Nallai06

“பல்லவி.”

“என்னங்க?”

“சீக்கிரமா ரெடியாகிட்டு அம்மாக்கிட்ட சொல்லிட்டு வா.”

“எங்க போறோம்?”

“சொன்னத்தான் மேடம் எங்கூட வருவீங்களா?”

“அப்பிடியில்லை… போற இடத்துக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக்குவேன்.”

“போற இடத்துக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் பண்ணாம எனக்குப் புடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணுங்க மேடம்.”

“அடேங்கப்பா! ரொம்பத்தான்.” முறுக்கிக் கொண்டவள் கப்போர்ட்டைத் திறந்து அதைக் குடையத் தொடங்கி விட்டாள். சைந்தவி சாப்பிட்ட உடனேயே கிளம்பி விட்டாள். 

மாதவன் கீழேயிருந்த அவனது ஆஃபீஸ் அறைக்கு வந்து அமர்ந்து கொண்டான். மனதில் சின்னதாக ஒரு குழப்பம். காலையில் இருந்த மகிழ்ச்சியான மனநிலை அந்தப் பெண் சைந்தவியைப் பார்த்த போது தொலைந்து போயிருந்தது.

காலையில் கிளம்பிப் போனவனுக்கு வேலை ஓடவேயில்லை. மனைவியோடு அன்றையப் பொழுதைக் கழித்தால் நன்றாக இருக்கும் போல இருந்தது. அதுவும் இன்றைக்கு அவள் விவசாயம் பற்றிப் பேசியது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

அதனால்தான் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான். ஆனால் வீட்டில் விருந்தாளி. பல்லவி இயல்பாகத்தான் இருந்தாள். ஆனால் வந்திருந்த பெண் பல்லவியைப் பார்த்த பார்வையில் அனுதாபம் இருந்ததோ! அது மாதவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அந்தப் பெண் கிளம்பிப் போகும் வரை அமைதியாகவே காட்டிக் கொண்டான். வாழ்க்கை மனிதர்களுக்குச் சில கஷ்டங்களைக் கொடுக்கின்றது. வென்று வாழ்ந்து காட்டினால்தானே அது வீரம்.

சற்று நேரத்தில் பல்லவி வந்து விட்டாள். வாடாமல்லிக்கலரில் கறுப்பு பார்டர் வைத்த புடவை. தலை நிறையப் பூவோடு அவள் வந்து நின்ற போது மாதவன் மயங்கித்தான் போனான்.

“அத்தைக்கிட்டச் சொல்லிட்டேங்க, போலாமா?”

“ம்…” எழுந்து வந்தவன் பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். அது ஒரு சிரமம் அவளுக்கு. புடவைக் கட்டிக்கொண்டு பைக்கில் போவது. ஊருக்குள் போவதென்றால்தான் அவன் காரைத் தொட மாட்டானே. 

புடவையை லேசாக ஒதுக்கிக் கொண்டு ஏறி உட்கார்ந்தாள் பெண். அங்கிருப்பது கிராமத்து மனிதர்கள் என்பதால் அத்தனைத் தூரம் கணவனை ஒட்டிக்கொண்டு அமர மாட்டாள்.

“பல்லவி.”

“சொல்லுங்க.”

“காரை மாத்திடலாமா?” பைக்கை ஓட்டியபடியே கேட்டான் மாதவன்.

“ஏன்?” 

“உனக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது மாடல் இருந்தா சொல்லு. இதைக் குடுத்துட்டு மாத்திடலாம்.”

“எனக்கு இதுவே போதும். இது ரொம்ப நல்லாத்தானே இருக்கு.”

“உனக்குப் பிடிச்சிருக்கா? போன வருஷத்து மாடல்தான்.”

“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க எதையும் எனக்குப் பிடிக்காதோன்னு நினைச்சு மாத்திடாதீங்க.” பேசிக்கொண்டிருந்த மனைவியைக் கண்ணாடி வழியாகப் பார்த்தான் மாதவன். குடை ஜிமிக்கியைத் தாண்டித் தெரிந்த அந்தக் கண்களில் பிடிவாதம் தெரிந்தது. புன்னகைத்துக் கொண்டான்.

அவன் எதற்காகக் கேட்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது. ஏன்? ஆடிக் கார் வைத்திருப்பவர்கள்தான் மனிதர்களா? மற்றவர்கள் எல்லாம் மண்ணாந்தைகளா? இருவரும் அதற்குமேல் பேசவில்லை. சிலநேரங்களில் இது போன்ற மௌனம் ஒரு வரப்பிரசாதம்.

பைக் ஒரு வயல் காட்டிற்குப் பக்கத்தில் போய் நின்றது. அதையடுத்தாற் போல இருந்த ஒரு ஒற்றையடிப் பாதையில் பல்லவியை இறங்கச் சொல்லி இருவரும் நடந்தார்கள். 

ஒரு நூறு மீட்டர் தொலைவில் உள்ளே பரந்த அளவில் நிலம் இருந்தது. சாகுபடி எதுவும் செய்யப்படாமல் சும்மாதான் கிடந்தது.

“இந்த இடம் ஓகேவா பல்லவி?” கணவனின் கேள்வியில் பல்லவி கண்களை விரித்தாள்.

“நிஜமாவா கேக்குறீங்க?”

“ஏன் பல்லவி? அதுல என்ன சந்தேகம் உனக்கு? எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்?”

“இல்லை… காலையிலதான் சொன்னேன். அதுக்குள்ள நிலத்தைக் காட்டுறீங்க!”

