Enge En Punnagai–EPI 6 (Epilogue)

202926025_883159952271340_5635091821604340674_n-010fd76a

இறுதி அத்தியாயம்

ப்ரௌனியில் அழகாய் மேரி கிரிஸ்மஸ் என எழுதிக் கொண்டிருந்த காமினியை அழுகை சத்தம் திசை திருப்பியது. மெல்லிய புன்னகையுடன்,

“வரேன்மா குட்டி! கிவ் மீ எ செகண்ட்” என சொல்லிக் கொண்டே கையை கழுவ ஆரம்பித்தாள்.

ஹாலில் தனது க்ரீபில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத ஜீனியர் மினிதான் பசிக்கு அழுதுக் கொண்டிருந்தாள்.

“பேபிக்கு பசிச்சிடுச்சா? தோ அம்மா மம்மம் குடுக்கறேன்டா குட்டிம்மா!” என பேசிக் கொண்டே, மகளை அள்ளிக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

அமர்ந்த உடனே தன் தாயின் சட்டையைப் பிடித்து இழுத்தாள் குட்டி. சீக்கிரம் என்பது போல காமினியின் மார்பை தன் பிஞ்சுக் கரம் கொண்டு அடித்தாள் சின்னவள்.

புன்னகையுடன்,

“அப்பா மாதிரியே பசி வந்துட்டா பத்தும் பறந்துடும் உனக்கு!” என செல்லமாய் திட்டியப்படியே தன் மகவுக்கு பசி ஆற்றினாள் காமினி.

மெல்லியக் குரலில் பாடியபடியே அமுதூட்டிக் கொண்டிருந்தவள், கதவு திறக்கும் ஓசையில் புன்னகையுடன் நிமிர்ந்துப் பார்த்தாள். உள்ளே வந்துக் கொண்டிருந்தான் கிருபாகர். இறுக்கமாய் இருந்த முகம் மனைவியையும் அவள் கையில் இருந்த மகளையும் பார்த்த நொடி மெல்ல மலர்ந்தது. பேக்கிங் செய்ததால் வீடெல்லாம் பரவி இருந்த வாஅசமும், குழந்தைகள் இருக்கும் வீட்டில் வரும் ஒரு சுகந்தமான மணமும் நாசியை நிறைக்க ஆழ்ந்து மூச்செடுத்து விட்டவன், வேலையிடத்து ஸ்ட்ரெஸ்சை வாசலிலேயே கழட்டி வைத்து விட்டு வந்தான்.

தகப்பனின் வருகையை உணர்ந்துக் கொண்ட, வாஹினி பால் குடிப்பதை நிறுத்தி விட்டு இவனை திரும்பிப் பார்த்து மழலையில் என்னென்னவோ சொன்னாள்.

முகம் புன்னகையில் விகசிக்க,

“வேலை எல்லாம் நல்லபடி முடிஞ்சது ஹனிக்குட்டி! அப்பா லஞ்சுக்கு ப்ரைட் ரைஸ் சாப்பிட்டேன். டீ இனிமேத்தான் குடிக்கனும்! இப்போ போய் குளிச்சிட்டு வந்து உன்னைத் தூக்கி வச்சிக்கறேன்” என மகள் அன்றைய நாள் எப்படி போனது என கேட்டது போல பதில் அளித்தப்படியே ரூமுக்குப் போனவன், திரும்பி வந்து காமினியின் கன்னம் கிள்ளி,

“ஐ மிஸ் யூ மம்மி” என சொல்லி சென்றான்.

“ஐ மிஸ் யூ டூ டாடி” என முணுமுணுத்தாள் காமினி.

இருவருக்கும் இன்னும் கூட அடிக்கடி முட்டிக் கொள்ளும். ஆனாலும் பேசி, பிரச்சனையைத் தீர்த்து சமாதானமாகிக் கொள்வார்கள்.

