NUA–EPI 26

அத்தியாயம் 26

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மங்கையின் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

பொன்னழகே பூவழகே என் அருகே!!! (முத்துக்காளை)

 

“இந்த வேட்டி நல்லா இருக்கா பாருங்க!”

“வேட்டில என்ன டீச்சர் நல்ல வேட்டி கெட்ட வேட்டி! எல்லாமே வெள்ளை வேட்டித்தானே!”

கணவனும் மனைவியும் மறுநாள் மாலையில் ஊருக்குப் புறப்படலாம் என முடிவெடுத்திருந்தனர். ஹோட்டலில் ஓய்வெடுக்க சொல்லியும், காமாட்சிக்கும் மச்சக்காளைக்கும் எதாவது வாங்க வேண்டும் என பிடிவாதம் பிடித்து வெளியே வந்திருந்தாள் தவமங்கை. அவர்கள் இருவருக்கும் வாங்கி முடிந்திருந்தவள், காளைக்கு வாங்குகிறேன் பேர்வழி என அவனை ஒரு வழி செய்துக் கொண்டிருந்தாள்.

“இப்படி வெட்டியா பேசாம ஒழுங்கா வேட்டியப் பாருங்க!” என கடிந்துக் கொண்டவள் கலர் கலராக கரை வைத்திருந்த வேட்டிகளையும், கரை கலருக்கு ஏற்ப சட்டைகளையும் தேர்ந்தெடுத்துக் குவிக்க ஆரம்பித்தாள். ஒன்றும் பேசாமல் முனைப்பாய் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் தன் மனைவியையே பார்த்தப்படி நின்றான் காளை.

“போதுமே டீச்சர்! உங்களுக்கு எதாச்சும் பார்க்கலாமே”

“சம்பாதிக்க ஆரம்பிச்சதுல இருந்து எனக்கு நானே வாங்கி உடுத்தி சலிச்சுப் போச்சு காளை. இனிமேலாச்சும் நான் வாங்கி தந்து மகிழ எனக்கு ஒரு அடிமை சிக்கிருக்குன்னு நெனைக்கறப்போ எவ்ளோ ஹேப்பியா இருக்குத் தெரியுமா!”

“உங்களுக்கு வாய்த்த அடிமை மிகவும் அதிர்ஷ்டசாலி டீச்சர்”

“ஒரே பேக்கேஜ்ல மங்கை(டீச்சர்), எலிசு(மனைவி), அம்மும்மான்னு(மகள்) ட்ரீ இன் ஓன் கெடைச்சிருக்குல்ல, இந்த அடிமை அதிர்ஷ்டசாலிதான்” என சொல்லி கண்ணடித்தாள் மங்கை.

பணம் செலுத்த கவுண்ட்டருக்குப் செல்பவளை முகம் கொள்ளா சிரிப்புடன் பார்த்திருந்தவனுக்கு சற்று முன் ஹோட்டல் ரூமில் நடந்தவை கண் முன்னே படமாய் விரிந்தன.

“யாரு அந்த அதிர்ஷ்டசாலி டீச்சர்?”

“உங்களுக்கு முன்ன ஒரு ஆள் இருக்குன்னு சொல்றேன்! கோபப்படாம, பொறாமைப்படாம யாரு அந்த அதிர்ஷ்டசாலின்னு கேக்கறீங்க?” என முறைத்தாள் மங்கை.

“எதுக்கு டீச்சர் பொறாமை கோபம்லாம்? அதெல்லாம் நீங்க என் மேல வச்சிருக்கற காதல் மேல சந்தேகம் வரப்போத்தான் வரும். எனக்குத்தான் இந்தப் பிரிவு நச்சுன்னு மண்டையில அடிச்சி சொல்லிருச்சே உங்களோட ஆழமான காதல! பிறகு ஏன் கோடேர்ட்டல் வரப்போகுது! வாய்ப்பேயில்ல!”

புன்னகையுடன் அவனைப் பார்த்திருந்தவள், மெல்ல அவன் அணைப்பில் இருந்து விலகினாள். எழுந்துப் போய் அவளது போனை எடுத்து வந்தவள், தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை மறுபடியும் அவனிடம் காட்டினாள்.

“ஓன் டைம் சம்மர் லீவ் விட்டப்போ என்னை ஆழ்மனத் தேடல்னு ஒரு செமினார்ல சேர்த்து விட்டாரு அப்பா. எனக்கு அப்போலாம் கடுப்பு கடுப்பா வரும் அஜய் மேல. அவர மனசுல திட்டிட்டே செமினார்ல ரம்பம் போடறத சகிச்சிட்டு உட்கார்ந்திருப்பேன். அந்த செமினார் நடத்தனவரு சொன்னாரு, நம்ம சுத்தி நடக்கறத மனசுக்குள்ளேயே போட்டு அடைச்சிடாம அதுக்கு ஒரு அவுட்லட் வச்சிக்கனும்னு. துன்பமோ பிரச்சனையோ வரப்போ நெருங்கிய நண்பர்கள் கிட்ட ஷேர் செஞ்சிக்கலாம், அப்படி இல்லைனா டைரி எழுதலாம், யாராவது பார்த்திருவாங்கன்னு பயம் இருந்தா ப்ரைவட்டா ப்ளாக்(blog) வச்சி நமது மனக்குமுறல வெளியேற்றலாம்னு.(நான் வச்சிருந்தேன். இட் ரியலி வோர்க்ஸ். இப்போ டைம் கிடைக்கறது இல்ல எழுத). அவர் சொன்ன அந்த ஒரு விஷயம் ஆழமா எனக்குள்ள இறங்கிருச்சு. எழுத சோம்பேறி பட்டுக்கிட்டு என்னை சுத்தி நடக்கறத போட்டோவா எடுக்க ஆரம்பிச்சேன். அதை ப்ரைவெட்டா இண்ஸ்டால சேகரிக்க ஆரம்பிச்சேன். அதுல உள்ளது எல்லாமே என்னோட மனசுக்கு நெருக்கமா இருந்த விஷயங்கள் மட்டும்தான். எனக்குப் பிடிச்சவங்கள நெறைய போட்டோ எடுத்து வச்சிப்பேன். மனசு கனமா இருக்கறப்போ ஒரு போட்டோவ அப்லோட் செய்வேன். அவங்க கூட இருந்த சந்தோஷமான நினைவுகள மனசுக்குள்ள கொண்டு வந்து என்னை நானே சந்தோசப்படுத்திப்பேன். பாரு அத்தைக்குப் பின்ன உங்களுக்கு முன்ன நான் காதலிச்சது என் காமாட்சி ஆத்தாவ! தோ அவங்க போட்டோஸ்! ஐ லவ் ஹேர் சோ சோ சோ மச்!”(நெறைய பேர் சரியா கண்டுப்புடிச்சிட்டீங்க. திஸ் டைம் நோ பல்ப்!)

