alaikadal-19

அலைகடல் – 19

 

“அப்போ விலக வேண்டியது நானில்லைடி நீதான்… ஏன்னா வேந்தன் உன் ரத்தம் இல்லை என் ரத்தம்” என்ற ஆரவ்வின் கூற்றை உள்வாங்கவே சிறிது நேரம் பிடித்தது பூங்குழலிக்கு.

 

“என்ன சொன்ன… உன் ரத்தமா? என்ன அர்த்தம் இதுக்கு?” புருவம் சுருங்க அவனை குதறிவிடும் வேகத்தில் கேட்டாள்.

 

“நானும் அவனும் இந்த உலகத்துக்கு ஒரே மனுசனோட உயிரணு மூலமாதான் பிறந்திருக்கோம்ன்னு அர்த்தம்” என்றான் அழுத்தந்திருத்தமாய் அதைச்சொல்ல பிடிக்காத தொனியில்.

 

“வாட்… உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? அது உறுத்தவே உறுத்தாதா… இப்படி… இப்படி பச்சையா கேவலமா பொய் சொல்லி என்கிட்ட இருந்து அவனை பிரிச்சி உன் இஷ்டத்துக்கு ஆட வைக்கனுமா?” அருவெறுப்பில் வந்து விழுந்தது வார்த்தைகள். 

 

கோபம் வந்தாலும் அதற்கு பதில் கூறாமல் தன் செல்பேசியை எடுத்து பரபரவென்று எதனுள்ளோ சென்றவன் பின் பூங்குழலியை நெருங்கி அவளின் கரத்தைப்பற்றி அதனுள் திணித்தான். 

 

“பார்… நல்ல மூளையைத் திறந்து அதுல இருக்குற பைல், வீடியோ எல்லாத்தையும் பார்த்துட்டு அப்புறம் பேசு” இப்போது அவனிடம் கோபம் மட்டுப்பட்டிருந்தது. இனி தான் செய்வதை மறுக்கமாட்டாள் மறுக்கவும் முடியாது என்ற திடமிருந்தது கூடுதலாக தெனாவட்டும் இருந்தது.

 

யாரிடமும் சொல்லக்கூடாது என்று ரித்தேஷ் மூலம் உண்மை தெரிந்ததும் மறைத்தவனும் இவன்தான். அதை இவ்வளவு விரைவாக வெளிப்படுத்த வேண்டி வருமென்று நினைத்திருக்க மாட்டான். இனியும் வெளிப்படுத்தாவிட்டால் எங்கே தன்னிடம் இருந்து முற்றிலும் பூவேந்தன் பிரிந்து செல்லும் அபாயம் இருக்க ஏனோ அதைமட்டும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

 

தம்பி என்று தெரியும் முன்பே வைத்த பாசம். இருவருடங்கள் முன் இந்த ஆதாரங்களுடன் அவன் யாரென கண்டுபிடிக்கையில் எதிர்பாராமல் உடன்பிறந்தவன் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தானே தவிர பாசம் எள்ளளவும் குறையவில்லை பதிலுக்கு உரிமையில் நெருக்கமாக மாறியதுதான் இப்போது அவன் செய்வதிற்கெல்லாம் காரணம்.

 

பூங்குழலிக்கோ பூவேந்தன் பிறந்ததும் தந்தை தன்னை கூட்டிக்கொண்டு மருத்துவமனை சென்றது பசுமையாக நினைவிலிருக்க, “இதெல்லாம் எப்படி நம்புறது? அதுவும் நீ கொண்டு வந்ததாலேயே நம்பமுடியாது” என்றாள் முயன்று அலட்சியமாய். உள்ளுக்குள்ளோ இதயம் தடதடத்தது.

 

“அதை முழுசா பார்த்துட்டு நம்பமுடியாதுன்னு சொல்லு நான் கிளம்புறேன்” என்றான் சாவகாசமாய்.

