anima-final3

anima-final3

அணிமா-39

ஆரம்பக்கட்ட மகப்பேறு காலத்தில் மிகவும் பத்திரமாக இருக்க வேண்டிய காரணத்தால், அவளை ஆபத்தை எதிர்கொள்ளும் எந்த வேலையிலும் ஈடுபட அனுமதிக்கவில்லை ஈஸ்வர்.

அவள் வெளியில் எங்கே செல்லவேண்டும் என்றாலும், மல்லிகார்ஜூன் அவளுக்குத் துணையாகச் செல்ல ஏற்பாடு செய்திருந்தான் அவன்.

ஜெய்யும் அவனுக்குத் துணை போகவே, ஒன்றுமே செய்ய இயலாமல் தவித்தாள் மலர்.

சூடாமணியின் நேரடி கண்காணிப்பு வேறு.

ஈஸ்வர் முழு நேரமும் தொழிலில் மூழ்கினான் என்றால், ஜெய் அவனுடைய வேட்டையில் மும்முரமாக இருந்தான்.

மனதிற்கு நெருக்கமான இருவரும் வெகு தூரம் போனதுபோன்ற மாய உணர்வு ஆட்கொள்ள, தேவையற்ற பயமும், நம்பிக்கை இன்மையும் சூழ்ந்துகொண்டு, தவித்தாள் மலர்.

அது புரிந்ததாலோ என்னவோ, அவளை சில நிமிடங்கள் கூட தனிமையில் விடாமல், அவளுடைய ராசா ரோசா இருவரும், அவளை உற்சாகமாக வைத்திருக்கப் பெரிதும் போராடிக்கொண்டிருந்தனர்.

நாட்கள் அதன் வேகத்தில் செல்ல, மகிழ்ச்சி பொங்க ஜீவிதாவின் வளைகாப்பு விழாவை நடத்தி முடித்தனர்.

***

சலீமிடம் தொடங்கி ஜெய் மேற்கொண்ட புலனாய்வில், இன்பார்மர் எனப்படும் அடிமட்ட ஆள்காட்டிகள் முதல் ஏஜென்ட்டுகள், அவர்கள் தொடர்பிலுள்ள கூலிப்படைகள், அனாதை இல்லங்களை நடத்தும் முக்கிய புள்ளிகள், அவர்களுக்குத் துணை போகும் ட்ராவல் ஏஜென்ட்டுகள், காவல்துறையில் பணிபுரியும் சில அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகள் என ஒவ்வொருவராக மாட்டவும்… கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தை கடத்தல்கள் கட்டுக்குள் வரத்தொடங்கியது.

அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளைக் கடத்த இயலாத வண்ணம், புதிய கருவிகள் பொருத்தப்பட்டு, அதுவும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குழந்தை கடத்தலில் ஈடுபட்டிருந்த முக்கிய புள்ளிகள் சிலரைத் தவிர்த்து, ஓரளவிற்கு மாநில வாரியாக, பல ‘சில்ரன் ட்ராபிக்கிங் ராக்கெட்ஸ்’ எனப்படும் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்கள் கண்டுபிடிக்கப் பட்டு, ஒழிக்கப்பட்டன.

ஆனாலும் போலி பாஸ்போர்ட்… போலி விசா மூலமாகக் கடத்தப்பட்ட பல சிறுவர் சிறுமியர்களின் நிலை என்ன என்பதே தெரியாமல் போனது.

பன்னாட்டுத் தூதரகங்கள் மூலமாகக் கூட அவர்களைக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

இதற்கிடையில் கருணாகரனுடன் இணைந்து ஜெய் செல்லும் வேகத்தையும் அவனது புத்திசாலித்தனத்தையும் தாக்குப்பிடிக்க முடியாமல், அவனை அந்த பொறுப்பிலிருந்து விலக்க, சில அரசியல் ஊழல்வாதிகளால் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சில தினங்களிலேயே அது பிசுபிசுத்துப் போனது.

