Ennai Ko(Ve)llum Vennilavei – 19

Ennai Ko(Ve)llum Vennilavei – 19

~19~

ஆதிக்கின் பார்வை இரசனையாய் மதியின் மீது பட்டு மீள, அதைச் சரியாய் பார்த்துக் கண்ணடித்து சிரித்தான் விகாஷ்..

‘இவனிடம் போய் மாட்டிக் கொண்டோமே..’ என நினைத்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அதே வீராப்போடு மாடி ஏறியிருந்தான்..

அண்ணன் அந்தப் பக்கம் சென்றதும், ராஜும் மாடியேறி விட..

ரேகாவிற்கு ராஜின் விலகல் அனைத்தையும் மீறி துயரத்தை அளித்தது.. மதியோ ஆதிக்கை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கதையளந்து சிரித்தாள்..

சற்று நேரத்திற்கெல்லாம் விகாஷும் மித்ராவும் நாளை மாலை வருவதாய் விடைபெற்றுக் கிளம்பிவிட, ரேகா உணர்ந்த தனிமையை மதியழகி அழகாய் விரட்டி ஆக்கிரமித்திருந்தாள்..

வேணிக்கு அவளது குழந்தை தனமான மொழி பிடித்துவிட்டாலும் கொஞ்ச நாளுக்கு மாமியார் கெத்தை விட்டுவிடாமல் இருக்க அமைதியாய் தனது அறைக்குள் நுழைந்துவிட்டார்.

வந்த சொந்த பந்தங்கள் அனைத்தும் மண்டபத்தோடு கிளம்பியிருக்க, வீட்டில் இவர்கள் மட்டும் தான் இருந்தனர்.
சிறிது நேரத்தில் உணவகத்தில் இருந்து உணவுகள் வந்திருக்க, ரேகாவையும் மதியையும் விட்டு ராஜையும் ஆதிக்கையும் அழைத்து வரச் சொன்னவர், உணவு மேஜையில் அனைத்தையும் எடுத்து வைக்கத் துவங்கினார்.

மதி வேகமாய் மேலே ஏற, ரேகாவிற்கோ கால்கள் பின்னியது..

ஆதிக்கின் அறையும் ராஜின் அறையும் பக்கம் பக்கம் தான்..ஆனால் மேலே வந்துவிட்ட மதிக்கு மூன்று அறையில் அவனது அறை எதுவென தெரியாமல் உதட்டைப் பிதுக்கி ரேகாவைப் பார்க்க..

ரேகா ஆதிக்கின் அறையை சுட்டிக் காட்டி உள்ளே போகச் சொன்னாள்..

அவளது விழியசைவை புரிந்து சாதாரணமாய் மதி உள்ளே சென்றுவிட, ராஜின் அறை வாயிலில் நின்ற ரேகாவிற்கு கதவின் கைப்பிடியைத் தொடுவதற்கே மூச்சடைத்தது.

அறைக்குள் சென்ற மதிக்கு ரேகாவிற்கு ராஜின் அறை தெரியுமா என்ற சந்தேகம் வர, லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த ஆதிக்கை நெருங்கியவள்..

“ஆதிக்..ராஜ் ரூம் எங்கயிருக்கு..?” என்றாள்..

அமைதியாய் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென கேட்ட மதியின் குரலில் நெஞ்சைப் பிடித்தவன், தன்னையறியாமல் பக்கத்து ரூம் என்றிருந்தான்..

வந்த வேகத்தில் வெளியே வந்த மதி பார்க்க, ரேகாவோ கதவைத் திறக்கவா வேணாமா என யோசித்துக் கொண்டிருந்தாள்..

“ரேக்ஸ் அது தான் ராஜ் ரூம்..” திடுமென கேட்ட அவளின் சத்தத்தில் ரேகாவும் நெஞ்சைப் பிடிக்க, அவளை விசித்திரமாகப் பார்த்த மதி..

அவளை முந்திக் கதவைத் திறந்து, “ராஜ்…ரேக்ஸ் உன் ரூம் தெரியாம இருந்தா அதான் அவளை பத்திரமா கூட்டி வந்தேன்..” என்றவளின் கத்தலில் அங்கே ராஜும் நெஞ்சைப் பிடித்து கட்டிலில் இருந்து எழுந்துவிட்டான்..

அவனது செய்கையையும் விசித்திரமாகப் பார்த்த மதி, “பை ரேக்ஸ்..பை ராஜ்..” என்றவள் கதவைச் சாற்றி ஆதிக்கின் அறைக்குள் நுழைந்துவிட்டாள்..

