ENE– epi 5

ENE– epi 5

அத்தியாயம் 5

காதல் ஒன்னும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை
நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா

“டேனி டியர், நீ வந்தவுடனே சாப்பிட்டுட்டு, ஸ்டடி ரூமுக்கு வர சொன்னாருப்பா டாடி”

“ஓகே மாம். இன்னிக்கு என்ன மெனு?”

“ச்சேப் இன்னிக்கு வெஸ்டர்ன் குசின் செஞ்சிருக்காரு. சூப், பாஸ்தா, சேலட் எல்லாம் இருக்கு”

“ எனக்கு இட்லி தான் மாம் வேணும். அதுவும் ஆன்ட்டி கற் செய்வாங்க பாருங்க. செம்மையா இருக்கும்.”

“டேய், ஒன்னு உங்க டாடி மாதிரி சூப்பா சாப்பிடனும். இல்ல என்னை மாதிரி பாஸ்தாவாவது சாப்பிடனும். எங்க ரெண்டு பேரும் மாதிரி இல்லாம இது என்னடா டிசைன்.”

“ஆவ்வ்வ் மாம். இட்லி சாப்பிடறதனால நான் ஓங் பரம்பரை இல்லன்னு ஆயிருமா? எனக்கு இந்தியன் கல்ச்சர், சாப்பாடு எல்லாம் ரொம்ப பிடிக்கும் மா”

“கல்ச்சர் மட்டும் தான் பிடிக்குதா? இல்லை அந்த கல்ச்சரோட வர பொண்ணையும் பிடிக்குதா?” என கலாய்த்தார் அவன் அம்மா கேத்ரீன்.

வெள்ளை முகம் செக்கச்செவேரென சிவந்து போக, வலது கை விரல்களை இடது கையில் வைத்து பியானோ வாசிப்பது போல் ஆட்டினான் டேனி. டேனிக்கு வெட்கம், கோபம், சந்தோசம், சோகம் போன்ற உணர்ச்சிகரமான நிகழ்வுகள் நடந்தால் இந்த மேனரிசம் தானாக வெளிப்படும்.

“யாரு டான்யாவையா கல்ச்சர் தெரிஞ்ச பொண்ணுனு சொன்னிங்க. ஒரே ஒரு தடவ சேலை கட்டி காட்டு டான்யான்னு சொன்னேன். ரூமுக்குள்ள போனவ அரை மணி நேரம் கழிச்சிதான் வந்தா. அவங்க அம்மா சேலையை மடிச்சி, ரிப்பன் வச்சு கட்டி கொண்டுவந்து என் முகத்துல விட்டு அடிச்சா. இந்தா சேலையை கட்டிட்டேன், காட்டிட்டேன். இதுக்கு மேல என்னை தொந்தரவு பண்ணாதேன்னு சொன்னவ, ஒரு வாரம் என்கிட்ட பேசல”

“அப்புறம் எப்படிடா திரும்ப பேசுனா?”

“நாங்க இப்படி சின்ன சின்ன சண்டை போடுறது என்ன புதுசா மாம். நான் ஆயிரம் தடவை வாட்சாப்ல சோரி சொன்ன பிறகுதான் பேசுனா. அதுவும், இனிமே சேலை கட்டு, சுடிதார் போடுன்னு எங்க அம்மா மாதிரி டார்ச்சர் பண்ண அப்புறம் நம்ம பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிருவேன்னு மிரட்டிட்டு தான் விட்டா”

“சரி மேடம் ஏன் கொஞ்ச நாளா என்னை பார்க்க வரது இல்ல?”

“அவ ரொம்ப பிசிமா. எங்களோட STPM (மலேசியாவின் ஏ-லெவல்) ரிசல்ட்ஸ் இன்னும் ஒரு மாசத்துல வருதுல, அதுக்கு பணம் சேர்க்கிறா. எப்படியும் லோக்கல் யுனிவர்சிட்டியில மெடிக்கல் சீட் கெடைச்சிரும்னு நம்பிக்கையா இருக்கா. உபகார சம்ளம் கிடைச்சாலும், அது சாங்சன் ஆகிற வரை சமாளிக்கனுமே.”