“சொன்னது எம் பொண்டாட்டி இல்லை!” மாதவன் ஒரு தினுசாகச் சொன்ன போது பல்லவி புன்னகைத்தாள். 

“என்ன சிரிப்பு?” இப்போது அவன் முகத்திலும் புன்னகை. அவள் ஒன்றுமில்லை என்பது போல தலையை ஆட்டினாள்.

“உன்னோட ஐடியா என்னன்னு சொல்லு பல்லவி. அதுக்கு ஏத்த மாதிரிப் பண்ணிக்கலாம்.”

“இவ்வளவு பெரிய இடம் தேவலைங்க.”

“அப்பிடி இல்லைம்மா. முதல் போடுறதுன்னு முடிவாகிடுச்சு. பண்ணுறதை ஒழுங்காப் பண்ணலாம். நம்ம மண் நல்ல செம்மண்தான். இருந்தாலும் டெஸ்ட் பண்ணக் குடுத்திருக்கேன். நாளைக்கு ரிசல்ட் வந்திரும். அந்த ஆஃபீஸரும் தெரிஞ்சவங்கதான். அவங்களும் வந்து நமக்கு ஐடியா குடுப்பாங்க. ஃபர்ஸ்ட் டைம் பண்ணுறதால கொஞ்சம் அட்வைஸ் கேட்டுக்கிறது தப்பில்லை.”

“அது சரிதான்.”

“இதை புராப்பரா ஆரம்பிச்சு உங்கைல குடுக்கிறேன் பல்லவி. நீ பார்த்துக்கோ.”

“நிஜமாவா?”

“ஆமா. வேலைக்குப் போன பொண்ணு. எதுக்கு சும்மா வீட்டுல உக்கார்ந்து இருக்கணும்? இதுவும் நேஷனல் வேஸ்ட்தான். வீட்டுக்குத் தேவையானது போக மீதியைச் சந்தைக்கு அனுப்பிடலாம். ஊர்ல நாலு பேருக்கு வேலைக் குடுத்த மாதிரியும் ஆச்சு.”

அவன் ஒவ்வொன்றாக அலசி ஆராய பல்லவி அவனையே பார்த்திருந்தாள். தான் விளையாட்டாகச் சொன்ன ஒரு விஷயத்தை அவன் இவ்வளவு அக்கறையோடு பண்ணுவது விந்தையாக இருந்தது.

போடப் போகும் முதலை எந்தெந்த வகையில் லாபமாக்கலாம் என்று அவன் கணக்குப் போடுவதை இமைக்காமல் பார்த்திருந்தாள்.

“அம்மணி என்ன பாரதியார் ஃபேனோ?” அவன் குரல் அவளைக் கலைத்தது.

“ஏன்? இருக்கப்படாதா?”

“கம்ப்யூட்டரும் கவிதையுமா? அந்த மீசைக்காரனை இந்த பல்லவிக்குப் பிடிக்குமா?”

“அந்த மீசைக்காரனை மட்டுமில்லை, இந்த மீசைக்காரனையும் பல்லவிக்குப் பிடிக்குமே.” சொல்லிவிட்டு இல்லாத அவன் மீசையை முறுக்கி விட்டாள் பல்லவி.

“ஏய் பல்லவி!” மாதவனின் கண்கள் சட்டென்று சுற்று முற்றும் பார்த்தது.

“யாருமில்லை பயப்படாதீங்க.” சொன்னபடியே அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள் பல்லவி. குளுகுளுவென்று இருந்தது. ஆங்காங்கே தென்னை மரங்களும் நின்றன. ஒன்றிரண்டு வாழைகள் கூட குலையோடு நின்றிருந்தன.

அவள் மனக்கண்ணில் அந்த இடத்தை எப்படித் தன் இஷ்டப்படி மாற்றிக் கொள்ளலாம் என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது. எங்கே ஹட் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று சிந்தித்தபடி இருந்தாள்.

“பல்லவி, கொஞ்சம் பின்னால பெரிய கிணறொன்னு இருக்கு. அதுக்குப் பக்கத்துல நீ சொன்ன ஹட்டை டிசைன் பண்ணலாம். அப்போதான் இன்னும் குளிர்ச்சியா இருக்கும்.”

“அப்பிடியா?” 

“வா போய் பார்க்கலாம்.” இருவரும் இன்னும் கொஞ்ச தூரம் நடக்க கிணறு ஒன்று தெரிந்தது. அருகில் செல்லச் செல்ல அதன் விசாலம் அதிகமாக பல்லவி மாதவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.

“என்னாச்சு?”

“இல்லையில்லை… போதும் பார்த்தது. ரொம்பப் பெருசா இருக்கு. திரும்பிப் போகலாம்.”

“ஏய்! என்ன நீ இப்பிடிப் பயப்பிடுறே? வந்து எட்டிப்பாரு. உள்ளே படியெல்லாம் இருக்கு. இறங்கிக் குளிக்கலாம் தெரியுமா?”

“ஐயையோ! நீங்க பார்த்துட்டு வாங்க. நான் போறேன்.” அவள் நகரப் போனாள். பல்லவிக்கு இதுபோல ராட்சத வடிவங்களைப் பார்த்தால் பயம் வரும். தலை சுற்றும்.

“அதான் நான் இருக்கேனில்லை, வா பல்லவி.” அவன் விடாமல் அவளை அழைத்துக் கொண்டு கிணற்றின் பக்கத்தில் போனான். பல்லவி அவனோடு பல்லி போல ஒட்டிக் கொண்டாள்.