 

அவன் கூறியதற்காகவே அவசரஅவசரமாய் பார்த்து நம்பமுடியாது என்று சொல்ல நினைத்து பார்வையை அலையவிட்டவளுக்கு அவளையும் மீறி உள்ளே இழுத்தது ஒரு காகிதத்தின் புகைப்படம். 

 

அதுவும் அவள் தந்தை கணேசனின் கையெழுத்தைத் தாங்கிய பழைய காகிதத்தின் புகைப்படம். மனம் அசாதாரணமாய் துடிக்க வெளிப்படையாய் கைகள் நடுங்க ஆரம்பித்தது. 

 

பூவேந்தன் பிறந்த மருத்துவமனையின் பெயர் பொறித்த காகிதத்தில் குழந்தை இறந்ததாக பதிவு செய்யப்பட்டு தந்தையின் பெயருக்கு கீழே அவரின் கையெழுத்து இருக்க தேதியோ பூவேந்தன் பிறந்த தினத்தை காட்டியது.

 

நம்பாதே அதனை நம்பாதே என்று உள்ளே ஒரு குரல் பலவீனமாய் கத்த,  மனதை திடப்படுத்தி மொத்தமாய் பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்தில் காணொளியை ஓடவிட்டாள்.

 

அதில் சுமார் ஐம்பது வயதிருக்கும் ஒருவர் தோன்ற எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று உற்றுப்பார்க்கையில் அவரே பேச ஆரம்பித்தார். 

 

“நான் தான் கோபாலகிருஷ்ணன். கணேசனும் நானும் ஒரே ஊர்ல இருந்து வந்து கல்லூரில ஒண்ணா படிச்சோம். சொல்லுங்க அவனைப் பத்தி என்ன தெரியணும்” எதிரில் இருக்கும் துப்பறியும் ஆட்களிடம் பேசுகிறார் என்ற அளவில் புரிந்தது பூங்குழலிக்கு.

 

கூடவே பாட்டி வீட்டில் அவளும் தாயும் இருக்கும்பொழுது தந்தை சென்னையில் இருந்து கிராமத்திற்கு வருகையில் தன்னைக் கூட்டிக்கொண்டு காணச்செல்லும் கோபால் மாமா இவர்தான் என்றும் கண்டுபிடித்தாள். முகம் குழப்பத்தைத் தத்தெடுத்து, ‘இவர் ஏன் வருகிறார்’ என்பதுபோல்.

 

“கணேசன் சார் தம்பி பேமிலி இப்போ கிராமத்துல இல்லை. நிலபுலன் வித்துட்டு வெளியூர் போனதா கேள்விப்பட்டோம் அதான் எந்த ஊருக்கு போனங்கன்னு உங்களுக்குத் தெரியுமான்னு கேட்க வந்தோம்” என 

 

அவரோ பதிலுக்கு, “இல்லையே… எனக்கு சொந்தஊர் கூட தொடர்பு விட்டுப்போயே பல வருஷம் ஆச்சு. நான் சென்னை வந்தது கணேசன் மூலமாதான். அதுக்கப்புறம் வடமாநிலத்துப் பக்கம் குடும்பத்தோட போயிட்டோம். அடிக்கடி இல்லையென்றாலும் நேரம் கிடைச்சா பார்த்து பேசுவோம். நான் கடைசியா கணேசனை பார்த்தது கூட ஹாஸ்பிடல்லதான். அதுவரைக்கும் கணேசன் தம்பி கிராமத்துலதான் இருந்தான்” 

 

“ஹாஸ்பிடல்ல பார்த்தீங்களா… எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா சார்”

 

“என்னத்த சொல்ல… எங்கம்மா வயித்துல ஆபரேஷன் செஞ்சி பத்து நாள் கழிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போறப்போ பார்த்தேன். பாவம் ரொம்ப உடைஞ்சி போயிருந்தான் அவனோட பொண்டாட்டி மாடிப்படில இருந்து தவறி விழுந்ததுல ரெண்டாவது குழந்தையை காப்பாத்தமுடியாம போயிருச்சு… என்னால முடிஞ்ச அளவு தேற்றினேன். அம்மாவை கூட்டிட்டு போகவேண்டி இருந்ததால நிதானமா ஆறுதல்கூட சொல்ல முடியல”

