முதல் பிரச்சனை அவனுக்கு இருக்கும் செவ்வாய் தோஷம். அவனது ஜாதகத்தில் செவ்வாய் நான்கில் உச்சம். உச்சமானது யாருக்கு ஆப்பு வைத்ததோ இல்லையோ, அர்ஜுனின் வரன் பார்க்கும் ரிலே ரேசுக்கு ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறது. நல்ல பெண், நல்ல குடும்பம் என்றால் அவளுக்கு செவ்வாய் தோஷம் இருக்காது. செவ்வாய் தோஷம் இருந்தால், அந்த பெண்ணை ராதிகாவுக்கே பிடிக்காது. அது அவர்கள் நிலையிலேயே தள்ளி வைக்கப்பட்டு விடும். அப்படியே இரண்டும் சரியாக வந்து, பெண்ணை பெற்றவர்களிடம் கேட்டால், அடுத்த பிரச்சனை வந்து நிற்கும்.
இரண்டாவது பிரச்சனை அர்ஜுன் வேலையில் இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபடுவது. உண்மை தான். இன்றைய பெண்களை பெற்றவர்களின் முக்கியமான கண்டிஷன் இது. மருமகன் வியாபாரம் செய்யக் கூடாது. நல்ல கம்பெனியில் நல்ல வேலையில் இருக்க வேண்டும். அதுவும் ஒரு லட்சம் சம்பாதித்தால் கூட போதாது மூன்று அல்லது நான்கு என்று கை காட்டுவோர் நிறைய.
அதிலும் ஆன்சைட் போக வேண்டும். தனது மகளின் சம்பாதனையில் கை வைக்க கூடாது, அவன், இருபத்தியாறு வயதில் எல்லாம் ஒரு வீட்டை கட்டி அதற்கு லோனையும் கட்டி முடித்திருக்க வேண்டும். லோன் எடுத்து வீடு கட்டினால், கண்டிப்பாக அதை அடைக்க ஐந்து முதல் பத்து வருடமாகும் என்பதைக் கூடவா அவர்கள் அறிய மாட்டார்கள்? ஆனாலும் பெண்ணை பெற்ற பிடிவாதம்.
ஆமாம்… முதலிலெல்லாம் ஆணை பெற்ற மமதை என்ற சொல் இருந்தது போல, இப்போது பெண்ணை பெற்ற பிடிவாதம் என்ற சொல்தான் வழக்கத்தில் இருந்து வருகிறது. இவர்கள் கேட்கும் அனைத்தும் இருந்தால், அந்த மணமகனுக்கு கண்டிப்பாக திருமண வயது தாண்டித்தான் போயிருக்கும். முப்பத்தியைந்து வயதைத்தொடாமல் அந்த சம்பாத்தியம் எத்தனை இடங்களில் சாத்தியம்? அப்போது வயதை காரணம் காட்டி நிராகரிப்பார்கள்!
வெல் செட்டில்ட் என்று சொல்வார்களே அது போல இருக்க வேண்டும், தந்தை வழியில் நல்ல சொத்துபத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் வீட்டின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க கூடாது. திருமணத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் உப கண்டிஷன்கள். இன்னும் அவர்களது பக்கத்தில் வயலாக இருக்கக் கூடாது தோப்பாக சொத்துகள் இருக்க வேண்டும் என்று கூறுவோரும் நிறைய. ஏனென்றால் வயலாக இருந்தால், மகள் வேலை செய்ய நேரிடும் என்ற பயம். அதுவே தோப்பாக இருந்தால் வேலை குறைவு தானே என்ற எண்ணம்!
இவையெல்லாம் ஒத்து வந்து வியாபாரம் செய்தால் பரவாயில்லை என்று யாரேனும் வந்தால், அடுத்த பிரச்சனை வரும்.
மூன்றாவது பிரச்சனை அவனது நிறம். அர்ஜுன் திராவிட நிறம். அதாவது கருப்பும் கிடையாது அதற்காக வெளுப்பும் கிடையாது. இரண்டும் கலந்த மாநிறம். களையாக இருப்பான். ஆனால் இந்த பெண்களுக்கு எங்கே அது பிடிக்கிறது? பையன் கருப்பு என்று எத்தனையோ பேர் ராதிகாவின் முகத்திற்கு நேராக கூறியதுண்டு.
‘ஏம்மா நிறமா உங்களுக்கு சோறு போடும்?’ என்று மனம் தாளாமல் கேட்டிருக்கிறார் ராதிகா.
