ESK-1
ESK-1
என் சுவாசக் காற்றே..!
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுது, உடலை ஊடுருவிச் செல்லும் குளிர். ஆளரவமற்றக் கோவில் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் பெண்.
அவள்தான் சிவரஞ்சனி. மார்கழிப் பனியில் நனைந்த ரோஜாவாய் அவளது முகம்.
பிரம்மன் சற்றுக் கவனமெடுத்துச் செதுக்கிய சிற்பம் போல இருப்பவளின், கயல் விழிகள் அவள் கரம் போகும் பாதையெல்லாம் பயணிப்பதைப் பார்க்கும் போது, ஒன்றையொன்று துரத்தும் காதல் மீன்களாய்…
மசமசப்பான இருளும், சோகையான மின்விளக்கு வெளிச்சமும் அவள் விழிகளோடு போட்டியிட முடியாமல், இன்னும் சற்று நேரத்தில் வரப்போகும் பகலவனைப் பார்த்துக் காத்திருந்தன.
குளித்து முடித்து தலையைச் சுற்றி வைத்த தூவாலையில் இருந்து விலகி வந்த முடிக் கற்றைகள், அவளின் சிறிய நெற்றியில் சுருண்டிருந்தன.
வெண்டைப் பிஞ்சு விரல்களில் வித்தைகள் பல வைத்திருப்பாளோ!! இரு தத்தைகள் கொஞ்சும் கோலமொன்று அப்படியே தத்ரூபமாய். கோலத்தைப் பார்த்துத் திருப்தியாய் புன்னகைத்தவள், இதழ் கடித்து எக்கிக் கலர் பொடிகள் வைத்திருந்த சின்னஞ்சிறு கின்னங்கள் அடங்கிய ட்ரேயை எடுத்தாள்.
கிளிப்பச்சைக் கலர் இல்லாமல் இருக்கவும் முகம் சுருக்கி, என்ன செய்ய? என்று சிந்தித்தவள், ஐந்து வண்ணங்களையும் கொண்ட பஞ்சவர்ணக் கிளிகளை உருவாக்கினாள்.
தேனில் ஊறிய ரோஜா இதழ்களைப் போல மினுமினுப்புடன் கூடிய அவளது செவ்விதழ்கள் விடாமல், ஆண்டாள் பாடியத் திருப்பாவையைக் கோவில் ஒலிப்பெருக்கிக்குப் போட்டியாக முனுமுனுத்துக் கொண்டிருந்தது.
மற்ற வீடுகளில் வாசல் தெளிக்கும் சப்தமும், பால் வண்டியின் சப்தமும் கேட்கத் தொடங்கியது. கோலம் திருப்தியாக வந்திருக்கவும், கோயில் பக்கவாட்டில் இருந்த விநாயகர் சன்னதியில் கோலமிட்டுக் கொண்டிருந்தவளை அழைத்தாள்,
“கலா… சின்னக் கோலம் போட இவ்வளவு நேரமா? நான் முடிச்சிட்டேன்.”
“இங்க பாரு… ஏதாச்சும் சொல்லிடப் போறேன். கோயிலாச்சேன்னு பார்க்குறேன். மரியாதையா ஓடிரு… “
“எதுக்குடி இவ்வளவு கடுப்பு உனக்கு? கோயில் வாசல்ல கோலம் போடப் புண்ணியம் பண்ணியிருக்கனும்.”
முகத்தில் கோலப்பொடியைப் பூசிக்கொண்டு, எழுந்து நின்று தன்னை முறைத்தத் தோழியைக் கண்டு நகைத்தவள், “இந்தச் சின்னக் கோலம் போட்டதுக்காடி, முகத்தில இவ்வளவு பொடிய பூசி வச்சிருக்க?”
அழுவது போல முகத்தை வைத்துக் கொண்டவள், “இந்த குளிருக்கு அடக்கமாப் போர்த்திப் படுத்திருந்தவள எழுப்பிக் கூட்டிட்டு வந்துட்டு கேள்வியாடி கேக்குற? எனக்கு இன்னும் தூக்கக் கலக்கமே போகல… “ என்றபடி கண்ணைக் கசக்கியவளைப் பார்த்தவள் சிரிப்புடன்,
“மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்து முழுகி ஆண்டாள் திருப்பாவையைப் பாடினா, கண் நிறைந்த கணவர் கிடைப்பாராம்டி.”
