ENV-13A

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 13(1):

காரில் ஏறியவுடன் எதுவும் பேசாமல் சாய்ந்து கண்கள் மூடி உட்கார்ந்திருந்தாள்.

“அம்மா என்ன சொன்னாங்க?” காரை ஓடிக்கொண்டே அகிலன் கேட்க, அவனைப் பார்த்து முறைத்தாள். பின், பதில் பேசாமல் ஜன்னல் புறம் திரும்பிக்கொள்ள “சொல்லு என்ன சொன்னாங்க?” என மறுபடியும் கேட்டான்.

“ஹ்ம்ம்… எதுக்கு கால் தெரியுற மாதிரிலாம் டிரஸ்? பாக்கறவங்க என்ன நினைப்பாங்க… தாலிய உள்ள மறச்சு வெச்சுருக்கியா இல்ல கழட்டி வெச்சுடுயா? இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு தான் வேலைக்குப் போக வேணானு சொன்னேன்ன்னு சொன்னாங்க… போதுமா?” என்று மிகுந்த கோபத்துடன் கண்களில் தேங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொன்னாள்.

அவனுக்கு என்ன பேசுவது எனத் தெரியாமல் விழிக்க…

அவன் முகம் பாராமல் “என்னால முடில. ஒரு டிரஸ் அதுக்கு… நீயே சொல்லு அந்த ட்ரெஸ்க்கு தாலி கயறு எப்படி இருக்கும்ன்னு? செயின்னா கூடத் தெரியாது. தடியா மஞ்சக் கயிறு… வைட் ஷர்ட்’க்கும் அதுக்கும் அப்பட்டமா தெரியும்”

“இதே மைண்ட்செட்ல நான் எப்படி நல்லா ப்ரெசென்ட்டேஷன் குடுக்க முடியும்? மூணு மாசம் ஹார்ட் வர்க்” இப்போது கண்கள் நன்றாகவே கலங்கி இருந்தது.

“புரிது. ஐம் சாரி. நான் அம்மாட்ட பேசறேன். இதுனால இனி பிரச்சனை வராம பாத்துக்கறேன்” அவளைப் பார்த்து சொல்ல

“ஏன் இதை வெச்சு இன்னும் என்ன அவங்க பேசவா? போதும் டா சாமி. இந்தக் கல்யாணத்துனால வெறும் ஸ்ட்ரெஸ் மட்டும் தான் எனக்கு மிச்சம்… எந்த வகைலயுமே சந்தோஷமில்லாத வாழ்க்க. நிம்மதியே போச்சு. இதே மாதிரி போனா பைத்தியமா தான் சுத்துவேன்”

கலங்கிய கண்களுடன் சொல்லிவிட்டுத் திரும்பிக்கொள்ள, அவன் முகத்தில் அடிபட்ட வலி. எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்து அவன் முகம் பார்த்தாள். அதுவே காட்டியது அவன் நிலைமையை.

அவளை மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும்… அவள் எதற்கும் வருந்தக்கூடாது என்று அவன் நினைத்து ஒன்றொன்றும் செய்ய, ஏதொ ஒன்று இது போல் நடந்துவிடுகிறது.

பல நிமிடங்ககள் இருவரிடையே கனத்த மௌனம் நிலவ…

‘எப்போதும் ஏதாவது பேசுபவன், அமைதியாக வருகிறான் என்றால் தான் சொன்ன அந்த வரிகளால் தான்… அவன் எந்தத் தவறும் செய்யவில்லையே…’ என நினைத்து “ஐம் சாரி” என சொல்லிவிட்டு மறுபடியும் திரும்பிக்கொண்டாள்.

அந்த மனநிலையிலும், அவள் கேட்ட ஒரு மன்னிப்பில் என்ன உணர்ந்தானோ, புன்னகை மறுபடியும் ஒட்டிக்கொண்டது அவன் முகத்தில்.

“இத எதையும் யோசிக்காத பேபி. அம்மா கொஞ்சம் பழைய டைப். அவங்களுக்கு நான் புரிய வைக்கறேன். ஐ நோ… நீ கண்டிப்பா நல்லா பண்ணுவ. ஜஸ்ட் ரிலாக்ஸ்” என புன்னகைத்தான்.

ஏனோ அந்த ஒரு புன்னகை அவளுக்கு அப்போதிருந்த மனநிலையை மாற்றியது. ஆனால் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.