காரணம்… அவன் கையும் களவுமாகப் பிடித்த ஒவ்வொருவரையும் பற்றிய தகவல்களுடன், அதிக எண்ணிக்கையிலான போலி பாஸ்ப்போர்ட்கள், போலி விசாக்கள், போலீஸ் வெரிஃபிகேஷன் செர்டிபிகேட், கம்ப்யூட்டர், லாப்டாப், பேன் கார்டுகள், வங்கி பாஸ்புக், கடன் அட்டைகள்,எனப் பல ஆவணங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக அளித்தான், அவனுடைய கடமையில் அவனுடைய தீவிரத்தை விளக்கும் விதமாக.

நேரடியாக அவனிடம் மோத முடியாமல், கூலிப்படை படையை ஏவி, அவனைக் கொல்லும் முயற்சியில் சிலர் ஈடுபட, அதிலிருந்தும் மீண்டுவந்தான் ஜெய்.

அனைத்தும் சேர்ந்து, மக்கள் மத்தியில் ஜெய் கிருஷ்ணா ஐ.பி.எஸ் என்ற பெயர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த பெயரில் திரைப்படம் எடுக்கும் வரை அவனது புகழ் பரவியிருந்தது.

***

ஜீவிதாவிற்கு, அழகான ஆண்குழந்தை பிறந்து, ‘பரந்தாமன்’ எனப் பெயர்சூட்டினர். அந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் வைபவமும், அணிமாமலருடைய வளைகாப்பு விழாவும் ஒரே நாளில் சிறப்பாக நடந்து முடிந்தது.

வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து இருந்தது.

ஈஸ்வர் கதாநாயகனாக நடித்த படத்தின் டீசர் வெளியாகி, அதைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக்கள் குவிய, அவனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றிருந்தது.

இந்த சூழ்நிலையில் ‘மீண்டும் உயிர்த்தெழு, படம் திரையிடப்பட்டு… அதன் முதல் காட்சியைப் பார்க்க குடும்பத்தில் அனைவருடனும் வந்திருந்தாள் மலர்.

ஈஸ்வர் மட்டும் அவனுடைய வேலை காரணமாக வரவில்லை.

படம் முடிய சில நிமிடம் இருக்கும் சமயம், அந்த காட்சிகளைத் தொடர்ந்து பார்க்க பிடிக்காமல், அருகில் உட்கார்ந்திருந்த ஜீவிதாவிடம், “எனக்குக் கொஞ்சம் அன் ஈஸியா இருக்கு… நான் வெளியில இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு மலர் எழுந்துகொள்ள, “நான் வேணா கூட வரட்டுமா அண்ணி?” என்று கேட்ட ஜீவிதாவை, “பரவாயில்ல… இன்னும் கொஞ்ச நேரம்தானே…” எனத் தவிர்த்துவிட்டு, வெளியில் வந்தாள் மலர்.

அவளுக்கு முன்னதாக வெளியில் வந்து நின்றான் மல்லிக்.

அவனது செயலில் புன்னகை பூக்க, “அண்ணா எனக்கு ஒரு காஃபி வாங்கிட்டு வந்து தரீங்களா?” என்று கேட்டாள் மலர்.

அவன் காஃபியுடன் வரவும், அதை வாங்கி பருகியவாறு அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அவள் உட்கார்ந்திருக்க, அவனுடைய பௌன்சர்கள் சூழ அந்த அரங்கினுள் நுழைந்தான் ஈஸ்வர்.

பெரிதாகி இருந்த வயிற்றால், மிகவும் சிரமத்துடன், முகம் சிவந்து அங்கே உட்கார்ந்திருந்த மலரைப் பார்த்ததும், “ஐயோ! கேள்வி மேல கேள்வி கேட்டு உண்டு இல்லனு செய்ய போறா!” என மனதிற்குள் எச்சரிக்கை மணி அடிக்க, அவளை நோக்கி வந்தான் ஈஸ்வர்.