முகம் மின்ன கண்கள் பளபளக்க காமாட்சியின் ஒவ்வொரு போட்டோக்களையும் அவனிடம் காட்டினாள் மங்கை.

“ஆத்தாவ எல்லாருக்கும் பிடிச்சுப் போயிடும் டீச்சர்! படபடன்னு பொரிஞ்சுக் கொட்டனாலும் பாசத்துல அவங்கள மிஞ்ச யாரும் இல்ல”

“வீட்ட விட்டு வெளியப் போகனும்னு முடிவு எடுத்து கிராமத்துக்கு தைரியமா வந்துட்டாலும் எனக்கு மனசுக்குள்ள ரொம்ப பயம் காளை. ஸ்கூல் ஹாஸ்டல்ல, லேடிஸ் ஹாஸ்டல்ல எல்லாம் நெறைய பேர் கூட இருந்தாங்க. யார் கூடவும் மனதளவு நெருங்கிய நட்பு வச்சிக்கலனாலும் எல்லோர் கிட்டயும் சிரிச்சுப் பேசி நட்பா இருந்தேன். திடீர்னு தனியாளா அங்க வந்தப்போ எப்படி சமாளிக்கப் போறோம்னு கலக்கம். ஆத்தாவோட முகத்தப் பார்த்ததும் ஒரு திடம் வந்துடுச்சு எனக்குள்ள. பெரிய பொட்டு வச்சு, மஞ்சள் பூசி, சிரிச்ச முகத்தோட வாத்தா வான்னு வாய் நெறைய வீட்டுக்குள்ள கூப்பிட்டப்போவே என் நெக்ஸ்ட் காதல் அவங்கதான்னு முடிவு பண்ணிட்டேன்” என புன்னகைத்தாள் மங்கை.

“ஹ்ம்ம் எங்காத்தா குடுத்து வச்ச மகராசி! மொத பார்வையிலேயே அவங்களுக்கு டீச்சரோட லவ் கெடச்சிருச்சே!” என பெருமூச்சு விட்டான் காளை.

போனை மேசை மேல் வைத்தவள் காளையின் மடியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

“நான் தான் குடுத்து வச்சவ காளை! அங்க வந்த மறுநாளே பாசமா ஆத்தான்னு கூப்பிட சொன்னாங்க உங்க அம்மா. என்னைப் பொறுத்த வரை அம்மான்றது வெறும் வார்த்தை மட்டும்தான். ஆனா இந்த ஆத்தான்ற வார்த்தைல தான் அன்பு, பாசம், இமோஷன்ஸ், நேசம் எல்லாத்தையும் நான் உணர்ந்தேன். ஆத்தான்னு உச்சரிக்கறப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா காளை? மீண்டும் அஞ்சு வயசுக்கு போயிட்ட மாதிரி ஃபீல் பண்ணேன். அப்பா என் குட்டிக் கைய ஹாஸ்டல் சிஸ்டர் கிட்ட புடிச்சுக் குடுக்காம காமாட்சி ஆத்தா கிட்ட புடிச்சு குடுத்துட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு உடம்பு முழுக்க விரவி பரவின ஃபீல். அத வாய் வார்த்தையா எனக்கு சொல்லத் தெரியல காளை. அந்த டைம்ல ஆத்தாவா அப்படியே கட்டிப் புடிச்சு கன்னத்துல உம்மா குடுக்கனும்னு தோணுச்சு. அவ்ளோ பூரிப்பு எனக்குள்ள. கஸ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கிட்டேன். இல்லைனா ஐயோ பைத்தியக்காரின்னு அவங்க பயந்துருப்பாங்க”

கண்கள் கலங்க உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தவளை பார்க்கவே பாவமாக இருந்தது காளைக்கு. பட்ட மரமாய் நின்றவளை அன்பெனும் நீரூற்றி, காதல் எனும் உரமிட்டு செழிக்க வைத்த மாந்தோப்புக்காரனுக்கு, மங்கையவளின் மங்கிய வதனம் மனதைக் கீறியது. அவளைத் திசைத் திருப்ப முனைந்தவன்,  

“என் பொண்டாட்டிய பைத்தியக்காரின்னு சொல்லாதீங்க டீச்சர்! எனக்கு கோபம் கோபமா வருது” என கோபமாய் காட்டிக் கொண்டான்.