‘பத்த வச்சுட்டியே பரட்ட..’ மனதிற்குள் நினைத்த ரேகா தலையை மேலும் தரையில் புதைத்துக் கொள்ள..

மதியின் பேச்சில் இருந்து வெளி வந்த ராஜ் ரேகாவின் புறம் திரும்பி, “என்ன டி..?” என்றான் கர்ஜனைக் குரலில்..

திரட்டி வைத்திருந்த தைரியம் மொத்தமும் உடைய ஏற்கெனவே தன்னை இவன் வேண்டாம் என்றவன்..தன்னை இவன் காதலிக்கவில்லை என்ற பல எண்ணங்கள் மேலெம்ப சொந்தமில்லா பார்வையை அவன் நோக்கி வீசியவள்,
“இந்த டி போடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்..” இடுப்பில் கை வைத்து அவள் சொல்ல

காலையில் இருந்து தனது காதலைப் புரிந்து கொள்ளாமல் அவளது அண்ணன் பார்த்த மாப்பிள்ளை என்று தெரிந்து தன்னைக் கல்யாணம் செய்து கொண்டாள் என்பதில் அவனுக்குக் கோபமிருக்க இதில் இவள் எதிர்த்து பேசவும், கோபமாய் அவளது முன்னே வந்தவன் முழங்கையைப் பிடித்து தனது முன்னால் நிறுத்தினான்

பிடித்த கையை விடாமல், “நான் அப்படி தான் டி சொல்லுவேன்.. அது எப்படி டி லவ் பண்ணவன விட்டு இன்னொருத்தனை உன்னால கல்யாணம் பண்ண முடிஞ்சது..” கோபமாய் அவன் கேட்க

“உன்னால எப்படி எனக்கு லவ்வ சொல்லிட்டு இன்னொருத்திக்குத் தாலி கட்ட முடிஞ்சதோ அப்படி தான்..” என்றவளின் பதிலில் அவளது கையை உதறி பால்கனிக்கு விரைந்தான்..

இருவரின் மனதில் இருப்பது இது தான்..தனது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதில் தொடங்கி அவன் உச்சத்தில் நிற்க, தன்னை விடுத்து அவன் இன்னொருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ள வந்தான் என்பதில் நின்றது அவளது கோபம்..

அதாவது காதலில்லாமல் வீட்டில் பார்த்தவரை திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை போன்ற பிம்பம் இருவரின் இடையில் விழுந்திருந்தது.

உண்மை தான் தனது காதலில் இருவரும் நிலையாய் நிற்காமல் இருந்ததே இதற்குக் காரணம்…காதல் வேண்டும் என நினைத்த இருவருமே உரிய நேரத்தில் காதலை பரிமாறத் தவற விட்டிருந்தனர்..

பால்கனிக்கு போய் அவன் நின்றதும் அவனது பின்னாடியே சென்றவள், “அத்தை சாப்பிட கூப்பிட்டாங்க..” அவனது முதுகை வெறித்துப் பார்க்க

வேகமாய் திரும்பியவன், “என்னை மன்னிச்சிடு..” என்றான் கடினமான குரலில்
அவனது இப்பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளது முகத்தில் இருந்து கண்டு கொண்டவன் தானே தொடர்ந்து,

“உண்மையா சொல்லனும்னு கடைசியா உன்கிட்ட பேசிட்டு வந்த கோபத்துல கல்யாணம் பண்ணிக்க போனேன்..என்னால நிம்மதியா இருக்க முடியல, அண்ணாவுக்கு ம்க்கும் ஆதிக் சார்க்கு நிச்சயம் முடிந்ததும் என்னோட நிச்சயத்தை நிறுத்தனும்னு நான் நினைக்கும் போது தான் நீ வந்த..

சத்தியமா சொல்றேன் நீ அந்த இடத்துல இல்லனா நேத்து அந்த நிச்சயம் நடந்திருக்காது..” அவனது பதிலில்
“ஏன் நேத்து நிறுத்தனும் அதுக்கு முன்னமே நிறுத்தியிருக்கலாமே.. சும்மா கதை விடுறான்..” மனசாட்சி அவனுக்கு எதிராக குரல் கொடுக்க அதை சரியாய் கண்டு கொண்ட ராஜ்..

“நீ நினைக்குற மாதிரி என்னால முன்னமே நிறுத்தியிருக்க முடியும் ஆனால் என்னோட சேர்ந்து அண்..ஆதிக் சார் கல்யாணமும் பிரச்சனையா ஆகிருக்கும்..ஆனா நீ கல்யாணத்தை நிறுத்த நினைச்சியா..? உண்மையா நீ என்னை காதலிச்சிருந்தா நீ என்னை தேடி வந்திருப்ப..” என்றவன் இப்போது அறையை விட்டு வெளியேறி இருந்தான்..
ராஜ் கூறியவை அனைத்தும் அவளது செவிகளில் ரிங்காரமிட, அசையாமல் அதே இடத்தில் மடிந்து அழத் துவங்கியவளுக்கு..