 

“அதுக்கப்புறம் அவங்களை பார்க்கலையா சார்”

 

“இல்லை ஃபோன் பண்ணினேன் எடுக்கல கூடவே திடீர்ன்னு இடம்மாற்றம் வேற வரவும் கிளம்பிட்டேன். அவன் இறந்துபோனதே நாலு வருஷம் கழிச்சுதான் தெரிஞ்சது” இதயம் கணக்க பெருமூச்சுவிட்டார். 

 

“ஓகே சார் தகவலுக்கு நன்றி”

 

“சரிப்பா எதுக்கு அவன் குடும்பத்தை தேடுறீங்க? கணேசன் குடும்பம் அவங்க கூட இருக்காங்களா? அவன் பொண்ணு பூங்குழலி இருக்கே நல்லாருக்காளா?” அடுக்கடுக்காய் கேள்வி கேட்டவரிடம் இவர்கள் சமாளிக்கும் பதில் எல்லாம் கட் செய்யப்பட்டு அடுத்ததாக ஒரு பெண்மணி தோன்றினார்.

 

வேந்தன் பிறந்த மருத்துவமனையில் தற்போது தலைமைப் பொறுப்பில் இருக்கும் மருத்துவர் அவர். அன்று சாந்தாவிற்கு சிகிச்சை அளித்தவரும் இவரே. 

 

“உங்க மருத்துவமனையில் பதிமூன்று வருஷம் முன்னால மாடிப்படில இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பொண்ணுக்கு பிரசவம் பார்த்திருக்கீங்க. குழந்தை இறந்ததை மறைத்து வேறொரு குழந்தையோட அவங்களை அனுப்பிருக்கீங்க. இது எவ்ளோ பெரிய குற்றம் தெரியுமா? ஒரு டாக்டரா உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை” 

 

கணேசனை பற்றி விசாரிக்காமல் நேரடியாய் குற்றம் சுமத்தினர் துப்பறிவாளர்கள். இதுவும் துப்பறிதலில் ஒருவகைதான். நேரடியாய் கேட்காமல் மறைமுகமாக அவர்களையே சொல்ல வைப்பது. 

 

அவரும் அதையே செய்தார். யோசனையில் புருவத்தை சுருக்கி, “அப்படி எல்லாம் நாங்க… ஒஹ் நீங்க யாரை சொல்றீங்கன்னு புரிஞ்சிருச்சி. இதுவரை நான் பார்த்த சர்வீஸ்ல அப்படி ஒருத்தரை நான் பார்த்ததேயில்லை. அவர்கிட்ட… அதான் பேஷன்ட்டோட ஹஸ்பண்ட் கிட்ட உண்மைய சொல்லிட்டோமே. அப்புறம் வெளிய போனவர் திரும்ப வேறொரு குழந்தையோட தான் வந்தார். எங்க குழந்தை இதான் டாக்டர் அவகிட்ட உண்மைய சொல்ல வேண்டாம்ன்னு கேட்டுகிட்டார். மனைவி மேல பாசம் அதிகமா வச்சிருப்பார் போல ஹாஸ்பிடல் ரூல்ஸ் மீறி மனிதாபிமானம் அடிப்படையில்தான் உண்மையை மறைச்சோம் தட்ஸ் ஆல்.

 

இதனால் எந்த பிரச்சனையும் மருத்துவமனைக்கு வராதுன்னு உத்தரவாதம் வாங்கிதான் அனுப்புனோம். சோ எங்க மேலயோ நிர்வாகம் மேலயோ தப்பு சொல்ல முடியாது மிஸ்டர்” நீளமாக பேசி முடிக்கையில் லேசாய் மூச்சு வாங்கியது அவருக்கு. 