பெரிய கிணறு. உள்ளே பச்சை நிறத்தில் நீர் மாலை நேரத்துச் சூரியனின் கதிர்கள் பட்டு மினுமினுத்தது. கிணற்றின் ஓரத்தில் படிகள் இறங்கி இருந்தன. எட்டிப் பார்த்த போதே பல்லவிக்குத் தலை கிர்ரென்றது.

“ஒரு நாளைக்கு வந்து குளிக்கலாம் பல்லவி.”

“என்ன? குளிக்கிறதா? விளையாடுறீங்களா நீங்க?” அவள் பயத்தோடு அலற சிரித்தான் மாதவன். சுற்றிவர யாரும் இல்லை என்பதை அவன் கண்கள் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டன. பல்லவியைத் தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.

“காணி நிலம் வேண்டும் பராசக்தி…” அவன் ஆழ்ந்த குரலில் சொல்ல பல்லவி அவனையே பார்த்திருந்தாள். அவள் கண்களுக்குக் கணவன் இப்போது ஒரு பேரரசன் போலத் தோன்றினான்.

“என் பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண் வேண்டும்…” பாடலை அவள் தொடர்ந்தாள். ஆனால் முகத்தில் காதலையும் தாண்டி சிந்தனைத் தெரிந்தது.

“பாரதி என்ன அர்த்தத்துல அந்த வார்த்தையைச் சொன்னான்னு எனக்குத் தெரியலை.”

“எந்த வார்த்தை பல்லவி.”

“அந்தப் பத்தினிப் பெண்ணுங்கிறது.”

“அதுக்கு வேற அர்த்தம் இருக்கா என்ன?”

“பெண்களின் நாலு வகையில ஒரு வகையாக் கூட எடுக்கலாம் இல்லையா?”

“ஓஹோ!”

“ஆனா எனக்கு ஒரேயொரு அர்த்தந்தான்.”

“சொல்லு.”

“எல்லா ஆம்பிளைக்கும் எப்பிடி ஒரு பத்தினிப் பெண் தேவையோ, அதேமாதிரித்தானே பொண்ணுங்களுக்கும்?” அவள் முகத்தின் சிந்தனை இன்னும் தீவிரமானது.

“இதுவரைக்கும் எந்தப் பொண்ணையும் உடம்பால மனசால தீண்டாத ஒரு ஜென்டில்மேன்.” பேசிக் கொண்டிருந்தவள் இப்போது நிறுத்திவிட்டு கணவனைப் பார்த்தாள். அந்த முகத்தில் இப்போது காதல் ஊற்றாகப் பெருகியது.

“இந்த மாதவனைப் போல…” முதன்முதலாக அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள். பெயர் சொல்லக்கூடாது என்று எச்சரித்தது அவனுக்கும் மறந்து போனது. அவன் பெயரை உச்சரித்திருக்கிறோம் என்பது அவளுக்கும் மறந்து போனது. 

மாதவன் அதற்குமேல் விலகி நிற்கவில்லை. ஏதோ புரிவது போல இருந்தது. மனைவியின் இதழ்களில் ஒரு வேகத்தோடு முத்தமிட்டான். பொது இடம் என்று பல்லவி விலகப் போக மாதவன் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

தான் ஆசைப்பட்ட பெண்ணின் மனது முழுவதும் இந்த நிமிஷம் நானே நிறைந்திருக்கிறேன் என்ற கர்வம் அவனை முழுமையடையச் செய்தது. மனைவிக்குள் புதைந்து போனான்.

***

அந்த நட்சத்திர ஹோட்டலின் ரிசப்ஷனில் காத்திருந்தான் கௌதம். சைந்தவி சொன்ன நேரத்திற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் மீதமிருந்தது. கையில் ஒரு பிஸினஸ் மாகஸினைப் புரட்டியபடி இருந்தான்.

தூரத்தில் சைந்தவி வருவது தெரிந்தது. கறுப்பு நிறத்தில் ஒரு ஆடை அணிந்திருந்தாள். முழங்காலுக்குச் சற்றே மேலாக இடையோடு ஒட்டி இருந்தது. அவள் நடக்கும்போது ஆங்காங்கே வெள்ளி போலப் புள்ளிகள் மின்னின. 

கௌதம் புன்னகைத்துக் கொண்டான். இது போல ஆடைத் தேர்வுகளில் சைந்தவி தேர்ந்தவள். ஆனால் பல்லவி திணறுவாள். அதனாலேயேதான் இவனுக்குப் பல்லவி மேல் ஓர் ஈர்ப்பே வந்தது.

கௌதம் மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்தவன். அப்பா சம்பாதித்து வைத்திருக்கும் சொத்தே இவன் உட்கார்ந்து சாப்பிடப் போதும். ஆனால் அதில் அவனுக்குச் சுவாரஸ்யம் பிறக்கவில்லை.

அத்தோடு ‘குந்தித் தின்றால் குன்றும் மாளும்’ என்று சொல்வார்களே!‌ தான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவனுள் எப்போதும் உண்டு. 

நாகரிகத்தின் உச்சத்தில் சதா உழன்று கொண்டு இருந்ததாலோ என்னவோ பல்லவியின் செய்கைகள் அவனைப் பலமாக அவள் பக்கம் ஈர்த்தது.