“ அடிப் போடி… திருப்பாவை பாடினாலும் பாடாட்டாலும் எனக்கு என் மாமன் வேலுதான்னு நிச்சயம் பண்ணியாச்சு, நீயும் அந்த நெட்டக் கொக்கு கோதையும் பாடுங்கடி. நாளைக்கெல்லாம் என்னை எழுப்பாதீங்கடி.”
இவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டபடி வந்தார் கோவில் குருக்கள். “அப்படி சொல்லாதம்மா, மாதங்களில் மகத்தான சிறப்புகளைப் பெற்றுத் திகழ்வது மார்கழி மாதம்தான் .அதனால்தான் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று அருளி இருக்கிறார்.
ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். அதில் மார்கழி மாதம் என்பது அவர்களுக்கு அதிகாலை நேரம் ஆகும்.. அந்த நேரத்தில் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்போது, தெய்வத்துடன் தேவர்களையும் வழிபடும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும்.
.திருமணம் ஆகாத பெண்கள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து, இறைவனை வழிபட்டால், தை பிறந்ததும் அவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
ஆனால், இங்கே ஆண்டாள் தனக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறவேண்டும் என்பதற்காக பாவை நோன்பு கடைப்பிடிக்கவில்லை. மாறாக, இறைவனையே தன் கணவனாக வரித்து விரதம் அனுஷ்டித்தாள்.
இறைவனை அடைய நாம் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளையும் முப்பது பாடல்களில் அழகுற விளக்குகிறாள்.”
நீண்ட பிரசங்கம் செய்த குருக்களைப் பாவமாகப் பார்த்தவாறு, கை மறைவில் கொட்டாவி விட்ட கலா, “மாமா, நேரமாகிடுச்சி இன்னும் பூஜைய ஆரம்பிக்கலையா நீங்க? சீக்கிரம் பிரசாதம் கொடுங்க சாப்பிட்டு நான் காலேஜ்க்கு கிளம்பனும்.”
அவளின் இந்த பாவனையில் சிரித்தவர், அவளது தலையைப் பிடித்து லேசாக ஆட்டிவிட்டுப் பின், “கோதை எங்கமா காணோம்? அவள வீட்டுக்கு அனுப்பி பிரசாதம் ரெடியாயிட்டா வாங்கி வரச் சொல்லனும். உனக்கு பிடித்த வெண்பொங்கலும், புளியோதரையும்தான் இன்னைக்கு மாமி செய்யறதாச் சொன்னா.”
“தாயார் சன்னதியில கோலம் போட்டுட்டு இருக்கா மாமா… நான் போய் அழைச்சிட்டு வர்றேன்” என்று ஓடினாள்.
கலா ஓடிய திசையில் பார்வையைப் பதித்திருந்தவளை நோக்கியவர், “அம்மாடி சிவரஞ்சனி, உனக்கு பிரசாதம் தனியா மாமி ஆத்துல எடுத்து வச்சிருப்பா. காலேஜ் போறச்ச அப்படியே வாங்கிண்டு போய்டு என்ன.”
சரி என்பது போல தலையசைத்தவளைப் பார்த்தவரின் உள்ளத்தில் எண்ணங்களின் ஊர்வலம். ‘எவ்வளவு அருமையான குழந்தை, பகவான் இவளை சிறு வயதிலேயே இவ்வளவு சோதிக்க வேண்டாம்.’ என்று எண்ணியவர் பூஜையைக் கவனிக்க கோவிலுக்குள் சென்றார்.
கோலப்பொடி, கலர்ப்பொடி ஆகியவற்றை அதெற்கென இருந்த அறையில் வைத்தவள், பூக்கூடையை எடுத்து வந்து கோவில் நந்தவனத்தில் பூக்களைப் பறிக்க ஆரம்பித்தாள். கீழ் வானம் சற்றே வெளுக்க, அவளது மனம் தன்னுடைய நிலையை எண்ணிக் கலங்கியது.