“என்னவோ போ. அவளாச்சும் நல்லா படிக்கிறாளே. ரொம்ப சந்தோஷம்.”

“மம்மி, நானும் ஓரளவு நல்லா தான் படிக்கிறேன். எங்களுக்கு படிக்க தெரியாதுன்னு இல்ல, படிக்க வேணாம்னு இருக்கோம். ஒரு வீட்டுல ரெண்டு ஒவர் படிப்ஸ் இருந்த குடும்பத்துக்கு ஆகாதாம்”

“ஆமான்டா, ரூம்ல வெயிட் பண்ணிகிட்டு இருக்கிற உங்க டாடி கிட்ட இத போயி சொல்லு, மடியில தூக்கி வச்சு நாலு முத்தம் குடுப்பாரு.”

முகத்தை சோகமாக வைத்து கொண்ட டேனி,

“மாம், இந்த சோகம் போதுமா அவர கவுக்க இல்லை இன்னும் கொஞ்சம் சோகத்த ஏத்தனுமா?” என கேட்டவறே கேத்ரீனை தூக்கி ஒரு சுற்று சுற்றி கீழே இறக்கி விட்டான்.

“வர வர உங்க அழகும் ஸ்டைலும் ஏறிக்கிட்டே இருக்கு மம்மி” என்றவாரே அவர் நெற்றியில் முத்தமிட்டான் டேனி.

“யார் யார எப்படி எப்படி கவுக்கனும்னு நல்லாவே தெரிஞ்சி வைச்சிருக்க” என்றவாறே அவன் முடியை செல்லமாக கோதினார் அவன் அம்மா.

“ஓகே மா. நான் சாப்பிட போறேன். நீங்க மறக்காம உங்க வைட்டமின்ஸ் சாப்பிட்டு, சீக்கிரமா படுங்க. குட் நைட் ஸ்வீட்டி”

“குட் நைட் டேனி. டாடி ஏதாவது கோபமா பேசினா பொறுத்து போப்பா”

“நீங்க போங்க மாம். நான் சமாளிச்சிக்குவேன். அவருக்கு என்னை கோபமா பார்க்கவே தெரியாது, இந்த லட்சணத்துல கோபமா பேசிறவா போறாரு. ச்சில் மாம்” என்றவாறே உணவு அறைக்கு சென்றான் டேனி.

தன் அழகான , அன்பான மகன் நினைப்பதெல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என ப்ரேயர் சொல்லி கொண்டே படுக்க சென்றார் கேத்ரீன்.

டேனி வசிப்பது வில்லா என அழைக்கபடும் பெரிய செல்வந்தர்கள் வாழும் வீடு. மூன்று மாடிகளுடன் நீச்சல் குளமும் சேர்ந்தமைந்தது. மேல் மாடியில் ரூப் டோப் கார்டன் அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கும். அங்கேயே அமர்ந்து உணவருந்த ஏதுவாக மேசை, நாற்காலிகள் அழகாக செட் செய்யபட்டிருக்கும். இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் அந்த கார்டனே தேவலோகம் மாதிரி காட்சி அளிக்கும். ஸ்டடி ரூமில் அப்பாவை காணாமல் இங்கேதான் இருப்பார் என தேடி வந்தான் டேனி. அவன் எதிர்ப்பார்த்ததைப் போல் அவர் அங்கே தான் செயற்கை நீருற்று பக்கம் நின்றிருந்தார். மெதுவாக வந்து பின்னால் இருந்து அவரை அணைத்துக் கொண்டான் டேனி.

“ஹாய் டாட்”

“டேனி மை போய். ஐ மிஸ்ட் யூ”

“டேடி, இன்னிக்கு காலைல தானே என்னைப் பார்த்தீங்க. அதுக்குள்ள மிஸ் பண்ணுருங்கிளா?”