அவள் தயக்கம், வெட்கம், நளினம், பார்த்துப் பார்த்துத் தன்னை மூடிக்கொள்ளும் அழகு! துப்பட்டாவை அவள் கைகள் சதா சரிபண்ணும். இத்தனைக்கும் கண்கள் கம்பியூட்டரில் இருக்கும். கௌதம் எங்கோ படித்திருக்கிறான். அது பெண்களுக்கே உரித்தான இயல்பாம். தங்கள் ஆடைச் சரியாக இருக்கிறதா என்று சதா கவனித்துக் கொள்வார்களாம்.

வெளிநாடுகளில் சுற்றித் திரிந்தவன். சொந்த நாட்டிலேயே ஆடைக் குறைப்பு என்ற பெயரில் பலதையும் பார்த்தவன். மாடர்ன் ஸ்டைல் என்ற பெயரில் அரையும் குறையுமாக ஆடை அணிபவர்களைப் பார்த்தால் அவனுக்குக் குமட்டிக் கொண்டு வரும். 

ஒரு நாள் அவன் சித்தியே புடவை ஒன்றை ஒரு தினுசாக அணிந்து வந்திருந்தார். இவன் அம்மாவும் பாராட்டித் தீர்த்து விட்டார்.

‘கௌதம்! என்ன ட்ரெஸ் எப்பிடி இருக்கு?’ சித்தி இவனிடமே அபிப்பிராயம் கேட்ட போது கௌதம் சிரித்து விட்டான்.

‘ஏன் சித்தி புடவையோட மானத்தை வாங்குறீங்க?’

‘போடா! உனக்கு ஸ்டைலே தெரியலை. தன்வி உன்னைக் கட்டிக்கிட்டு என்ன பாடு படப்போறாளோ?’ சித்தி முகத்தைத் திருப்பிக் கொண்டார். கௌதம் இப்போது உண்மையாகவே கடகடவென்று சிரித்தான்.

சித்தியின் நாத்தனார் பெண் இந்த தன்வி. இவன் தலையில் அந்தப் பெண்ணைக் கட்ட இவன் ஒட்டு மொத்தக் குடும்பமுமே ஒற்றைக் காலில் நிற்கிறது. கட்டிக் கொள்ளலாம்தான். ஆனால் என்ன? இரண்டு பேரும் ஆளாளிற்கு பப்பில் ஊற்றிக் கொடுக்கலாம்! படு மேட்சாக இருக்கும்! 

“ஹாய் சார்.”

“வாங்க சைந்தவி. பல்லவியைப் பார்த்தீங்களா?”

“பார்த்தேன் சார்.” சைந்தவியை அவ்வளவு தூரம் அனுப்பி வைத்ததே கௌதம்தான்.

“என்ன சொல்றா?”

“என்னென்னவோ சொல்றாளே.” சைந்தவியின் குரலில் நிஜமான அக்கறை தெரிந்தது. தன் தோழிக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது போலவே பேசினாள்.

“சொல்லுங்க.”

“அவ சந்தோஷமாத்தான் இருக்காளாம். அடிச்சுச் சொல்றா.”

“ம்… கல்யாணத்துக்கு ஏன் உங்களை இன்வைட் பண்ணலையாம்?”

“வேணுமின்னு அவாய்ட் பண்ணி இருக்கா சார்.”

“ம்…” 

“கூப்பிடாமலேயே வில்லங்கம் வீடு தேடி வருதாம்.” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் பெண்.

“சாரி சார்.”

“இட்ஸ் ஓகே. அப்பா வாங்கின கடனுக்காகத்தான் இந்தக் கல்யாணமே நடந்துச்சாம்.”

“சார்! என்ன சொல்றீங்க நீங்க?!”

“விசாரிச்ச வரைக்கும் இப்பிடித்தான் நியூஸ் வந்திருக்கு.”

“நினைச்சேன்! நான் இப்பிடித்தான் ஏதாவது இருக்கும்னு நினைச்சேன். அப்போ எதுக்கு சார் எங்கிட்ட நல்லா இருக்கிற மாதிரி நடிக்கிறா?” இப்போது கௌதம் தோளைக் குலுக்கினான்.

“ஒரு வேளை என்னைப் பழிவாங்க நினைச்சிருக்கலாம்.” கௌதம் சொல்ல சைந்தவிக்கு ‘அப்படியும் இருக்குமோ!’ என்று தோன்றியது.

“லெட்ஸ் கோ சைந்தவி.” சொல்லிவிட்டு அந்த ஹோட்டலின் உள்ளே இருந்த பப்பிற்குப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு போனான் கௌதம். உள்ளே நல்ல கலகலப்பாக இருந்தது. இருவருக்கும் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு ஒரு டேபிளில் வந்து அமர்ந்தார்கள். 

கௌதம் பானத்தைச் சுவைப் பார்க்க ஆரம்பித்தான். சைந்தவியின் கண்கள் எதிரில் இருப்பவனை பார்த்தும் பார்க்காதது போல ஆராய்ந்தது.

இவனுக்குப் பல்லவி பின்னால் திரியவேண்டும் என்று எந்தத் தேவையும் கிடையாது. அவனைத் தேடியே பல பெண்கள் வருவார்கள். அடிக்கடி வெளிநாட்டு வாசம் என்பதால் எப்போதும் ஒரு பளபளப்புத் தெரியும் கௌதமிடம். அத்தோடு பிறப்பிலேயே அவன் கோடீஸ்வரனாம். சைந்தவி கேள்விப் பட்டிருக்கிறாள்.