“பார்டா! உன் போண்டா டீ பைத்தியக்காரிதான், காதல் பைத்தியக்காரி! அந்தப் பைத்தியம் என்ன செய்யும் தெரியுமா? இப்படி கட்டிப் புடிச்சுக்கும், இப்படி காதை கடிக்கும், இப்படி மூக்கை கடிக்கும், இப்படி கன்னத்தைக் கடிக்கும், இப்படி உதட்டு மேலயே உம்மா குடுக்கும்.” என சிரித்த முகத்துடன் சொல்லியபடியே செய்தும் காட்டினாள்.

“விட்ருங்க டீச்சர்!” என நெளிந்தபடியே மெல்லியக் குரலில் சொன்னான் காளை.

“ஒன்னும் தெரியாத காள கதவுக்கு போட்டானான் தாள(தாள்). பச்சைப் புள்ள மாதிரி நெளியாதீங்க! எப்பப் பாரு விட்ருங்க டீச்சர், விட்ருங்க டீச்சர்ன்னு சொல்லி சொல்லியே என் வயித்த உப்ப வச்சிட்டீங்க” என செல்லமாகக் கடிந்துக் கொண்டாள் மங்கை.

“இன்னும் உப்பலையே டீச்சர்!” என மெல்ல தன் மனைவியின் வயிற்றை வருடினான் காளை.

“உப்பும் உப்பும்! உங்க புள்ள இப்ப மாங்காயோட பூ இருக்குல்ல, அந்த சைஸ்ல தான் இருப்பான். கொஞ்ச மாசம் போனதும் மாங்கொட்டை கணக்கா விரிவடைஞ்சு, அப்புறம் பழுத்த மாங்காய் பெருசுக்கு வளந்துடுவான். ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் வயிறு கொஞ்சம் கொஞ்சமா உப்பும்! புரியுதா?”

“டீச்சர், எனக்கு ஒரு டவுட்டு?”

“என்ன?”

“நமக்கு புள்ள பொறக்குமா இல்ல மாங்காய் பொறக்குமா டீச்சர்?” என புன்னகையுடன் கேட்டான் காளை.

“பொண்டாட்டிய மாங்கா, மாங்கனினு கொஞ்சன மாந்தோப்பு ஓனருக்கு மாங்காய் தான் பொறக்கும்!” என சொல்லி சிரித்தவள் அவன் நெற்றியில் செல்லமாய் முட்டினாள்.

“உங்கள பத்தி ஆத்தா அவ்ளோ பேசனாங்க! ஆனா முதல் முதலா உங்கள பார்க்காம, அந்த வீணாப்போன மொரட்டுக்காளைய தான் நான் மொதல்ல சந்திச்சேன். தண்ணியடிச்சுட்டு வந்து கைப்படாத இந்த ரோஜாவ கட்டிப் புடிச்சுட்டான். நீங்க தொட வேண்டிய இந்த எலிச மொதல்ல அவன் தொட்டுட்டான்!”

“அவன்லாம் ஒரு மனுஷனா டீச்சர்! தனியா இருக்கறப் பொம்பள புள்ளைய கட்டிப்புடிச்சு ரவுசு பண்ணி இருக்கான். என் கையில மட்டும் அவன் மாட்டுனான், ஊடு கட்டி வகுந்துடுவேன் வகுந்து!”

அவனை விட்டுத் தள்ளி வந்தவள், இடுப்பில் கை வைத்துக் கொண்டு காளையை முறைத்தாள்.

“எ..என்ன டீச்சர்?”

“அந்த மொரட்டுக்காளைய எனக்குப் புடிக்காதுதான்! எந்தப் பொண்ணுக்குத்தான் தண்ணி அடிச்சிட்டு வந்து ஈன்னு இளிக்கற ஆம்பளையப் புடிக்கும்? குடி குடியை மட்டும் கெடுக்காது, குடும்பத்தையே குட்டிச்சுவரா ஆக்கிடும். ஆனாலும் அந்த மொரட்டுக் காளையால தான் நம்ம கல்யாணம் நடந்துச்சு! அதனால அவனை எனக்கு கொஞ்சமே கொஞ்சமா புடிச்சுத் தொலைக்குது. என்னைத் தவிர வேற யாரும் அவன ஒன்னும் சொல்லக்கூடாது! எனக்கு மட்டும்தான் அவன திட்டற முழு உரிமையும்! புரியுதா?”

“புரியுது டீச்சர்”

“உங்க மேல ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷனே ரொம்ப பேட்டாதான் இருந்தது எனக்கு. இவ்ளோ நல்ல ஆத்தாவுக்கு இப்படி ஒரு குடிகாரப் புள்ளையான்னு. அதுவும் என்னைக் கட்டிப்புடிச்சு புள்ளப் பெக்கற வரைக்கும் பேசனப்போவே செம்ம ஆத்திரம்! ஆத்தா உங்கள எரும மாட்டுக் காளன்னு சொல்லி அடிச்சப்போ உள்ளுக்குள்ள ஒரே சிரிப்பு எனக்கு. இவ்ளோ பெரிய உடம்ப வச்சிக்கிட்டு ஆத்தாகிட்ட சின்ன புள்ள மாதிரி அடி வாங்கறானேன்னு ஆச்சரியமாவும் இருந்துச்சு. என்னைப் பாவமா பார்த்துட்டு சோகமா வீட்டுக்குள்ள போனப்பவே தெரிஞ்சிடுச்சு காளை ஒரு புள்ளப்பூச்சின்னு. ஆத்தாவோட அன்பு கிடைக்க, உங்களோட அலப்பறையைப் பொறுத்துட்டுப் போகலாம்னு தான் தோணுச்சே தவிர வீட்ட விட்டு போகனும்னு தோணல எனக்கு.”

