ENV-19A

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 19(1):

“உன்கிட்ட ரொம்ப தப்பா நடந்துட்டேன். மன்னிப்பு கேட்கக்கூடக் கஷ்டமா இருக்கு. உன்ன பார்க்க அதைவிடக் கில்ட்டி’யா இருக்கு. அதுனால கொஞ்ச நாள் வேலை விஷயமா துபாய் போறேன். வீட்ல யாருக்கும் நம்ம விஷயம் தெரியாது. மனசு கேட்காம அரவிந்த் கிட்ட மட்டும் சொல்லிட்டேன். நம்ம பர்சனல் ஷேர் பண்ண வேண்டியதா போச்சு. அதுக்கும் சாரி. நீ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு என் சப்போர்ட் உனக்கு கண்டிப்பா இருக்கும் பேபி. எதையும் யோசிச்சு ஃபீல் பண்ணாத. ஒழுங்கா சாப்பிடு. அம்மாட்ட அந்தக் களி ரெகுலர்’ரா செய்யச் சொல்லிருக்கேன். அதையும் சாப்பிடு. என்ன மன்னிச்சுடு பேபி ப்ளீஸ். டேக் கேர்”

படித்தவளுக்கு ஒருபுறம் அழுகை வந்தாலும் மறுபுறம் கோபம் வந்தது. யாரைக் கேட்டுச் சென்றான். இன்று அவனிடம் பேசியாக வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால் அவன்? எல்லாவற்றிலும் அவசரம்.

வீட்டில் ஒருவர் அவசரக்குடுக்கை என்றால் பரவாயில்லை. ஆனால் இங்கு இருவரும் என்ற கோபமும் வந்தது.

‘பெரிய ஆள் மாதிரி போனல்ல. போ. நீயா வர்ற வர நான் பேசமாட்டேன் உன்கூட’ சிறுபெண்ணைப் போல் அடம்பிடித்தது மனது.

இன்று தான் அகிலன் தன்னை எவ்வளவு ஆக்ரமித்துள்ளான் என்று புரிந்தது அவளுக்கு. அஜய்யிடம் அகிலனைப் பற்றிப் பேசியதெல்லாம், யோசித்துப் பேசிவையை அல்ல… மனதில் இருந்து வந்தவை.

ஒருவனை மனதார பிடித்திருந்தால் மட்டுமே அவனை இவ்வளவு உயர்வாகப் பேசமுடியும் என்பது புரிந்தது.

தன் மனதில் உள்ள திரை தானாகப் போட்டுக்கொண்டது. அதைத் தானே விளக்கினாலொழிய, போகப்போவதில்லை. கொஞ்சம் அந்தத் திரையைத் தள்ளிவிட்டுப் பார்க்கும்போது, அகிலனுடனான வாழ்க்கை எவ்வளவு அழகானது என்று புரிந்தது.

அவர்கள் இருந்த அறை ஒவ்வொரு முலையும் அவனை நினைவு கூர்ந்தது. தனிமைக் கொடுமையாக இருந்தது.

‘தனிமையால் ஏற்பட்ட வெறுமை வறுத்தெடுக்கும்போது, ஆறுதலாய் அரவணைப்பது உன் நினைவுகள் மட்டுமே….’

அவன் இல்லாமல் அந்த வீடே அந்நியமாய்த் தெரிந்தது. ப்ரியாவிடம் கூடப் பேசத் தோன்றவில்லை. ஏதோ இருக்கவேண்டுமே என இருந்தாள். அவன் வருவதாய் இல்லை.

சண்டையிட்டு பிரிந்திருந்தாலோ, இல்லை நிராகரிக்கப்பட்டிருந்தாலோ, ‘உனக்குத் தேவை என்றால் நீயே வா. நீயாக வந்து பேசும்வரை நான் பேசமாட்டேன்’ என்றிருந்திருப்பாள்.

அஜய்யால் நிராகரிக்கப்பட்டதாக நினைத்தபோது, அதுவே அவளை அவனிடம் பேசவிடாமல் தடுத்தது.

ஆனால் அகிலனோ, அவள் மேல் கொண்ட காதல், அவளுக்குத் தொல்லையாக இருக்கக்கூடாது என நினைத்து பிரிந்துள்ளான். அவனாக வரும் வரைக் காத்திரு என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாலும், மனது கேட்கவில்லை.

அரவிந்தை அழைத்தாள். அவனுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்து. ஆனால் அவன் பிடிகொடுக்கவில்லை.

அகிலன் எதிர்பார்க்காதபோது அவன் முன் நின்றால்? ஏனோ அவனின் அந்த ஆச்சர்யம் கலந்த சந்தோஷமான முகம்… சிரித்த முகம்… பார்க்கவேண்டும் என ஆசையாக இருந்தது.

தன் சொந்த செலவில் துபாய் செல்வதாகவும், அங்கிருந்து வேலைப் பார்ப்பதாகவும், விடாப்பிடியாக அலுவலகத்தில் பேசி… இல்லையில்லை கிட்டத்தட்ட சண்டையிட்டு துபாய் சென்றாள்.

அவனைக் காணவும் சந்தர்ப்பம் கிடைத்தது… ஆனால்! அங்கு நடந்தது?

அஐய்யை எதிர்பார்க்கவே இல்லை. தற்செயலாக அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தான். தன் முகவாட்டத்தைப் பார்த்துவிட்டு பின்னாலேயே வந்து ‘என்ன ஆயிற்று’ என்று கேட்டு, ‘ஒன்றும் இல்லை’ என்று அழுத்தமாகச் சொன்னபின்னே சென்றான்.

அகிலனை லயாவுடன் பார்த்ததை ஏற்றுக்கொள்ளவேயில்லை.

மனது ஒரு நிலையில் இல்லை. இதில் காய்ச்சல், உடல் சோர்வு என அனைத்தும் சேர்ந்துவிட, ஏதோதோ எண்ணங்கள் மனதில் சூழ்ந்தது.

கொஞ்சம் உடல் தேறினால் தெளிவாக யோசிக்க முடியும் என நினைத்து, இதோ இப்போது…

தானே மருத்துவமனையில் தன்னை அட்மிட் செய்துகொண்டாள். ‘நாளை காலை டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம்’ என்று மருத்துவரும் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்.

இன்னமும் லயாவை அகிலனுடன் நினைத்துப்பார்க்க முடியவில்லை.

ஆனால் அன்று சென்னையில் அகிலன் தன்னிடம் நடந்துகொண்டது… தன் ஆசையை வெளிப்படுத்தியது… ‘இப்படி இருந்த ஒருவன் இந்த சிறிய காலத்தில் வேரொறு பெண்ணை எப்படி நினைக்க முடியும்’ என்றே தோன்றியது.

நாளை டிஸ்சார்ஜ் ஆனவுடன், முதல் வேலை லயாவுடன் இதைப் பற்றிப் பேசவிடும் என்று நினைத்துக்கொண்டு, மருந்தின் பிடியில் இருந்தவள் உறங்கிவிட்டாள்.

********

மருந்தின் தாக்கத்தால் கவிதா உறங்கிவிட, அதே இரவு அகிலன், கெஸ்ட் ஹவுசில் கவிதாவின் அறையில் அவளை நினைத்து மனம் கலங்கி உட்கார்ந்திருந்தான்.

அவளை எப்படித் தொடர்பு கொள்வது எனப் புரியாமல் இருந்தான். ஒரு நாள் முழுவதும் வரவில்லை என்றால், எங்கே சென்றிருப்பாள்? ‘ஏதேனும் தவறான முடிவு?’ என்று பதட்டமடைந்த மனது எச்சரிக்கைக் கொடுத்தாலும், மூளை அதை ஏற்கவில்லை.

‘அவள் அப்படியெல்லாம் முடிவெடுக்கும் பெண் இல்லையே’ என்று அவனுக்குத் தெரியாதா என்ன?

அவளின் துணிச்சல், தைரியம், சமயோஜித புத்தி, பொறுமை, இது அனைத்தும் இருந்தாலும் எப்போதாவது எட்டிப்பார்க்கும் குழந்தைத்தனம் என அனைத்தையும் இரண்டு நாட்களில் பார்த்திருக்கிறானே.

அவன் அவளை முதலில் சந்தித்தது… அவள் செய்த காரியங்கள் என அவன் மனது அந்த நினைவுகளை நினைத்துப்பார்த்தது…

———அன்று———

அவன் அப்பாவும் அம்மாவும் சொந்தத்தின் திருமணத்திற்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்க, அவன் அப்பா ஜெயராமன் படி இறங்கும்போது கால் தவறியதால், காலில் அடி பட்டது.

அவரால் செல்லமுடியாது என்று ஆனபின், மனைவியைத் தனியாக அனுப்ப மனமில்லமல், மகளுக்கும் தேர்வு இருப்பதால், அகிலனை வற்புறுத்தி அனுப்பிவைத்தார்.

இதுபோல இரண்டு நாட்கள் நடைபெறும் திருமணமெல்லாம் சின்ன வயதில் சென்றது. அதற்குப் பின் ஸ்கூல் படிப்பு, காலேஜ் படிப்பு, வேலை என்று ஆனதில் எங்குமே அதிகம் சென்றதில்லை.

மிஞ்சிப்போனால் நண்பர்களில் திருமணம். அதுவும் சில மணிநேரங்களே.

இப்படியிருக்க… அம்மாவின் நெருங்கிய சொந்தம் என்பதால் சரி என்றான். தனக்கு வேலை இருப்பதாகவும், அதைச் செய்யும்போது ‘கல்யாணத்தில்கூட வேலையா?’ என்றெல்லாம் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டே கிளம்பினான்.

சொந்தங்கள் சூழ, அந்த மண்டபமே களைகட்டியது. மாப்பிள்ளை வழி சொந்தமான லட்சுமி மற்றும் எங்கும் அதிகம் வராத அகிலனைப் பார்த்தவுடன் உபச்சாரம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

அன்றைய மாலை… சடங்குகள் ஆரம்பித்தது. அகிலன் பெரிதாக எதிலும் கலந்து கொள்ளாமல் அறையிலேயே இருந்தான்.

திடீரென இரண்டு அறைகள் தள்ளி ஒரே சத்தம்.

என்ன என்று பார்த்தபோது… பையனைப் பெற்றவர்கள் கொஞ்சம் அதகளத்தில் ஈடுபட்டிருக்க, பெண்ணைப் பெற்றவர்கள் பிரச்சனை வேண்டாம் என்று மன்றாடிக்கொண்டிருந்தறனர்.

‘என்ன பிரச்சனை’ என ஒன்றும் புரியாமல் அகிலன் பார்த்திருக்க, பெண்ணின் அப்பா தீடீரென, மாப்பிள்ளை மற்றும் அவன் குடும்பத்தின் காலில் விழுந்து… “பிரச்சனை வேண்டாம். எங்களுக்கு கொஞ்சம் நேரம் குடுங்க” என்று கேட்டவுடன் அனைவரும் திடுக்கிட்டனர் அவரின் செயலைக் கண்டு.

அகிலன் ‘என்ன இதெல்லாம்’ என்று யோசிக்கும்முன், மணமகள் பதறிக்கொண்டு தந்தையின் பக்கத்தில் வந்த நேரம்…

“மாமா. நீங்க போய் இவங்க கால்லலாம் விழுந்துட்டு. மொதல்ல எந்திரிங்க. இவங்கெல்லாம் மனுஷங்களே கிடையாது. பணவெறி பிடிச்ச பிசாசுங்க. இவங்கள எல்லாம் போலீஸ்ல பிடிச்சு குடுக்கணும்” என்று கோபத்துடன் பேசிக்கொண்டே அந்தப் பெரியவரைத் தூக்கினாள் மற்றொரு பெண்.

“குடுப்ப குடுப்ப… யாரு இந்த பொண்ணு? பெரியவங்க பேசறப்ப நடுல… வெளிய போ சொல்லுங்க. இந்தக் கல்யாணம் நடக்கணுமா வேணாமா?” என்று மாப்பிள்ளையின் அம்மா கத்த, “மன்னிச்சுடுங்க சம்மந்தி” என்ற பெண்ணின் அப்பா, தனது மகள் புறம் திரும்பி…

“அம்மா. நீ கவிதாவை இங்கயிருந்து கூட்டிட்டு போ” என்றார் கலங்கிய கண்களுடன்.

மணமகளும் ஒன்றும் பேசாமல், கவிதாவை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றாள் அங்கிருந்து. அந்த அறையை விட்டு வெளியேறும் வரை மாப்பிள்ளை வீட்டாரை கடுங்கோபத்துடன் முறைத்துக்கொண்டே வெளியேறினாள் கவிதா.

அப்போதுதான் அகிலன் கண்ணிலும் பட்டாள் முதலில்!!!