வீட்டில் இருந்தப்படியே “மினி பேக்கரி” என ஆரம்பித்து கேக், ப்ரௌனிஸ், ச்சீஸ் தார்ட் என ஆர்டர் வரும் போது செய்து கொடுத்து கொஞ்சமாய் பணம் ஈட்டுகிறாள் காமினி. பேக்கிங்கில் ஆர்வம் இருந்ததால் ஆன்லைனிலேயே கோர்ஸ் எடுத்துப் படித்து, வியாபாரத்தையும் ஆன்லைனிலேயே செய்கிறாள். ஆரம்பத்தில் ஆர்டர் பிடிக்க கஸ்டப்பட்டவள், அப்பார்ட்மேண்ட் வளாகத்தில் ஆனுவல் டேயின் போது ப்ரீ பூத் போட்டு சாம்பிள்கள் வழங்கி மார்க்கேட்டிங்கை ஆரம்பித்தாள். ஒன்று இரண்டு என ஆர்டர்கள் வந்தது. வாங்கியவர்களின் பேரை டேக் செய்து, கேக் போட்டோவையும் பேஸ்புக்கில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக வலைதளைத்தை தனது முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொண்டாள் இவள்.

கேக் செய்தாள் மட்டும் போதாது, அதை நேக்காக போட்டோ பிடிக்கவும் தெரிய வேண்டும்! போட்டோகிராபியில் ஆர்வம் கொண்டிருந்த கிருபாகரை அந்த வேலைக்கு சேர்த்துக் கொண்டாள். தனது சேவைக்கு பணமாய் வாங்கிக் கொள்ள மாட்டேன் என அடம் பிடித்தவனுக்கு அவனுக்குப் பிடித்த வழியிலேயே செட்டில் செய்தாள் இவள்.

இப்பொழுது ஓரளவு பணவரவு இருந்தது காமினிக்கு. அதோடு மனதுக்குப் பிடித்ததை செய்கிறோம் எனும் திருப்தியும் இருந்தது. கேக் செய்வதை வீடியோவாக எடுத்து, யூடியூப்பிலும் அப்லோட் செய்ய ஆரம்பித்தாள். பொழுது ரெக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது அவளுக்கு.

குளித்து முடித்தவன், தானே சவர்க்கார நுரையைக் கழுவி விட்டு, துவைக்கும் துணிகளை கூடையில் போட்டுவிட்டு வந்தான். கிச்சனுக்குப் போய் டீ கலக்கிக் கொண்டவன், வீட்டுக்காக செய்து வைத்திருந்த ப்ரௌனியை ஒரு தட்டில் போட்டு எடுத்து வந்தான். காமினிக்கு ஒரு வாய் ஊட்டியவன், பால் அருந்திக் கொண்டிருக்கும் மகளின் கன்னத்தில் பச்சக்கென முத்தமிட்டான். அவர்கள் அருகிலேயே தரையில் அமர்ந்துக் கொண்டவன், அன்று என்ன நடந்தது, என்ன செய்தான், டீமில் என்ன சேட்டை நடந்தது என பேசிக் கொண்டே டீ அருந்தினான். மகளை ஒரு கையால் அணைத்துப் பிடித்திருந்த காமினி, இன்னொரு கையால் கணவனின் தலையைக் கோதிக் கொடுத்தாள்.

பால் அருந்தி முடித்த குட்டி, தகப்பனை நோக்கிக் கையை நீட்டினாள். அழகாய் மகளைத் தூக்கிக் கொண்டான் கிருபாகர். இருவரும் கொஞ்சிக் கொள்ள, அந்த நேரம் வீடியோ கால் செய்தார் சிவகாமி.

“உன் பாட்டிம்மாவுக்கு நான் கொஞ்சனா மட்டும் மூக்கு வேர்த்துடுமே!” என்றவன் போனை ஆன் செய்தான்.

“டேய், எட்டப் போடா! என் பேத்திய பார்க்கத்தான் போன் போட்டேன் உன்னை இல்ல!’