 

“சாரி மேம்… ரியல்லி சாரி. தவறான தகவலால் உங்களை விசாரிக்க வந்துட்டோம். சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்” அவர்கள் கிளம்ப அத்துடன் காணொளியும் முடிந்தது.

 

அதைப் பார்த்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது தந்தையின் பாசத்தை எண்ணி. நிச்சியம் தனக்காகதான் இம்முடிவு என்பதில் சந்தேகமேயில்லை பூங்குழலிக்கு. தான் ஆவலாக எதிர்பார்த்த புதுவரவு இல்லையென்றால் வருந்துவேன் என்றெண்ணி வேறொரு குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார் என்றால் அவர் எத்தகைய பாசத்தை தம்மீது வைத்திருக்க வேண்டும். 

 

“அப்பா…” பூங்குழலியின் உள்ளம் மௌனமாய் கதறியது.

 

அதிலே மூழ்கப்போனவளின் மனதை அறிவு தட்டியெழுப்பியது தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ஆரவ்வைக் கண்டு. கலங்கிய கண்களை உள்ளிழுத்தவளுக்கு அடுத்ததை பார்க்க மனமேயில்லை ஆனாலும் தந்தை கொடுத்த உத்திரவாத கடிதத்தையும் பார்த்துமுடித்தவள் கண்களை இறுகமூடிக்கொண்டாள். உள்ளமெல்லாம் வெறுப்பு வெறுப்பு வெறுப்பு மட்டுமே. 

 

எதிரில் இருந்தவன் மேல் வெறுப்பு. அவனிடம் தோற்ற வெறுப்பு. தனக்கென்று இருந்த ஒரு சொந்தமும் சொந்தமில்லை என்ற வெறுப்பு. அந்த வெறுப்பெல்லாம் சேர்ந்து அவளை வெறி ஏற்றியது. 

 

கடைசியாக இருந்த சிப்லிங் டெஸ்ட் (உடன்பிறப்புக்கான டிஎன்ஏ பரிசோதனை) ஆரவ் மற்றும் பூவேந்தனை ஒரே ரத்தத்தில் பிறந்த உறவு என்று உறுதி கூற வாயில்லா செல்பேசியிடம் ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் காட்டி தரையில் தூக்கி அடித்தாள்.

 

“ஏய்…” என்ற கூவலுடன் சிதறு தேங்காயாய் சிதறியிருந்த செல்பேசியின் பாகங்களை எடுத்தவன் கோபத்தோடு திரும்ப அவளின் வெறித்த பார்வையைக் கண்டவனுக்கு உள்ளுக்குள் எப்போதும் அவளைக்கண்டால் வரும் உணர்வு எழுந்தது. 

 

அதனை ஒதுக்கி அவளை நெருங்கியவனிடம், “பொய்… இதெல்லாம் பொய்தானே? நான் நம்பமாட்டேன்… நீ… நீ தான் ஏதோ செஞ்சிருக்க” இதெல்லாம் இவன் செட் அப்பாக இருக்காதா? பொய் என்று சொல்லிவிட மாட்டானா என்ற கடைசி நப்பாசையில் உயிர்வலியை கண்ணில் தேக்கி கேட்க

 

ஆரவ்விற்கோ அந்த வலி அவளின் கண்களின் மூலம் உள்ளத்தில் இறங்கி உயிர்வதை கொடுத்தது. அதுவும் அந்த கண்கள்… தன் தாயையும் இதேபோல் ஒருமுறை பார்த்ததை நினைவுகூற முதன்முதலாய் அவளின் கண்களை நேர்கொண்டு காணமுடியாமல் தடுமாறினான். 

 

அதில் என்ன புரிந்ததோ விரக்தியுடன் கூடிய கோபத்தில், “வந்த வேலை முடிஞ்சதுல… வெளிய போ” என்றாள் ஆங்காரமாய்.

 

“பூங்குழலி…” என்று அழைத்தவனிடம்

 

“உன்னை வெளிய போன்னு சொன்னேன். கெட் அவுட் ப்ரம் மை ஹவுஸ்” அடிவயிற்றில் இருந்து கத்தினாள். 