அன்றைய நாளின் முழுநேர உணவும் தனக்கு அந்தப் பிரசாதம் மட்டும்தான் என்பதை எண்ணிக் கழிவிரக்கத்தில் கண்களின் ஓரம் கசிந்தது. தனது தாய் லலிதா இருந்த வரை எப்படிப் பார்த்துக் கொண்டார். வேளாவேளைக்கு பசிக்கிறதோ பசியில்லயோ இவளுக்கு அவர் கையால் ஊட்டி விட்டால்தான் திருப்தியாக இருக்கும் அவருக்கு.
தனது பதினோராவது வயது வரை தாய் தந்தைக்கு இளவரசி போல இருந்தவள் அவள். ராஜாராமன் லலிதா தம்பதியருக்கு ஒற்றை மகளாய், குறும்பும் கலகலப்பும் கொண்ட பெண்ணாய் வளர்ந்தவள்.
பெயர் தெரியாத விஷக் காய்ச்சலில் படுத்த தாய் எதிர் பாராமல் இறந்ததும், அவர் இறந்த அடுத்த ஆறு மாதத்தில் தந்தை வேறு திருமணம் செய்ததையும் இன்று வரை ஏற்க முடியவில்லை அவளால்.
அவளுடைய தாயின் மறைவுக்குப் பின் அவளது இயல்பான குறும்பும் கலகலப்பும் மறைந்து போயின. அவளுடைய சித்தியின் கடுத்த முகத்தையும், ரணமாக்கும் சுடு சொற்களையும் பார்த்தும் கேட்டும் வளர்ந்தாள்.
அவளுடைய சித்தி சாரதா, மனதிருந்தால் சிவரஞ்சனிக்கு உணவு தருவாள், அதுவும் அவளது தந்தை உயிருடன் இருந்த வரை மட்டுமே. அவளது சித்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு நடந்த ஒரு விபத்தில் அவளுடைய தந்தை உயிரிழந்த பிறகு, அந்த வீட்டில் வேண்டாத ஜீவனாகிப் போனாள்.
சிவரஞ்சனியின் தங்கை கல்யாணிக்கு ஏழு வயதுதான். அவள் மீது பாசத்துடன் இருக்கும் ஒரே ஜீவன் கல்யாணி மட்டுமே. தனது தாய் சிவரஞ்சனியைத் திட்டுவதைப் புரியாமல் பார்க்கும் குழந்தை, அவள் அழும் போது தனது பிஞ்சு கரங்களால் துடைத்து விடும்.
ஆனால் தாயிடம் எதிர்த்துக் கேள்வி கேட்கவோ, சண்டையிடவோ தெரியாத வயது ஆகையால் தனது அக்காவுடன் ஒட்டிக் கொண்டே இருக்கும். சிறு மிட்டாய் கிடைத்தாலும் அக்காவுடன் பகிர்ந்து உண்ண நினைக்கும்.
இயல்பாகவே கல்யாணி மீது பாசத்துடன் இருக்கும் சிவரஞ்சனி, குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு எப்போதும் முகம் சுளித்ததில்லை.
கல்யாணி பிறந்ததில் இருந்து வளர்த்தவள் சிவரஞ்சனிதான் என்று சொன்னாலும் அது மிகையாகாது. சிறு வயதிலேயே வீட்டு வேலைகள் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் கல்யாணிக்காகச் செய்கிறோம் என்று மனதில் நினைத்தபடிச் செய்து விடுவாள்.
தந்தையின் பெயரில் இருந்த வீடும், தாயின் நகைகளும் சித்தியின் வசம் சென்றதில், அவளுக்கு உடுத்திக் கொள்ள நல்ல உடுப்பு கூடக் கிடையாது. தாய் வழி சொந்தங்களும் பெண் பிள்ளையின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்க, சொந்த வீட்டிலேயே அநாதை போல வாழ்ந்து வந்தவளுக்கு ஒரே ஆறுதல் கல்யாணி மட்டுமே.
பத்தாவது மாநிலத்தில் முதலாவதாகவும், பனிரெண்டாவது மாவட்டத்தில் முதலாகவும் வந்ததால் படிப்பு இதுவரை தடை படாமல் இருக்கிறது. இல்லையென்றால் இந்நேரம் வீட்டில் முழுநேர வேலைக்காரியாக மாறியிருப்பாள்.