“அப்போ நான் உண்மையா இவர காதலிக்கலையா..?” என்றவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை…
அவளிடம் இவ்வளவும் சொன்ன ராஜிற்கு நிம்மதி என்பது கொஞ்சமும் இல்லை…அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை வேறு யாரேனும் இருந்தால் என்ன செய்திருப்பாள்..? என்பதில் அவனது காதல் அமிழ்ந்து போக வெற்றிடம் நிரம்பி அதில் உணர்வு என்பது சிறிதும் இல்லை..

அன்னையின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன் அறைக்குள் நுழைந்து, “அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க..போய் மூஞ்ச கழுவிட்டு வா..சாப்பிட போகலாம்..” என்றான் கட்டிலில் அமர்ந்து..

அவளது அழுது வீங்கிய விழிகள் அவனுக்குக் கஷ்டத்தை கொடுத்தாலும் தன்னைவிட்டு போக நினைத்தால் என்பதே அவனது முன்னுக்கு நின்றது..

அமைதியாய் அவனை ஒரு பார்வை பார்த்தவள் கிளம்பி வந்து அவனுடன் கீழிறங்கி சென்றாள்..
ரேகாவை உள் அனுப்பிவிட்டு ஆதிக்கின் அறைக்குள் நுழைந்த மதி, “சாப்பிட போகலமா…எனக்கு பசிக்குது..” மறுபடியும் திடுமென குரல் கேட்கவும் அவன் அடித்துபிடித்து நிமிர்ந்து பார்க்க, அவளோ அவனது அவசரத்தில் திருதிருவென விழித்தாள்..

“அடியேய் வரும் போது கதவை தட்டிட்டு வரமாட்டியா டி..”தன்னையறியாமல் அவன் ‘டி’ என அழைத்திருக்க..

“என்னது டி யா…? இன்னொரு முறை டி சொன்ன நான் டா சொல்லுவேன் பார்த்துக்க..” என்றவள் இப்போது அங்கிருந்த இருக்கையில் ஏறி அவனது முகத்திற்கு நேராய் தன் முகம் இருக்குமாறு நின்றிருந்தாள்..

இருக்கையில் ஏறி நின்றும் கூட தன்னைவிட கொஞ்சம் குள்ளமாய் இருக்கும் மதியை ரசித்து சிரித்தவன், “ஏய் அரைக்கா பிடி சைஸுல இருந்துட்டு…ஹா ஹா..என்னை மிரட்டுறீயா நீ..ஹா ஹா..” ஆதிக் மெல்லியதாய் சிரிக்கும் போதே அவனை ஆவென பார்ப்பவளுக்கு இன்று அவன் ஆரவாரமாய் சிரிக்க, கேட்கவா வேண்டும்,
விழியகலாமல் அவனது சிரிப்பை ரசித்தவளை அவன் புருவம் உயர்த்தி என்னவென கேட்டு வைக்க, “ரொம்ப அழகா இருக்க நீ..” என்றவளின் பாராட்டில் அவனது முகம் செந்தனலாய் மாறியது..

ஆண்களின் வெட்கம் எவ்வளவு அழகு என்பதை ரசித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்..ஆனால் வெட்கத்தை பற்றி மருந்துக்கும் அறியாதவளின் முன் அவனது வெட்கமும் வீண் என்பதற்கு ஏற்றாற் போன்று,
“உன் முகம் பிங்கிஸா ஆகி இன்னும் அழகா தெரியுற..” என்றவள் இப்போது அவனது முகத்தை வருட கையை உயர்த்தியிருக்க..

‘நான் பண்ண வேண்டியத அவா பண்ணுறா..அவா பண்ண வேண்டியத நான் பண்ணுறேன்’ என்றவனின் இதழில் அழகான குறுநகை உறைந்தது..

உயர்ந்த அவளது கைகளை தனது கை கொண்டு தடுத்தவன், “எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு..நீ போய் சாப்பிடு நான் அப்புறமா சாப்பிடுறேன்..” என்றவனிடம்

“ஓகே..நீ வேலையை பாரு..நான் உன்கூடவே சாப்பிட வரேன்..எனக்கும் இப்போ பசிக்கல..” என்றவள் பாந்தமாய் அவனது கட்டிலில் இடது கை தலையை தாங்க படுத்தாள்..