“எனக்கு அன்பு காட்டறவங்ககிட்டயும், நான் உசுர வச்சிருக்கறவங்ககிட்டயும் இந்த காளை என்னிக்குமே புள்ள பூச்சித்தான் டீச்சர்! உடம்பு ஹல்க்கு மாதிரி இருந்தாலும்,என் மனசு சில்க்கு மாதிரி ரொம்ப சாப்ட்டு(soft) டீச்சர்!”

அவனுடைய ஒப்பிடுதலில் விழுந்து விழுந்து சிரித்தாள் மங்கை.

“பச்சைத்தண்ணியில குளிச்சிட்டு வந்தப்போ நீங்க போட்டுக் குடுத்தீங்கன்னு காபி குடுத்தாங்க ஆத்தா! குளிருக்கு இதமா அவ்ளோ நல்லா இருந்தது. குடிகாரனா இருந்தாலும் நல்லா காபி போடறானே இவன்னு ஒரு நல்ல எண்ணம் முதன் முதலா உங்க மேல வந்தது அப்போதுதான். மறுநாள் குளிக்க சுடுதண்ணி வச்சது ஆத்தாதான்னு நெனைச்சு அவங்க கிட்ட கேட்டப்போ ரொம்பவே தடுமாறுனாங்க. அப்பவே எனக்கு சந்தேகம். நெக்ஸ்ட் டே சீக்கிரம் எழுந்து மறைஞ்சி நின்னுப் பார்த்தேன் நீங்க அண்டாவ தூக்கிட்டுப் போனத. மனசு ஒரு மாதிரி ஆகிருச்சு. எனக்காக ஒரு ஆளு மெனக்கெடறாங்களேன்னு தெரிஞ்சு ஆனந்தமா இருந்தது. தெரியாத மாதிரியே இருப்போம், எத்தனை நாளைக்கு இது நடக்குதுன்னு பார்க்கலாம்னு நெனைச்சேன். கடைசி வரை சுடுதண்ணி சர்வீசும் காபி சர்வீசும் நிக்கவே இல்ல.”

“அப்பவே கண்டுப்புடிச்சிட்டீங்களா டீச்சர்!” என அசடு வழிந்தான் காளை.

சிரிப்புடன் மீண்டும் அவன் மடியில் அமர்ந்துக் கொண்டாள் மங்கை.

“நீங்க எனக்கு செஞ்சது எல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தான் காளை. ஆனா அது எனக்குள்ள கொண்டு வந்த இம்பேக்ட் ரொம்ப பெருசு! ஏற்கனவே எனக்கு யாராச்சும் பார்த்து பார்த்து இப்படிலாம் செஞ்சிருந்தா, நீங்க பண்ணதெல்லாம் பெருசா தெரிஞ்சிருக்காது. ஆனா அஞ்சு வயசுல இருந்தே சுயமா எல்லாத்தையும் செய்யக் கத்துக்கிட்ட எனக்கு, உங்களோட அக்கறை அப்படியே என் நெஞ்சைத் தொட்டு அள்ளிருச்சு. ஸ்கூட்டி வாங்க கூட்டிப் போனப்போ உங்களோட நெருக்கம், என் கூட வெளிய வரதே விசேஷம்னு சொல்லி புன்னகைச்சது, ஹோட்டல்ல என்னை இம்ப்ரேஸ் பண்ணனும்னு நீங்க வாங்கன பல்பு எல்லாம் என்னால மறக்கவே முடியாது. ரொம்ப நாள் கழிச்சு அன்னிக்குத்தான் மனசு விட்டு நான் சிரிச்சேன். உங்க கூட இருந்தா சிரிச்சுட்டே இருக்கலாம்னு தோணணது அப்போத்தான். உங்க கூட கொஞ்சம் நெருக்கமாகிட்ட மாதிரி ஒரு உணர்வு. ஆனா அந்த ஃபீலிங்குக்கு நான் எந்த பெயரும் வைக்கல. மனச நிர்மலமாத்தான் வச்சிருந்தேன்.”

அவன் மீசையை தனது விரல்களால் சுருட்டி விளையாடியபடியே,

“உங்க மேல எனக்கு வந்த ஃபீலிங்குக்கு அன்புன்னு நான் பெயர் சூட்டனது எப்போ தெரியுமா? எனக்கு தொண்டை வலின்னு ஆத்தா கிட்ட கஷாயம் வைக்க சொன்னீங்களே அப்பத்தான். வாய் திறந்து நான் சொல்லாமலே என்னோட கஸ்டத்த உணர்ந்து அதுக்கு நிவாரணமும் கொடுக்க வச்ச உங்கள அந்த ஷணம் ரொம்ப ரொம்ப புடிச்சது காளை. அந்த கஷாயம் தொண்டைக்குழியில இறங்கனப்போ எனக்கு அதோட கசப்புத் தெரியல, தேனோட தித்திப்புத்தான் தெரிஞ்சது! கொஞ்சம் கொஞ்சமா உங்க மேல இருந்த அன்பு காதலா மாற நேரம் பார்த்துட்டு இருந்துச்சு. ஆனாலும் நீங்க எது சொன்னாலும் வெட்டி வெட்டி பேசனேன்! நீங்க வேற நான் வேறன்னு காட்ட முயற்சி பண்ணேன். அதுக்கெல்லாம் என் மனசுல இருந்த பயம் தான் காரணம். நமக்கெல்லாம் இந்த மாதிரி அன்பு பாசம்லாம் நிலைச்சு நிக்குமா, இல்லாத கானலை தேடிப் போறோமா, ஏற்கனவே கதிர் விஷயத்துல பட்ட அடி மாதிரி திரும்பவும் படனுமா, அப்பாவுக்கு குடுத்த வாக்கு என்னவாகறது இப்படின்னு பல சிந்தனை எனக்குள்ள. உள்ளுக்குள்ள போராடிட்டு இருந்த நான், கராத்தே கிளாஸ் அப்போ புரை ஏறுன டைம்ல பதறிப் போய் தலையைத் தட்டி இதமா முதுக நீவிக் குடுத்தீங்க பாரு, அங்கத்தான் டோட்டல் ப்ளாட் ஆனேன்! விழுந்துட்டேன் காளை, உங்க அன்புல அப்படியே மயங்கி விழுந்துட்டேன்” என சொன்னவள் அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்துக் கொண்டாள்.