அவன் வந்ததையே கண்டுகொள்ளாதவள் போல அவள் உட்கார்ந்திருக்கவும், அவள் அருகில் வந்து உட்கார்ந்தவன், “என்ன மேடம்! ஏன் இங்க வந்து உட்கார்ந்துட்டீங்க? படம் பிடிக்கலையா?” என்று கேட்க,

“படம் பிடிச்சுதான் இருக்கு… ஆனா படத்துல நடிச்ச வில்லனைதான் பிடிக்கல!” என்றாள் மலர் பட்டென்று.

“ஏம்மா! அவன் என்ன பாவம் பண்ணான்?” என்று ஈஸ்வர் கேட்க, அவனை நேர் கொண்டு பார்த்தவள், “நீங்க அதுல வில்லன்தானே… திடீர்னு அப்படி ஹீரோவா மாறினீங்க!” என அவள் சீற…

“ஏய் படம் முழுதும் வில்லன்தானடீ… கிளைமாக்ஸ்ல மட்டும்தானே ஹீரோ?!” என கேட்டான் ஈஸ்வர் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

“அது போறாது?!” என நொடிந்துகொண்டவள், “அந்த குட்டி கிளைமாக்ஸ்ல ஹீரோயினை கல்யாணம் செய்துக்குவீங்களாம்… ரொமான்ஸ் பண்ணுவீங்களாம்… லவ் டயலாக் பேசுவீங்களாம்… கேட்டா கிளைமாக்ஸ்லதானேன்னு கேப்பீங்களாம்!” என்று அவள் பொரிந்து தள்ள… சிரித்தே விட்டான் ஈஸ்வர்.

அதில் அவள் முகம் கோபத்தில் மேலும் சிவந்து போக… “நீ இப்படி கோபப்பட்டால், நான் இனிமேல் ஹீரோவா நடிக்க மாட்டேன்!” என ஈஸ்வர் கிண்டலாகச் சொல்லவும்,

“வேண்டாம்! உங்களை யாரு ஹீரோவா நடிக்க சொன்னாங்க?” என்றாள் மலர் கெத்தாக.

“நீதானடி சொன்ன?” என்றான் ஈஸ்வர் அடக்கப்பட்ட சிரிப்புடனேயே…

“நான் எப்ப சொன்னேன்?” என அவள் வியப்புடன் கேட்கவும், அதற்குள் படம் முடிந்து மக்கள் வெளியே வரத் தொடங்கவே, “நீ வீட்டுக்கு போ! மற்றதை அங்கே வந்து சொல்றேன்!” என்ற ஈஸ்வர், “மல்லிக்! இவளைப் பத்திரமா காரில் ஏற்றிவிடு!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

***

ஈஸ்வர் வருவதற்குக் கொஞ்சம் தாமதமாகவும், அவர்கள் அறையின் ஜன்னலைத் திறந்து வெளிப்புறம் பார்த்தாள் மலர்.

அங்கே போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்தவாறு, இருளை வெறித்துக்கொண்டிருந்த சக்ரேஸ்வரி அவளுடைய கண்ணில் படவும், அவளுடைய பய உணர்ச்சி மேலே எழும்பிக் கலங்க வைத்தது மலரை.

மருத்துவமனையில் சேர்த்த பிறகு, ஒரு மாதத்திற்குள்ளாகவே சோமய்யா தெளிவடைந்திருந்தான். ஆனாலும் மகனை நேரில் பார்த்தால்தான் முழுமையான தெளிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லிவிட, தங்கள் வீட்டின் ‘அவுட் ஹவுஸ்’சிலேயே அவர்களைத் தங்கவைத்தான் ஈஸ்வர்.

அவ்வப்பொழுது இது போன்ற காட்சிகள் கண்ணில் பட்டு, மலரை வேதனை கொள்ள வைக்கும்.

