ல துவண்டவளை, கீழே அமர்ந்து குழந்தையை மடியில் கிடத்துவது போல் படுக்க வைத்துக் கொண்டான். தேம்பியபடியே அவன் வயிற்றில் முகத்தை வைத்து இடுப்பை வளைத்துக் கொண்டாள் தானு. அந்த நிசப்தமான இரவு நேரத்தில் அவள் தேம்பும் ஓசை மட்டும்தான் கேட்டது. தலையைக் கோதி கொடுத்துக் கொண்டே அமைதியாக இருந்தான் விபா.

சட்டென எழுந்து அமர்ந்தவள்,

“எப்படி வர வச்ச?” என கேட்டாள்.

சற்று தயங்கியவன்,

“அவரு இப்ப கொஞ்சம் பண கஸ்டத்துல இருக்காரு. வேலை இடம் நொடிச்சுப் போனதால வேலைய விட்டு தூக்கிட்டாங்க. ஆள் மூலமா, நான் தான் உங்கம்மாவ போய் பார்த்தா பணமும் வேலையும் வாங்கி தரதா சொல்லி அனுப்பி வச்சேன். அவருக்கு தெரியாம மைக்ரோபோனும் அவரோட பேக்குல சேட் பண்ண சொன்னேன். என்ன பேசறாருன்னு எனக்கு தெரியனும்ல, அதான்”

“உனக்கு பணத்திமிர்டா. வேற ஒன்னும் இல்ல.” பட் பட்டேன அடித்தாள் தானு. பேசாமல் வாங்கி கொண்டவன்,

“எனக்கு நீ சந்தோஷமா இருக்கனும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்” குரல் அழுத்தமாக ஒலித்தது. அடிப்பதை நிறுத்தியவள் அவனை ஆழ்ந்து நோக்கினாள்.

“அவரை நினைச்சு நீ அழறத என்னால தாங்கிக்க முடியலை தானு. அதுக்குத்தான் இந்த முயற்சி எடுத்தேன்.”

“அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கு வேணு. அதை நீ நினைச்சி பார்த்தியா?”

“மத்தவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை. என் தானும்மா நிம்மதி தான் எனக்கு முக்கியம்.”

“ஏன்டா இப்படி இருக்க? நான் உனக்கு என்ன செஞ்சேன்னு இப்படி ஒரு வெறித்தனமான பாசத்தை என் மேல வச்சிருக்க? உன்னை நான் எப்படிடா சமாளிப்பேன்? எனக்கு பயமா இருக்கு வேணு” அவன் மார்பிலே மீண்டும் சாய்ந்து கொண்டாள் அவள்.

“எதுக்கு பயம்? அதுவும் என்ன பார்த்து. பாசம் மட்டும் தான் வரனும். பயம் வர கூடாது என் செல்லக்குட்டிக்கு. ஆமா தெரியாம தான் கேக்குறேன், உங்கப்பாவுக்கு என்ன இளமை திரும்புதா? நான் அனுப்பனது உங்க அம்மா கூட கொஞ்சம் சமாதானமா பேசி, மன்னிப்பு கேட்டு நிலைமைய கொஞ்சம் சீர் பண்ணுறதுக்குதான். இந்த வயசுல என்னை ஏத்துக்க கூடாதான்னு ஏக்கமா கேக்குறாரு. உங்கம்மா லெப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டாங்க.ஹாஹாஹா. என் மாமனாரு ஜெமினி கணேசனையே மிஞ்சிருவாரு போல”

“மாமனாரு, கோமனாருன்னு சொல்லாதே. கடுப்பு கடுப்பா வருது. எங்கம்மா கதைய சொன்னதுல இருந்து அந்த ஆளு மேல வச்சிருந்த பாசம் எல்லாம், கரைஞ்சி சாக்கடைல ஓடிருச்சு. மாமனாருக்கு காசு பணம் குடுக்குறேன், உதவி பண்ணுறேன்னு கிளம்பினே, உன்னை பீஸ் பீஸா ஆக்கிருவேன்”

“திருந்தி வந்தா உனக்கு அப்பா கிடைப்பாரு, அப்படி சொதப்புனா அவரை தூக்கி எறிஞ்சிருவன்னு தான் இந்த முயற்சிய எடுத்தேன் தானு”

“ஹ்ம்ம் புரியுது”

“டேனிய பேக் பண்ணதுக்கு உன் கிட்ட ஒரு ரியாக்சனும் காணோம்?”