‘அதுக்காக? பொண்ணும் பையனும் வெளிய போனா ஹீரோ ஹீரோயின் மாதிரி இருக்கணும். என் பொண்ணு ஹீரோயின் தான்… அதுக்கு தகுந்த மாதிரி தான நான் பாப்பேன்?’ என்று ஒருவர் கூற, அவரை ஒரு நாள் முழுக்க வைது கொண்டே இருந்தார்.
அவருக்கு அவர் மகன் உயர்வு! அந்த மகனை இன்னொருவர் பழித்துப் பேசுவதை அவரால் தாங்க முடியவில்லை. ஆனாலும் என்ன செய்வது பல்லைக் கடித்துக் கொண்டு அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுத்தானே ஆக வேண்டும்?
இதையும் தாண்டி வந்தால் இருக்கவே இருக்கிறது அடுத்த பிரச்சனை.
நான்காவது பிரச்சனை ஒற்றைப் பிள்ளையாக இல்லாமல் தங்கையுடன் இருப்பது. ஆம். இதுவும் பிரச்சனையேதான். காரணம் தங்கையின் திருமணம் என்று ஆரம்பித்து, வளைகாப்பு வருட சீர், காதுகுத்து என்று வாழ்நாள் முழுக்க அந்த தங்கைக்கு செய்ய வேண்டி இருக்குமாம். அதையெல்லாம் அவர்களது மகளால் ஏற்க முடியாதாம். இதுவே அவர்களுக்கு மகன் இருந்து, அவர்களது மகனுக்கு இதுபோல சொல்லக் கேட்டால் எப்படி இருக்கும் என்பதைக் கூட எண்ணிப் பார்க்க மாட்டார்கள். கொஞ்சம் கூட தயவே இல்லாமல், ‘நாங்க ஒத்தை பிள்ளையா மட்டும் தான் பார்க்கறோம்.’ என்று கூறி விடுவார்கள். அடுத்த ரவுண்டுக்கு போன ராதிகா அயர்ந்து அமர்ந்து விடுவார். செந்தூர் முருகனும் கூடத்தான். இதையும் கடந்து வந்தால் அடுத்த பிரச்சனை அவர்களின் முன்னே காத்திருக்கும்.
ஐந்தாவது பிரச்சனை செந்தூர்முருகன் படிக்காதது. அட ஆமாங்க! கல்யாண சந்தையில இதுவும் பிரச்சனை தான்! படிக்காத மாமியார் மாமனார் இருந்தால் அவர்கள் நாகரிகமாக இருக்க மாட்டார்களாமாம். இவர்களுக்கு பையன் மட்டுமல்ல, மாமியார் மாமனார் என்று அனைவருமே நாகரீகம் தெரிந்தவர்களாகவும், இங்கிதம் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டுமாம். அப்படி தெரியாதவர்களிடம் தங்கள் பெண் காலத்தை ஓட்ட முடியாதாம்! இந்த ரவுண்டையும் தாண்டி வருவார் ராதிகா. அப்போதே சொங்கி போயிருப்பார். ஆனால் பிரச்சனை நிற்காதே… அடுத்தும் தொடருமே!
ஆறாவதாக, இரண்டு பக்க பெரியவர்களும் உடன் இருப்பது. ராதிகா இதுவரை தனது மாமியார் மாமனாரை மட்டுமல்ல, ஒற்றைப் பெண்ணாக பிறந்ததால் அவரது தாயையும் தந்தையையும் கூட அவருடன் தான் வைத்திருக்கிறார். என்ன, அவர்கள் உடனிருக்க மாட்டார்கள், ஒட்டியே இருக்கும் இன்னொரு வீட்டில் இருப்பார்கள். அதுவும் அவர்களது பிடிவாதம் தான். ஆனால் உண்பது உறங்குவது எல்லாம் இங்கு தான்!
இரண்டு பக்க பெரியவர்களும் இருப்பதை ராதிகா என்றுமே சுமையாக நினைத்ததில்லை. நினைத்ததில்லை என்பதை விட அதை தான் அவர் மிகவும் விரும்பினார். செந்தூர்முருகனுக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று அண்ணன்கள். ஆனால் அவரது பெற்றோரும், அத்தனை பேரையும் விடுத்து ராதிகாவுடன் தான் இருக்கிறார்கள். காரணம், அவர்களுக்கு ராதிகா மகள்! ஆம், அதுபோலத்தான் பார்த்துக் கொள்வார். சண்டைகள் இருக்கும் ஆனாலும் அதை காட்டிலும் சமாதானம் மிக வேகமாக இருந்திருக்கிறது. உரிமை, பாசம், நேசம், அன்பு, கவனிப்பு என்று அத்தனையும் கொட்டிக் கிடக்கும் ராதிகா அவர்களுக்கு மகள் தான்!
