ENV-21B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 21(2):

அவள் வலிகளைக் கேட்டு அவன் மனம் துடித்தாலும், அதை அவளிடம் காட்டி இன்னமும் வருத்தப்பட வைக்கவேண்டாம் என நினைத்துப் புன்னகைத்துக்கொண்டே அவளைப் பார்த்தான்.

“PMS ‘னால உடம்பெல்லாம் வலிக்குதுன்னு நான் சொன்னவுடனே துளியும் யோசிக்காம, நான் செஞ்சதெல்லாம் நெனச்சு பாக்காம, எனக்கு நீ குடுத்த அந்த வலி நிவாரணம். உடல் வலிக்கு மட்டுமில்ல அகில்… என் மனசோட வலிக்கும் சேர்த்து அது மருந்தா இருந்துச்சு. புருஷன பிடிக்காத மனைவிக்கு எந்தப் புருஷன் அத செய்வான்னு சொல்லு?” அவன் முகத்தைக் கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.

“நீ கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னயே. கடவுள் கஷ்டத்தை மட்டும் குடுக்க மாட்டாரு. சந்தோஷமான பாதையும் காட்டுவாருன்னு. அதிகமா சந்தோஷத்தை பார்க்காத, நிறைய ஏமாற்றங்கள பார்த்த எனக்கு, கடவுள் காட்டின பாதை நீதான்னு இப்போ புரியுது. கடவுள் இருக்காரு.

என்னைவிட்டு எல்லாரும் போன மாதிரி நீயும் போயிடாத அகில். நான் சண்டை போடுவேன். கோவ படுவேன். என்னடா வாழ்க்கைன்னு கூட சிலசமயம் நினைக்க வெப்பேன். ஆனா நீயும் என்ன விட்டுட்டு போய்ட்டா அந்த வேதனை என்னால தாங்க முடியாது அகில்” உதடுகள் துடிக்க, அவள் கைவளைவிற்குள் இருந்தவள் அவனைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.

அழுதால் மனபாரம் குறையும் என நினைத்து அவள் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்தான். அவள் விசும்பல் நின்றபாடில்லை. அவன் கண்களிலும் கண்ணீர் தேங்கியது.

அவளை மீட்டெடுக்க… “பேபி. ஒரு தடவ உன்ன தனியா விட்டுட்டேன் தப்பு தான். ஆனா இனி என் ஆயுசு இருக்க வரைக்கும்… இல்ல உன் ஆயுசு இருக்க வரைக்கும்… நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன். நீயே போடானு சொன்னாலும்… முடியாதுன்னு உன்கூடவே இருந்து உன்ன படுத்தி எடுக்கப்போறேன்” ஆறுதலாகப் பேச ஆரம்பித்துக் குறும்புடன் முடிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள் கண்ணீர் கலந்த புன்னகையுடன்.

‘இது போதும் எனக்கு’ என்பதுபோல மறுபடியும் கைமேல் தலைசாய்த்து… “அப்போ அஜய் மேல கோவம் இருந்துச்சு அகில். ஆனா இப்போ நெனச்சா கஷ்டமா இருக்கு. அவனுக்குன்னு ஒரு லைப் அமையனும். நான் கடவுள்ட்ட வேண்டிப்பேன். எனக்கு அகில் கிடைச்ச மாதிரி அவனுக்கு ஒரு நல்ல பொண்ண… அவனை புரிஞ்சுக்கற பொண்ண காட்டுன்னு”

அவனும் ஆமோதித்தான். அவள் மனநிலை கொஞ்சம் மாறி இருந்ததது.

மறுபடியும் அவனிடம் “என்ன ஏன் உனக்குப் பிடிக்கும் அகில்? நீ யாரையுமே லவ் பண்ணலயா? நான் அப்படியென்ன ஸ்பெஷல் உனக்கு” அவன் முகத்தை ஆசையாகப் பார்த்துக்கொண்டு கேட்டாள்.

அவனும் புன்னகையுடன் “யாரு சொன்னா நான் லவ் பண்ணலன்னு? நானும் லவ் பண்ணேன்” என்றவுடன், கண்கள் விரிந்து அவனைப் பார்த்தவள் “வாட்? ப்ரியா நீ அதெல்லாம் பண்ணலன்னு சொன்னா… சரி சரி சொல்லேன். உன்ன மிஸ் பண்ண அந்த அன்லக்கி யாருன்னு” ஆர்வமாகக் கேட்டாள்.

“ஹ்ம்ம் அவ அன்லக்கி தான் பாவம்” என்றவன்… மர்மப்புன்னகையுடன் ஆரம்பித்தான்.

“அவளை நான் ஒரு கல்யாணத்துல பாத்தேன். புயல் மாதிரி மாப்பிளை வீட்டுக்காரங்ககிட்ட சண்டை போட்டா. அவங்க கல்யாணத்தப்ப டௌரி கேட்டாங்கன்னு. ஆனா அது அவ கல்யாணமில்ல. அவ சொந்தக்காரங்க கல்யாணம்” என சொல்லிவிட்டு குறும்பாக அவளைப் பார்த்தான்.