அப்பொழுது அவளுடைய சிந்தனையைக் கலைக்கும் விதமாகக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த ஈஸ்வர்,அவளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே, குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் குளித்து முடித்துத் திரும்ப வந்த பிறகும், அதே நிலையிலேயே அவள் நின்றுகொண்டிருக்கவும், பின்னாலிருந்து அவளை மென்மையாக அணைத்தவன், “என்ன உண்மையாவே நான் அப்படி நடிச்சது உனக்கு கோபமா?” என ஈஸ்வர் கேட்கவும்,

“ப்ச்… இல்ல ஹீரோ! உங்களுக்கு எதாவது ஆகுற மாதிரி ஸீன் இருந்தால் தான் எனக்கு கோபம் வரும். இந்த ஸீன் எனக்கு ஏனோ பார்க்க பிடிக்கல… அவ்வளவுதான்!” என்றாள் மலர்.

“நீ தானே ஹீரோ ஒர்ஷிப் அது இதுன்னு ஒரு தடவ சொல்லிட்டு இருந்த… அதனாலதான் ஹீரோவா நடிக்கணும் என்கிற எண்ணமே எனக்கு வந்தது!” என ஈஸ்வர் சொல்லவும்… தான் எப்பொழுது அப்படிச் சொன்னோம் என யோசித்தாள் மலர்.

அதை புரிந்துகொண்டவனாக, “உன் ஃப்ரெண்ட்ஸ் வெச்சிருக்கும் விவசாய பண்ணைக்குப் போனோமே… அன்னைக்கு… நீ சொன்ன இல்ல!” என அவன் விளக்கமாகச் சொல்லவும்,

ஒரு நொடி யோசித்தவள், முகம் மலர, “ஐயோ! நான் என்ன சொன்னேன்… நீங்க என்ன புரிஞ்சிட்டு இருக்கீங்க?” என்று கேட்டுவிட்டு,

“நீங்க சொன்னதைத்தான் சொன்னேன் ஹீரோ!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

இதைத்தான் நான் அன்னைக்கு மீன் பண்ணது…

உங்களோட பேஷன் ஆக்ட்டிங் இல்லையே!

ஸோ… உங்களுக்கு பிடிச்ச விவசாயத்தை செய்யுங்கன்னு சொன்னேன்!” என்றாள் மலர் விளக்கமாக.

“ப்ச்! அதை விட்டு நான் ரொம்ப தூரமா வந்துட்டேன் மலர்!

மறுபடியும் என்னால அதுக்குள்ள போக முடியும்னு தோணல!

எனக்கு ஹீரோவா நடிக்க முதலிலிருந்தே வாய்ப்புகள் வந்துட்டுதான் இருந்தது.

பட்… நல்ல ரோல் அமையல! நான் விரும்பற மாதிரிசான்ஸ் இப்பதான் கிடைத்தது…

ஸோ… பண்றேன்…

இப்ப இதை விட முடியாது மலர்… புரிஞ்சிக்கோ!” என்றான் ஈஸ்வர்.

“இல்ல ஹீரோ! நீங்க நல்ல படமா சூஸ் பண்ணி நடிங்க… கூடவே விவசாயமும் பண்ணுங்க!

இது சம்பந்தமான ரிசெர்ச் பண்றவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.

புது டேக்னிக்ஸ் யூஸ் பண்ணி, இயற்கை விவசாயம் பண்ணலாம்!

உங்களை மாதிரி செலிப்ரிடீஸ் இதுல ஆர்வமா ஈடுபட்டால், உங்களைப் பார்த்து நிறையப் பேர் இதில் இன்வெஸ்ட் பண்ணுவாங்க!

அதுவும் அங்க அங்க உங்களுக்கு ரசிகர் மன்றம் வேற கிளம்பிட்டு இருக்கே!

அவங்களும் இதை பார்த்துட்டு செய்வாங்க இல்ல!

அதுதான் நமது பூர்விக நிலமெல்லாம் மறுபடியும் நம்ம கைக்கே வந்துடுச்சு இல்ல!

அதிலிருந்தே ஆரம்பிக்கலாமே?!” என நீளமாகப் பேசி முடித்தாள் மலர்.