ஆனால் அதையே காரணமாக கூறி அர்ஜுனை வேண்டாம் என்றவர்களிடம், ‘கல்யாணமான உடனே அர்ஜுனை தனியா வெச்சுடுவோம்’ என்றும் கூறியும் பார்த்திருக்கிறார்.
இன்னும் நிறைய சிறு பெரு பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணை பார்ப்பதென்பது எவ்வளவு கடினம் என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் அர்ஜுனுக்கு ஒரு நேரம் கோபம் வரும். ஒவ்வொரு நேரம் ஆற்றாமையாக இருக்கும், இன்னொரு நேரம் எரிச்சலாக இருக்கும். ஒவ்வொருவர் எடுத்த எடுப்பிலேயே உங்க ப்ராபர்ட்டி டீட்டைல்ஸ் அனுப்புங்க என்று சொல்லும் போது, ‘நான் பிச்சை தான் எடுக்கறேன்’ என்றும் கூட கூற தோன்றியிருக்கிறது. ஆனாலும் அடக்கிக் கொள்வான், ராதிகாவுக்காக!
ராதிகா பார்க்காத ஜோதிடர் இல்லை. ஏறாத கோவிலில்லை. செய்யாத பரிகாரங்களுமில்லை. முப்பது வயதை கடந்து விட்டால் அதுவே ஒரு காரணமாகி விடுமே என்ற பரிதவிப்பு அவருக்கு இருந்தது. அப்போதுதான் ஒரு ஜோதிடர் கூறியிருந்தார், ‘உங்க சின்ன பாப்பாக்கு கல்யாணம் முடிஞ்சு, அந்த பொண்ணு வெளிய போனா தான் உங்க பையனுக்கு முடியும்.’ என்று!
அது தான் இப்போது திவ்யா கார்த்திக் திருமண பேச்சில் வந்து நின்றிருக்கிறது.
“சரி… போய் படு திவி. அந்த கிளாஸ் பத்தி விசாரிச்சு சேர்த்து விடறேன்…” என்று கூற, திவ்யா பாதி உறக்கத்தில் கொட்டாவி விட்டாள்.
“என்ன ஆனாலும் அந்த எருமை மட்டும் இந்த வீட்டு வாசப்படிய மிதிக்க விட மாட்டேன். அவ என்ன பெரிய இவளா? நானும் கத்துகிட்டு நானும் செய்ய போறேன் பாருங்க…” உறங்கியும் உறங்காமலும் உளற, அர்ஜுனின் முகத்தில் மின்னலான புன்னகை!
இப்படியொரு போட்டியா?
ராதிகா அவளை, “ஏய் திவி… வா ரூமுக்கு போகலாம்..” பேச பேச உறங்கி விட்ட மகளை தட்டி எழுப்பினார்.
“மம்மி… அந்த சூரிய ப்ரைஸ் பண்ண, உன்னை கடிச்சு வெச்சுருவேன் பார்த்துக்க…” என்று உளறிக் கொண்டே அவருடன் நடந்தாள்.
“நீ சும்மாவே தானடி கடிப்ப…” என்று கூறியபடியே, அவளை இழுத்துக் கொண்டு போனார், அவர்களுடைய அறைக்கு!
தனியே அமர்ந்திருந்த அர்ஜுனின் கண் முன் அந்த சூர்யா, கைகளில் மெஹந்தியை ஏந்தியபடி புடவை வழுக்க வந்து கொண்டிருந்தாள். வேலை இருக்கும் வரை அவளை நினைக்காத மனம், இப்போது தடம் மாறி குட்டிக் கரணம் அடித்தது.
மனதை ஒற்றை நொடியில் தடம் மாற, தடுமாற செய்திருந்தாள் அவள்!
தங்கையின் செட் என்று தெரியும் வரை, அவளை பார்த்தும் பார்க்காதது போல சைட் அடித்துக் கொண்டு தான் இருந்தான். அர்ஜுன் ஒன்றும் விஸ்வாமித்திரன் இல்லையே! அழகான பெண்களை நன்றாகவே சைட் அடிப்பான். ஆனால் அதற்கும் மேல் போனதில்லை. ஆனால் அவள் தனது தங்கையின் செட் என்றும், தங்கைக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம் என்று தெரிந்ததும் ஆடிப் போனது மனது.
ஆனாலும் மனதுக்குள் பனிச் சாரலாய் தழுவி கொண்டிருந்தாள் அவள்!
ஆனால் அந்த வில்லி, திட்டமிட்டுக் கொண்டிருந்த கதையை கேள்விபட்டால் அவன் என்னாவான்?
இந்த இரண்டு பெண்களின் நடுவே மாட்டிக் கொள்ளப் போகிற அர்ஜுனின் நிலை?