அவளை மிக மென்மையாக அணைத்துக் கொண்டவன்,

“என் மேல இவ்ளோ ஆசை வச்சிருந்தீங்கன்னு எனக்குத் தெரியவே இல்லை டீச்சர்! எவ்ளோ பெரிய மாங்கா மடையனா இருந்துருக்கேன் நான்” என புலம்பினான்.

“சேச்சே! என் புருஷன் மடையன் கிடையாது! நான் தான் என் காதல கண்ணால கூட காட்டிக்கலையே! பிறகு எப்படி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்! இங்க கோவிச்சுட்டு வந்தப் பிறகு கூட அதைத்தான் நெனைச்சு நொந்துக்கிட்டேன்! என் காதல உங்களுக்கு காட்டாம, நீங்களே புரிஞ்சி நடந்திருக்கனும்னு எப்படி முட்டாள்தனமா நான் நெனைக்கலாம்! நீங்க என்ன பரமாத்மாவா என் மனசுக்குள்ள உள்ளத கண்டுப் புடிக்கறதுக்கு!”

“என் டீச்சர் ஒன்னும் முட்டாள் இல்ல! எனக்குத்தான் மூளையில்ல அவங்க காதல புரிஞ்சுக்க!”

“இதெல்லாம் ரொம்ப ஓவர் காளை சார்! என் தப்ப ஒத்துக்க விடாம எல்லாத்தையும் உங்க தலையிலேயே போட்டுக்கறீங்க! இந்த மாதிரிலாம் இருக்காதீங்க காளை! மங்கை உன் தல மேல ஏறி நின்னு டப்பாங்குத்து ஆடிருவா! பார்த்து சூதனமா இருந்துக்கோங்க!”

“நீங்க டப்பாங்குத்து என்ன கரகாட்டமே ஆடனாலும் இந்த காளையோட தலை தாங்கும் டீச்சர்”

அமைதியாக அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தாள் மங்கை.   

“என்ன டீச்சர் அப்படி பார்க்கறீங்க!”

“என் புருஷன நான் எப்படி வேணும்னாலும் பார்ப்பேன்!”

“பாருங்க பாருங்க! என்னை மாதிரி ஆளுங்கள எல்லாம் பார்க்க பார்க்கத்தான் புடிக்கும் டீச்சர்!”

“அது உண்மை இல்ல காளை! உங்கள மாதிரி ஆளுங்கள பழக பழகத்தான் புடிக்கும்! நான் கையை சுட்டுக்கிட்டப்போ நீங்க பதறனத உள்ளுக்குள்ள எவ்ளோ ரசிச்சேன் தெரியுமா காளை! நான் சமைச்சத நீங்க சாப்பிடாமலே போனது கூட எனக்கு மகிழ்ச்சியாத்தான் இருந்தது. உங்க மேல நான் வச்சிருக்கறது அன்பா, பாசமா, காதலா, நேசமான்னு நான் தவிச்ச நேரத்துல தான் மறைய அப்பா மாப்பிள்ளையாப் பார்த்துருக்காருன்னு தெரிய வந்தது. என்னோட உணர்வுகள அப்படியே மனசுக்குள்ள சமாதி கட்டி வச்சேன். சமாதிய துளைச்சு முளைக்கிற புல்லைப் போல நான் வச்ச நேசம் என் நெஞ்சை உடைச்சிக்கிட்டு உங்க காலடில வந்து விழுந்துச்சு! எப்போ தெரியுமா? நான் ஸ்கூட்டில இருந்து விழுந்து வாரின அன்னைக்கு. நீங்க எனக்காக பயந்து, பதறி, பைக்க அப்படியே விட்டுட்டு ஓடி வந்தப்போ என்னைப் பின்னி பிணைஞ்சிருந்த தளைகள எல்லாம் அறுத்து எறிஞ்சிட்டு என் இதயம் உங்க காலடில அப்படியே விழுந்துடுச்சு! அப்போத்தான் என் உணர்வுக்கு காதல் என்கிற பெயரை சூட்டினேன்! எல்லார் முன்னுக்கும் என்னைத் தூக்கிட்டு நீங்க நடந்தப்போ முடிவு எடுத்தேன், சத்தியமா எதுக்காகவும் யாருக்காகவும் உங்கள இனி விட்டுக் குடுக்க மாட்டேன்னு. அதுக்கு அப்புறம்தான் நிம்மதியா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிட்டேன்!” என சொல்லி மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினாள் தவமங்கை.

“இதெல்லாம் ஏன் டீச்சர் என் கிட்ட சொல்லல! நான் ஜாம் ஜாம்னு நம்ம கல்யாணத்த நடத்திருப்பேன்ல!”  

காளையின் அதக் கேள்வியில் மங்கையின் மரியாதை காற்றில் பறந்துப் போயிருந்தது.

“யாரு!!!! நீ!!! ஜாம் ஜாம்முன்னு கல்யாணத்த நடத்திருப்ப?” என கேட்டவள் அவன் நெஞ்சிலேயே குத்தினாள்.