பள்ளிப்படிப்பு வரை அவளுக்குக் கிடைத்த உதவித் தொகையிலேயே முடித்தவள், கல்லூரியில் சேர அவளது சித்தி சாரதா ஒப்புக் கொள்ளாததில் கலங்கி நின்றாள்.
முதல் வருடம் அவளது பள்ளி முதல்வரே வீட்டிற்கு வந்து, முதல் வருட கட்டணத்தை தாமே கட்டி விடுவதாகவும், நன்கு படிக்கும் மாணவியின் படிப்பு வீணாகி விடக் கூடாது என்று எடுத்துக் கூறியதில்தான் இவள் கல்லூரியே சேர முடிந்தது.
அவளது மதிப்பெண்ணுக்கு மருத்துவமே கிடைத்திருக்கும். ஆனால் அதிக கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் சாதாரண டிகிரியே சேர்ந்து கொண்டாள்.
தனியார் கலைக் கல்லூரியில் அவள் கேட்ட பிரிவில் அவளுக்கு மெரிட்டில் சீட் கிடைத்தது. முதலாண்டு கட்டணத்தை பள்ளி முதல்வர் உதவியுடன் கட்டியவள், மற்ற செலவுகளைச் சற்று சிரமப்பட்டே செய்து வந்தாள்.
அதிலும் இரண்டாம் வருடத்தில் முதல் பருவம் முடிந்து இரண்டாம் பருவத்தில் அடியெடுத்து வைத்திருப்பவளுக்கு, இந்த ஆண்டு கட்டணத்திற்கு என்ன செய்வது? என்ற கவலையே பெருங்கவலையாய் மனதைக் குழப்பியது.
இவ்வளவு நாட்கள் ஏதோ சாக்குகள் சொல்லி தப்பித்தாயிற்று. ஆனால் இனி முடியாது. இந்த வருட கல்லூரிக் கட்டணத்தைக் கட்டியாக வேண்டும்.
மனதில் மண்டிய கவலைகளோடு பூக்கூடையை பூக்களால் நிறைத்தவள், கோயில் மண்டபத்தில் அமர்ந்து தொடுக்கத் துவங்கினாள்.
இதழ்கள் தன்னைப் போல ஆண்டாள் பாசுரத்தை இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தது. நல்ல குரல் வளம் சிவரஞ்சனிக்கு.
தனது பதினான்கு வயது வரை, அதாவது அவளது தந்தை உயிருடன் இருந்த வரை வாய்ப்பாட்டுக் கற்றுக் கொண்டாள்.
அவளது தந்தைக்கு கர்நாடக சங்கீதத்தில் இருந்த ஈடுபாடு காரணமாகவே ராகங்களின் பெயராக இவளுக்கும் இவளது தங்கை கல்யாணிக்கும் வைத்திருந்தார்.
அவரது மறைவிற்குப் பிறகு படிக்கவே கெஞ்சிக் கூத்தாடி போக வேண்டி இருக்கையில், பாட்டு எங்கே கற்றுக் கொள்ள? ஆனாலும் இறைவன் சந்நிதியில் மனம் கரைந்து உருகும் வண்ணம் பாடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
பிரசாதத்தைக் கொண்டு கொடுத்து விட்டு வந்த கலா, “வீட்ல போய் வேலையப் பார்க்கனுமே, இங்கயே உட்கார்ந்துட்ட… உங்க சித்தி ஏசப் போறாங்கடி.”
“வாசல் தெளிச்சிட்டுத்தான் வந்தேன். போய் காலைக்கும் மதியத்துக்கும் சமைச்சா போதும். பத்து மணிக்கு தானே காலேஜு, அதுக்குள்ள முடிச்சிடுவேன்.”
“ஒழுங்கா சாப்பிட்டு வா, அந்த வீட்டில அவ்வளவு வேலை பார்க்குற, ஒரு வேளை சாப்பாடு கூட ஒழுங்காப் போட மாட்டேங்குது உங்க சித்தி.”
“சரிடி, இந்த வருஷ பீஸ் கட்டனுமே, உங்க சித்திகிட்ட கேட்டியாடி?”