புன்னகையுடன் அவள் புருவங்கள் சுருங்கியது. அவன் தொடர்ந்தான்.

“அவ்ளோ கோவக்காரி. மூக்கு மேல கோவம். அப்புறம், அவளை ஒருத்தன் இடுச்சுட்டான்னு அவன வெச்சு செஞ்சா பாரேன். பாஹ். அவனுக்கு விழுந்த அறை எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு” என்றவன் அவள் அறைந்தக் கையை எடுத்து உள்ளங்கையில் முத்தமிட்டான்.

இப்போது கண்ணீர் கோர்த்தது அவள் கண்களில். ஆனால் புன்னகையும் தவழ்ந்தது.

அவள் கையை விடாமல் கன்னத்தோடு வைத்துக்கொண்டு “இடுச்சவன் அம்மாகிட்ட பேசின ஒன்னொன்னும் நெத்தியடி. ஆச்சர்யமா இருந்தது எனக்கு. எவ்ளோ தெளிவா பேசினா தெரியுமா… அவளோட அழக அந்த தைரியத்துல பாத்தேன்” இப்போது பற்கள் காட்டி புன்னகைத்தாள்.

“அப்புறம் நைட் ஒரு அட்டகாசம் பண்ணா பாரேன். சமையல்காரர் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாரு” இப்போது அவளுக்குப் புரிந்தது. அவளுக்கு நடு இரவு பசிக்கும், இனிப்பு பிடிக்கும் என்று அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று.

முறைத்துக்கொண்டே புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்.

“அவ்ளோ சுட்டித்தனமா இருந்த முகம், சட்டுனு அம்மான்னு சொன்னவுடனே மாறுச்சு. அவ வலி என்ன என்னமோ பண்ணுச்சு பேபி” இப்போது அவன் குரல் கரகரத்தது.

“அவ கஷ்டப்படறத என்னால பாக்க முடில. ஏதோ ஒரு பாரம் மனசுக்குள்ள. கல்யாண பொண்ணு மூலமா அவளைப் பத்தி தெருஞ்சுட்டேன். அவளைப் பொண்ணு பாக்க வராங்கன்னு சொன்னாங்க. ஏதோ என்ன விட்டுட்டு போனமாதிரி இருந்துச்சுடா” அவன் கண்கள் கலங்கியது.

அவன் கன்னத்தில் இருந்த அவள் கை விரல்களால் அவனை மெல்ல வருடினாள். அவள் கண்களும் கலங்கியது.

“அப்புறம் அந்த சம்மந்தம் சரிவரலன்னு தெரிஞ்சவுடனே அம்மா அப்பாட்ட சொல்லி… அவ வீட்டுக்கு பொண்ணு பாக்க போனேன். அவளுக்கு என்ன கல்யாணம் பண்ண பிடிக்கலன்னு சொல்லிட்டா. இருந்தும் நான் ப்ரொசீட் பண்ணேன். கண்டிப்பா futureல அவளுக்கு என்ன பிடிக்கும்ன்னு நம்பினேன்.

கொஞ்ச நாள் கழிச்சு அவ வேற ஒருத்தர லவ் பண்றேன்னு சொன்னா பாரேன்… ப்ச். மனசுக்குள்ள அவ்ளோ வலி. அதைவிட அவ அழுததை என்னால தாங்கிக்க முடில… அவ சந்தோஷமா இருக்கனும்ன்னு நினச்சேன்.

ஆனா அவ வாழ்க்கைல என்னனெமோ நடந்துருச்சு டா. எங்களுக்குள்ள கல்யாணமும் முடுஞ்சுருச்சு. அப்போ முடிவு பண்ணேன். என் கூட இருக்கறவரைக்கும் அவளைச் சந்தோஷமா… கண்ல கண்ணீர் வராம, பழசை நினைக்கவிடாம பாத்துக்கணும்ன்னு நினச்சேன். ஆனா என்னாலேயே அவ ரொம்ப கஷ்ட…” அவன் சொல்லிமுடிக்கும்முன், கலங்கிய கண்களுடன் மறுப்பாகத் தலையசைத்து, அவனைப் பேசவிடாமல் கைக்கொண்டு வாயை மறித்தாள்.

“அவ உன்ன நினச்சு சிந்தனை கண்ணீர் எல்லாம் சந்தோஷத்துல வந்தது. அவ ரொம்ப லக்கி அகில். உன்னைவிட அவளை வேற யாராலும் சந்தோஷமான வெச்சுக்க முடியாது. அவளோட உயிர் நாடி இப்போ நீதான்” என்றதும் அவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். இப்போது அவள் அவனை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தாள்.

சில மணித்துளிகள் கடந்தது… அப்போதுதான் இருவரும் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை உணர்ந்தனர்.