“நீ சொல்லிட்ட இல்ல செஞ்சிடுவோம்!” என்று முடித்துக்கொண்டான் ஈஸ்வர்.

நாளுக்கு நாள், அவளிடம் இயல்பாகவே இருக்கும் துருதுருப்பு முற்றிலும் மறைந்துபோய்,

அவள் எதோ சிந்தனையிலேயே இருப்பது போல் தோன்றியது ஈஸ்வருக்கு.

அவனுக்குக் காரணமும் புரியவில்லை. கேட்டாலும் அவளிடம் பதில் இல்லை.

மலருக்கு எட்டுமாதங்கள் முடிந்திருந்த நிலையில், அவன் படப்பிடிப்பிற்காக சில தினங்கள் லண்டன் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

எப்படியும் அவளுடைய பிரசவத்திற்கு முன்பாக வந்துவிட முடியும் என்ற காரணத்தினால், வேறு வழி இல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டவன், அதை அவளிடம் சொல்லவும் பதறினாள் மலர்.

“இல்ல ஹீரோ! நமக்கு இங்க பாதுகாப்பே இல்ல! ஜீவனைக் கடத்தினது போல, நம்ம பாப்பாவையும் கடத்தினாங்கன்னா என்ன செய்யறது?

அன்னைக்கு மட்டும் அவனை நான் கண்டுபிடிக்கலன்னா… டிப்பு மாதிரி ஜீவனும் நமக்கு கிடைக்காமலேயே போயிருப்பான்!” எனத் தன்னிலை மறந்து அரற்றினாள் மலர்.

“நம்ம குடும்பத்தில் இருக்கறவங்க எல்லாரோடவும் சேர்த்து நம்ம குழந்தையை பார்த்துக்க நாம ரெண்டு பேரும் இருக்கோம் மலர்! ஏன் இப்படி பேசுற” என ஈஸ்வர் கேட்கவும்,

“இல்ல காணாமல் போனால் யாராலயும் கண்டுபிடிக்கமுடியாது. ஜெய் கூட ஏதேதோ சொன்னானே

எனக்குப் பயமா இருக்கு… ரொம்ப பயமா இருக்கு!” என அவள் புலம்பவும்,

அவள் நேரில் பார்த்து உணர்ந்த நிஜம், தனது பிள்ளையை நினைத்து பயம் கொள்ளச் செய்து அவளைக் கோழையாக மாற்றியிருந்தது புரிந்தது அவனுக்கு.

அவளைச் சமாதானம் செய்ய முடியாமல் தவித்தவன், ஒரு கட்டத்தில், “நான் என்ன செய்தால் உனக்கு இந்த பயம் போய் நம்பிக்கை வரும் மலர்?” என அவன் கேட்கவும்,

“டிப்புவை கண்டுபிடிச்சு அவங்க அம்மா கண் முன் நிறுத்தினால், நான் நம்புவேன் ஹீரோ!” எனச் சொல்லி அவனை அதிரவைத்தாள் மலர்.

தன்னம்பிக்கை இழந்து, அவள் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையையும் இழந்து அவள் இப்படி பேசவும், ‘சுர்’ என கோபம் ஏற, வார்த்தையை விட்டான் ஈஸ்வர்.

“நிச்சயமா நீ சொன்னதை செய்யறேன் மலர்! அதன் பிறகுதான் நம்ம பிள்ளையை என் கையில் தூக்குவேன்!” என்று சொல்லிவிட்டு, “நீ எப்பவும் போல தைரியத்துடன், இருந்தால் மட்டுமே என்னால நிம்மதியா இருக்கமுடியும்!

ஸோ… இனிமேல் நீ இப்படி இருக்கக்கூடாது!

நம்ம குழந்தையை நல்லபடியா இந்த உலகத்துக்கு கொண்டு வரவேண்டியது உன்னோட பொறுப்பு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் ஈஸ்வர்.