டீம் லீடர் என்ற வகையில் பெண்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் இவன் மேல் நல்ல மரியாதை இருந்தது. பல்லவிக்குப் பக்தி என்றே சொல்லலாம். ஆனால் காலப்போக்கில் கௌதம் பல்லவியைப் பார்த்த பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது. சைந்தவி ஒரு சிரிப்போடு அதைக் கடந்து விட்டாள். அதைக் கவனிக்கும் திறமைக் கூட பல்லவிக்கு இருக்கவில்லை.

ஆனால் ஒரு நாள் படபடப்பாக பல்லவி வந்து நின்ற போது சைந்தவி திகைத்து விட்டாள். கௌதம் தன்னிடம் ப்ரப்போஸ் பண்ணியதாக அவள் விறைத்து நின்றபோது,

‘இவ்வளவுதானா.’ என்றுதான் நினைக்கத் தோன்றியது. அவளுக்குத்தான் அது முன்னமே தெரியுமே!

ஆனால் சைந்தவி வெகுவாக ஆச்சரியப்பட்டாள். இது சரி வருமா? நாகரிகத்தின் உச்சக்கட்டம் கௌதம். இன்றைய ட்ரெண்ட்டிற்கு ஏற்றாற்போல ஆடை அணிந்தாலும் இங்கிலீஷ் பேசினாலும் பல்லவி கொஞ்சம் பழமை வாதிதான். பழமையை ஆராதிப்பவள்தான். இந்த வண்டி ஓடுமா என்றுதான் முதலில் யோசனையாக இருந்தது.

ஆனால் கௌதம் என்ன மந்திரம் பண்ணினானோ?! விறைப்பாக நின்ற பல்லவி அவன் ஆசைக்கு ஓகே சொல்லி இருந்தாள். நன்றாகத்தான் போனது. ஆனால் ஒரு கட்டத்தில் பல்லவி விலகிக் கொண்டாள். என்ன நடந்தது என்று இன்றுவரை சைந்தவிக்குத் தெரியாது.

“சந்தோஷமா இருக்காளா?” திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டான் கௌதம். 

“அப்பிடித்தான் சொல்றா? ஆனா எனக்கு என்னமோ நம்பிக்கை வரலை சார்.”

“ம்…”

“மிஸ்டர்… மாதவனை… நான் பார்த்தேன் சார்.” சைந்தவியின் குரல் இப்போது தயங்கியது.

“புல் ஷிட்! அவனெல்லாம் ஒரு ஆளா? கடனைக்காட்டிப் பொண்ணெடுத்திருக்கான். பொட்டைப் பய!” கோபத்தில் நிதானமின்றி வார்த்தைகள் வந்து வீழ்ந்தன. மனிதனின் மறுபக்கம் என்று சொல்வது இதைத்தானோ?!

“சாரி சைந்தவி. எனக்கு அவ்வளவு ஆத்திரம் வருது. நிச்சயமா இந்தக் கல்யாணத்துக்கு பல்லவி சம்மதிச்சிருக்க மாட்டா. ஏதோ நடந்திருக்கு.” தனக்கு முன்னால் இருந்த பானத்தை முழுதாக விழுங்கினான் கௌதம்.

***

வீடு கலகலவென்று இருந்தது. பல்லவி முகத்தில் அவ்வளவு குதூகலம். சமையல் வேறு விசேஷமாகத் தயாராகிக் கொண்டிருந்தது.

“துளசி, மொட்டை மாடியிலே ஒரு சின்னத் தோட்டம் வெக்கலாம்னு சொன்னதுக்கு அம்மா அந்தக் குதி குதிச்சாங்க. இப்போ நாங்க ஒரு ஏக்கர்ல பெரிய தோட்டம் பண்ணப் போறோம் தெரியுமா?” கை அதன் பாட்டில் வேலைச் செய்து கொண்டிருக்க பெருமைப் பேசிக் கொண்டிருந்தாள் பல்லவி.

“சூப்பர் பல்லவிக்கா. அத்தை… உங்கப் பையனை நானே கட்டி இருந்திருக்கலாம் போலவே.” வருத்தமான குரலில் சின்னவள் சொல்லவும் பவானி சத்தமாகச் சிரித்தார். பெண்கள் எல்லோரும் கிச்சனில் வேலைப் பார்த்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். சரோஜா சின்ன மகளின் தலையில் லேசாகத் தட்டினார்.

“ஆனா எம் பையனுக்குப் பல்லவியைத்தானே பிடிச்சிருக்கு துளசி?”

“அது வாஸ்தவந்தான் அத்தை. அதான் கல்யாணத்தன்னைக்கே பார்த்தோமே. உங்கப் பையன் பல்லவிக்காவைக் கண்ணாலேயே ஸ்வாஹா பண்ணினதை!”

“ஏய் துளசி! பெரியவங்கக்கிட்ட இப்பிடியெல்லாம் பேசக்கூடாது.”

“விடுங்கண்ணி பேசட்டும். நம்ம பசங்கதானே.” பவானி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாதவனின் பைக் சத்தம் கேட்டது.

“பல்லவி, தம்பி வந்துட்டான் போல.” மாமியார் சொன்ன மாத்திரத்தில் பல்லவி சட்டென்று வெளியே போய்விட்டாள். சரோஜாவின் மனது நிறைந்து போனது. 