“நீ எப்படிப்பட்ட சூராதி சூரன்னுதான் மொரட்டுக் காளை புட்டு புட்டு வச்சிட்டானே! உன் வண்டவாளத்தைத் தண்டவாளத்துல ஏத்தனவன் அவன் தான். முத்துக்காளைய நம்பனீங்க, உங்களுக்குப் பட்ட நாமத்த சாத்திருவான்னு உன்னைப் பத்தி எனக்குத் தெளிவா புரிய வச்சது அவன் தான். டீச்சர், டீச்சர்னு தூரமா இருந்து பார்த்துட்டே உருகி உருகி சைட்டடிக்கத்தான் நீ லாயக்கு! இல்லைன்னு சொல்லு பார்க்கலாம்! நான் மட்டும் பஞ்சாயத்த ஏற்பாடு செய்யலன்னா நமக்கு கல்யாணம் ஆகிருக்குமா? நானே உன் கையைப் புடிச்சு இழுக்காம இருந்திருந்தா என் வயித்துக்குள்ள மாங்கொட்டைத்தான் வந்துருக்குமா? மறைமுகமா ஸ்கூட்டி பழுது, ரூம்ல எலின்னு எவ்ளோ க்ளூ குடுத்தேன் நெக்ஸ்ட் லெவலுக்குப் போகலாம்னு! அது எதுவுமே உனக்குப் புரியல! ஆனா அதுக்கூட எனக்கு ஹேப்பியாத்தான் இருந்துச்சு! என் காளை எவ்ளோ இன்னசண்ட் பாரேன்னு அவ்ளோ பெருமையா இருந்துச்சு!” என சொன்னவளின் முகம் சட்டென கலங்கியது.

“என்னடாம்மா!” என உருகினான் காளை.

“பஞ்சாயத்துல என்ன சொன்ன நீ, டீச்சர் என்னைக் காப்பாத்தனும்னு உங்க வாழ்க்கையைப் பழி கொடுக்காதீங்கன்னு சொன்னல்ல! நானே இல்லாத வேலையெல்லாம் செஞ்சு கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தா, இவரு அசால்ட்டா கையை வெட்டக் குடுக்கராறாம்! உன் கை என்ன பழுத்த மாங்காயா, போற வரவனுக்கு துண்டுப் போட்டுக் குடுக்க! நான் எவ்ளோ பயந்துப் போனேன் தெரியுமா? கடைசில கல்யாணம் நடக்கலைன்னா நான் டெட் பாடியா ஆகிடுவேன்னு சொன்னதும் தான் அடங்கன நீ! அப்பாடா ஒரு வழியா உன்னைக் கைப்பிடிச்சுட்டேன்னு நிம்மதியா இருந்தா, வீட்டுல வந்தும் அதையே சொல்லுற! என்னை விட்டுடுங்க, வேற கல்யாணம் பண்ணிக்குங்கன்னு! அப்போ எனக்கு வந்த கோபம் இருக்கே!!!! ப்ளாஸ்டிக் பக்கேட்டா இருக்கவும் தப்பிச்ச, இல்லைன்னா ரத்தக்காயம் ஆகிருக்கும்!” என சொல்லியவள் அவனை மொத்து மொத்து என மொத்தினாள்.

“கை வலிக்கப் போகுது டீச்சர் உங்களுக்கு!” என அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் காளை.

“தாலி கழுத்துல ஏறன நொடி…எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா காளை! எனக்கே எனக்குன்னு என் காளை, என்னைத் தங்கமாய் தாங்க என் ஆத்தா, ஆசையாப் பார்த்துக்க மச்சக்காளை அப்பான்னு எனக்கும் கடவுள் சொந்த பந்தத்தக் குடுத்துட்டான்! இனி நான் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத அனாதை இல்லைன்னு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. நெஞ்செல்லாம் அடைச்சிக்கிட்டு கண்ணுல ஆனந்தக் கண்ணீர் பொலபொலன்னு கொட்ட ஆரம்பிச்சிருச்சு!”

அன்றைய நினைவில் இன்றும் கண் கலங்கி அழுகை வந்தது அவளுக்கு.

“உங்களுக்கு கண்ணு கலங்குனா காளைக்கும் கண்ணு கலங்கும் டீச்சர்! நீங்க பட்ட கஸ்டமெல்லாம் போன பிறவில நடந்ததுன்னு நெனைச்சுக்குங்க! இனி இந்த காளை டீச்சர எப்பவும் சந்தோஷமா வச்சிக்குவான்! என் செல்ல அம்மும்மால்ல, அழாதீங்க!” என அணைத்துத் தேற்றினான் தன் மனைவியை.

அவன் அணைப்பில் அழுகை மெல்லிய விசிப்பாய் மாறிப்போக,

“மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்

முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்” பாட்டு கேட்டுருக்கிங்களா காளை! என் காதல் மொட்டு மாதிரி மலர மறுத்து மூடியே இருந்துச்சு. உங்க அன்புதான் தென்றல் போல என் காதலை முட்டி தொட்டு திறந்து அதை மலர வச்சது! ஐ லவ் யூ சோ மச்! ம்மா ம்ம்ம்மாஆஆ ம்ம்மா(ஐ லவ் யூ)” என மெல்லிய புன்னகையுடன் சொன்னவளுக்கு கண்ணை சொருகியது.

பதிலுக்கு இவன்,

“எலிசு, நானும் ஆவ் தூசு மொக்கத் தான்” என சொன்னான்.

தூக்கக் கலக்கத்திலும் மெல்லிய சிரிப்பு உதட்டில் படர,

“அது ஆவ் துஷோ மோக் கோர்த்தா!” என சொல்லியபடியே அவன் நெஞ்சை மஞ்சமாக்கித் தூங்கிப் போனாள் மங்கை. மசக்கை, நெஞ்சில் இருந்த பாரங்கள் நீங்கிய உணர்வு என எல்லாம் சேர்த்து அவளை மீண்டும் தூக்கத்தில் ஆழ்த்தியது. ஒரு மணி நேரம் கண்ணயர்ந்தவள், எழுந்ததுமே காளையைக் கிளப்பி கடை வீதிக்கு வந்து விட்டாள்.