பின் ஜெய்யை நேரில் சென்று சந்தித்தவன், மலருடைய நிலைமையை அவனிடம் விளக்கியவன், “நான் வர வரைக்கும் அவளை எமோஷனலி சப்போர்ட் பண்ணு ஜெய்!” என சொல்லிவிட்டு, மலரை அவளுடைய பிறந்த வீட்டில் விட்டுவிட்டு, அதன் பிறகே லண்டன் சென்றான் ஈஸ்வர்.

முடிந்த வரையில் மலரை நேர்ல அல்லது கைபேசியிலோ தொடர்பு கொண்டு, அவளுக்கு தைரியம் அளித்தான் ஜெய்.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளுடன் பேசிய ஈஸ்வர், லண்டன் படப்பிடிப்பு முடித்து அவன் திரும்புவதாக சொல்லியிருந்த நாளில் அவனால் வரமுடியாமல் போகவும், ‘வேலை காரணமாக அவன் திரும்ப வர இன்னும் சில தினங்கள் ஆகலாம்’ என அவளுக்கு வாட்சாப் தகவலாக அனுப்பியிருந்தான்.

மேற்கொண்டு அவனைத் தொடர்புகொள்ளவே இயலாத வகையில் அவன் உபயோகிக்கும் கைப்பேசி, அணைத்து வைக்கப்பட்டிருந்து.

அவனுடன் சென்ற தமிழையுமே தொடர்புகொள்ள முடியவில்லை.

கொடுக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே, மலருக்குப் பிரசவ வலி வந்துவிட, அவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஜெய்யும் உடனே அங்கே வந்து சேர்ந்தான்.

டிப்புவை கண்டுபிடிக்காமல் குழந்தையைக் கையில் தூக்க மாட்டேன் எனச் சொல்லிச் சென்றவன், பிறந்த உடன் குழந்தையைப் பார்க்கக் கூட அருகில் இல்லையே என்ற ஏக்கம் மனதில் தோன்றினாலும்,’நம்ம குழந்தையை நல்லபடியா இந்த உலகத்துக்குக் கொண்டு வரவேண்டியது உன்னோட பொறுப்பு’ என்று அவன் சொல்லிச்சென்ற வார்த்தை மட்டும் மனதில் நிற்க, மருத்துவருக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்து, அவளுடைய மன உறுதியால், அழகாக அவர்களது மகளைப் பெற்றெடுத்தாள் மலர்.

குழந்தையின் தொப்புள் கோடியை வெட்டி, “கங்கிராட்ஸ் மலர். உனக்கு மகாலட்சுமி வந்திருக்கா!” என்று சொல்லிக்கொண்டே, அந்த புத்தம் புது ரோஜா செண்டை அவளது மார்பின் மேல் மருத்துவர் கிடத்த… கண்களை உருட்டி, அந்த மழலை தலையை திருப்பவும், மகிழ்ச்சி கரைபுரண்டு ஓட, ஈஸ்வர் அவளைப் பார்ப்பது போன்று அவளது உள் உணர்வுக்குத் தோன்றியது.

அடுத்த நொடி குழந்தைக்கு நேராக நீண்ட அவனுடைய கரத்தை பார்த்தவள், ஆனந்தமாக அதிர்ந்தாள்.

அருகில் இருந்த செவிலியர் குழந்தையை ஈஸ்வருடைய கரங்களில் கொடுக்கவும்…

“டிப்பு கிடைச்சுட்டானா ஹீரோ!” என அந்த களைப்பிலும் மலருடைய குரல் தெளிவாக ஒலிக்க…

மகளை மார்போடு அணைத்தவன், அப்படியே குனிந்து மனைவியின் நெற்றியில் இதழைப் பதித்து, “நாங்கள்லாம் சொல்றதைத்தான் செய்வோம்! செய்யறதத்தான் சொல்லுவோம்!” என்றான் கெத்தாக.

இரட்டிப்பு மகிழ்சியில் மலரை பீடித்திருந்த துயரமெல்லாம் காற்றோடு கரைந்தது.

error: Content is protected !!