“ம்ப்ச், கேட்டா என்ன நடக்கும்னு தெரியாதா? நம்ம ஸ்கூல் பிரின்சிபாலும் மாறிட்டாங்க. யார்கிட்ட கேக்கறதுன்னு ஒன்னும் புரியல. நேத்தே லாஸ்ட் டேட்டுன்னு வார்ன் பண்ணாங்க.”
“நான் வேணும்னா எங்க அப்பாகிட்ட கேட்கவாடி?”
“வேணாம் கலா, எனக்கு தேவையான புக்கு நோட்டெல்லாம் உங்க அப்பாதான வாங்கி தராங்க, இன்னும் அவங்கள தொந்தரவு பண்ணக் கூடாது.”
கலாவின் வீட்டு நிலைமையும் சற்று கஷ்ட ஜீவனம் என்பதால் அவள் மௌனமானாள்.
“பார்க்கலாம் கலா, நம்ம காலேஜ் பிரின்சிபாலப் போய் பார்க்கலாம்னு இருக்கேன். ஏதாவது உதவித்தொகை கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்கலாம்.”
அப்பொழுது ஒலித்த கோவில் மணி ஓசையில் கலைந்தவர்கள்,
“சரிடி… பூஜை ஆரம்பிச்சிட்டாங்க, சாமி கும்பிட்டு வீட்டுக்கு போகலாம்.”
காட்டுமன்னார்கோவில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.
‘பளார்… ‘ என்ற ஓசையில் அந்த அரசு அலுவலகமே ஒரு நிமிடம் நிசப்தமானது. அறைந்தவன் ஆஜானுபாகுவாய் மேஜையில் கை ஊன்றி நின்றிருக்க, அறை வாங்கியவனோ, அவன் அமர்ந்திருந்த நாற்காலியோடு சேர்ந்து கவிழ்ந்து கிடந்தான்.
கீழே விழுந்தவன் தட்டுத்தடுமாறி எழுந்து, “என் ஆபீஸுக்கே வந்து என்னையே கைநீட்டி அடிக்குற” என்று முறைக்க… அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தவன்,
“நீ என்ன பெரிய இவனா? தப்பு பண்றவன் எவனா இருந்தாலும் என் டீலிங்கே இப்படி தான். ஒழுங்கு மரியாதையா நாளைக்கே பத்திரம் பதிவு பண்ண வர்ற. வந்து வாய மூடிகிட்டு குடுக்கற காச வாங்கிட்டு நடைய கட்டுற. மீறி எதனா திருகுதாளம் பண்ண நினைச்ச? ஏன்டா உயிரோட இருக்கறோம்ன்னு உன்னை நீயே வெறுத்துடுவ.”
சட்டையை விட்டு, அதன் சுருக்கத்தை கையால் நீவி சரி செய்தவன்,
“நாளைக்கு காலைல பத்து மணிக்கு பார்க்கலாம் சரியா? “ என்றபடி கிளம்பியவன் மீண்டும் திரும்பி நின்று,
“அப்புறம் உனக்கு பின்னாடி நின்னு தூண்டி விட்டுட்டு இருக்கானே அந்த சகாயம், அவன்ட்ட எதா இருந்தாலும் நேருக்கு நேராப் பண்ணச் சொல்லு. பொட்ட மாதிரி மத்தவன் முதுகு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு இருக்கான்.”
“என்னைக்காவது ஒரு நாள் என் கைல வசமாச் சிக்குவான், அன்னைக்கு இருக்கு அவனுக்குத் தீபாவளி” என்றவன் விடுவிடுவென்று திரும்பி நடந்தான்.
இந்தக் களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது அந்த அலுவலகப் பியூன் மாரி, அலுவலக வாயிலில் கைகளைப் பின்னே கட்டியவாறு நின்று சண்டையை ரசித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,
“ஏண்ணே, இது கதிர் அண்ணன் தான, இவர்கிட்ட எங்க ஆபீசரு என்ன பண்ணி வச்சாருன்னு தெரியலயே. இப்படி அடி வாங்கிட்டு இருக்காரு… “ என்று புலம்பினான்.
“என் மாப்ள கிட்ட பஞ்சாயத்துன்னு பேச வந்தாலே பல்ல உடைச்சிட்டுதான் பேச ஆரம்பிப்பான். அவன்ட்ட உன் ஆபீசரு வாலாட்டினா விட்ருவானா?”