“பேத்திய பார்க்கனும்னா நான் வேலை முடிஞ்சு வர முன்னுக்கே போன் அடிச்சிருக்கனும்! இப்போ அடிச்சா நான் தான் எடுப்பேன்” என தன் தாயிடம் வம்பு வளர்த்தான் கிருபாகர்.

ஆறு மாதம் ஆகிவிட்டது, இனி தன் குடும்பத்தை தானே பார்த்துக் கொள்வேன் என போன வாரம்தான் அன்னையை ஊருக்கு அனுப்பி இருந்தான். தனியாய் கிடந்துக் கஸ்டப்படுகிறாரே தந்தை என இவன் பாவப்பட, பேத்தியைத் தன்னிடம் இருந்துப் பிரித்து விட்டான் மகன் என செம காண்டில் இருந்தார் சிவகாமி.

இருவரின் அக்கப்போரையும் சிரித்த முகத்துடன் பார்த்திருந்தாள் காமினி.

“என் செல்லப் பவுனு! பாட்டி தங்கம்! என்னடாம்மா செய்யறீங்க? பாட்டி மிஸ்ஸூ யூ, நீ பாட்டிம்மாவ மீஸ்ஸூயூவா இல்லையா?” என கேட்ட சிவகாமியின் குரலில் துள்ளினாள் குட்டித் தங்கம்.

அவன் கையில் இருந்த போனைப் பறித்த காமினி, போன் ஸ்டாண்டில் வைத்து மகளிடம் போனின் திரையைக் காட்டினாள். குட்டி, ஸ்கிரீனில் தெரிந்த தன் பாட்டியைப் பிடிக்க முயல, கண்கள் கலங்கி விட்டது சிவகாமிக்கு.

இவர்கள் இருவரும் சிவகாமி கொஞ்சுவதையும் குட்டி ங்கா ங்கா என பதில் சொல்வதையும் புன்னகையுடன் பார்த்திருந்தனர். மெல்ல நகர்ந்து காமினியின் மடியில் சாய்ந்துக் கொண்டான் கிருபாகர். அவன் சொல்லாமலே தலையைப் பிடித்து விட்டாள் காமினி. சண்டை சச்சரவுகள் தான் உறவுகளை இன்னும் இறுக்குமாமே! இங்கேயும் உருகி இறுகித் தான் போனார்கள் இருவரும்.

எங்கே என் புன்னகை என வாடிக் கிடந்தவளுக்கு, உன் புன்னகை உன்னிடம் தான். அதை வாட விடுவதும், மலர விடுவதும் உன் கையில் மட்டும்தான் என அழகாய் கற்றுத் தந்தது வாழ்க்கை.

“சரி, சரி! ரெடியா மூனு பேரும்?” எனும் குரலில் காமினி கீழே அமர, குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டான் கிருபாகர். போனை ஸ்டாண்டோடு மேசையில் வைக்க, உப்பைக் கையில் வைத்துக் கொண்டு ரெடியாகி இருந்தார் சிவகாமி.

போன் வழியாக,

“ஊரு கண்ணு உறவு கண்ணு

நாய் கண்ணு நோய் கண்ணு

நல்ல கண்ணு நொள்ள கண்ணு

கண்ட கண்ணு முண்ட கண்ணு

கரிச்சுக் கொட்டும் எல்லா கண்ணும்

பட்டுப் போக”

என சொல்லி சுற்றிப் போட்டார் சிவகாமி.

சிரித்த முகமாக அமர்ந்திருந்த தன் மகனின் குடும்பத்தைப் பார்த்தவருக்கு தன் கண்ணே பட்டுவிடும் போல இருந்தது.

“யப்பா முருகா! புள்ளைங்களா நல்லா சந்தோஷமா வாழ வைப்பா!” என மனமுருக பிரார்த்தித்துக் கொண்டார் சிவகாமி.

 

(இது நம் கதை! உலகெங்கும் வாழும் இல்லத்தரசிகளுக்கு இக்கதை சமர்ப்பணம்)

 

முற்றும்.