எங்கே மகள் தன் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்வாளோ என்ற பயம் அவருக்கு நிறையவே இருந்தது. கொஞ்சம் பிடிவாதக்காரிதான். நிறையப் படித்து நல்ல வேலையில் வேறு இருந்திருக்கிறாள். இந்தக் கல்யாணத்தில் வேறு இஷ்டம் இருக்கவில்லை. தன் கணவர் வேறு அதற்கு ஒத்து ஊதினார்.

அதனாலேயே இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் மகள் வீடு வந்திருக்கவில்லை. ஃபோனில் பேசிக் கொள்வதோடு சரி. சரோஜா இரண்டொரு முறைக் கேட்ட போதும் தியாகராஜன் மறுத்துவிட்டார். தன் கழுத்தில் கத்தியை வைத்துப் பெண்ணெடுத்த சோமசுந்தரத்தின் மகன் மேல் அவருக்கு இன்றுவரை நல்ல அபிப்பிராயம் வரவே இல்லை.

வாசலுக்கு ஓட்டமும் நடையுமாக வந்தாள் பல்லவி. அப்போதுதான் மாதவன் பைக்கை நிறுத்திவிட்டு சாவியைக் கையில் எடுத்துக் கொண்டிருந்தான். பல்லவி அவன் அருகில் வந்து நிற்கவும் அவன் முகம் மலர்ந்து போனது. 

“என்ன பல்லவி?” முகம் முழுவதும் புன்னகைப் பூத்தது.

“அம்மா அப்பா எல்லாரும் வந்திருக்காங்க.”

“அப்பிடியா? ஒரு ஃபோன் பண்ணி இருந்தா சீக்கிரமா வந்திருந்பேனே.” பேசியபடி அவன் பைக்கை விட்டு இறங்கப்போக பல்லவியின் கரம் அவன் கரத்தின் மேல் படர்ந்தது. மாதவன் கேள்வியாக மனைவியைப் பார்த்தான்.

“அப்பா…” அவள் சொல்லாமல் தயங்க இப்போது மாதவனின் நெற்றி சுருங்கியது.

“அப்பாக்கு என்னம்மா?”

“இல்லை… உங்ளுக்கு அப்பாவைப் பிடிக்காதுன்னு எனக்கும் தெரியுந்தான். இருந்தாலும்…”

“மூனு பொண்ணுங்களைப் பெத்துட்டுப் பொறுப்பே இல்லாம இருந்த ஒரு மனுஷனை எனக்குப் பிடிக்கலை பல்லவி. அதுக்காக… பல்லவியோட அப்பாவை என்னால வெறுக்க முடியுமா?” புன்னகை முகமாகக் கணவன் சொன்னாலும் அது தனக்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்று பல்லவிக்குத் தெரியும். அத்தனைச் சீக்கிரத்தில் மாதவன் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்வதில்லை. அது அவளுக்குத் தெரியும்.

மாதவன் உள்ளே வரவும் சரோஜா கிச்சனை விட்டு வெளியே வந்துவிட்டார். நண்பர்கள் இருவரும் சோஃபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 

“வணக்கம் மாப்பிள்ளை.” கணவரின் மனநிலை நன்கு தெரிந்ததால் சரோஜாவே பேச்சை ஆரம்பித்தார். 

“வணக்கம்.” பொதுவாக வணக்கம் வைத்த மாதவன் மாமனாரைத் திரும்பிப் பார்த்தான். அவரும் பெயருக்கு ஒரு வணக்கம் வைத்தார்.

“மனோகர் ஃபாமிலி வரலையா அத்தை?”

“பெரிய மாப்பிள்ளைக்கு லீவு இல்லையாம் மாப்பிள்ளை. இன்னொரு நாளைக்கு நாங்க போய்க்கிறோம். நீங்க இப்போ போய்ட்டு வாங்கன்னு சொன்னாங்க.”

“ஓ… அப்பிடியா?”

“ஏன் பல்லவிக்கா? மனோகர் அத்தான் பெரிய மாப்பிள்ளை. மாதவன் அத்தான் சின்ன மாப்பிள்ளை. அப்போ நாளைக்கு எனக்குக் கல்யாணம் ஆனா அம்மா புதுவரவை எப்பிடிக் கூப்பிடுவாங்க?”

“ஷ்… சும்மா இரு துளசி.” தனது காதைக் கடித்த தங்கையை அடக்கினாள் பல்லவி. ஆனால் அது மாதவனுக்கும் கேட்டிருந்தது.

“புது மாப்பிள்ளைன்னு கூப்பிடலாமா துளசி? ஆனா அதுக்கு மொதல்ல நீ படிப்பை முடிக்கணுமே.”

“ஹி… ஹி…” சின்னத்தான் தன்னிடம் பேசிவிட்டதில் துளசி சந்தோஷப்பட்டாளோ இல்லையோ பல்லவி பூரித்துப் போனாள்.‌ தான் எதற்கு இத்தனைத் தூரம் கிடந்து பரிதவிக்கின்றோம் என்று பல்லவிக்குப் புரியவில்லை.

கணவன் தன் குடும்பத்தாரைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமே என்று அவள் மனம் கிடந்து அடித்துக் கொண்டது. அத்தனைத் தூரம் மாதவன் மேல் பித்தாகிப் போயிருந்தாள் பல்லவி. அது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் மாதவன் புரிந்து கொண்டான்.

சிறிது நேரத்திலெல்லாம் உணவு பரிமாறப்பட எல்லோரும் உண்டு முடித்தார்கள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மாதவன் தனது ஆஃபீஸ் ரூமிற்குள் போய் விட்டான். 