“அப்படி என்ன ண்ணே பண்ணாரு?”
“என்பது லட்சத்துக்கு அவன் இடத்தை கிரயம் பண்ணித் தரேன்னு அக்ரிமெண்ட் போட்டு அட்வான்ஸ் வாங்கிட்டு, இப்ப வேற ஒருத்தனுக்கு, பத்து லட்சம் கூட குடுக்குறான்னுட்டு பத்திரம் பதிய பார்த்தான்.
விடுவானா என் மாப்ள? அதான் இங்க வந்து புரட்டி எடுத்துட்டு போறான். என் மாப்ள முன்ன நின்னு முடிக்கிற இடம் இது. சொல்லி வை உன் ஆபீசர்கிட்ட ஒழுங்கா இருக்கலைன்னா உசுரோட இருக்க முடியாதுன்னு.”
என்று கூறியவர் கதிரின் பின்னே சென்று விட, போகும் கதிரையேப் பார்த்து நின்றான் பியூன் மாரி.
அவன் கதிர் என்று அழைக்கப்படும் கதிரேசன். இருபத்தெட்டு வயது இளைஞன். மாநிறத்திற்கும் சற்றுக் கூடுதலாக நிறத்தோடிருந்தான். ஆறடிக்கும் அதிகமான உயரமும், உயரத்திற்கேற்ற உடல்வாகும் அவனை முரட்டுத்தனமாகக் காட்டியது.
அடர்த்தியான புருவங்களும், இரு புருவங்களுக்கிடையே குங்குமப் பொட்டும் அவன் முகத்திற்கு தனிக் களையைக் கொடுத்தது. இருபுறமும் முறுக்கி விடப்பட்ட மீசையும், இறுக்கமான இதழ்களும் பார்ப்பவரிடையே சற்று பயத்தினை ஏற்படுத்தும்.
கூர்மையான தீட்சண்யத்தையுடைய கண்கள், நிமிடத்தில் எதிராளியை எடை போட வல்லது. ஏற்றிச் சீவியும் அடங்காத அலையலையான கேசம் என்னைப் போலதான் இவனும் என்று கட்டியம் கூறியது.
அவனது ட்ரேட் மார்க் உடையான வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை, அவனுக்கு தனி அந்தஸ்தையும் மரியாதையையும் பெற்றுத் தந்தது.
படித்தது என்னவோ வக்கீலுக்கு, ஆனால் செய்வது ரியல் எஸ்டேட் பிஸினஸ். சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவனாகையால் தொழிலை நேர்த்தியாக செய்பவன். கமிஷனை பணமாகவோ, இடமாகவோ பெற்றுக் கொள்வான்.
மெயின் ரோட்டில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விடுவதில், அதுவேறு தனி வருமானம் வருகிறது. இதுவரை சொந்தமாக வீடு என்று இல்லாமல் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மாடியில் சிறிய அறையில் குடியிருந்தவன், தற்போது தனக்கென சிறிய அளவில் வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறான்.
அது மட்டுமல்ல அவன் ஏரியாவில் அடிதடி கட்டப்பஞ்சாயத்து எல்லாவற்றுக்கும் பெயர் போனவன். எதிராளியிடம் தவறு இருப்பதாக தெரிந்தால் அவன் கைதான் முதலில் பேசும்.
கதிர், உயர் மட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு நம்பகமான இன்பார்மரும் கூட. கடலூர் ஹார்பர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் சட்ட விரோதச் செயல்களை ரகசியமாகக் கண்காணித்து தகவல்கள் சொல்பவன்.
அவனுக்குத் துணையாக இப்போதைக்கு இருப்பது அவனது மாமா அழகர் மட்டுமே.
விடுவிடுவென்று நடந்து வந்து அவனது வாகனமான ஸ்கார்ப்பியோவில் ஏறியவன் முகம் கோபத்தில் வெகுவாக கடுத்திருந்தது.
“அந்த சகாயத்தை இனியும் விட்டு வைக்கறது தப்பு. தலைவருக்காக இந்த இடத்தை முடிக்கறேன்னு தெரிஞ்சும், என் கிட்ட வாலாட்றான் இல்ல. அவன இந்த ஃபீல்ட விட்டேத் தூக்கறேன்.”