“உங்க மம்மி வேணும்னா உன்னை பத்து மாதம் வயித்துல சுமந்திருக்கலாம். ஆனா உன்னை நான் இந்த இருபத்தியொரு வருஷமா இந்த நெஞ்சில சுமக்கிறேன். ஐ ஹேவ் ஆல் தே ரீசன் டூ மிஸ் யூ மோர்”

“உங்களாலயும் மம்மியாயாலயும் என்னை விட்டுட்டு இருக்க முடியாது. அப்புறம் ஏன் டேட் என்னை ஆஸ்திரேலியாவுக்கு போ போன்னு துரத்துறிங்க” என ஆதங்கத்துடன் கேட்டான் டேனி.

மகனை ஊன்றி பார்த்தார் மிஸ்டர் ஓங்.

“டேனி, நாம அடிக்கடி தாத்தாவோட மேமோரியல் பார்க்குக்கு போவோம் இல்லையா? அங்க தாத்தா அஸ்தி வச்சிருக்கிற கண்ணாடி பேழையில் என்ன எழுதி இருக்கும்?”

“தாத்தா போட்டோ வைச்சி, அவர் பிறந்த தேதியும் இறந்த தேதியும் எழுதி இருக்கும் டேட்.”

“அதுல பிறந்த நாளையோ, இறந்த நாளையோ நாம டிசைட் பண்ண முடியாது. ஆனா இன் பிட்வீன் இருக்கிற வாழுற நாட்களை எப்படி பயனுள்ளதா வாழலாங்கிறதை நாம டிசைட் பண்ணலாம் இல்லையா. அப்படி வாழ்ந்து தான் உன் தாத்தா நம்மள நல்ல நிலமையில விட்டுட்டு போயிருக்காரு. நீ சம்பாதிச்சா தான் அடுத்த வேளை சாப்பாடுங்கிற நிலைமையில நாம இல்ல. உன் பேரன், அவனுக்கு பேரன் வரைக்கும் உக்காந்து சாப்பிடற அளவு நமக்கு சொத்து இருக்கு.”

“சொத்து இருக்கிறதுனால மட்டும் நமக்கு மரியாதை வந்திடாது. என் மகன் ஒரு டிகிரி ஹோல்டர், ஒரு பி.எச்.டி ஹோல்டர்ன்னு சொல்லுறதுல தான் எனக்குப் பெருமை. உன் அங்கிள் ஜோன் உனக்கு ஆஸ்திரேலியா வர ஸ்போன்சர் பண்ண ரெடியா இருக்காரு. என்ன கோர்ஸ், எந்த யுனிவெர்சிட்டி எல்லாம் உன் சாய்ஸ். எங்களை விட்டு தனியா இருந்தா தான் நீ சுய காலில நிக்க பழக முடியும்.” என்று சொல்லிவிட்டு எதிர்பார்ப்புடன் மகனை ஏறிட்டார் அவர்.

கையில் பியானோ வாசித்துக் கொண்டே தன் தந்தையின் கண்களைப் பார்த்து டேனி சொன்ன ஒரே பதில்,

“என்னால டான்யாவ விட்டுட்டு இருக்க முடியாது டாட்.”

மற்ற அப்பாக்கள் எல்லாம் இந்த பதிலில் எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பாங்களோ தெரியாது. ஆனா டேனியின் அப்பா அவனை ஒரு சிரிப்புடன் அணைத்துக் கொண்டார்.

“என்னை விட பெரிய காதல் மன்னனாடா நீ?”

“போங்க டேட். இப்படி கிண்டல் பண்ணாதிங்க எனக்கு வெக்கம் வெக்கம்மா வருது”

மகனின் வெட்கத்தைப்  பார்த்து வாய் விட்டு சிரித்தார் அவர்.