பில்லைக் கட்டி விட்டு வந்த மனைவியின் கைகளில் இருந்த பைகளை வாங்கிக் கொண்டு அவள் கையைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டான் காளை. சந்தோஷமாக சுற்றித் திரிந்து தரமான ஹோட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு தங்குமிடத்துக்கு வந்தார்கள் இருவரும்.

உடை மாற்றி வந்தவளை தன் கை வளைவில் படுக்க வைத்துக் கொண்டான் காளை.

“ரொம்ப நடந்துட்டிங்க டீச்சர்! தூங்குங்க”

“மாட்டேன்!”

“ஏன்?”

“எலிசுன்னு கூப்புடுங்க!”

“ஐயோ வேணாம் டீச்சர்!” பதறினான் காளை.

“ஏன் வேணா?”

“வயித்துல பாப்பா இருக்கு டீச்சர்!”

“இருக்கட்டும்!”

“இந்த மாதிரி டைம்ல எலிச கூப்புடலாமா டீச்சர்?” என அப்பாவியாக கேட்டான் காளை.

அவளுக்கு சிரிப்பு எட்டிப் பார்த்தது. அவன் மேல் ஏறி வயிற்றில் அமர்ந்துக் கொண்டாள் மங்கை.

“வேணா டீச்சர்!” நெளிந்தான் காளை.

“வேணாம் வேணாம்னு நீங்க நெளியறப்பத்தான் எலிசுக்கு வேணும் வேணும்னு தோணுது!” என அவனை சீண்டியவளுக்கு முகம் கொள்ளா சிரிப்பு.

“வேணாமே டீச்சர்! நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க! சரியா சாப்பிட வேற மாட்டறீங்க! டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிட்டு, அவர் என்ன சொல்றாருன்னு கேட்டுகிட்டு, எலிச கூப்டுக்கலாம்! ப்ளிஸ் டீச்சர்!” என கெஞ்சவே ஆரம்பித்து விட்டான் காளை.

ஆசை இருந்தும் தன்னுடைய நலம் பேணும் கணவனை காதலாகப் பார்த்திருந்தாள் மங்கை. தூக்கம் கண்ணை சுழட்டினாலும் இன்னும் இன்னும் அவனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என ஆசை அவளை தூங்க விடாமல் செய்தது.

“நீங்க சொல்லுங்க இப்போ! என்னைப் பார்த்த நொடியே எப்படி நான் தான் உங்க குவின் எலிசபெத்னு தோணுச்சு?”

“உங்கள பார்த்த முதல் நொடியே நான் விழுந்துட்டேன் டீச்சர்”

“தெரியும் தெரியும்! நான் தானே அடிச்சு சாய்ச்சேன்!” என சிரித்தாள் மங்கை.

“என் மேல இப்ப ஏறி உட்கார்ந்திருக்கீங்களே அதே மாதிரி ஏறி உட்கார்ந்திருந்தீங்க! கண்ணு முன்ன ஒரு அழகான தேவதை, பின்னால ரெக்கை மட்டும்தான் இல்ல! உங்கள பார்த்ததும் அடிச்ச சரக்கோட போதைலாம் சர்ருன்னு இறங்கிடுச்சு! உங்க தலை பின்னால ஒளி வட்டம் வேற தெரிஞ்சது!”

“ஒளி வட்டம்லாம் ஒன்னும் இல்ல! அடிச்ச சரக்கோட சைட் இபேக்ட்டா இருக்கும் அது!” என கிண்டலடித்தாள் மங்கை.

“போங்க டீச்சர்! எனக்கானவ இவதான்னு உங்கள பார்த்ததுமே தோணிருச்சு! உங்கள மாதிரி பாசம் வந்து, அன்பு வந்து, நேசம் வந்து அப்புறமா காதல் வந்த மாதிரிலாம் நமக்கு ஆர்டரா வரல. பார்த்ததுமே பத்திக்கிச்சு, கண்டதுமே விக்கிக்கிச்சு, அணைச்சதுமே பிச்சிக்கிச்சு!”

“என்ன பிச்சிக்கிச்சு?”

“காதல்தான் டீச்சர்! படிச்சப் பொண்ணுதான் வேணும்னு சலம்பிக்கிட்டு இருந்தவனுக்கு, இந்த தேவதை படிச்சிருக்கா இல்லையா, நல்லவளா கெட்டவளா, அன்பானவளா அரக்கியா, பணக்காரியா பிச்சைக்காரியான்னு எதுவும் மனசுல ஓடல! என் எலிசு இவதான்னு அங்கயே அப்பவே ஃபிக்ஸ் ஆகிட்டேன்! அன்றைக்கு இருந்தே உங்களோட சுகதுக்கங்களிலே பங்கெடுக்கனும்னு நெனைச்சுட்டேன். உங்கள நல்லா பார்த்துக்கனும்னு முடிவெடுத்துட்டேன்! அதன்படியே இன்னைக்கு வரைக்கும் நடந்துட்டு வரேன் டீச்சர்!”

பார்த்த முதல் நாளே காதல் கொண்டு, அது நிறைவேறாது என தெரிந்திருந்தும் மங்கையை அக்கறையாய், அன்பாய் கவனித்த காளையின் சுயநலமற்ற காதல் அவளின் மனதை மயிலிறகாய் வருடியது. அப்படியே அவன் மேல் சரிந்து ஆசையாய் அவன் நெஞ்சில் முத்தமிட்டாள்.  