“உனக்கு மஞ்சள் கயிறு அனீஸி’யா (uneasy) இருந்தா கார்’லயே கழட்டி வெச்சுடு பேபி. எனக்கு இதுல பெரிய நம்பிக்கையெல்லாம் இல்ல”

“முழுநேரமும் தாலி கழுத்துல இருந்தும் வாழ்க்கைல பிரிஞ்சவங்க இருக்காங்க… தாலி கட்டிக்காம இன்டெர்காஸ்ட் மேரேஜ் பண்ணிட்டவங்க சந்தோஷமாவும் இருகாங்க. இதெல்லாம் மனச பொறுத்தது. உனக்கு என்ன விருப்பமோ அத செய்” என்றான் காரை ஓட்டிக்கொண்டே.

சில நிமிட மௌனத்திற்குப் பின், அவள் அலுவலகம் நெருங்கும்போது… “எனக்கு கயிறை மாத்திட்டு தாலிய செயின்ல போட்டுகுடுக்கச் சொல்லு. அது போதும்” என்றாள். அவன் சரி எனத் தலையாட்டினான்.

அவள் அலுவலகமும் வர, அவன் “ஆல் தி பெஸ்ட்” என்றான்.

எதுவும் பேசாமல் இறங்கி சென்றுவிட்டாள். செல்லும் அவளையே பார்த்திருந்தவன், சில நிமிடங்களில் அவன் அலுவலகத்துக்கு வந்தான். போனை பார்த்தபோது அவளிடம் இருந்து “தேங்க்ஸ்” குறுஞ்செய்தி வந்திருந்தது.

ஆஃபீஸாக மட்டும் இல்லையென்றால் சந்தோஷத்தில் குதித்திருப்பான். அவளிடம் இருந்து வந்த முதல் குறுஞ்செய்தி. பதிலுக்குச் சிரிப்பது போல் ஒரு ஸ்மைலி போட்டனுப்ப, அங்கே அவள் முகமும் புன்னகைத்தது.

இருவரும் மாலை திரும்பும்போது… அவளிடம் எல்லாம் சரியாகப் போனதா என்று கேட்டுத் தெரிந்துகொண்டான்.

இரவு நேரத்தின் போது லட்சுமிக்கு கால் வலி என்பதால் கவிதாவிடம் அனைவருக்கும் தோசை செய்யச்சொல்ல, அவன் உதவச் செல்ல நினைக்கும்போது, லட்சுமி தடுத்தார்.

அவன் அம்மாவைப் பார்க்க “முடிலன்னு ஒரு நாள் தானே டா அவள போடச்சொன்னேன். என்னமோ உன் பொண்டாட்டிய கொடும பண்றமாதிரி லுக் விடற. விடு நானே போறேன்.” என்று அவர் எழ… “இருக்கட்டும். நானே போடறேன் அத்த” என்றுவிட்டு உள்ளே சென்றாள் கவிதா.

அவள் தோசை சுடும்போது “அகிலுக்கு பொடி தோசை பிடிக்கும். அத போட்டு குடுத்துடு கவிதா” என்று இன்னொரு பிட்’டை போட, அவனைப் பார்த்து முறைத்தாள். அவன் திருத் திருவென முழித்தான்.

‘எவ்வளவு நேரம் தோசை போட்டுக்கொண்டு மட்டுமே இருக்கிறேன். இதில் அவனுக்குப் பொடி தோசை’ என்று நினைத்தவள் கடைசித் தோசையில் கொஞ்சமே கொஞ்சம் அதிகாமாக மிளகாய் தூள், மிளகு தூள், தூவி போட்டுவிட்டாள்.

ஒரு வாய் வைத்தவுடனே அவனுக்குப் புரிந்தது. அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டான். முடித்துவிட்டு உள்ளேவந்தவன், கை கழுவி, அவள் அருகில் நின்று…

“பேபி… லாஸ்ட் தோசை செம்ம. உன் கையாள போட்டதுனாலவோ என்னவோ செம்ம டேஸ்ட். இனி அதே மாதிரி போடு…” என கண்ணடித்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

‘ஆஅஹ்’ என்று கத்த வேண்டும் என்பதுபோல் இருந்தது. எது செய்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவன் இருப்பது கடுப்பானது.

‘அவள் தன்னைவிட்டால் கோவத்தை யாரிடம் காட்டுவாள்? இதுவும் ஒருவகை உரிமை தானே…’ என்று அதையும் நல்ல எண்ணத்தில் எடுத்துக்கொண்டான்.

ப்ரியாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவளுக்குப் போட்டுக்கொடுத்தான். கொஞ்சம் பயத்துடனே சாப்பிட்டாள் எங்கே மிளகாய் பொடி தோசை தனக்கு வந்துவிடுமோ என்று.

வற்புறுத்தி… அதட்டி… உருட்டி பக்கத்தில் அவன் அப்பா இருந்த தைரியத்தில் இன்னொரு தோசையைச் சாப்பிடவைத்தான். இதில் எதுவும் தனக்குச் சம்மந்தமே இல்லை என்று லட்சுமி டிவி முன் உட்கார்ந்துகொண்டார்.

படுக்க அனைவரும் சென்றவுடன், தன் அம்மாவின் கால்களுக்கு மருந்து போட்டு நீவிவிட்டு, இதமாகப் பிடித்துவிட்டான். சின்ன வயதில் இருந்து அவன் செய்வதே. அவருக்கு மட்டும் இல்லை. அப்பாவிற்கும்… ப்ரியாவிற்கும் கூட…

மெதுவாக அவன் பேச நினைத்ததைப் பேச ஆரம்பித்தான்.

“அம்மா… அடுத்தவங்க போடற டிரஸ்ஸ வெச்சு அவங்கள தப்பா நினைக்கிறவங்க பார்வை தாம்மா தப்பு. அவங்கள பத்தி நாமே ஏன் கவலைப்படணும்?” என்றான் காலைப் பிடித்துவிட்டுக்கொண்டு.

“என்ன போட்டுக் குடுத்துட்டாளா உன் பொண்டாட்டி” என அவர் சீற “நான் வற்புறுத்தி கேட்டதால சொன்னாம்மா. அவ வேல அப்படி… ஏன் இந்த கம்யூனிடில எத்தனை பேர் இதுபோல டிரஸ் போடறாங்க. உன் ஃபிரன்ட் தங்கச்சி கூட அப்படித்தானே. இதெல்லாம் பெருசு பண்ண வேணாமேம்மா” என பொறுமையாகப் பேசினான்.

“அவ போடற ட்ரெஸ்ல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல அகில். ஆனா அதுக்காகத் தாலிய கழட்டி வெச்சுட்டுப் போறதெல்லாம் தப்பு. உடனே அதுக்கு ஏதாச்சும் விளக்கம் கொடுக்காத. அதெல்லாம் ஏத்துக்கற அளவுக்கு எனக்கு நவ நாகரிகம் இல்லனே வெச்சுக்கோ. எனக்குக் கவலயில்லை”

“நான் இல்லாம இருக்கப்ப எப்படியோ இருங்க. எனக்கு அது தேவையே இல்ல” என்றார் வெடுக்கென்று.

“ஹ்ம்ம். எப்போ தாலியெடுத்து செயின்ல போடப்போறோம்? நாளைக்கி போட்டுடலாமா?” என அவன் கேட்க “அதுக்கெல்லாம் நேரம் பாக்கணும். செயின் எடுக்கணும்… தாலி தாங்கற அளவுக்கு” என்றார்.

“அவளோட இப்போ இருக்குற செயின்லேயே போட்டுடலாம். அத அவ எல்லா ட்ரெஸ்க்கும் போட்டுக்குவா” என்றவுடன் “இதெல்லாம் சரியில்ல அகில். நீ ரொம்ப இடம் குடுக்கற அவளுக்கு. ஆனா அவ???” என நிறுத்தி

“இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ” என்று வருத்தப்பட, அவன் அப்பா அவனிடம் ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்றார் கண்களாலேயே.

அறைக்கு வந்தவன் பால்கனியில் அவள் நின்றிருப்பதைப் பார்த்தான். ரைலிங்கில் சாய்ந்து… கைகளைக் கட்டிக்கொண்டு, வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்டிப்பாக இன்று நடந்ததைத் தான் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என நம்பினான்.

அவளும் தன் வாழ்க்கையைப் பற்றித் தான் நினைத்துக்கொண்டிருந்தாள்.

அவள் அருகில் நின்று அவளுடன் கைகோர்த்து, இதே வானத்தை மனநிறைவுடன் பார்க்கத்தான் அவனுக்கும் ஆசை… இப்போது முடியாதே… அதற்கான நேரம் எப்போது வரும்… வருமா? என யோசித்துக் காத்திருந்தான்…

———இன்று———

இப்போது அவன் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான். இடம் தான் வேறு.

ஆனால் மனநிலை? அன்றிருந்ததை விட மிகவும் நொடிந்துவிட்டது . அவள் அஜயுடன் செல்ல விரும்பினாலும் தனக்குச் சம்மதம் என்று வெளியில் சொன்னாலும்… அதை மனம் ஏற்றுக்கொள்ளுமா?

‘இனி காத்திருப்பு மட்டும் தான் வாழ்க்கையோ?’ என்ற எண்ணம் வேறு வாட்டியெடுத்தது…