“அண்ணே நீ டென்ஷன் ஆவாத… அந்த சகாயம்லாம் உனக்கு ஒரு ஆளா? அவன் பின்னாடி எம்எல்ஏ குமாரும், லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டரும் இருக்கற திமிர்ல ஆடறான்.”
“எம்பி எலக்ஷன்ல வரப் போற இந்த நேரத்தில , தேவையில்லாத பிரச்சினை தலைவருக்கு வேணாம்னு நாம ஒதுங்கி இருக்கிறது அவனுங்களுக்கு தொக்காப் போச்சுடா. எலக்ஷன் மட்டும் முடியட்டும் அப்புறம் இருக்கு இவனுங்களுக்கு.”
“மாமா… அந்த லேடி ஜெயக்கொடிய ஃபாலோ பண்ணச் சொன்னேனே, என்ன ஆச்சு?”
“பார்த்துட்டுத்தான் மாப்ள இருக்கேன். ஒன்னும் சந்தேகப் படறாப்பல இல்ல. ஆனா இந்த சகாயம் பயலுக்கும் அந்தப் பொம்பளைக்கும் ஏதோ லின்க் இருக்கும் போலத் தோனுது.”
“இல்ல மாமா, அந்த லேடி லேசுபட்டவ இல்ல. அவளுக்கு ஏகப்பட்ட பெரிய தலைகளோட கனெக்ஷன் இருக்கு. இப்ப மெயின் ரோட்டுல ஒரு காம்ப்ளக்ஸ் விலைக்கு வாங்கியிருக்கா. கிட்டத்தட்ட ஐந்து கோடி மதிப்பு.
அவ புருஷனும் சாதாரண கவர்ண்மெண்ட் எம்ப்ளாயி, அவ காலேஜ் புரபசர். ஆனா ரெண்டு வருஷத்துக் கொருதரம் சொத்தா வாங்குறா.”
“எம்எல்ஏ குமாருக்கும், அந்த லேடிக்கும் ஏதாச்சும் கனெக்ஷன் இருக்கறது ப்ரூவ் ஆச்சு என் சந்தேகம் உறுதியாகிடும்.”
“சரி தலைவர்ட்ட பிரச்சினைய சொல்லிக்க வேணாம், அமைதியாவே இருங்க” என்றபடி அருகில் இருந்தவனைப் பார்க்க,
அவனோ சிரித்தபடி, “நீ சொல்லாத இரு ண்ணா. தலைவரையும் அக்காவையும் பார்த்ததும், ஸ்கூல் புள்ளைங்க ஒப்பிக்கற மாதிரி எல்லாத்தையும் ஒப்பிக்கப் போற. நீ அமைதியா இரு முதல்ல.”
கதிரும் சிரித்தபடி, “ரொம்ப ஏத்தமாகிப் போச்சுடா சுந்தர் உனக்கு. நான் என்னடாப் பண்றது தலைவர விட, அக்காவப் பார்த்ததும் அதுங் கையால சாப்பிட்டுகிட்டே அன்னைக்கு நடந்ததெல்லாம் சொன்னாதான் எனக்கு நிம்மதி.”
“பதினைந்து வயசுல அநாதையா நின்னவன தம்பின்னு பாசமா பார்த்துகிட்டவங்கடா. எப்படியோ மோசமாப் போயிருக்க வேண்டிய என் வாழ்க்கைய மாத்தி அமைச்சதே அவங்க ரெண்டு பேரும்தான்.
நான் படிச்ச படிப்பு, பார்க்குற தொழிலு எல்லாமே அவங்க தயவுல வந்தது. இன்னேரம் ரெண்டு கொலையப் பண்ணிட்டு ஜெயில்ல இருந்திருக்க வேண்டியவன். வெள்ளையும் சொள்ளையுமா சுத்தறேன்னா அது அவங்களாலதான்.”
“இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா மாப்ள… வருத்தப்படாத மாப்ள, பழசல்லாம் நினைக்காதடா…”
“அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா மாமா?” என்றவனது கண்கள் வெகுவாகக் கலங்கிச் சிவந்திருந்தன.
—-காற்று வீசும்