தன் மேல் படுத்திருந்தவளை மென்மையாக அணைத்துக் கொண்டான் காளை. அணைத்துக் கொண்டானே, அதோடு தூக்கத்துக்குப் போய் கனவிலாவது குஜாலாக இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது! வாயைத் திறந்து வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டான் முத்துக்காளை.

“உங்க மேல வந்ததுதான் நெஜ காதல் டீச்சர்! லட்டு மேல வந்தது எல்லாம் சும்மா அத்தை மகன்னு ஒரு கிலுகிலுப்பு மட்டும்தான்!”

மெல்ல அணைப்பில் இருந்து விலகி அவன் வயிற்றின் மேல் மீண்டும் அமர்ந்தவள் கண்களை விரித்து உருட்டி,

“யாரு அந்த கிலுகிலுப்பு லட்டு?” என கேட்டாள்.

அவள் பார்த்த பார்வையில் காளைக்கு அல்லு விட்டது!

அதற்கு மேல் முத்து மொத்து வாங்கியதோ, காளை மோளையாகியதோ(ஒரு வகை ஆடு), முத்துக்காளை கொத்துக்காளை ஆனதையோ உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் மக்களே! எஞ்சாய்!!!!!

(அடுத்து எபிலாக்கில் சந்திக்கலாம்)   

 

(ஒருத்தங்க கேட்டிருந்தாங்க, தவாவுக்கு இவ்ளோ செஞ்ச அஜய் ஏன் அரசிக்கு குணமாக ஒன்னும் செய்யலன்னு. அரசிய பத்தி இன்னும் விரிவா எழுதி அவங்க நிலைமைய விளக்கினா இந்தக் கதை ஒரு டாக்குமெண்டரி மாதிரி ஆகிடும். ஏற்கனவே மருத்துவ துறை, சைக்கலோஜி மட்டும்தான் என் கதையில வருதுன்னு லேசான வருத்தம் பலருக்கு இருக்கு. அதனாலதான் அதோட நிறுத்திட்டேன். ஆனா கதையோட ஒன்றிப் போய் கேட்ட அந்த சகோதரிக்கு விளக்கறது என்னோட கடமை.

அரசி அவ்வளவு படிப்பறிவு இல்லாதவங்க. அதோட சின்ன வயசுலயே அவங்க நிலைமைய கண்டுப்பிடிச்சு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க யாரும் இல்லாம மனசுக்குள்ள புழுங்கி மனநோயின் கடைசி ஸ்டேஜ்ல இருக்கறவங்க அவங்க. அவங்களோட மருந்து அஜய் மட்டும் தான். கீழ உள்ளது டாக்டர் சொன்னது.

“மருந்து மாத்திரை கவுன்சலிங்லாம் நான் தருவேன் அஜய். ஆனா நீங்க மட்டும்தான் அவங்களோட மன நோய்க்கு நிவாரணம் ஆகமுடியும். அவங்களோட மருந்தே நீங்கதான், உங்க அன்புதான்.”

என்ன மாதிரி மெடிக்கேஷன், மெடிடேஷன் குடுத்து அவங்கள அமைதியா வச்சிருந்தாலும், அஜய் அன்பு தனக்கு இல்லைன்னு லேசா தெரிஞ்சா கூட மற்றதெல்லாம் விழலுக்கு இறைச்ச நீர்தான். மறுபடி தற்கொலைதான். அவங்களால அந்த உணர்வ கண்ட்ரோல் பண்ண முடியாது. அவங்க சட்டையைக் கிழிச்சிக்கிற அளவு பைத்தியம் இல்ல. ஆனா அஜய் விட்டுட்டா, அப்படி ஆகிடுவாங்க. எந்த மருத்துவர் கிட்ட கேட்டாலும் அவங்களுக்குத் தேவை அன்புதான்னு சொல்வாங்க. ஃபுல் சப்போர்ட் ஆப் பேமிலி, இதுதான் அவங்களுக்கு தேவை. அஜய் அததான் குடுத்தாரு. மங்கை விவரம் அறிஞ்சி அம்மாவையும் அப்பாவையும் விட்டு விலகி அதே சப்போர்ட்ட அரசிக்கு குடுத்தா. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதுன்னு சொல்வாங்க. ஐந்தில் இருக்கும் மங்கைய வளைக்க அஜய் முயற்சி எடுத்துட்டாரு. ஐம்பதில் இருக்கும் அரசிய வளைக்க முடியாதுன்னு புரிஞ்சு தன்னையே அவளுக்கு அர்ப்பணிச்சிட்டாரு. இதுக்கும் மேல எப்படி சொல்லன்னு எனக்குத் தெரியல. இன்னும் விளக்கமா சொல்ல நான் சைக்கலாஜி படிக்கல. நெறைய ஆர்டிக்கல், ஜர்னல்னு படிச்சுத்தான் இந்த டிசார்டர் பற்றி எழுதனேன். எனக்கு புரிஞ்ச வகையில உங்களுக்கு சொல்லிருக்கேன். தப்பு இருந்தா இல்ல சரியா சொல்லாம விட்டிருந்தா மன்னிச்சிருங்க. கேள்வி கேட்டிருந்த சகோதரிக்கும் இத மனசுல நெனைச்சி கேள்வி கேட்காத சகோதரிகளுக்கும் : சாரிம்மா. இதுக்கு மேல எனக்கு விளக்கத் தெரியல. எனக்கு தெரிஞ்ச அளவு சொல்லிருக்கேன். உங்க டவுட்ட கிளியர் பண்ணிருந்தா எனக்கு மகிழ்ச்சி. இல்லைனா ஐம் சாரி..)

(என் மாமனாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. நான் திரும்பி வர வரைக்கும் காத்திருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் டியரிஸ்)