அவளது இயல்பு போன்ற சில செய்கையில் ஆதிக்கின் இதயம் நின்று துடித்தது என்னவோ உண்மை தான்..எதையும் கண்டுகொள்ளாமல் அவளுக்கு பிடித்தது போல் அவள் இருந்தாள்..

அவள் படுத்த பத்து நிமிடத்தில் அவனது அறையின் இன்ட்டர்காம் ஒலிக்க அதை எடுக்க எழுந்தவனை தடுத்தவள்..
“நீ வேலை பாரு..” என பேசியை எடுத்து காதுக்கு கொடுத்து

“ஆண்ட்டி..அவருக்கு வேலையிருக்காம்..நீ சாப்பிடுங்க நான் அவர் கூட சாப்பிடுறேன்..” மதியின் பேச்சில் நிம்மதி அடைந்த வேணி சந்தோசத்துடன் அழைப்பை வைக்க, ஆதிக்கிற்கு அவளின் குணம் முதலாய் ஆழப் பதிந்து போனது..

அந்நொடி சந்தோசத்தை முற்றிலும் அனுபவித்த வேணிக்கு இனி தான் மகனின் வாழ்க்கை முற்றிலும் தொலைய போவது தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

“ஆதிக்..இங்க பாரு..” மதியின் கிசுகிசுக்கும் குரலில்

கணினியில் இருந்து பார்வையை எடுத்தவன் அவள் மீது பதித்து, “சொல்லு..” என்க

“ரேகாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையோ..?” என்றவளை ஏன் கேட்குற? என்பது போல் அவன் பார்த்து வைக்க

“இல்ல…ரேகா அழுதுட்டு இருந்தா அப்புறம் ராஜ் ரூம்க்கு போக பயந்துட்டு வேற இருந்தாளே..”

“அப்படியெல்லாம் இல்ல…ரேகா ராஜை லவ் பண்ணுனா..சொல்ல போன அவங்களுக்கு லவ் கம் அரேஞ் மேரேஜ் தான்..” என்றவன் மார்பின் குறுக்கே கைகளை கட்ட

“அப்போ நம்மல மாதிரி இல்லன்னு சொல்லுங்க பாஸ்..” என்றவள் இருக்கையில் சம்மனமிட்டு அமர்ந்தாள்..

“நம்மல மாதிரி இல்லன்னா..?”

“நம்மல மாதிரி இல்லன்னா..லவ்வும் இல்லாம பிடித்தமும் இல்லாம விருப்பமும் இல்லாம..” என்றவளை கை நீட்டி தடுத்தவன்

“சோ..” என்றவனுக்கு புரிந்தது அடுத்து அவள் எதில் வந்து நிற்கப் போகிறாள் என்பது..

“சோ..நாம பிரிஞ்சிடலாமே..” கண்ணைச் சிமிட்டி அவள் வினவ

“நாம பிரிஞ்சிடலாம்னா…என்னால பிரிய முடியாது நீ வேணா எப்படியோ போ..” என்றவனை அவள் முறைத்து பார்த்ததும்

“மதியழகி நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா..?” சின்ன சிரிப்போடு அவன் கேட்க

“அதுக்கு முன்னாடி நான் உங்க கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா..?” என்றவளுக்கு அவன் சரியென்பதாய் தலையசைத்ததும்

“எதுக்கு என்ன மதியலகி மதியலகின்னு கூப்பிடுற..உனக்கு பொண்டாட்டிய செல்லமா கூப்பிட தெரியாதா..?” என்றவளின் இயல்பான கேள்விக்கு அவனது முகத்தில் அழகாய் ஒரு சிரிப்பு தோன்றி மறைந்தது..

“உன்னோட பெயர் மதியலகி இல்ல மதியழகி.. எங்க சொல்லு பார்ப்போம் ம..தி..ய..ழ..கி…” தெரியாமல் கேட்டுவிட்டோமே எனப் பேந்த பேந்த விழித்தவள்

“அட விடுங்க பாஸ்..பேரா முக்கியம் ஆமா ஏதோ அவசரமா கேட்க வந்தீங்களே..” ஈயென சிரித்து அவள் கேட்டதும்..

அவளது மழுப்பலை கண்டு அடக்க மாட்டாமல் சிரித்தவனுக்கு அவன் கேட்க போகும் கேள்விக்கு அவள் எடுக்கப் போகும் காளி அவதாரம் தெரிந்திருந்தாள் வாயை விட்டிருக்க மாட்டான்…

ஒருவேளைத் தெரிந்திருந்தால் உள்வீட்டுப் போரை முதலிலே தடுத்திருக்கலாமோ..?

மதி வருவாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!