 

அவன் வெளியேறாமல் அங்கேயே அசையாமல் நிற்கவும் எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ டீபாவில் வைத்திருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாய் அவன் மீது எறிய ஆரம்பித்தாள். 

 

அதில் அன்னிசையாய் பின்னால் நகர்த்தவனிடம் டீவி ரிமோட், புத்தகம், பர்ஸ் எல்லாம் பறக்க, “போ… போன்னு சொல்றேன்ல… என் கண் முன்னாடி நிற்காத… என்னைக்கு உன்னைப் பார்த்தேனோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு… சந்தோசம் போச்சு… எல்லாம் போச்சு” சொல்லிக்கொண்டே கடைசியாக இருந்த டம்ளரை வீச ஆரவ்வின் கவனக்குறைவில் அவனின் நெற்றியைப் பதம்பார்த்தது அது. 

 

சர்ரென்று உச்சந்தலைக்கு ஏறிய வலியை தாங்கமுடியாமல், “ஸ்ஸ்ஸ்…” என்றவாறு அடிபட்ட இடத்தில் அமுக்கி பிடித்தவனின் விரலில் ஈரம்பட, விரலைப் பார்த்தவன் அதில் ஒட்டியிருந்த உதிரத்தைக் கண்டு திடுக்கிட்டான்.  

 

பூங்குழலியோ இப்போது டீபாவை தள்ளிவிட்டு அடுத்ததாக கைக்கு எதுவும் அகப்படாததால் ஷோகேஷ் பக்கம் நகர பாய்ந்து சென்று அவளை நகரவிடாமல் பிடித்தான் ஆரவ்.

 

“பூங்குழலி ரிலாக்ஸ்… வேந்தன் இப்போவும் உன் தம்பிதான் அவனை உன்கிட்ட இருந்து பிரிக்க நான் நினைச்சதே இல்லை. என்னை அவனிடம் இருந்து ஒதுக்காதே என்றுதான் சொல்றேன்” என்று முடிக்கவும் இருகைகளாலும் அவன் சட்டையை கொத்தாக பிடித்தாள் அவள்.

 

நேருக்கு நேரான நெருக்கமான பார்வையில் பாவையவளின் கோபம் அதிசயமாய் ஆரவ்விற்கே மூச்சடைக்க செய்ய,

 

“என்ன பிச்சை போடுறியா? யாருக்கு வேணும் உன்னோட பிச்சை? எனக்கு யாரும் வேணாம்… வேணவே வேண்டாம். போயிரு… அப்படியே குட்டாவையும் கூட்டிட்டு போயிரு” இதை சொல்லும்போதே முகம் ரெத்தமென சிவந்தது.

 

ஆரவ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் தம்பியின் மீது வைத்திருந்த அளவு கடந்த பாசத்தை உணர்ந்ததால், உண்மையைச் சொன்னால் தன்னைத் தடுக்கமாட்டாள் என்றெண்ணினானே தவிர இப்படி மொத்தமாக இருவரையும் ஒதுக்குவாள் என்று எதிர்பார்க்காமல் போனான். 

 

அவள் விஷயத்தில் முதலில் இருந்தே தான் செய்வது ஏறுக்குமாறாக செல்வதில் அவன் மீதே அவனிற்கு அப்பொழுது எரிச்சலாக வந்தது.

 

கோபத்தில் இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்த உதட்டை கடித்து அவன் சட்டையை பிடித்திருந்த தன் கைகளை விடுவித்தவள் அவனின் கைகளையும் தட்டிவிட,

 

அவன் விட்டதும் பலமின்றி கீழே மடங்கி மண்டியிட்டு விழுந்தவள், முகத்தினை மூடி, “எனக்கு யாரும் இல்லை… யாருமே இல்லை… யாரும் வேணாம்” என்று விம்மி வெடித்து அழ ஆரம்பித்தாள்.