“வெறும் ப்ரண்ட்ஷிப் மட்டும்தான்னு நெனைச்சேன். இப்படி நீ வெட்கப்படறத பார்த்தா காதலுக்கு ப்ரோமோஷன் வாங்கிட்ட போல”

“டாட், எனக்கே கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு. சின்ன வயசு தோழிய இப்ப என்னால தோழியா பார்க்க முடியல டாட். பாசமா பழகின டான்யாவை இப்ப காதலா பார்க்கும் போது என் மனசாட்சி உறுத்துது. அதுவும் கள்ளம் இல்லாம என் கை பிடிச்சி , தோள் தொட்டு அவ பேசும் போது, அந்த தொடுகையிலே நான் கரைஞ்சி போறது எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு டாட். என் மேலயே வெறுப்பா இருக்கு. ஆனா ஐ கான்ட் ஹேல்ப் இட். அவதான் வேணும்னு மனசு அடம் பிடிக்குது. டேட், நான் கேவலமானவனா? “ என கண் கலங்கினான் டேனி.

மகனை பார்க்கும் போது கலக்கமாக இருந்தது அவருக்கு. ‘இப்படி அவ மேல பாசம் வச்சிருக்கானே. அவ இவனை ஏத்துக்குவாளா. அவளும் எனக்கு மகள் மாதிரிதான். அவ பாட்டி அன்னிக்கு உதவுலனா இன்னிக்கு டேனி இல்லை. ரெண்டு பேரும் சந்தோசமா இருக்க கண்டிப்பா நான் ஒரு நல்ல முடிவை எடுக்கனும்’ என கவலை கொண்டார் அவர்.

“டேனி, நீ கேவலமானவன் இல்லப்பா. காதல் எப்போ, யாரு மேல வரும்னு அறிஞ்ச ஞானி யாருமில்ல. டான்யாக்கும் உன் மேல காதல் வரலாம். அதுக்கு நான் ஒரு வழிய சொல்லுறேன்.”

“சொல்லுங்க டாட். நான் கேக்குறேன். என் டான்யா என்னை காதலா பார்க்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன். உள்ளுக்குள்ள இருக்கிற காதல் எப்போ பொத்து கிட்டு வந்து எங்க ப்ரண்ட்ஷிப்ப கவுத்துருமோன்னு ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து சாகிறேன். ப்ளீஸ் டாட்”

“நீ கொஞ்ச நாளைக்கு அவள பிரிஞ்சு தூரமா போறதுதான் நல்லது. பொறுப்பா நான் பேசி முடிச்சிருறேன். தள்ளி இருக்கிறப்ப தான் ஒருத்தரோட அருமை நமக்கு புரியும். அவள சுத்தி சுத்தி நீ போறதனால அவளால உன்னை நண்பனா தவிர வேற மாதிரி உணர முடியல. நீ பக்கத்துல இல்லாத போது அந்த உணர்வு வரலாம். இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. தூரமா இருக்கும் போது உனக்கே இது நிஜ காதல்தானா இல்ல இன்பாக்ச்சுவேஷனானு தெளிவா தெரிய வாய்ப்பிருக்கு.”

என்ன சொல்வது என புரியாமல் மௌனமாக நின்றிருந்தான் டேனி.

“என்னோடது காதல் தான்னு எனக்கு நிச்சயம் தெரியும் டாட். டான்யாவுக்காக இதுக்கு நான் சம்மதிக்கிறேன். கிவ் மீ ஓன் வீக். எங்க பினாங்கு ட்ரிப் முடிஞ்சவுடன் நான் கிளம்பறேன்” என சோகமாக சொன்னான் டேனி.

“நல்லதுப்பா. இப்போ போய் படு. மணி ஆகுதுபாரு”

“டான்யாவுக்கு வேலை முடிஞ்சிருக்கும் பா. ஏத்த போகனும்.”

“சரி, இந்தா கார் கீ. திரும்ப உன்கிட்டயே குடுக்கிறேன். பைக் வேண்டாம். அவள பத்திரமா விட்டுட்டு வா”

“சரி டாட், பை”

களையில்லாமல் செல்லும் மகனையே வருத்தத்துடன் பார்த்து கொண்டிருந்தார் மிஸ்டர் ஓங்.

கைத்தொலைபேசியை எடுத்து அழைப்பு எடுத்து மறுமுனை பதிலளிக்க காத்திருந்தார்.

“ஹாலோ தருண். நான் ஓங் பேசுறேன்”

error: Content is protected !!