அவன் அதை உணர்ந்த சமயம், அவன் ஆசையுடன் அவளைப்பார்த்து… அழைத்த ‘பேபி’ என்ற வார்த்தையே பல அர்த்தங்களைக் காட்டியது அவளுக்கு. கொஞ்சம் வெட்கமும் எட்டிப்பார்த்தது.

“அகி…” அவள் அழைக்க… அவன் முற்றிலுமாக விழுந்தான்.

அவளையே ஆர்வமாகப் பார்க்க… “நம்மளோட அன்யோன்யமான வாழ்க்கை, நம்ம ரூம்… நம்ம கட்டில்… நம்ம பால்கனி… நம்ம விண்டோ சீட்டர்… அங்கதான் ஆரம்பிக்கணும்ன்னு பல கற்பனைகள் செஞ்சுவெச்சுருக்கேன்…” அவள் விருப்பத்தைச் சொன்னாள்.

‘நம்ம…’ என்ற வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தம்… அதையும் தாண்டி கற்பனை செய்யும் அளவிற்குத் தன்னை நினைத்துள்ளாள் என்று புரிந்தபோது, கொஞ்சம் ஏமாற்றம் கூடப் பறந்துபோனது.

திரும்பவும் இருவரும் பேச ஆரம்பித்தனர்…

அவன் அவனுடைய சொந்தக்காரப்பெண் ப்ரேமா பேசியது… அவளுக்குத் தன் அம்மா விஷயத்தையெல்லாம் சொன்னது… அம்மாவுக்கும் அப்பாவிற்கும் கவிதாவின் கடந்தகாலம் தெரியும் என்பதையும் பகிர்ந்துகொண்டான்.

“அப்பா எப்பவுமே சொல்வாரு பேபி. கவிதாவுக்கு கல்யாணம் வேணா பிடிக்காம பண்ணிருக்கலாம். ஆனா எங்ககிட்ட ஒரு தடவ முகம் சுளிச்சதில்ல. அம்மா எவ்வளவோ பேசினாலும் அமைதியா ஒரு சின்ன ஸ்மைல்’லோட இருந்துப்பா. இந்த காலத்துலயும் இப்படி ஒரு அனுசரணையான பொண்ணு. அவ கோவத்தை உன்கிட்ட காட்டறான்னா, அது உன்மேல அவளுக்கு இருக்க உரிமைன்னு சொல்வாரு ஸ்வீட்டி” இதைச் சொல்லும்போது அவன் கண்களில் பெருமிதம்.

அவள் புன்னகைத்துக்கொண்டே “எனக்கு தெரியும் அவங்க ரெண்டு பேருக்கும் விஷயம் தெரியும்ன்னு அகில்”

“நான் வந்த கொஞ்ச நாள்லயே புரிஞ்சிட்டேன். மாமா போல நீன்னு. அத்தை பேசிகலி நல்ல டைப். ஒரு அம்மாவா பையன நல்லா வளத்துருக்காங்க. எனக்கு நீ எவ்ளோ டைம் சமச்சுபோட்டுருக்க. பட் ஒரு தடவ கூட ஏன்டா இதெல்லாம் செய்றன்னு சொன்னது கிடையாது

நான் வேலைக்கு போறதைக்கூட ஏன் வேண்டாம்ன்னு சொல்லிருப்பாங்கன்னா… நான் வீட்ல இருந்தா, அவங்களோட… உன்னோட இன்னமும் ஒரு இணக்கம் வரும்ன்னு நினச்சுருப்பாங்க. நான் முடியாதுன்னு சொன்னவுடனே எனக்கிட்ட மனவருத்தம். அதனோட வெளிப்பாடுதான் ஏன் இப்படி டிரஸ் பண்ற… ஏன் அப்படி இருக்கன்னு சொல்றதெல்லாம்.

அவங்க பையன் வாழ்க்கை என்னால பாழாகிப்போய்டுச்சுன்னு நினைக்கறாங்க. அந்த வருத்தம் அவங்களுக்கு போகணும். எப்படி போக்கறது?” அவனைப் பார்த்துச் சிந்தித்திக்கொண்டே கேட்டாள்.

யோசிப்பதுபோல யோசித்தவன், “இதேபோல அவங்க முன்னாடி ரெண்டு மூணு வாட்டி கட்டிபிடுச்சோம்ன்னா போதும் பேபி. அவங்களே புரிஞ்சுப்பாங்க” இன்னமும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு குறும்பாகச் சிரித்தான்.

அவனைப் பார்த்து முறைத்தவள், அவனை அடிக்க, அவள் கையைப் பற்றி அவன் கையுடன் கோர்த்துச் சின்னச் சின்ன முத்தங்கள் பதிக்க… அவள் உடல் சிலிர்த்தது.

இருந்தாலும்… அவள் இழுக்க முற்பட, மறுபடியும் கெஞ்சலாகப் பார்த்தான். அவளோ கண்களால் அதை மறுத்தாள்.

‘வாயாடும் இதழ்கள் மௌனமொழி பேச,

மௌனமான விழிகள் வாய்மொழி பேசியது!’