 

அதைப் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு பதினோரு வருடங்கள் முன் தாயை இழந்த பின் மறைந்து மறந்துப்போன கண்ணீர் அவனையும் மீறி வெளிவர, அவளை அப்படியே அள்ளி நெஞ்சுக் கூட்டினுள் இறுக அணைத்து ‘நானிருப்பேன் உன் ஆயுள் முழுமைக்கும்’ என்று சொல்லத் தோன்றியது. 

 

தோன்றியதைச் செய்தே பழக்கப்பட்டவனும் அவளருகே மண்டியிட்டு பூங்குழலியை இறுக அணைக்க, ஏனோ நெஞ்சடைத்துக்கொண்டதால் அதற்கு மேல் மனதில் இருந்த வார்த்தைகள் வெளிவரவில்லை ஆரவ்விற்கு.

 

ஆனால் தனக்குள் அடங்கி இருந்தவளின் அழுகை நின்று உடலும் எதிர்ப்பின்றி இருக்கவும் அவளை விலக்கிப்பார்க்க, தன் உணர்விழந்து அவன் முன் இரண்டாம் முறையாக மயங்கியிருந்தாள் பூங்குழலி. 

 

சில நாட்களாகவே அவள் பால் தோன்றிய பெயரறியா உணர்விற்கு அவள் உணர்விழந்து கைகளில் சரிந்த அந்த நொடியில் ஆரவ்வின் மனம் பெயர் சூட்டியது அவ்வுணர்வின் பெயர் காதலென.

 

‘காதலா… நானா?’ என்ற அவனின் கேள்விக்கு அவனின் கண்களில் வழியும் நீரும் இதயத்தில் குத்தும் வலியும் ஐயம் திரிபுர சாட்சி கூறி காதலேதான் என்று அடித்துக்கூறியது. 

 

ஒருவனுக்கு காதல் அழகைப் பார்த்து வரலாம், அறிவைப் பார்த்து வரலாம், மனதைப் பார்த்தும் வரலாம். ஆனால் இங்கு அவளின் வலியைப் பார்த்ததும் அவனின் இதயம் வலித்த வலியில் காதல் என்று உணர்த்தவனுக்கு அதை எண்ணி சந்தோஷப்பட முடியாதபடி பெண்ணவளின் வலி தடைவிதிக்க, அவளது வலிக்கு காரணகர்த்தா தான் என்ற உண்மை அவனை மேலும் வலிக்கச் செய்தது.

 

அவசரமாக அவளை கீழே படுக்கவைத்தவன் அடுப்பறை சென்று தண்ணீர் எடுத்துவந்து முகத்தில் தெளித்தான். அப்பொழுதும் மயக்கம் தெளியாதவளைக் கண்டு நெஞ்சம் பதற, அந்த பதட்டத்தில் நெற்றியில் முத்துமுத்தாய் வியர்க்க ஆரம்பித்தது. 

 

செல்பேசி வேறு அவள் தூக்கி போட்டதில் வேலை செய்யாமல் போக, மருத்துவமனை செல்ல முடிவெடுத்து அவளை நெருங்கினான்.

 

இருகைகளால் ஏந்தி குழந்தைபோல் அவளைத் தூக்கிச் செல்கையில், ஏற்கனவே நெற்றியில் பூங்குழலி ஏற்படுத்திய காயத்தால் வழிந்த ஆரவ்வின் செங்குருதியானது பதட்டத்தில் உருவான வியர்வையுடன் கலந்து அவளின் உச்சி வகிட்டில் பட்டு தெறித்தது. அதன் பின் அடுத்தடுத்த துளிகள் அவளின் நெற்றி கண், கன்னம், என பூ முகமெங்கும் கோலமிட,

 

இருவரின் ஆத்மார்த்தமான பந்தத்திற்கான முதல் அடிக்கல் அந்நொடியின் தொடக்கத்தில் இருந்து காலத்தால் நடப்பட்டது.

 

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…