கிளம்புவதற்குக் கொஞ்ச நேரம் முன்பாக தியாகராஜன் மாதவனின் அறைக்குள் நுழையப் போகவும் பல்லவி பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

“என்னப்பா?”

“ஒன்னுமில்லைம்மா.‌ கொஞ்சம் பேசிட்டு வந்தர்றேன்.” இன்னும் மாப்பிள்ளை என்ற வார்த்தை அவர் வாயில் சரளமாக வரவில்லை. ஆனால் பல்லவி தவித்துப் போனாள்.

ரூமை விட்டு வெளியே வந்த அப்பா சாதாரணமாகத்தான் வந்தார். அதன்பிறகு எல்லோரும் கிளம்பி விட்டார்கள். பல்லவிக்கு இருப்புக் கொள்ளவில்லை. கணவன் மேலே தங்கள் ரூமிற்குப் போகும்வரைப் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தாள்.

“அப்பா என்ன சொன்னாங்க?” மூச்சிரைத்தபடி வந்து நின்ற மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான் மாதவன். அப்போதுதான் கப்போர்டில் வைத்த பணத்தை எடுத்து மனைவியின் முன்பாக நீட்டினான்.

“என்னங்க இது?”

“எம் மாமனார் குடுத்தாரு.”

“எ…‌ எதுக்கு?”

“கடனைக் கழிக்குறாராம்.” கணவன் சொன்னவுடன் பல்லவி திடுக்கிட்டுப் போனாள்.

“புரியலைங்க.”

“ஆஃபீஸ்ல போனஸ் கிடைச்சிருக்கும் போல. அதைத் தூக்கிக்கிட்டு வந்திருக்காரு.” 

“நீங்க ஏதாவது சொல்லிட்டீங்களா?” பதறிய மனைவியைத் தன்னருகில் அழைத்துக் கொண்டான் மாதவன்.

“பல்லவி, இன்னைக்கு முழுக்க ஒரு படபடப்புலயே இருக்கே. உன்னோட குடும்பத்தை அப்பிடி நான் எடுத்தெறிஞ்சு பேசிடுவேனா?”

“இல்லைங்க… அப்பிடியில்லை. அப்பாவை உங்களுக்குப் பிடிக்காது. நீங்களே அதைச் சொல்லி இருக்கீங்க. அவர் ஊதாரிதான். ஆனா ஒரு நல்ல அப்பா.”

“நல்ல அப்பான்னா எது பல்லவி? ஆடம்பரமான வாழ்க்கையைக் குடுக்கிறதா? அப்போ இல்லாதவங்க வீட்டுல இருக்கிற அப்பாமார் எல்லாம் நல்ல அப்பா இல்லையா?”

“அது…” பல்லவியின் கண்கள் இப்போது கலங்கிவிட்டது. மாதவன் அவள் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தான்.

“விடும்மா… ஆனா இப்போ புத்தி வந்திருக்கு. இவ்வளவு தொகையாப் பணம் வந்திருந்தா முன்னாடி தாம் தூம்னு குதிச்சிருப்பார் இல்லை?”

“ஆமா…”

“ஆனா இப்போ கடனைக் குடுக்கணுமேங்கிற பொறுப்பு வந்திருக்கு. கிளி மாதிரிப் பொண்ணை வளர்த்து பூனைக்கிட்டக் குடுக்க வேண்டி வந்திருச்சேன்னு கவலை வந்திருக்கும் போல.” இப்போது மாதவன் சிரித்தான். பல்லவி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“அப்பிடியெல்லாம் இல்லை.”

“துளசி பேர்ல பேங்ல போடுங்கன்னு சொல்ல நினைச்சேன். ஆனாலும் எதுவும் சொல்லலை. அதை நாமளே பண்ணலாம். உங்கப்பா கைல பணம் இருக்கிறது பாதுகாப்பு இல்லை. துளசி பேர்ல ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணி இந்தப் பணத்தைப் போட்டிரலாம். துளசிக்கும் இனி மாப்பிள்ளை பார்க்கணும்ல?”

“ம்…” 

“என்ன?” 

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் இல்லேங்கலை.‌ ஆனா அப்பாக்கிட்டப் பேசும்போது கொஞ்சம் இதமாப் பேசுங்க ப்ளீஸ்… எனக்காக.”

“பல்லவி, குடும்பத்துல யாராவது ஒருத்தர் கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கணும். உங்க வீட்டுல பசங்க கிடையாது. மூனும் பொண்ணுங்க. மனோகரும் சாஃப்ட் பேர்வழி. உங்கப்பா இழுத்த இழுப்புக்கெல்லாம் தலையாட்டுவாரு. நானாவது கொஞ்சம் இப்பிடி இருக்கேனே. உங்கப்பா வருத்தப்பட்டா ஒன்னும் தப்பில்லை.”

“இல்லைங்க…”

“பல்லவி! இன்னைக்கு முழுக்க நீ என்னைக் கவனிக்கலை. அப்பாவைக் கண்ட உடனே என்னை மறந்துட்டே.” அவன் ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்த்தான் கணவன்.

“நான் காஃபி கொண்டு வர்றேன்.”

“அதை வாணி கொண்டு வருவா. நீ இங்க உக்காரு.” மனைவியைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு கட்டிலில் கால்நீட்டிச் சாய்ந்து கொண்டான் மாதவன்.

“உன்னோட லிஸ்ட் என்ன பல்லவி?” பேச்சை விவசாயத்தின் பக்கம் சாமர்த்தியமாகத் திருப்பினான்.

