ENV-13B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 13(2):

———இன்று———

தனிமை சில சமயம் கொடுமையாக இருந்தாலும் அவளின் நினைவுகளின் துணையில் கழித்தான்..

எங்கு பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அவளின் ஞாபகம்.. குளித்து முடித்துக் கண்ணாடி முன் நின்றான்..

தன் கையில் இருந்த டாட்டூவில் கண்கள் நிலைத்தது… அதை மெல்ல வருடிக்கொடுத்தேன்… தன்னால் அவளை இப்படி மட்டுமே நெருங்க முடியுமோ? அந்த எண்ணமே இன்னமும் வலித்தது…

படுக்கையில் படுத்தான்… பக்கத்தில் வெறுமை. முக்கால் வாசி நேரம் அவள் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு படுத்திருந்தாலும், அவள் தன் அருகில் தான் இருக்கிறாள் என்ற நிம்மதி இருந்தது.

இப்போது அதுவும் இல்லை. பக்கத்தில் அவள் இருப்பதுபோல் நினைத்து கையை நீட்டினான். கண்கள் தன்னைமீறியும் கலங்கியது.

‘தன்னைப் பிடிக்காமல் போனதற்கு அஜய் மேல் இருந்த காதல் தான் காரணமா? தன் மீது ஒரு துளிக்கூட நேசம் வரவில்லையா?’

வேதனை தாங்கமுடியாமல் எப்போதாவது பிடிக்கும் புகையை நாடினான்.

கல்யாணத்திற்கு முன் வேலைப் பளு அதிகமிருக்கும்போது எப்போதாவது பிடிப்பான். கல்யாணத்துக்குப் பின் முதல் முறை புகை பிடித்தது நினைவிற்கு வந்தது.

———அன்று———

எப்பொழுதும் போல் இருவருக்கும் இடையில் தலையணைகளை வைத்து தூங்கிக்கொண்டிருந்தாள். அன்று ஆஃபீஸ் வேலை மற்றும் வீட்டுவேலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது அவளுக்கு.

உடல் வலியால் கை கால்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக நீட்டி படுத்துக்கொண்டிருக்க … அவன் ஆஃபீஸ் வேலை முடித்துவிட்டுப் படுக்கவந்தான். தலை கொஞ்சம் வலியாக இருந்தது அவனுக்கு.

அவள் ஒரு காலை நடுவில் போட்டிருந்த தலையணையில் போட்டபடி, அவன் பக்கம் பார்த்தவாரு படுத்திருந்தாள். நின்று அவளையே பார்த்தான். தூக்கத்தில் கூட முறைப்பது போலவே படுத்திருந்தாள் சிடுசிடுவென முகத்துடன்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே அவனும் படுக்க, அந்த அசைவில் அவள் கொஞ்சம் தூக்கம் களைய, நன்றாகத் தலையணையைக் கட்டிக்கொண்டு ஒரு காலை தூக்கி அவன் மேல் போட்டாள்.

அதில் திடுக்கிட்டு… இப்போது அவளை எழுப்புவதா? இல்லை காலை நகர்த்துவதா? என மூளை யோசிக்க, மனமோ, அவளின் இந்த நெருக்கத்தைக் கொஞ்சமே கொஞ்சம் விரும்பி ரசிக்க ஆரம்பித்தது.

எவ்வளவு தான் மனதையும் உடலையும் கட்டுக்குள் வைத்திருந்தாலும், மனம் விரும்பிய பெண் பக்கத்தில்… மனம் அலைப்பாய ஆரம்பித்தது.

தன் மனநிலை மாறுபடுவதை உணர்ந்தவன், மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். ஏற்கனவே இருந்த தலைவலி, இப்போது இதுவும்… சிகரெட்டை எடுத்துக்கொண்டு பால்கனி சென்றுவிட்டான். மனதை அமைதிப்படுத்த அந்தச் சூடு தேவைப்பட்டது அவனுக்கு.

சில நிமிடங்கள் கழித்து, தூக்கத்திலிருந்து அவளுக்கு விழிப்பு வர, அவனுடைய இடத்தில் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ந்து எழுந்தாள்.

சுற்றியும் பார்க்கும்போது, அவன் பால்கனியில் உட்கார்ந்திருந்தது தெரிந்தது. அங்கு சென்று பார்த்தபோது தான் தெரிந்தது… அங்கிருந்த இருக்கையிலேயே கால்நீட்டி உறங்கிக்கொண்டிருந்தான்.

தன்னைத் தூக்கத்தில் இருந்து எழுப்ப மனமில்லாமல் இங்கேயே தூங்கிறான் என நினைத்தாள்.

அவனையே சில நொடிகள் பார்த்திருந்தாள். ஆனால் அவனைப் போல் தயங்கவில்லை. எழுப்பினாள்.

“உள்ள வந்து படு” என்றவுடன், அவன் தூக்க கலக்கத்துடன் பார்க்க, “நான் நகர்ந்து உன் இடத்துக்கு வந்துட்டேன்னா என்ன எழுப்பு. அடிக்கடி பொரளமாட்டேன்… ரொம்ப ஸ்ட்ரெஸ்ட் இல்ல சோர்வா இருந்தா தான் நகருவேன். இனி என்னை எழுப்பு” என்று விட்டு அவனை உள்ளே அழைத்துச்சென்றாள்.

காலையில் எழுந்தவுடன் எங்கே இரவு புரண்டுபடுத்ததை அவன் கிண்டல் செய்வானோ என அவள் நினைத்துருக்க, அவன் அதைப் பற்றிப் பேசவேயில்லை.

அவனோ தன் மனம் அலைபாய்வதை எப்படித் தடுப்பது என யோசித்துக்கொண்டிருந்தான்.

அன்றிரவு அவன் தந்தை “அகில் நாளைக்கு நாங்க செங்கல்பட்டு கிளம்பறோம். கார் இன்னமும் வரலடா. நான் உன் கார் எடுத்துட்டு போறேன். நீங்க கொஞ்ச நாள் பைக்ல போய்க்கோங்க. கார் வந்துடும் சீக்கிரமா” என்றார் உணவு உண்ணும்போது.

“அப்பா என்னைக்காச்சும் ஒரு நாள்’னா பரவால்ல. டெய்லியும் பைக் சரிவராது. நான் கேப் (cab) ரெடி பண்றேன் உங்களுக்கு” என்றான் ‘முடியவே முடியாது’ என்பதுபோல்.

நேற்றிரவு அவளுடன் அந்தச் சின்ன நெருக்கத்தையே மனம் அவ்வளவு விரும்பியது. இதில் தினமும் பைக் பயணம்… ஏதாவது விபரீதம் ஆகிவிட்டால்? வேண்டாம் என்றது அவன் மூளை.

அவனைப் பார்த்து முறைத்து “ஏன்டா? அங்கபோய்ட்டு ஒவ்வொருவாட்டியும் நாங்க டாக்ஸி தேடணும். ஏதாச்சும் எமெர்ஜென்சி’னாலும் டாக்ஸி தான். சின்னப் பசங்க தானே ரெண்டு பேரும். பைக்ல போக என்னவாம்?” என நிறுத்தியவர்

“நீ என்ன எனக்கு புக் பண்றது. எனக்கு பண்ணிக்கத் தெரியும். உன் வேலையப் பாரு” என்றார் கோபமாக.

பதில் பேசாமல் உணவை அகிலன் சாப்பிட்டுக்கொண்டிருக்க, இதுபோல் அவன் நடந்துகொண்டு, பிடிவாதம் பிடித்து கவிதா பார்த்ததில்லை.

ஒருவேளை தனக்காக யோசிக்கிறானோ என நினைத்து “மாமா நீங்க கார் எடுத்துட்டு போங்க. நாங்க பைக்ல போய்க்கறோம். உங்க கார் ரெடி ஆகுறவரை தானே” என்றாள் அகிலனைப் பார்த்து.

‘இவ என்ன இப்படிப் பேசறா’ என அவளைப் பார்த்தவன் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசாமல், பின் அவன் தந்தையுடன் தனியாகப் பேசினான்.

அப்போது அவர் “உங்களுக்குள்ள ஒரு தனிமை வேணும் அகில். அவளுக்கு உன்ன புருஞ்சுக்கறதுக்கு இந்தத் தனிமை உதவும். அதுக்குத் தான் ஒரு நாலு அஞ்சு நாள் அங்க போறோம். நீங்க ரெண்டு பேரும் வீட்ல மூஞ்ச திருப்பிட்டு போற மாதிரியே தான் கார்’லயும் போவீங்கன்னு எனக்கு புரியாதுன்னு நினைக்கிறயா…”

“அந்தப் பொண்ணுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலைனாலும் ஒருநாளும் அத எங்ககிட்ட காமிச்சிட்டது கிடையாது. நல்ல பொண்ணு. கண்டிப்பா உங்களுக்குள்ள ஒரு இணக்கம் வரணும். அதுக்குத் தான். புருஞ்சுக்கோ” என்றார் பொறுமையாக.

ஆம். அவன் அப்பா அம்மாவிற்குத் தெரியும் கவிதா இன்னொருவனை விரும்பி இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொன்னாள் என்று.

கல்யாணத்திற்கு முன் கவிதா அப்பா உடல் நிலை சரியில்லாத போது, அகிலனின் பெற்றோர் ‘அவனால் தான் கவிதாவின் தந்தை இந்த நிலைமைக்கு வந்தார்’ என்று தெரிந்தவுடன், மருத்துவமனையில் இருந்து அவனை அழைத்துச்சென்று ‘என்ன ஆயிற்று’ என்று கேட்டனர்.

அவன் முதலில் மழுப்ப… அவன் அம்மா “இது நீயாக விரும்பி இவளுடன் தான் உன் வாழ்க்கை அமைய வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்துத் திருமணம் வரை வந்துவிட்டு, இப்போது நிறுத்தவேண்டும் என்று நீயே கண்டிப்பாக சொல்லமாட்டாய். என்ன நடந்தது? என் மேல் சத்தியம் செய்து உண்மையை சொல்” என கேட்டபோது…

வேறு வழியில்லாமல் கவிதா அவனிடம் சொன்ன அவளுடைய கடந்தகாலம்… மற்றும் அஜயுடன் அவன் பேசியது என அனைத்தையும் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான்.

அவன் அம்மாவிற்கு அவளின் கடந்தகாலம் உவப்பாக இல்லாதபோதும்… மகன் கேட்டுக்கொண்டதற்காகச் சரி என்றார். அதன் வெளிப்பாடே கவிதாவிடம் அவர் முகம் கொடுத்துப் பேசாமல் இருக்கிறார்.

*********

அகிலனின் அப்பா அம்மா ப்ரியா மூவரும் அடுத்த நாள் புறப்பட்டனர். கவிதாவும் அகிலனும் ஆஃபீஸிற்கு புறப்பட்டனர்.

அன்றைய மாலை சீக்கிரம் வீட்டிற்குச் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டு அவள் சீக்கிரமே வீடு திரும்பினாள். அவனுக்கும் வேலை இருந்ததால் இரவுநேரம் நெருங்கும்போது தான் வந்தான்.

மிகவும் சோர்வுடன் இருந்ததால், அறைக்குள் வரும்போதே, சட்டையைத் தளர்த்திக்கொண்டு “பேபி. ரொம்ப முடில. ஒரு காஃபி கிடைக்குமா?” கேட்டுக்கொண்டே வந்தான்.

படிக்கையில் குப்புறப் படுத்திருந்தவள் “நான் என்ன உனக்கு வேலைக்காரியா? எனக்கே சுத்தமா உடம்பு முடில. நல்ல வேள. உன் அம்மா வீட்ல இல்ல. இல்லாட்டி இன்னேரம் முடியாம கிட்சேன்ல நின்னுட்டு இருந்துருப்பேன்” என கத்தினாள்.

அவனுக்கும் கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்தது. எப்போதாவது தானே அவனும் கேட்கிறான் என்று.

அப்போது தான் அறையைப் பார்த்தான். அவள் ஆஃபீஸிற்கு போட்டுச்சென்ற ஷால் தரையில் ஒரு மூலையில் இருந்தது. கைப்பை மற்றொரு மூலையில்.

ஆடை கூட மாற்றாமல் இவ்வளவு நேரமாகப் படுத்திருந்தவளை “என்ன ஆச்சு பேபி உடம்புக்கு” என கேட்க, கோபத்தில் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“கேக்கறேன்ல்ல? சொல்றதுக்கென்ன உனக்கு?” என அவனும் கொஞ்சம் கோபமாகக் குரலை உயர்த்த, அவனைப் பார்த்து முறைத்து “எதுக்கு கத்தற??? PMS போதுமா… சும்மா தொணதொணன்னு” என்றாள் எரிச்சலுடன்.

‘இதென்னடா புது வியாதி’ எனப் புரியாமல் முழித்தான்…