“என்ன பண்ணனும்கிற? உன்னை பறந்து பறந்து அடிக்கவா? நீ செஞ்சதுல எனக்கு மலை அளவு வருத்தம் இருந்தாலும், அவன் மேச்சுர்டா மாறிட்டான், சுயமா சிந்திச்சு முடிவு எடுக்கறான், நல்லா படிக்கறான். அதனால உன்னை போனா போன்னு மன்னிச்சு விடுறேன்.”

“இப்போ சொல்லு எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?”

“முதல்ல ரிஜிஸ்டர் மேரேஜ் மட்டும் செஞ்சுக்கலாம். நான் படிச்சு முடிச்சவுடனே ஊரை கூட்டி தாலி கட்டிக்கலாம். அது வரைக்கும் நான் அபார்ட்மென்டுல இருக்கேன், நீ இங்கயே இரு. அது தான் நான் உனக்கு குடுக்குற தண்டனை”

“தானு!!!!!!! நீ சொன்ன மாதிரியே செய்யலாம். ஆனா நான் உன்னை பிரிஞ்சு இருக்க மாட்டேன். ரிஜிஸ்டர் பண்ணாச்சுன்னா நீ லீகலா என் வைப். சீதை இருக்குற இடம் தான் ராமனுக்கு அயோத்தி. நான் உன் கூடதான் இருப்பேன். எங்கனாலும் சரி”

“ஏன்? நான் காலேஜ்கு வயித்தை தள்ளிக்கிட்டு போகணுமா? அதெல்லாம் முடியாது. இந்த ரிஜிஸ்ட்ரேஷன் கூட என் காதலன் பணத்துல படிக்கிறேன், காதலன் வீட்டுல தங்கி இருக்கேன்னு சொல்லுறது எனக்கு கேவலமா இருக்குன்னுதான் வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணேன். யாரு கேட்டாலும் என் புருஷன் படிக்க வைக்கிறான்னு சொல்லுறது தான் எனக்கு பெருமை.”

“பெருமை, எருமை எல்லாம் இருக்கட்டும் தானு. இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டு இருக்க மாட்டேன். எட்டி நில்லு எச்சரிக்கிறேன்னு மிரட்டுர வேலை எல்லாம் இனிமே வைச்சுக்காத. நான் கேட்கவும் மாட்டேன்.” என பிடிவாதம் பிடித்தான் விபா.

“சரியான ட்யூப் லைட்டுடா நீ. எட்டி நில்லு எச்சரிக்கிறேன்னு கோபமா சொன்னனா இல்லை சிணுங்கலா சொன்னனான்னு கூட புரிஞ்சிக்க முடியாத மண்டுவா இருக்கியே. சாம்பிராணி!!” என திட்டினாள் தானு.

“என்னடி சொல்லுற? அப்போ இவ்வளவு நாள் வாயில தான் தள்ளு தள்ளுன்னு சொல்லிட்டு, மனசுகுள்ள அள்ளு அள்ளுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தியா. இது தெரியாமா நான் தான் பயந்து பயந்து நடந்துகிட்டனா?”

அவன் மடியில் இருந்து எழுந்து கொண்டவள்,

“ஏன்டா வேணு, இன்னுமாடா உனக்கு புரியலை? சுத்த வேஸ்டுடா நீ. நானும் பிளேபாய் தான்னு வெளிய எங்கும் போய் சொல்லிறாத, துப்பிருவாங்க” என நக்கலடித்தவள் அவன் கையில் பிடிபடாமல் ஓட்டம் எடுத்தாள்.

“இருடி வரேன், என் அழகு ராட்சசி” என அவளைத் துரத்தியபடி ஓடினான் விபா. தோட்டத்தை சுற்றி சுற்றி ஓடி, களைத்துப் போய் இருவரும் புல்லிலே தொப்பென அமர்ந்தார்கள். தானுவை இழுத்துக் கொண்டு அப்படியே புல்லில் சாய்ந்தான் விபா. சற்று நேரம் மூச்சு வாங்க பௌர்ணமி நிலவையே பார்த்தபடி படுத்திருந்தவனர் இருவரும்.

தானுவின் பக்கமாக ஒருக்களித்து திரும்பியவன்,

“தானும்மா, அந்த நிலவுக்கும் உனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கு. சொல்லு பார்க்கலாம்”

“தெரியலையே வேணு”

“அந்த நிலவை என்னால பார்க்க மட்டும்தான் முடியும். ஆனா இந்த நிலவை என்னால பார்க்கவும் முடியும், ரசிக்கவும் முடியும், ருசிக்கவும் முடியும்” என்றவன் தன் இதழ் கொண்டு அவள் இதழை மூடினான். மீண்டும் மீண்டும் அவள் இதழோடு யுத்தம் நடத்தினான். அவனின் வேகத்தைப் பார்த்து, அந்த வெண்ணிலவே வெட்கப்பட்டு கண் மூடி கொண்டது.

இருவரும் தன்னிலை மறந்து காதல் வானில் சிறகடித்து பறந்த வேளையில், கர்ண கொடூரமாக ஒரு கணைப்பு சத்தம் பக்கத்தில் கேட்டது. முதலில் சுய நினைவு அடைந்தது விபாதான். வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவன் முன்னே, முத்துப்பாண்டி தாத்தா நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னே சேலை தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு வேலம்மா பாட்டியும் நிற்பதை கண்டு அவனது சப்த நாடியும் ஒடுங்கியது. கை கொடுத்து தானுவை தூக்கி விட்டவன்,

“வாங்க தாத்தா, வாங்க பாட்டி” என முறையாக அழைத்தான்.

“வரோம்!. ரெண்டு பேரும் தனியா இருப்பீங்கன்னு கற்பு தான் போனை போட்டு இங்க வர சொன்னுச்சு. அவங்க எல்லாம் இங்க வர வரைக்கும் துணைக்கு எங்கள இருக்க சொன்னுச்சு.” முறைத்துக் கொண்டே பேசினார். கையும் களவுமாக மாட்டியதால் விபாவும் திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி முழித்துக் கொண்டு நின்றான்.

பாட்டியின் பின்னால் போய் நின்று கொண்ட தானு,

“தாத்தா, இவன் தான் பௌர்ணமி இன்னிக்கு. வெளிய வா, நிலாவ காட்டுறன்னு கூட்டிட்டு வந்து முத்தம் முத்தமா குடுக்குறான்.” என கம்ப்ளைன்ட் வாசித்தவள், விபாவுக்கு நாக்கை துருத்தி அழகு காட்டினாள்.

அவளை கவனிக்காத முத்துப்பாண்டி,

“நீங்க ரெண்டு பேரும் உள்ளாற போய் படுங்க. இன்னிக்கு என் பேராண்டி கூட நான் படுத்துகுறேன்” என மீசையை நீவியபடியே விபாவுக்கு முறைப்பு ஒன்றை பரிசாக கொடுத்தார்.

விபாவின் ‘அட்டேன்ஷன்’ போஸை பார்த்து தானுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பறக்கும் முத்தம் ஒன்றை அவனுக்கு அனுப்பி விட்டு பாட்டியுடன் உள்ளே சென்றாள்.

அவள் சிரிப்பை ரசித்துப் பார்த்தவன், தாத்தாவுடன் பவ்யமாக வீட்டினுள் நுழைந்தான்.

error: Content is protected !!