“கத்தரி, தக்காளி, பச்சை மிளகாய்.”

“வெண்டைக்காயும் போடலாமாம். இந்த மண்ணுக்கு அதுவும் நல்லா வருமாம்.”

“அப்போ போடலாங்க.”

“இன்னைக்கு நைட் தோட்டத்துக் கிணத்துல போய்க் குளிப்பமா பல்லவி.”

“என்னது! அங்கயா?!”

“ம்… அடிக்கடி நான் அங்க போய்க் குளிப்பேன்.”

“ஐயையோ! அதெல்லாம் டேன்ஜர். வேணாம் வேணாம்.”

“நாளைக்குப் பௌர்ணமி வேற. நல்ல நிலா வெளிச்சமா இருக்கும் பல்லவி.” 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.”

“நாம போறோம்… நீ வர்றே.” 

“இல்லை…” சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள் பல்லவி.

∆∆∆

ஆனால் அன்றிரவே மாதவன் சொன்னதுபோல மனைவியோடு தோட்டத்துக் கிணற்றிற்கு வந்திருந்தான். வரும் வழியில் இருந்த மின் விளக்குகளை மட்டும் விட்டுவிட்டு கிணற்றுக்குப் பக்கத்திலிருந்த விளக்குகளை அணைத்து விட்டான். 

நிலா வெளிச்சம் நன்றாகவே இருந்தது. கிணற்று நீரின் பச்சை நிறம் நிலா வெளிச்சம் பட்டு மரகதம் போல ஜொலித்தது. பார்க்க அழகாக இருந்தாலும் பல்லவியின் கண்கள் மிரண்டு போயிருந்தன.

“அதான் நான் இருக்கேன்ல பல்லவி. அப்புறம் என்ன பயம்?”

“நான் உங்களையுந்தான் போக வேணாம்னு சொல்றேன்.” 

“சரியாப் போச்சு.” மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு படிகளில் இறங்கினான் மாதவன். கிணற்று நீரின் குளுமை அவர்கள் மேனியைத் தழுவிச் சென்றது.

“நான் இந்தப் படியில எல்லாம் இறங்கிறதே இல்லை. மேல இருந்து ஸ்ட்ரெயிட்டா ஒரு குதிதான்.”

“ஏங்க?!” பல்லவியின் முகம் இப்போது பாவமாகிப் போயிருந்தது. நீருக்கு மேலிருந்த படியில் அவளை உட்கார வைத்துவிட்டு தண்ணீருக்குள் குதித்தான் மாதவன். புடவை நனைந்து விடாமல் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள் பெண்.

“ஆமா… அது யாரு ராதாங்கிறது?”

“ராதாவா? அது யாரு?” அவளுக்குப் பக்கத்தில் வந்தவன் முகத்திலிருந்த நீரை ஒற்றைக் கையால் வழித்துத் துடைத்தான்.

“இதானே வேணாங்கிறது. உங்களுக்கு லவ் லெட்டரெல்லாம் குடுத்தாங்களாமே?”

“அற்புதா வேலையா இது?”

“உண்மையா இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க.” பல்லவியின் முகம் சிணுங்கியது.

“உண்மைதான்.” 

“ஓ… உங்களுக்குப் பிடிச்சிருந்ததோ?” அவளுக்கு அனைத்துத் தகவலும் தெரியும். இருந்தாலும் வம்பு வளர்த்தாள்.

“ஏன்? அந்தத் தகவலை அற்புதா சொல்லலையா?”

“ஏன்? நீங்க சொல்ல மாட்டீங்களா? அந்தப் பொண்ணு இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையாமே?” இதைக் கேட்ட பல்லவி தண்ணீருக்குள் இருந்தாள். ஒரு முறை முழுதாகத் தண்ணீருக்குள் மூழ்கி எழுந்த போது மூச்சுக்குத் தடுமாறினாள்.

“என்னங்க பண்ணுறீங்க?” பேசும்போதே இருமல் வந்தது. மாதவன் மனைவியையும் நீருக்குள் இழுத்து விட்டிருந்தான்.

“கிராமத்தான் பொண்டாட்டி.‌ கிணத்தைப் பார்த்துப் பயம். நல்லாவா இருக்கு?”

“பேச்சை மாத்தாதீங்க. ராதா யாரு?” அவள் அதிலேயே குறியாக இருந்தாள். தண்ணீர் இப்போது மறந்து போனது. மாதவன் வாய்விட்டுச் சிரித்தே விட்டான். 

இப்படியொரு சிரிப்பைக் கணவன் சிரித்து பல்லவி பார்த்ததில்லை. அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள். உணர்ச்சிகளை எப்போதும் கட்டுக்குள்தான் வைத்திருப்பான். அதை பல்லவி நன்கு கவனித்திருக்கிறாள்.

மற்றவர்களிடம் பேசும்போது எப்போதும் அளவுக்கு மீறிய நிதானம் இருக்கும். இறுக்கமாகவே இருப்பான். இவன் இளகும் இடம், இறங்கும் இடம் நான்தானோ?!

அவள் சிந்தனைக்கு அதற்கு மேலும் இடம் கொடுக்காமல் அவளையும் இழுத்துக் கொண்டு நீந்தினான் மாதவன். மனைவியின் மறுப்புகள் எதையும் அவன் பொருட்படுத்தவே இல்லை. 

அவர்கள் வாழ்க்கையில் இந்தக் கிணற்றுக்கு முக்கிய பங்கு இருக்குமோ!

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே…

நீ கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே…